Tuesday, September 19, 2006

பவுடர் அடிக்கலியாடா?

- குப்புசாமி செல்லமுத்து

"பவுடர் அடிக்கலியாடா?" காலையில் குளித்து வந்தவுடன் அம்மா கேட்ட முதல் கேள்வி. எனக்கு நினைவு தெரிந்து கடைசியாக டால்கம் பவுடர் பூசியது ஏழாவது படித்த போது என்று ஞாபகம். அதன் பிறகு கவனம் காலப் போக்கில் வெவ்வேறு திசைகளில் திரும்ப புறத் தோற்றத்தைப் பராமரிப்பது குறித்தான கவலைகள் இல்லாமலே போனது.

சிறு வயதிலேயே துருத்திக் கொண்டு வந்த முன்னம் பற்கள் இரண்டிற்கும் கிளிப் போட வேண்டும் என்று கூட நினைத்ததில்லை. எங்கள் வட்டாரத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறையக் குறைய குடிநீரில் ஃபுளோரைடு செறிவு கூடியதில், நிறையப் பேரின் பல்லில் கறை படிந்திருந்தது. போன வாரம் அடையார் அப்போலோ டென்டல் கேர் பல் மருத்துவ மனையில் ஞானப்பல்(wisdon tooth) அறுத்து எடுத்த போது, "எல்லாப் பல்லுக்கும் செராமிக் கேப் போட்டால் கறையை மறைத்து விடலாம்" என்று சொன்னார்கள். அதற்கு என்ன செலவாகும் என்ற கேள்விக்கு அவர்கள் சொன்ன பதில் லோக்கல் அனஸ்தீசியாவை மிச்சம் செய்வதற்கோ என்று கூடத் தோன்றியது. மயக்கம் வராத குறை தான்.

ஆகவே இப்போதும் பவுடர் எல்லாம் பூச முடியவில்லை. அப்படியும் பூசினாலும் குங்குமப் பொட்டுக் கவுண்டர் படத்தில் தன் மகனுக்கு ரம்பா செய்யும் மேக்-அப்பைப் போலத் தான் இருக்கும் என்பது எனக்குத் தெரியும். அதை விடுங்க. ஞாயிற்றுக் கிழமை காலையில் இவ்வளவு சீக்கிரம் எழுந்து, சவரம் செய்து, குளித்து ஆயத்தமானது இது தான் முதல் முறை.

மூன்றடி தண்ணீர் அமராவதியில் ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் ஆறு மூன்றடி ஆழமாகி இருக்கிறது தெரியுமா? ஆம்.. ஒரு காலத்தில் இபோதையை தண்ணீர் மட்டத்தில் மணல் படுகை இருந்ததை அறிவேன். சிலர் திருட்டுத் தனமாகவும், அரசாங்கமே அதிகாரப் பூர்வமாகவும் மணல் அள்ளியதால் ஏற்பட்ட விளைவு. உடுமலைப் பேட்டைக்குத் தெற்கே இருக்கும் அணைக் கட்டில் இருந்து ஆறு கவிரியில் கலக்கும் வரை இதே ஆழம் மணல் குறைந்திருப்பதைத் தான் இது காட்டுகிறது. ஆற்று மணல் திருடுவது தாய்ப்பாலைத் திருடி விறபதற்குச் சமம் (நன்றி: தியோடர் பாஸ்கரன்). நிலத்தடி நீர் மட்டம் குறைவதற்கும் இதற்கும் நேரடித் தொடர்பு உள்ளது.

கடக்கும் போதே சில வழுக்குப் பாறைகள் காலில் தட்டுப் படுகின்றன. மணலே இல்லாமல் வெறும் பாறை மட்டுமே உடைய ஆறு என நொய்யல் ஆற்றைத் தான் சிறு வயதில் எனக்கு அடையாளம் சொன்னார்கள். இப்போது எல்லா ஆறுகளுக்கும் அதே கதி தான்.

எது எப்படியோ. ஒரு வழியாக நதியைத் தாண்டி ஈரத் துணியெல்லாம் கழட்டிப் போட்டாச்சு. அயர்ன் செய்த சட்டை, பேண்ட் அணிந்து, ஷூ மாட்டிக் கொண்டு ஏழேகால் பஸ்ஸில் தாராபுரம் போக வேண்டும். இன்டர்வியூவுக்குப் போகும் போது கூட மூனு மாசம் தொவைக்காத ஜீன்ஸ் பேண்ட் போடுற ஆள் இன்னிக்கு இப்படி இருக்கறத நெனைச்சா சிரிப்பு தான் போங்க. மோளக் கவுண்டம் புதூர் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு இருக்கும் போது, "கெடிகாரம் கட்டலியா??" மறுபடியும் அம்மா. நேரம் பார்க்க செல் போன் இருப்பதால் கடிகாரத்தின் பயன்பாடு சமீப காலமாகக் குறைந்திருந்தது. "கெடிகாரம் கட்டி, கண்ணாடி கிண்ணாடி போட்டாத் தான படிச்ச பயனாட்ட இருக்கு(ம்). எப்பப் பாத்தாலும் பழைய சட்டையப் போட்டுக்கிட்டு ஆடு மேக்கற பயனாட்ட(ம்) இருக்கறீன்னு மாமன் பேசுது" பூவுலகில் மாபெரும் மேதாவி, உலக ஞானத்தில் நிகரற்று விளங்குவது தனது தம்பி தான் என்ற நினைப்பு அந்த வார்த்தைகளில் எதிரொலித்தது.

தாராபுரம் பஸ்-ஸ்டாண்டுக்கு வந்த போது எட்டு மணி. இன்னொரு அய்யன் ஏற்கனவே வந்து எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தார். அங்கிருந்து கார் எடுத்துக் கொண்டு போகுமாறு அப்பா சொன்னதாகத் தெரிவித்த போது மறுத்து விட்டார். ஈரோட்டிற்குப் பேருந்தில் போவது என்று அவர் சொல்படி தீர்மானித்தோம். எழுபத்து ஆறு கிலோ மீட்டர் தூரத்தை மூன்று மணி நேரத்தில் ஓட்டிச் சாதனை செய்த டிரைவரின் பொடனியில் ஓங்கி ஒரு தட்டு தட்ட வேண்டும் போல இருந்தது. இருந்தாலும் நாகரிகம் கருதி அமைதியாக இருக்க நேர்ந்தது.

ஈரோடு பேருந்து நிலையத்தில் இட்லியும், பூரியும் தின்று விட்டு கோபி பேருந்தில் (இங்கும் கார் எடுக்க அவர் அனுமதிக்கவில்லை) ஏறி பாதி வழியில் இருக்கும் அந்த ஊரை அடைந்தோம். கூடவே கொண்டு வந்திருந்த பேக்கில் இருந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டேன்.

You can make the first impression only once. வாழ்க்கைல முதன் முறையா பொண்ணுப் பாக்கப் போறதுன்னா சும்மாவா?

26 comments:

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

//You can make the first impression only once. வாழ்க்கைல முதன் முறையா பொண்ணுப் பாக்கப் போறதுன்னா சும்மாவா?
//

அது தானே மிச்சத்தையும் சொல்லுங்கராசா.. :-)

நன்மனம் said...

//கூடவே கொண்டு வந்திருந்த பேக்கில் இருந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டேன்.//

துண்டுல பவுடர் இருந்துதா இல்லியா :-)

மங்கை said...

குப்புசாமி சார்

நம்ம ஊருக்கு போய்ட்டு வந்த மாதிரி ஒரு உணர்வு இருக்கு.. உங்க பதிவ படிச்சு Home sick கொஞ்சம் கம்மி ஆகியிருக்கு

சீக்கிறம் அடுத்த பாகத்த போடுங்க

மங்கை

வேந்தன் said...

I thought i know who you are...

manasu said...

appuram..... ammini enna sonnanga??

Kuppusamy Chellamuthu said...

I am PCless now. It would take few days before I get my ordered laptop to be delivered. Not in a position to post lengthy comments.

செல்வராஜ் (R.Selvaraj) said...

அடடே! வாழ்த்துக்கள். இனிய பயண விவரம் (வாழ்க்கைப் பயணமும் தான் :-) ) நன்றாக இருக்கிறது.

கார்திக்வேலு said...

KS ,
++

[கோபிக்குப் போனதில் மணியின் பங்கும் உண்டா :-)]

துளசி கோபால் said...

இப்பவே வாழ்த்து(க்)களைச் சொல்லிக்கறேன்.

எல்லாம் நல்லபடி நடந்துச்சுதானே?

பெத்த ராயுடு said...

கத தொடக்கம் நல்லா இருக்குங்க.
நம்ம ஊர் பிண்ணனியில கத படிக்கறதுல உள்ள மகிழ்ச்சியே தனிதான்.

எதிர்பார்ப்புடன்,
பெத்தராயுடு.

செல்வநாயகி said...

கத தொடக்கம் நல்லா இருக்குங்க.
நம்ம ஊர் பிண்ணனியில கத படிக்கறதுல உள்ள மகிழ்ச்சியே தனிதான்.

பொன்ஸ்~~Poorna said...

ம்ம்ம்... அப்புறம்?

Syam said...

மங்கை சொன்னதுதான் நானும் சொல்றேன் ஆன கொஞ்சம் வேற விதமா...இத படிச்ச உடனே nostalgia அதிகம் ஆயிடுச்சு...நீங்களும் நம்ம ஊர் தானா..நானும் அமராவதி கரையோரம் தான் :-)

Kuppusamy Chellamuthu said...

பாலா, மனசு, துளசி, பொன்ஸ் ..அடுத்து ஒரு பதிவு போட்டுறலாம் விடுங்க..

//துண்டுல பவுடர் இருந்துதா இல்லியா :-) // not that serious நன்மனம்.

Kuppusamy Chellamuthu said...

மங்கை, பெத்த ராயுடு, செல்வநாயகி..ஆயிரம் இருந்தாலும் நம்ம ஊர் நம்ம ஊர் தாங்க.

நன்றிங்க செல்வராஜ்.

கார்த்திக், இது கதையா உண்மையான்னே சொல்லலியே, பிறகு எப்படி மணியின் பங்கு குறித்த ஐயங்கள்? ;-)

வேந்தன் & Shyam..நாம் தனியாக மின்னஞ்சலில் பேசிக்கலாம்.

G.Ragavan said...

தொடருமா? இங்கயே முடியும் போட்டிரலாமே....அந்த அளவுக்கு கதை இருக்கு. சிறுகதையோட இலக்கணத்தோடு. இது பாராட்டுதாங்க.

Sivabalan said...

//முறையா பொண்ணுப் பாக்கப் போறதுன்னா சும்மாவா? //

சிக்கிரமே அடுத்த பதிவைப் போடுங்க.. படிக்கும் ஆர்வத்தை தூண்டிவிட்டுடீங்க..

நன்றி

tamilInian said...

kuppusamy sir
Happy to read u`r post....kalakiteenga ponga.... I am from Gobi.

S. அருள் குமார் said...

உங்கள விட வயசுல மூத்தவங்க நான், பாலா எல்லாம் இருக்கப்போ உங்களுக்கு என்னங்க அவசரம்?!!

(எல்லாம் ஒரு ஆற்றாமைதான்!)

கார்திக்வேலு said...

KS
நான் குறிப்பிட்டது "கோபி பெண்களைப்" பற்றிய மணியின் பதிவு :-)
http://pesalaam.blogspot.com/2006/06/blog-post_24.html

வெற்றி said...

குப்புசாமி செல்லமுத்து,
முதலில் வாழ்த்துக்கள். நல்ல சுவாரசியமாகச் சொல்லியுள்ளீர்கள். விரைவில் மிகுதியை எழுதுங்கள். படிக்க ஆவலாக உள்ளேன்.

Kuppusamy Chellamuthu said...

//அந்த அளவுக்கு கதை இருக்கு. சிறுகதையோட இலக்கணத்தோடு. இது பாராட்டுதாங்க//

மிக மகிழ்ச்சியாக இருக்கிறது ஜிரா. நன்றிகள்.

'தொடரும்' என்பதை தூக்கி விடுகிறேன். கூடவே 'நிஜம் போன்ற கதை' என்றும் ஒரு வரி கொடுத்து விடுகிறேன். யூகங்களுக்கு இடம் தர வேண்டியதில்லை பாருங்கள்.

கோயம்புத்தூர் சிவபாலன், கோபி தமிழினியன் மற்றும் வெற்றி..அனைவருக்கும் நன்றிகள்.

//உங்கள விட வயசுல மூத்தவங்க நான், பாலா எல்லாம் இருக்கப்போ உங்களுக்கு என்னங்க அவசரம்?!!// :-)க்கறேன் அருள்.

Thanks for the clarification Karthik!!

முத்து(தமிழினி) said...

அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் ஒரு

(வாய்க்க பெறாத அப்பாவி)

சதயம் said...

"யதார்த்தத்தின் நெருக்கத்தில்"

அருமை குப்புசாமி...கதை அருமை.

ஆஹா...கோயமுத்தூர்காரவுகள்ளாம் ஒன்னா சேர்ந்துட்டீங்க போல...கொண்டாடுங்க...கொண்டாடுங்க....

Kuppusamy Chellamuthu said...

//வாய்க்க பெறாத அப்பாவி//
முத்து ..ஊட்டுக்கார அம்மா பிளாக் எல்லாம் படிக்கறது இல்லைங்கற தைரியம். இருக்கட்டும்.

நன்றிங்க சதயம். பை த பை.. கோயமுத்தூர்காரங்க எப்பவுமே ஒன்னு தானுங்க. :-)

பொன்ஸ்~~Poorna said...

இது ஏமாயிந்தி குப்புசாமிகாரு?