Tuesday, May 30, 2006

கனவே கலையாதே!!

-குப்புசாமி செல்லமுத்து

சேரன் இயக்கிய திரைபடம் ஒன்று. நமது 'பட்ரோல் பங்க்'களில் வெளி நாட்டு வெள்ளைக்காரர்கள் வேலை செய்வதாக ஒரு காட்சி இடம் பெறும். வெறும் கனவு மட்டுமே என அதை எண்ணினோம் நாம். அந்தக் கனவு மெய்ப்படத் தொடங்கி விட்டதோ?

நம் கல்வி முறை மாறியிருக்கிறது. ஊதிய ஏற்றத் தாழ்வு காரணமாக மெக்கானிக்கல், சிவில் முதலிய அடிப்படைப் பொறியியல் படிப்புகளை எவரும் படிப்பதில்லை இன்று. சிறப்பான இலக்கியவாதிகளை சினிமா அரக்கன் வளைத்துக் கொண்டது போல, இவர்களை கணிப்பொறி அரக்கன் வளைத்துக் கொள்கிறான்.

நெசவு இயந்திர உற்பத்தியில் முதலிடம் வகிப்பது இலஷ்மி மெசின் வொர்க்ஸ் எனப்படும் LMW. அதிலே 12 வருடங்களாக முக்கியப் பொறுப்பில் இருந்து வரும் ஒரு பொறியாளருடம் சில தினங்களுக்கும் முன் பேச நேர்ந்தது. "பாஸ், ஒரு 2 மாசத்துல SAP படிச்சு சாப்ட்வேர் கன்சல்ட்டிங் சைடு வர முடியுமா?" என்பதே அவரது வினா.

இப்படியே போனால் கிராம வாசிகள் நகரங்களுக்குப் படையெடித்து வரும் அதே அளவு, அடிப்படைத் துறைகளின் வல்லுனர்கள் கணிப்பொறி மற்றும் அழைப்பு மைய வேலைகளை நோக்கிப் படையெடுக்கலாம்.

அடிப்படை உள் கட்டுமானத் தேவைகளான நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், வான்முகங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்கள், தொழிற்சாலைகள் முதலியவற்றை நிர்மாணிக்க வேண்டியதே இன்றைய கட்டாயம்.

L&T (போன்ற எல்லா) நிறுவனம் தரமான சிவில் பொறியாளர்கள் உள் நாட்டில் கிடைக்காமல் திணறி வருகிறது. நாம் ஒத்துக்கொண்டாலும், கொள்ளாவிடிலும் இது போன்ற நிறுவனங்கள் தான் தேசத்தை நிர்மாணிக்கின்றன.

நம்மவர்கள் H1 விசா வாங்கி அமெரிக்காவில் பணியாற்றுவது போல, வெளி நாட்டவர் இங்கு வந்து வேலை செய்கின்றனர். ஆதாரம் தேவையென்றால் L&T தலைவர் நாயக் அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.

குழந்தைகளின் நாயகன் குடியரசுத் தலைவர் அப்துல் காலாம் கண்ட 2020 கனவு நனவாக, நிரம்பச் செய்ய வேண்டி இருக்கிறது. 2010 க்குள் என திட்டக் கமிஷன் அமைத்திருக்கும் இலக்கு கூட இன்றைக்கு வெறும் கனவு போலத் தோன்றுகிறது. It is time to adjust our priorities.

நாளை அப்பிரிக்காவில், மனிதன் கணிப்பொறியும் ஆங்கிலமும் கற்க ஆரம்பித்து விட்டால், IBM, மைக்ரோசா·ப்ட் மட்டுமின்றி TCS, இன்போசிஸ், விப்ரோ கூட அங்கே ஓடிவிட வாய்ப்பு உண்டு. இப்போது கூட கிழக்கு ஐரோப்பா, பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, சீனா ஆகிய தேசங்களில் இவை வேர் விட ஆரம்பித்து விட்டன. பட்டொளி வீசும் கொடிகளாத் தோன்றும் இந்தத் துணிகள், வலுவான கம்பத்தை நாம் அமைக்காவிடில், வெறும் பட்டமாக மாறிவிடும். காற்றின் போக்கில் பறந்து விடும்.
அடப் போங்கப்பா. மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கும். அதற்கேற்ப நம்மை மாற்றிக் கொள்ள வேண்டியது தான்.

M.S. படிக்க நம் மாணவர் அமரிக்கா போவது போல, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இங்கே வந்து படிப்பவர்களைக் காண முடிகிறது. (நான் வசிக்கும் பகுதியில் டீக்கடை, புரோட்டா கடை என எங்கும் இவர்கள் தான்)

அதெல்லாம் இருக்கட்டும். சேரனின் கனவும், காலாமின் கனவும் நனவாகுமா?

என் குழந்தைக்குப் பால் யார் கொடுப்பது?

-குப்புசாமி செல்லமுத்து

"சண்டாளன்.. எங்கொழந்தைக்குப் பால் கூட குடுக்க முடியாமப் பண்ணிட்டானே!" புலம்பிய நாச்சாத்தாளுக்கு ஸ்பென்சர் பிளாசாவில் நாம் பார்த்துப் பெருமூச்சு விடும் ஜீன்ஸ் அம்மையர்கள் வயது தான் இருக்கும்.

ஜாதகம் பார்த்து, பத்தில் ஒன்பது பொருத்தம் கிட்டிய பின்னர் தான் இவளது திருமணம் நிச்சயிக்கப் பட்டது. ஒன்றரை வருட மணவாழ்க்கை. கைக்குழந்தையோடு, கணவனைப் பிரிந்து இப்போது தாய் வீட்டில். காரணம் இவளுக்கு எயிட்ஸ்.

போன வாரம் தான் கோயம்புத்தூர் சென்று பல விதப் சோதனைகளுக்குப் பின், தன் ஆசை மகனுக்கு அதே வியாதி இல்லை என்பதை நிச்சயம் செய்தாள். அதைக் கேட்ட அவள் அப்பனும், ஆத்தாளும், மாமியாரும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. குழந்தைக்குப் பால் கொடுத்தால் அவனுக்கும் வைரஸ் தொற்றிவிடும் என்பதாக டாக்டர் சொன்னதால், தாய்மையைப் புதைத்து பால் சுரப்பதையே மறக்கிறாள். கண்ணீர் சுரப்பது கட்டுப் படுத்த இயலவில்லை என்பது வேறு கதை.

பால்வினைப் பரவல் நோய் கொள்ளும் அளவிற்கு நாச்சி ஒழுக்கம் கெட்டவளில்லை. பின் எப்படி?

மணமான புதிதில் நன்றாகத்தான் இருந்தான் அவளது ஆடவன் சுப்பிரமணி; திடகாத்திரமாக லேசான இளந்தொந்தியுடன். போகப் போக சோர்ந்து போனான். அடிக்கடி காய்ச்சல் வரும்; வந்தால் போகாது. மாத்திரை, ஊசி, ஹார்லிக்ஸ், ஆப்பிள்.. எதுவும் உதவவில்லை.

பொள்ளாச்சி சிவபாலன் டாக்டர் தான் HIV டெஸ்ட் எடுத்துப் பார்க்கும் யோசனை சொன்னார். ரிசல்ட் பாசிட்டிவ். அண்ணா சாவுக்குக் காத்திருந்த கருணாநிதி போல, எம்.ஜி.ஆர். சாவுக்குக் காத்திருந்த ஜெயலலிதா போல, காய்ச்சல் வரும் வரை HIV வைரஸ் காத்திருந்ததாம். அவனுக்குள் 2 வருடமாகவே குடியிருந்திருக்குகிறது எயிட்ஸ்.

சில மாத தாம்பத்திய உறவில் நாச்சிக்கும் இது பரவியிருந்தது. துரதிஸ்டவசமாக, பொள்ளாச்சியில் இருவருக்கும் நோய் அடையாளம் கண்டறியப்பட்ட கணத்தில் அவள் கருவுற்றிருந்தாள். தாயின் கருவிலேயே பிள்ளைக்கும் தொப்புள் கொடி மூலம் நோய் ஊட்டப்படும் என்ற கொடுமையையும் தாண்டி நாச்சியின் தாய்மை உணர்ச்சி உந்தியதால் பிள்ளை பெற்றெடுக்கப் பட்டான்.

புருஷன் சுப்பிரமணி பற்றி இப்போது சொல்லியாக வேண்டும். பத்தாவது பெயிலானதால், 17 வயதில் கேரளாவிற்குக் கந்துக் கடை நடத்தச் சென்றவன். சில சந்தர்ப்பங்களில் வட்டியும், முதலும் திருப்பிச் செலுத்த முடியாத சேச்சிமார் வேறு வகைகளில் கடனைக் கழிக்க இசைந்த போது சந்தோசத்தில் திக்குமுக்காடிப் போனவன். முப்பதைத் தொட்டும் முதல் முத்தம் கூட அனுபவித்திராத முதிர் காளையர் வாழும் உலகில், இருபது வயதை நெருங்கும் முன்னரே மணியனுக்கு ஜாக்பாட். அப்படியே கொஞ்ச ஆண்டுகள் விளையாடிதில் விளைந்த வினை தான் இது.

எட்டாவது வரை மட்டுமே படித்தவள் நாச்சி. ஆனாலும் உலக ஞானம் மிகுதி அவளுக்கு. ஏதொரு பாவமும் புரியாத தனக்கு உயிர்கொள்ளி நோய் தந்த கணவன் மீது கடுஞ்சினம். இருக்காதா பின்னே? இருந்தாலும் சொந்தக்காரனுக எல்லாம் பொழுதினிக்கும் அவனத் தூத்தறது அவளுக்குப் புடிக்கல. அவனும் மனிதன் தான்; சகல மனிதராலும் ஒதுக்கப் பட்டு நாதியில்லாமல் கிடக்கிறான் இன்று. நேஞ்சோரம் மணியனுக்கான கரிசனம் அவ்வப்போது தலைதூக்கும். இருவரும் சேர்ந்து வாழ்ந்த குறுகிய காலத்தில் அன்பான, கிளர்ச்சியான, பொறுப்பான கணவனாகத் தான் இருந்திருக்கிறான். எதையும் மறைத்ததில்லை; மனதளவில் காயப்படுத்தியதும் இல்லை. அதனாலேயே, தன் மருமகனை இடைவிடாது சாடிக்கொண்டிருந்த தாய், தகப்பன் மீது கோபத்தைத் திருப்பவும் செய்வாள்.

"ஜாதகம் பாக்க ஊர் ஊரா அலஞ்சீங்களே? ஒரு தடவையாவது மெடிக்கல் செக்கப் ரிப்போர்ட் கேட்டிருப்பீங்களா?" வாயில்லாப் பூச்சியென நினத்த மகள் இப்படிக் கேட்டதில் சோகம் கலந்த அதிர்ச்சி அப்பனுக்கும் ஆத்தாளூக்கும்.

"நம்ம சாதி சனத்துல யார் கண்ணு அதெல்லாம் பண்றாங்க? ஏஞ்சாமி, நாங்க என்ன உன்னைய வேணும்னா இப்படிக் கெணத்துல புடிச்சு தள்ளுவோம்?" நிஜம் தான்.

பால்வினை நோய்கள் சரியான நேரத்தில் அடையாளம் காணப்படுவதுடன், இனவிருத்தி செய்யும் தகுதியையும் உறுதிப் படுத்திக் கொள்ளக் கிடைத்த வாய்ப்பாக அல்லவா இது மதிக்கப்பட வேண்டும்? தொழில் நுட்பம், கல்வி எல்லாவற்றிலும் முன்னேறிய நகரத்து இளைஞன் ஒருவன் மருத்துவப் பரிசோதனைச் சான்றிதழை எடுத்துப் போய் பெண்ணின் தகப்பனிடன் நீட்டுவானால், இந்தப் பிறவியில் அவன் பிரமச்சாரியாகவே இருக்க நேரிடும். கிராமத்தில் கேட்க வேண்டுமா?

தோட்டத்து வீட்டில் ஹேங்கரில் மாட்டிய சட்டை கட்டிலில் படுக்கப் போட்டது போலக் கிடந்தான் மணியன். ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு தானே முன் வந்து அவனைச் சந்திக்கிறாள் நாச்சி. தான் (தாங்கள்) உயிர்வாழப் போகும் குறுகிய காலத்தில் ஏதாவது சமுதாயத்திற்குச் செய்தாக வேண்டுமெனத் தீர்மானிக்கிறாள்.

இரண்டாம் தினம் தொகுதி எம்.எல்.ஏ, நான்காம் நாள் மாவட்ட ஆட்சியாளர்.. நீள்கிறது அவள் சந்திப்பு. ஒவ்வொருவரிடத்தும் தரப் படுகிறது மனு. அதன் சாரம் கீழே.
  • ஜாதகப் பொருத்தம் பார்க்கப் படுகிறதோ இல்லையோ, உடல் பரிசோதனைச் சான்றிதழின் அடிப்படையில் பெற்றோர் முடிவெடுக்கத் தேவையான விழிப்புணர்வை ஊடகங்கள் உண்டாக்க வேண்டும்.
  • திருமணப் பதிவு மையங்கள் அத்தகைய சான்றிதழ் இல்லாத மணகக்களின் திருமணத்தை அங்கீகரித்துப் பதிவு செய்யக் கூடாது.
  • அவ்வாறு செய்யாதவர்களின் திருமணத்தை நடத்த இடமளிக்கும் கல்யாணச் சத்திரங்கள் மீது நிபந்தனையற்ற அபராதம் விதிக்க வேண்டும்.

இவை போக வேறு சில வேண்டுதல்களும் அதில் அங்கம் பெற்றன.

எயிட்ஸ் கட்டுப் பாட்டு வாரியம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மனித உரிமைக் கழகம், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் என, சாகும் வரை தான் சந்திக்கப் போகும் நபர்கள்/அமைப்புகளின் பட்டியல் நாச்சாத்தாளிம் இருக்கிறது.

உதிரும் போது மாமணம் வீசும் மலர் இவள். வழிபாட்டுப் பொருள்; பூஜிக்கப் பட வேண்டியவள். மலைக்கப் செய்கிறாள்.

அந்த அளவுக்கு இல்லாட்டியும், நாம எதாவது செய்ய முடியுமானு யோசிக்கலாம். அட் லீஸ்ட் நமக்கு நாமே எயிட்ஸ் பரிசோதனை செஞ்சுக்கலாம். இதுல வெக்கப் பட ஒன்னும் இல்ல. ஆஸ்பத்திரில ஊசி போடும் போது, சலூன்ல சவரம் பண்ணும் போது எப்படி வேணாலும் HIV வரலாம். எந்தப் புத்துல எந்தப் பாம்போ?

Tuesday, May 16, 2006

கரையோடும் மணலோடும்!

குப்புசாமி செல்லமுத்து

தி.மு.க. அரசின் பதவிப் பிரமாண நிகழ்ச்சி பற்றிய ஒரு கட்டுரையை 'பங்கு வணிகம்' வலைப் பதிவில் வெளியிட்டது மிகச் சரியானதாகத் தோன்றவில்லை எனக்கு. அதையே அறிவுரையாக வேறு சிலரும் கொடுத்தனர். பொதுவான விஷயங்களை எழுத ஏதாவது இடம் இருந்தால் நன்றாயிருக்கும் எனத் தோன்றியது. அதன் விளைவாய் எழுந்தது தான் இது.

பெரிய 'ரைட்டரா' நீ? எனக் கேட்காதீர்கள். நமக்கு அரிக்கும் போது நாமே சொரிந்து கொள்வது போலத் தான் இது. மற்றபடி எந்த அளவுக்கு இதில் எழுதப் போகிறேன் என எனக்கே தெரியாது. அநேகமாக இதுவே கூட கடைசிப் பதிவாக இருக்கலாம்.

சரி..அது என்ன கரையோரம் என்ற வலைப் பக்கப் பெயர்? அதன் அடியொற்றி எழும் 'நதியோடும் கரையோடும்' கிறுக்கல் இங்கே. 'கரையோடும் மணலோடும்' சென்னையின் கடல் கரையோடும், அதன் மணலோடும், தள்ளிக் கொண்டு வந்த ·பிகரோடும் சம்பந்தப் பட்டதல்ல.

நதி என ஒன்று இருந்தால் தானே கரை என ஒன்று இருக்கும்; கோடை கால நிலவின் இரவில் நீரற்ற நதியில் கரை இருக்க வாய்ப்பில்லை. நதியே தரையாய், மணல் தாரையாய் ஆனதன் விளைவு தான் நதியின் வெளியெங்கும் பரந்திருக்கும் மணலும் கரையானது. அந்தக் கரையான மணலின் மடியில் படுத்துக் கொண்டு நட்சத்திரங்களை எண்ணிய கால் சட்டைக் காலத்து நினைவுகள் தந்தது தான் இந்த பிதற்றல்.

இன்றைய கிராமச் சிறுவர்கள் பாவப்பட்டவர்கள் தாம். தேங்காய் ஓட்டில் ஈர மணல் கொண்டு இட்லி சுட்டு விளையாட இவர்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை. இப்போதெல்லம் மணல் லாரிகள் மூலம் அள்ளப் பட்டு, நதியெங்கும் அதன் வெளியெங்கும் பாறையாய்ப் போனது வேதனை. ஆற்றில் தண்ணீர் ஓடும் போது மணல் அள்ள முடியாதல்லவா? அதன் காரணத்தினால் தான் இருக்கும் தண்ணீரை எல்லாம் இரண்டே மாதத்தில் திறந்து விட்டு, அணையைக் காலி செய்கிறார்கள் பொதுப் பணித்துறை அதிகாரிகள்; அவர்கட்கு சாவி கொடுப்பது ஆட்சியாளர்கள் ஆயிற்றே? மிச்சம் இருக்கும் 10 மாதமும் தன் அடி வயிற்றில் மணலால் தரித்த அவளின் கர்ப்பம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைக்கப்படுகிறது. கலைத்தான் எதிர்ப்புகள்; கரைக்கும் போது இல்லை. இப்படிக் கரைப்பதனால் தான் என் சிறுவயது 'கரையோடும் மணலோடும்' கரைந்தோடும் மணலாக மாறிவிட்டது. சீன் கட்.. அடுத்த சீன்..

2003 வசந்த காலம். 'ரைன்' நதிக்கரை ஓரம் ஜெர்மனி தேசத்தில் அமைந்த கொலோன் (koln- with : on top of O) நகரம். 11 நூற்றாண்டுகள் கட்டப்பட்ட மிகப் பெரிய தேவாலயம் ஒன்றைப் பார்க்க ஜானும், நானும் போயிருந்தோம்; நெதர்லாந்து தேசத்தில் இருந்து ரயிலேறி.

பெருக்கெடுத்து ஓடும் அந்நதி பல தேசங்களிலும் பாய்கிறதாம். நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை எல்லாம் இல்லை. கர்நாடகா கவனிக்கட்டும்.

ஒரு துண்டுச் செய்தி: கொலோன் பல்கலைக் கழகத்தில் பல வருடங்களாக இயங்கி வந்த தமிழ்த் துறை, சொல்லித் தர ஆசிரியர் இல்லாததால் மூடப்பட்டு விட்டதாம். செம்மொழி கற்க ஐரோப்பியர் முன் வந்தும், நாம் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க முன் வரவில்லை. அது சரி.. நாம் தமிழ் படிக்கவே வெட்கப் படுகிறோம். தமிழினத் தலைவர், செம்மொழிக் காவலர் கவனிப்பாரா? தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் ஒலிக்கச் செய்ய வேண்டாம்; ஒழியச் செய்யாதிருக்க ஆவன செய்ய வேண்டாமா? ஓ.கே. நோ பாலிடிக்ஸ்.

நமக்குத் தான் வேடிக்கை பார்ப்பது கண் வந்த கலை ஆயிற்றே! 'ரைன்' கரையிலும் அதைத் தான் செய்தோம். தங்கள் காதலிகளை முதுகிலும், பிடறிலிலும் மற்றும் வேறு எங்கு எல்லாமோ தேய்த்துச் சூடெற்றி எங்களையும் சூடேற்றிக் கொண்டிருந்தனர் சிலர்.

"குப்ஸ், உங்க ஆத்துல இப்படி எல்லாம் செழிப்பா இருக்குமா? ஆறுன்னா இதான் ஆறு. கரைன்னா இப்படித்தான் இருக்கணும்" இது ஜான். இந்த சீனும் கட்....

எங்கள் ஊரில் ஒருவன் கவிதை (??) எழுதினான்.

"முகம் கழுவிச் சென்றேன்.
குளிக்கப் போகும் போது கூட!
அவள்
ஆற்றுக்கு வருவாள் என்பதற்காக!"

மீண்டும் சீன் கட்... தடங்கலுக்கு வருந்துகிறோம்!! நிகழ்ச்சி முற்றியது.