Tuesday, May 30, 2006

என் குழந்தைக்குப் பால் யார் கொடுப்பது?

-குப்புசாமி செல்லமுத்து

"சண்டாளன்.. எங்கொழந்தைக்குப் பால் கூட குடுக்க முடியாமப் பண்ணிட்டானே!" புலம்பிய நாச்சாத்தாளுக்கு ஸ்பென்சர் பிளாசாவில் நாம் பார்த்துப் பெருமூச்சு விடும் ஜீன்ஸ் அம்மையர்கள் வயது தான் இருக்கும்.

ஜாதகம் பார்த்து, பத்தில் ஒன்பது பொருத்தம் கிட்டிய பின்னர் தான் இவளது திருமணம் நிச்சயிக்கப் பட்டது. ஒன்றரை வருட மணவாழ்க்கை. கைக்குழந்தையோடு, கணவனைப் பிரிந்து இப்போது தாய் வீட்டில். காரணம் இவளுக்கு எயிட்ஸ்.

போன வாரம் தான் கோயம்புத்தூர் சென்று பல விதப் சோதனைகளுக்குப் பின், தன் ஆசை மகனுக்கு அதே வியாதி இல்லை என்பதை நிச்சயம் செய்தாள். அதைக் கேட்ட அவள் அப்பனும், ஆத்தாளும், மாமியாரும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. குழந்தைக்குப் பால் கொடுத்தால் அவனுக்கும் வைரஸ் தொற்றிவிடும் என்பதாக டாக்டர் சொன்னதால், தாய்மையைப் புதைத்து பால் சுரப்பதையே மறக்கிறாள். கண்ணீர் சுரப்பது கட்டுப் படுத்த இயலவில்லை என்பது வேறு கதை.

பால்வினைப் பரவல் நோய் கொள்ளும் அளவிற்கு நாச்சி ஒழுக்கம் கெட்டவளில்லை. பின் எப்படி?

மணமான புதிதில் நன்றாகத்தான் இருந்தான் அவளது ஆடவன் சுப்பிரமணி; திடகாத்திரமாக லேசான இளந்தொந்தியுடன். போகப் போக சோர்ந்து போனான். அடிக்கடி காய்ச்சல் வரும்; வந்தால் போகாது. மாத்திரை, ஊசி, ஹார்லிக்ஸ், ஆப்பிள்.. எதுவும் உதவவில்லை.

பொள்ளாச்சி சிவபாலன் டாக்டர் தான் HIV டெஸ்ட் எடுத்துப் பார்க்கும் யோசனை சொன்னார். ரிசல்ட் பாசிட்டிவ். அண்ணா சாவுக்குக் காத்திருந்த கருணாநிதி போல, எம்.ஜி.ஆர். சாவுக்குக் காத்திருந்த ஜெயலலிதா போல, காய்ச்சல் வரும் வரை HIV வைரஸ் காத்திருந்ததாம். அவனுக்குள் 2 வருடமாகவே குடியிருந்திருக்குகிறது எயிட்ஸ்.

சில மாத தாம்பத்திய உறவில் நாச்சிக்கும் இது பரவியிருந்தது. துரதிஸ்டவசமாக, பொள்ளாச்சியில் இருவருக்கும் நோய் அடையாளம் கண்டறியப்பட்ட கணத்தில் அவள் கருவுற்றிருந்தாள். தாயின் கருவிலேயே பிள்ளைக்கும் தொப்புள் கொடி மூலம் நோய் ஊட்டப்படும் என்ற கொடுமையையும் தாண்டி நாச்சியின் தாய்மை உணர்ச்சி உந்தியதால் பிள்ளை பெற்றெடுக்கப் பட்டான்.

புருஷன் சுப்பிரமணி பற்றி இப்போது சொல்லியாக வேண்டும். பத்தாவது பெயிலானதால், 17 வயதில் கேரளாவிற்குக் கந்துக் கடை நடத்தச் சென்றவன். சில சந்தர்ப்பங்களில் வட்டியும், முதலும் திருப்பிச் செலுத்த முடியாத சேச்சிமார் வேறு வகைகளில் கடனைக் கழிக்க இசைந்த போது சந்தோசத்தில் திக்குமுக்காடிப் போனவன். முப்பதைத் தொட்டும் முதல் முத்தம் கூட அனுபவித்திராத முதிர் காளையர் வாழும் உலகில், இருபது வயதை நெருங்கும் முன்னரே மணியனுக்கு ஜாக்பாட். அப்படியே கொஞ்ச ஆண்டுகள் விளையாடிதில் விளைந்த வினை தான் இது.

எட்டாவது வரை மட்டுமே படித்தவள் நாச்சி. ஆனாலும் உலக ஞானம் மிகுதி அவளுக்கு. ஏதொரு பாவமும் புரியாத தனக்கு உயிர்கொள்ளி நோய் தந்த கணவன் மீது கடுஞ்சினம். இருக்காதா பின்னே? இருந்தாலும் சொந்தக்காரனுக எல்லாம் பொழுதினிக்கும் அவனத் தூத்தறது அவளுக்குப் புடிக்கல. அவனும் மனிதன் தான்; சகல மனிதராலும் ஒதுக்கப் பட்டு நாதியில்லாமல் கிடக்கிறான் இன்று. நேஞ்சோரம் மணியனுக்கான கரிசனம் அவ்வப்போது தலைதூக்கும். இருவரும் சேர்ந்து வாழ்ந்த குறுகிய காலத்தில் அன்பான, கிளர்ச்சியான, பொறுப்பான கணவனாகத் தான் இருந்திருக்கிறான். எதையும் மறைத்ததில்லை; மனதளவில் காயப்படுத்தியதும் இல்லை. அதனாலேயே, தன் மருமகனை இடைவிடாது சாடிக்கொண்டிருந்த தாய், தகப்பன் மீது கோபத்தைத் திருப்பவும் செய்வாள்.

"ஜாதகம் பாக்க ஊர் ஊரா அலஞ்சீங்களே? ஒரு தடவையாவது மெடிக்கல் செக்கப் ரிப்போர்ட் கேட்டிருப்பீங்களா?" வாயில்லாப் பூச்சியென நினத்த மகள் இப்படிக் கேட்டதில் சோகம் கலந்த அதிர்ச்சி அப்பனுக்கும் ஆத்தாளூக்கும்.

"நம்ம சாதி சனத்துல யார் கண்ணு அதெல்லாம் பண்றாங்க? ஏஞ்சாமி, நாங்க என்ன உன்னைய வேணும்னா இப்படிக் கெணத்துல புடிச்சு தள்ளுவோம்?" நிஜம் தான்.

பால்வினை நோய்கள் சரியான நேரத்தில் அடையாளம் காணப்படுவதுடன், இனவிருத்தி செய்யும் தகுதியையும் உறுதிப் படுத்திக் கொள்ளக் கிடைத்த வாய்ப்பாக அல்லவா இது மதிக்கப்பட வேண்டும்? தொழில் நுட்பம், கல்வி எல்லாவற்றிலும் முன்னேறிய நகரத்து இளைஞன் ஒருவன் மருத்துவப் பரிசோதனைச் சான்றிதழை எடுத்துப் போய் பெண்ணின் தகப்பனிடன் நீட்டுவானால், இந்தப் பிறவியில் அவன் பிரமச்சாரியாகவே இருக்க நேரிடும். கிராமத்தில் கேட்க வேண்டுமா?

தோட்டத்து வீட்டில் ஹேங்கரில் மாட்டிய சட்டை கட்டிலில் படுக்கப் போட்டது போலக் கிடந்தான் மணியன். ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு தானே முன் வந்து அவனைச் சந்திக்கிறாள் நாச்சி. தான் (தாங்கள்) உயிர்வாழப் போகும் குறுகிய காலத்தில் ஏதாவது சமுதாயத்திற்குச் செய்தாக வேண்டுமெனத் தீர்மானிக்கிறாள்.

இரண்டாம் தினம் தொகுதி எம்.எல்.ஏ, நான்காம் நாள் மாவட்ட ஆட்சியாளர்.. நீள்கிறது அவள் சந்திப்பு. ஒவ்வொருவரிடத்தும் தரப் படுகிறது மனு. அதன் சாரம் கீழே.
  • ஜாதகப் பொருத்தம் பார்க்கப் படுகிறதோ இல்லையோ, உடல் பரிசோதனைச் சான்றிதழின் அடிப்படையில் பெற்றோர் முடிவெடுக்கத் தேவையான விழிப்புணர்வை ஊடகங்கள் உண்டாக்க வேண்டும்.
  • திருமணப் பதிவு மையங்கள் அத்தகைய சான்றிதழ் இல்லாத மணகக்களின் திருமணத்தை அங்கீகரித்துப் பதிவு செய்யக் கூடாது.
  • அவ்வாறு செய்யாதவர்களின் திருமணத்தை நடத்த இடமளிக்கும் கல்யாணச் சத்திரங்கள் மீது நிபந்தனையற்ற அபராதம் விதிக்க வேண்டும்.

இவை போக வேறு சில வேண்டுதல்களும் அதில் அங்கம் பெற்றன.

எயிட்ஸ் கட்டுப் பாட்டு வாரியம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மனித உரிமைக் கழகம், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் என, சாகும் வரை தான் சந்திக்கப் போகும் நபர்கள்/அமைப்புகளின் பட்டியல் நாச்சாத்தாளிம் இருக்கிறது.

உதிரும் போது மாமணம் வீசும் மலர் இவள். வழிபாட்டுப் பொருள்; பூஜிக்கப் பட வேண்டியவள். மலைக்கப் செய்கிறாள்.

அந்த அளவுக்கு இல்லாட்டியும், நாம எதாவது செய்ய முடியுமானு யோசிக்கலாம். அட் லீஸ்ட் நமக்கு நாமே எயிட்ஸ் பரிசோதனை செஞ்சுக்கலாம். இதுல வெக்கப் பட ஒன்னும் இல்ல. ஆஸ்பத்திரில ஊசி போடும் போது, சலூன்ல சவரம் பண்ணும் போது எப்படி வேணாலும் HIV வரலாம். எந்தப் புத்துல எந்தப் பாம்போ?

18 comments:

Anonymous said...

Neengal solvadhu mutrillum unmai matrum kavanikka pada vendiya eru vishiyam. Irundalum ethanaithan seithikal, katuraikal, vimarsanangal vandalum intha vishiyathil makkal mana mattram adaivadu mikak kadinam.Tthan makalukku thirumanam akatha enkindra kanavukallil valthu varum petror evvaru manamakanin medical ceriticatei ketparkal?? apadiyee ketalum enna nadakkum?? vilaivukal vibareethame..

samuthayathirkku thevaiyana karuthu...nandrikal pala!!

Anonymous said...

Ramamurthy here.
I really liked this. intha test saipaduvathu oru sattam aakapadavidil, yaarum ithu saithukolla munvarmattarkal. Ippothuthan thirumanam pannikolvathai register kandipaga saiya vendum enbuthu sattam aakkapatirukuthu.. aana nadaimuriyil ennum vandapadillai. entha sattaithai kondu vandathathruku kaaranam, sila peru rendu, moonu kalyanam chenchukrathunalathan. aana aids kurithu varum sattathai udanadiya kondu varavendum. ethu 100 poto sattathukum 5000 tesma satthukkum melaga irrukuvendum. apdi vandthal than aids control panna mudiyum.. entha mathiri kodari(ambalai ena solla thonavillai) pasangalukku saata adi mathiri irukum..

Vaa.Manikandan said...

Really good one!

பொன்ஸ்~~Poorna said...

நல்லா எழுதி இருக்கீங்க. எவ்வளவு தூரம் இது நடக்கும்னு தெரியலை.. இன்னும் நீங்க சொல்வது மாதிரியான கிராமங்களில் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு எத்தனை தீவிரமாக உள்ளது என்பது கேள்விக்குரியது.
ஓரளவிற்கு, பாடதிட்டங்களில் இருக்கிறது.. எட்டாவது(நாச்சி படித்தது, பொதுவாக கிராமத்துப் பெண்களின் படிப்பும் இத்துடன் முடிந்துவிடுகிறது என்று நினைக்கிறேன்), அதற்குக் குறைவான வகுப்புப் புத்தகங்களில் இதை எல்லாம் சேர்க்கமுடியுமா என்பது ஒரு கேள்விதான். அந்த வயதுப் பிள்ளைகளுக்கு அத்தனை முதிர்ச்சி கிடையாது.. பெண்களுக்கு மட்டும் தனிவகுப்பாக எடுக்கலாம். பத்து - பன்னிரண்டு வயதில் பெண்களுக்கு உலகம் தெரிந்து போய் விடுகிறது.
ஜாதகப் பொருத்தம் என்பது போல், மருத்துவச் சான்றிதழ் பொருத்தங்கள்(Blood group matching sorts) வெகு காலமாகப் பேச்சில் உள்ளது தான்.. எத்தனை மருத்துவர்கள்/படித்தவர்கள் அதைச் செய்கிறார்கள் என்பது பெரிய கேள்வி. படித்தவர்களே செய்யாத விஷயத்தை படிப்பறிவில்லாத, விழிப்புணர்வு அளவு குறைவாக இருக்கும் மக்களிடம் எதிர்பார்ப்பது கஷ்டம் தான்.. :(

சந்தோஷ் said...

உண்மைக் கதையா குப்புசாமி?

Anonymous said...

சிறப்பான மேட்டர் சொல்லிருக்கீங்க. பாராட்டு.

//முப்பதைத் தொட்டும் முதல் முத்தம் கூட அனுபவித்திராத முதிர் காளையர் வாழும் உலகில்// இதற்கு என் முழுமையான ஆதரவு

Kuppusamy Chellamuthu said...

நன்றி மணிகண்டன் மற்றும் இராமமூர்த்தி.

//உண்மைக் கதையா குப்புசாமி?// ஆமாம் சந்தோஷ். சில இடங்களில் ஊர், பெயர் மாற்றப்பட்டுள்ளது.

அனானி, முப்பதைத் தொட்ட முதிர் காளையருள் நீங்களும் ஒருவரா? கவலையை விட்டுத் தள்ளுங்கள். I think you did not miss mush, at least expect so :-(

பொன்ஸ்~~Poorna said...

குப்புசாமி, இருக்கிறதிலயே நீளமான கமென்ட் என்னுது தாங்க.. எனக்கு ஒரு நன்றி கூட போடாம விட்டுட்டீங்க.. ம்ம்... எல்லாம் நேரம் :)

Kuppusamy Chellamuthu said...

Sorry Pons. Despite what is (not) seen here, I don’t need to mention specifically how much I value your feedback. As a matter of fact, it has been some time I myself visited this blog. I sincerely regret if me not responding hurt you and assure it was not intentional.

-Kuppusamy Chellamuthu

லதா said...

கருவிலிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று சோதித்துப் பார்க்க நினைக்கும் மக்களுக்கு HIV பரிசோதனை குறித்த விழிப்புணர்வு எப்போது வரும்?
:-(((

John Prabhakar said...

There are practical difficullties in asking for a fitness(or AIDS free) certificate before wedding.
1)The party asking such a report risks the alliance as the other party may take it as an offence; a doubt about their family values and upbringing.
The solution is this has to be made mandatory.
2)You know how salaried people take long leaves. They purchase a medical certificate and produce it.If made mandatory this may be the situation.
3)The best way is for the party to undergo an examination at the center of the opposite party's choice (like how private companies prescribe the hospitals where health checkups to be done).
All this may shock the orthodoxy.. When you can enquire about the salary,benefits, position, wealth and properties, study and specialisation(even class) of the other party directly or through agencies, its unfair to keep out health.
4) It is also unfair to keep just HIV test. The latest data for TN showing that new HIV incidence has drastically comedown because of increased awareness and safe sex practices. Not because of our great culture or fidelity which were presumed before the first incidence in 1987. Fertility, mental health, heriditary diseaases like diabetes,Hepatitis B,STD(,baldness:-))etc also needs to be tested. With gene mapping even the probability can be analysed.
5) There may be couples mutually agreeing to forego the tests as a result of foregone conclusions or fearsome reprisals or expenses.
5)There may be voices of protests in favour of individual rights,marital rights, privacy of individual medical health etc if the government gets involved.

It is better tackled at the individual level. Now we are back at point 1.Its because of these questions our Government is not doing anything on this count. Infact no government in this planet has done this.

Kuppusamy Chellamuthu said...

ஜான்.. சிரமம் பாராது இடப்பட்ட உங்களது நீண்ட பின்னூட்டம் பிரச்சினையை அதன் அடிப்படையில் அலசுகிறது. நடைமுறைச் சிக்கல்கள் அனைத்திற்கும் ஒரே தீர்வு, நமக்கு நாமே பரிசோதனை செய்துகொள்வது தான். நிச்சயிகப் பட்டவுடன் (அல்லது அதற்கு முன்பே கூட :-)) பெண்ணுடன் தொலைபேசி, ஆயிரக்கணக்கில் பில் ஏற்றிக்கொள்ளும் நபர்கள், இருவருமாக இணைந்து சென்று சோதனை செய்து கொள்ளலாம். பெற்றோர் அறிய வேண்டுமென்கிற அவசியம் இல்லை. After all you both are trying to enter a common life and love each other.

But, I might be too ideal in expecting this to happen. இருப்பினும் காதல் எங்கனம் சாதி, ஜோதிடம் போன்ற மூடநம்பிக்கைகளைத் தகர்க்கிறதோ, அதே போல விழிப்புணர்ச்சியையும் உருவாக்கும் என நம்புவோமாக!!!

லதா சரியான ஒரு பாய்ண்ட் சொல்லி இருக்கீங்க!! நன்றி.

Kuppusamy Chellamuthu said...

//ஓரளவிற்கு, பாடதிட்டங்களில் இருக்கிறது.. // எனக்குத் தெரியாத விஷயம் இது பொன்ஸ். பெண்களுக்கு மட்டும் தனி வகுப்பு எடுப்பது நல்ல திட்டம் தான். இந்த வகுப்புகள் தாங்கள் திருமணத்தின் போது வஞ்சிக்கப் படாத வகையில் இவர்களைத் தற்காக்க உதவினால் சரிதான். இருப்பினும் ஊர் மேய்வது ஆண்கள் தானே?

லேட்ட சொன்னாலும் லேட்டஸ்ட்டா சொல்றேன் - உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ் :-)

மனதின் ஓசை said...

இதனை ஒரு சட்டமாக ஆக்க வேண்டும்...அதுதான் இந்த கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரே வழி...
இப்பொது கூட ஒரு சிலர் விரும்பிணாளும் இதனை பற்றி பேசுவதோ, பரிசோதனை செய்து கொள்வதோ கூட அடுத்தவர் (மணக்கப்போகும் நபர் உட்பட) பார்வையில் தவறானதாக இருக்கக்கூடிய வாய்ப்பு அதிகம்.
அதே போல் பெண் வீட்டார் கேட்க நினைத்தாலும் முடிவதில்லை...
அனைவரும் செய்ய வேண்டிய ஒன்றாக ஆகி விட்டால் இந்த சங்கடங்களும் களையப்படும்.. வாழ்க்கை சிலருக்கு அநியாயமாக பட்டுப்போவது தடுக்கப்படும்.

மங்கை said...

அருமையான கதைங்க... HIV விளிப்புணர்வு பணியில நான் 7 வருசமா இருக்கேன் , சும்மா வாயில சொல்றத விட இந்த live charectors மூலமா message easy ஆ போய் சேரும்.. இது அனுபவத்துல கண்ட உண்மை...
கருவுற்ற பெண்கள் HIV testing பண்ணிக்கொள்வது ரொம்ப அவசியம்னு அரசு செய்யும் விளிப்புணர்வு பிரசாரத்தை விட, உங்க கதைய எல்லோரும் படிச்சா எதிர்பார்கிற மாற்றம் கண்டிப்பா வரும்
கோவையை சுற்றி உள்ள பகுதியில இது மாதிரி பல வீதி நாடகங்கள் போட்டோம்,
feed back was wonderful
உங்க கதைய ஒரு short film ஆ எடுத்தா மக்கள சீக்கிரமா சென்றடையும்னு நினைக்கிறேன்...
HIV ஆல பாதிக்கப்பட்ட பெண்கள் பத்தி ஒரு பதிவு போடனும்னு ஆசை.. எழுதியும் வச்சு இருக்கேன்..
ஆனா நம்ம தமிழ் இருக்குங்கலே தமிழ்
அது "தமில்"...
அதுதாங்கண்ணா பிரச்சனை..
எப்படியோ, இது மாதிரி பின்னூட்டம் எழுத வாய்ப்பு கொடுத்த உங்களுக்கு நன்றி..

வாழ்த்துக்கள்

மங்கை

Kuppusamy Chellamuthu said...

நீங்க சொல்றது சரிங்க மனதின் ஓசை. கருத்தோடு உடன்படுகிறேன்.

மங்கை. இந்தப் பதிவை நீங்கள் படித்ததற்கும் பின்னூட்டம் இட்டதற்கும் மிக்க நன்றிகள்.
//உங்க கதைய ஒரு short film ஆ எடுத்தா மக்கள சீக்கிரமா சென்றடையும்னு நினைக்கிறேன்...// எடுங்க எடுங்க. ஆனால் இது கதையல்ல நிஜம். பெயர்கள் இடங்கள் மற்றுமே மாற்றப்பட்டுள்ளன. இலாப நோக்கமில்லாமல் இயங்கும் உங்களைப் போன்ற தன்னார்வத் தொண்டர்களுக்கு இப்பதிவு அர்ப்பணம்.

மங்கை said...

நன்றி

அர்ப்பணம் செய்யுற அளவுக்கு எல்லாம் பெரிய ஆள் இல்லீங்க..

மங்கை

செல்வநாயகி said...

நல்ல கருத்து குப்புசாமி. இந்தமாதிரிப் பதிவுகள் தமிழ்மணத்தில் வருவதும், அதை மங்கை போன்ற துறையோடு சம்பந்தப்பட்டவர்கள் படித்துப் பின்னூட்டமிடுவதும் உவப்பாக இருக்கிறது.

//// யார் கண்ணு அதெல்லாம் பண்றாங்க? ஏஞ்சாமி, நாங்க என்ன உன்னைய வேணும்னா இப்படிக் கெணத்துல புடிச்சு தள்ளுவோம்?" ///இந்த வழக்குமொழி படிக்க மிக்க மகிழ்ச்சி. நன்றி.