Tuesday, August 22, 2006

வலைப்பதிவர் சுற்றுலா

- குப்புசாமி செல்லமுத்து


"நான் எதைச் செய்யுமாறு பணிக்கப்பட்டேனோ அதைச் செய்கிறேன்" என்றோர் அலட்சியத்தோடு துவங்கத் தலைப்படும் எண்ணம் "டேய் அடங்கு" எனும் இயல்பு நிலைக்குத் திருப்பிக் கொண்டு வருகிறது என்ற பட்சத்தில், மறக்கும் முன் நினைத்ததைச் சொல்லிடவும் இயன்றால் பாலபாரதிக்கு நான் கொடுத்த வாக்கைக் காத்தவனாவேன். (அட நமக்குக் கூட இப்படி எழுத வருதே! பாலபாரதிக்கு மட்டும் சொல்வது புரியட்டும்)

"ஏங்க இது பல்லவ மகராஜா ஆண்ட ஊர் தானே?" என்று கேட்ட மனிதர்.
தொங்கித் தாவியும், செங்குத்துப் பாறையில் அனாயாசமாக ஏறியும் சென்ற குரங்கைப் பார்த்து மகிழ்ந்த மனிதர்.
இந்த சுற்றுலாவுக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்ற விவாதத்தில் "அப்பவே சொன்னேன் வர மாட்டேன்னு" என நான் சொல்லத் துணியாததைச் சொல்ல முன்வந்த மனிதர்.

இவர்கள் யாவரும் எனக்கு முன்னே எழுதியிருப்பார்கள் என்பது திண்ணம்.

பாகம் 1: வீரமணி
பாகம் 2: பிரியன்
பாகம் 3: பால பாரதி
பாகம் 4: மா.சிவக்குமார்
பாகம் 5: சிங்.ஜெயக்குமார்
பாகம் 6: அருள் குமார்
பாகம் 7: ஜெய் சங்கர்

அதிகமாக எழுதக்கூடாதவனை இல்லாத சங்கதியை எழுத வைக்கவே மீள் பயணத்தை வடிக்கக் கொடுத்தார்களோ? எப்படியோ.. மாமல்லபுரத்தில் இருந்து சென்னைக்குத் திரும்பி வரும் பயணத்தை எழுத வேண்டியது என்று முடிவு செய்த பிறகு, "பைக்கை ஸ்டார்ட் செய்தோம். ஓட்டினோம். வந்தோம். அ·தே" எனச் சுலபமாக்கிட இயலும்.

அட இதே ஸ்டைல் போரடிக்குது பா...

ஆம். மாமல்லபுரத்தில் இருந்து சென்னைக்குத் திரும்பி வரும் பயணத்தை எழுத முயற்சிக்கிறேன். தெற்கு நோக்கிய பயணத்தில் என் பின்னமர்ந்து வந்த அதே சிங்.ஜெயக்குமார் என்னோடு இணைந்து வருகிறார். பிற நண்பர்களும் அவரவர் இறங்கு இடத்திற்கு ஏற்றவாறு ஜோடி சேர்ந்து கொண்டனர்.

இருட்டும் முன்னர் கிழக்குக் கடற்கரைச் சாலைப் பயணத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற அவசரத்தில் எனது AP9 பைக் விசையாய் வடக்கு நோக்கிப் பயணித்தது. மதியம் வரும் போது வேகமாய் முன் வந்ததால் பாலபாரதிக்கும், வீரமணிக்கும் அரை மணி நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. இப்போது அப்படியல்ல. போனவுடன் நீட்டிப்படுத்துக் கொள்ளலாம்.

இருளும் முகிழும் தெற்கில் இருந்து வடக்காகத் துரத்தியே வந்தது. தலைக்கவசம் அணிந்து கொண்டால் 'எச்சரிக்கையான மனிதன்' என்ற எண்ணத்தில் வில்லங்கமிலாச் சான்று (NOC) இல்லாமலே கூட வேற்று மாநில வாகனம் ஓட்டினாலும் சென்னைக் காவல்துறை கண்டுகொள்ளாது என்ற காரணத்தையும் தாண்டி தலையைக் காக்கும் கவசமாக அவ்வப்போது மனதாலும், விபத்துகளாலும் உணர்ந்த ஓடு தலையைச் சுற்றிக் கவிந்திருந்தது.

அட, நான்கு வாகனங்களில் நான் மட்டும் தான் தலைக்கவசம் கொண்டிருக்கிறேன். கிராமத்தான் போல வண்டியில் ஒரு பெட்டியும் அதிலே சில சமாச்சாரங்களும் எப்போதும் இருக்கும். மழைக் காப்பு உடுப்புகள், மேலங்கியும் காலங்கியும். விரைந்து போயாக வேண்டிய வேட்கையில் பாண்டிப் பேருந்துகள், மஞ்சள் பலகை மகிழ்வுந்துகள் சிலவற்றை முந்தி வந்த போது வேகங்காட்டி 80 இல் ஊசலாடியது. சிங்கிற்கு அதைச் சுட்டிக் காட்டி ஓட்டும் திறமையை வெளிப்படுத்தவும் செய்கிறேன். கட்டுப்பாடற்ற பயணம். பின் சக்கர பிரேக் சற்று மந்தவாகவே இருந்தது. ஏதேனும் ஆனால்...

கி.க.சா. வில் இரு புறமும் சோல்டர் இருப்பது மகிழ்ச்சியான செய்தி. வாகனங்கள் பழுதடைந்தால் நிறுத்தவும், ஓய்வெடுக்கவும் அவை அமைக்கப்பட்டவை. உடையா மஞ்சள் கோடுகள் முதன்மைப் பாதையையும் சோல்டரையும் பிரித்திருந்தது. உடையாக்கோடுகளைக் கடக்கக் கூடாது எனும் விதி நமது ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியில் போதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மித வேக பைக்குகள் சில சோல்டரில் தான் பயணித்தன.
80 ஐச் சுட்டிக்காட்டிய சில மணித்துளிகளில் மழைத்துளி. பெட்டியில் இருக்கும் மேலங்கி என் மேலுக்கும், காலங்கி ஜெயக்குமாரின் தலைக்குமாக இடம் மாற, பயணம் தொடர்கிறது.

கனமில்லாத மழை தேவையற்ற நீரடுக்கை அமைத்தது. சாலைக்கும், சக்கரத்துக்கும் இடையே மிக மெல்லிய நீரடுக்கு சக்கரத்தின் பற்றுதலை சதிக்கக் கூடியது, வேகங்குறைக்க முயன்றால் விழவும் நேரிடலாம். ஆகவே வேகங்குறைத்து இயங்க நேர்ந்தது. சில கிலோ மீட்டர் கடக்க மாரி ஓய்ந்தது. அதன் பின் தடையில்லை. இருட்டிடும் முன் இவ்வதிவேகச் சாலைப் பயணத்தை முடிக்க வேண்டுமென்ற எண்ணம் தோற்றதைத் தவிர.
அப்படியே வந்து மால்குடிக்குச் சற்று முன்னர் மேற்கு நோக்கிப் பிரிந்து பழைய மகாபலிபுரம் சாலையில் திருவான்மியூர் செல்லவிருந்த வாடகை வேனில் ஜெயக்குமாரை ஏற்றி விட்ட பின்னர் பல நாளக இருந்த சந்தேகம் மீண்டும் தலையெடுத்தது.

இத்தனை வருடத்திற்குப் பிறகும் ECR பழுதின்றி இருக்கிறதே, நகரச் சாலைகள் மட்டும் ஏன் வருடா வருடம் போட வேண்டி இருக்கிறது? ஒப்பந்தக்காரரிடம் தரம் எதிர்பார்பதில்லையா? அல்லது பழுது பட்டால் தான் மீண்டும் ஏலம் விடலாம், பணம் சம்பாதிக்கலாம் என்ற அரசு இயந்திரத்தின் மெத்தனமா? என்னவோ போங்கள். சுதந்திர தினம் ..எதற்கும் ஐ லவ் இந்தியா சொல்லி வைப்போம்.

- THE END -