Tuesday, May 16, 2006

கரையோடும் மணலோடும்!

குப்புசாமி செல்லமுத்து

தி.மு.க. அரசின் பதவிப் பிரமாண நிகழ்ச்சி பற்றிய ஒரு கட்டுரையை 'பங்கு வணிகம்' வலைப் பதிவில் வெளியிட்டது மிகச் சரியானதாகத் தோன்றவில்லை எனக்கு. அதையே அறிவுரையாக வேறு சிலரும் கொடுத்தனர். பொதுவான விஷயங்களை எழுத ஏதாவது இடம் இருந்தால் நன்றாயிருக்கும் எனத் தோன்றியது. அதன் விளைவாய் எழுந்தது தான் இது.

பெரிய 'ரைட்டரா' நீ? எனக் கேட்காதீர்கள். நமக்கு அரிக்கும் போது நாமே சொரிந்து கொள்வது போலத் தான் இது. மற்றபடி எந்த அளவுக்கு இதில் எழுதப் போகிறேன் என எனக்கே தெரியாது. அநேகமாக இதுவே கூட கடைசிப் பதிவாக இருக்கலாம்.

சரி..அது என்ன கரையோரம் என்ற வலைப் பக்கப் பெயர்? அதன் அடியொற்றி எழும் 'நதியோடும் கரையோடும்' கிறுக்கல் இங்கே. 'கரையோடும் மணலோடும்' சென்னையின் கடல் கரையோடும், அதன் மணலோடும், தள்ளிக் கொண்டு வந்த ·பிகரோடும் சம்பந்தப் பட்டதல்ல.

நதி என ஒன்று இருந்தால் தானே கரை என ஒன்று இருக்கும்; கோடை கால நிலவின் இரவில் நீரற்ற நதியில் கரை இருக்க வாய்ப்பில்லை. நதியே தரையாய், மணல் தாரையாய் ஆனதன் விளைவு தான் நதியின் வெளியெங்கும் பரந்திருக்கும் மணலும் கரையானது. அந்தக் கரையான மணலின் மடியில் படுத்துக் கொண்டு நட்சத்திரங்களை எண்ணிய கால் சட்டைக் காலத்து நினைவுகள் தந்தது தான் இந்த பிதற்றல்.

இன்றைய கிராமச் சிறுவர்கள் பாவப்பட்டவர்கள் தாம். தேங்காய் ஓட்டில் ஈர மணல் கொண்டு இட்லி சுட்டு விளையாட இவர்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை. இப்போதெல்லம் மணல் லாரிகள் மூலம் அள்ளப் பட்டு, நதியெங்கும் அதன் வெளியெங்கும் பாறையாய்ப் போனது வேதனை. ஆற்றில் தண்ணீர் ஓடும் போது மணல் அள்ள முடியாதல்லவா? அதன் காரணத்தினால் தான் இருக்கும் தண்ணீரை எல்லாம் இரண்டே மாதத்தில் திறந்து விட்டு, அணையைக் காலி செய்கிறார்கள் பொதுப் பணித்துறை அதிகாரிகள்; அவர்கட்கு சாவி கொடுப்பது ஆட்சியாளர்கள் ஆயிற்றே? மிச்சம் இருக்கும் 10 மாதமும் தன் அடி வயிற்றில் மணலால் தரித்த அவளின் கர்ப்பம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைக்கப்படுகிறது. கலைத்தான் எதிர்ப்புகள்; கரைக்கும் போது இல்லை. இப்படிக் கரைப்பதனால் தான் என் சிறுவயது 'கரையோடும் மணலோடும்' கரைந்தோடும் மணலாக மாறிவிட்டது. சீன் கட்.. அடுத்த சீன்..

2003 வசந்த காலம். 'ரைன்' நதிக்கரை ஓரம் ஜெர்மனி தேசத்தில் அமைந்த கொலோன் (koln- with : on top of O) நகரம். 11 நூற்றாண்டுகள் கட்டப்பட்ட மிகப் பெரிய தேவாலயம் ஒன்றைப் பார்க்க ஜானும், நானும் போயிருந்தோம்; நெதர்லாந்து தேசத்தில் இருந்து ரயிலேறி.

பெருக்கெடுத்து ஓடும் அந்நதி பல தேசங்களிலும் பாய்கிறதாம். நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை எல்லாம் இல்லை. கர்நாடகா கவனிக்கட்டும்.

ஒரு துண்டுச் செய்தி: கொலோன் பல்கலைக் கழகத்தில் பல வருடங்களாக இயங்கி வந்த தமிழ்த் துறை, சொல்லித் தர ஆசிரியர் இல்லாததால் மூடப்பட்டு விட்டதாம். செம்மொழி கற்க ஐரோப்பியர் முன் வந்தும், நாம் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க முன் வரவில்லை. அது சரி.. நாம் தமிழ் படிக்கவே வெட்கப் படுகிறோம். தமிழினத் தலைவர், செம்மொழிக் காவலர் கவனிப்பாரா? தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் ஒலிக்கச் செய்ய வேண்டாம்; ஒழியச் செய்யாதிருக்க ஆவன செய்ய வேண்டாமா? ஓ.கே. நோ பாலிடிக்ஸ்.

நமக்குத் தான் வேடிக்கை பார்ப்பது கண் வந்த கலை ஆயிற்றே! 'ரைன்' கரையிலும் அதைத் தான் செய்தோம். தங்கள் காதலிகளை முதுகிலும், பிடறிலிலும் மற்றும் வேறு எங்கு எல்லாமோ தேய்த்துச் சூடெற்றி எங்களையும் சூடேற்றிக் கொண்டிருந்தனர் சிலர்.

"குப்ஸ், உங்க ஆத்துல இப்படி எல்லாம் செழிப்பா இருக்குமா? ஆறுன்னா இதான் ஆறு. கரைன்னா இப்படித்தான் இருக்கணும்" இது ஜான். இந்த சீனும் கட்....

எங்கள் ஊரில் ஒருவன் கவிதை (??) எழுதினான்.

"முகம் கழுவிச் சென்றேன்.
குளிக்கப் போகும் போது கூட!
அவள்
ஆற்றுக்கு வருவாள் என்பதற்காக!"

மீண்டும் சீன் கட்... தடங்கலுக்கு வருந்துகிறோம்!! நிகழ்ச்சி முற்றியது.

12 comments:

Vaa.Manikandan said...

bit bit a irunthaalum...padikka interesting a irukku....

kalakureengga pongga!

Maravan said...

Thangalin tamil pattrukku muthalil nandri. ungalin eluthu migavam rasikum vithagama irrukirathu.. thangalin pani intha oru pathipodu nindru vidamal melum melum elutha vendum endru kettu kondu valthukiren...

பொன்ஸ்~~Poorna said...

சூப்பரா எழுதறீங்க.. உங்களோட மெல்லிய காமெடி கலந்த இந்த நடையை இவ்வளவு நாள் பார்க்காமல் விட்டதற்காக வருத்தப் படுகிறேன்.

//அநேகமாக இதுவே கூட கடைசிப் பதிவாக இருக்கலாம். //
தொடருங்க.. விட்றாதீங்க!!

ரெண்டு பதிவு போட்டு தமிழ்மணத்துல சேருங்க.. அப்புறம் பாருங்க!! :)

Kuppusamy Chellamuthu said...

மணிகண்டனும், மறவனும் மறுமொழியிட்டு பல நாட்கள் இருக்கும். அவர்களுக்கு நான் பதிலிடக்கூட இல்லை. வருந்துகிறேன்.

பொன்ஸ்.. உங்களது வாசகங்கள் மிகுந்த நம்பிக்கை அளிக்கின்றன எனக்கு. நிச்சயம் கடன் பட்டிருப்பேன்.

-குப்புசாமி செல்லமுத்து

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

//நிச்சயம் கடன் பட்டிருப்பேன்...//

ஆகா.. பொன்ஸ் வட்டிக்கு வேற வுடுறாரா...?
பாத்தீங்களா.. பல நாள் பழகின என்கிட்டயே சொல்லையே...
நீங்க எப்படி கண்டுபிடிச்சீங்க...

:-)

வி.கண்ணன் said...

பாலபாரதி, நீங்க பழனிபாரதி தம்பியா? அப்படியே அவரு மாதிரியே இருக்குறீங்க?!!!

Kuppusamy Chellamuthu said...

ஆமாங்க பாரதி. அந்த பிசினஸை விரிவுபடுத்த்ததான் இப்போ அமெரிக்கா போய் இருக்காங்க அம்மணி..

வெற்றி said...

குப்புசாமி செல்லமுத்து,
ஆகா! மிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள். நகைச்சுவையாக சொல்ல வந்த கருத்தை அழகாகச் சொல்லியுள்ளீர்கள். மிகவும் இரசித்து வாசித்தேன்.

நன்றிகள்.

அன்புடன்
வெற்றி

பொன்ஸ் said...

//பல நாள் பழகின என்கிட்டயே சொல்லையே...//
பாலா, என்னய்யா.. அவரு பங்குச் சந்தை புலி!. கடன் கொடுத்தா ஏதாச்சும் ஷேர்ல போட்டு, அதிகமாக்கிக் கொடுப்பாருன்னு தானே கொடுத்திருக்கோம் :)

//அந்த பிசினஸை விரிவுபடுத்த்ததான் இப்போ அமெரிக்கா போய் இருக்காங்க அம்மணி.. //
குப்புசாமி, என்னங்க, இன்னும் அதிகமா மாட்டிவிடுறீங்க!! :)

Kuppusamy Chellamuthu said...

நன்றி வெற்றி கந்தசுவாமி. கவிஞனுமில்லாமல், இரசிகனுமில்லாமல் :-) இருக்கும் தாங்களே இரசித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழைத் தழைக்கச் செய்து கொண்டிருக்கும் உங்களோடு ஒப்பிடும் போது இங்கே நாங்கள் செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.

Kuppusamy Chellamuthu said...

//கடன் கொடுத்தா ஏதாச்சும் ஷேர்ல போட்டு, அதிகமாக்கிக் கொடுப்பாருன்னு தானே கொடுத்திருக்கோம் :)//

வாங்க பொன்ஸ் வாங்க.. நீங்க ஒருத்தர் தானே இப்படிக் கிளம்பி இருக்கீங்க??

விஜய் said...

//அநேகமாக இதுவே கூட கடைசிப் பதிவாக இருக்கலாம்.//

ரசிக்க ஆளிருந்தும் எழுத மனம் வரலைன்னா... என்ன அர்த்தம்? ஐயா, தொடருங்க உங்க பணிய.

(இப்படி உசுப்பேத்தி விட்டே கொல்ராங்கய்யான்னு நெனக்க வேணாம்.)