Friday, September 29, 2006

சென்னைப் புயலும் வடிவேலுவும்

எனக்கும் என் அறைக்குமான ஜன்னல்
சேர்ந்தே திறக்கிறது
சுவற்றில் தொங்கும் கிழிக்கப்படாத தினக் காலண்டர்
நான் ஏதோ சொன்னதாகவும் -
புரிந்ததாகவும்
மெல்லத் தலை ஆட்டுகிறது.

என் உள்ளங்கால்களின் கதகதப்பை உணர்கின்றன
சுருண்டு கிடக்கும் மாடிப்படிகள்.
நகம் வெட்டி முகம் கழுவியபின் விரும்பத்தக்கதான
புத்துணர்சி திரும்புகிறது

அதிகாலை நேரத்துக் காட்சிகள்
அருமையான தெளிவும் பாராட்டத்தக்க அமைதியும்
உடையதாயிருக்கிறது

இவை கடந்து
புத்தகங்களின் படித்து முடித்த
பக்கங்களின் பாரம் உணர்கையிலே
வீசத் தொடங்குகிறது ....
என் தேனீர்க் கோப்பையிலான புயல்.கார்த்திக் வேலுவின் இந்தக் கவிதை நிச்சயமான உண்மை. பள்ளிக் கூடம் சென்ற காலத்தில் இருந்தே நிலவும் திங்கள் கிழமைகள் மீதான அளவு கடந்த பயம் இன்னமும் தொடர்ந்தபடியே தான் இருக்கிறது. வெள்ளி வந்தால் ஜாலியாக இருப்பதுவும், அதுவே ஞாயிறு மாலையே சோகம் தொற்றிக் கொள்வதையும் என்னைப் போலவே நீங்களும் உணர்ந்திருப்பீர்கள்.
பணிச் சூழல் தருகிற அழுத்தமும், ஈடுபாடு இல்லாமல் செய்கிற வேலையும் தருகிற விளைவுகள் இவை என்ற போதும், கூலிக்கு மாரடிக்கும் மன நிலையும் ஒரு காரணம் என்று இரண்டு வருடங்களுக்க்கு முன்னர் சென்னையில் ரூம் மேட்டாக இருந்தா ஜான் சொன்னார். அதென்ன 'சொன்னார்'? நாங்கள் ஒருவரை ஒருவர் மரியாதையாக் அழைத்துக் கொள்வது தான் வழக்கம்.

அவர் சொன்னதில் பெரும் உண்மை இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. 'நாளை உலகம் அழிந்திடும்' என்பது போல வாரக் கடைசிகளில் குடித்துக் கும்மாளமிடுவதும், அமெரிக்காவில் அதிகமான மாரடைப்ப்புகள் திங்கட்கிழமை காலையில் வந்ததாகச் சொல்லும் புள்ளி விவரமும் இதனைப் பறைசாற்றுகின்றன.

இதற்கெல்லாம் அப்பாற்பட்டவன் நானெல்ல. முன்பெல்லாம் Monday blues ஆக இருந்தது தற்சமயம் morning blues ஆக ஒரு மாறி விட்டது. காலை வேளையில் பைக்கை ஸ்டார்ட் செய்து ஆஃபீஸ் கிளம்பும் தருணத்தில் எனக்கு வீசும் புயல் கார்த்திக் வேலுவிற்கு தேநீர்க் கோப்பையிலேயே வீச ஆரம்பித்து விடுகிறது போலும்.

ஒரு வழியாக அலுவலகம் சென்று கம்ப்யூட்டர் ஆன் செய்து, காஃபி குடித்து ஈ-மெயில் பார்த்து இந்து, பிசினஸ் லைன் எல்லாம் வாசித்து விட்டு வேலையைத் துவங்கலாம் என நினைக்கும் போது செல்போன் ஒலித்தது. யார் என்று தெரியவில்லை. ஏற்கனவே பதிவு செய்து வைத்த எண்ணல்ல.

"டேய்.. ஒய்ஃபை காலேஜ்ல கொண்டு போய் டிராப் பண்ணிட்டு வரும் போது ஒரு ஆக்சிடன்ட் ஆகிருச்சு. உடனே கிளம்பி வர முடியுமா? பல்லாவரம் கூட் ரோடு ஜன்சன்ல இருக்கேன்" என்று உடன் பணிபுரியும் வடிவேல் பதற்றமாகப் பேசினான். அவனைக் குறிக்கும் அடைமொழியை இங்கே பயன்படுத்த வேண்டாம் என்பதால் சொந்தப் பெயரையே உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.

போன மாதம் தான் புது கார் வாங்கியிருந்தான். அவன் மனைவி சமீபத்தில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக இணைந்திருந்தார். காலையில் அவரை காலேஜில் கொண்டு போய் இறக்கிவிட்ட பின்னர் இவன் ஆபீஸ் வருவான். அப்படித் திரும்பி வரும் போது தான் இந்த விபத்து நேர்ந்திருக்கிறது.

ஆபத்தில் இருக்கும் நண்பனைச் சந்திக்கப் போகும் போது ஏதோ வில்லனின் பிடியில் சிக்கியிருக்கும் கதாநாயகியைக் காப்பாற்றப் போகும் கதா நாயகனின் மனநிலை ஒரு நிமிடம் வந்து போகும் போது அந்த இடத்திற்கு எனது பைக் போய்ச் சேர்ந்தது.

பல்லாவரம்-துரைப்பாகம் பைபாஸ் சாலையில் இருந்து வலப்புறம் திரும்பி மேடவாக்கம் செல்ல முயலும் போது மடிப்பாக்கத்தில் இருந்து நேராக வந்த ஒரு டெம்போவுடன் மோதியதில் இவனது காரின் இடது முன் புறம் முழுவதுமாக நொறுங்கியிருந்தது. டெம்போ நேராக வந்தது, இவன் வலது பக்கம் திரும்புகிறான். ஆகவே இவன் தான் பார்த்து வந்திருக்க வேண்டும் எனத் தோன்றினாலும் தன் மீது தவறே இல்லை என்றான். உண்மையாக இருக்கக் கூடும். இவன் பொய் சொல்லி நான் பார்த்ததில்லை. மோதியது டெம்போ. அதாவது மகேந்திரா ஜீப்பின் பாகங்களை மாற்றி மாட்டி டெம்போவாக உருமாற்றிய வண்டி.

நான் அங்கே போன பிறகு என்னுடைய செல்போனில் இருந்து இன்சூரன்ஸ் கம்பெனிக்குப் போன் செய்தான். இன்சூரன்ஸ் ஆட்கள் போலீஸ் புகார் எதுவும் தேவை இல்லை என்று தெரிவித்ததனர். அப்போது அந்த டெம்போவின் உரிமையாளரும் ஸ்பாட்டுக்கு வந்து சேர்ந்தார். ஆள் பார்ப்பதற்கு பொன்னம்பலம் போல இருந்தார். "இந்தா பாருங்க சார். இப்பவே என்னவா இருந்தாலும் போலீஸ்ல சொல்லி முடிச்சுக்க்கலாம். அப்பறமா எல்லாம் கூப்டா நான் வர மாட்டேன்" எனக் கறாராக அந்த ஆள் சொன்னதும், பெரிய அளவில் பாதிப்பு இருந்தததும் போலீஸில் பதிவு செய்து விடலாம் என எங்களைக் கருத வைத்தது.

கீழ்க்கட்டளை காவல் நிலையம் சென்று பம்மிக் கொண்டே நின்றோம். "அதான் சொல்லிட்டீங்கல்ல? வீட்டை ஒடச்சவனை நாங்க பாத்துக்கறோம்" என்று சொன்ன ரைட்டரிடம் "சார்..அவங்க வேற ஆளுங்க" என்று எங்களுக்கு முன்பே வேறு ஏதோ ஒரு கம்ப்ளைண்ட் கொடுக்க வந்திருந்த வயதானவர் விளக்கினார்.

நடந்த சம்பவத்தை விவரிக்கும் முன்பே "ஜங்சன்ல நடந்துதா இல்ல அதுக்கு இந்தப் பக்கம் நடந்துதா?" என்று கேட்ட அவர் ஜங்சனில் தான் நடந்தது என்பதை அறிந்ததும், "அது பள்ளிக்கரணை லிமிட்ல வரும்ல. அங்கே போய் சொல்லுங்ங" என்று சொல்லி அனுப்பி விட்டு நாங்கள் வாசலை அடையும் முன்பே, "நீங்க போக வேண்டாம்..நாங்களே இன்ஃபர்மேஷன் கொடுக்கறோம். யோவ் மாணிக்கம், கீழ்க்கடளைக்கு (அவர் சொன்ன ஸ்டேசன் நம்பர் நினைவு இல்லை) போன் பண்ணிச் சொல்லிருய்யா" என்று சொல்லி வைத்தார்.

தொன்னூறு நிமிட நேரம் காத்திருந்தும் யாரும் வராததால் நேராக பள்ளிக்கரணை ஸ்டேஷன் சென்று முறையிட்டு வந்தோம். முன்னர் சொன்ன ஸ்டேஷனில் இருந்து யாரும் தகவல் தரவில்லை என்றார்கள். சொல்லி விட்டு வந்த இருபதாவது நிமிடத்தில் ஒரு போலீஸ் ஜீப்பில் மூன்று பேர் வந்து சேர்ந்தனர். அதில் ஒருவர் வந்ததும் வராததுமாக ரைட்டிங் பேடில் இருந்த பேப்பரில் படம் வரைய ஆரம்பித்தார்.

வழக்கமான போலீஸ்காரருக்கு உரிய தொந்தி அடையாளத்துடம் இருந்த அவர்களில் யாரும் ஷூ அணிந்திருக்கவில்லை. வெறும் செருப்பு தான்.
"என்ன ஆச்சுப்பா" என்று வினவியவரின் மார்பில் ஆரோக்கியதாஸ் என்ற நேம் பேட்ஜ் இருந்தது.

"நான் நேர வந்துட்டு இருந்தேன் சார். இவரு ரைட் எடுக்கும் போது பாக்காம வந்து மேல மோதிட்டார்" என்று டெம்போ டிரைவர் சொல்ல வடிவேலுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

போலீஸ் வருவதற்குக் கொஞ்ச நேரம் முன்பு என்ன நடந்தது என்பதை என்னிடம் விவரித்துக் கொண்டிருந்தான். இவன் வலது புறம் திரும்புவதற்கு முன் நீண்ட நேரம் சந்திப்பில் காத்துக் கொன்டிருந்த்தால் எதிர் திசையில் துரைப்பாக்கத்தில் இருந்து வந்த வண்டிகள் எல்லாம் இவனுக்கு வழி விட்டு நிண்று விட்டனவாம். கார் பாதி திரும்பிய பிறகு நேராக வந்த டெம்போ இவனுக்கு இடது புறம் வேகமாக முந்திச் சென்று விட முயன்றதில் தான் மோதி விட்டதாம். அது தான் உண்மையாக இருக்க வேன்டும். என்னிடம் சொன்னதை அப்படியே அழுத்தமாக போலீஸிடமும் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியிருந்தேன்.

"என்ன சார் பாத்து வரக் கூடாதா?" இவன் அணிந்திருந்த பேண்ட் சட்டை எல்லாம் பார்த்து 'சார்' போட்டே விளித்தார்கள்.

"அவர் பொய் சொல்றாருங்க. நான் முகாவாசி கிராஸ் பண்ணிட்டு இருக்கும் போது என்னை டேக் ஓவர் பண்ணலாம்னு ராங் சைடுல வேகமா ஸ்பீடு எடுத்து டெம்போ மோதிருச்சுங்க" என்று சகல உணர்ச்சிகளோடு சொன்னான்.
'வேகமா ஸ்பீடு' அட..நம்ம வடிவேல் ஒருபொருட் பன்மொழியெல்லாம் யூஸ் செய்யறானே என்று என் இலக்கண அறிவு ஒரு நொடி எட்டிப் பார்த்து விட்டு காட்சியின் சீரியஸ்னஸ் கருதிப் பின் வாங்கியது.

அவன் பேசுவதில் அந்த காவலர்கள் சற்று அசெளகரியமாக உணர்ந்திருக்க வேன்டும். நம்ம ஊரில் போலிஸ்காரர் தன்னை 'சார்' போட்டு அழைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பு. இவனுக்கு இந்த அடிப்படைத் தத்துவம் கூடத் தெரியாமல் இருக்கிறதே.

"இன்சிடன்ட் நடந்தப்ப நாங்க ஸ்பாட்ல இல்லை. அதனால் இப்ப இருக்குற தடயங்களை வச்சு எங்க விதிமுறைப்படி கணிப்புல என்ன தோணுதோ அப்படித் தான் முடிவு செய்ய முடியும். நாங்கன்னு இல்லை, யாரா இருந்தாலும் இப்ப்படித் தான் செய்வாங்க. நடந்து போறவன் பாக்காமப் போய் கார்ல மோதினாக் கூட கார் ஓட்டறவன் மேல தான் தப்ப்புன்னு சட்டம் சொல்லும். அதே மாதிரி நேரா வர்றவன் மேல தப்பு இருந்தாலும் பாக்கறவங்களுக்கு ரைட் டர்ன் எடுக்கற உங்க மேல தான் தப்புன்னு தோனும்" இது இன்ன்னொரு காவலர்.

"நல்லா சொல்லுங்க சார். நேரா வந்த வண்டில மோதிட்டு எங்க மேல தப்பு சொல்றார்" என்று பொன்னம்பலம் எண்ணெய் ஊற்ற அரோக்கிய தாஸ் ஒரு ஏறு ஏறினார்.

"டேய் மயிரு..கார் வந்தா நீ மேல கொண்டு வந்து மோதிருவியா? ஸ்பீட் லிமிட் இந்த இடத்துக்கு என்ன தெரியுமா? சொல்லு. நான் பேசிட்டு இருக்கேன்ல ..ஒழுங்கா மூடிக்கிட்டு இரு" அவன் பம்மி விட்டான்.

வடிவேலைப் பார்த்துக் கூறினார். "சார். உங்களுக்கு இப்ப ரண்டு சாய்ஸ் இருக்கு. முதலாவது என்னன்னா..இந்த மாதிரி ரண்டு வண்டி ஆக்சிடன்ட் ஆகிருச்சுங்கற ரிப்பொர்ட் நாங்க கொடுக்கலாம். இதுல யார் மேல தப்புங்கற விவரம் வராது. அதிகபட்சமா இன்சூரன்ஸ் கம்பெனி கிட்ட இருந்து இருபதாயிர ரூபாய் வரை கிளைம் பண்ணலாம். இன்னொன்னு நீங்க உண்மையிலயே தப்பு டெம்போ மேல தான்னு நெனச்சீங்கன்னா கேஸ் ஃபைல் பண்னலாம். அதுல எத்தனை லட்சம் வேணாலும் கிளைம் செய்யலாம். ஆனா எனக்குத் தெரிஞ்சு கேஸ் பதிவு செஞ்சா உங்க பேர்ல தான் தப்புன்னு தீர்ப்பாகும். என்ன சொல்றீங்க."

இரண்டு வாகனங்களையும் ஸ்டேசனுக்கு எடுத்து வருமாறு இயம்பி விட்டு ஏட்டையா போய் விட்டார். அங்கே வந்து என்ன செய்யத் தீர்மானித்திருக்கிறோம் எனத் தெரிவிக்குமாறு எங்களுக்குச் சொல்லப்பட்டது.

வேகமாக வந்து மோதிய ஆள் மீது கேஸ் போட வேண்டுமென ஆரம்பத்தில் அடம் பிடித்த வடிவேல் இன்சூரன்ஸ் கம்பெனியில் விசாரித்து விட்டு தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற நிலைக்கு வந்தான். ஏ.பி.டி. மாருதியில் செலவு 18 ஆயிரம் தான் ஆகும் என்றார்கள். சரி போலீஸ் தரும் இன்சிடென்ட் ரிப்போர்ட்டே போதுமாக இருந்தது.

காவல் நிலையத்தில் மிச்சமிருக்கும் வேலைகளைத் தானே முடித்து விட்டு வருவதாகச் சொல்லி என் செல்போனை வாங்கிக் கொண்டவன் என்னை அலுவலகம் செல்ல வேண்டினான். அலுவலக வளாகத்தை நெருங்கும் போது நான்கரை மணி நேரம் ஓய்ந்திருந்த புயல் மீண்டும் வீச ஆரம்பித்து இருந்தது. ஆனால் வடிவேலுவின் புயல் ஓய இன்னும் ஆயிரம் ரூபாய் பாக்கி இருந்தது என்பதை நான் அறியவில்லை.

Thursday, September 28, 2006

ஸ்டைல் - ஒரு தமிழனின் பார்வை

-குப்புசாமி செல்லமுத்து

வாரா வாரம் நார்த் கேரொலினாவில் இருக்கும் தன் மனைவி மக்களைச் சந்திக்கச் சென்று விடும் என் ரூம் மேட் ராயலசீமாக்காரர் இந்த வாரம் இங்கேயே தங்கினார். ஆகவே வார இறுதியில் அவரது கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்த நடன இயக்குனர் லாரன்ஸ் நடித்த 'ஸ்டைல்' தெலுங்குத் திரைப்படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.

படம் இப்படித் தான் துவங்குகிறது. பிரபுதேவா புகழ் மிக்க டேன்சர். அவரோடு போட்டியில் கலந்து கொண்டால் தோற்று விடுவோம் என அஞ்சி அவரது காலை முடமாக்கி விட்டு நடனமாடி ஜெயிக்கிறார் வில்லன் (ஆண்டனி என்று நினைக்கிறேன்). பிரபுதேவாவிடம் இருந்த ஸ்பான்சர்கள் எல்லாம் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு ஆன்டனியை நோக்கிச் செல்கிறார்கள்.
மனம் நொந்து தற்கொலைக்கு முயற்சிக்கும் தேவாவை அவரது தங்கை தடுத்து நிறுத்தி ஊக்கமூட்டி வேறு யாருக்காவது பயிற்சி கொடுத்து ஆட வைக்கலாம் என யோசனை கூற அதன் படி ஒரு டான்சரைத் தேடுகிறார். இதெல்லாம் ஐதராபாத்தில் நடக்கிறது.

இன்னொரு பக்கம் விசாகபட்டினத்தில் ஒரு டான்ஸ் ஸ்கூலில் தரையைத் துடைக்கும் வேலை செய்கிறார் லாரன்ஸ். அங்கே நடக்கும் வகுப்புகளைப் பார்த்து தனியே ஆடுகிறார். பிரபுதேவாவை (விட நிஜமாலுமே ஜீவனோடு வேகமாக ஆடும்) லாரன்ஸ் அவரைத் தனது மானசீக குருவாக நினைக்கிறார். அந்த ஊரின் ஒரு நட்சத்திர ஓட்டலில் சந்தர்ப்ப வசமாக ஆடும் வாய்ப்புக் கிடைத்து அதில் பின்னிப் பெடலெடுக்கிறார்.

அவர் வேலை பார்க்கும் டேன்ஸ் ஸ்கூலுக்கு ஒரு கல்லூரி ஜோடி வருகிறது. தன் பாய்ஃபிரண்டைக் கடுப்பேற்ற லாரன்ஸுடன் நெருக்கமாக இருப்பது போல் நடிக்கிறார் அந்தப் பெண். சீக்கிரம் அவனை 'ஐ லவ் யூ' சொல்ல வைக்க அந்த ஐடியாவாம். இது தெரியாத நமது நாயகன் செல்போன், பர்த்-டே பார்ட்டி எனச் சுற்றிய பிறகு கடைசியில் ஆப்பு வாங்கிக் கொள்கிறார்.

அம்மணியின் காதல் நாடகத்தில் இருவரும் இணைந்து ஒரு முறை மாஸ்டர் இல்லாத போது ஸ்கூலில் டான்ஸ் ஆட, அதைக் கண்ட மாஸ்டர் வேலையில் இருந்து துரத்தி விடுகிறார். பிறகு சிரமப்பட்டுச் சொந்தமாக நாட்டியப் பள்ளி ஆரம்பித்து அக்கம் பக்கத்துக் குழந்தைகளுக்கு டேன்ஸ் சொல்லித் தந்து கொண்டிருக்கையில் ஜெமினி டி.வி.யில் 'டான்ஸ் பேபி டேன்ஸ்' நிகழ்ச்சியில் ஆடும் வாய்ப்புக் கிடைக்கிறது.

இதைத் தொலைக்காட்சியில் தற்செயலாகக் காணும் பிரபுதேவா, "இவன் தான் நான் தேடிய அவன்" என்று மகிழ்ந்து தன் தங்கையை வைசாக் அனுப்பி விசாரிக்க, அப்போது தான் நாம் முன்பு சொன்ன அம்மணி ஆப்பு வைத்துக் கொண்டிருக்கிறார். லாரன்ஸின் ஃபிளாஸ்பேக் ஒன்று தேவையில்லாமல் அப்போது முளைக்கிறது.

அவரது அம்மா டான்ஸ் ஆட ஆசைப்பட்டதும், திருமணத்த்திற்குப் பின்னர் அவரது அப்பா அதற்கு அனுமதிக்காததும் தெரிகிறது. அது மட்டுமல்லாமல் தாயின் தலையில் அடித்துப் பைத்தியமாக்கி விட்டுக் கூத்தியாளுடன் கும்மாளமடிக்கும் அப்பனைப் போட்டுத் தள்ளி விட்டு திருட்டு ரயிலேறி வைசாக் வந்தவராம். தேவையில்லாத அம்மா சென்டிமென்டைத் தவிர்த்திருக்கலாம். அம்மாவாக வருபவர் அபூர்வ ராகங்கள் ஜெயசுதா.

பிரபுதேவாவுடன் ஐதராபாத் திரும்பும் முன் ஒரு கோவிலின் முன்பு தன் தாயைக் காண்கிறார், அதுவும் சவமாக. சடங்குகளை முடித்து விட்டு மானசீக குருவின் இலட்சியத்தை நிறைவேற்ற அவரோடு போகிறார் நாயகன்.

பிரபுதேவாவால் லாரன்ஸுக்குப் பெண்டு நிமிர்கிறது. வெறித்தனமாகப் பயிற்சி செய்கிறார்கள். குருவின் தங்கை சீடனின் மீது தனி அன்பு காட்டுவது ஒரு சாறல். இப்படியாகப்பட்ட சமயத்தில் போட்டிகான நாள் வருகிறது.

லாரன்ஸ் மற்றும் அவரது குழுவை வில்லனின் ஆட்கள் கடத்திப் போய் தலைகீழாகக் கட்டித் தொங்க விடுகிறார்கள். போட்டில் அழைப்பு அறிவிப்பு வரும் போது கூட தொங்கிக் கொண்டே இருக்கும் டான்சர்கள், அரங்கத்தில் பதற்றத்துடன் பிரபுதேவா, ஆவேசத்துடன் ஸ்பான்சர்.. கதை முடிந்தது என்று நினைத்தால்..

திடீரென்று நாகர்ஜுனா தோன்றி ஸ்டைலாக சண்டை போட்டு லாரன்ஸை விடுவிக்கிறார். அதன் பிறகு அவர் எப்படிப் பயணித்து அரங்கம் வந்து அறிவிப்பு முடிவதற்குள் ஆடினார் என்று லாஜிக் பார்க்க வேண்டாம். நமக்கே எழுந்து ஆட வேண்டும் போல ஆகி விடுகிறது. அப்படி ஆடுகிறார்.

போட்டின் முதல் சுற்றுக்கும் இரண்டாவது சுற்றுக்கும் இடையில் லாரன்ஸ் காலில் புதைந்த துப்பாக்கிக் குண்டுகளை அகற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது விலனின் அடியாட்கள் பிரபு தேவாவையும், லாரன்ஸையும் கொலை செய்ய உள்ளே வந்து சக்கர நாற்காலில் அமர்ந்திருக்கும் பிரபுதேவாவை நோக்கி ஓங்கும் கத்தியை குருவைக் காப்பாற்றும் துரிதத்தில் லாரன்ஸ் பாய்ந்து பிடிக்க முயல, அதைத் தட்டி விட்டு ஒரு கம்பீர உருவம் தோன்றுகிறது.

அந்தக் காட்சியைப் பார்க்கும் போது பாமர ரசிகன், படித்த ரசிகன் எல்லோருக்கும் முடி நட்டமாக நிற்கும். நிஜம் தாங்க. மெகா ஸ்டார் சிரஞ்சீவி தான் அது. 'நீ போய் புரோக்ராமைக் கவனி. இவங்களை நான் கவனிச்சுக்கறேன்' என்று சொல்லி அவர்களைப் பந்தாடுகிறார். சும்மா சொல்லக் கூடாது, மெகாஸ்டார் மெகாஸ்டார் தான்.

நிகழ்ச்சி அறிவிப்பாளராக சுமன் வருகிறார். படிக்காதவன் படத்தில் ரஜினிக்குத் தம்பியாக ரம்யா கிருஷ்ணனுடன் காலேஜில் படிப்பாரே அதே சுமன் தான். பம்பரமாகச் சுழன்று லாரன்ஸ் டான்ஸ் ஆடி வெல்கிறார். போலீஸ் வில்லனைக் கைது செய்கிறது.

படத்தில் கதை ஒன்றுமே இல்லை. தேவையில்லாத அம்மா சென்டிமெண்ட், வலியப் புகுத்தப்பட்ட காதல் தோல்வி இவற்றை ஒதுக்கி விட்ட்டு நோக்கினால் லாரன்ஸ் தூள் கிளப்பியிருக்கிறார். சிரஞ்சீவி, நாகர்ஜுனா போன்றவர்கள் வெறு மூன்று நிமிடம் மட்டும் வந்து ஒரு சண்டை பண்ணும் அளவிற்கு ஆந்திர சினிமாவில் லாரன்ஸின் செல்வாக்கு இருக்கிறது. மெகா ஸ்டாரின் இந்திரா படத்தின் நடன அசைவுகள் லாரன்ஸ் வடிவமைத்தவை. அவர் ஆட்டுவிக்காத நாயக, நாயகிகளே இல்லை.

மொத்தத்தில் ஸ்டைல் ஒரு சராசரிக்கும் மேலான தெலுங்கு கார மசாலா.

ஒன்பதாம் வகுப்புக் கதை

- குப்புசாமி செல்லமுத்து

"ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம்" என்ற வரியுடன் ஒரு கதை எழுத வேண்டும் என்ற வேட்கை சமீப காலமாக என்னை ஆட்கொண்டிருந்தது. தொடக்கம் அப்படி இருக்க வேண்டும் என்று தான் விரும்பினேனே தவிர ராஜா கதை சொல்ல வேண்டும் என்ற வேகமோ அல்லது ராஜாக்களைப் பற்றிய அறிவோ எனக்கு இருந்ததில்லை.

பிறகு எதற்காக இவனுக்கு கதை எழுதும் வேலை என்று உங்களுக்குக்த் தோன்றலாம். வேறு ஒன்றும் இல்லை. போன வாரம் தமிழ் அய்யா சந்தியாவை அவள் எழுதிய கதைக்காகப் பாராட்டினார். அது எனக்குப் பொறுக்க முடியவில்லை.

சந்தியா எல்லாவற்றிலும் என்னை விட மட்டம் தான். இங்கிலீஷ் டியூசனில் ஒரு சென்டன்ஸ் சொல்லு என்று சார் கேட்கும் போது "Rama is a good buy" என்று நான் சொன்னால் உடனே "Sita is a good girl" என்பாள். அடுத்த தடவை "I shall reply to the letter you sent last week" என்று சொன்னால் விழிப்பாள்.

பள்ளி விழாவில் எந்தப் போட்டியாக இருந்தாலும் நான் தான் முதலிடம் வாங்குவேன். அப்படிப் பட்ட நானே இது வரை ஒரு கதை கூட எழுதியதில்லை. இவளால் எப்படிச் செய்ய முடிந்தது? இதற்கு ஏதாவது நிவாரணம் தேடியே தீர வேண்டும்.

பஞ்ச தந்திரக் கதை எதையாவது உல்டா செய்து விடலாமா? அல்லது மெகா சீரியல் கதையில் ஒரு பகுதியைச் சுட்டு விடலாமா? சேச்சே...வேண்டாம் பள்ளிக் கூடத்தில் அடல்ஸ் ஒன்லி கதையை அனுமதிக்க மாட்டார்கள். கதைக்கான கரு கிடைக்காததால் அந்த சிந்தனையைக் கொஞ்ச நாள் ஒத்தி வைத்தேன். இருந்தாலும் வன்மம் உள்ளூற இருந்தே வந்தது.

'உனக்குத் தலைகீழாக நின்றாலும் கணக்கு வராது' என்று கணக்கு வாத்தியார் ஓரிரு நாட்களில் சந்தியாவைத் திட்டினார். அவள் தலை கீழாக நின்றால் எப்படி இருக்கும் என்ற கீழ்த்தரமான கற்பனைகள் உதித்தது. இதற்கெல்லாம் குறைச்சல் இல்லை. ஆனால் கதை மட்டும் தான் வர மாட்டேன் என்கிறது.

அந்தப் பள்ளியில் மாணவர்களும், மாணவிகளும் பேசிக் கொள்வதே அபூர்வமான நிகழ்ச்சி. அப்படியே பேசினாலும் அது அனைவருக்கும் தெரிந்து விடும். இருந்தாலும் ஒரு நாள் டியூசன் முடிந்து சைக்கிளை எடுக்கும் போது, "எங்கம்மா உன்னைய வீட்டுக்கு வரச் சொன்னாங்க. என்னைக்கு வாரே?" என்று கேட்டாள். நாக்கு வறண்டு, கை கால் எல்லாம் வெடவெடத்து விட்டது. இன்னொரு நாள் வருவதாகச் சொல்லி தப்பித்து வந்தேன்.

நல்ல வேளை பசங்க யாரும் அதைப் பார்க்கவில்லை. 'பசங்க' என்றால் ஏதோ ஐம்பது பேர் என நினைத்துக் கொள்ள வேண்டாம். என் வகுப்பில் இருக்கும் 17 பையன்களில் நானும், பழனிச்சாமியும் மட்டுமே டியூசனுக்க்குப் பெயர் கொடுத்திருந்தோம். மற்றவர்கள் எல்லாம் பெண்கள் தான். இந்தக் கண்ணாடிக் கந்தசாமி வாத்தியார் சிறப்பு வகுப்பில் ஏற்றும் அறிவு தீபத்திற்காகவோ அல்லது புள்ளைகளை சைட் அடிக்கவோ தான் நாங்கள் இருவரும் வருகிறோம் என்று நினைத்தால் அது தவறாகும். சனி, ஞாயிறு எல்லாம் டியூசன் இருப்பதாகச் சொல்லி சினிமாவுக்குப் போவதற்கே இந்த ஏற்பாடு. இதில் பழனிச்சாமி வார நாட்களில் வரவே மாட்டான். வாத்தியார் கேட்டால் 'தோட்டத்துல வேலை இருந்துதுங்க சார்' என்று கூறி விடுவான்.

வியர்வை படிந்த கிராமங்களில் மக்கள் இளைப்பாறுவதற்கும், சொந்த பந்தங்களோடு கூடி மகிழ்வதற்கும் நடத்தப்படும் திருவிழாக்களில் மாவிளக்கு எடுப்பார்கள். சந்தியாவின் கிராமத்தில் நடக்கும் கோவில் விசேசத்தை வேடிக்கை பார்க்கப் போகலாமென்று பழனிச்சாமி ஐடியா கொடுத்தான்.

இருவரும் போனோம். மாவிளக்கு எடுத்து வரும் பெண்களில் சந்தியாவும் ஒருத்தி. தாவணியில் அப்போது தான் பார்க்கிறேன். பார்ப்பதற்கே படபடப்பாக இருந்தது. மிக அழகாகத் தெரிந்தாள்.

அதன் பிறகு ஏனோ கதை எழுத வேண்டும் என்ற நினைப்பே வரவில்லை. கவிதை தான் வருகிறது.

ஆம்ஸ்டர்டாமும் அந்த மூன்று மணி நேரமும்

- குப்புசாமி செல்லமுத்து

அந்த ஊரைப் பற்றி நினைத்தாலே சக்திவேலுக்கு ஒரு விதப் பரவசம் தொற்றிக் கொள்ளும். தனது வாழ்வில் ஐந்தாவது முறையாக ஆம்ஸ்டர்டாம் நகரில் தரை இறங்குகிறான். அதில் இரண்டு தடவை நெதர்லாந்து நாட்டுக்கு நேரடியாகவே வந்த அனுபவம். மீதம் மூன்று முறை இந்தியாவில் இருந்து அமெரிக்கா பயணிக்கையில் விமானம் மாறுவதற்காக.

ராயல் டச் KLM ஏர்லைன்ஸ் பணிப்பெண் இவனுக்குப் பக்கத்து இருக்கையில் இருந்த ஸ்பெயின்காரனை சீட்-பெல்ட் போடுமாறு சிரித்துக் கொண்டே சொல்கிறாள். அவன் பெயர் வின்சென்ட் என்று நினைவுபடுத்திக் கொண்டான் சக்தி. மும்பை விமான நிலையத்தில் இருந்து கிளம்பியவுடன் அனைவருக்கும் உணவு கொடுக்கப்பட்ட போது தன்னைப் போலவே எக்ஸ்ட்ரா மீல்ஸ் வாங்கித் தின்ற வின்சென்ட் தன் அலைவரிசையில் இருப்பதாக உணர்ந்து மின்னஞ்சல் முகவரி பரிமாறிக் கொண்டிருந்தான். எட்டரை மணி நேரப் பயணத்தின் சலிப்பை உள்ளே போன இரண்டு பாட்டில் ரெட்-ஒயின் போக்கியிருந்தது.

ரோட்டர்டாம் நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்த விமானம் இன்னும் சில நிமிடங்களில் Schiphol விமான நிலையத்தை அடைந்து விடும். ரோட்டர்டாமில் மிகப் பெரிய துறைமுகம் இருக்கிறது. ஐரோப்பாவின் பல நாடுகளுக்கும் கப்பல் சரக்குகளை இந்தத் துறைமுகத்தில் இருந்து ஆறு வழியாக எடுத்துச் செல்கிறார்கள் எனச் சென்ற பயணத்தில் அறிந்திருந்தான். Ede நகரில் இருந்து யாழ்ப்பாணத் தமிழர் எழிழன் ரோட்டர்டாம் அழைத்துச் சென்றிருந்தார்.

மாத நாவல்களில் 'கப்பல் போன்ற கார் சாலையில் வழுக்கிக் கொண்டு சென்றது' எனப் பல முறை வாசித்தவனுக்கு விமானம் தரையிறங்கிய போது அதை விட மிகுதியான அனுபவம் கிடைத்தது. சலனமற்ற மீன் தொட்டியில் குட்டி மீன் நீந்துவது போல அமைதியாக மென்மையானதாக அந்நிகழ்வு அமைந்தது. அவனுக்குத் தெரிந்த மெட்ராஸ் வின்டேஜ் சரக்கை விட லேண்டிங் 'ஸ்மூத்'தாகத் தோன்றியது அவனுக்கு.

இதோ Schiphol நிலையம். கையின் ஐந்து விரல்களைப் போல விரிந்திருக்கும் ஏர்போர்ட். அட்லாண்டா விமானத்திற்கு இன்னும் மூன்று மணி நேரம் அவனுக்கு இருந்தது. சற்றுத் தொலைவு நகர்ந்து ஆளில்லாப் பகுதியின் ஒரு நாற்காலியில் உடல் இறுக்கம் தளர்த்தி அமர்ந்தான். மனது ஒரு வகை ஒட்டுதலை உணர்ந்தது. பாரிஸ், லண்டன், ஃபிராங்க்பர்ட் ஆகிய ஊர்கள் வழியாக அமெரிக்க போகும் போது இந்த உணர்வு உண்டானதில்லை.அவன் முதன் முதலாக வந்த வெளிநாடு என்பது மட்டும் தான் காரணமா என்று அவனுக்கு விளங்கவில்லை.

பிளஸ் 1 கோயம்புத்தூரில் சேர்ந்து விட்டு முதல் வாரம் பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் வந்து இறங்கிய போது இதே போன்ற உணர்வு 12 வருடங்களுக்கு முன்பு உண்டானது. பெங்களூரில் வேலைக்குச் சேர்ந்த பின் திருப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கிய சமயத்திலும், முதல் ஐரோப்பியப் பயணம் முடித்துச் சென்னை விமான நிலையத்தில் இறங்கிய போதும் இதே உணர்வு தான்.

ஆறு ஆன்டுகளுக்கு முன் இதே விமான நிலையம் மூலமாகத் தான் ஐரோப்பிய மண்ணில் கால் வைத்தான். பழைய சட்டை, ஜீன்ஸ் போட்டுக் கொண்டு வெளியே வந்தவனுக்கு கோட், சூட், டை அணிந்திருந்த கார் ஓட்டுனர் இவன் பெயர் எழுதிய அட்டையைக் கையில் பிடித்துக் கொண்டு நின்றது சிரிப்பாக இருந்தது. டேக்சி கூட பென்ஸ் கார்.

ஐரோப்பிய யூனியன் உருவானது அவர்களுக்கு நல்லதோ இல்லையோ தனக்கு நல்லது என்று அப்போது நம்பினான். ஒரு நாடு கொடுத்த விசாவை வைத்துக் கொண்டு எல்லா நாடுகளுக்கும் பயணிக்கலாமே! பாரிஸில் ஈஃபில் டவர், மோனாலிசா, ஜெர்மனி சுற்றுலா எனத் திரிந்து செலவழித்த காலம்.

சில விஷயங்களை உணர மட்டுமே முடியும், சொற்களால் விவரிக்க முடியாது என்ற வாதத்தை நம்பியிருந்திராத சக்திக்கு நெதர்லாந்தில் ஒரு தெற்காசியாவைச் சேர்ந்தவனுக்குக் கிடைக்கும் விருந்தோம்பலை ஜெர்மனியில் கிடைக்கும் விருந்தோம்பலோடு ஒப்பிட முடியவில்லை.

டச்சுக்காரர்கள் அவன் மனதில் உயர்ந்து நின்றனர். தேசங்களின் குடிமக்கள் அனுபவிக்க்கும் வாழ்க்கைத் தரத்தின் அடிப்படையிலான HDI (Human Development Index) குறியீட்டின் படி கனடா, நீயூசிலாந்து போன்ற நாடுகளுடன் உயரிய இடத்தில் ஹாலந்து இருக்கிறது.

ஐரோப்பாவில் தங்களைத் தாங்களே 'லார்ட்' என அழைத்துக் கொண்ட வம்சத்தினர் ஆங்கிலேயர்கள். பண்டைய இங்கிலாந்தில் யாரையாவது கேலி செய்ய விரும்பினால் டச்சுக்காரர்களோடு ஒப்பிடுவார்களாம். 'புண்ணாக்கு' என்ற சொல்லுக்கு 'மாடுகளும் டச்சுக்காரர்களும் உண்ணும் உணவு' என்று அகராதிகளில் கூட இருந்ததாகக் கேள்விப்பட்டது சக்திக்கு நினைவு வந்தது. கும்பலாக ஒரு உணவகத்திற்குச் செல்லும் போது அவரவர் உண்டதற்கு அவரவரே பணம் கொடுப்பதை 'டச்சு டிரீட்' என்றழைப்பது இப்போது இந்தியாவில் கூட வழக்கமாக இருகிறது.

டச்சுக்காரர்களின் தேசிய நிறம் ஆரஞ்சும், மஞ்சளும் கலந்த ஒரு நிறம். இதை உணவு மேசை உரையாடலில் அறிந்து சக டச்சு ஊழியரிடம் "அப்போ நீங்க டிராஃபிக் யெல்லோ லைட் எரியும் போது எந்திரிச்சு நின்னு சல்யூட் அடிப்பீங்களா?" என்று கேட்டு வாங்கிக் கட்டிக் கொண்டது நினைவு வந்தது.

உட்கார்ந்த இடத்தில் இருந்து கண்ணாடிச் சுவர்களுக்கு வெளியே ஓடுதளங்களில் நகரும் செயற்கைப் பறவைகளைப் பார்த்தபடியே தனக்கும் இந்த ஊருக்கும் இருக்கும் இனம்புரியாத உறைவை எண்ணி வியந்தபடியே நினைவுகளை மேய விடுகிறான். தனது இருக்கைக்குக் கீழே ஏதாவது ரயில் ஓடிக்கொன்டிருக்கும் என அவனுக்குத் தெரியும். நிலப் பரப்பில் விமான நிலையம். நிலத்தடியில் ரயில் நிலையம். அங்கிருந்து நாட்டின் பிற ஊர்களுக்குச் சுலபமாகப் போய் விடலாம்.

வெள்ளைத் தோல் இல்லாதவர்கள் எல்லோரிடமும் இப்போது செக்யூரிட்டி கெடுபிடி அதிகம். இரண்டாயிரமாவது வருடம் இப்படி இல்லை. லக்கேஜ் எல்லாம் செக்-இன் செய்த பிறகு இதே விமான நிலையத்தில் உச்சியில் போய் நின்று பொள்ளாச்சி பஸ்டண்டில் நிற்கும் கோவை பஸ்களைப் போல வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விமானங்களின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டதைப் போல இன்னொரு நாள் வராது.

மூன்று நிமிடத்திற்கு ஒரு விமானம் தரை இறங்கும் அல்லது வானேறும் இந்த ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் டச்சுப் பயணிகளை அதிகம் பார்க்கவே முடியாது. எல்லாம் கனைக்டிங் ஃபிளைட் பிடிக்கும் நபர்கள் தான். வெறும் ஏர்ஃபோர்ட் மட்டும் கட்டி விட்டுக் காசு சம்பாதிக்கிறது கடல் மட்டத்திற்குக் கீழ் இருக்கும் இந்த நாடு.

காமராஜர் காலத்தில் இருந்தே விவாதிக்கப்படும் சேது சமுத்திரம் மட்டும் மட்டும் வந்திருந்தால் உலகில் மிகப்பெரிய துறைமுகங்களின் வரிசையில் ரோட்டர்டாம், சிங்கப்பூர் என்பது மாறி ரோட்டர்டாம், தூத்துக்குடி என இருந்திருக்கும் என்பது நிச்சயம். தென் தமிழகத்தின் பொருளாதார நிலைமையையே அது மாற்றிப் போட்டிருக்கும். சக்தியின் சமூக அக்கறை அவ்வப்போது இப்படித் தலையெடுக்கும் சமயத்தில் அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நினைப்பு வந்து போகும்.

மூன்று மணி நேரம் ஒரே நேர் கோட்டில் காரில் பயணித்தால் இந்த நாட்டின் எல்லையைக் கடந்து விடலாம். கோழி இறைச்சி உற்பத்தி, பால் உற்பத்தி போன்றவற்றில் உலக அளவில் முக்கிய இடத்தை வகிக்கிறது. அவர்களது மலர் உற்பத்தி குறித்துச் சொல்ல வேண்டியதே இல்லை. கோடையில் நடக்கும் நெதர்லாந்து மலர்க்கண்காட்சி ஐரோப்பா முழுவது பிரபலம். வண்டி ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் பார்க்கும் வழக்கமுள்ளவர்கள் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா..அட இஸ்ரேல் வண்டிகளைக் கூட அங்கே காணலாம். அந்நியம் படத்தில் விக்ரம் சதாவைப் பார்த்து வார்த்தைக் கடல் வற்றி விட்டது என்று பாடுவது நேதர்லாந்தின் டியூலிப்ஸ் தோட்டத்தில் தான்.

ஒரு சராசரி டச்சுக்காரரின் மனதில் ஆம்ஸ்டர்டாம் நகரம் ஒதுக்கப்பட்ட பகுதியாகவே இருக்கிறது. அவன் சென்ற முறை பணியாற்றிய ஊரில் இருந்து ஆம்ஸ்டர்டாமுக்கு சுமார் 40 நிமிடம் ரயிலில் வர வேன்டும். கல்யாண் ராவுடம் ஒரு வெள்ளிக்கிழமை இரவு அங்கே சென்றான். 'காந்தி' என்ற பெயரில் ஒரு பாகிஸ்தானியர் நடத்தும் இந்திய உணவகம் அவனுக்கு வியப்பாக இல்லை. ஏனென்றால் அதற்குச் சில நாட்கள் முன்பு தான் ஒரு பல்கலைக் கழகத்திற்குச் சென்று இந்தியா-பாகிஸ்தான் மாணவர்களோடு இணைந்து தீபாவளி கொண்டாடிவிட்டு வந்தான்.

ஆம்ஸ்டர்டாம் இரவில் தான் விழிக்கிறது. பாவ நகரம் (Sin city) என்று அதைக் கூறுவார்கள். ரெட் லைட் டிஸ்ட்ரிக்ட் என அழைக்கப் படும் பகுதி அதன் சிறப்பம்சமாம். இந்த இடத்திற்கு வருவதற்காகவே பல அமெரிக்கர்கள் ஐரோப்பா பயணிப்பதாக அவனிடம் சொன்னார்கள். கண்ணாடிச் சுவருக்கு உள்ளே அரை ஆடையோடு நின்று தெருவில் நடக்கும் நபர்களை அழைக்கும் அழகிகள், ஒரு வாடிக்கையாளர் கிட்டியவுடம் திரச்சீலையை மூடி விடுவார்கள். ஆக்சன் முடிந்து அந்த நபர் வெளியே வந்ததும் மேலும் திரை விலகி விளிப்புகள் தொடரும். இரவு செல்லச் செல்ல தன்னை யாரும் நெருங்கவில்லை என்றால் 'இலவசமாக கடலை போடுங்கள் காசு வேண்டாம்' என அழைக்கும் பெண்களும் உண்டு. பாவம் அவர்களுக்கும் நேரம் போக வேண்டுமே. அந்த ஏரியாவில் இந்தியப் பெண்களுக்கு படு கிராக்கி.

சட்டப் பூர்வமாக இந்த வேலைகள் நடக்கும் இப்பகுதியில் சட்ட விரோதமான செயல்கள் நடப்பதில்லை என்பதை அவனால் நம்ப முடியவில்லை. குழந்தைகள், பெண்களோடு சுற்றுலாப் பயணிகள் வந்து வேடிக்கை பார்த்து விட்டுச் செல்கிறார்கள். உலகின் இன்னொரு பாவ நகரமான லாஸ் வேகாஸ் நகரத்தில் கூட இதெல்லாம் நடந்தாலும், வாரக் கடைசிகளில் பிற ஊர்களில் இருந்து அங்கே போய் காசு சம்பாதித்து வரும் சராசரி அமெரிக்கப் பெண்கள் இருந்தாலும், செக்ஸ் கேப்பிட்டல் என்று ஆம்ஸ்டர்டாமைத் தான் சொல்கிறார்கள்.

இருபத்தி இரண்டு வருட வாழ்வில் இதுவரை அமையாமல் அன்று அமைந்த வாய்ப்பைப் பயன்படுத்த சக்தி விரும்பினாலும் அந்தப் பெண்கள் சொன்ன தொகையை X 20 (அப்போது யூரோ வரவில்லை. கில்டர் தான்) என்று நம்ம ஊர் கரன்சியில் கணக்குப் போட்டுப் பார்த்துப் பின் வாங்கி விட்டான். துணைக்கு வந்த கல்யான் ராவ் மட்டும் லைவ் ஷோ எல்லாம் பார்த்தான். 'Good boys go to heaven. Bad boys go to Amsterdam' என்ற வாசகம் பொருந்திய டீ.ஷர்ட் ஒன்றும் வாங்கினான்.

மற்றவர்கள் டச்சுக்காரர்களைக் கிண்டல் பண்ணினால் இவர்கள் பெல்ஜியம் மக்க்களைக் கிண்டல் செய்கிறார்கள். நமது சர்தார்ஜி ஜோக்க்குகள் மாதிரி இவர்களது பெல்ஜியம் ஜோக்குகள் அறியப்படுகின்றன. ஒரு டச்சுக் குழந்தை சக்தியிடம் ஒரு கடி ஜோக் சொன்னது.

"ஒரு பெல்ஜியம் ஆள் பாலைவனத்துல கார் ஜன்னலைத் தூக்கிட்டு நடக்குறான். ஏன் தெரியுமா?"

"தெரியல சொல்லு"

"பாலைவனம் சூடா இருக்கும்ல. அதனால கார் ஜன்னலைத் திறந்து காத்து வாங்க"

பெல்ஜியத்தில் ஒரு பகுதியினர் டச்சு மொழியும், இன்னொரு பகுதியில் பிரெஞ்சு மொழியும் பேசுகிறார்கள். இருந்தாலும் பெல்ஜிய டச்சு மக்கள் தங்களை டச்சுக்காரர்கள் என அழைப்பதில்லை என்று சக்திக்கு சொல்லப்பட்டது. பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப் நகரில் திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் இருக்கிறது.

நினைவுகள் கலைந்தோட செக்யூரிட்டி செக் அழைப்பு வந்தது. அதற்கு முன் வயிறு கலக்கியதைச் சரி செய்ய டாய்லட் சென்று வந்தான். பல முறை பேப்பர் உபயோகப்படுத்திப் பழகியிருந்தாலும் கழுவாமல் திரிவதில் இருக்கும் அசெளகர்யம் குறைந்தபாடில்லை. மறக்காமல் ஒரு மக் வாங்கி கூடவே எடுத்து வந்திருக்கிறான்.

செக்யூரிட்டி செக்கில் இவன் சொன்ன 'குத் மார்கன்' க்கு ஒரு சிரிப்புச் சிரித்து விட்டு பாஸ்போர்ட்டில் இருந்த பழைய அவர்கள் நாட்டு விசாவைப் பார்த்து விட்டு டச்சு பெண் போலீஸ் 'Do you speak Dutch? How do you like this country?' என்று ஆவலுடன் கேட்டது. கொஞ்சம் கடலை போட்டு விட்டு உள்ளே வந்தவன், Okai. From one material word to another. India to US என்று எண்ணிக் கொண்டான்.

Saturday, September 23, 2006

டானிக் மனிதர் - பால்ராசு

பத்தாம் வகுப்பு முடித்து பதினொன்றாம் வகுப்பிற்கு கோவையின் பழம்பெரும் பள்ளி ஒன்றில் சேர்ந்திருந்த காலம். பால்ராசை அப்போது தான் முதன் முதலாகப் பார்த்தேன். அவன் படித்த எலுகாம் வலசு பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றிருந்தான். நானும் எனது பள்ளியில் முதல் மார்க் என்றாலும் அவனை விட சுமார் 50 மார்க் குறைவாகவே எடுத்திருந்தேன்.

நாங்கள் இருவருமே ஒரே பூகோளப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஒரே மாதிரியான குடும்பப் பின்னணி கொண்டவர்கள் என்பதும் ஒரு ஒற்றுமை. மைக்கேல்ஸ் ஸ்கூல் விடுதியில் தங்க இடம் கிடைத்தது. அங்கே கண்டிப்பாக ஏதாவது ஒரு கேம்ஸ் ஆடியே தீரவேண்டும். பால்ராசு வாலிபால் ஆடுவது மிக வேடிக்கையாக இருக்கும். பந்தின் திசைமாற்ற வீதம் அவனின் இடமாற்ற வீதத்தோடு எதிர்மறைத் தொடர்பு உடையதாக இருக்கும்.

டாக்டர் ஆவதே இலட்சியம் என்று இடைவிடாது உயிரியல் பாடம் படித்துக் கொண்டே இருப்பான். அதனால் கணக்கில் போதுமான கவனம் செலுத்தினானா என்று தெரியவில்லை. நானெல்லாம் பத்தாவதில் 'தவளையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை படம் வரைந்து பாகங்களைக் குறி' என்ற கேள்வியில் இருந்தே உயிரியல் சங்கதியில் இருந்து தூரமாக விலகி நிற்க ஆரம்பித்து விட்டேன். பிளஸ்-2 பயாலஜி தேர்விற்கு முந்தைய நாள் டி.வி.யில் 'தூறல் நின்னு போச்சு' படம் பார்த்துக் கொண்டிருந்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பொறியியல் கல்லூரியில் எனக்கு சுலபமாக இடம் கிட்டியது. ஜி.டி.நாயுடு காலேஜ், நிறைய மரம் இருக்கிறது போன்ற காரணங்களால் (இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது) GCT யில் சேர்ந்தேன். பால்ராசு நினைத்தபடி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்ல்லை. முதல் தர பொறியியல் கல்லூரியிலும் இடம் இல்லை. நினைத்திருந்தால் குமருகுரு போன்ற ஏதாவது ஒரு காலேஜில் பேமெண்ட் சீட் வாங்கியிருக்கலாம். ஆனால் அவனோ, அவன் குடும்பத்தின் பொருளாதாரச் சூழலோ அதை அனுமதிக்கவில்லை. முடிவாக கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் பி.எஸ்.சி. அக்ரி படிப்பில் சேர்ந்தான்.

மருதமலைச் சாலைக்கு வடக்குப் பக்கம் உள்ள வளாகத்தில் தெர்மல் லேப், மெஷின் டிசைன் என நான் உலவிக் கொண்டு இருந்த போது, அதே சாலைக்குத் தென் புறமாக மண் வளம், மகசூல், பூச்சிக் கொல்லி என்று காக்கி டவுசரோடு அலைந்து கொண்டிருந்தான் பால்ராசு.

நான்கு வருடக் கல்லூரி வாசத்தில் ஏழெட்டு முறை தான் அவனைச் சந்தித்து இருப்பேன். இறிதியாண்டு, புராஜெக்ட் ஒர்க், கேம்பஸ் இன்டர்வ்யூ என்ற நீரோட்டத்தில் ஐதராபாத் வந்து கரை ஒதுங்கினேன். பால்ராசைப் பற்றிய நினைவு அறவே இல்லாமல் போனது. ஊரக வளர்ச்சித் துறை எதிலாவது வேலை செய்து கொண்டு இருப்பான் என நினைத்துக் கொள்வேன். சில ஆண்டுகள் கழித்து அவனது தந்தை டெம்போவில் அடிபட்டு இறந்து விட்டதாகக் கேள்விப்பட்டேன்.

பின்னர் ஒரு நாள் ஊருக்குப் போன போது நாங்கள் (கோவையில்) படித்த பள்ளியில் பால்ராசுக்குப் பாராட்டு விழா நடந்ததாகச் சொன்னார்கள். அவன் ஐ.ஏ.எஸ். ஆஃபீசர் ஆகிவிட்டானாம்.மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
சொந்த மாமன் மகளையே மணம் செய்திருக்கிறானாம்.

அவனது மானமார் மூலம் பால்ராசின் செல்போன் நம்பர் வாங்கி அழைத்தேன். பையன் இமாச்சலப் பிரதேசத்தில் ஏதோ ஒரு ஊரில் சப்-கலெக்டராக இருக்கிறான். அன்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவரிடம் உரையாடல் இருந்ததாகச் சொன்னான்.

அண்ணமாலை படத்தில் ரஜினிகாந்த் ஒரே பாடலில் பெரிய ஆளானதைப் போல அமையவில்லை பால்ராசின் வளர்ச்சி. பி.எஸ்.சி. அதன் பிறகு எம்.எஸ்.சி. அதன் பிறகு வேறு ஏதோ படிப்பு, தொடர்ந்து பி.எச்.டி. என்று படித்துத் தள்ளியிருக்கிறான். அது போதாதென்று கடைசியாக ஐ.ஏ.எஸ்.
தனது குறிக்கோளில் கவனம் சிதறாமல் எடுத்த காரியத்தை முடித்த டாக்டர்.பார்ராசு ஐ.ஏ.எஸ். அவர்களோடு (ஒரு மரியாதை தான்) ஒப்பிடுகையில் வாழ்க்கையில் எதைத் தேடி ஓடுகிறோம் என்ற முகப்பு இல்லாமல் 'ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்' என்று குழம்பும் இன்றைய இளைஞர்கள் கீழான நிலையில் இருக்கிறார்கள்.

என்னவோ படித்தோம், வேலைக்குச் சேர்ந்தோம், கிரடிட் கார்ட் வாங்கினோனம், செலவு செய்தோம் என்ற அற்ப வாழ்வு வாழாமல் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் பால்ராசு. தன் மகனை டாக்டர் ஆக்க வேண்டுமென அவரது தந்தையார் தான் அதிகம் ஆசைப்பட்டார். அந்தக் கனவை மகன் நிறைவேற்றவில்லை என்றாலும், தந்தையின் ஆவி மகிழ்ச்சியாகவே இருக்கும்.

நாடு சரியில்லை, மக்கள் சரியில்லை, அரசியல் வாதிகள் சரியில்லை என்று குறை சொல்வதால் மட்டுமே மாற்றங்கள் வராது. You focus on where you can make a difference. சாக்கடை நாறுகிறது என்று அதிலேயே துப்பிவிட்டுச் செல்லாமல் உள்ளே இறங்கி (நாட்டை) சுத்தப் படுத்தும் மனிதர் பால்ராசு.

வாழ்த்துக்கள் நண்பனே!! ஒரு நாள் உன்னை வெளியுறவுத் துறைச் செயலாளராகவோ அல்லது ஐ.நா.விற்கான இந்தியத் தூதராகவோ சந்திப்பேன்.

Tuesday, September 19, 2006

பவுடர் அடிக்கலியாடா?

- குப்புசாமி செல்லமுத்து

"பவுடர் அடிக்கலியாடா?" காலையில் குளித்து வந்தவுடன் அம்மா கேட்ட முதல் கேள்வி. எனக்கு நினைவு தெரிந்து கடைசியாக டால்கம் பவுடர் பூசியது ஏழாவது படித்த போது என்று ஞாபகம். அதன் பிறகு கவனம் காலப் போக்கில் வெவ்வேறு திசைகளில் திரும்ப புறத் தோற்றத்தைப் பராமரிப்பது குறித்தான கவலைகள் இல்லாமலே போனது.

சிறு வயதிலேயே துருத்திக் கொண்டு வந்த முன்னம் பற்கள் இரண்டிற்கும் கிளிப் போட வேண்டும் என்று கூட நினைத்ததில்லை. எங்கள் வட்டாரத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறையக் குறைய குடிநீரில் ஃபுளோரைடு செறிவு கூடியதில், நிறையப் பேரின் பல்லில் கறை படிந்திருந்தது. போன வாரம் அடையார் அப்போலோ டென்டல் கேர் பல் மருத்துவ மனையில் ஞானப்பல்(wisdon tooth) அறுத்து எடுத்த போது, "எல்லாப் பல்லுக்கும் செராமிக் கேப் போட்டால் கறையை மறைத்து விடலாம்" என்று சொன்னார்கள். அதற்கு என்ன செலவாகும் என்ற கேள்விக்கு அவர்கள் சொன்ன பதில் லோக்கல் அனஸ்தீசியாவை மிச்சம் செய்வதற்கோ என்று கூடத் தோன்றியது. மயக்கம் வராத குறை தான்.

ஆகவே இப்போதும் பவுடர் எல்லாம் பூச முடியவில்லை. அப்படியும் பூசினாலும் குங்குமப் பொட்டுக் கவுண்டர் படத்தில் தன் மகனுக்கு ரம்பா செய்யும் மேக்-அப்பைப் போலத் தான் இருக்கும் என்பது எனக்குத் தெரியும். அதை விடுங்க. ஞாயிற்றுக் கிழமை காலையில் இவ்வளவு சீக்கிரம் எழுந்து, சவரம் செய்து, குளித்து ஆயத்தமானது இது தான் முதல் முறை.

மூன்றடி தண்ணீர் அமராவதியில் ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் ஆறு மூன்றடி ஆழமாகி இருக்கிறது தெரியுமா? ஆம்.. ஒரு காலத்தில் இபோதையை தண்ணீர் மட்டத்தில் மணல் படுகை இருந்ததை அறிவேன். சிலர் திருட்டுத் தனமாகவும், அரசாங்கமே அதிகாரப் பூர்வமாகவும் மணல் அள்ளியதால் ஏற்பட்ட விளைவு. உடுமலைப் பேட்டைக்குத் தெற்கே இருக்கும் அணைக் கட்டில் இருந்து ஆறு கவிரியில் கலக்கும் வரை இதே ஆழம் மணல் குறைந்திருப்பதைத் தான் இது காட்டுகிறது. ஆற்று மணல் திருடுவது தாய்ப்பாலைத் திருடி விறபதற்குச் சமம் (நன்றி: தியோடர் பாஸ்கரன்). நிலத்தடி நீர் மட்டம் குறைவதற்கும் இதற்கும் நேரடித் தொடர்பு உள்ளது.

கடக்கும் போதே சில வழுக்குப் பாறைகள் காலில் தட்டுப் படுகின்றன. மணலே இல்லாமல் வெறும் பாறை மட்டுமே உடைய ஆறு என நொய்யல் ஆற்றைத் தான் சிறு வயதில் எனக்கு அடையாளம் சொன்னார்கள். இப்போது எல்லா ஆறுகளுக்கும் அதே கதி தான்.

எது எப்படியோ. ஒரு வழியாக நதியைத் தாண்டி ஈரத் துணியெல்லாம் கழட்டிப் போட்டாச்சு. அயர்ன் செய்த சட்டை, பேண்ட் அணிந்து, ஷூ மாட்டிக் கொண்டு ஏழேகால் பஸ்ஸில் தாராபுரம் போக வேண்டும். இன்டர்வியூவுக்குப் போகும் போது கூட மூனு மாசம் தொவைக்காத ஜீன்ஸ் பேண்ட் போடுற ஆள் இன்னிக்கு இப்படி இருக்கறத நெனைச்சா சிரிப்பு தான் போங்க. மோளக் கவுண்டம் புதூர் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு இருக்கும் போது, "கெடிகாரம் கட்டலியா??" மறுபடியும் அம்மா. நேரம் பார்க்க செல் போன் இருப்பதால் கடிகாரத்தின் பயன்பாடு சமீப காலமாகக் குறைந்திருந்தது. "கெடிகாரம் கட்டி, கண்ணாடி கிண்ணாடி போட்டாத் தான படிச்ச பயனாட்ட இருக்கு(ம்). எப்பப் பாத்தாலும் பழைய சட்டையப் போட்டுக்கிட்டு ஆடு மேக்கற பயனாட்ட(ம்) இருக்கறீன்னு மாமன் பேசுது" பூவுலகில் மாபெரும் மேதாவி, உலக ஞானத்தில் நிகரற்று விளங்குவது தனது தம்பி தான் என்ற நினைப்பு அந்த வார்த்தைகளில் எதிரொலித்தது.

தாராபுரம் பஸ்-ஸ்டாண்டுக்கு வந்த போது எட்டு மணி. இன்னொரு அய்யன் ஏற்கனவே வந்து எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தார். அங்கிருந்து கார் எடுத்துக் கொண்டு போகுமாறு அப்பா சொன்னதாகத் தெரிவித்த போது மறுத்து விட்டார். ஈரோட்டிற்குப் பேருந்தில் போவது என்று அவர் சொல்படி தீர்மானித்தோம். எழுபத்து ஆறு கிலோ மீட்டர் தூரத்தை மூன்று மணி நேரத்தில் ஓட்டிச் சாதனை செய்த டிரைவரின் பொடனியில் ஓங்கி ஒரு தட்டு தட்ட வேண்டும் போல இருந்தது. இருந்தாலும் நாகரிகம் கருதி அமைதியாக இருக்க நேர்ந்தது.

ஈரோடு பேருந்து நிலையத்தில் இட்லியும், பூரியும் தின்று விட்டு கோபி பேருந்தில் (இங்கும் கார் எடுக்க அவர் அனுமதிக்கவில்லை) ஏறி பாதி வழியில் இருக்கும் அந்த ஊரை அடைந்தோம். கூடவே கொண்டு வந்திருந்த பேக்கில் இருந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டேன்.

You can make the first impression only once. வாழ்க்கைல முதன் முறையா பொண்ணுப் பாக்கப் போறதுன்னா சும்மாவா?