Wednesday, December 20, 2006

பிரெஞ்ச் கிஸ்..

- குப்புசாமி செல்லமுத்து

நீண்ட நேரம் டச்சு மொழியில் விளக்கம் தந்த பிறகு கடைசியாக, "இந்த சப்வேயில் தான் இளவரசி டயானா விபத்துக்குள்ளாகி இறந்தார்" என்று ஆங்கிலத்தில் ஒரே ஒரு வரி மட்டும் பேசினார் அந்தச் சுற்றுலா வழிகாட்டி. டயானா நினைவாக அதே இடத்தில் ஒரு அணையா விளக்கை ஒளிரச் செய்திருந்தார்கள்.

நாற்பத்து மூன்று இருக்கைகள் கொண்ட பேருந்தில் கார்த்திக், ஆனந்தி இருவரோடு சேர்த்து மற்ற இரு பாரசீக இளைஞர்கள் இருந்தனர். அவர்களுக்கு மட்டும் ஆங்கிலத்தில் எடுத்துச் சொல்ல வேண்டியது வழிகாட்டிக்குச் சற்று சங்கடத்தை உருவாக்கியிருந்தது.

"நான் கார்த்திக். இது ஆனந்தி. நாங்கள் இந்தியர்கள்" என்று அவர்களிடம் அறிமுகம் செய்தான். 'தமிழர்கள்' என்று சொல்லத் தோன்றவில்லை. ஆனால் அவர்கள் பாரசீகர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டார்கள். எந்த நாடு என்று குறிப்பிட்டுக் கேட்ட போதுதான் 'ஈரான்' என்று சொன்னார்கள்.

அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை பிரெஞ்சுக்காரர்கள் கொடுத்தது. அதற்கு நன்றி செலுத்தும் விதமாக அதே போன்ற மினியேச்சர் சிலை ஒன்றை அமெரிக்கர்கள் பிரான்சுக்குப் பரிசளித்திருந்தார்கள். அந்தச் சிலையைக் கடந்து பேருந்து ஊர்ந்த போது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவள் இடக்கரத்தைத் மெதுவாகத் தொட்டு வருடினான் கார்த்திக்.

வெடுக்கென்று கையை விடுவித்துக் கொண்டாள். "அவசரப்பட்டு விட்டேனோ!" என அவன் வியந்தான். அதே சமயம் அவன் பக்கம் பாராமல் ஜன்னலுக்கு வெளியே பார்வையைச் செலுத்திய படி அவள் சிரித்துக் கொண்டாள்.

ஏதோ பெயர் நினைவில்லாத ஒரு தேவாலயம் முன்னர் இறக்கி விட்டு அங்கே பேருந்து இருபது நிமிடம் நிற்கும் என்றார்கள். "பஸ் பத்து நிமிசம் நிக்கும் சார். டீ, காஃபி சாப்டறவங்க இறங்கி சாப்பிடலாம்" என்ற குரல் நிஜத்தில் ஒலிக்காவிட்டாலும் அவன் மனக்காதுக்குக் கேட்டது.

இவர்கள் இருவரும் கோவிலுக்கு உள்ளே செல்லவில்லை. அதன் படிக்கட்டில் ஒரு கிழவன் தானியம் விற்றுக் கொண்டிருந்தான். ஒரு யூரோவுக்கு கை நிறைய அள்ளிக் கொடுத்தான். அதை வைத்துக் கொண்டு கையை நீட்டிய போது சிமெண்ட் நிற புறாக்கள் வந்து கை மீதும், தோள் மீதும் அமர்ந்து கொண்டன.

சிறிய அலகினால் கொத்தித் தின்னும் போது அவை ஏற்படுத்திய 'புரு புரு' உணர்ச்சி அவளுக்கு கிளுகிளுப்பைத் தந்திருக்க வேண்டும். கார்த்திக் அந்தக் காட்சியில் அவளைக் கண்கொட்டாமல் ரசித்தான். மார்ச் மாத இளவேனிற் காற்றின் குளிரில் இருந்து காத்துக்கொள்ள கைகளைத் தேய்த்து வெப்பம் உற்பத்தி செய்தான்.

அங்கிருந்து கிளம்பிச் சென்று மலை உச்சியில் அமைந்திருக்கிற இன்னொரு தேவாலயத்திற்கு அருகில் பேருந்தை நிறுத்தினார்கள். ஒரு மணி நேரம் அங்கே நேரம் ஒதுக்கப்பட்டது. அந்த ஆலயத்திற்கு அருகாமையில் பென்சில் ஓவியர்கள் சுற்றுலாப் பயணிகளை வைரைந்து கொண்டிருந்தார்கள். ஐம்பது யூரோ கொடுத்து ஏற்கனவே அழகாக இருக்கிற அவளை இன்னும் கூடுதல் அழகோடு வரைந்து வாங்கிக் கொண்டான். திரும்பி வரும் போது பூத்த முகத்தோடு அவளாகவே அவன் கையைக் கோர்த்துக் கொண்டாள்.

பசிக்கிறது என்று சாப்பிடுவதற்காக அருகில் இருந்த கடைக்குள் நுழைந்தார்கள். அங்கே பாரசீக இளைஞர்கள் இருவரும் வேக வைக்காத பச்சை மாமிசத்தை காய்ந்த ரொட்டிக்கு நடுவில் வைத்துத் தின்று கொண்டிருந்தனர். அதை பார்த்ததும் ஆனந்திக்குக் குமட்டிக் கொண்டு வந்தது. இருவரும் வேகமாக வெளியேறிக் கீழிறங்கி வந்து மெக்டொனால்டு கடையைத் தேர்ந்தெடுத்தார்கள்.

சாப்பிடும் நேரத்தைத் தவிர மற்ற நேரம் அவர்கள் கைகோர்த்தபடியே தான் இருந்தார்கள். பக்கத்து மேசையில் ஒரு நடுத்தர வயது இத்தாலிய ஜோடி உலகை மறந்து முத்தமிட்டுக் கொண்டிருந்தனர். அதைக் கொஞ்சமும் சட்டை செய்யாமல் குழந்தைகள் இரண்டும் பிரெஞ்சு வறுவலை ருசித்துக் கொண்டிருதன. "சே..கொஞ்சம் கூட வெவஸ்தையே இல்லாமே.." என்று ஆனந்தி முனுமுனுத்தாள்.

உணவகத்தை விட்டு வெளியே வந்து அவர்கள் நடந்த போது கைகள் சேர்ந்திருக்கவில்லை. கொஞ்ச தூரம் கடந்திருப்பார்கள். மலையாளமும், தமிழும் கலந்த ஒரு மொழியென இவர்கள் நினைக்கும் வண்ணம் பிழையில்லாத் தமிழ் பேசிய படி இரு பெண்கள் இவர்களைக் கடந்தனர். அதற்கு அருகாமையில் 'எம்.ஜி.ஆர். படவுலகம்' என்ற பெயர் தாங்கிய பலகை ஒரு கடை வாசலில் காணப்பட்டது. அவனுக்கு மயிர்க்கால் எல்லாம் நட்டமாக நின்றது. இத்தனைக்கும் அவன் சிவாஜி ரசிகன். அவள் ஏதும் பேசவில்லை.

கண்ணாடிப் பிரமிடு நடுவில் அமைந்திருந்த உலகப் புகழ் பெற்ற லூர்த் அருங்காட்சியகத்தை அடைந்த போது ஆனந்தி களைத்திருந்தாள். எண்ணற்ற வண்ண வண்ண ஓவியங்கள், சிற்பங்கள் அருங்காட்சியகத்தை நிற்த்திருந்தன. அதை முழுமையாச் சுற்றிப் பார்க்கவே ஒரு நாளைக்கு மேல் ஆகிவிடும் போலத் தோன்றியது.

குறைந்த பட்சம் மோனாலிசா படத்தை மட்டும் பார்த்து விடவேண்டும், பக்கத்தில் நின்று போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையோடு சென்றார்கள். சுவரில் தொங்கிய புருமற்ற உருவம் பொருந்திய அந்த மோனாலிசா ஓவியத்தைக் கண்டு பெரும் ஏமாற்றம் கார்த்திக்கைத் தொற்றிக் கொண்டது. அங்கே உள்ள சித்திரங்களியே மிகச் சிறியது அதுவாகத் தான் இருக்கும் என நினைத்தான். அவனைப் பொறுத்த வரை அங்கு உள்ள படங்களில் மட்டமான ஈர்ப்பு உடைய படம் எதுவெனக் கேட்டால் இதைத் தான் காட்டியிருப்பான்.

மோனாலிசா சோகமாக இருக்கிறதா, மகிழ்ச்சியாக இருக்கிறதா என்று யாராலும் சொல்ல முடியாத சித்திரம் என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறான். அதை விடப் பெரும் குழப்பமும், புரிந்து கொள்ள முடியாதவளுமாக அல்லவா இருக்கிறாள் இந்த ஆனந்தி? மோனாலிசாவை ஓவியம் என்றால், ஆனந்தி சிற்பம். நடக்கும், பேசும், சிரிக்கும், சிறுகச் சிறுகச் சாகடிக்கும் சிற்பம். காலையில் இருந்து அவள் உதட்டோடு உதடு ஒட்டி முத்தம் தர, பெற முயற்சித்துக் கொண்டிருக்கிறான். முடியவில்லை.வந்தது வந்தாயிற்று. மோனாலிசாவைப் படம் எடுக்கலாம் என்று காமிராவில் பிடிட்துப் பார்த்தால் ஒரே வெளிச்சமாக, ஒளித் திட்டாகத் தெரிந்தது. கொஞ்சம் கூட ஓய்வின்றி பல காமிராக்கள் பிளாஷ் மினுங்கிக் கொண்டே இருந்தன.

காட்சியகத்தை விட்டு வெளியே வந்த போது இரண்டு பேருமே களைத்திருந்தார்கள். மேற்குத் திசையில் இருந்த பூங்காவை நோக்கிச் சென்று புல் தரையில் அமர்ந்தனர். மேற்கு என்பதை அவர்கள் அனுமானித்தார்களே ஒழிய என்ன திசை என்று நிச்சயமாகத் தெரியவில்லை. மாலை ஐந்து மணி ஆகியிருந்தது.

ஒரு சில ஜோடிகள் மெய் மறந்த நிலையில் இருப்பதை அவள் கண்டு கொள்ள வில்லை. மன்னித்து விட்டாள் போலும். அவனுடைய தோளில் சாய்ந்து கொண்டாள். அந்தப் பக்கமாக சுருட்டை முடி வைத்த ஒரு கறுப்பன் டி-ஷர்ட் விற்ற்க் கொண்டு வந்தான். ஆனந்திக்கு ஒன்று வாங்கித் தரலாமென்று அவனை கார்த்திக் அழைத்தான்.

குதிரை மீது கம்பீரமாக நெப்போலிய மாமன்னன் அமர்ந்திருக்கும் படம் கொண்ட ஒன்றை எடுத்துக் கறுப்பன் நீட்டினான். அதை ஒதுக்கி விட்டு தானாக ஆராய்ந்து விவகாரமான ஒன்றைத் தேர்தெடுத்தான். சேற்றில் முக்கி எடுத்த கைகள் இரண்டையும் நெஞ்சின் மீது வைத்தால் ஏற்படும் கரையைப் போல ஐந்து விரல்களையும் மார்பின் இரு புறமும் பொறித்து, அதற்குக் கீழே 'Hands Offf' என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. அதைக் கண்டு அவள் கோபம் கொள்ளவில்லை. லேசாக வெட்கப்பட்டு விட்டு, "ச்ச்சீ..பொறுக்கி" என்று அடித்தாள்.

அதற்குப் பிறகு படகில் ஏறி நகரைச் சுற்றினார்கள். மின் விளக்குகள் அங்கங்கு எரிய ஆரம்பித்திருந்தன. பிரெஞ்சு உச்சரிப்புக் கலந்த ஆங்கிலத்தில் இடங்களை எல்லாம் விவரித்துக் கொண்டு வந்தார் படகுப் பயணக்குழுவின் தலைவி. கொசுவர்த்திச் சுருள் போல எண்ணிடப்பட்ட பாரிஸ் நகர வரைபடத்தை அவன் எடுத்து வைத்து அந்தப் பெண்மணி சொல்வதைச் சரிபார்த்துக் கொண்டே வந்தான் இவன். சுருளின் மையத்திற்கு 1 என இலக்கமிட்டு, வட்டம் பெரியதாக வளர வளர இலக்கத்தைக் கூட்டி மேப் போட்டிருந்தார்கள். மெல்லிய நீரோட்டம் இருக்கும் அந்தக் கால்வாயின் மூலம் பாரிஸ் நகர் முழுவதையும் வலம் வந்து விட முடியும் போலத் தோன்றியது.

படகு ஈஃபிள் கோபுரத்தை நெருங்க நெருங்க அதன் உருவம் பார்வைக்குப் பெரிதாகிக் கொண்டே வந்தது. உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் எழுந்து நின்று வாகாய் அதைப் படம் பிடித்தனர். மிகுந்த குதூகலத்துடன் ஆனந்தியுன் தனது டிஜிட்டல் காமிராவில் அதைக் கைது செய்தாள். அவனுக்குள் இது வரை உறங்கிக் கொண்டிருந்த சாத்தான் விழித்தது. எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி அவளை இழுத்து கூந்தலுக்குள் விரலை விட்டு உதட்டருகே உதடு பொருத்த முயன்றான். அவள் பதற்றத்துடன் தட்டி விட்டு, "வாட் இஸ் திஸ் கார்த்திக்? பிஹேவ் யுவர் செல்ஃப். எல்லோரும் வேடிக்கை பாக்கறாங்க" என்று நடுங்கினாள்.

மூர்க்கத்தனமாக அணுகித் தொலைத்து விட்டதாக அவனும், காலையில் இருந்து அனுசரனையாகக் கவனித்தவனை இப்படி உதாசின்னப்படுத்தி காயம் உண்டுபண்ணி விட்டோமே என்ற வருத்தத்தில் அவளும் தத்தமது நத்தை கூட்டுக்குள் போய்ப் பதுங்கி அடைபட்டுப் போனார்கள். சிறிது நேரம் பேசிக்கொள்ளவே இல்லை. அதற்குள் சுற்றுலாக் குழுவினர் ஈஃபிள் கோபுரம் சென்று சேர்ந்திருந்தனர்.

மோட்டார் லிஃப்ட் மெது மெதுவாக அவர்களை மேலே தூக்கிச் சென்றது. பூமியும், அதன் மனிதர்களும் அந்நியப்பட்டதைப் போல அனைவருக்குமே தோன்றியது. இவர்களுக்கு முன்னால் ஒரு ஸ்பெயின் ஜோடி "என் உருளைக் கிழங்கே" "முட்டைக் கோஸே" என்று கொஞ்சியது இவர்களுக்குப் புரியாமல் போயிருக்கலாம். ஆனால் அவர்கள் எழுப்பிய சிணுங்கல் சத்தமும், ஆகா..ஊஉ.. ம்ஹ்ம்ம்..என்ற முனகலும், நீண்ட முத்தங்களுக்கு நடுவே இடைவெளி கொடுத்த போது விட்ட பெருமூச்சின் இரைச்சலும் நன்றாகப் புரிந்தது.

கார்த்திக் முகம் இன்னும் வாடியே இருந்தது. காய்ந்த சருகு காற்றில் மிதப்பதைக் கூட இரசிக்கும் தன்மை கொண்டவன் அவன். உலகிலேயே மிக முக்கியமான இடம் ஒன்றின் உச்சியை அடையப் போகிற மகிழ்ச்சி அறவே இல்லாமல் இருந்தான்.

உச்சி நெருங்கிக் கொண்டே இருந்தது. ஆனந்தி எதுவும் பேசாமல் அணிந்திருந்த மேல் கோட்டைக் கழட்டிக் கீழே போட்டு விட்டு, குதி காலை உயர்த்தி தலையை சாய்த்து பாம்பினைப் போலக் கைகளை வளைத்து அவனைப் பிண்ணி இழுத்து அவன் வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாத நீண்டதொரு கிஸ் அடித்தாள்.

சுவாசத்திற்குக் கொஞ்ச காற்று வேண்டும் என்பதற்கு மட்டும் ஒரு சிறு இடைவெளி கொடுத்து விட்டு மீண்டும் தொடர்ந்தாள். கீழே பாரிஸ் மநகரம் மின்னொளி வெள்ளத்தில் மிதந்தது. "ஏ உலக மானிடர்களே பாருங்கள் என்னை" என்று பெருமிதத்துடன் அவன் உலகை நோக்கி அறிவித்தான். அதை ஆமோதித்து பல காமிராக்கள் நகர வீதிகளிலும், கால்வாயில் மிதக்கும் படகுகளிலும், ஓபரா கோபுர உச்சியின் தொலைநொக்கியில் இருந்தும் அவனைக் கண்டு ரசித்துப் பதிவு செய்தன.

ஆனால் பாவம். மறுபடியும் தரைக்கு வந்தால் தான், கட்டிய மனைவியிடம் திறந்த வெளியில் முத்தம் வாங்குவதற்கு ஒவ்வொரு முறையும் உலக அதிசயத்தின் உச்சிக்குக் கொண்டு செல்வது சாத்தியமில்லாத ஒன்று என்பது அவனுக்குப் புரியும்.

Thursday, November 16, 2006

குஷ்பு, பெரியார், இசைஞானி = வெங்காயம்

........ அப்படீன்னு வெவகாரமான தலைப்பு வச்சு உங்களை தவறான எண்ணத்தோட உள்ள இழுத்திருந்தா மன்னிக்கனும்.

இந்த வாக்கியத்தைப்(???) படிக்கும் போது ஒரே சொற்றடராகத் தமிழாக்கம் செய்ய முடியுமா என்று யோசித்தேன். தமிழ், ஆங்கிலம் இரண்டுமே நமக்கு அரைகுறை. எனவே, இரண்டிலும் புலமை பெற்றவர்கள் யாரவது சொன்னால் நன்றாக இருக்கும்.

In everycountry of Europe we find, at least, a hundred people who haveacquired great fortunes from small beginnings by trade andmanufactures, the industry which properly belongs to towns, for onewho has done so by that which properly belongs to the country, theraising of rude produce by the improvement and cultivation of land.Industry, therefore, must be better rewarded, the wages of labourand the profits of stock must evidently be greater in the onesituation than in the other.

Thursday, November 02, 2006

பெரிய பையனும், சின்னப் பையனும்

- குப்புசாமி செல்லமுத்து

பெரிய பயனின் குரல் இவ்வளவு கம்பீரமாகச் சுண்டி இழுக்கும் என்று அவன் எதிர்பார்க்கவேயில்லை. அந்த உடுக்கையடிக் கதைப் பாட்டுக் குழுவில் பெரிய பையனின் குரல் மட்டுமே ஓங்கி ஒலித்தது. அவரின் பாட்டைக் கேட்பதற்காகவே நிறையப் பேர் கோவிலுக்கு வருவார்கள். அன்று மதியம், பகல் பொழுதை மதிய வேளை என்று சொல்வார்களே அந்த மதியமல்ல. முழுமதி வானில் தவழும் பவுர்ணமியை மதியம் என்று அந்த வட்டாரத்தில் குறிப்பிடுவது வழக்கம்.

கொங்கு மண்டல மக்களின் கலாச்சார வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கிற அண்ணமார் சாமி கோவில் ஒன்றில் அப்படிப்பட்ட மதியத்தன்று நடக்கும் விசேசப் பூசைக்கு வந்த சிவபாலனுக்கு ஆச்சரியம் இன்னும் விலகியிருக்கவில்லை. இந்தக் கோவிலுக்கு வர வேண்டும் என்கிற சிவபாலனின் ஆசை இன்றுதான் நிறைவேறியிருக்கிறது. மதியப் பூசை முடிய ராத்திரி ஒரு மணி ஆகிவிடும், அதற்குள் தூங்கி விடுவான் என்று சொல்லி அவனை மட்டும் வீட்டில் தொன தொனவென்று பேசும் கிழவியிடம் ஒப்படைத்து விட்டு வந்து விடுவார்கள். இன்று மட்டும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி கூடவே தொற்றிக்கொண்டு வந்து விட்டான்.

சிலபாலனுக்கு மூன்றாவதோ நாலாவதோ படிக்கிற வயது. ஒன்னு ரண்டு ஆயிரம் வரை சொல்வான். அப்படிச் சொல்வதைப் பெருமையுடன் ஒறம்பறைக்கு யார் வந்தாலும் அவர்களிடம் சொல்லாமல் விட மாட்டான். அதே போன்ற ஆசையோடு அப்பாவிடம், "அப்பா எனக்கு ஒன்னு ரண்டு ஆயிரமெரைக்கும் தெரியுமே" என்று ஆசையோடு சொன்னவனுக்குக் கிட்டிய, "போதும்டா நம்ம வருமானத்திற்கு அதே சாஸ்தி" என்ற பதிலின் உள்ளார்ந்த சோகம் அந்தச் சின்ன வயதுக்குப் புரியவில்லை.

அதெல்லாம் இருக்கட்டும். நிகழ்காலத்திற்கு வருவோம். இந்த அண்ணமார் சாமி கோவில் இதுவரை அவன் செய்து வைத்திருந்த கற்பனைகள் எல்லாவற்றையும் ஈடு செய்வதாக இருந்தது. கோவிலுக்குச் சற்றுத் தள்ளி மிகப்பெரிய புளிய மரம், அதை ஒட்டிய வேப்ப மரம் ஆகிய இரண்டும் ஒன்றாகப் பிணைந்து வளர்ந்திருந்தன. அவற்றின் அடிமரம் ஆற்றங்கரை ஓரமாக இருந்தது. கோவில் வாசலில் இருந்து உருண்டு கொண்டே போனால் அந்த மரம் வரைக்கும் சமதளத்திலும், அதற்குப் பிறகு ஆற்றுக்குள் விழும் வரை சரிவிலும் உருள வேண்டி வரும்.

மரத்திற்கு அப்பால் முழு மதிய நிலா வட்டமாகக் காட்சி தந்தது. அமாராவதில் தொடையளவுத் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. அதையும் பொருட்படுத்தாமல் பல பேர் அக்கரையில் இருந்து சாமி கும்பிட வந்திருந்தார்கள். அப்பகுதி மக்கள் கழுத்தளவு தண்ணீர் வரை இறங்கிக் கடந்து விடுவார்கள். அதற்கு மேல் போனால் மட்டுமே பரிசலை நாடுவார்கள். பரிசல் துறை கோவிலுக்குத் தெற்கே கண்ணுக்கேடும் தூரத்தில் இருந்தது. சுற்று வட்டாரத்தில் இருக்கும் பல கிராமங்களுக்கு சேர்த்து ஒரே பரிசல் துறை இந்த ஊரில்தான் இருக்கிறது. பரிசல் போடுவதற்கு ஒரு ஆளை நியமித்திருந்தார்கள். அந்த ஆள் தொலை தூரமாக வேறொரு ஊரில் வசித்தார். ஆற்றில் வெள்ளம் வந்து பரிசல் போட்டாக வேண்டிய கட்டாயம் இருப்பதான செய்தி அவரைச் சேர்ந்து அவர் பதினொரு மணிக்கு வந்தடைவதற்குள் ஊர்க்காரர்களே பரிசல் போட்டிருப்பார்கள். டவுனுக்கு சோலியாகப் போகிறவர்கள், பால் ஊற்றப் போகிறவர்கள், பள்ளிக்கூடம் போகிற குழந்தைகள் என அத்தனை பேரும் அதற்குள் போயிருப்பார்கள். இருந்தாலும் பரிசலுக்குப் பொறுப்பாளியாக இருக்கிற அந்தப் பரசக்காரன் என்ற பரிசல்காரருக்கு சுற்றுவட்டக் கிராமங்களில் விளைநிலம் இருக்கிறவர்கள் தவுச தானியமாகவும், அப்படி இல்லாதவர்கள் பணமாகவும் கொடுத்து வந்தார்கள்.

யாரோ எசவடம் கும்பிட்டிருப்பார்கள் போலத் தோன்றியது; சக்கரைப் பொங்கல் கொடுத்தார்கள். வாழ்வியல் மாற்றத்தில், நவீனத்தின் தாக்கத்தில் மெது மெதுவாக வழக்கொழிந்து வரும் வட்டாரச் சொற்களில் எசவடமும் ஒன்று. அது எப்படித் தோன்றியது, எந்தச் சொல் மருவி அப்படி ஆனது என்றெல்லாம் ஆராய்ந்தால் வெகு சுவாரசியமாக இருக்கும். ஒரு வேளை இசைவிடம் என்பது எசவடமாக ஆகியிருக்கலாம். சுருக்கமாகச் சொன்னால் எசவடத்தை ஒரு வகை இலஞ்சம் எனலாம். அவைத்தமிழில் வெளிப்படுத்தினால் வேண்டுதல், நேர்த்திக் கடன் எனலாம். மாடு காளைக்கன்னுப் போடுவதற்கான வேண்டுதல், தேள், பூராண் முதலிய விசகடி குணமாவதற்கு அண்ணமார் கோவில் பூசாரி தண்ணி மந்திரித்துக் கொடுத்ததற்கான நன்றிக்கடன், வெள்ளாமை வெளச்சல் சம்மந்தமான வேண்டுதல், புள்ளைக்கு மாப்பிளை அமைதல் போன்ற பல எசவடக் கடன்கள் இருக்கும். அவை பெரும்பாலும் கோவில் கூட்டத்திற்கு ஆளுக்கொரு கரண்டி சர்க்கரைப் பொங்கலாகவோ, சுண்டலாகவோ அல்லது எல்லோருக்கும் போதும் போதும் எனும்படி விருந்து வைக்கும் மையார் பூசையாகவோ அமைவதுண்டு.

மாரியாத்தா கோவில் அடசல் சாற்றுக்கு அபார ருசி உண்டு என்று அம்மா எப்போதும் சொல்வதைப் பல தடவை கேட்டிருக்கிறான். ஒரு கோழியைக் கோட்டை மாரியம்மனுக்குப் பலியிட்டு அங்கேயே கருவேல மரத்திற்கடியில் அடுப்புகூட்டி ஆக்கும் கறி வீட்டிலே சகல மசாலாவையும் கலக்கி வேகவைக்கும் கறியை விட ருசியாக இருக்கும் என்று எல்லோருமே ஒப்புக்கொள்வார்கள். அதே போல அண்ணமார் கோவில் எசவடச் சக்கரைப் பொங்கல் கூடுதல் ருசியாக இருந்தது சாமி சக்திதான் என்று சிவபாலன் நினைத்தான். பெரிய ஆளானதும் தான் சக்கரைப் பொங்கலெல்லாம் தராமல் ஒரு மையார் பூசை வைக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.

கோவிலில் வாராவாரம் வெள்ளிக்கிழமை ராத்திரி பூசை இருக்கும் என்றாலும், அப்போதெல்லாம் அண்ணமாரின் கதை முழுவதும் பாட்டாகப் படிக்க மாட்டார்கள். மதியப் பூசையன்று மட்டுமே பெரும் கூட்டம் கூடி விடிய விடியக் கதைப் பாட்டு நடக்கும். கதை கேட்பதற்காகவே வெளியூரில் இருந்து நிறையப்பேர் வருவார்கள். பெரிய பையன் குழிவினர் சுமார் மூன்று மணி நேரம் பாடிய பிறகு இப்போது தான் சங்கரும் பொன்னரும் வேட்டைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.

அண்ணமார் கதையில் வரும் பாத்திரங்களை ஏற்றவர்கள் அங்கே இருந்தார்கள். சின்னண்ணனாக, பெரியண்ணனாக, சாம்புவனாக சில பேர் கோவிலை அலங்கரிப்பார்கள். கதையிலே பொன்னருக்கும், சங்கருக்கும் ஒரு பொறந்தவள், அதாவது சகோதரி இருப்பாள். தங்கையான அருக்காணித் தங்காளின் அண்ணன்மாரான இந்த இருவருமே அண்ணமார் சாமிகள். அவர்களை சின்னண்ணன் என்றும் பெரியண்ணன் என்றும் சொல்வார்கள். வெள்ளாமைக் காட்டை நாசம் பண்ணிய வேட்டுவக் காளியின் காட்டுப் பன்றியை வேட்டையாடிவிட்டு வந்து ஆடை ஆபரணங்களை அண்ணமார் கழுவிக்கொண்டிருக்கும் போது வேட்டுவக்காளியின் ஆட்கள் மறைந்திருந்து தாக்கிச் சாய்த்து படுகளமாக்கி விடுவார்கள்.

அந்தக் காட்சியைப் பெரிய பையனும் அவரது குழுவினரும் பாட்டில் படிக்கும் போது அத்தனை பேரும் பரவசமாகி விடுவார்கள். படுகளங்கள் பொத்துப் பொத்தென்று விழும். 'இன்னிக்கு எத்தன படுகளம் சாஞ்சுது?' என்பது தான் பேச்சாக இருக்கும். அண்ணமார் வஞ்சகமாகத் தாக்கிச் சாய்க்கப்பட்டதைப் போல கோவிலில் படுகளம் வீழ்ந்தவர்கள் மாண்டுவிடுவதாக ஐதீகம். அப்படி விழுபவர்களில் மாற்றமின்றி சாம்புவன், சின்னண்ணசாமி, பெரியண்ணசாமியாகப் பொறுப்பேற்றவர்கள் இருப்பார்கள். அது போக வேறு சில பக்தர்களும் சாய்ந்திருப்பார்கள். மூர்ச்சையாகி சுயநினைவின்றி சவம் போலவே கிடப்பார்கள்.

அந்தப் படுகளச் செய்தி கேட்டு தங்காள் ஓடோடி வந்து அழுது கதறி அவர்களை உயிர்ப்பிப்பது அதன் பிறகு நடக்கும். வயதுக்கு வராத சிறு பெண் யாராவது தங்காளாக இருப்பார். வரிசையாக ஒவ்வொரு படுகளத்துக்குப் பக்கதில் தனித்தனியாக வந்து , "அண்ணா, அண்ணா" என்று கதறி எழுப்புவாள். அவளோடு சேர்ந்து உடுக்கைப் பாட்டு கூடுதல் தாக்கத்தை உண்டாக்கும். படுகளத்திற்கு நினைவு திரும்பி எழும்புவதற்கு உடுக்கையின் பங்களிப்பே மிக முக்கியமானது. மிக விசேசமான நாட்களில் பத்து, பன்னிரண்டு படுகளங்கள் கூட விழும். அவற்றை எல்லாம் எழுப்பக் குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது ஆகும்.

இத்தனை விமரிசையான ஆத்தங்கரை அண்ணமார் கோவில் மதியப் பூசையின் முக்கிய நாயகன் பெரிய பையன் என்பது அத்தனை பேருக்கும் தெரியும். சிவபாலன் பெரிய பையனைத் தனிப்பட்ட முறையில் நன்கு அறிவான். பூசாரியும், சின்னண்ண பெரியண்ண சாமிகளும் பூசை செய்வதை தொழிலாகச் செய்வதில்லை. பெரிய பையனும் உடுக்கைப் பாட்டை நம்பி மட்டும் சீவனம் செய்வதில்லை. பாரம்பரியமாகப் பேணப்பட்டு வந்த வழிபாட்டுமுறையை அவர்கள் தங்களால் இயன்ற அளவில் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.

மற்ற மதியப் பூசையைப் போல அன்றும் படுகளமெல்லாம் எழுப்பி கடைசிப் பூசை நடந்து முடிய அதிகாலை இரண்டு மணி ஆகியிருந்தது. ஆனால் சிவபாலன் சர்க்கரைப் பொங்கல் தின்றதும் பத்து மணிக்கே தூங்கி விட்டான் என்தைச் சொல்ல மறந்து விட்டோம். அதற்குப் பிந்தைய பவுர்ணமி தினங்களில் அவன் பூசைக்குப் போக முயற்சிப்பதும், அவனுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு அவன் தந்தை மட்டும் போவதும் பல காலம் நடந்தது.

ஒரு வழியாக விடியும் வரை தூங்காமல் இருக்கக்கூடிய நிலையைச் சில ஆண்டுகளில் அவன் எய்திய போது வேறு சில தவிர்க்க முடியாத மாற்றங்களும் கூடவே நடந்தன. சேர்க்கைக்குச் சிறுவர்கள் வராத காரணத்தால் கிராமப் பள்ளிக்கூடத்தை அரசு மூடியது. அதற்குக் காரணமாக, குடியானவர்கள் நகரத்து இங்கிலீஷ் மீடியப் பள்ளிக்கூடத்திற்குத் தமது குழந்தைகளை வேனில் அனுப்பினர். அதற்காக அவர்கள் கந்து வட்டிக்குக் கடன் வாங்கவும் தயாராக இருந்தார்கள். அப்படி நாகரிகம் தொற்றிக்கொண்ட குழந்தைகளில் யாரும் தங்காளாக முன்வந்து படுகளம் எழுப்ப விரும்பாத நிலை உருவானது. புதிய தலைமுறை ஆண்கள் திருப்பூரின் பனியன் கம்பெனிக்கும், வெளியூர்களில் கந்து வசூலுக்கும் போய் விட்டார்கள்.

குடிப்பழக்கத்தால் குடல் வெந்து பெரிய பயன் செத்துப் போனார். அவரது உடுக்கைப் பாட்டுக் கலையை அவருக்குப் பின் கற்க அவரது சொந்த வாரிசுகளோ, சுய ஆர்வமுள்ளவர்களோ தயாராக இல்லை. அவரது மகன் சிங்காரம் தந்தையின் அடப்பத்திற்கு மட்டும் வாரிசாகிப் போனார். அவ்வப்போது கத்தி மட்டும் புதிதாக வாங்கி அதில் வைத்து கொண்டாலும் தந்தையின் அடப்பத்தை மட்டும் மாற்றவில்லை.

சிவபாலனுக்கு, அண்ணமார் வரலாற்றைப் போலவே, அண்ணமார் பூசையின் படுகளக் காட்சியும் வாய்வழிக் கதையாகவே இருக்கிறது. அது நான்கு மணித் தூக்கத்திற்கு அவன் கொடுத்த விலை.

Monday, October 16, 2006

ஒரு சனிக்கிழமைக் காலையில்....

- குப்புசாமி செல்லமுத்து

சொந்த மாவட்டத்தின் தலைநகர். சென்னையில் இருந்து ஈரோடு வராமல் ஊருக்குப் போனதில்லை. அப்படி இருந்தாலும் அருகிலிருந்தும் தொலைவில் இருக்கும் உறவுகளைப் போல ஒட்டியும் ஒட்டாமலும் தான் ஈரோடு மனதில் பதிந்திருக்கிறது. நகரின் தெற்குப் புறமாக இரயில் நிலையம் இருப்பதால் அவனது ஊருக்ககான பஸ் அந்த வழியாகத்தான் வரும். ஆகவே இரயில் சந்திப்பில் இருந்து காளை மாட்டுச் சிலை பேருந்து நிறுத்தம் வரையான பகுதியைத் தவிர இந்த நகரின் எந்த வீதியிலும் குணசேகரன் நடந்ததில்லை.

வழக்கம் போல ஏற்காடு எக்ஸ்பிரஸில் இறங்கி காளை மாட்டுச் சிலையில் இருபத்தி ஐந்து நிமிடக் காத்திருத்தலுக்குப் பிறகு வந்தது ஒரு திண்டுக்கல் பேருந்து. தாராபுரம், ஒட்டன்சத்திரம் வழியாகத்தான் திண்டுக்கல் போயாக வேண்டும் என்ற நம்பிக்கையில் ஏறினான். வழக்கமாக பழனி வண்டி ஏதாவது கிடைத்து விடும். இந்த முறை திண்டுக்கல் பஸ்ஸில் ஏறியது ஏதோ வித்தியாசமாக அவனுக்குத் தோன்றியது.

உறக்கம் தொலைத்த முன்னிரவும், பஸ்ஸில் பாடிய பண்பலை இசையும், குலுங்கி அசையும் பயணமும், ஜன்னலில் ஊடாக உள்வரும் இளங்காலைக் காற்றும் தந்த உறக்கத்தில் சில கிலோ மீட்டர்களைத் தாண்டிய பின் விழித்து டிக்கெட் எடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தவனாய் நடத்துனரைத் தேடினான். நடத்துனர் தென்படும் முன்னதாகவே மொடக்குறிச்சி என்ற பெயர்ப்பலகை அவனுக்குக் கலக்கத்தைக் கொடுத்தது, தப்பான பேருந்தில் ஏறிவிட்டதை உறைத்தது. காங்கேயம் போகும் வழியில் மொடக்குறிச்சி வரக்கூடாதே! ஒரு வேளை வெள்ளகோவில், மூலனூர், ஒட்டன்சத்திரம் பாதையில் இந்த பஸ் பயணிக்குமோ? அப்படியானால் மூலனூரில் இறங்கி தாராபுரத்திற்கு வேறு பஸ் பிடிக்க வேண்டியதுதான்.

"ஏனுங்க... வெள்ளகோயப் போயி போகும்ங்களா?" என்று முன் இருக்கையில் அமர்ந்திருந்தவரைக் கேட்டான்.

"கொடுமுடி மேல கரூர் போறதப்பா" என்றார்.

தற்சமயம் அவனுக்குத் தெளிவாக விளங்கியிருந்தது. நம்பிக்கை, பயணப்பாதைகள் குறித்த தனது அதீதத் தன்னம்பிக்கை, தவறான பாதையில் பயணிக்கச் செய்ததை மனம் உணர்ந்தாலும் ஏற்றுக் கொள்ளவில்லை. என்ன போச்சு? இரண்டு மணி நேரம் கூடுதலாகப் பயணிக்க வேண்டும். அவ்வளவு தான்.. பரவாயில்லை. இது போல ஒரு தவறு நடக்காமல் போயிருந்தால் காவிரிக்கரையைக் காலை நேரத்தில் கண்குளிரப் பார்த்தபடி களிக்கும் வாய்ப்புக் கிட்டியிருக்காதல்லவா? கொடுமுடியில் பிரசித்த பெற்ற திருமால் கோவில் ஒன்று இருப்பது அவனுக்குத் தெரியும். பங்குனி மாதம் பழனி முருகனுக்குத் தீர்த்தக் காவடி எடுப்பவர்கள் கொடுமுடிக் கரையில் இருந்து தீர்த்தம் முத்திரித்துப் போவார்கள். அதற்குப் பின்னணியில் சொல்லப்பட்ட கதையை நினைத்தால் சிரிப்பாக இருந்தது.

அதாவது காவிரி ஆறு நேராகத் தெற்கே பாய்ந்து பழனியை நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்ததாம். முருகக் கடவுள் அதை நோக்கிக் காத்துக் கொண்டிருக்கும் அந்தத் தருணத்தில் திருமால் கொடுமுடியில் வந்து நீட்டிப் படுத்துக் கொள்கிறார். அவரைத் தாண்ட முடியாத காவிரி திசை விலகிக் கிழக்கே பாய்ந்ததாம். அதைக் கண்டு முருகன் கோபமுறுவதை உணர்ந்த மிஸ்டர் திருமால் வருவா வருடம் குமரனின் கோடை வெம்மை தணிக்க இதே கொடுமுடிக் கரையில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்துப் போகும் சமரசத் திட்டத்தை அளித்தாராம்.

இப்படி அறிமுகமான இந்த ஊருக்கு நான்காம் வகுப்புப் படிக்கும் போது வந்ததற்குப் பிறகு இப்போது மறுபடியும் வருகிறான். சிறு வயதில் அந்த ஊரின் மகிமையாக சினிமா அவ்வையார் கொடுமுடி பி.சுந்தராம்பாள் அவன் கண்ணுக்குத் தெரிந்தார்.

முதன் முறையாக வானவில்லும், இரயிலும் இந்த கொடுமுடியில் கண்டது மனதில் இன்னும் நீங்காமல் நிற்கிறது. அந்த இரண்டையும் ஒரே நாளில் ஒரே சமயத்தில் கண்டான். வெயிலையும், மழையையும் இயற்கை ஒருசேர இறைத்த அந்த மாலை வேளையில் ஒரு அருவி போல, அதாவது அனைத்து வண்ணங்களையும் ஒன்றாகக் கரைத்து யாரோ வானத்தில் இருந்து தொடர்ச்சியாக ஊற்றுவதால் உருவான அருவி போல அந்தக் காட்சி தோன்றியது. கொஞ்ச தூரம் ஓடிப் போனால் அதைப் பிடித்து விடலாம் என நினைத்தான். கதிரவன் மேற்கே இருக்க கிழபுறம் ஆகாயத்தில் இருந்து பல நிற நீர்க் கற்றை காவிரியில் ஒழுகுவதாக வானவில் இருந்தது. புதுத் தாவணியில் காதலனுக்குக் காத்திருக்கும் காதலியின் புத்துணர்ச்சியோடு கதிரவனை எதிர்நோக்கிக் காத்திருப்பதாக இருந்தது வண்ணவில். ஆனால் சிறுவனின் கற்பனை அத்தனை தொலைவு பயணிக்கவில்லை. அவனுக்கென்னவோ வானவில் புத்தகத்தில் ஒளித்து வைத்திருக்கும் மயிலிறகு போல இருந்தது. அதற்கான காரணம் சொன்னால் நமக்கு நம்ப முடியாதது போல இருந்தாலும் அதுவே உண்மையாகும். ஏதோ ஒரு பேரதிசியம் நிகழ்ந்தது போல வானவில்லுக்குப் பக்கத்தில் ஒரு குட்டி வானவில். மயிலிறகு குட்டி போட்டால் எப்படி இருக்குமோ, அப்படி அவனுக்கு இருந்தது. அந்த நிகழ்ச்சி நடந்து இருபதுக்கும் மேலான வருடங்கள் காலச் சக்கரத்தில் சுழன்று போனாலும் வானவில், இரயில், மயிலிறகு ஆகிய இந்த மூன்றில் எதைப் பற்றி நினைத்தாலும் இன்னும் கூட அவன் மனதில் கொடுமுடி வந்து போகும்.

அந்தக் கொடுமுடியில் இப்போது பஸ் நின்றிருந்தது. பல ஆண்டுகளாக அவன் இந்த ஊரைக் குறித்துக் கொண்டிருந்த வடிவம் என்னவோ ஒரே நொடியில் மாறிவிடும் போல இருந்தது. மாபெரும் நகரமாக அவனது இளம் மூளையில் இருந்த பதிவுகளை இப்போது கண்ட தோற்றம் தோற்கடிக்க முயன்றது. Yet another village என்று மட்டுமே தற்சமயம் நினைக்க வைத்தது. மிகச் சாதாரணமாக எந்த வித அலங்காரங்களும் இல்லாமல் எளிமையாக இருந்தது. ஆச்சரியமாக இருந்தாலும், அவன் அதை ஏற்றுக் கொண்டான். ஒரு காலத்தில் மிக அழகாகத் தெரிந்த அவனது பள்ளிப் பருவத்துப் பெண்கள் இப்போது சாதாரணமாகத் தெரிவது போலத்தானே இதுவும்?

முழுக்கை சட்டை அணிந்திருந்த ஒரு நபர் முன் கேட்டில் ஏறி வந்து பக்கத்தில் அமர்ந்து கொண்டார். கொடுமுடியில் பஸ் ஏறிய ஒரே நபர். திண்டுக்கல் செல்லும் ஆளா அல்லது கரூர் போகும் ஆளா என்ற கணிப்பு அவன் மனதில் ஓடியது. அவரே பேச்சுக் கொடுத்தார். கலகலப்பாகப் பேசினார். எங்கே போகிறான் என்பதைக் கேட்டறிந்தவர், தாராபுரம் பேருந்து கரூர் பஸ் ஸ்டாண்டில் எங்கே நிற்கும் என்று விளக்கினார். தானும் கரூரில் இறங்கப் போவதாகச் சொன்னார். அந்த நபர் ஏதோ சொந்தமாக பிசினஸ் செய்கிறார் என்று குணசேகரன் எண்ணினான். சனிக்கிழமைக் காலையில் இழுத்துப் போத்திக் கொண்டும் தூங்கக் கற்றிருக்கும் இந்தக் காலத்தில் உழைக்கக் கிளம்பிப் போய்க் கொண்டிருக்கும் இந்த மனிதர் எத்தனை உயர்ந்தவர் என்று பெருமையாக நினைத்துக் கொண்டான்.

"ஆமாம்மா..காங்கேயம் பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்குது. ஒரு மணி நேரத்தில வந்துருவேன்" என்று செல்பொனில் அம்மாவிடம் பொய் சொன்ன போது கரூர் பஸ் ஸ்டாண்டை அவர்கள் நெருங்கிக் கொண்டிருந்தார்கள். பேர் தெரியாத பஸ்ஸில் ஏறி விட்டதை வீட்டில் சொல்லி அவமானப்பட அவனது தன்மானம் இடம் தரவில்லை. அதனால் பொய் சொன்னான்.

மேதாவியாக தன்னைக் காட்டிக் கொள்ள ஒரு இந்து பேப்பர் வாங்கிக் கொண்டு, தேநீர் அருந்தி விட்டு, தாராபுரம் பஸ்ஸில் ஏறி இஞ்சி மரப்பா விற்பவரிடம் வேண்டாம் எனச் சொல்லி விட்டு அந்தப் பிச்சைக்காரரை நிமிர்ந்து பார்த்தான்.

அவரது கண்கள் 'காசி' விக்ரம் மாதிரி விநோதமாக இருந்தன. தனது இயலாமை குறித்து மிகச் சாதுர்யமாகப் பேசி காசு தருமாறு அனைவரையும் வேண்டினார். எத்தி எத்தி நடந்தார்.

குணசேகரனின் வியப்பு கூடியது. இழுத்துப் போர்த்தித் தூங்கக் கற்றிருக்கும் இந்த சனிக்கிழமைக் காலையில்... அடடா... பிச்சை எடுப்பது அத்தனை சுலபமல்ல. அதே ஆள்... அவரது சட்டை மாறியிருந்தது. தோற்றம் மாறியிருந்தது. இவன் இருக்கைக்கு அருகில் வந்த போது மட்டும் லேசான புன்னகை சிந்தி விட்டுப் போனார்.

Wednesday, October 04, 2006

அமெரிக்காவில் அப்பாவி (3)

முந்தைய பகுதி

அந்த நடை பாதை சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவு இருக்கும். பணியாளர்கள் நடப்பதற்காகவே அமைக்கப்பட்ட அப்பாதை ஒரு ஏரிக்கரையில் முடிவடைவதற்கு முன் அதன் இரு புறமும் புல் வெளியும், அந்த வெளியில் கால்பந்தாட்ட 'கோல் போஸ்ட்'களையும் காண முடிகிறது.

ஏரிக்கரைக்கு முன்பாக, "கவனம்..கனடா வாத்துகள் இங்கு திரியும். அதன் குஞ்சுகளை நீங்கள் தொந்தரவு செய்வது போல தாய்ப் பறவைக்குத் தோன்றினால் உங்களைத் தாக்க வாய்யுன்டு" என ஒரு அறிவிப்புப் பலகை எச்சரிக்கிறது. என் பார்வைக்கு எந்த ஒரு வாத்தும் தெரியவில்லை. ஒரு வேளை இன்னும் சில மாதங்களில் குளிர் தாங்க முடியாமல் கனடாவில் இருந்து தெற்கே அவை பறந்து வருமோ என்னவோ. கரையில் நின்று கொண்டு ஒரு பெண்மணி தனது குழந்தைகளுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்துக்கொண்டிருந்தார். அமராவதில் மீன் பிடித்து ஆடிய என் கால்சட்டைக் காலத்து நினைவுகள் ஒரு முறை வந்து போகின்றன.

இது குளிகாலமல்ல. என்ன சீசன் என்று கேட்டால் இலையுதிர் காலம் (falls) என்கிறார்கள். இலைகள் எல்லாம் பழுப்பேறி உதிரும் காலம். உதிர்வது இலைகள் மட்டுமல்ல்ல மயிரும் தான். இந்த ஊர்த் தண்ணீரில் என்ன பிரச்சினை என்றே தெரியவில்லை. குளித்துத் தலையைத் துவட்டி விட்டுத் துண்டைப் பார்த்தால் அதோடு துண்டு துண்டாக முடிகள். முடி அவ்வளவு சாதாரணமாக அலட்சியம் செய்துவிடக் கூடிய சங்கதியல்ல. சில வருடங்களுக்கு முன்பு நெற்றியில் எல்லாம் முடி முளைப்பதாக ஆணவத்தோடு அலைந்து கொன்டிருந்தேன். முடி உடல் ஆரோக்கியம் சார்ந்தது. உணவில் கலந்திருக்கும் ஊட்டச் சத்து, மன உளைச்சல், குடிக்கும் மற்றும் குளிக்கும் நீரின் கடினத் தன்மை என யாவும் தததமது பங்களிப்பை ஆற்றி முடியை நரைக்கவும், உதிரவும் செய்கின்றன. "போனா மயிரு" என்றெல்லாம் இனி அவ்வளவு நக்கலாகப் பேசும் முன்பு யோசிக்க வேண்டும்.

புல் வெட்டும் எந்திரத்தின் மீது உட்கார்ந்தபடியே மெக்சிகோகாரன் அந்தப் பரப்பில் வேலை செய்து கொன்டிருக்கிறான். இது போன்ற அடிமட்ட வேலைகளுக்கு மெக்சிகோ நாட்டவர் இல்லை என்றால் அமெரிக்கா நாறிவிடும். நான்கு நாளுக்கு ஒரு தரம் அவன் தவறாமல் இப்பணியைச் செவ்வனே ஆற்றி வருகிறான். இவனோ அல்லது இவனது முன்னோர்களோ வறுமையின் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டி எத்தனை கனவுகளோடு எல்லை தாண்டி வடக்கே ஓடி வந்தார்களோ?

எங்களைப் போலவே வேறு சிலரும் நடந்து கொண்டிருந்தார்கள். எனக்குக் குளிர்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் சில வெள்ளைக்காரர்கள் கூட ஜாக்கெட் அணிந்திருந்தனர். இவர்களில் பூர்வ குடிகள் யாரும் இல்லை. இந்தியாவிற்கு வழிகாணும் முயற்சியில் கொலம்பஸ் தவறுதலாக அமெரிக்காவைக் கண்டுபிடிக்க அதன் தொடர்ச்சியாக ஐரோப்பாவில் இருந்து இங்கு வந்தேறியவர்கள் இவர்கள். அமெரிக்காவின் பூர்வகுடி செவ்விந்தியர்கள் என்று தான் வரலாறு சொல்கிறது. இந்தியாவின் பூர்வ குடிகள் யார், வந்தேறிகள் யார் என்ற மயிர் பிளக்கும் விவாதங்களின் சாராம்சம் ஒரு சிறு பிரிவினரைத் தவிர யாருக்கும் தெரியாது. அமெரிக்காவைப் பொறுத்த வரை இந்த மாதிரியான சந்தேகங்கள் ஏதும் இல்லை.

டேவிட் தனது மனைவி மீது இன்னும் கடுப்பில் இருக்கிறானா என்ன? வங்சிக்கப்பட்ட கணவன்மார்கள் சங்கம் ஆரம்பித்தாலும் விடுவான் போல இருக்கிறது. அவளைப் பற்றிய நினைப்பு வருவது போல ஏதாவது ஒரு தலைப்பில் பேச ஆரம்பித்தாலே கடுப்பாகி விடுவான். "ஏன்டா இப்படி இருக்கே? வீட்ல அவ பிரச்சினை பண்ணினா என்ன செய்வே?" என்றால் "அவ என்ன பிரச்சினை பண்றது. நான் சமைக்க மாட்டேன். அப்பறம் அவ தான் பிட்சா கார்னருக்கு போன் பண்ணி ஆர்டர் செய்யணும்" என்று ஆயத்தமாகப் பதில் வைத்திருக்கிறான். ஆணின் பொருள் தேடும் பண்டைய வேலையில் பெண் பங்கெடுக்க வரும் போது பெண் காலங்காலமாகச் செய்து வந்த வேலையை ஆண் பங்கு போட்டுக் கொள்கிறான் எனபது உணராத மகளிர் நிறையவே இருக்கிறார்கள்.

கார் உற்பத்திப் பிரிவும், மோட்டார் சைக்கிள் உற்பத்திப் பிரிவும் ஒரே ஊரில் அமைக்கப்பட்டு இருக்கின்றன. நாம் பைக் என்று அழைக்கிற வாகனத்தை மோட்டார் என்ற அடைமொழி சேர்த்து சைக்கிளாக ஆக்கிவிட்டு, சைக்கிள் என நாம் அழைக்கும் மிதிவண்டியை இவர்கள் பைக் என அழைப்பது முதன் முறை கேட்கும் போது சிரிப்பாக இருக்கும். இன்னொரு வேறுபாடும் உண்டு. நமது ஊரில் வசதி குறைந்தவர்கள் மோட்டார் சைக்கிள் வைத்திருப்பதும், வசதி மிகுந்தவர் கார் வைத்திருப்பதும் அறிவோம். இங்கு நிலைமை தலைகீழ். வாழ்க்கையை உல்லாசமாக அனுபவிக்கும் நோக்கமுடையவர்களுக்காகவே மோட்டர் சைக்கிள்கள் உற்பத்தியாகின்றன. இளையவர்கள் தான் என்றில்லை, வயதானவர்களும் கோடையில் பைக்கில் ஊர் சுற்றக் கிளம்பி விடுவார்கள்.


இந்த இடத்தின் சீதோஷ்ண நிலை பூர்வீகமான ஐரோப்பாவைப் போலவே இருப்பதால் giving warm welcome ஒரு நெகிழ்ச்சியான விருந்தோம்பலாக யாவராலும் மதிக்கப்படுகிறது. கோடைகளின் மீதான தாகம் குழந்தை பெறுவதற்கான தீர்மானத்தில் கூடப் புகுந்திருக்கிறது. வெதுவெதுப்பாக இருக்கிற கோடையில் பிள்ளை பிறக்கும் வகையில் கருத்தரித்தலைத் திட்டமிடுமாறு டாக்டர்கள் முன்பெல்லாம் பரிந்துரை செய்தார்களாம். ஆடி மாதம் கூடினால் சித்திரையில் குழந்தை வரும் என்ற வழக்குள்ள நமது ஊரில் warm welcome தர புதிய தலை முறையில் ஒரு பிரிவினர் கிளம்பியிருக்கிரார்கள். "கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த தருவே" மற்றும் "வெயிலின் அருமை நிழலில் தெரியும்" போன்ற முன்னோர் சொன்ன செய்திகளைச் சிறிது சிறிதாக மறந்த வண்ணம் இருக்கிறோமா தெரியவில்லை.


நேற்றோடு ஒப்பிடும் போது மோட்டார் சைக்கிளுக்கான நிறுத்துமிடத்தில் குறைவான வாகனங்களே உள்ளன. நேற்றை விட இன்று குளிர் சற்று அதிகமாக இருப்பதை இது காட்டுகிறது. நடக்க ஆரம்பித்த போது என்னைக் கிண்டல் செய்தவனுக்கு குறைவாக எண்ணிக்கையில் இருக்கும் இரு சக்கர வண்டிகளைச் சுட்டித் தான் தப்பித்திருந்தேன்.

நடை பயிலும் போது மாற்றமின்றிக் காணும் இரு விஷயங்களில் இரண்டாவது விஷயத்தை இப்போது கவனிக்கிறோம். எப்போதும் போலவே இன்றும் கூட அந்த லத்தீன் அமெரிக்கப் பெண் டிராக்-சூட் அணிந்து ஸ்கிப்பிங் ஆடிக் கொண்டிருக்கிறான். "அப்பாடா..எங்கே இதை மிஸ் பண்ணிருவமோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன்" டேவிட் தனது நாள் நிறைவடைந்தாக உணர்கிறான்.

Tuesday, October 03, 2006

அமெரிக்காவில் அப்பாவி (2)

-குப்புசாமி செல்லமுத்து

முந்தைய பகுதி

இந்தக் குறுநடைப் பயணத்தின் போது மாற்றமின்றி சில விஷயங்களைத் தினமும் காண முடிகிறது. அவற்றில் பலது நினைவில் நிற்கத் தவறினாலும் இரண்டு சங்கதிகள் மட்டும் எங்கள் கவனத்தை ஈர்த்து விடும். உணவகத்தில் இருந்து வெளியேறி கார் பார்க்கிங் பகுதியைக் கடந்து வெளிச்சாலையில் நடக்க ஆரம்பிக்கும் போது அந்தப் பெண் செல்போனில் சிரித்துச் சிரித்துப் பேசியபடியே வருவார். கைகளைக் காற்றில் அபிநயத்த படி அவள் வருவதை என்னை விட டேவ் அதிகம் ரசிப்பான்.

"இவள் அநேகமா ரண்டாயிரம் நிமிஷ பிளான்ல இருக்கான்னு நினைக்கறேன்" என்பான். வார நாட்களில் இரவு ஒன்பது மணிக்குப் பிறகு இன்கமிங், அவுட் கோயிங் இரண்டுமே இலவசம். ஆனால் அதற்கு முன்பு அழைத்தாலோ, வரும் அழைப்பிற்குப் பதில் தந்தாலோ பில் ஆகும். ஆகையால் தான் இவள் நிறைய நிமிடம் இருக்கிற பிளானில் இருக்க வேண்டும் என நம்புக்கிறான்.

இத்தனைக்கும் அவன் ஃபேமிலி பிளான் எடுத்து வைத்திருக்கிறான். அதாவது அவன் மனைவியின் எண்ணை எத்தனை முறை வேன்டுமானாலும் அழைத்துப் பேசிக்கொள்ளலாம். இருந்தாலும் மனைவியோடு அதிகம் பேசுவதைத் தவிர்க்கிறான். நான் கடக்க நேர்ந்த மணமான அத்தனை ஆண்களும் திருமணத்திற்கு முன் இருந்த அதே ஈடுபாட்டோடு திருமணத்திற்குப் பின்னர் மனைவியுன் பேசுவது இல்லை. இதில் கலாச்சார வேறுவாடுகள் எதுவும் இல்லை. நம்ம ஊர் கிராமத்தில் இருந்து, மாநகர வாழ்வில் உழலும் நவ நாகரிக மனிதர்கள் ஊடாக, ஐரோப்ப அமெரிக்க ஆண்கள் என யாவரும் ஒரே மாதிரித் தான் இருக்கிரார்கள்.

கடந்த நூற்றான்டின் பிற்பகுதியில் மாற ஆரம்பித்த சமூக மாற்றங்கள் ஆண் பெண் பாத்திரக் கட்டமைப்பில் புரிந்து கொள்ள இயலாத சிக்கல்களையும், குழப்பங்களையும் ஏர்படுத்தியிருக்கிறது. குகைக்காலத்தில் இருந்த வாழ்க்கை முறையின் சாரம்சங்கள் அதற்கு முந்தைய சில ஆண்டுகள் வரை தொடர்ந்தன. அதாவது..பெண் குழந்தைகளைப் பராமரித்தும், குடும்பத்தை நிர்வகித்தும் செயலாற்ற ஆண் இரை தேடப் போனான். இரை தேடல் பொருள் தேடலாக மாறியது தவிர இந்த நடைமுறை அப்படியே தொடர்ந்தது.
இயற்கை ஆணுக்கும் பெண்ணுக்கும் தந்த வெவ்வேறு வகையான உடற்கூறுகள், அதன் பலம் மற்றும் பலவீனம் சார்ந்த விசயங்கள் யாவும் அந்த நடை முறையோடு ஒத்துப் போயின. உடலியல் ரீதியாகவும் மனவியல் ரீதியாகவும் இரு பாலருக்கும் மாறுபட்ட தேவைகள் இருந்தன.

வேட்டையாடும் போது எந்த நேரத்தில் எந்த ஆபத்து வேண்டுமானாலும் நேரலாம் என்பதால் ஆணின் கணிப்புகள், முடிவெடுக்கும் திறன் ஆகியன விரைவாக இருந்தன. விரைவாக இருத்தலும் சரியாக இருத்தலும் ஒன்றல்ல.
பெண்ணின் முடிவெடுக்கும் திறன் குழப்பங்கள் மிகுந்தது. தனியாக துல்லியமான தீர்மானிக்கும் வல்லமை வாய்த்தவளாக இருந்த போதில் செகண்ட் ஒப்பீனியன் அவளுக்குத் தேவைப்பட்டது. எல்லாவற்றையும் விவாதித்துச் செய்ய வேண்டும் என அவள் அன்று நினைத்தது போலவே ஒரு காலத்தில் ஆணின் கடமையாகக் கருதப்பட்ட பொருள் தேடலில் ஈடுபடும் இன்றும் நினைக்கிறாள். அத்தகை செளகர்யத்தை மரபியல் அணுக்கள் அவளுக்கு வழங்கின. நிதானமான இருந்து யோசித்துச் செயலாற்றுவதற்கு உரிய அவகாசம் பெண்களுக்கு பல்லாயிரம் ஆண்டு காலமாக இருந்தது. இரை தேடும் போது முன் வந்து உறுமும் புலியிடம் இருந்து தப்பிக்க வேண்டிய அவசரத்தில் இப்படியெல்லாம் சாவகாசமாக யோசித்துக் கொண்டிருக்க முடியாது.

இதே தளத்தில் சிந்தித்தால் ஆணுக்கும் பெண்ணுக்கும் இன்றும் தொடர்கிற பாலியல் இச்சை சார்ந்த விஷயங்களையும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். நொடிப் பொழுதில் ஒருவனைக் கிளர்ச்சியடையச் செய்து விட முடியும். அதைப் பற்றிய ஒரு சிறு சிந்தனை அவனுக்குப் போதுமாக இருக்கிறது. ஒருத்தியை அப்படியெல்லாம் தயார் செய்து விட முடியாது. அவளுக்கு சீண்டலும், தீண்டலும், கரிசனமும், அக்கறையும் இடை விடாது தேவையாய் இருக்கின்றன. "எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்" என்று ஒரு பெண் எழுதியதும், "இதே அழுத்தம் வாழ்வின் எல்லை வரை வேண்டும்" என ஒரு ஆண் பெண்ணுக்காக எழுதியதும் இதைத் தான் விளக்குகிறது. வாழ்வின் எல்லை வரை அழுத்தம் மட்டுமே தந்து கொண்டிருந்தால் சோத்துக்கு என்ன செய்வது என்ற எண்ணும், எண்ணிக்கையும் சார்ந்த சமாச்சாரங்களால் ஒரு பெண் வசீகரிக்கப்படுவது இல்லை.

அதன் ஒரு பகுதியாக புரிந்து கொள்வதும், பெரும்பாலும் வெட்டி அரைட்டையாக முடியும் உரையாடல்களும் பெண்ணின் பிரிக்க முடியாத அடையாளங்களாக அறியப்படுகின்றன. தனக்கு எல்லாமுமாக இருக்கிற துணைவனோடு யாவற்றையும் பகிர்ந்துவே ஒருத்தி விரும்புகிறாள். அவன் அருகில் இருந்தால் பேசுகிறவள் தொலைவில் இருந்தால் தொலை பேசியின் உதவியை நாடுகிறாள். இதை எந்தக் கோணத்தில் நோக்கினாலும் தவறெனச் சொல்லவியலாது.

இருந்தாலும் தொடர்ச்சியான இத்தகைய நெருக்கம் ஆணுக்கு மிக மிக அபாயகரமாகனது. அவனது ஒருமுகப் படுத்தபட்ட சக்தி ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே செய்யும். பெண்ணைப் போல பல வேலைகளை ஒரே நேரத்தில் அவனால் செய்ய இயலாது. பல பணிகளையும் மறக்காமல் குறித்து அதற்கேற்ப செயலாற்றும் 'செக்ரட்ரி' பணிகளில் பெண்கள் ஒளிர்வதற்கு இதுவே காரணம் எனக் கருதுகிறேன். வருடமெல்லாம் கூடச் சேர்ந்து சுத்தினாலும், அந்த ஒரு காரணத்தினாலேயே பசங்க பெயில் ஆனாலும், பெண்கள் மட்டும் Distinction இல் பாஸ் செய்வது எதானல் என நினைக்கிறீர்கள்?

ஒன்று மட்ட்டும் நிச்சயம். ஆணும் பெண்ணும் சமம் என்று கருத ஆரம்பித்து இருப்பதால் இன்றைய தலைமுறையில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் சிக்கல்கள் பூதாகாரமாக எழுகின்றன. ஆணுக்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்ட பொருள் தேடும் வேலையில் பெண்ணும் இறங்கி விட அதனால் எழுகிற பிரச்சினைகளை இருவருமே தீர்க்க முடியாத கோணத்தில் அணுகுகிறார்கள். இரு பாலாரும் சமமல்ல. இயற்கையிலேயே உடலியல் தளத்திலும், மனவியல் தளத்திலும் உள்ள வேறுபாடுகளை அங்கீகரித்து உணர்ந்து அதற்கு ஏற்றாற் போல நடந்து கொண்டால், ஒருவரின் பிரச்சினையை இன்னொருவர் தீர்க்காவிட்டாலும் ஓரளவு புரிந்து கொள்ளவாவது செய்யலாம். After all life is all about compensating for weakness and complementing strength.

ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்குத் தான் தெரியும் என்ற புகழ் மிக்க சினிமா வசனமும், உடல் இச்சையைத் தணிக்க அலைவதாக நமது கலாச்சாரக் காவலர்களால் கண்டிக்கப்படும் கல்லூரி ஹாஸ்டல்களில் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக விரவிக் கிடக்கும் பெண்-ஓரினச் சேர்க்கைகளும் மேற்சொன்ன சாராம்சத்தின் அடிப்படையில் பார்த்தால் காமம் கடந்த சிக்கலான விஷயங்களாக அதிர்ச்சியோடு உணரப்படும்.

டேவிட் தன் மனைவியின் செல்போன் அழைப்பைச் சட்டை செய்யாமல் இருப்பது திருமணமான ஆண்கள் அனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று. இன்னொன்றும் அவன் சொன்னான். அவனது எட்டு வயது மகன் பத்திரிக்கையில் வந்த ஒரு பெண்ணின் படத்தைப் பார்த்து விட்டு, "யாருப்பா இது? .. சும்மா கும்முனு இருக்கு" என்று கேட்டானாம். அதைக் கேட்டு தான் மிகவும் மகிழ்ந்ததாகவும், அந்த ரசனை விட்டுப் போமாகல் இருப்பதற்காகத் தொடர்ந்து ஏதாவது செய்ய வேண்டும் என்றும் நிஜமான கவலை கலந்த பொறுப்புணர்ச்சியோடு கூறினான்.

அவன் நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஏனெனில் இது போன்ற கதைகள் பிறர் குடும்பங்களில் நடக்கக் கேள்விப் படும் போது சுவாரசியமாகத் தான் இருக்கும். ஆனால் தனக்கென்று வரும் போது அது உண்டாக்கும் வலி கொடுமையானது என்பது புரியும்.

சமூக நீதிக் காவலர்கள் சிலர் 'கலப்பு மணம்' என்ற சொல் தவறாகக் கையாளப்படுவதாகக் குறைபட்டுக் கொள்கிறார்கள். ஏனென்றால், "குதிரைக்கும் கழுதைக்கும் இடையில் நடந்தால் தான் அது கலப்புத் திருமணம். மனித இனத்திற்குள் நடக்கும் மணம் எப்படி கலப்பு மணமாகும்? வேண்டுமானால் சாதி மறுப்பு மணம் எறு அழையுங்கள்" என்கிறார்கள்.

இந்த செய்தியைப் பகிர்ந்த போது, சாதி என்ன சாதி... ஆணும் பெண்ணும் கல்யாணம் செய்து கொள்வதையே கலப்பு மணம் என அழைக்கும் காலம் வந்தாலும் வரலாம் என்கிறான் டேவிட். அவன் மனதில் ஓரின மணம் வெகு ஆழமான வடுவை எங்கோ உருவாக்கியிருக்க வேண்டும்.

தொடர்ச்சி

Monday, October 02, 2006

அமெரிக்காவில் அப்பாவி..(1)

- குப்புசாமி செல்லமுத்து


"நீ நல்ல சமயத்தில் ஒஹாயோ வந்திருக்கிறாய். இன்னும் ஒன்னு ரண்டு மாசம் கழிச்சு வந்திருந்தால் குளிருல உறைஞ்சு போயிருவேன்னு நினைக்கறேன். ஊ·ப்ப்ப்.. இப்பவே இப்படி நடுங்கிக் கிட்டு வந்தேன்னா...." என்று இளக்காரமாய்ச் சிரித்தான் லோக்கல் அமெரிக்கன்.

லோக்கல் என்றால் அவன் ஊள்ளூர் இல்லை. அவர்களுக்கு உள்ளூரும் உலகமும் அமெரிக்காவே தான். அவர்களது அகிலம் கிழக்கே அட்லாண்டிக் பெருங்கடல் கரையில் துவங்கி மேற்கே பசிபிக் கரையில் முற்றுப் பெறுகிறது. என்னைக் கேலி செய்தவன் ஒஹாயோவுக்கு மேலே மிகிசன் மாகாணத்தில் இருந்து வந்தவனாகையால் இது அவனுக்கு வெப்பப் பிரதேசமாகத் தோன்றுகிறது போலும்.

அவன் பெயர் டேவிட். டேவ் என்று அழைக்கப்பட விரும்புகிறவன். காலை ஏழரை மணியில் இருந்து மாலை நான்கு மணி வரை கட்டாயமாக இருந்தாக வேண்டிய அந்த ஜப்பானிய கார் கம்பெனியின் அமெரிக்கப் பிரிவில் நாங்கள் வேலை செய்கிறோம். உட்கார்ந்த இடத்தை விட்டு நகரக் கூடாது. அமெரிக்கக் கலாச்சாரம் கண்பது அரிதான ஒரு அலுவலகம். பல ஜப்பானியர்களும் அவர்களுக்கு இணையான எண்ணிக்கையில் இந்தியர்களும் அங்கே இருக்கிறார்கள். பல மையமான பொறுப்புகளில் ஜப்பானியர்கள் தான் இருக்கிறார்கள் என்று என் மூன்று வார இருப்பில் தெரிந்து கொண்டதாய் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆகையால் அந்த ஆட்கள் வரும் போது ரஜினி படம் ஏதாவது திரையில் ஓட்டி விட்டு காக்காய் பிடிக்கலாமோவென்ற சொற்பமான சலனம் வருவதுண்டு. ஜப்பானியர்களுக்கு இன்னும் தலைவர் மோகம் தீர்ந்த பாடு இல்லை.

இறுக்கமான இந்த வேலைச் சூழலில் மனதையும் உடலையும் தளர்த்துவது மதிய உணவிற்குப் பிந்தயை பத்து நிமிடம் காலாற நடை போடும் நேரம் மட்டுமே. அப்படி நடக்கும் போது ஊதக் காற்றில் என் உடல் நடுங்குவதைக் கண்டு தான் அவன் கமெண்ட் அடிக்கிறான்.

"உங்க ஊர் ·புளோரிடா மாதிரி எல்லாம் இங்கே இருக்காது" என்று அடிக்கடி சொல்வான். நான் டேம்பாவில் (·புளோரிடா) வாங்கி வைத்திருக்கும் ஓட்டுனர் உரிமத்தை வைத்து எனது பூர்வீகம் அதுவென யூகித்தானா? ·புளோரிடாவில் வசிப்பதற்கு சென்னையில் வசிப்பதற்கு பெரிய வேறுபாடு இல்லை தான். கிட்டத் தட்ட அதே தட்பவெப்ப நிலை. போன வாரம் சென்னையில் இருந்து நேராக இங்கே பறந்து வந்ததை அவனுக்கு இன்னோர் முறை நினைவு படுத்த வேண்டும்.

இந்த அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு விதப் பிரமிப்பும் மிரட்சியும் எனக்கு அளித்தது என்றால் யாவரும் நம்ப மாட்டார்கள். இந்த அச்சம் இன்று நேற்று உருவானதல்ல. Interval என்ற ஒரு சொல் மட்டுமே புரிந்தாலும் நணர்களோடு சேர்ந்து வடகோவை சென்ட்ரல் அரங்கில் பார்க்க நேர்ந்த ஹாலிவுட் படங்களில் இருந்தே உடன் வருவது இந்த மிரட்சி. ஆனால் இது குறித்து நண்பர்கள் நம்ப மாட்டார்கள் என்ற மேலே சொன்னது அமெரிக்கா குறித்த எனது உயரிய பரப்புரையாகத் தான் இருந்திருக்க வேண்டும். காலம் மாற்ற இயலாத சங்கதிகள் எதுவுமே இல்லாத உலகில் எனது மனதில் உருவாகியிருந்த அமெரிக்காவின் வடிவமும் சற்றுச் சிதைந்தும், கரைந்தும் உருமாறிப் போய் இருக்கிறது. கனவுகளின் தேசம் காசு சம்பாதிக்க ஏற்ற தேசம். இருப்பினும் அதே அளவு பொருளை தாயகத்திலே ஈட்டக் கூடிய சூட்சுமம் எனக்குக் கைகூடி வருவதாக உணரும் போதா நான் இங்கெ வர வேண்டும்?

"Hey, did you watch that cartoon show man?" நடக்கும் போது கூட நிம்மதியாக இருக்க இவன் விட மாட்டான். சிந்தனை ஓட்டம் இப்படித் தான் பல தருணங்களில் கலைகிறது.

"Which show?"

"The one that features gay dogs"

அட எழவு எடுத்தவனுகளா!! ஓரினச் சேர்க்கையில் உங்களுக்கு எல்லையே இல்லையா? நீங்க கெட்டது போக நாய்களையும் கெடுக்கறீங்களா? என்று எண்ணியவாறு "Nope..I didn't watch that" என்று மழுப்பினேன்.

"I know what you thought about me and united states when I asked that questions" என் மனதில் உள்ளதைப் படம் பிடித்தவன் போலப் பேசினான். ஒரு சராசரி இந்தியனைப் பற்றிய சராசரி அமெரிக்கனின் மதிப்பீடு அதில் எட்டிப் பார்த்தது.

இத்தகைய கணிப்புகள் பரவசம் நிரம்பியதாகவும் ரசிக்கத் தக்கதாகவும் ஒவ்வொரு மனிதனும் உணர்வது திண்ணம். இருபது வயதில் ஒரு பெண் மணவானவரா இல்லையா என்பதை அறிய கழுத்தில் இருக்கும் தாலி உதவியாக இருப்பதைக் கண்ட நான் தற்காலத்தில் காலில் இருக்கும் மெட்டியைக் காண்கிறேன். ஆனல் என்னுடன் பதினொன்றாம் வகுப்பில் கூடப் படித்த கண்ணன் ஒரு பெண் நடப்பதை வைத்தே அவரின் மண நிலையைக் கண்டு பிடிக்க முடியும் என்று சொல்லுவான். அவன் கணிப்பு அக்காலத்தில் எப்போதும் பொய்த்ததில்லை. ஆனால் இன்றைய சூழலில் அவனால் அதே அளவு துல்லியமாகச் சொல்ல முடியுமா என்பது சந்தேகமா.

அப்படி கணிப்பு நேற்றைக்கு முன் தினம் முடி வெட்டச் சென்ற போது நடந்தது. முடித்திருத்தம் செய்யும் தொழில் ஒரு சமூக அடையாளமாகக் கருதப்படாமல் முயன்று பயிலும் கலையாக இங்கெ இருக்கிறது. முறையாகக் கற்று அரசிடம் சான்றிதழ் பெறாமல் அதைச் செய்ய முடியாது. முதலாளித்துவ-பொதுவுடமைக் கருத்தாக்கங்களில் எது உகந்ததென ஒரு முடிவுக்கு வர இயலாமல் குழம்பிக் கொண்டு இருக்கும் நான் எனது இருபத்து எட்டு வயதில் முதலாளித்துவத்தால் உலகு உய்யும் என்று நிரூபிக்க முயன்று கொண்டிருக்கும் அமெரிக்காவில் நிலவும் சமூகச் சமநிலை இந்த முடித்திருத்தகத்தில் காண்கிறேன். ஒரு வேளை இதெல்லாம் தான் முன்னேறிய சமுதாயத்திற்கான அளவுகோலா?

மேல் தோலின் நிறமும், எனது ஆங்கில உச்சரிப்பும் என்னை ஒரு இந்தியன் என அவளுக்கு அறிவித்திருக்க வேண்டும்.

எனது முதல் பெயரைக் கேட்டு தனது கணிணியில் உள்ளிட்டவள், "Let me guess your second name" என்றாள்.

எதுவும் பேசாமல் புன்னகைத்து அனுமதித்தேன்.

"படேல்?"

"நோ"

"ஷா?"

"தட் இஸ் அ ராங் கெஸ்" அவளைச் சொல்லிக் குற்றமில்லை. விசா வாங்கி வந்தவன், கள்ளத் தோணியில் வந்தவன் என இங்கே "மை நேம் இஸ் மனீஷ் படேல்" என்பதையே குத்திக் குதறிக் கும்மியடிக்கும் குஜராத்வாசிகள் இந்தியாவின் கலாச்சாரத் தூதுவர்களாக இந்த வெள்ளைக்காரிக்கு இருக்கிறது.

"லெட் மீ ட்ரை திஸ் டைம்"

"ம்..ம்"

"ராவ்.....ரெட்டி??"

"ஐ பெட் யூ. யூ வோன்ட் கெட் இட்" என்று எனது இரண்டாம் பெயரைச் சொல்லி விட்டு சுழல் நாற்காலியை நோக்கிப் போனேன்.

முன்னுருவாக்கப்பட்ட பிம்பங்கள் அனைவர் மனதிலும் புலப்படாத நுண் பதிவுகளாகப் புதைந்து கிடக்கின்றன. தமிழர்களைப் பற்றிய வட இந்தியர்களின் 'கர்நாடக இசை கேட்பவர்கள், டவரா டம்ளரில் கா·பி குடிப்பவர்கள்' என்ற பிம்பம், கடவுள் நம்பிக்கை எல்லாம் பார்ப்பனீயம் என நினைக்கும் அரைகுறைப் பகுத்தறிவுவாதிகளின் பிம்பம், பெரியாரைப் பற்றி எதுவுமே அறியாமல் அவர் சூட்டில் சொன்ன ஓரிரு வாசகங்களை மட்டும் வைத்துக் கொண்டு விவாதம் செய்பவர்களின் மனோவுருவம், தெலுங்கர்களைப் பற்றிய தமிழனின் உருவகம், தமிழனின் தோற்றத்தை ஒரு விதமாக வடித்து வைத்திருக்கும் கன்னடன், ஈழத் தமிழன் எல்லாம் விடுதலைப் புலி எனக் கருதும் சராசரி இந்தியனின் உலக ஞானம் என நீளும் இந்த கணிப்புகள் மனித குல வரலாறில் பன்னெடுங்காலமாக இருந்து வந்திருக்கின்றன.

தன்னைச் சூழும் எதிர்பாராத ஆபத்துகளில் இருந்து காத்துக் கொள்ளவும் துரிதமாக முடிவெடுத்து இயங்கவும் இந்தக் கலை உதவியிருக்கிறது. எனினும் அது உருவாக்கிய பாதிப்புகள் ஒரு புறம் மிகுந்துள்ளன. அதன் நீட்சி தான் இந்தியர்கள் அனைவரும் ஓரினச் சேர்க்கையை வெறுப்பவர்கள் என டேவிட்டை நினைக்க வைத்திருக்கிறது.

இன்னும் சொல்லப் போனால் இத்தகைய கணிப்புகள் பிறரைப் பற்றியதாக மட்டுமே இல்லாமல் தன்னைப் பற்றியதாகவும், அதுவே ஒரு வகையில் மனிதனின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் காரணியாகவும் விளங்கியிருக்கிறது.

கவிஞர் பாடினாரே, "உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்...."

தொடர்ச்சி

Friday, September 29, 2006

சென்னைப் புயலும் வடிவேலுவும்

எனக்கும் என் அறைக்குமான ஜன்னல்
சேர்ந்தே திறக்கிறது
சுவற்றில் தொங்கும் கிழிக்கப்படாத தினக் காலண்டர்
நான் ஏதோ சொன்னதாகவும் -
புரிந்ததாகவும்
மெல்லத் தலை ஆட்டுகிறது.

என் உள்ளங்கால்களின் கதகதப்பை உணர்கின்றன
சுருண்டு கிடக்கும் மாடிப்படிகள்.
நகம் வெட்டி முகம் கழுவியபின் விரும்பத்தக்கதான
புத்துணர்சி திரும்புகிறது

அதிகாலை நேரத்துக் காட்சிகள்
அருமையான தெளிவும் பாராட்டத்தக்க அமைதியும்
உடையதாயிருக்கிறது

இவை கடந்து
புத்தகங்களின் படித்து முடித்த
பக்கங்களின் பாரம் உணர்கையிலே
வீசத் தொடங்குகிறது ....
என் தேனீர்க் கோப்பையிலான புயல்.கார்த்திக் வேலுவின் இந்தக் கவிதை நிச்சயமான உண்மை. பள்ளிக் கூடம் சென்ற காலத்தில் இருந்தே நிலவும் திங்கள் கிழமைகள் மீதான அளவு கடந்த பயம் இன்னமும் தொடர்ந்தபடியே தான் இருக்கிறது. வெள்ளி வந்தால் ஜாலியாக இருப்பதுவும், அதுவே ஞாயிறு மாலையே சோகம் தொற்றிக் கொள்வதையும் என்னைப் போலவே நீங்களும் உணர்ந்திருப்பீர்கள்.
பணிச் சூழல் தருகிற அழுத்தமும், ஈடுபாடு இல்லாமல் செய்கிற வேலையும் தருகிற விளைவுகள் இவை என்ற போதும், கூலிக்கு மாரடிக்கும் மன நிலையும் ஒரு காரணம் என்று இரண்டு வருடங்களுக்க்கு முன்னர் சென்னையில் ரூம் மேட்டாக இருந்தா ஜான் சொன்னார். அதென்ன 'சொன்னார்'? நாங்கள் ஒருவரை ஒருவர் மரியாதையாக் அழைத்துக் கொள்வது தான் வழக்கம்.

அவர் சொன்னதில் பெரும் உண்மை இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. 'நாளை உலகம் அழிந்திடும்' என்பது போல வாரக் கடைசிகளில் குடித்துக் கும்மாளமிடுவதும், அமெரிக்காவில் அதிகமான மாரடைப்ப்புகள் திங்கட்கிழமை காலையில் வந்ததாகச் சொல்லும் புள்ளி விவரமும் இதனைப் பறைசாற்றுகின்றன.

இதற்கெல்லாம் அப்பாற்பட்டவன் நானெல்ல. முன்பெல்லாம் Monday blues ஆக இருந்தது தற்சமயம் morning blues ஆக ஒரு மாறி விட்டது. காலை வேளையில் பைக்கை ஸ்டார்ட் செய்து ஆஃபீஸ் கிளம்பும் தருணத்தில் எனக்கு வீசும் புயல் கார்த்திக் வேலுவிற்கு தேநீர்க் கோப்பையிலேயே வீச ஆரம்பித்து விடுகிறது போலும்.

ஒரு வழியாக அலுவலகம் சென்று கம்ப்யூட்டர் ஆன் செய்து, காஃபி குடித்து ஈ-மெயில் பார்த்து இந்து, பிசினஸ் லைன் எல்லாம் வாசித்து விட்டு வேலையைத் துவங்கலாம் என நினைக்கும் போது செல்போன் ஒலித்தது. யார் என்று தெரியவில்லை. ஏற்கனவே பதிவு செய்து வைத்த எண்ணல்ல.

"டேய்.. ஒய்ஃபை காலேஜ்ல கொண்டு போய் டிராப் பண்ணிட்டு வரும் போது ஒரு ஆக்சிடன்ட் ஆகிருச்சு. உடனே கிளம்பி வர முடியுமா? பல்லாவரம் கூட் ரோடு ஜன்சன்ல இருக்கேன்" என்று உடன் பணிபுரியும் வடிவேல் பதற்றமாகப் பேசினான். அவனைக் குறிக்கும் அடைமொழியை இங்கே பயன்படுத்த வேண்டாம் என்பதால் சொந்தப் பெயரையே உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.

போன மாதம் தான் புது கார் வாங்கியிருந்தான். அவன் மனைவி சமீபத்தில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக இணைந்திருந்தார். காலையில் அவரை காலேஜில் கொண்டு போய் இறக்கிவிட்ட பின்னர் இவன் ஆபீஸ் வருவான். அப்படித் திரும்பி வரும் போது தான் இந்த விபத்து நேர்ந்திருக்கிறது.

ஆபத்தில் இருக்கும் நண்பனைச் சந்திக்கப் போகும் போது ஏதோ வில்லனின் பிடியில் சிக்கியிருக்கும் கதாநாயகியைக் காப்பாற்றப் போகும் கதா நாயகனின் மனநிலை ஒரு நிமிடம் வந்து போகும் போது அந்த இடத்திற்கு எனது பைக் போய்ச் சேர்ந்தது.

பல்லாவரம்-துரைப்பாகம் பைபாஸ் சாலையில் இருந்து வலப்புறம் திரும்பி மேடவாக்கம் செல்ல முயலும் போது மடிப்பாக்கத்தில் இருந்து நேராக வந்த ஒரு டெம்போவுடன் மோதியதில் இவனது காரின் இடது முன் புறம் முழுவதுமாக நொறுங்கியிருந்தது. டெம்போ நேராக வந்தது, இவன் வலது பக்கம் திரும்புகிறான். ஆகவே இவன் தான் பார்த்து வந்திருக்க வேண்டும் எனத் தோன்றினாலும் தன் மீது தவறே இல்லை என்றான். உண்மையாக இருக்கக் கூடும். இவன் பொய் சொல்லி நான் பார்த்ததில்லை. மோதியது டெம்போ. அதாவது மகேந்திரா ஜீப்பின் பாகங்களை மாற்றி மாட்டி டெம்போவாக உருமாற்றிய வண்டி.

நான் அங்கே போன பிறகு என்னுடைய செல்போனில் இருந்து இன்சூரன்ஸ் கம்பெனிக்குப் போன் செய்தான். இன்சூரன்ஸ் ஆட்கள் போலீஸ் புகார் எதுவும் தேவை இல்லை என்று தெரிவித்ததனர். அப்போது அந்த டெம்போவின் உரிமையாளரும் ஸ்பாட்டுக்கு வந்து சேர்ந்தார். ஆள் பார்ப்பதற்கு பொன்னம்பலம் போல இருந்தார். "இந்தா பாருங்க சார். இப்பவே என்னவா இருந்தாலும் போலீஸ்ல சொல்லி முடிச்சுக்க்கலாம். அப்பறமா எல்லாம் கூப்டா நான் வர மாட்டேன்" எனக் கறாராக அந்த ஆள் சொன்னதும், பெரிய அளவில் பாதிப்பு இருந்தததும் போலீஸில் பதிவு செய்து விடலாம் என எங்களைக் கருத வைத்தது.

கீழ்க்கட்டளை காவல் நிலையம் சென்று பம்மிக் கொண்டே நின்றோம். "அதான் சொல்லிட்டீங்கல்ல? வீட்டை ஒடச்சவனை நாங்க பாத்துக்கறோம்" என்று சொன்ன ரைட்டரிடம் "சார்..அவங்க வேற ஆளுங்க" என்று எங்களுக்கு முன்பே வேறு ஏதோ ஒரு கம்ப்ளைண்ட் கொடுக்க வந்திருந்த வயதானவர் விளக்கினார்.

நடந்த சம்பவத்தை விவரிக்கும் முன்பே "ஜங்சன்ல நடந்துதா இல்ல அதுக்கு இந்தப் பக்கம் நடந்துதா?" என்று கேட்ட அவர் ஜங்சனில் தான் நடந்தது என்பதை அறிந்ததும், "அது பள்ளிக்கரணை லிமிட்ல வரும்ல. அங்கே போய் சொல்லுங்ங" என்று சொல்லி அனுப்பி விட்டு நாங்கள் வாசலை அடையும் முன்பே, "நீங்க போக வேண்டாம்..நாங்களே இன்ஃபர்மேஷன் கொடுக்கறோம். யோவ் மாணிக்கம், கீழ்க்கடளைக்கு (அவர் சொன்ன ஸ்டேசன் நம்பர் நினைவு இல்லை) போன் பண்ணிச் சொல்லிருய்யா" என்று சொல்லி வைத்தார்.

தொன்னூறு நிமிட நேரம் காத்திருந்தும் யாரும் வராததால் நேராக பள்ளிக்கரணை ஸ்டேஷன் சென்று முறையிட்டு வந்தோம். முன்னர் சொன்ன ஸ்டேஷனில் இருந்து யாரும் தகவல் தரவில்லை என்றார்கள். சொல்லி விட்டு வந்த இருபதாவது நிமிடத்தில் ஒரு போலீஸ் ஜீப்பில் மூன்று பேர் வந்து சேர்ந்தனர். அதில் ஒருவர் வந்ததும் வராததுமாக ரைட்டிங் பேடில் இருந்த பேப்பரில் படம் வரைய ஆரம்பித்தார்.

வழக்கமான போலீஸ்காரருக்கு உரிய தொந்தி அடையாளத்துடம் இருந்த அவர்களில் யாரும் ஷூ அணிந்திருக்கவில்லை. வெறும் செருப்பு தான்.
"என்ன ஆச்சுப்பா" என்று வினவியவரின் மார்பில் ஆரோக்கியதாஸ் என்ற நேம் பேட்ஜ் இருந்தது.

"நான் நேர வந்துட்டு இருந்தேன் சார். இவரு ரைட் எடுக்கும் போது பாக்காம வந்து மேல மோதிட்டார்" என்று டெம்போ டிரைவர் சொல்ல வடிவேலுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

போலீஸ் வருவதற்குக் கொஞ்ச நேரம் முன்பு என்ன நடந்தது என்பதை என்னிடம் விவரித்துக் கொண்டிருந்தான். இவன் வலது புறம் திரும்புவதற்கு முன் நீண்ட நேரம் சந்திப்பில் காத்துக் கொன்டிருந்த்தால் எதிர் திசையில் துரைப்பாக்கத்தில் இருந்து வந்த வண்டிகள் எல்லாம் இவனுக்கு வழி விட்டு நிண்று விட்டனவாம். கார் பாதி திரும்பிய பிறகு நேராக வந்த டெம்போ இவனுக்கு இடது புறம் வேகமாக முந்திச் சென்று விட முயன்றதில் தான் மோதி விட்டதாம். அது தான் உண்மையாக இருக்க வேன்டும். என்னிடம் சொன்னதை அப்படியே அழுத்தமாக போலீஸிடமும் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியிருந்தேன்.

"என்ன சார் பாத்து வரக் கூடாதா?" இவன் அணிந்திருந்த பேண்ட் சட்டை எல்லாம் பார்த்து 'சார்' போட்டே விளித்தார்கள்.

"அவர் பொய் சொல்றாருங்க. நான் முகாவாசி கிராஸ் பண்ணிட்டு இருக்கும் போது என்னை டேக் ஓவர் பண்ணலாம்னு ராங் சைடுல வேகமா ஸ்பீடு எடுத்து டெம்போ மோதிருச்சுங்க" என்று சகல உணர்ச்சிகளோடு சொன்னான்.
'வேகமா ஸ்பீடு' அட..நம்ம வடிவேல் ஒருபொருட் பன்மொழியெல்லாம் யூஸ் செய்யறானே என்று என் இலக்கண அறிவு ஒரு நொடி எட்டிப் பார்த்து விட்டு காட்சியின் சீரியஸ்னஸ் கருதிப் பின் வாங்கியது.

அவன் பேசுவதில் அந்த காவலர்கள் சற்று அசெளகரியமாக உணர்ந்திருக்க வேன்டும். நம்ம ஊரில் போலிஸ்காரர் தன்னை 'சார்' போட்டு அழைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பு. இவனுக்கு இந்த அடிப்படைத் தத்துவம் கூடத் தெரியாமல் இருக்கிறதே.

"இன்சிடன்ட் நடந்தப்ப நாங்க ஸ்பாட்ல இல்லை. அதனால் இப்ப இருக்குற தடயங்களை வச்சு எங்க விதிமுறைப்படி கணிப்புல என்ன தோணுதோ அப்படித் தான் முடிவு செய்ய முடியும். நாங்கன்னு இல்லை, யாரா இருந்தாலும் இப்ப்படித் தான் செய்வாங்க. நடந்து போறவன் பாக்காமப் போய் கார்ல மோதினாக் கூட கார் ஓட்டறவன் மேல தான் தப்ப்புன்னு சட்டம் சொல்லும். அதே மாதிரி நேரா வர்றவன் மேல தப்பு இருந்தாலும் பாக்கறவங்களுக்கு ரைட் டர்ன் எடுக்கற உங்க மேல தான் தப்புன்னு தோனும்" இது இன்ன்னொரு காவலர்.

"நல்லா சொல்லுங்க சார். நேரா வந்த வண்டில மோதிட்டு எங்க மேல தப்பு சொல்றார்" என்று பொன்னம்பலம் எண்ணெய் ஊற்ற அரோக்கிய தாஸ் ஒரு ஏறு ஏறினார்.

"டேய் மயிரு..கார் வந்தா நீ மேல கொண்டு வந்து மோதிருவியா? ஸ்பீட் லிமிட் இந்த இடத்துக்கு என்ன தெரியுமா? சொல்லு. நான் பேசிட்டு இருக்கேன்ல ..ஒழுங்கா மூடிக்கிட்டு இரு" அவன் பம்மி விட்டான்.

வடிவேலைப் பார்த்துக் கூறினார். "சார். உங்களுக்கு இப்ப ரண்டு சாய்ஸ் இருக்கு. முதலாவது என்னன்னா..இந்த மாதிரி ரண்டு வண்டி ஆக்சிடன்ட் ஆகிருச்சுங்கற ரிப்பொர்ட் நாங்க கொடுக்கலாம். இதுல யார் மேல தப்புங்கற விவரம் வராது. அதிகபட்சமா இன்சூரன்ஸ் கம்பெனி கிட்ட இருந்து இருபதாயிர ரூபாய் வரை கிளைம் பண்ணலாம். இன்னொன்னு நீங்க உண்மையிலயே தப்பு டெம்போ மேல தான்னு நெனச்சீங்கன்னா கேஸ் ஃபைல் பண்னலாம். அதுல எத்தனை லட்சம் வேணாலும் கிளைம் செய்யலாம். ஆனா எனக்குத் தெரிஞ்சு கேஸ் பதிவு செஞ்சா உங்க பேர்ல தான் தப்புன்னு தீர்ப்பாகும். என்ன சொல்றீங்க."

இரண்டு வாகனங்களையும் ஸ்டேசனுக்கு எடுத்து வருமாறு இயம்பி விட்டு ஏட்டையா போய் விட்டார். அங்கே வந்து என்ன செய்யத் தீர்மானித்திருக்கிறோம் எனத் தெரிவிக்குமாறு எங்களுக்குச் சொல்லப்பட்டது.

வேகமாக வந்து மோதிய ஆள் மீது கேஸ் போட வேண்டுமென ஆரம்பத்தில் அடம் பிடித்த வடிவேல் இன்சூரன்ஸ் கம்பெனியில் விசாரித்து விட்டு தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற நிலைக்கு வந்தான். ஏ.பி.டி. மாருதியில் செலவு 18 ஆயிரம் தான் ஆகும் என்றார்கள். சரி போலீஸ் தரும் இன்சிடென்ட் ரிப்போர்ட்டே போதுமாக இருந்தது.

காவல் நிலையத்தில் மிச்சமிருக்கும் வேலைகளைத் தானே முடித்து விட்டு வருவதாகச் சொல்லி என் செல்போனை வாங்கிக் கொண்டவன் என்னை அலுவலகம் செல்ல வேண்டினான். அலுவலக வளாகத்தை நெருங்கும் போது நான்கரை மணி நேரம் ஓய்ந்திருந்த புயல் மீண்டும் வீச ஆரம்பித்து இருந்தது. ஆனால் வடிவேலுவின் புயல் ஓய இன்னும் ஆயிரம் ரூபாய் பாக்கி இருந்தது என்பதை நான் அறியவில்லை.

Thursday, September 28, 2006

ஸ்டைல் - ஒரு தமிழனின் பார்வை

-குப்புசாமி செல்லமுத்து

வாரா வாரம் நார்த் கேரொலினாவில் இருக்கும் தன் மனைவி மக்களைச் சந்திக்கச் சென்று விடும் என் ரூம் மேட் ராயலசீமாக்காரர் இந்த வாரம் இங்கேயே தங்கினார். ஆகவே வார இறுதியில் அவரது கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்த நடன இயக்குனர் லாரன்ஸ் நடித்த 'ஸ்டைல்' தெலுங்குத் திரைப்படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.

படம் இப்படித் தான் துவங்குகிறது. பிரபுதேவா புகழ் மிக்க டேன்சர். அவரோடு போட்டியில் கலந்து கொண்டால் தோற்று விடுவோம் என அஞ்சி அவரது காலை முடமாக்கி விட்டு நடனமாடி ஜெயிக்கிறார் வில்லன் (ஆண்டனி என்று நினைக்கிறேன்). பிரபுதேவாவிடம் இருந்த ஸ்பான்சர்கள் எல்லாம் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு ஆன்டனியை நோக்கிச் செல்கிறார்கள்.
மனம் நொந்து தற்கொலைக்கு முயற்சிக்கும் தேவாவை அவரது தங்கை தடுத்து நிறுத்தி ஊக்கமூட்டி வேறு யாருக்காவது பயிற்சி கொடுத்து ஆட வைக்கலாம் என யோசனை கூற அதன் படி ஒரு டான்சரைத் தேடுகிறார். இதெல்லாம் ஐதராபாத்தில் நடக்கிறது.

இன்னொரு பக்கம் விசாகபட்டினத்தில் ஒரு டான்ஸ் ஸ்கூலில் தரையைத் துடைக்கும் வேலை செய்கிறார் லாரன்ஸ். அங்கே நடக்கும் வகுப்புகளைப் பார்த்து தனியே ஆடுகிறார். பிரபுதேவாவை (விட நிஜமாலுமே ஜீவனோடு வேகமாக ஆடும்) லாரன்ஸ் அவரைத் தனது மானசீக குருவாக நினைக்கிறார். அந்த ஊரின் ஒரு நட்சத்திர ஓட்டலில் சந்தர்ப்ப வசமாக ஆடும் வாய்ப்புக் கிடைத்து அதில் பின்னிப் பெடலெடுக்கிறார்.

அவர் வேலை பார்க்கும் டேன்ஸ் ஸ்கூலுக்கு ஒரு கல்லூரி ஜோடி வருகிறது. தன் பாய்ஃபிரண்டைக் கடுப்பேற்ற லாரன்ஸுடன் நெருக்கமாக இருப்பது போல் நடிக்கிறார் அந்தப் பெண். சீக்கிரம் அவனை 'ஐ லவ் யூ' சொல்ல வைக்க அந்த ஐடியாவாம். இது தெரியாத நமது நாயகன் செல்போன், பர்த்-டே பார்ட்டி எனச் சுற்றிய பிறகு கடைசியில் ஆப்பு வாங்கிக் கொள்கிறார்.

அம்மணியின் காதல் நாடகத்தில் இருவரும் இணைந்து ஒரு முறை மாஸ்டர் இல்லாத போது ஸ்கூலில் டான்ஸ் ஆட, அதைக் கண்ட மாஸ்டர் வேலையில் இருந்து துரத்தி விடுகிறார். பிறகு சிரமப்பட்டுச் சொந்தமாக நாட்டியப் பள்ளி ஆரம்பித்து அக்கம் பக்கத்துக் குழந்தைகளுக்கு டேன்ஸ் சொல்லித் தந்து கொண்டிருக்கையில் ஜெமினி டி.வி.யில் 'டான்ஸ் பேபி டேன்ஸ்' நிகழ்ச்சியில் ஆடும் வாய்ப்புக் கிடைக்கிறது.

இதைத் தொலைக்காட்சியில் தற்செயலாகக் காணும் பிரபுதேவா, "இவன் தான் நான் தேடிய அவன்" என்று மகிழ்ந்து தன் தங்கையை வைசாக் அனுப்பி விசாரிக்க, அப்போது தான் நாம் முன்பு சொன்ன அம்மணி ஆப்பு வைத்துக் கொண்டிருக்கிறார். லாரன்ஸின் ஃபிளாஸ்பேக் ஒன்று தேவையில்லாமல் அப்போது முளைக்கிறது.

அவரது அம்மா டான்ஸ் ஆட ஆசைப்பட்டதும், திருமணத்த்திற்குப் பின்னர் அவரது அப்பா அதற்கு அனுமதிக்காததும் தெரிகிறது. அது மட்டுமல்லாமல் தாயின் தலையில் அடித்துப் பைத்தியமாக்கி விட்டுக் கூத்தியாளுடன் கும்மாளமடிக்கும் அப்பனைப் போட்டுத் தள்ளி விட்டு திருட்டு ரயிலேறி வைசாக் வந்தவராம். தேவையில்லாத அம்மா சென்டிமென்டைத் தவிர்த்திருக்கலாம். அம்மாவாக வருபவர் அபூர்வ ராகங்கள் ஜெயசுதா.

பிரபுதேவாவுடன் ஐதராபாத் திரும்பும் முன் ஒரு கோவிலின் முன்பு தன் தாயைக் காண்கிறார், அதுவும் சவமாக. சடங்குகளை முடித்து விட்டு மானசீக குருவின் இலட்சியத்தை நிறைவேற்ற அவரோடு போகிறார் நாயகன்.

பிரபுதேவாவால் லாரன்ஸுக்குப் பெண்டு நிமிர்கிறது. வெறித்தனமாகப் பயிற்சி செய்கிறார்கள். குருவின் தங்கை சீடனின் மீது தனி அன்பு காட்டுவது ஒரு சாறல். இப்படியாகப்பட்ட சமயத்தில் போட்டிகான நாள் வருகிறது.

லாரன்ஸ் மற்றும் அவரது குழுவை வில்லனின் ஆட்கள் கடத்திப் போய் தலைகீழாகக் கட்டித் தொங்க விடுகிறார்கள். போட்டில் அழைப்பு அறிவிப்பு வரும் போது கூட தொங்கிக் கொண்டே இருக்கும் டான்சர்கள், அரங்கத்தில் பதற்றத்துடன் பிரபுதேவா, ஆவேசத்துடன் ஸ்பான்சர்.. கதை முடிந்தது என்று நினைத்தால்..

திடீரென்று நாகர்ஜுனா தோன்றி ஸ்டைலாக சண்டை போட்டு லாரன்ஸை விடுவிக்கிறார். அதன் பிறகு அவர் எப்படிப் பயணித்து அரங்கம் வந்து அறிவிப்பு முடிவதற்குள் ஆடினார் என்று லாஜிக் பார்க்க வேண்டாம். நமக்கே எழுந்து ஆட வேண்டும் போல ஆகி விடுகிறது. அப்படி ஆடுகிறார்.

போட்டின் முதல் சுற்றுக்கும் இரண்டாவது சுற்றுக்கும் இடையில் லாரன்ஸ் காலில் புதைந்த துப்பாக்கிக் குண்டுகளை அகற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது விலனின் அடியாட்கள் பிரபு தேவாவையும், லாரன்ஸையும் கொலை செய்ய உள்ளே வந்து சக்கர நாற்காலில் அமர்ந்திருக்கும் பிரபுதேவாவை நோக்கி ஓங்கும் கத்தியை குருவைக் காப்பாற்றும் துரிதத்தில் லாரன்ஸ் பாய்ந்து பிடிக்க முயல, அதைத் தட்டி விட்டு ஒரு கம்பீர உருவம் தோன்றுகிறது.

அந்தக் காட்சியைப் பார்க்கும் போது பாமர ரசிகன், படித்த ரசிகன் எல்லோருக்கும் முடி நட்டமாக நிற்கும். நிஜம் தாங்க. மெகா ஸ்டார் சிரஞ்சீவி தான் அது. 'நீ போய் புரோக்ராமைக் கவனி. இவங்களை நான் கவனிச்சுக்கறேன்' என்று சொல்லி அவர்களைப் பந்தாடுகிறார். சும்மா சொல்லக் கூடாது, மெகாஸ்டார் மெகாஸ்டார் தான்.

நிகழ்ச்சி அறிவிப்பாளராக சுமன் வருகிறார். படிக்காதவன் படத்தில் ரஜினிக்குத் தம்பியாக ரம்யா கிருஷ்ணனுடன் காலேஜில் படிப்பாரே அதே சுமன் தான். பம்பரமாகச் சுழன்று லாரன்ஸ் டான்ஸ் ஆடி வெல்கிறார். போலீஸ் வில்லனைக் கைது செய்கிறது.

படத்தில் கதை ஒன்றுமே இல்லை. தேவையில்லாத அம்மா சென்டிமெண்ட், வலியப் புகுத்தப்பட்ட காதல் தோல்வி இவற்றை ஒதுக்கி விட்ட்டு நோக்கினால் லாரன்ஸ் தூள் கிளப்பியிருக்கிறார். சிரஞ்சீவி, நாகர்ஜுனா போன்றவர்கள் வெறு மூன்று நிமிடம் மட்டும் வந்து ஒரு சண்டை பண்ணும் அளவிற்கு ஆந்திர சினிமாவில் லாரன்ஸின் செல்வாக்கு இருக்கிறது. மெகா ஸ்டாரின் இந்திரா படத்தின் நடன அசைவுகள் லாரன்ஸ் வடிவமைத்தவை. அவர் ஆட்டுவிக்காத நாயக, நாயகிகளே இல்லை.

மொத்தத்தில் ஸ்டைல் ஒரு சராசரிக்கும் மேலான தெலுங்கு கார மசாலா.

ஒன்பதாம் வகுப்புக் கதை

- குப்புசாமி செல்லமுத்து

"ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம்" என்ற வரியுடன் ஒரு கதை எழுத வேண்டும் என்ற வேட்கை சமீப காலமாக என்னை ஆட்கொண்டிருந்தது. தொடக்கம் அப்படி இருக்க வேண்டும் என்று தான் விரும்பினேனே தவிர ராஜா கதை சொல்ல வேண்டும் என்ற வேகமோ அல்லது ராஜாக்களைப் பற்றிய அறிவோ எனக்கு இருந்ததில்லை.

பிறகு எதற்காக இவனுக்கு கதை எழுதும் வேலை என்று உங்களுக்குக்த் தோன்றலாம். வேறு ஒன்றும் இல்லை. போன வாரம் தமிழ் அய்யா சந்தியாவை அவள் எழுதிய கதைக்காகப் பாராட்டினார். அது எனக்குப் பொறுக்க முடியவில்லை.

சந்தியா எல்லாவற்றிலும் என்னை விட மட்டம் தான். இங்கிலீஷ் டியூசனில் ஒரு சென்டன்ஸ் சொல்லு என்று சார் கேட்கும் போது "Rama is a good buy" என்று நான் சொன்னால் உடனே "Sita is a good girl" என்பாள். அடுத்த தடவை "I shall reply to the letter you sent last week" என்று சொன்னால் விழிப்பாள்.

பள்ளி விழாவில் எந்தப் போட்டியாக இருந்தாலும் நான் தான் முதலிடம் வாங்குவேன். அப்படிப் பட்ட நானே இது வரை ஒரு கதை கூட எழுதியதில்லை. இவளால் எப்படிச் செய்ய முடிந்தது? இதற்கு ஏதாவது நிவாரணம் தேடியே தீர வேண்டும்.

பஞ்ச தந்திரக் கதை எதையாவது உல்டா செய்து விடலாமா? அல்லது மெகா சீரியல் கதையில் ஒரு பகுதியைச் சுட்டு விடலாமா? சேச்சே...வேண்டாம் பள்ளிக் கூடத்தில் அடல்ஸ் ஒன்லி கதையை அனுமதிக்க மாட்டார்கள். கதைக்கான கரு கிடைக்காததால் அந்த சிந்தனையைக் கொஞ்ச நாள் ஒத்தி வைத்தேன். இருந்தாலும் வன்மம் உள்ளூற இருந்தே வந்தது.

'உனக்குத் தலைகீழாக நின்றாலும் கணக்கு வராது' என்று கணக்கு வாத்தியார் ஓரிரு நாட்களில் சந்தியாவைத் திட்டினார். அவள் தலை கீழாக நின்றால் எப்படி இருக்கும் என்ற கீழ்த்தரமான கற்பனைகள் உதித்தது. இதற்கெல்லாம் குறைச்சல் இல்லை. ஆனால் கதை மட்டும் தான் வர மாட்டேன் என்கிறது.

அந்தப் பள்ளியில் மாணவர்களும், மாணவிகளும் பேசிக் கொள்வதே அபூர்வமான நிகழ்ச்சி. அப்படியே பேசினாலும் அது அனைவருக்கும் தெரிந்து விடும். இருந்தாலும் ஒரு நாள் டியூசன் முடிந்து சைக்கிளை எடுக்கும் போது, "எங்கம்மா உன்னைய வீட்டுக்கு வரச் சொன்னாங்க. என்னைக்கு வாரே?" என்று கேட்டாள். நாக்கு வறண்டு, கை கால் எல்லாம் வெடவெடத்து விட்டது. இன்னொரு நாள் வருவதாகச் சொல்லி தப்பித்து வந்தேன்.

நல்ல வேளை பசங்க யாரும் அதைப் பார்க்கவில்லை. 'பசங்க' என்றால் ஏதோ ஐம்பது பேர் என நினைத்துக் கொள்ள வேண்டாம். என் வகுப்பில் இருக்கும் 17 பையன்களில் நானும், பழனிச்சாமியும் மட்டுமே டியூசனுக்க்குப் பெயர் கொடுத்திருந்தோம். மற்றவர்கள் எல்லாம் பெண்கள் தான். இந்தக் கண்ணாடிக் கந்தசாமி வாத்தியார் சிறப்பு வகுப்பில் ஏற்றும் அறிவு தீபத்திற்காகவோ அல்லது புள்ளைகளை சைட் அடிக்கவோ தான் நாங்கள் இருவரும் வருகிறோம் என்று நினைத்தால் அது தவறாகும். சனி, ஞாயிறு எல்லாம் டியூசன் இருப்பதாகச் சொல்லி சினிமாவுக்குப் போவதற்கே இந்த ஏற்பாடு. இதில் பழனிச்சாமி வார நாட்களில் வரவே மாட்டான். வாத்தியார் கேட்டால் 'தோட்டத்துல வேலை இருந்துதுங்க சார்' என்று கூறி விடுவான்.

வியர்வை படிந்த கிராமங்களில் மக்கள் இளைப்பாறுவதற்கும், சொந்த பந்தங்களோடு கூடி மகிழ்வதற்கும் நடத்தப்படும் திருவிழாக்களில் மாவிளக்கு எடுப்பார்கள். சந்தியாவின் கிராமத்தில் நடக்கும் கோவில் விசேசத்தை வேடிக்கை பார்க்கப் போகலாமென்று பழனிச்சாமி ஐடியா கொடுத்தான்.

இருவரும் போனோம். மாவிளக்கு எடுத்து வரும் பெண்களில் சந்தியாவும் ஒருத்தி. தாவணியில் அப்போது தான் பார்க்கிறேன். பார்ப்பதற்கே படபடப்பாக இருந்தது. மிக அழகாகத் தெரிந்தாள்.

அதன் பிறகு ஏனோ கதை எழுத வேண்டும் என்ற நினைப்பே வரவில்லை. கவிதை தான் வருகிறது.

ஆம்ஸ்டர்டாமும் அந்த மூன்று மணி நேரமும்

- குப்புசாமி செல்லமுத்து

அந்த ஊரைப் பற்றி நினைத்தாலே சக்திவேலுக்கு ஒரு விதப் பரவசம் தொற்றிக் கொள்ளும். தனது வாழ்வில் ஐந்தாவது முறையாக ஆம்ஸ்டர்டாம் நகரில் தரை இறங்குகிறான். அதில் இரண்டு தடவை நெதர்லாந்து நாட்டுக்கு நேரடியாகவே வந்த அனுபவம். மீதம் மூன்று முறை இந்தியாவில் இருந்து அமெரிக்கா பயணிக்கையில் விமானம் மாறுவதற்காக.

ராயல் டச் KLM ஏர்லைன்ஸ் பணிப்பெண் இவனுக்குப் பக்கத்து இருக்கையில் இருந்த ஸ்பெயின்காரனை சீட்-பெல்ட் போடுமாறு சிரித்துக் கொண்டே சொல்கிறாள். அவன் பெயர் வின்சென்ட் என்று நினைவுபடுத்திக் கொண்டான் சக்தி. மும்பை விமான நிலையத்தில் இருந்து கிளம்பியவுடன் அனைவருக்கும் உணவு கொடுக்கப்பட்ட போது தன்னைப் போலவே எக்ஸ்ட்ரா மீல்ஸ் வாங்கித் தின்ற வின்சென்ட் தன் அலைவரிசையில் இருப்பதாக உணர்ந்து மின்னஞ்சல் முகவரி பரிமாறிக் கொண்டிருந்தான். எட்டரை மணி நேரப் பயணத்தின் சலிப்பை உள்ளே போன இரண்டு பாட்டில் ரெட்-ஒயின் போக்கியிருந்தது.

ரோட்டர்டாம் நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்த விமானம் இன்னும் சில நிமிடங்களில் Schiphol விமான நிலையத்தை அடைந்து விடும். ரோட்டர்டாமில் மிகப் பெரிய துறைமுகம் இருக்கிறது. ஐரோப்பாவின் பல நாடுகளுக்கும் கப்பல் சரக்குகளை இந்தத் துறைமுகத்தில் இருந்து ஆறு வழியாக எடுத்துச் செல்கிறார்கள் எனச் சென்ற பயணத்தில் அறிந்திருந்தான். Ede நகரில் இருந்து யாழ்ப்பாணத் தமிழர் எழிழன் ரோட்டர்டாம் அழைத்துச் சென்றிருந்தார்.

மாத நாவல்களில் 'கப்பல் போன்ற கார் சாலையில் வழுக்கிக் கொண்டு சென்றது' எனப் பல முறை வாசித்தவனுக்கு விமானம் தரையிறங்கிய போது அதை விட மிகுதியான அனுபவம் கிடைத்தது. சலனமற்ற மீன் தொட்டியில் குட்டி மீன் நீந்துவது போல அமைதியாக மென்மையானதாக அந்நிகழ்வு அமைந்தது. அவனுக்குத் தெரிந்த மெட்ராஸ் வின்டேஜ் சரக்கை விட லேண்டிங் 'ஸ்மூத்'தாகத் தோன்றியது அவனுக்கு.

இதோ Schiphol நிலையம். கையின் ஐந்து விரல்களைப் போல விரிந்திருக்கும் ஏர்போர்ட். அட்லாண்டா விமானத்திற்கு இன்னும் மூன்று மணி நேரம் அவனுக்கு இருந்தது. சற்றுத் தொலைவு நகர்ந்து ஆளில்லாப் பகுதியின் ஒரு நாற்காலியில் உடல் இறுக்கம் தளர்த்தி அமர்ந்தான். மனது ஒரு வகை ஒட்டுதலை உணர்ந்தது. பாரிஸ், லண்டன், ஃபிராங்க்பர்ட் ஆகிய ஊர்கள் வழியாக அமெரிக்க போகும் போது இந்த உணர்வு உண்டானதில்லை.அவன் முதன் முதலாக வந்த வெளிநாடு என்பது மட்டும் தான் காரணமா என்று அவனுக்கு விளங்கவில்லை.

பிளஸ் 1 கோயம்புத்தூரில் சேர்ந்து விட்டு முதல் வாரம் பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் வந்து இறங்கிய போது இதே போன்ற உணர்வு 12 வருடங்களுக்கு முன்பு உண்டானது. பெங்களூரில் வேலைக்குச் சேர்ந்த பின் திருப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கிய சமயத்திலும், முதல் ஐரோப்பியப் பயணம் முடித்துச் சென்னை விமான நிலையத்தில் இறங்கிய போதும் இதே உணர்வு தான்.

ஆறு ஆன்டுகளுக்கு முன் இதே விமான நிலையம் மூலமாகத் தான் ஐரோப்பிய மண்ணில் கால் வைத்தான். பழைய சட்டை, ஜீன்ஸ் போட்டுக் கொண்டு வெளியே வந்தவனுக்கு கோட், சூட், டை அணிந்திருந்த கார் ஓட்டுனர் இவன் பெயர் எழுதிய அட்டையைக் கையில் பிடித்துக் கொண்டு நின்றது சிரிப்பாக இருந்தது. டேக்சி கூட பென்ஸ் கார்.

ஐரோப்பிய யூனியன் உருவானது அவர்களுக்கு நல்லதோ இல்லையோ தனக்கு நல்லது என்று அப்போது நம்பினான். ஒரு நாடு கொடுத்த விசாவை வைத்துக் கொண்டு எல்லா நாடுகளுக்கும் பயணிக்கலாமே! பாரிஸில் ஈஃபில் டவர், மோனாலிசா, ஜெர்மனி சுற்றுலா எனத் திரிந்து செலவழித்த காலம்.

சில விஷயங்களை உணர மட்டுமே முடியும், சொற்களால் விவரிக்க முடியாது என்ற வாதத்தை நம்பியிருந்திராத சக்திக்கு நெதர்லாந்தில் ஒரு தெற்காசியாவைச் சேர்ந்தவனுக்குக் கிடைக்கும் விருந்தோம்பலை ஜெர்மனியில் கிடைக்கும் விருந்தோம்பலோடு ஒப்பிட முடியவில்லை.

டச்சுக்காரர்கள் அவன் மனதில் உயர்ந்து நின்றனர். தேசங்களின் குடிமக்கள் அனுபவிக்க்கும் வாழ்க்கைத் தரத்தின் அடிப்படையிலான HDI (Human Development Index) குறியீட்டின் படி கனடா, நீயூசிலாந்து போன்ற நாடுகளுடன் உயரிய இடத்தில் ஹாலந்து இருக்கிறது.

ஐரோப்பாவில் தங்களைத் தாங்களே 'லார்ட்' என அழைத்துக் கொண்ட வம்சத்தினர் ஆங்கிலேயர்கள். பண்டைய இங்கிலாந்தில் யாரையாவது கேலி செய்ய விரும்பினால் டச்சுக்காரர்களோடு ஒப்பிடுவார்களாம். 'புண்ணாக்கு' என்ற சொல்லுக்கு 'மாடுகளும் டச்சுக்காரர்களும் உண்ணும் உணவு' என்று அகராதிகளில் கூட இருந்ததாகக் கேள்விப்பட்டது சக்திக்கு நினைவு வந்தது. கும்பலாக ஒரு உணவகத்திற்குச் செல்லும் போது அவரவர் உண்டதற்கு அவரவரே பணம் கொடுப்பதை 'டச்சு டிரீட்' என்றழைப்பது இப்போது இந்தியாவில் கூட வழக்கமாக இருகிறது.

டச்சுக்காரர்களின் தேசிய நிறம் ஆரஞ்சும், மஞ்சளும் கலந்த ஒரு நிறம். இதை உணவு மேசை உரையாடலில் அறிந்து சக டச்சு ஊழியரிடம் "அப்போ நீங்க டிராஃபிக் யெல்லோ லைட் எரியும் போது எந்திரிச்சு நின்னு சல்யூட் அடிப்பீங்களா?" என்று கேட்டு வாங்கிக் கட்டிக் கொண்டது நினைவு வந்தது.

உட்கார்ந்த இடத்தில் இருந்து கண்ணாடிச் சுவர்களுக்கு வெளியே ஓடுதளங்களில் நகரும் செயற்கைப் பறவைகளைப் பார்த்தபடியே தனக்கும் இந்த ஊருக்கும் இருக்கும் இனம்புரியாத உறைவை எண்ணி வியந்தபடியே நினைவுகளை மேய விடுகிறான். தனது இருக்கைக்குக் கீழே ஏதாவது ரயில் ஓடிக்கொன்டிருக்கும் என அவனுக்குத் தெரியும். நிலப் பரப்பில் விமான நிலையம். நிலத்தடியில் ரயில் நிலையம். அங்கிருந்து நாட்டின் பிற ஊர்களுக்குச் சுலபமாகப் போய் விடலாம்.

வெள்ளைத் தோல் இல்லாதவர்கள் எல்லோரிடமும் இப்போது செக்யூரிட்டி கெடுபிடி அதிகம். இரண்டாயிரமாவது வருடம் இப்படி இல்லை. லக்கேஜ் எல்லாம் செக்-இன் செய்த பிறகு இதே விமான நிலையத்தில் உச்சியில் போய் நின்று பொள்ளாச்சி பஸ்டண்டில் நிற்கும் கோவை பஸ்களைப் போல வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விமானங்களின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டதைப் போல இன்னொரு நாள் வராது.

மூன்று நிமிடத்திற்கு ஒரு விமானம் தரை இறங்கும் அல்லது வானேறும் இந்த ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் டச்சுப் பயணிகளை அதிகம் பார்க்கவே முடியாது. எல்லாம் கனைக்டிங் ஃபிளைட் பிடிக்கும் நபர்கள் தான். வெறும் ஏர்ஃபோர்ட் மட்டும் கட்டி விட்டுக் காசு சம்பாதிக்கிறது கடல் மட்டத்திற்குக் கீழ் இருக்கும் இந்த நாடு.

காமராஜர் காலத்தில் இருந்தே விவாதிக்கப்படும் சேது சமுத்திரம் மட்டும் மட்டும் வந்திருந்தால் உலகில் மிகப்பெரிய துறைமுகங்களின் வரிசையில் ரோட்டர்டாம், சிங்கப்பூர் என்பது மாறி ரோட்டர்டாம், தூத்துக்குடி என இருந்திருக்கும் என்பது நிச்சயம். தென் தமிழகத்தின் பொருளாதார நிலைமையையே அது மாற்றிப் போட்டிருக்கும். சக்தியின் சமூக அக்கறை அவ்வப்போது இப்படித் தலையெடுக்கும் சமயத்தில் அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நினைப்பு வந்து போகும்.

மூன்று மணி நேரம் ஒரே நேர் கோட்டில் காரில் பயணித்தால் இந்த நாட்டின் எல்லையைக் கடந்து விடலாம். கோழி இறைச்சி உற்பத்தி, பால் உற்பத்தி போன்றவற்றில் உலக அளவில் முக்கிய இடத்தை வகிக்கிறது. அவர்களது மலர் உற்பத்தி குறித்துச் சொல்ல வேண்டியதே இல்லை. கோடையில் நடக்கும் நெதர்லாந்து மலர்க்கண்காட்சி ஐரோப்பா முழுவது பிரபலம். வண்டி ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் பார்க்கும் வழக்கமுள்ளவர்கள் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா..அட இஸ்ரேல் வண்டிகளைக் கூட அங்கே காணலாம். அந்நியம் படத்தில் விக்ரம் சதாவைப் பார்த்து வார்த்தைக் கடல் வற்றி விட்டது என்று பாடுவது நேதர்லாந்தின் டியூலிப்ஸ் தோட்டத்தில் தான்.

ஒரு சராசரி டச்சுக்காரரின் மனதில் ஆம்ஸ்டர்டாம் நகரம் ஒதுக்கப்பட்ட பகுதியாகவே இருக்கிறது. அவன் சென்ற முறை பணியாற்றிய ஊரில் இருந்து ஆம்ஸ்டர்டாமுக்கு சுமார் 40 நிமிடம் ரயிலில் வர வேன்டும். கல்யாண் ராவுடம் ஒரு வெள்ளிக்கிழமை இரவு அங்கே சென்றான். 'காந்தி' என்ற பெயரில் ஒரு பாகிஸ்தானியர் நடத்தும் இந்திய உணவகம் அவனுக்கு வியப்பாக இல்லை. ஏனென்றால் அதற்குச் சில நாட்கள் முன்பு தான் ஒரு பல்கலைக் கழகத்திற்குச் சென்று இந்தியா-பாகிஸ்தான் மாணவர்களோடு இணைந்து தீபாவளி கொண்டாடிவிட்டு வந்தான்.

ஆம்ஸ்டர்டாம் இரவில் தான் விழிக்கிறது. பாவ நகரம் (Sin city) என்று அதைக் கூறுவார்கள். ரெட் லைட் டிஸ்ட்ரிக்ட் என அழைக்கப் படும் பகுதி அதன் சிறப்பம்சமாம். இந்த இடத்திற்கு வருவதற்காகவே பல அமெரிக்கர்கள் ஐரோப்பா பயணிப்பதாக அவனிடம் சொன்னார்கள். கண்ணாடிச் சுவருக்கு உள்ளே அரை ஆடையோடு நின்று தெருவில் நடக்கும் நபர்களை அழைக்கும் அழகிகள், ஒரு வாடிக்கையாளர் கிட்டியவுடம் திரச்சீலையை மூடி விடுவார்கள். ஆக்சன் முடிந்து அந்த நபர் வெளியே வந்ததும் மேலும் திரை விலகி விளிப்புகள் தொடரும். இரவு செல்லச் செல்ல தன்னை யாரும் நெருங்கவில்லை என்றால் 'இலவசமாக கடலை போடுங்கள் காசு வேண்டாம்' என அழைக்கும் பெண்களும் உண்டு. பாவம் அவர்களுக்கும் நேரம் போக வேண்டுமே. அந்த ஏரியாவில் இந்தியப் பெண்களுக்கு படு கிராக்கி.

சட்டப் பூர்வமாக இந்த வேலைகள் நடக்கும் இப்பகுதியில் சட்ட விரோதமான செயல்கள் நடப்பதில்லை என்பதை அவனால் நம்ப முடியவில்லை. குழந்தைகள், பெண்களோடு சுற்றுலாப் பயணிகள் வந்து வேடிக்கை பார்த்து விட்டுச் செல்கிறார்கள். உலகின் இன்னொரு பாவ நகரமான லாஸ் வேகாஸ் நகரத்தில் கூட இதெல்லாம் நடந்தாலும், வாரக் கடைசிகளில் பிற ஊர்களில் இருந்து அங்கே போய் காசு சம்பாதித்து வரும் சராசரி அமெரிக்கப் பெண்கள் இருந்தாலும், செக்ஸ் கேப்பிட்டல் என்று ஆம்ஸ்டர்டாமைத் தான் சொல்கிறார்கள்.

இருபத்தி இரண்டு வருட வாழ்வில் இதுவரை அமையாமல் அன்று அமைந்த வாய்ப்பைப் பயன்படுத்த சக்தி விரும்பினாலும் அந்தப் பெண்கள் சொன்ன தொகையை X 20 (அப்போது யூரோ வரவில்லை. கில்டர் தான்) என்று நம்ம ஊர் கரன்சியில் கணக்குப் போட்டுப் பார்த்துப் பின் வாங்கி விட்டான். துணைக்கு வந்த கல்யான் ராவ் மட்டும் லைவ் ஷோ எல்லாம் பார்த்தான். 'Good boys go to heaven. Bad boys go to Amsterdam' என்ற வாசகம் பொருந்திய டீ.ஷர்ட் ஒன்றும் வாங்கினான்.

மற்றவர்கள் டச்சுக்காரர்களைக் கிண்டல் பண்ணினால் இவர்கள் பெல்ஜியம் மக்க்களைக் கிண்டல் செய்கிறார்கள். நமது சர்தார்ஜி ஜோக்க்குகள் மாதிரி இவர்களது பெல்ஜியம் ஜோக்குகள் அறியப்படுகின்றன. ஒரு டச்சுக் குழந்தை சக்தியிடம் ஒரு கடி ஜோக் சொன்னது.

"ஒரு பெல்ஜியம் ஆள் பாலைவனத்துல கார் ஜன்னலைத் தூக்கிட்டு நடக்குறான். ஏன் தெரியுமா?"

"தெரியல சொல்லு"

"பாலைவனம் சூடா இருக்கும்ல. அதனால கார் ஜன்னலைத் திறந்து காத்து வாங்க"

பெல்ஜியத்தில் ஒரு பகுதியினர் டச்சு மொழியும், இன்னொரு பகுதியில் பிரெஞ்சு மொழியும் பேசுகிறார்கள். இருந்தாலும் பெல்ஜிய டச்சு மக்கள் தங்களை டச்சுக்காரர்கள் என அழைப்பதில்லை என்று சக்திக்கு சொல்லப்பட்டது. பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப் நகரில் திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் இருக்கிறது.

நினைவுகள் கலைந்தோட செக்யூரிட்டி செக் அழைப்பு வந்தது. அதற்கு முன் வயிறு கலக்கியதைச் சரி செய்ய டாய்லட் சென்று வந்தான். பல முறை பேப்பர் உபயோகப்படுத்திப் பழகியிருந்தாலும் கழுவாமல் திரிவதில் இருக்கும் அசெளகர்யம் குறைந்தபாடில்லை. மறக்காமல் ஒரு மக் வாங்கி கூடவே எடுத்து வந்திருக்கிறான்.

செக்யூரிட்டி செக்கில் இவன் சொன்ன 'குத் மார்கன்' க்கு ஒரு சிரிப்புச் சிரித்து விட்டு பாஸ்போர்ட்டில் இருந்த பழைய அவர்கள் நாட்டு விசாவைப் பார்த்து விட்டு டச்சு பெண் போலீஸ் 'Do you speak Dutch? How do you like this country?' என்று ஆவலுடன் கேட்டது. கொஞ்சம் கடலை போட்டு விட்டு உள்ளே வந்தவன், Okai. From one material word to another. India to US என்று எண்ணிக் கொண்டான்.

Saturday, September 23, 2006

டானிக் மனிதர் - பால்ராசு

பத்தாம் வகுப்பு முடித்து பதினொன்றாம் வகுப்பிற்கு கோவையின் பழம்பெரும் பள்ளி ஒன்றில் சேர்ந்திருந்த காலம். பால்ராசை அப்போது தான் முதன் முதலாகப் பார்த்தேன். அவன் படித்த எலுகாம் வலசு பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றிருந்தான். நானும் எனது பள்ளியில் முதல் மார்க் என்றாலும் அவனை விட சுமார் 50 மார்க் குறைவாகவே எடுத்திருந்தேன்.

நாங்கள் இருவருமே ஒரே பூகோளப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஒரே மாதிரியான குடும்பப் பின்னணி கொண்டவர்கள் என்பதும் ஒரு ஒற்றுமை. மைக்கேல்ஸ் ஸ்கூல் விடுதியில் தங்க இடம் கிடைத்தது. அங்கே கண்டிப்பாக ஏதாவது ஒரு கேம்ஸ் ஆடியே தீரவேண்டும். பால்ராசு வாலிபால் ஆடுவது மிக வேடிக்கையாக இருக்கும். பந்தின் திசைமாற்ற வீதம் அவனின் இடமாற்ற வீதத்தோடு எதிர்மறைத் தொடர்பு உடையதாக இருக்கும்.

டாக்டர் ஆவதே இலட்சியம் என்று இடைவிடாது உயிரியல் பாடம் படித்துக் கொண்டே இருப்பான். அதனால் கணக்கில் போதுமான கவனம் செலுத்தினானா என்று தெரியவில்லை. நானெல்லாம் பத்தாவதில் 'தவளையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை படம் வரைந்து பாகங்களைக் குறி' என்ற கேள்வியில் இருந்தே உயிரியல் சங்கதியில் இருந்து தூரமாக விலகி நிற்க ஆரம்பித்து விட்டேன். பிளஸ்-2 பயாலஜி தேர்விற்கு முந்தைய நாள் டி.வி.யில் 'தூறல் நின்னு போச்சு' படம் பார்த்துக் கொண்டிருந்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பொறியியல் கல்லூரியில் எனக்கு சுலபமாக இடம் கிட்டியது. ஜி.டி.நாயுடு காலேஜ், நிறைய மரம் இருக்கிறது போன்ற காரணங்களால் (இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது) GCT யில் சேர்ந்தேன். பால்ராசு நினைத்தபடி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்ல்லை. முதல் தர பொறியியல் கல்லூரியிலும் இடம் இல்லை. நினைத்திருந்தால் குமருகுரு போன்ற ஏதாவது ஒரு காலேஜில் பேமெண்ட் சீட் வாங்கியிருக்கலாம். ஆனால் அவனோ, அவன் குடும்பத்தின் பொருளாதாரச் சூழலோ அதை அனுமதிக்கவில்லை. முடிவாக கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் பி.எஸ்.சி. அக்ரி படிப்பில் சேர்ந்தான்.

மருதமலைச் சாலைக்கு வடக்குப் பக்கம் உள்ள வளாகத்தில் தெர்மல் லேப், மெஷின் டிசைன் என நான் உலவிக் கொண்டு இருந்த போது, அதே சாலைக்குத் தென் புறமாக மண் வளம், மகசூல், பூச்சிக் கொல்லி என்று காக்கி டவுசரோடு அலைந்து கொண்டிருந்தான் பால்ராசு.

நான்கு வருடக் கல்லூரி வாசத்தில் ஏழெட்டு முறை தான் அவனைச் சந்தித்து இருப்பேன். இறிதியாண்டு, புராஜெக்ட் ஒர்க், கேம்பஸ் இன்டர்வ்யூ என்ற நீரோட்டத்தில் ஐதராபாத் வந்து கரை ஒதுங்கினேன். பால்ராசைப் பற்றிய நினைவு அறவே இல்லாமல் போனது. ஊரக வளர்ச்சித் துறை எதிலாவது வேலை செய்து கொண்டு இருப்பான் என நினைத்துக் கொள்வேன். சில ஆண்டுகள் கழித்து அவனது தந்தை டெம்போவில் அடிபட்டு இறந்து விட்டதாகக் கேள்விப்பட்டேன்.

பின்னர் ஒரு நாள் ஊருக்குப் போன போது நாங்கள் (கோவையில்) படித்த பள்ளியில் பால்ராசுக்குப் பாராட்டு விழா நடந்ததாகச் சொன்னார்கள். அவன் ஐ.ஏ.எஸ். ஆஃபீசர் ஆகிவிட்டானாம்.மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
சொந்த மாமன் மகளையே மணம் செய்திருக்கிறானாம்.

அவனது மானமார் மூலம் பால்ராசின் செல்போன் நம்பர் வாங்கி அழைத்தேன். பையன் இமாச்சலப் பிரதேசத்தில் ஏதோ ஒரு ஊரில் சப்-கலெக்டராக இருக்கிறான். அன்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவரிடம் உரையாடல் இருந்ததாகச் சொன்னான்.

அண்ணமாலை படத்தில் ரஜினிகாந்த் ஒரே பாடலில் பெரிய ஆளானதைப் போல அமையவில்லை பால்ராசின் வளர்ச்சி. பி.எஸ்.சி. அதன் பிறகு எம்.எஸ்.சி. அதன் பிறகு வேறு ஏதோ படிப்பு, தொடர்ந்து பி.எச்.டி. என்று படித்துத் தள்ளியிருக்கிறான். அது போதாதென்று கடைசியாக ஐ.ஏ.எஸ்.
தனது குறிக்கோளில் கவனம் சிதறாமல் எடுத்த காரியத்தை முடித்த டாக்டர்.பார்ராசு ஐ.ஏ.எஸ். அவர்களோடு (ஒரு மரியாதை தான்) ஒப்பிடுகையில் வாழ்க்கையில் எதைத் தேடி ஓடுகிறோம் என்ற முகப்பு இல்லாமல் 'ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்' என்று குழம்பும் இன்றைய இளைஞர்கள் கீழான நிலையில் இருக்கிறார்கள்.

என்னவோ படித்தோம், வேலைக்குச் சேர்ந்தோம், கிரடிட் கார்ட் வாங்கினோனம், செலவு செய்தோம் என்ற அற்ப வாழ்வு வாழாமல் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் பால்ராசு. தன் மகனை டாக்டர் ஆக்க வேண்டுமென அவரது தந்தையார் தான் அதிகம் ஆசைப்பட்டார். அந்தக் கனவை மகன் நிறைவேற்றவில்லை என்றாலும், தந்தையின் ஆவி மகிழ்ச்சியாகவே இருக்கும்.

நாடு சரியில்லை, மக்கள் சரியில்லை, அரசியல் வாதிகள் சரியில்லை என்று குறை சொல்வதால் மட்டுமே மாற்றங்கள் வராது. You focus on where you can make a difference. சாக்கடை நாறுகிறது என்று அதிலேயே துப்பிவிட்டுச் செல்லாமல் உள்ளே இறங்கி (நாட்டை) சுத்தப் படுத்தும் மனிதர் பால்ராசு.

வாழ்த்துக்கள் நண்பனே!! ஒரு நாள் உன்னை வெளியுறவுத் துறைச் செயலாளராகவோ அல்லது ஐ.நா.விற்கான இந்தியத் தூதராகவோ சந்திப்பேன்.

Tuesday, September 19, 2006

பவுடர் அடிக்கலியாடா?

- குப்புசாமி செல்லமுத்து

"பவுடர் அடிக்கலியாடா?" காலையில் குளித்து வந்தவுடன் அம்மா கேட்ட முதல் கேள்வி. எனக்கு நினைவு தெரிந்து கடைசியாக டால்கம் பவுடர் பூசியது ஏழாவது படித்த போது என்று ஞாபகம். அதன் பிறகு கவனம் காலப் போக்கில் வெவ்வேறு திசைகளில் திரும்ப புறத் தோற்றத்தைப் பராமரிப்பது குறித்தான கவலைகள் இல்லாமலே போனது.

சிறு வயதிலேயே துருத்திக் கொண்டு வந்த முன்னம் பற்கள் இரண்டிற்கும் கிளிப் போட வேண்டும் என்று கூட நினைத்ததில்லை. எங்கள் வட்டாரத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறையக் குறைய குடிநீரில் ஃபுளோரைடு செறிவு கூடியதில், நிறையப் பேரின் பல்லில் கறை படிந்திருந்தது. போன வாரம் அடையார் அப்போலோ டென்டல் கேர் பல் மருத்துவ மனையில் ஞானப்பல்(wisdon tooth) அறுத்து எடுத்த போது, "எல்லாப் பல்லுக்கும் செராமிக் கேப் போட்டால் கறையை மறைத்து விடலாம்" என்று சொன்னார்கள். அதற்கு என்ன செலவாகும் என்ற கேள்விக்கு அவர்கள் சொன்ன பதில் லோக்கல் அனஸ்தீசியாவை மிச்சம் செய்வதற்கோ என்று கூடத் தோன்றியது. மயக்கம் வராத குறை தான்.

ஆகவே இப்போதும் பவுடர் எல்லாம் பூச முடியவில்லை. அப்படியும் பூசினாலும் குங்குமப் பொட்டுக் கவுண்டர் படத்தில் தன் மகனுக்கு ரம்பா செய்யும் மேக்-அப்பைப் போலத் தான் இருக்கும் என்பது எனக்குத் தெரியும். அதை விடுங்க. ஞாயிற்றுக் கிழமை காலையில் இவ்வளவு சீக்கிரம் எழுந்து, சவரம் செய்து, குளித்து ஆயத்தமானது இது தான் முதல் முறை.

மூன்றடி தண்ணீர் அமராவதியில் ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் ஆறு மூன்றடி ஆழமாகி இருக்கிறது தெரியுமா? ஆம்.. ஒரு காலத்தில் இபோதையை தண்ணீர் மட்டத்தில் மணல் படுகை இருந்ததை அறிவேன். சிலர் திருட்டுத் தனமாகவும், அரசாங்கமே அதிகாரப் பூர்வமாகவும் மணல் அள்ளியதால் ஏற்பட்ட விளைவு. உடுமலைப் பேட்டைக்குத் தெற்கே இருக்கும் அணைக் கட்டில் இருந்து ஆறு கவிரியில் கலக்கும் வரை இதே ஆழம் மணல் குறைந்திருப்பதைத் தான் இது காட்டுகிறது. ஆற்று மணல் திருடுவது தாய்ப்பாலைத் திருடி விறபதற்குச் சமம் (நன்றி: தியோடர் பாஸ்கரன்). நிலத்தடி நீர் மட்டம் குறைவதற்கும் இதற்கும் நேரடித் தொடர்பு உள்ளது.

கடக்கும் போதே சில வழுக்குப் பாறைகள் காலில் தட்டுப் படுகின்றன. மணலே இல்லாமல் வெறும் பாறை மட்டுமே உடைய ஆறு என நொய்யல் ஆற்றைத் தான் சிறு வயதில் எனக்கு அடையாளம் சொன்னார்கள். இப்போது எல்லா ஆறுகளுக்கும் அதே கதி தான்.

எது எப்படியோ. ஒரு வழியாக நதியைத் தாண்டி ஈரத் துணியெல்லாம் கழட்டிப் போட்டாச்சு. அயர்ன் செய்த சட்டை, பேண்ட் அணிந்து, ஷூ மாட்டிக் கொண்டு ஏழேகால் பஸ்ஸில் தாராபுரம் போக வேண்டும். இன்டர்வியூவுக்குப் போகும் போது கூட மூனு மாசம் தொவைக்காத ஜீன்ஸ் பேண்ட் போடுற ஆள் இன்னிக்கு இப்படி இருக்கறத நெனைச்சா சிரிப்பு தான் போங்க. மோளக் கவுண்டம் புதூர் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு இருக்கும் போது, "கெடிகாரம் கட்டலியா??" மறுபடியும் அம்மா. நேரம் பார்க்க செல் போன் இருப்பதால் கடிகாரத்தின் பயன்பாடு சமீப காலமாகக் குறைந்திருந்தது. "கெடிகாரம் கட்டி, கண்ணாடி கிண்ணாடி போட்டாத் தான படிச்ச பயனாட்ட இருக்கு(ம்). எப்பப் பாத்தாலும் பழைய சட்டையப் போட்டுக்கிட்டு ஆடு மேக்கற பயனாட்ட(ம்) இருக்கறீன்னு மாமன் பேசுது" பூவுலகில் மாபெரும் மேதாவி, உலக ஞானத்தில் நிகரற்று விளங்குவது தனது தம்பி தான் என்ற நினைப்பு அந்த வார்த்தைகளில் எதிரொலித்தது.

தாராபுரம் பஸ்-ஸ்டாண்டுக்கு வந்த போது எட்டு மணி. இன்னொரு அய்யன் ஏற்கனவே வந்து எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தார். அங்கிருந்து கார் எடுத்துக் கொண்டு போகுமாறு அப்பா சொன்னதாகத் தெரிவித்த போது மறுத்து விட்டார். ஈரோட்டிற்குப் பேருந்தில் போவது என்று அவர் சொல்படி தீர்மானித்தோம். எழுபத்து ஆறு கிலோ மீட்டர் தூரத்தை மூன்று மணி நேரத்தில் ஓட்டிச் சாதனை செய்த டிரைவரின் பொடனியில் ஓங்கி ஒரு தட்டு தட்ட வேண்டும் போல இருந்தது. இருந்தாலும் நாகரிகம் கருதி அமைதியாக இருக்க நேர்ந்தது.

ஈரோடு பேருந்து நிலையத்தில் இட்லியும், பூரியும் தின்று விட்டு கோபி பேருந்தில் (இங்கும் கார் எடுக்க அவர் அனுமதிக்கவில்லை) ஏறி பாதி வழியில் இருக்கும் அந்த ஊரை அடைந்தோம். கூடவே கொண்டு வந்திருந்த பேக்கில் இருந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டேன்.

You can make the first impression only once. வாழ்க்கைல முதன் முறையா பொண்ணுப் பாக்கப் போறதுன்னா சும்மாவா?

Tuesday, August 22, 2006

வலைப்பதிவர் சுற்றுலா

- குப்புசாமி செல்லமுத்து


"நான் எதைச் செய்யுமாறு பணிக்கப்பட்டேனோ அதைச் செய்கிறேன்" என்றோர் அலட்சியத்தோடு துவங்கத் தலைப்படும் எண்ணம் "டேய் அடங்கு" எனும் இயல்பு நிலைக்குத் திருப்பிக் கொண்டு வருகிறது என்ற பட்சத்தில், மறக்கும் முன் நினைத்ததைச் சொல்லிடவும் இயன்றால் பாலபாரதிக்கு நான் கொடுத்த வாக்கைக் காத்தவனாவேன். (அட நமக்குக் கூட இப்படி எழுத வருதே! பாலபாரதிக்கு மட்டும் சொல்வது புரியட்டும்)

"ஏங்க இது பல்லவ மகராஜா ஆண்ட ஊர் தானே?" என்று கேட்ட மனிதர்.
தொங்கித் தாவியும், செங்குத்துப் பாறையில் அனாயாசமாக ஏறியும் சென்ற குரங்கைப் பார்த்து மகிழ்ந்த மனிதர்.
இந்த சுற்றுலாவுக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்ற விவாதத்தில் "அப்பவே சொன்னேன் வர மாட்டேன்னு" என நான் சொல்லத் துணியாததைச் சொல்ல முன்வந்த மனிதர்.

இவர்கள் யாவரும் எனக்கு முன்னே எழுதியிருப்பார்கள் என்பது திண்ணம்.

பாகம் 1: வீரமணி
பாகம் 2: பிரியன்
பாகம் 3: பால பாரதி
பாகம் 4: மா.சிவக்குமார்
பாகம் 5: சிங்.ஜெயக்குமார்
பாகம் 6: அருள் குமார்
பாகம் 7: ஜெய் சங்கர்

அதிகமாக எழுதக்கூடாதவனை இல்லாத சங்கதியை எழுத வைக்கவே மீள் பயணத்தை வடிக்கக் கொடுத்தார்களோ? எப்படியோ.. மாமல்லபுரத்தில் இருந்து சென்னைக்குத் திரும்பி வரும் பயணத்தை எழுத வேண்டியது என்று முடிவு செய்த பிறகு, "பைக்கை ஸ்டார்ட் செய்தோம். ஓட்டினோம். வந்தோம். அ·தே" எனச் சுலபமாக்கிட இயலும்.

அட இதே ஸ்டைல் போரடிக்குது பா...

ஆம். மாமல்லபுரத்தில் இருந்து சென்னைக்குத் திரும்பி வரும் பயணத்தை எழுத முயற்சிக்கிறேன். தெற்கு நோக்கிய பயணத்தில் என் பின்னமர்ந்து வந்த அதே சிங்.ஜெயக்குமார் என்னோடு இணைந்து வருகிறார். பிற நண்பர்களும் அவரவர் இறங்கு இடத்திற்கு ஏற்றவாறு ஜோடி சேர்ந்து கொண்டனர்.

இருட்டும் முன்னர் கிழக்குக் கடற்கரைச் சாலைப் பயணத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற அவசரத்தில் எனது AP9 பைக் விசையாய் வடக்கு நோக்கிப் பயணித்தது. மதியம் வரும் போது வேகமாய் முன் வந்ததால் பாலபாரதிக்கும், வீரமணிக்கும் அரை மணி நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. இப்போது அப்படியல்ல. போனவுடன் நீட்டிப்படுத்துக் கொள்ளலாம்.

இருளும் முகிழும் தெற்கில் இருந்து வடக்காகத் துரத்தியே வந்தது. தலைக்கவசம் அணிந்து கொண்டால் 'எச்சரிக்கையான மனிதன்' என்ற எண்ணத்தில் வில்லங்கமிலாச் சான்று (NOC) இல்லாமலே கூட வேற்று மாநில வாகனம் ஓட்டினாலும் சென்னைக் காவல்துறை கண்டுகொள்ளாது என்ற காரணத்தையும் தாண்டி தலையைக் காக்கும் கவசமாக அவ்வப்போது மனதாலும், விபத்துகளாலும் உணர்ந்த ஓடு தலையைச் சுற்றிக் கவிந்திருந்தது.

அட, நான்கு வாகனங்களில் நான் மட்டும் தான் தலைக்கவசம் கொண்டிருக்கிறேன். கிராமத்தான் போல வண்டியில் ஒரு பெட்டியும் அதிலே சில சமாச்சாரங்களும் எப்போதும் இருக்கும். மழைக் காப்பு உடுப்புகள், மேலங்கியும் காலங்கியும். விரைந்து போயாக வேண்டிய வேட்கையில் பாண்டிப் பேருந்துகள், மஞ்சள் பலகை மகிழ்வுந்துகள் சிலவற்றை முந்தி வந்த போது வேகங்காட்டி 80 இல் ஊசலாடியது. சிங்கிற்கு அதைச் சுட்டிக் காட்டி ஓட்டும் திறமையை வெளிப்படுத்தவும் செய்கிறேன். கட்டுப்பாடற்ற பயணம். பின் சக்கர பிரேக் சற்று மந்தவாகவே இருந்தது. ஏதேனும் ஆனால்...

கி.க.சா. வில் இரு புறமும் சோல்டர் இருப்பது மகிழ்ச்சியான செய்தி. வாகனங்கள் பழுதடைந்தால் நிறுத்தவும், ஓய்வெடுக்கவும் அவை அமைக்கப்பட்டவை. உடையா மஞ்சள் கோடுகள் முதன்மைப் பாதையையும் சோல்டரையும் பிரித்திருந்தது. உடையாக்கோடுகளைக் கடக்கக் கூடாது எனும் விதி நமது ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியில் போதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மித வேக பைக்குகள் சில சோல்டரில் தான் பயணித்தன.
80 ஐச் சுட்டிக்காட்டிய சில மணித்துளிகளில் மழைத்துளி. பெட்டியில் இருக்கும் மேலங்கி என் மேலுக்கும், காலங்கி ஜெயக்குமாரின் தலைக்குமாக இடம் மாற, பயணம் தொடர்கிறது.

கனமில்லாத மழை தேவையற்ற நீரடுக்கை அமைத்தது. சாலைக்கும், சக்கரத்துக்கும் இடையே மிக மெல்லிய நீரடுக்கு சக்கரத்தின் பற்றுதலை சதிக்கக் கூடியது, வேகங்குறைக்க முயன்றால் விழவும் நேரிடலாம். ஆகவே வேகங்குறைத்து இயங்க நேர்ந்தது. சில கிலோ மீட்டர் கடக்க மாரி ஓய்ந்தது. அதன் பின் தடையில்லை. இருட்டிடும் முன் இவ்வதிவேகச் சாலைப் பயணத்தை முடிக்க வேண்டுமென்ற எண்ணம் தோற்றதைத் தவிர.
அப்படியே வந்து மால்குடிக்குச் சற்று முன்னர் மேற்கு நோக்கிப் பிரிந்து பழைய மகாபலிபுரம் சாலையில் திருவான்மியூர் செல்லவிருந்த வாடகை வேனில் ஜெயக்குமாரை ஏற்றி விட்ட பின்னர் பல நாளக இருந்த சந்தேகம் மீண்டும் தலையெடுத்தது.

இத்தனை வருடத்திற்குப் பிறகும் ECR பழுதின்றி இருக்கிறதே, நகரச் சாலைகள் மட்டும் ஏன் வருடா வருடம் போட வேண்டி இருக்கிறது? ஒப்பந்தக்காரரிடம் தரம் எதிர்பார்பதில்லையா? அல்லது பழுது பட்டால் தான் மீண்டும் ஏலம் விடலாம், பணம் சம்பாதிக்கலாம் என்ற அரசு இயந்திரத்தின் மெத்தனமா? என்னவோ போங்கள். சுதந்திர தினம் ..எதற்கும் ஐ லவ் இந்தியா சொல்லி வைப்போம்.

- THE END -

Friday, July 14, 2006

குட்டிக் கொடாப்பு

-குப்புசாமி செல்லமுத்து

வாழ்க்கையில் கடந்து போகிற ஒவ்வொரு கணத்தையும், நபரையும் ஒப்பீடுகளின்றி (in absolute sense but relative) ரசித்துக் கொண்டு வசிக்கிறவனாக, ஏனையோர் கருத்துக்களால் தனி மதிப்பீட்டுத் தோற்றம் மாறாதவனாகப் பாவித்து என்னையே ஏமாற்றிக் கொண்டிருந்த காலத்தில் வாசிக்கக் கிடைத்த உளவியல் நூல் ஒன்று பார்வையைச் சற்று தெளிவுபடுத்த உதவியது. கிழிக்கப்பட்ட கோடு ஒன்றை அழிக்காமல் சிறிதாக்க வேண்டுமானால் அதை விட ஒப்பீட்டில் பெரிதான கோடு கிழித்தால் போதுமானதாயிருப்பதைப் பீர்பால் கதை கூட விவரிக்கிறது. முன்னர் இட்ட கோட்டை விடப் பெரிதாக மட்டுமன்றி, சிறிதாகவும், முன்னர் இட்ட கோட்டின் மீதே பல முறை மீள் கோடுகளும் கிழித்திருக்கிறேன் என்பதை உணர்ந்த போது சற்று அதிர்ச்சி தான்.

ஒப்பீடுகள் இன்றி ஏது வாழ்க்கை? "அவன் எவ்வளவு சம்பளம் வாங்குகிறான் என்று பார்க்காதே. உன் திறமைக்கும் உழைப்புக்கும் ஏற்ற கூலி கிடைக்கிறதா? அதோடு நிறுத்திக் கொள்" இவ்வாறு தான் மின்னஞ்சல் வசதி இல்லாத வாசகர்களுக்காக மின்னஞ்சல்களில் உலவும் நகைச்சுவைத் துணுக்குகளைத் தொகுத்து அதில் வரும் பாத்திரங்களின் பெயரை மாற்றித் தன்னம்பிக்கைத் தொடர் எழுதுகிறவர்கள் சொல்கிறார்கள்.

இந்தத் திறமைக்கு, இவ்வளவு உழைப்புக்கு இது தான் ஊதியம் என்ற வரையறைகள் எங்கும் இல்லை. குள்ளக்காளி பாளையத்தில் இருப்பவனும், கூடுவாஞ்சேரியில் இருப்பவனும் ஒரே மாதிரி முடித் திருத்தம் செய்து கொண்டாலும், ஒரே அளவிலான காசு கொடுப்பது இல்லை. அமெரிக்காவில் 20 டாலருக்கு முடி வெட்டிக் கொல்கிற அதே ஆள் சென்னையில் ஒரு டாலர் அதே செயலுக்காகக் கொடுக்கத் தயங்குகிறார். அமெரிக்காவில் இந்தியனாகவும், இந்தியாவில் அமெரிக்கனாகவும் தன்னைப் பாவித்துக் கொண்டு இரயிலோடு இணைந்து இருபுறத்திலும் பயணிக்கும் காற்று அடுக்குப் போல, பல அடுக்குப் படிமங்களைச் சுமப்பதும் ஒப்பீடுகள் தருகின்ற மயக்கங்களே.

"உனக்கும் கீழே உள்ளவர் கோடி" என்றி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடுவது கூட ஒரு வகையில் தோல்வியின் தாக்குதலுக்கு அஞ்சி ஒப்பீடுகளின் போர்வைக்குள் ஒளிந்து கொள்ளும் செளகர்யம் தான்.

பெரும்பாலான வேளைகளில் எனது ஒப்பீடுகளின் தோல்வி ஏற்றுக் கொள்ளக் கசப்பாக இருந்தாலும், சுய பின்னாய்வு (self retrospect) கருதத் தவறிய சில தகவல்களையும், அஜாக்கிரதையில் நழுவவிட்ட நுண் விவரங்களையும் புலப்படுத்துவதைச் சற்று தாமதமாகவே உணர்கிறேன். இவ்வுணர்வு அதே சறுக்கலை மறுமுறை புரியாமலிருக்க உதவுவதாக எண்ணி ஏமாந்த நிகழ்வுகள் ஏராளம். ஒப்பீடுகள் மட்டுமன்றி வேறு எந்த ஒரு துறையிலும் தவறு செய்வது தவறல்ல, அவை இன்னோர் முறை செய்யப்படாமல் இருக்கும் வரை.

சுய பின்னாய்வு என எடுத்துக் கொண்டால், பக்கத்து வீட்டுக்காரியின் தகாத உறவை அறியும் அதே ஆர்வத்துடன் இயங்க வேண்டும் என்பது மேலாண்மை போதிக்கும் நண்பர் ஒருவரது கூற்று. அதே ஆர்வத்துடன் நான் செய்த இரு ஒப்பீடுகளை மெல்ல அசை போட்டுப் பார்க்கிறேன். இரண்டுமே அவற்றைச் செய்த ஊர், வயது, சமூகச் சூழல், முக்கியத்துவம் ஆகிய தளங்களில் மாறுபடுபவை. அவற்றில் மிகச் சமீபத்தியது முதலிலும், பழையது பின்னருமாகவும் வருகின்றன. கால் நடைகள் அண்மையில் மேய்ந்த புல்லை முதலிலும், முதலில் மேய்ந்த புல்லைப் பின்னரும் அசை போடுவது போல.

வாரன் பஃபட் மற்றும் சார்லஸ் மங்கர் கூட்டணியின் பதிற்றாண்டுகளின் நல்லுறவைப் புரிய, கருணாநிதியையும், அன்பழகனையும் ஒப்பிட்டுப் பார்த்துச் சில காலம் மகிழ்திருந்தேன். மேற்சொன்ன நான்கு பெருமகனாரும் கிட்டத்தட்ட சம காலத்தவர்கள். எழுபதுகளின் இரண்டாம் பாதியிலும் எண்பதுகளின் முதல் பாதியிலும் இவர்களது வயது இருக்கும்.

சிறு வயதில் நெப்ராஸ்கான் மாகாணத்தில் செய்தித்தாள் விநியோகம் செய்து சம்பாதித்த பத்து டாலரை இன்று 44 பில்லியன் டாலருக்கும் மேலாகப் பெருக்கிய மாமனிதன் வாரன். சில தினங்கள் முன்பு வரை உலகின் இரண்டாவது பெருஞ்செல்வராக விளங்கியவர். சில தினங்கள் முன்பு வரை... எனில் இன்று எத்தனையாவது பணக்காரர் என்பதைப் பிறகு சொல்கிறேன்.

வாரன் பஃபட் 1965 ஆம் ஆண்டு அப்போது நசிந்திருந்த Berkshire Hathway நிறுவனத்தைக் கையில் எடுத்த சமயத்தில் அதன் பங்குகளை பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கியிருந்தால், இன்றைய மதிப்பு சுமார் 50 மில்லியன் (5 கோடி). அதே 1965 இல் அதே பத்தாயிரத்தை S&P குறியீட்டில் முதலிட்டிருந்தால் அது வெறும் ஐந்து இலட்சமாகத் தான் வளர்ந்திருக்கும். வெறும் முதலீடு மட்டுமே செய்து அதில் வரும் இலாபத்தில் நிறுவனம் கொழித்து, அதன் மூலம் Berkshire பங்கு விலை ஏறியது. இந்த நிறுவனத்தின் முகமே இவர் தான். கிரிக்கெட் ஆட்டத்திற்கு ஆஸ்திரேலியாவின் பிரான்மென் விளங்கியது போல, பங்கு முதலீட்டில் கருதப்படுபவர் மத்திய மேற்கு அமெரிக்கப் பகுதியை சேர்ந்த வாரன்.

உடன்பிறப்புக்கு முரசொலியில் கலைஞர் எழுதுகின்ற அதே அளவிற்கு அல்லது அதற்கு அதிகமாகவே அறியப்படுபவை சக உரிமையாளர்களுக்கு (பங்குதாரர்) ஆண்டறிக்கையில் வாரன் பல ஆண்டுகளாக எழுதி வரும் கடிதங்கள். நேரு இந்திராவிற்கு எழுதிய கடிதங்களோடு அவைகளை ஒப்பிடும் ஆர்வம் கொண்டவர்கள் உண்டு.


உருவகப் படிமத்தின் கீழ் இவரைக் கருணாநிதியாகக் கொள்ள எனக்குக் கிடைத்த அன்பழகன் தான் மங்கர். பேராசிரியரை போலவே முதன்மரை விட ஓரிரு வயதுகள் மூத்தமரான இவர் நம்பர் 2 ஆக இருப்பதை விரும்பி ஏற்றுக்கொண்டவராகத் தெரிகிறார். எதற்கோ தலையாக இருப்பதை விட இதற்கு வாலாக இருக்கலாமல்லவா? ஊடகங்களில் வந்து வதனம் காட்டுவது இவருக்கு விருப்பமில்லாத ஒன்று என்பார்கள். கம்பெனியில் தனது ஒவ்வொரு முதலீட்டு முடிவுகளுக்குப் பின்னாலும் இயங்குகிற மூளையாக மங்கரைப் புகழ்கிறார் வாரன்.

இவ்விரு இணைகளையும் ஏதொரு எச்சரிக்கையும் இன்றிப் பொருத்திப் பார்த்தது எததனை பெரிய மடத்தனம் தெரியுமா? ஒத்த வயது, நீண்ட காலம் பிரியாமல் முதல் & இரண்டாம் இடத்தில் படிநிலைகளில் மாற்றமின்றித் தொடர்தல் என்ற இரு ஒற்றுமைகளைப் புறந்தள்ளினால் எனது ஒப்பீடு நியாயப்படுத்தப் படவில்லை. "அலை ஓயும் போது தான் அம்மணமாக நீந்துகிறவர்கள் யார் என்பதைச் சொல்ல முடியும்" என்ற வாரனின் புகழ் மிக்க வாசகம் ஒன்றின் படி, இவர்கள் நீந்துகிறவர்கள் என்கிற மேலோட்டமான தளத்தில் மட்டுமே எனது ஒப்பீட்டைச் செய்திருக்கிறேன்.
40 ஆண்டுகளுக்கும் முன்னர் 30,000 டாலருக்கு வாங்கிய அதே பழைய வீட்டில் இன்னும் வசிக்கிறாராம் Oracle of omeha என் அறியப்படும் வாரன். 'Thrifty, a great virtue in itself' என, சிக்கனத்தைப் பற்றிப் போதனை செய்து அதைக் கடை பிடித்தும் காட்டிய எளியவர். தன் ஆளுகையில் கீழ் நிறுவனத்தைப் பன்மடங்கு பெருகச் செய்த சாதனையாளர். ஒழுக்கம், கட்டுப்பாடு, பகுத்தறிதல், பொறுமை ஆகியவற்றைப் போதிப்பதோடு நில்லாமல், கடைபிடித்துக் காட்டியவர்.

வாரன் Barkshire நிறுவனத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட ஏறக்குறைய ஆறாண்டுகளுக்குப் பின்னர் தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பைக் கையகப் படுத்திய கலைஞரின் ஆளுகையின் கீழ் கழகத்தின் கொள்கைகள், நீள அகலமாகக் கட்சி அடைந்திருந்த பரவு முதலியவை சுருங்கி இருக்கின்றன. சிதைந்து உருமாறியும் போயிருக்கிறது. தன் பங்குதாரருக்கும், வாடிக்கையாளருக்கும் வாரன் ஆற்றிய சேவையோடு கலைஞரின் நிர்வாகத்தை வேறு தட்டில் என்றாலும் கூட ஒரே தராசில் இட மனது ஒப்பவில்லை.

இயக்கத்தின் வளர்வு, தேய்வு ஒரு புறம் இருக்கட்டும். அண்ணா இறந்த சமயத்தில் கட்சியில் ஐந்தாவது பெரிய தலைவராக அறியப்பட்டவராகிய கலைஞரின் குடும்பத்தை விட்டு வெளியே இன்றைக்குக் கட்சியில் (பெயரளவில் இல்லாமல்) எத்தனை பேர் முதல் ஐந்து இடங்களைக் கொண்டிருக்கிறார்கள்? தி.மு.க., திரு.மு.க.வின் சொத்தாகி விட்டது. காலமெலாம் பொதுவுடமையும், பகுத்தறிவும் பேசிய இரு மு.க.வும் அவர் வாரிசுகளுக்கே என்றும் ஆகிப் போனது இன்று.

சில நாட்கள் முன்பு வரை உலகின் இரண்டாவது பெருஞ்செல்வராக (முதலாமவர் பில் கேட்ஸ்) வாரன் விளங்கினார் எனச் சொன்னோமல்லவா, ஏன் தெரியுமா? காலமெலாம் முதலாளித்துவத்திற்கு வக்காலத்து வாங்கும் இவர் சுமார் 37 பில்லியன் டாலர் மதிப்புள்ள தன் வளத்தை அறக்கட்டளைக்குக் கொடுத்தளித்திருக்கிறார். ஒரு டாலர் 45 ரூபாய் என்று கொண்டால் இது 37 * 45 * 1,00,00,00,000 = 16,65,00,00,00,000 ரூபாய். ஒரு இலட்சத்து அறுபத்தாராயிரத்து ஐந்தாயிடம் கோடி. பல இலட்சக் கணக்கான பங்குதாரர் மத்தியில் விரவிக் கிடக்கும் இந்தியாவின் மிகப் பெரும் நிறுவனமாக ரிலையன்ஸ் கம்பெனியின் மதிப்பை விட இது அதிகம்.

பிறகெதற்கு இத்தனை வருடங்கள் வாரன் உழைத்தார், சம்பாதித்தார்? "எனக்குப் பணம் தேவை என்பதற்காக பங்கு முதலீட்டில் ஈடுபடவில்லை. பங்குச் சந்தையில் நிலவும் முட்டாள் தனத்தை மூளை கொண்டு கறக்கும் (exploit the madness) விளையாட்டின் பால் கொண்ட காதலே என்னைச் செலுத்தியது" என்று சொல்கிறார்.

அளப்பரிய பொக்கிஷத்தை ஊருக்கு இப்படி வாரிக்கொடுக்கும் தகப்பனை வேறு எவராக இருந்தாலும் தலையணையை முகத்தில் அழுத்திக் கொன்றிருப்பர். அவர் பிள்ளைகள் அப்படியல்ல. "முடிவழிச் செல்வம் பரம்பரையாகக் கைமாறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. நானும் என் மனைவியும் எஞ்சிய காலத்தை இனிதே கழிக்க மீதமிருக்கும் சில பில்லியன்கள் போதும். சம்பாத்தியத்தில் பெரும்பகுதி மறுபடியும் சமுதாயத்திற்குப் போய்ச் சேர வேண்டும். எங்கள் முடிவைக் வாரிசுகள் (வாரனின் குழந்தைகளே இன்று தாத்தா பாட்டிகள் தான்) மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். அவர்கள் விரும்பியிராவிடிலும், எங்கள் முடிவை மாற்றும் சக்தி அவர்களுக்கு இல்லை என்பதே உண்மை" எனவும் கூறுகிறார்.

பத்து டாலரைப் பல பில்லியனாக மாற்றியவர் எங்கே? கொள்கைகளை புறந்தள்ளிக் கழகத்தைத் தேய்த்தவர் எங்கே? தன் சொந்தச் செல்வமெல்லாம் சமுதாயத்திற்குத் தந்தவர் எங்கே? கட்சியையே தன் செலவமாக மாற்றியவர் எங்கே? எனது ஒப்பீடுகளில் ஏற்பட்ட மாபெரும் சறுக்கல் இது என்கிற வேதனையோடு தூங்கிப் போனேன். ஒப்பீடுகளை ஒப்புக் கொண்டவராய் கார்ப்பரேட் கலாச்சாரத் தாக்கத்தால் ஈட்டிய ஆங்கிலப் புலமையில், "I corroborate with a bestow, யாரங்கே?" எனக் கைதட்டி பொற்கிளிக்கு ஆணையிடுகிறார், சொப்பனத்தில்.

ஒப்புமைக் குற்றங்கள் கடந்த காலத்தைப் பின்னோக்கிப் பார்க்கும் போது பரவலாகக் கிடக்கின்றன. சம்பவங்கள், உறவுகள், உணர்வுகள் அனைத்துமே அவற்றைக் கடக்கின்ற மனிதனின் மனதுக்கேற்ப வடிவம் எடுக்கின்றன. சிலரிடம் கெட்ட வார்த்தையாக, சிலரிடம் புகார் மனுக்களாக, சிலரிடம் ஞானமாக, சிலரிடம் கவிதையாக, சிலரிடம் காதலாக, என்னிடம் ஒப்புமையாக...ஆம் சில நேரங்களில் அவ்வொப்புமைகள் விளைவிக்கும் விந்தைகரமான விளைவுகளையும் தாண்டி.

முன்னொரு காலத்தில் செய்த குட்டிக் கொடாப்பு ஒப்புமை, ராட்சத வடிவம் கொண்ட அனல் மின் சக்தி தயாரிக்கும் பாய்லராகக் கல்லூரி வெப்பவியந்திரவியல் சோதனைக் களத்தில் வைக்கப் பட்டிருந்தது. அதென்ன குட்டிக் கொடாப்பு?

அரைக் கோள அல்லது நீள் அரைக்கோள வடிவம் கொண்டிருந்த சின்ன வீடு. மூன்று முதல் ஐந்தடி உயரமும், சுமார் அதே அளவு விட்டமும் படைத்த அசையும் வீடு. பெரும்பாலும் மின்ன மார் - மின்ன மரத்தின் கணுக்களோடு கூடிய விளாஞ்சி தான் மின்ன மார். அது கிடைக்காத போது ஊஞ்சல் மரத்தின் விளாஞ்சியும் பயன்படுத்தப் படுவது உண்டு - வளையும் பருவத்திலேயே தறித்தெடுத்து இறுகும் தன்மை பெறும் முன் கட்டப்படும் மரப்பின்னல். ஆட்டுக் குட்டிகளை வெயில், நரி முதலிய எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க ஏற்படுத்தப் பட்ட சாதனம். பட்டி ஆடுகளுக்கு வீடு என்றால் கொடாப்பு வீட்டின் கூட்டுத் தொட்டில்.

செம்மறி ஆடு ஒரு குட்டி தான் போடும். நேர்மையான அரசியல்வாதி (oxymoron சொல்றாங்கப்பா) போல அதிசயமாக இரண்டு குட்டி போடலாம். வெள்ளாடு அப்படியல்ல; ஒரே ஈற்றில் (பிரசவத்தில்) ஐந்து குட்டிகள் கூட இடலாம். அவளிடம் எல்லாக் குட்டிகளுக்கும் கொடுக்கப் பால் இருக்காது. அப்படியே இருந்தாலும் அதுகள் ஒரே நேரத்தில் ஊட்ட முடியாது. போர்ச் சந்துகளில் அப்பா குடித்த பின் ஒளித்து வைத்திருந்த பிராந்தி பாட்டில்கள் தேடி எடுக்கப்படும். அவற்றில் பால் ஊற்றி முனையில் ஓட்டை போட்ட ரப்பரில் மூடித் தந்தால் வெள்ளாட்டுக் குட்டிகளுக்கு மாடு தான் ஊட்டத் தாய்.

மனிதக் குட்டிகள் போல ஆட்டுக் குட்டிகளுக்கும் விரல் சூப்பும் பழக்கம் கொண்டவை. அவை முட்டி ஊட்டும் வேளையில் சீசாவின் விளிம்புகளில் விரல்களும் சப்பப்படும். குட்டிப் பற்கள் சிறுவனின் விரலில் ஏற்படுத்திய குறுகுறுப்பு ஸ்பரிசம், நான்கு வயதில் அவனுக்குத் தாய்மையைக் கொடுத்தது. புலியோடு விளையாடிய ஐயப்பன் போல ஆட்டுக் குட்டியோடு விளையாடினேன். பாலூட்டாத வேளையிலும் விரல் நீட்டச் சூப்பும் குட்டிகள் மோட்சத்தின் திறவு கோளாக இருந்தன.

பொன்னாம் பூச்சியின் (பொன் வண்டு) இறக்கையை வெட்டி, அதைத் தீப்பெட்டிக்குள் சிறை வைத்து, கிழுவம் இலையை அதன் கழுத்தின் வைத்து அது காட்டுகின்ற ஆவேசத்தில் வெட்டச் செய்து விளையாடிய என் குரூர புத்திக்கு, ஆட்டுக் குட்டியின் கொடாப்பு ஒரு சிறையாகத் தெரிந்தது. பக்கவாட்டில் சாய்த்து, அடிப்புறத்தின் ஒரு பகுதியைப் பிளக்கச் செய்து குட்டிகளை விடுதலை செய்வது பிடித்தமான செயலாகவே இன்னும் எண்ணுகிறேன்.

பொது விடுதலை கருதாமல் ஓரவஞ்சனையும் இருந்தது உண்டு. ஒரு குட்டியை மட்டும் வெளியே எடுக்கவோ, உள்ளே விடவோ தரை மட்டத்தில் இருந்து சுமார் இரண்டடி உயரத்தில் கொடாப்பு துளை கொண்டிருக்கும். மென் பற்கள் கொண்ட குட்டிகள் கடிக்க ஏதுவாக மிருதுவான இலை தலைகள் இதன் வழியாகவே செலுத்தப் பட்டன. அவை எவ்வளவு தான் தாவிக் குதித்து முயன்றாலும் வெளியேற முடியாத படி அத்துளை வடிவமைக்கப் பட்டிருக்கும். தகப்பனார் எ·ப் டி.வி. சேனலுக்கு இட்டு வைத்திருக்கும் கடவுச் சொல்லைக் கண்டறியத் தவிக்கும் நகரச் சிறுவனின் ஆர்வக் கோளாறு தான் ஆட்டுக் குட்டிக்கும். விடுமுறைக்கு வரும் மாமா தயவில் பூனை நடை அழகியை ரசிக்கும் வாய்ப்பு அச்சிறுவனுக்குக் கிட்டுவது போல, குட்டிகளுக்கும் கிட்டும். கடவு வழியாக ஒரு குட்டியை மட்டும் வெளியெடுத்து விடுதலைக் காற்றை உணர வைத்து, அதற்குக் கையூட்டாக கையை ஊட்டக் கொடுத்துக் கடி வாங்கி, பட்டுத் தோல் தடவி மீண்டும் உள்ளே விடுவேன்.

இந்தக் குட்டிக் கடவுகள் பாய்லரில் மேன்-ஹோல்(manhole) என அறியப்பட்டன. கொடாப்பு அரைக் கோள வடிவம் என்றால், உருளையின் உச்சியில் அரைக் கோளத்தைத் தொப்பியாகக் கவிழ்த்திருந்த வடிவம் பாய்லருக்கு. மனிதன் உள்ளே நுழையும் அளவே உடையவை என்பதாலும், ஆட்கள் உள்ளிறங்கிச் செல்ல வழியமைப்பதாலும் அப்பெயர் கொண்டு விளங்குகிறது.

பழுது பார்க்க வேண்டிய பணியாளர் தவிர யாரும் நுழைந்ததாகத் தெரியவில்லை. நீள் வெட்டுத் தோற்றம், குறுக்கு வெட்டுத் தோற்றம் ஆகிய வரை படங்கள் சுவற்றில் தொங்குவது கொண்டே உள்ளென்ன பாகங்கள் உண்டென யூகித்திருக்கிறோம். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நிகழும் முன்னெச்சரிக்கைப் பராமரிப்புப் பணிகளுக்கான நுழைவாயில். கரி வைரமாகும் போது ஜொலிக்கும்; கரி வெப்பமாகும் போதும் ஜொலிக்கும். அனலின் சீற்றத்தில் நீர் ஆவியாக, ஆவி விசையாகி, அது டர்பனைச் சுழற்றி அசுர டைனமோவில் மின் சக்தி வடிவாகிறது. ஆற்றல் அழிவற்றது, அதன் வடிவம் மட்டுமே மாறுகிறது. அறிவியல், பொறியியல்..

இயங்கும் பாய்லரின் தகிக்கும் கரிக்குட்டிகளை விடுதலை செய்து விரல் சப்புவிக்க ஆசைப் பட்டு கையை உள்ளே விட்டிருந்தால், கரிகாலன் போல, கரிகைப் பெருவளத்தான் ஆகியிருப்பேன்.

ஒப்புமைகள் ஒரு எல்லை வரை தான். அதற்கு மேலும் பரிசோதித்துப் பார்ப்பது விரலைச் சுடும், மனதைச் சுடும். 'Burning the finger' என்று பங்குச் சந்தையில் அடிக்கடி சொல்கிறார்கள். அங்கே ஏதாவது குட்டிக் கொடாப்பு இருக்கிறதா என ஆராய வேண்டும்.

Friday, June 30, 2006

அண்ணியின் அணைப்பில்....

-செல்லமுத்து குப்புசாமி 

மாலதியை அண்ணன் திருமணம் செய்து கொண்டபோது கல்லூரி இறுதியாண்டில் இருந்தேன். கிட்டத்தட்ட என் வயது தான் அண்ணிக்கு. அவளைக் கொண்டதற்கு அவன் கொண்டதை விட அதிகமாகச் சந்தோசம் கொண்டது நானாகத்தான் இருக்கும்.

வீதியில் நடக்கும்போது அண்ணியைத் திரும்பிப் பார்க்காத கண்களே இருக்காது. அத்தனை அழகி அவள். நளினம், அப்பழுக்கற்ற சிரிப்பு, மூடியும் மூடாததுமான வாளிப்பு, குறும்புப் பார்வை....அடுக்கிக் கொண்டே போகலாம். எங்கள் குடியிருப்புப் பகுதியில் நிகரற்ற பேரழகியாக விளங்கினாள். எனக்கு மட்டும் வீட்டுக்குள்ளேயே ரசிக்கின்ற வாய்ப்பு!

ஒரு 'ஹலோ'விற்காக பல ஆடவர்கள் துல்லியமாகத் திட்டமிட்டு அவள் நடக்கும் பாதைக்கு எதிர்த் திசையில் வருவர். "நம்ம கிட்ட இல்லாதது அவ கிட்ட என்ன இருக்கு?" பெண்டிரையும் வியக்க வைத்தவள். எனக்கு மட்டும் வீட்டுக்குள்ளேயே ரசிக்கின்ற வாய்ப்பு!

எங்கள் வீட்டுக்கு மாலதி வந்த ஒரே மாதத்தில் நட்பானேன். அப்பா, அம்மா, அண்ணன் எல்லோரும் இருக்கும் போது நெருக்கமாகக் காட்டிக் கொள்ள மாட்டாள். அவர்கள் இல்லையென்றால் ஒரே குஷி தான். அண்ணனுக்கு அடிக்கடி வெளியூர்ப் பயணம் வேலை நிமித்தமாக. கொஞ்ச நாளில் அப்பா, அம்மாவும் ஊருக்குப் போனார்கள். பிறகென்ன?

அண்ணியுடன் ஜாலியாக இருக்க வேண்டிக் கல்லூரியைக் கட் அடித்தேன். அவள் சமைக்கும் போது உதவி என்ற பெயரில் குறும்பு செய்தேன். டி.வி. பார்க்கும் போது பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்வாள். கையை விடவே மாட்டாள். உலகையே நான் மறந்த வேளைகள் அவை.

"லவ்வர்ஸ் மாதிரி பீச்சுக்குப் போலாமா?" ஒரு நாள் கேட்டாள். மறுக்க நானென்ன பைத்தியமா? அவளோடு சேர்ந்து ஊர் சுற்ற எனக்கும் ஆசை என்பது அண்ணிக்கு நன்றாகவே தெரியும். என்னை வண்டி ஓட்ட விடாமல், அவளே ஸ்கூட்டியை எடுத்துக் கொள்வாள். இடுப்பைக் கையால் வளைத்துக் கட்டிக் கொண்டால், "யூ நாட்டி... கையை எடு" அவ்வளவு தான். அதற்கு மேல் எதிர்ப்பு இருக்காது. கிள்ளுவதும் கிச்சுக்கிச்சு மூட்டுவதும் அவளுக்குப் பிடித்தே இருந்தன. குறுகுறுப்பில் திளைப்பேன்.

டூர் முடிந்து அண்ணன் வந்தால் 'எப்படா போவான்' என இருக்கும். அப்படி அவன் வரும் போதெல்லாம் அண்ணி என்னை மறந்து விடுவாள். அல்லது மறந்தது போல நடிப்பாள். சல்லாபக்காரி. அவன் போனதும் சகஜ நிலைக்கு உடனே வந்து விடுவாள்.

இப்போதெல்லாம் குளிக்கும் போது என் அனுமதி இல்லாமலே உள்ளே நுழைந்து முதுகு தேய்க்க வருகிறாள். அவள் முன்னால் உடை மாற்றும் போது சிரித்துக் கொண்டே அங்கீகரிக்கிறாள். என் தேக இளமையை மாலதி ஓரக்கண்ணால் இரசிப்பது தெரிந்தே தான் அப்படிச் செய்கிறேன்.
அண்ணி குளித்து வந்ததும் பிரா, ஜாக்கெட் கொக்கி மாட்டி விட என்னை அழைப்பது இயல்பான ஒர் சங்கதியாகி விட்டது. குளித்த ஈரம் காயாத முதுகுப் பரப்பு....அடடா.. ஸ்லீவ்லெஸ் நைட்டி எப்போவதாவது தான் அணிவாள். மொழு மொழு தோள்களைத் தடவிப் பார்க்க ஆசை அப்போதெல்லாம் தலையெடுக்கும்.

கிளாஸ்மேட் சுந்தர் அவள் கேர்ள்-பிரண்ட் கூட மகாபலிபுரம் போய் எல்லாத்தையும் முடிச்சுட்டு வந்த கதையைச் சொன்னபோது, சிரித்துக் கொண்டே கேட்ட அவள் இமைகள் ஆடவில்லை. "நீ அந்த மாதிரிப் போய் என்ஜாய் பண்ற ஐடியா இல்லியா?". ராட்சசி.. மனதில் என்ன வைத்துக் கொண்டிருக்கிறாளோ தெரியவில்லை.

"தனியாப் படுக்கப் பயமா இருக்கு. என் ரூம்ல வந்து கூடப் படுத்துக்கிறியா?" மறுக்க முடியுமா? அன்று தொட்டு ஒவ்வொரு இரவும் ஒரே கட்டிலைப் பகிர்ந்து வருகிறோம். மாலதியில் உடல் கதகதப்பில் அது தரும் ஸ்பரிசங்களில் கட்டுண்டு கிடந்தேன். அண்ணன் வீட்டில் தங்கும் நாட்கள் மட்டும் விதி விலக்கு.

நடந்த கூத்தையெல்லாம் அவனிடம் சொல்வாளோ? "இருக்காது" நினைத்துக் கொண்டேன். இருந்தால் மட்டும் என்ன? அவனுக்கும் தெரியட்டும். கட்டின மனைவியை விட அவனுக்கு வேலை தான் பெரியதா!

இப்படியாக எனக்கும் மாலதி அண்ணிக்குமான உறவு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்தது. அவளின்றி நானில்லை என்ற நிலைக்கு வந்தேன். இந்தச் சமயத்தில் கல்லூரிப் படிப்பு முடித்து ஒரு தனியார் கம்பெனியில் வேலையும் கிடைத்திருந்தது.

எனக்கு வயதாவதாகச் சொல்லி, வீட்டில் துணை தேட ஆரம்பித்து விட்டனர். என் எதிர்ப்புகள் எடுபடவில்லை. என் ஒப்புதல் இன்றி என் வாழ்வு தீர்மானிக்கப்படுகிறது. அண்ணி எதுவுமே பேசவில்லை.

மணமேடை. பக்கத்து வீட்டுத் தொலைக்காட்சியில் ஓடும் மெகா சீரியல் ஓசை போல புரோகிதர் சொல்லும் மந்திரம் தேய்ந்து போய் என் காதில் விழுகிறது. இயலாமை, வெறுப்பு, குழப்பம், ஆற்றாமை, பாதுகாப்பின்மை ஒட்டு மொத்தமாக ஆட்கொண்டன. பொறுத்தது போதும்.....இவ்வளவு தான். இதற்கு மேல் தாங்காது. பிரேக்-ஈவன் பாய்ண்ட் என ஆங்கிலத்தில் சொல்வார்களே, அந்தப் புள்ளியை எட்டி விட்டேன். கூட்டத்தை மறந்தேன், சமூகத்தை மறந்தேன். மனதெல்லாம் நினைவால் அண்ணியே நிறைந்திருந்தாள்.

என்னையுமறியாமல் எழுந்தோடி மேடைக்குப் பக்கத்தில் நிற்கும் மாலதியைக் கட்டிக் கொள்கிறேன். ஒரே அழுகாச்சி.. நான் அழ, அண்ணி அழ....
"என்னடா... ஒன்னும் இல்ல. நாங்க எல்லாம் இதே ஊர்ல தான இருக்கோம்! நெனச்சா எப்ப வேணாலும் ஒரு மணி நேரத்துல வந்து பாத்துக்கலாம்." இன்னும் ஏதேதோ சொல்லி என்னைச் சமாதானப் படுத்தி மணவறையில் மறுபடியும் அமரச் செய்கிறாள் அண்ணி.

அப்பா, அம்மா, அண்ணன், (சற்று நேரத்தில்) மாமனார், மாமியார் அனைவர் கண்களிலும் ஈரம் துளிர்த்திருந்தது.

"மாங்கல்யம் தந்து நானே" ஐயர் சொல்லக் கழுத்தை நீட்டினேன்.

(இதை விட குஜாலான ஒரு நாவல் இரவல் காதலி - ஆங்கிலத்தில் Borrowed Girlfriend)