Friday, July 14, 2006

குட்டிக் கொடாப்பு

-குப்புசாமி செல்லமுத்து

வாழ்க்கையில் கடந்து போகிற ஒவ்வொரு கணத்தையும், நபரையும் ஒப்பீடுகளின்றி (in absolute sense but relative) ரசித்துக் கொண்டு வசிக்கிறவனாக, ஏனையோர் கருத்துக்களால் தனி மதிப்பீட்டுத் தோற்றம் மாறாதவனாகப் பாவித்து என்னையே ஏமாற்றிக் கொண்டிருந்த காலத்தில் வாசிக்கக் கிடைத்த உளவியல் நூல் ஒன்று பார்வையைச் சற்று தெளிவுபடுத்த உதவியது. கிழிக்கப்பட்ட கோடு ஒன்றை அழிக்காமல் சிறிதாக்க வேண்டுமானால் அதை விட ஒப்பீட்டில் பெரிதான கோடு கிழித்தால் போதுமானதாயிருப்பதைப் பீர்பால் கதை கூட விவரிக்கிறது. முன்னர் இட்ட கோட்டை விடப் பெரிதாக மட்டுமன்றி, சிறிதாகவும், முன்னர் இட்ட கோட்டின் மீதே பல முறை மீள் கோடுகளும் கிழித்திருக்கிறேன் என்பதை உணர்ந்த போது சற்று அதிர்ச்சி தான்.

ஒப்பீடுகள் இன்றி ஏது வாழ்க்கை? "அவன் எவ்வளவு சம்பளம் வாங்குகிறான் என்று பார்க்காதே. உன் திறமைக்கும் உழைப்புக்கும் ஏற்ற கூலி கிடைக்கிறதா? அதோடு நிறுத்திக் கொள்" இவ்வாறு தான் மின்னஞ்சல் வசதி இல்லாத வாசகர்களுக்காக மின்னஞ்சல்களில் உலவும் நகைச்சுவைத் துணுக்குகளைத் தொகுத்து அதில் வரும் பாத்திரங்களின் பெயரை மாற்றித் தன்னம்பிக்கைத் தொடர் எழுதுகிறவர்கள் சொல்கிறார்கள்.

இந்தத் திறமைக்கு, இவ்வளவு உழைப்புக்கு இது தான் ஊதியம் என்ற வரையறைகள் எங்கும் இல்லை. குள்ளக்காளி பாளையத்தில் இருப்பவனும், கூடுவாஞ்சேரியில் இருப்பவனும் ஒரே மாதிரி முடித் திருத்தம் செய்து கொண்டாலும், ஒரே அளவிலான காசு கொடுப்பது இல்லை. அமெரிக்காவில் 20 டாலருக்கு முடி வெட்டிக் கொல்கிற அதே ஆள் சென்னையில் ஒரு டாலர் அதே செயலுக்காகக் கொடுக்கத் தயங்குகிறார். அமெரிக்காவில் இந்தியனாகவும், இந்தியாவில் அமெரிக்கனாகவும் தன்னைப் பாவித்துக் கொண்டு இரயிலோடு இணைந்து இருபுறத்திலும் பயணிக்கும் காற்று அடுக்குப் போல, பல அடுக்குப் படிமங்களைச் சுமப்பதும் ஒப்பீடுகள் தருகின்ற மயக்கங்களே.

"உனக்கும் கீழே உள்ளவர் கோடி" என்றி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடுவது கூட ஒரு வகையில் தோல்வியின் தாக்குதலுக்கு அஞ்சி ஒப்பீடுகளின் போர்வைக்குள் ஒளிந்து கொள்ளும் செளகர்யம் தான்.

பெரும்பாலான வேளைகளில் எனது ஒப்பீடுகளின் தோல்வி ஏற்றுக் கொள்ளக் கசப்பாக இருந்தாலும், சுய பின்னாய்வு (self retrospect) கருதத் தவறிய சில தகவல்களையும், அஜாக்கிரதையில் நழுவவிட்ட நுண் விவரங்களையும் புலப்படுத்துவதைச் சற்று தாமதமாகவே உணர்கிறேன். இவ்வுணர்வு அதே சறுக்கலை மறுமுறை புரியாமலிருக்க உதவுவதாக எண்ணி ஏமாந்த நிகழ்வுகள் ஏராளம். ஒப்பீடுகள் மட்டுமன்றி வேறு எந்த ஒரு துறையிலும் தவறு செய்வது தவறல்ல, அவை இன்னோர் முறை செய்யப்படாமல் இருக்கும் வரை.

சுய பின்னாய்வு என எடுத்துக் கொண்டால், பக்கத்து வீட்டுக்காரியின் தகாத உறவை அறியும் அதே ஆர்வத்துடன் இயங்க வேண்டும் என்பது மேலாண்மை போதிக்கும் நண்பர் ஒருவரது கூற்று. அதே ஆர்வத்துடன் நான் செய்த இரு ஒப்பீடுகளை மெல்ல அசை போட்டுப் பார்க்கிறேன். இரண்டுமே அவற்றைச் செய்த ஊர், வயது, சமூகச் சூழல், முக்கியத்துவம் ஆகிய தளங்களில் மாறுபடுபவை. அவற்றில் மிகச் சமீபத்தியது முதலிலும், பழையது பின்னருமாகவும் வருகின்றன. கால் நடைகள் அண்மையில் மேய்ந்த புல்லை முதலிலும், முதலில் மேய்ந்த புல்லைப் பின்னரும் அசை போடுவது போல.

வாரன் பஃபட் மற்றும் சார்லஸ் மங்கர் கூட்டணியின் பதிற்றாண்டுகளின் நல்லுறவைப் புரிய, கருணாநிதியையும், அன்பழகனையும் ஒப்பிட்டுப் பார்த்துச் சில காலம் மகிழ்திருந்தேன். மேற்சொன்ன நான்கு பெருமகனாரும் கிட்டத்தட்ட சம காலத்தவர்கள். எழுபதுகளின் இரண்டாம் பாதியிலும் எண்பதுகளின் முதல் பாதியிலும் இவர்களது வயது இருக்கும்.

சிறு வயதில் நெப்ராஸ்கான் மாகாணத்தில் செய்தித்தாள் விநியோகம் செய்து சம்பாதித்த பத்து டாலரை இன்று 44 பில்லியன் டாலருக்கும் மேலாகப் பெருக்கிய மாமனிதன் வாரன். சில தினங்கள் முன்பு வரை உலகின் இரண்டாவது பெருஞ்செல்வராக விளங்கியவர். சில தினங்கள் முன்பு வரை... எனில் இன்று எத்தனையாவது பணக்காரர் என்பதைப் பிறகு சொல்கிறேன்.

வாரன் பஃபட் 1965 ஆம் ஆண்டு அப்போது நசிந்திருந்த Berkshire Hathway நிறுவனத்தைக் கையில் எடுத்த சமயத்தில் அதன் பங்குகளை பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கியிருந்தால், இன்றைய மதிப்பு சுமார் 50 மில்லியன் (5 கோடி). அதே 1965 இல் அதே பத்தாயிரத்தை S&P குறியீட்டில் முதலிட்டிருந்தால் அது வெறும் ஐந்து இலட்சமாகத் தான் வளர்ந்திருக்கும். வெறும் முதலீடு மட்டுமே செய்து அதில் வரும் இலாபத்தில் நிறுவனம் கொழித்து, அதன் மூலம் Berkshire பங்கு விலை ஏறியது. இந்த நிறுவனத்தின் முகமே இவர் தான். கிரிக்கெட் ஆட்டத்திற்கு ஆஸ்திரேலியாவின் பிரான்மென் விளங்கியது போல, பங்கு முதலீட்டில் கருதப்படுபவர் மத்திய மேற்கு அமெரிக்கப் பகுதியை சேர்ந்த வாரன்.

உடன்பிறப்புக்கு முரசொலியில் கலைஞர் எழுதுகின்ற அதே அளவிற்கு அல்லது அதற்கு அதிகமாகவே அறியப்படுபவை சக உரிமையாளர்களுக்கு (பங்குதாரர்) ஆண்டறிக்கையில் வாரன் பல ஆண்டுகளாக எழுதி வரும் கடிதங்கள். நேரு இந்திராவிற்கு எழுதிய கடிதங்களோடு அவைகளை ஒப்பிடும் ஆர்வம் கொண்டவர்கள் உண்டு.


உருவகப் படிமத்தின் கீழ் இவரைக் கருணாநிதியாகக் கொள்ள எனக்குக் கிடைத்த அன்பழகன் தான் மங்கர். பேராசிரியரை போலவே முதன்மரை விட ஓரிரு வயதுகள் மூத்தமரான இவர் நம்பர் 2 ஆக இருப்பதை விரும்பி ஏற்றுக்கொண்டவராகத் தெரிகிறார். எதற்கோ தலையாக இருப்பதை விட இதற்கு வாலாக இருக்கலாமல்லவா? ஊடகங்களில் வந்து வதனம் காட்டுவது இவருக்கு விருப்பமில்லாத ஒன்று என்பார்கள். கம்பெனியில் தனது ஒவ்வொரு முதலீட்டு முடிவுகளுக்குப் பின்னாலும் இயங்குகிற மூளையாக மங்கரைப் புகழ்கிறார் வாரன்.

இவ்விரு இணைகளையும் ஏதொரு எச்சரிக்கையும் இன்றிப் பொருத்திப் பார்த்தது எததனை பெரிய மடத்தனம் தெரியுமா? ஒத்த வயது, நீண்ட காலம் பிரியாமல் முதல் & இரண்டாம் இடத்தில் படிநிலைகளில் மாற்றமின்றித் தொடர்தல் என்ற இரு ஒற்றுமைகளைப் புறந்தள்ளினால் எனது ஒப்பீடு நியாயப்படுத்தப் படவில்லை. "அலை ஓயும் போது தான் அம்மணமாக நீந்துகிறவர்கள் யார் என்பதைச் சொல்ல முடியும்" என்ற வாரனின் புகழ் மிக்க வாசகம் ஒன்றின் படி, இவர்கள் நீந்துகிறவர்கள் என்கிற மேலோட்டமான தளத்தில் மட்டுமே எனது ஒப்பீட்டைச் செய்திருக்கிறேன்.
40 ஆண்டுகளுக்கும் முன்னர் 30,000 டாலருக்கு வாங்கிய அதே பழைய வீட்டில் இன்னும் வசிக்கிறாராம் Oracle of omeha என் அறியப்படும் வாரன். 'Thrifty, a great virtue in itself' என, சிக்கனத்தைப் பற்றிப் போதனை செய்து அதைக் கடை பிடித்தும் காட்டிய எளியவர். தன் ஆளுகையில் கீழ் நிறுவனத்தைப் பன்மடங்கு பெருகச் செய்த சாதனையாளர். ஒழுக்கம், கட்டுப்பாடு, பகுத்தறிதல், பொறுமை ஆகியவற்றைப் போதிப்பதோடு நில்லாமல், கடைபிடித்துக் காட்டியவர்.

வாரன் Barkshire நிறுவனத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட ஏறக்குறைய ஆறாண்டுகளுக்குப் பின்னர் தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பைக் கையகப் படுத்திய கலைஞரின் ஆளுகையின் கீழ் கழகத்தின் கொள்கைகள், நீள அகலமாகக் கட்சி அடைந்திருந்த பரவு முதலியவை சுருங்கி இருக்கின்றன. சிதைந்து உருமாறியும் போயிருக்கிறது. தன் பங்குதாரருக்கும், வாடிக்கையாளருக்கும் வாரன் ஆற்றிய சேவையோடு கலைஞரின் நிர்வாகத்தை வேறு தட்டில் என்றாலும் கூட ஒரே தராசில் இட மனது ஒப்பவில்லை.

இயக்கத்தின் வளர்வு, தேய்வு ஒரு புறம் இருக்கட்டும். அண்ணா இறந்த சமயத்தில் கட்சியில் ஐந்தாவது பெரிய தலைவராக அறியப்பட்டவராகிய கலைஞரின் குடும்பத்தை விட்டு வெளியே இன்றைக்குக் கட்சியில் (பெயரளவில் இல்லாமல்) எத்தனை பேர் முதல் ஐந்து இடங்களைக் கொண்டிருக்கிறார்கள்? தி.மு.க., திரு.மு.க.வின் சொத்தாகி விட்டது. காலமெலாம் பொதுவுடமையும், பகுத்தறிவும் பேசிய இரு மு.க.வும் அவர் வாரிசுகளுக்கே என்றும் ஆகிப் போனது இன்று.

சில நாட்கள் முன்பு வரை உலகின் இரண்டாவது பெருஞ்செல்வராக (முதலாமவர் பில் கேட்ஸ்) வாரன் விளங்கினார் எனச் சொன்னோமல்லவா, ஏன் தெரியுமா? காலமெலாம் முதலாளித்துவத்திற்கு வக்காலத்து வாங்கும் இவர் சுமார் 37 பில்லியன் டாலர் மதிப்புள்ள தன் வளத்தை அறக்கட்டளைக்குக் கொடுத்தளித்திருக்கிறார். ஒரு டாலர் 45 ரூபாய் என்று கொண்டால் இது 37 * 45 * 1,00,00,00,000 = 16,65,00,00,00,000 ரூபாய். ஒரு இலட்சத்து அறுபத்தாராயிரத்து ஐந்தாயிடம் கோடி. பல இலட்சக் கணக்கான பங்குதாரர் மத்தியில் விரவிக் கிடக்கும் இந்தியாவின் மிகப் பெரும் நிறுவனமாக ரிலையன்ஸ் கம்பெனியின் மதிப்பை விட இது அதிகம்.

பிறகெதற்கு இத்தனை வருடங்கள் வாரன் உழைத்தார், சம்பாதித்தார்? "எனக்குப் பணம் தேவை என்பதற்காக பங்கு முதலீட்டில் ஈடுபடவில்லை. பங்குச் சந்தையில் நிலவும் முட்டாள் தனத்தை மூளை கொண்டு கறக்கும் (exploit the madness) விளையாட்டின் பால் கொண்ட காதலே என்னைச் செலுத்தியது" என்று சொல்கிறார்.

அளப்பரிய பொக்கிஷத்தை ஊருக்கு இப்படி வாரிக்கொடுக்கும் தகப்பனை வேறு எவராக இருந்தாலும் தலையணையை முகத்தில் அழுத்திக் கொன்றிருப்பர். அவர் பிள்ளைகள் அப்படியல்ல. "முடிவழிச் செல்வம் பரம்பரையாகக் கைமாறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. நானும் என் மனைவியும் எஞ்சிய காலத்தை இனிதே கழிக்க மீதமிருக்கும் சில பில்லியன்கள் போதும். சம்பாத்தியத்தில் பெரும்பகுதி மறுபடியும் சமுதாயத்திற்குப் போய்ச் சேர வேண்டும். எங்கள் முடிவைக் வாரிசுகள் (வாரனின் குழந்தைகளே இன்று தாத்தா பாட்டிகள் தான்) மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். அவர்கள் விரும்பியிராவிடிலும், எங்கள் முடிவை மாற்றும் சக்தி அவர்களுக்கு இல்லை என்பதே உண்மை" எனவும் கூறுகிறார்.

பத்து டாலரைப் பல பில்லியனாக மாற்றியவர் எங்கே? கொள்கைகளை புறந்தள்ளிக் கழகத்தைத் தேய்த்தவர் எங்கே? தன் சொந்தச் செல்வமெல்லாம் சமுதாயத்திற்குத் தந்தவர் எங்கே? கட்சியையே தன் செலவமாக மாற்றியவர் எங்கே? எனது ஒப்பீடுகளில் ஏற்பட்ட மாபெரும் சறுக்கல் இது என்கிற வேதனையோடு தூங்கிப் போனேன். ஒப்பீடுகளை ஒப்புக் கொண்டவராய் கார்ப்பரேட் கலாச்சாரத் தாக்கத்தால் ஈட்டிய ஆங்கிலப் புலமையில், "I corroborate with a bestow, யாரங்கே?" எனக் கைதட்டி பொற்கிளிக்கு ஆணையிடுகிறார், சொப்பனத்தில்.

ஒப்புமைக் குற்றங்கள் கடந்த காலத்தைப் பின்னோக்கிப் பார்க்கும் போது பரவலாகக் கிடக்கின்றன. சம்பவங்கள், உறவுகள், உணர்வுகள் அனைத்துமே அவற்றைக் கடக்கின்ற மனிதனின் மனதுக்கேற்ப வடிவம் எடுக்கின்றன. சிலரிடம் கெட்ட வார்த்தையாக, சிலரிடம் புகார் மனுக்களாக, சிலரிடம் ஞானமாக, சிலரிடம் கவிதையாக, சிலரிடம் காதலாக, என்னிடம் ஒப்புமையாக...ஆம் சில நேரங்களில் அவ்வொப்புமைகள் விளைவிக்கும் விந்தைகரமான விளைவுகளையும் தாண்டி.

முன்னொரு காலத்தில் செய்த குட்டிக் கொடாப்பு ஒப்புமை, ராட்சத வடிவம் கொண்ட அனல் மின் சக்தி தயாரிக்கும் பாய்லராகக் கல்லூரி வெப்பவியந்திரவியல் சோதனைக் களத்தில் வைக்கப் பட்டிருந்தது. அதென்ன குட்டிக் கொடாப்பு?

அரைக் கோள அல்லது நீள் அரைக்கோள வடிவம் கொண்டிருந்த சின்ன வீடு. மூன்று முதல் ஐந்தடி உயரமும், சுமார் அதே அளவு விட்டமும் படைத்த அசையும் வீடு. பெரும்பாலும் மின்ன மார் - மின்ன மரத்தின் கணுக்களோடு கூடிய விளாஞ்சி தான் மின்ன மார். அது கிடைக்காத போது ஊஞ்சல் மரத்தின் விளாஞ்சியும் பயன்படுத்தப் படுவது உண்டு - வளையும் பருவத்திலேயே தறித்தெடுத்து இறுகும் தன்மை பெறும் முன் கட்டப்படும் மரப்பின்னல். ஆட்டுக் குட்டிகளை வெயில், நரி முதலிய எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க ஏற்படுத்தப் பட்ட சாதனம். பட்டி ஆடுகளுக்கு வீடு என்றால் கொடாப்பு வீட்டின் கூட்டுத் தொட்டில்.

செம்மறி ஆடு ஒரு குட்டி தான் போடும். நேர்மையான அரசியல்வாதி (oxymoron சொல்றாங்கப்பா) போல அதிசயமாக இரண்டு குட்டி போடலாம். வெள்ளாடு அப்படியல்ல; ஒரே ஈற்றில் (பிரசவத்தில்) ஐந்து குட்டிகள் கூட இடலாம். அவளிடம் எல்லாக் குட்டிகளுக்கும் கொடுக்கப் பால் இருக்காது. அப்படியே இருந்தாலும் அதுகள் ஒரே நேரத்தில் ஊட்ட முடியாது. போர்ச் சந்துகளில் அப்பா குடித்த பின் ஒளித்து வைத்திருந்த பிராந்தி பாட்டில்கள் தேடி எடுக்கப்படும். அவற்றில் பால் ஊற்றி முனையில் ஓட்டை போட்ட ரப்பரில் மூடித் தந்தால் வெள்ளாட்டுக் குட்டிகளுக்கு மாடு தான் ஊட்டத் தாய்.

மனிதக் குட்டிகள் போல ஆட்டுக் குட்டிகளுக்கும் விரல் சூப்பும் பழக்கம் கொண்டவை. அவை முட்டி ஊட்டும் வேளையில் சீசாவின் விளிம்புகளில் விரல்களும் சப்பப்படும். குட்டிப் பற்கள் சிறுவனின் விரலில் ஏற்படுத்திய குறுகுறுப்பு ஸ்பரிசம், நான்கு வயதில் அவனுக்குத் தாய்மையைக் கொடுத்தது. புலியோடு விளையாடிய ஐயப்பன் போல ஆட்டுக் குட்டியோடு விளையாடினேன். பாலூட்டாத வேளையிலும் விரல் நீட்டச் சூப்பும் குட்டிகள் மோட்சத்தின் திறவு கோளாக இருந்தன.

பொன்னாம் பூச்சியின் (பொன் வண்டு) இறக்கையை வெட்டி, அதைத் தீப்பெட்டிக்குள் சிறை வைத்து, கிழுவம் இலையை அதன் கழுத்தின் வைத்து அது காட்டுகின்ற ஆவேசத்தில் வெட்டச் செய்து விளையாடிய என் குரூர புத்திக்கு, ஆட்டுக் குட்டியின் கொடாப்பு ஒரு சிறையாகத் தெரிந்தது. பக்கவாட்டில் சாய்த்து, அடிப்புறத்தின் ஒரு பகுதியைப் பிளக்கச் செய்து குட்டிகளை விடுதலை செய்வது பிடித்தமான செயலாகவே இன்னும் எண்ணுகிறேன்.

பொது விடுதலை கருதாமல் ஓரவஞ்சனையும் இருந்தது உண்டு. ஒரு குட்டியை மட்டும் வெளியே எடுக்கவோ, உள்ளே விடவோ தரை மட்டத்தில் இருந்து சுமார் இரண்டடி உயரத்தில் கொடாப்பு துளை கொண்டிருக்கும். மென் பற்கள் கொண்ட குட்டிகள் கடிக்க ஏதுவாக மிருதுவான இலை தலைகள் இதன் வழியாகவே செலுத்தப் பட்டன. அவை எவ்வளவு தான் தாவிக் குதித்து முயன்றாலும் வெளியேற முடியாத படி அத்துளை வடிவமைக்கப் பட்டிருக்கும். தகப்பனார் எ·ப் டி.வி. சேனலுக்கு இட்டு வைத்திருக்கும் கடவுச் சொல்லைக் கண்டறியத் தவிக்கும் நகரச் சிறுவனின் ஆர்வக் கோளாறு தான் ஆட்டுக் குட்டிக்கும். விடுமுறைக்கு வரும் மாமா தயவில் பூனை நடை அழகியை ரசிக்கும் வாய்ப்பு அச்சிறுவனுக்குக் கிட்டுவது போல, குட்டிகளுக்கும் கிட்டும். கடவு வழியாக ஒரு குட்டியை மட்டும் வெளியெடுத்து விடுதலைக் காற்றை உணர வைத்து, அதற்குக் கையூட்டாக கையை ஊட்டக் கொடுத்துக் கடி வாங்கி, பட்டுத் தோல் தடவி மீண்டும் உள்ளே விடுவேன்.

இந்தக் குட்டிக் கடவுகள் பாய்லரில் மேன்-ஹோல்(manhole) என அறியப்பட்டன. கொடாப்பு அரைக் கோள வடிவம் என்றால், உருளையின் உச்சியில் அரைக் கோளத்தைத் தொப்பியாகக் கவிழ்த்திருந்த வடிவம் பாய்லருக்கு. மனிதன் உள்ளே நுழையும் அளவே உடையவை என்பதாலும், ஆட்கள் உள்ளிறங்கிச் செல்ல வழியமைப்பதாலும் அப்பெயர் கொண்டு விளங்குகிறது.

பழுது பார்க்க வேண்டிய பணியாளர் தவிர யாரும் நுழைந்ததாகத் தெரியவில்லை. நீள் வெட்டுத் தோற்றம், குறுக்கு வெட்டுத் தோற்றம் ஆகிய வரை படங்கள் சுவற்றில் தொங்குவது கொண்டே உள்ளென்ன பாகங்கள் உண்டென யூகித்திருக்கிறோம். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நிகழும் முன்னெச்சரிக்கைப் பராமரிப்புப் பணிகளுக்கான நுழைவாயில். கரி வைரமாகும் போது ஜொலிக்கும்; கரி வெப்பமாகும் போதும் ஜொலிக்கும். அனலின் சீற்றத்தில் நீர் ஆவியாக, ஆவி விசையாகி, அது டர்பனைச் சுழற்றி அசுர டைனமோவில் மின் சக்தி வடிவாகிறது. ஆற்றல் அழிவற்றது, அதன் வடிவம் மட்டுமே மாறுகிறது. அறிவியல், பொறியியல்..

இயங்கும் பாய்லரின் தகிக்கும் கரிக்குட்டிகளை விடுதலை செய்து விரல் சப்புவிக்க ஆசைப் பட்டு கையை உள்ளே விட்டிருந்தால், கரிகாலன் போல, கரிகைப் பெருவளத்தான் ஆகியிருப்பேன்.

ஒப்புமைகள் ஒரு எல்லை வரை தான். அதற்கு மேலும் பரிசோதித்துப் பார்ப்பது விரலைச் சுடும், மனதைச் சுடும். 'Burning the finger' என்று பங்குச் சந்தையில் அடிக்கடி சொல்கிறார்கள். அங்கே ஏதாவது குட்டிக் கொடாப்பு இருக்கிறதா என ஆராய வேண்டும்.