Sunday, March 10, 2019

வைகோ எனும் எமோஷனல் குவியம்

வைகோ அவர்களை இரண்டு முறை நேரில் சந்தித்திருகிகிறேன். ஒரு முறை தாயகம் அலுவலகத்தில். இன்னொரு முறை அவரது அண்ணா நகர் வீட்டில். சீமானெல்லாம் அரசியலுக்கு வந்திருக்கவில்லை. எதோ ஒரு கூட்டத்தில் பேசியதற்காக இயக்குனர்கள் சீமான் & அமீர் கைது செய்யப்பட்டிருந்தனர். அது 2008 ஆம் ஆண்டு. ஈழப் போர் தீவிரமாக நடந்து வந்த நேரம்.

தமிழில் 'பிரபாகரன் - ஒரு வாழ்க்கை' (கிழக்கு பதிப்பகம்) என்ற பெயரிலும் ஆங்கிலத்தில் Prabhakaran: The Story of his struggle for Eelam (Oxygen books) என்ற பெயரிலும் இந்த நூல்களை New Horizon Media அப்போதுதான் வெளியிட்டிருந்தது. அந்தப் புத்தகங்கள் பற்றி, (குறிப்பாக ஆங்கில நூல்) ஒரு நிகழ்ச்சி நடத்தி அதற்கு வைகோவை அழைப்பதற்காக பதிப்பாளரோடு கலந்து பேசிய பின்னர் சென்றிருந்தேன்.

முதல் முறை தாயகத்தில் சந்தித்ததற்கும் இரண்டாம் முறை வீட்டில் சந்தித்ததற்குமான இடைவெளியில் அதனை வாசித்திருந்தார். நிகழ்ழ்சி நடத்த ஒப்புதல் சொன்னார். பதிப்பாளரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசி விட்டுத் திரும்பினேன்.

அடுத்த நாள் அவரது உதவியாளர் அருணகிரியிடமிருந்து ஃபோன். தலைவர் பேசறார் இருங்க என்று தந்தார்.

"தம்பி கேட்டுக்கிடுங்க. ஈழம் சம்பந்தமா எதாவது நிகழ்ச்சியில நான் கலந்துக்குவேன். அதை வெச்சு என்ன கைது பண்ணலாம்னு திட்டம் வெச்சிருகிறதா எனக்கு தகவல் வந்திருக்கு. எனக்கு சிறை போறது ஒன்னும் புதிசில்ல. போய்ட்டு நாலு நாள்ல வந்திருவேன். சொல்லப் போனா அது எனக்கு பொலிட்டிகல் மைலேஜ்தான். ஆனால் நீங்க ஒரு வேலைல இருக்கீங்க. உங்கள நம்பி குடும்பம் இருக்கு. எங்கூட சேத்து உங்களையும் கைது செஞ்சா என்னாகும்னு யோசிச்சு பாத்துக்கிடுங்க. நிகழ்ச்சி வேணாம் தம்பி."

Sunday, December 09, 2018

ஒரு பொருளாதார அடியாளின் காதல் வாக்குமூலம்

'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்', 'எரியும் பனிக்காடு' ஆகிய புகழ் பெற்ற மொழிபெயர்ப்புகளை ஆக்கியவரும், 'மிளிர் கல்', 'முகிலினி' முதலிய கவனிக்கத்தக்க நாவல்களை எழுதியவருமான எழுத்தாளர் இரா. முருகவேள் அவர்கள் 'இரவல் காதலி' குறித்து

****
செல்லமுத்து குப்புசாமியின் “இரவல் காதலி” நாவல் படித்து இரண்டு மூன்று மாதமிருக்கும். ஒரு சுகமான மணத்தைப் போல, இனிப்பின் சுவையைப் போல நாவல் மனதில் தங்கி விட்டது. அதனால்தானோ என்னவோ எழுத வேண்டும் என்று நினைத்துத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்து விட்டேன்.
இருபத்தி நான்கு மணிநேரமும் வேலையைக் கட்டிக் கொண்டு அலையும் கணவன், போராடித்துப் போயிருக்கும் அழகான மனைவி, சுறுசுறுப்பான புத்திசாலி இளைஞன். கதை புரிகிறது அல்லவா?
ஆனால் ஆ என்று ஆச்சரியப்பட வைக்க ஏராளம் இருக்கிறது நாவலில். SAP IS OIL என்பது எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைக்கான பிரத்யேக மென்பொருள். உலகின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை இந்த நம்பகமான மென்பொருள் மூலமே நடத்துகின்றன. இந்த மென்பொருளை செய்ல்படுத்தும் ஒப்பந்தங்கள் பிக் ஃபைவ் எனப்படும் IBM, Accuenture, Deloite போன்ற கம்பெனிகளுக்கே கிடைக்கும். இதில் சின்னச் சின்ன வேலைகள் இந்திய நிறுவனங்களுக்குக் கிடைக்கும் . . . .
இந்த ரீதியில் நகர்கிறது கதை. முதல்பகுதி கஜாக்ஸ்தானில் நடக்கிறது. அசோக் பெரியசாமியும் காய்திரியும் அங்கே சந்தித்துக் கொள்கிறார்கள். கஜாக்ஸ்தானின் பனிமூடிய சாலைகள், ஓட்டல்கள், இந்திய சைவ ரெஸ்டாரெண்ட்டுகளில் (நண்பர் சைவத்தை அப்படி நாசுக்காகக் கிண்டல் செய்கிறார். ஹா ஹா ஹா) சந்தர்ப்பங்கள் நெருங்கியும் விலகியும் செல்வதையும் தவிப்பையும் செல்லமுத்து குப்புசாமி வருணிப்பது இருக்கிறதே கவிதை அது. அப்படி ஒரு அழகு.
இரவல் காதலியின் தனித்துவமான தன்மை எனன்வெனில் எழுத்தாளர் செயற்கையாக பெண்ணில் மனதுக்குள் புகுந்து அதைத் தன் மனம்போன போக்கில் புரிந்து கொள்ள முயல்வதில்லை. பெண்கள் முழுக்க முழுக்க ஆணின் பார்வையிலேயே பார்க்கப்படுகிறார்கள்.
சற்றே புதிர்த்தன்மை, அன்பிரிடிக்டபிளிடி(அதாவது ஆண்களுக்கு), அக்கறை, முதிச்சி என்று ரவிவர்மாவின் மோகினியின் வசீகரம் . . . .ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும் இப்படியொரு பெண் கட்டாயம் இருந்திருப்பாள். அதை நம்மை உணரவைத்ததுதான் செல்லமுத்து குப்புசாமியின் நடையின் சிறப்பு.
நாவல் முழுவதும் மென்பொருள் துறையின் பதற்றம், அவசரம், நெருக்கடிகள், என்று நாம் அறியாத உலகம் அதன் நுட்பங்களோடு்அற்புதமாக இழையோடுகிறது. பரந்து விரிந்த அனுபவம் கொண்ட எழுத்தாளர்கள் மெலோடிராமாவில் சிக்கிக் கொள்வதில்லையோ? நச்சி எடுக்கும் அதீத துயரம், புலம்பல்கள் இல்லாத ஒருவித நறுக்குத் தெரித்தது போன்ற துள்ளிப் பாயும் நடையை தமிழின் நவீன எழுத்தாளர்களிடையே அடிக்கடி பார்க்கிறேன்.
அந்த ஆன்லைன் உரையாடல் ஒவ்வொரு எழுத்தும் நவீனம், ஸ்டைல், உண்மை. அதன் அதீத உண்மைத்தன்மையே அதை எழுத்தாளரோடு ஒப்பிட்ட வைத்து யார் என்று கேட்டுவிடத் தோன்றும் . . . எழுத்தாளன் எழுதும் ஒவ்வொரு பாத்திரமாகவும் இருக்க முடியாதுதான். இருந்தாலும் வாசகர்கள் அபப்டியொரு ஊகம் செய்யவும் வாய்ப்பிருக்கிறது. அப்படியொரு நிலைமை வந்தால் என்ஜாய் குப்புசாமி சார்.

பின் குறிப்பு:
இரவல் காதலி நூல் அமேசான் கிண்டில் வடிவில் ebook ஆக கிடைகிறது. https://www.amazon.in/dp/B01N2PEKYR 

Sunday, February 11, 2018

திக்குவாயர்கள் கவனத்திற்கு

இலங்கையில் இருந்து ஒரு நண்பர் கீழக்காணும் மெசேஜ் வாட்ஸ் அப்பில் அனுப்பினார். இங்கே பகிர்வதால் வேறு சிலருக்கும் உதவும் என்ற நம்பிக்கையில் பகிர்கிறேன்.

கேள்வி:
வணக்கம் ஐயா. உங்களை பற்றி படித்துள்ளேன். ஐயா எனக்கு திக்குவாய் உள்ளது. எனது வாழ்க்கை ஒரு யதார்தமான நரகமாக போய் கொண்டிருக்கின்றதது. எனக்கு இந்த பிரச்சினை சின்ன வயசில இருந்தே இருந்தது ஐயா ஆனால் சின்ன வயசில் இயப்பாக திக்கும் எல்லாம் சிரமம் இல்லாமல் பேசுவேன் எனக்கே தெரியாமல் திக்கும் சின்ன வயசில இதை பற்றி நான் கவலை படவே இல்லை ஐயா ஆனால் இப்பொழுது ஐந்து வருடங்களாக பேசுவதற்கு சிரமாக உள்ளது ஒரு கடைக்கு போய் எனக்கு பிடிச்ச பொருளை வாங்க , பஸ்ல ரிக்கெட் எடுக்க, புதிய நபர்களிடம் பேச பெரிய பிரச்சினையாக உள்ளது ஐயா ஒரு கிணத்து தவளை போல் என்னை வீட்டுக்குள்ளயே இருக்க வைத்துக்கொண்டிருக்கின்றது இந்த திக்குவாய் ஐயா உங்கள் உதவியை நாடுகின்றேன் ஐயா..

.. இதற்கு என்ன பயிற்சிகள் செய்ய வேண்டும்.சில சமயங்களில் என்னால் பேச முடியாமலும் போகின்றது ஐயா...

..நீங்களும் திக்குவாயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தீர்களா ஐயா

பதில்:
ஐயா வணக்கம்.

நான் முழுவதுமாக மீண்டு வரவில்லை. ஆனால் இது பிரச்சினையில்லை என்று அறிகிறேன். சில யோசனைகள்..

1. திக்குவாயர்கள் அதி விரைவாக சிந்ந்திக்கக் கூடியவர்கள். அவர்களது (நமது) மூளை சிந்தித்து கருத்துக்களை வெளியிடும் வேகத்துக்கு ஸ்பீக்கிங் சிஸ்டம் ஈடு கொடுக்க முடிவதில்லை. அதனால் மெதுவாக நிறுத்தி நிதானமாக பேச முயற்சி செய்யுங்கள்.
2. திக்கினால் பிரச்சினையில்லை. அது ஒன்றும் குறையில்லை. மற்றவர் நினைப்பதைப் பற்றி நமக்கென்ன என கருதுங்கள்.
3. வெற்றிக்கான முதல்படி தோல்விக்கான பயத்கை வெற்றி கொள்வதுதான் என்பார்கள். திக்கிவிடுவோமா என்ற பயம் திக்குவதைக் காட்டிலும் அபாயகரமானது.
4. திக்குவாய் என்பது வியாதியல்ல. அது ஒரு பழக்கம், கெட்ட பழக்கம். எந்த கெட்ட பழக்கத்தையும் உடனே கைவிட முடியாது. குடியிலிருந்து மீள்வதைக் காட்டிலும் கடினம். தொடர்ச்சியான பயிற்சி வேண்டும்.
5. முடிந்தவரை ரிலாக்ஸ் ஆக இருக்க முயலுங்கள். சர்ச்சைக்குரிய விவாதங்கள், சச்சரவுகள் ஆகியவற்றிலிருந்து ஒதுங்கியிருங்கள். கோபம், டென்ஷன் ஆகும் விஷயங்களை தவிருங்கள். உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
6. தனியாக ஓய்வாக இருக்கும் போது மனதுக்கு இதமான பாடல்களை பாடுங்கள்.
7. முடிந்தால் கண்ணாடி முன் நின்று பேசிப் பாருங்கள்.
8. சில சமயங்களில் குறிப்பிட்ட வார்த்தைகள் சரியாக வராது. அவற்றை தவிர்த்து விட்டு அதற்குப் பதிலாக வேறு வார்த்தைகளைப் போட்டு பேசுவீர்கள். திக்கினாலும் பரவாயில்லையென்று அதே வார்த்தையை மெதுவாக சொல்லிப் பழகுங்கள்.
9. நெருக்கமான நண்பர்களிடம் மனது விட்டு மெதுவாக பேசுங்கள். நீங்கள் வேகமாகப் பேசும் போது உங்களை நிறுத்தச் சொல்லி அவர்களை அறிவுறுத்தச் சொல்லுங்கள். உங்களுக்கு வேண்டியதெல்லாம் வேகக் கட்டுப்பாடு.
10. இறுதியாக திக்குவாய் என்பது ஊனமல்ல. அது ஒரு கெட்ட பழக்கம் என்பதை மட்டும் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். Speech system (hardware) is in perfect condition. Only the self control (software) operating the system needs minor adjustments. 

Sunday, January 07, 2018

புத்தக விமர்சனம் செய்தால் புத்தகம் பரிசு

Chennai Voice சேனல் கீழ்க்காணூம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Book gift for every book review: சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு நூல் வாசிப்பினையும், புத்தக அறிமுகத்தையும் பரவலாக்கும் முயற்சியில் பல இலக்கிய நண்பர்கள் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். சென்னை வாய்ஸ் சார்பில் நாமும் ஒரு புது விதமான முயற்சியில் ஈடுபட முன் வருகிறோம். நீங்கள் வாசித்த எதாவது ஒரு புத்தகத்தைப் பற்றி 3 முதல் 10 நிமிடம் வரை நூல் அறிமுகம் அல்லது விமர்சனம் செய்து அனுப்பினால் ரூ 200 மதிப்புள்ள புத்தகம் வழங்க விழைகிறோம்.
இந்த செய்தியை நண்பர்களோடு பகிர்ந்து பரவலான ஆர்வலர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுகிறோம்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்:
1. ஏதேனும் ஒரு தமிழ் நூல் பற்றிய அறிமுகம்/விமர்சனம் வீடியோவாக எடுத்து (மொபைலில் கூட எடுக்கலாம்) கூகிள் டிரைவில் அப்லோட் செய்து என்ற chennaivoice1@gmail.com ஐடி யோடு ஷேர் செய்யவும்.
2. chennaivoice1@gmail.com க்கு உங்கள் முகவரியையும், உங்கள் வீடியோவை யூடியூபில் வெளியிட சம்மதமும் தெரிவித்து மினஞ்சல் அனுப்பவும்.
3. நூல் பற்றிய நேர்மறையாக, எதிர்மறையாக, நூல் பற்றிய அனுபவம், நூல் ஆசிரியரோடு ஏற்பட்ட அனுபவம் என எது பற்றி வேண்டுமானாலும் உங்கள் பேச்சு இருக்கலாம்.
4. நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு வீடியோவிற்கும் ரூ 200 மதிப்புள்ள நூள் வழங்கப்படும்.
5. தாங்கள் எத்தனை நூல் அறிமுகங்கள் வேண்டுமாலும் அனுப்பலாம். உதாரணமாக 3 வீடியோ என்றால் ரூ 600 மதிப்பிலான புக்ஸ் அனுப்புவோம்.
6. இவ்வகையில் ரூ 10,000 - ரூ 15,000 மதிப்பிலான புத்தகங்களை பரிசளிக்க விருப்பம்.
7. என்ன புத்தகங்களை பரிசளிபதென்பது முழுக்க முழுக்க எங்கள் தெரிவு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
8. ஒரு வேளை வீடியோ / ஆடியோ குவாலிட்டு சரியில்லாத காரணத்தால் வீடியோயை மேற்கொண்டு கருத இயலாது என்றால் தங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
9. முகவரி தமிழநாட்டிற்குள் இருத்தல் அவசியம். 

Tuesday, January 02, 2018

2018 இப்படித்தான் விடிந்த்திருக்கிறது

2018 இல் எங்கே கவனம் செலுத்த வேண்டுமென தீர்மானித்த 3 சம்பவங்கள்..
31 டிசம்பர் - பெரியார் திடலில் சிறுவர்களுக்கான கதை சொல்லும்/எழுதும் பட்டறைக்கு சென்றது. மகளை அழைத்துப் போயிருந்தேன். எழுத்தாள நண்பர்கள் விழியன் மற்றும் விஷ்ணுபுரம் சரவணன் முன்னின்று பங்களித்தார்கள். வழக்கமாக இது மாதிரி ஒர்க் ஷாப் என்றால் இரண்டாயிரம், மூவாயிரம் வாங்குவார்கள். இவர்கள் பட்டறையும் நடத்தி மதியம் விருந்தும் போட்டார்கள். நன்றி: பெரியார் பிஞ்சு பொறுப்பாசிரியர் பிரின்ஸ் ...
1 ஜனவரி - சக ஊழியர் ஒருவரின் மரணச் செய்தியோடு வருடம் தொடங்கியது. நமக்குத் தெரிந்தவர்கள் மரணிக்கும் ஒவ்வொரு செய்தியும் வாழ்வின் priority களை மறுபரிசீலனை செய்யத் தூண்டுகிறது...
2 ஜனவரி - காலை அலுவலகம் வரும் வழியில் ஒருவர் (45-50 வயதிருக்கும்) ஏறினார். இரண்டு வார்த்தைக்கு மேல் பேச முடியாமல் திக்கினார். டைல்ஸ் வேலை செய்கிறாராம். நன்றாக தொழில் தெரிந்தவராம். திக்குவாய் பிரசினை இல்லையென்றால் தனியாக பேசி ஆர்டர் எடுத்து வேலை செய்ய முடியுமென்றும், அது முடியாததால் அவரியம் தொழில் கற்ற இன்னொரு பையனிடம் கூலிக்கு வேலை செய்வதாகவும் சொன்னார்.. "அதெல்லாம் ஒன்றும் பிரச்சினை இல்லை. திக்குவாயர்கள் டிவி ஷோக்களில் எல்லாம் பேசியிருக்கிறார்கள்" என்று சொல்லி விட்டு வந்திருக்கிறேன்

Sunday, November 05, 2017

பணம் பாவமா

இன்று பண்பலை வானொலியில், "கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்கு எஜமானன்.... கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்" என்ற பாடலை கேட்க நேர்ந்தது.

கையில் கொஞ்சம் காசோடு அன்றாடங்காய்ச்சியாக வாழ்ந்தால் நீ எஜமானன் என்பது அடிமைகளை மதிமயக்குவதற்காக ஆண்டைகள் சொல்லும் மந்திரம். பணம் பாவமென்ற சிந்தனையை நமக்குள் விதைத்திருப்பது ஆகப் பெரிய மோசடி. மாணவர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று போதிப்பதைக் காட்டிலும் கொடிய மோசடி. பணம் வேண்டாமென்று போதிக்கிற எந்தவொரு சிந்தனையாளனும், தலைவனும், கவிஞனும் பணம் வேண்டாமென்று மறுதலிப்பதில்லை.

ஒரு பக்கம் ஆசையைத் துறந்து வாழப் போதிக்க வேண்டிய துறவிகள் அத்தனைக்கும் ஆசைப்படச் சொல்கிறார்கள். "ஆசைப்படு.. மன அழுத்தம் வந்தால் என்னிடம் வா. நான் அதற்கு தீர்வு சொல்கிறேன்" என்பதே அவர்கள் விடுக்கும் அருளுரையாக உள்ளது.

மாறாக பணத்தைப் பற்றி சதா யோசிக்கிறவர்களும், அதனை நேசிப்பதாக வெளிப்படையாக பேசுகிறவர்களும் அளவாக நுகருமாறும், instant gratification ஐ தவிர்த்துக் கொள்ளுமாறும் கூவுவதை உலகம் மதிக்காமல் போவது நகைமுரண்.

Sunday, August 13, 2017

பணம் பற்றி பேசுவோம்

குழந்தைகளுக்கு அவர்களது தேவைக்கு மீறிய விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுப்பது பெற்றோர். அவர்கள் எதைக் கேட்டாலும் வேண்டாமென்று சொல்லாமல் தருவித்துக் கொடுப்பதும் பெற்றோர். எது ஆசைப்பட்டாலும் அது இலகுவாகக் கிடைக்கும் என்ற நினைப்பை ஊட்டுவதும் பெற்றோர். அதே குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும் அவர்கள் பொறுப்பில்லாமல் செலவு செய்வதாகவும், ஊதாரித் தனமாகச் சுற்றுவதாகப் புலம்புவதும் அதே பெற்றோர். இதில் தவறு குழந்தைகளிடமா பெற்றோரிடமா என்பதை யோசிக்க வேண்டும்.

பொருட்களின் மதிப்பை, அவற்றை வாங்குவதற்கான பணத்தின் மதிப்பை, அந்தப் பணத்தை ஈட்டுவதற்கான உழைப்பின் மதிப்பை குடும்பத்தில் குழந்தகளுக்குச் சொல்லிக் கொடுப்பது அவசியம். இது நம் குடும்பங்களில் இருந்தே துவங்க வேண்டும். பத்தாவது வரைக்கும் சைக்கிளில் பள்ளிக்குச் சென்று வந்தவரின் பையன் மெட்ரோ ரயிலில் சென்ட்ரல் ஸ்டேஷனுக்குப் போகாமல் கால் டாக்ஸி வேண்டுமென்கிறான். நான்காவது பிறந்த நாளுக்கு பத்தாயிரம் ரூபாய் பேட்டரி கார் பரிசாகக் கிடைத்த பையன், பத்தாவது பிறந்த நாளுக்கு ஐஃபோன் பரிசாகக் கிடைத்தவன் அப்படித்தான் இருப்பான்.

நமக்கெல்லாம் வெட்டுக்கிளியும், எறும்பும் கதை தெரியும். கோடை காலத்தில் உல்லாசமாகச் சுற்றிய எறும்பை கிண்டல் செய்தது. மழைக்காலத்தில் எறும்பு வெட்டுக்கிளியைக் கிண்டல் செய்யும். எறும்பாய் வளர்ந்தவர்கள் தம் குழந்தைகளை வெட்டுக்கிளியாக உருவாக்கும் போக்கு வெகுவாகத் தென்படுகிறது.

சங்கிலிப் பறிப்புகளில் படிக்கும் மாணவர்களும், படித்து முடித்த பட்டதாரிகளும் ஈடுபடுவதாக நிறையக் கேள்விப்படுகிறோம். இதற்கான விதை எங்கிருந்து உருவாகிறது? உழைத்துச் சம்பாதிப்பதை விட குறுக்கி வழியில் துரிதமாகப் பணம் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கையை யார் தந்தது?

தனிமனித ஒழுக்கம், அறம் சார்ந்த கற்பிதங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. ஐம்பதாயிரம் ரூபாயை ஒரு மாத உழைப்பாகவோ, இரண்டு மாத உழைப்பாகவோ பார்க்காமல் கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துச் செல்ல முடிகிற செயலாகப் பார்க்கச் செய்கிறது. பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், பணம் ஈட்டுவதற்கும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைப்பாடு உருவாகியிருக்கிறது.

பணத்தைப் பற்றி, உழைப்பைப் பற்றி குடும்பங்களிலாவது பேசுவதுதான் இதற்கான தீர்வாக இருக்கும். குழந்தைகளுக்கு எவ்வளவு சீக்கிரம் உண்டியல் பரிசளிக்க முடியுமோ அவ்வளவு நல்லது. முடிந்த மட்டில் நம் பணத்தையாவது பத்திரமாகக் காக்க உதவும். விதையொன்று முளைத்து செடியாகி, மரமாக மாற காலம் பிடிக்கும். பத்து மாதம் சுமந்து பெற்றால்தான் பிள்ளை. சாவதற்கு குறுக்கு வழிகள் இருக்கலாம். வாழ்வதற்கும், முறையாக பணம் சம்பாதிப்பதற்கும் குறுக்கு வழிகள் இல்லை.

புதிய தலைமுறை இதைல் வெளியான 'பணம் பத்திரம்' தொடரிலிருந்து ஒரு பகுதி.

இந்த நூலை அச்சு பிரதியாகவும், அமேசான் கிண்டில் வடிவிலும், PDF மின்னூலாகவும் பெறலாம்.