Thursday, September 28, 2006

ஆம்ஸ்டர்டாமும் அந்த மூன்று மணி நேரமும்

- குப்புசாமி செல்லமுத்து

அந்த ஊரைப் பற்றி நினைத்தாலே சக்திவேலுக்கு ஒரு விதப் பரவசம் தொற்றிக் கொள்ளும். தனது வாழ்வில் ஐந்தாவது முறையாக ஆம்ஸ்டர்டாம் நகரில் தரை இறங்குகிறான். அதில் இரண்டு தடவை நெதர்லாந்து நாட்டுக்கு நேரடியாகவே வந்த அனுபவம். மீதம் மூன்று முறை இந்தியாவில் இருந்து அமெரிக்கா பயணிக்கையில் விமானம் மாறுவதற்காக.

ராயல் டச் KLM ஏர்லைன்ஸ் பணிப்பெண் இவனுக்குப் பக்கத்து இருக்கையில் இருந்த ஸ்பெயின்காரனை சீட்-பெல்ட் போடுமாறு சிரித்துக் கொண்டே சொல்கிறாள். அவன் பெயர் வின்சென்ட் என்று நினைவுபடுத்திக் கொண்டான் சக்தி. மும்பை விமான நிலையத்தில் இருந்து கிளம்பியவுடன் அனைவருக்கும் உணவு கொடுக்கப்பட்ட போது தன்னைப் போலவே எக்ஸ்ட்ரா மீல்ஸ் வாங்கித் தின்ற வின்சென்ட் தன் அலைவரிசையில் இருப்பதாக உணர்ந்து மின்னஞ்சல் முகவரி பரிமாறிக் கொண்டிருந்தான். எட்டரை மணி நேரப் பயணத்தின் சலிப்பை உள்ளே போன இரண்டு பாட்டில் ரெட்-ஒயின் போக்கியிருந்தது.

ரோட்டர்டாம் நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்த விமானம் இன்னும் சில நிமிடங்களில் Schiphol விமான நிலையத்தை அடைந்து விடும். ரோட்டர்டாமில் மிகப் பெரிய துறைமுகம் இருக்கிறது. ஐரோப்பாவின் பல நாடுகளுக்கும் கப்பல் சரக்குகளை இந்தத் துறைமுகத்தில் இருந்து ஆறு வழியாக எடுத்துச் செல்கிறார்கள் எனச் சென்ற பயணத்தில் அறிந்திருந்தான். Ede நகரில் இருந்து யாழ்ப்பாணத் தமிழர் எழிழன் ரோட்டர்டாம் அழைத்துச் சென்றிருந்தார்.

மாத நாவல்களில் 'கப்பல் போன்ற கார் சாலையில் வழுக்கிக் கொண்டு சென்றது' எனப் பல முறை வாசித்தவனுக்கு விமானம் தரையிறங்கிய போது அதை விட மிகுதியான அனுபவம் கிடைத்தது. சலனமற்ற மீன் தொட்டியில் குட்டி மீன் நீந்துவது போல அமைதியாக மென்மையானதாக அந்நிகழ்வு அமைந்தது. அவனுக்குத் தெரிந்த மெட்ராஸ் வின்டேஜ் சரக்கை விட லேண்டிங் 'ஸ்மூத்'தாகத் தோன்றியது அவனுக்கு.

இதோ Schiphol நிலையம். கையின் ஐந்து விரல்களைப் போல விரிந்திருக்கும் ஏர்போர்ட். அட்லாண்டா விமானத்திற்கு இன்னும் மூன்று மணி நேரம் அவனுக்கு இருந்தது. சற்றுத் தொலைவு நகர்ந்து ஆளில்லாப் பகுதியின் ஒரு நாற்காலியில் உடல் இறுக்கம் தளர்த்தி அமர்ந்தான். மனது ஒரு வகை ஒட்டுதலை உணர்ந்தது. பாரிஸ், லண்டன், ஃபிராங்க்பர்ட் ஆகிய ஊர்கள் வழியாக அமெரிக்க போகும் போது இந்த உணர்வு உண்டானதில்லை.அவன் முதன் முதலாக வந்த வெளிநாடு என்பது மட்டும் தான் காரணமா என்று அவனுக்கு விளங்கவில்லை.

பிளஸ் 1 கோயம்புத்தூரில் சேர்ந்து விட்டு முதல் வாரம் பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் வந்து இறங்கிய போது இதே போன்ற உணர்வு 12 வருடங்களுக்கு முன்பு உண்டானது. பெங்களூரில் வேலைக்குச் சேர்ந்த பின் திருப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கிய சமயத்திலும், முதல் ஐரோப்பியப் பயணம் முடித்துச் சென்னை விமான நிலையத்தில் இறங்கிய போதும் இதே உணர்வு தான்.

ஆறு ஆன்டுகளுக்கு முன் இதே விமான நிலையம் மூலமாகத் தான் ஐரோப்பிய மண்ணில் கால் வைத்தான். பழைய சட்டை, ஜீன்ஸ் போட்டுக் கொண்டு வெளியே வந்தவனுக்கு கோட், சூட், டை அணிந்திருந்த கார் ஓட்டுனர் இவன் பெயர் எழுதிய அட்டையைக் கையில் பிடித்துக் கொண்டு நின்றது சிரிப்பாக இருந்தது. டேக்சி கூட பென்ஸ் கார்.

ஐரோப்பிய யூனியன் உருவானது அவர்களுக்கு நல்லதோ இல்லையோ தனக்கு நல்லது என்று அப்போது நம்பினான். ஒரு நாடு கொடுத்த விசாவை வைத்துக் கொண்டு எல்லா நாடுகளுக்கும் பயணிக்கலாமே! பாரிஸில் ஈஃபில் டவர், மோனாலிசா, ஜெர்மனி சுற்றுலா எனத் திரிந்து செலவழித்த காலம்.

சில விஷயங்களை உணர மட்டுமே முடியும், சொற்களால் விவரிக்க முடியாது என்ற வாதத்தை நம்பியிருந்திராத சக்திக்கு நெதர்லாந்தில் ஒரு தெற்காசியாவைச் சேர்ந்தவனுக்குக் கிடைக்கும் விருந்தோம்பலை ஜெர்மனியில் கிடைக்கும் விருந்தோம்பலோடு ஒப்பிட முடியவில்லை.

டச்சுக்காரர்கள் அவன் மனதில் உயர்ந்து நின்றனர். தேசங்களின் குடிமக்கள் அனுபவிக்க்கும் வாழ்க்கைத் தரத்தின் அடிப்படையிலான HDI (Human Development Index) குறியீட்டின் படி கனடா, நீயூசிலாந்து போன்ற நாடுகளுடன் உயரிய இடத்தில் ஹாலந்து இருக்கிறது.

ஐரோப்பாவில் தங்களைத் தாங்களே 'லார்ட்' என அழைத்துக் கொண்ட வம்சத்தினர் ஆங்கிலேயர்கள். பண்டைய இங்கிலாந்தில் யாரையாவது கேலி செய்ய விரும்பினால் டச்சுக்காரர்களோடு ஒப்பிடுவார்களாம். 'புண்ணாக்கு' என்ற சொல்லுக்கு 'மாடுகளும் டச்சுக்காரர்களும் உண்ணும் உணவு' என்று அகராதிகளில் கூட இருந்ததாகக் கேள்விப்பட்டது சக்திக்கு நினைவு வந்தது. கும்பலாக ஒரு உணவகத்திற்குச் செல்லும் போது அவரவர் உண்டதற்கு அவரவரே பணம் கொடுப்பதை 'டச்சு டிரீட்' என்றழைப்பது இப்போது இந்தியாவில் கூட வழக்கமாக இருகிறது.

டச்சுக்காரர்களின் தேசிய நிறம் ஆரஞ்சும், மஞ்சளும் கலந்த ஒரு நிறம். இதை உணவு மேசை உரையாடலில் அறிந்து சக டச்சு ஊழியரிடம் "அப்போ நீங்க டிராஃபிக் யெல்லோ லைட் எரியும் போது எந்திரிச்சு நின்னு சல்யூட் அடிப்பீங்களா?" என்று கேட்டு வாங்கிக் கட்டிக் கொண்டது நினைவு வந்தது.

உட்கார்ந்த இடத்தில் இருந்து கண்ணாடிச் சுவர்களுக்கு வெளியே ஓடுதளங்களில் நகரும் செயற்கைப் பறவைகளைப் பார்த்தபடியே தனக்கும் இந்த ஊருக்கும் இருக்கும் இனம்புரியாத உறைவை எண்ணி வியந்தபடியே நினைவுகளை மேய விடுகிறான். தனது இருக்கைக்குக் கீழே ஏதாவது ரயில் ஓடிக்கொன்டிருக்கும் என அவனுக்குத் தெரியும். நிலப் பரப்பில் விமான நிலையம். நிலத்தடியில் ரயில் நிலையம். அங்கிருந்து நாட்டின் பிற ஊர்களுக்குச் சுலபமாகப் போய் விடலாம்.

வெள்ளைத் தோல் இல்லாதவர்கள் எல்லோரிடமும் இப்போது செக்யூரிட்டி கெடுபிடி அதிகம். இரண்டாயிரமாவது வருடம் இப்படி இல்லை. லக்கேஜ் எல்லாம் செக்-இன் செய்த பிறகு இதே விமான நிலையத்தில் உச்சியில் போய் நின்று பொள்ளாச்சி பஸ்டண்டில் நிற்கும் கோவை பஸ்களைப் போல வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விமானங்களின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டதைப் போல இன்னொரு நாள் வராது.

மூன்று நிமிடத்திற்கு ஒரு விமானம் தரை இறங்கும் அல்லது வானேறும் இந்த ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் டச்சுப் பயணிகளை அதிகம் பார்க்கவே முடியாது. எல்லாம் கனைக்டிங் ஃபிளைட் பிடிக்கும் நபர்கள் தான். வெறும் ஏர்ஃபோர்ட் மட்டும் கட்டி விட்டுக் காசு சம்பாதிக்கிறது கடல் மட்டத்திற்குக் கீழ் இருக்கும் இந்த நாடு.

காமராஜர் காலத்தில் இருந்தே விவாதிக்கப்படும் சேது சமுத்திரம் மட்டும் மட்டும் வந்திருந்தால் உலகில் மிகப்பெரிய துறைமுகங்களின் வரிசையில் ரோட்டர்டாம், சிங்கப்பூர் என்பது மாறி ரோட்டர்டாம், தூத்துக்குடி என இருந்திருக்கும் என்பது நிச்சயம். தென் தமிழகத்தின் பொருளாதார நிலைமையையே அது மாற்றிப் போட்டிருக்கும். சக்தியின் சமூக அக்கறை அவ்வப்போது இப்படித் தலையெடுக்கும் சமயத்தில் அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நினைப்பு வந்து போகும்.

மூன்று மணி நேரம் ஒரே நேர் கோட்டில் காரில் பயணித்தால் இந்த நாட்டின் எல்லையைக் கடந்து விடலாம். கோழி இறைச்சி உற்பத்தி, பால் உற்பத்தி போன்றவற்றில் உலக அளவில் முக்கிய இடத்தை வகிக்கிறது. அவர்களது மலர் உற்பத்தி குறித்துச் சொல்ல வேண்டியதே இல்லை. கோடையில் நடக்கும் நெதர்லாந்து மலர்க்கண்காட்சி ஐரோப்பா முழுவது பிரபலம். வண்டி ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் பார்க்கும் வழக்கமுள்ளவர்கள் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா..அட இஸ்ரேல் வண்டிகளைக் கூட அங்கே காணலாம். அந்நியம் படத்தில் விக்ரம் சதாவைப் பார்த்து வார்த்தைக் கடல் வற்றி விட்டது என்று பாடுவது நேதர்லாந்தின் டியூலிப்ஸ் தோட்டத்தில் தான்.

ஒரு சராசரி டச்சுக்காரரின் மனதில் ஆம்ஸ்டர்டாம் நகரம் ஒதுக்கப்பட்ட பகுதியாகவே இருக்கிறது. அவன் சென்ற முறை பணியாற்றிய ஊரில் இருந்து ஆம்ஸ்டர்டாமுக்கு சுமார் 40 நிமிடம் ரயிலில் வர வேன்டும். கல்யாண் ராவுடம் ஒரு வெள்ளிக்கிழமை இரவு அங்கே சென்றான். 'காந்தி' என்ற பெயரில் ஒரு பாகிஸ்தானியர் நடத்தும் இந்திய உணவகம் அவனுக்கு வியப்பாக இல்லை. ஏனென்றால் அதற்குச் சில நாட்கள் முன்பு தான் ஒரு பல்கலைக் கழகத்திற்குச் சென்று இந்தியா-பாகிஸ்தான் மாணவர்களோடு இணைந்து தீபாவளி கொண்டாடிவிட்டு வந்தான்.

ஆம்ஸ்டர்டாம் இரவில் தான் விழிக்கிறது. பாவ நகரம் (Sin city) என்று அதைக் கூறுவார்கள். ரெட் லைட் டிஸ்ட்ரிக்ட் என அழைக்கப் படும் பகுதி அதன் சிறப்பம்சமாம். இந்த இடத்திற்கு வருவதற்காகவே பல அமெரிக்கர்கள் ஐரோப்பா பயணிப்பதாக அவனிடம் சொன்னார்கள். கண்ணாடிச் சுவருக்கு உள்ளே அரை ஆடையோடு நின்று தெருவில் நடக்கும் நபர்களை அழைக்கும் அழகிகள், ஒரு வாடிக்கையாளர் கிட்டியவுடம் திரச்சீலையை மூடி விடுவார்கள். ஆக்சன் முடிந்து அந்த நபர் வெளியே வந்ததும் மேலும் திரை விலகி விளிப்புகள் தொடரும். இரவு செல்லச் செல்ல தன்னை யாரும் நெருங்கவில்லை என்றால் 'இலவசமாக கடலை போடுங்கள் காசு வேண்டாம்' என அழைக்கும் பெண்களும் உண்டு. பாவம் அவர்களுக்கும் நேரம் போக வேண்டுமே. அந்த ஏரியாவில் இந்தியப் பெண்களுக்கு படு கிராக்கி.

சட்டப் பூர்வமாக இந்த வேலைகள் நடக்கும் இப்பகுதியில் சட்ட விரோதமான செயல்கள் நடப்பதில்லை என்பதை அவனால் நம்ப முடியவில்லை. குழந்தைகள், பெண்களோடு சுற்றுலாப் பயணிகள் வந்து வேடிக்கை பார்த்து விட்டுச் செல்கிறார்கள். உலகின் இன்னொரு பாவ நகரமான லாஸ் வேகாஸ் நகரத்தில் கூட இதெல்லாம் நடந்தாலும், வாரக் கடைசிகளில் பிற ஊர்களில் இருந்து அங்கே போய் காசு சம்பாதித்து வரும் சராசரி அமெரிக்கப் பெண்கள் இருந்தாலும், செக்ஸ் கேப்பிட்டல் என்று ஆம்ஸ்டர்டாமைத் தான் சொல்கிறார்கள்.

இருபத்தி இரண்டு வருட வாழ்வில் இதுவரை அமையாமல் அன்று அமைந்த வாய்ப்பைப் பயன்படுத்த சக்தி விரும்பினாலும் அந்தப் பெண்கள் சொன்ன தொகையை X 20 (அப்போது யூரோ வரவில்லை. கில்டர் தான்) என்று நம்ம ஊர் கரன்சியில் கணக்குப் போட்டுப் பார்த்துப் பின் வாங்கி விட்டான். துணைக்கு வந்த கல்யான் ராவ் மட்டும் லைவ் ஷோ எல்லாம் பார்த்தான். 'Good boys go to heaven. Bad boys go to Amsterdam' என்ற வாசகம் பொருந்திய டீ.ஷர்ட் ஒன்றும் வாங்கினான்.

மற்றவர்கள் டச்சுக்காரர்களைக் கிண்டல் பண்ணினால் இவர்கள் பெல்ஜியம் மக்க்களைக் கிண்டல் செய்கிறார்கள். நமது சர்தார்ஜி ஜோக்க்குகள் மாதிரி இவர்களது பெல்ஜியம் ஜோக்குகள் அறியப்படுகின்றன. ஒரு டச்சுக் குழந்தை சக்தியிடம் ஒரு கடி ஜோக் சொன்னது.

"ஒரு பெல்ஜியம் ஆள் பாலைவனத்துல கார் ஜன்னலைத் தூக்கிட்டு நடக்குறான். ஏன் தெரியுமா?"

"தெரியல சொல்லு"

"பாலைவனம் சூடா இருக்கும்ல. அதனால கார் ஜன்னலைத் திறந்து காத்து வாங்க"

பெல்ஜியத்தில் ஒரு பகுதியினர் டச்சு மொழியும், இன்னொரு பகுதியில் பிரெஞ்சு மொழியும் பேசுகிறார்கள். இருந்தாலும் பெல்ஜிய டச்சு மக்கள் தங்களை டச்சுக்காரர்கள் என அழைப்பதில்லை என்று சக்திக்கு சொல்லப்பட்டது. பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப் நகரில் திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் இருக்கிறது.

நினைவுகள் கலைந்தோட செக்யூரிட்டி செக் அழைப்பு வந்தது. அதற்கு முன் வயிறு கலக்கியதைச் சரி செய்ய டாய்லட் சென்று வந்தான். பல முறை பேப்பர் உபயோகப்படுத்திப் பழகியிருந்தாலும் கழுவாமல் திரிவதில் இருக்கும் அசெளகர்யம் குறைந்தபாடில்லை. மறக்காமல் ஒரு மக் வாங்கி கூடவே எடுத்து வந்திருக்கிறான்.

செக்யூரிட்டி செக்கில் இவன் சொன்ன 'குத் மார்கன்' க்கு ஒரு சிரிப்புச் சிரித்து விட்டு பாஸ்போர்ட்டில் இருந்த பழைய அவர்கள் நாட்டு விசாவைப் பார்த்து விட்டு டச்சு பெண் போலீஸ் 'Do you speak Dutch? How do you like this country?' என்று ஆவலுடன் கேட்டது. கொஞ்சம் கடலை போட்டு விட்டு உள்ளே வந்தவன், Okai. From one material word to another. India to US என்று எண்ணிக் கொண்டான்.

6 comments:

பெத்த ராயுடு said...

நல்ல நடை. கதைதானே?

சக்தி windmills பாக்க ஆம்ஸ்டர்டாம் நகருக்கு அருகில் இருக்கும் சிற்றூருக்கு போயிருக்காரா?

அருமையான சுற்றுலா தலம். என் கிராமத்தில் அனுபவித்த எகாந்தத்தை அங்கு உணர்ந்தேன்.

துளசி கோபால் said...

ஆம்,ஸ்டெர் 'டாம்' ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அனுபவம். நாங்க ஒரு டூர் க்ரூப்பில்
போனதாலெ அது வேற மாதிரி.

ஆனா , என் அண்ணனுக்கு அங்கெ ஒரு கசப்பான அனுபவம்.ஹூம்.....
அதான் தனியாப் போகக்கூடாதுன்றது:-)

பொன்ஸ்~~Poorna said...

நல்லா இருக்கு.. கதையா?

Kuppusamy Chellamuthu said...

//நல்ல நடை. கதைதானே?//

பெத்தராயுடு... கதை தான். Wind எனர்ஜி என்பது காற்று சக்தி என்பதால் சக்தி போகவில்லை என்றார்.

நான் பிரமித்து ரசிக்கும் பல விசயங்களில் ஹாலந்தும் என்று. உங்கள் ஏகாந்தம் எல்லோர்க்கும் உண்டு.

Kuppusamy Chellamuthu said...

துளசி அவர்களே வாருங்கள்.

//என் அண்ணனுக்கு அங்கெ ஒரு கசப்பான அனுபவம்.ஹூம்.....
அதான் தனியாப் போகக்கூடாதுன்றது:-)//

:-( ஆம்டெல் நதிக்கு அணை கொண்ட ஊர் காலப்போக்கில் மருவி ஆம்ஸ்டர்டாம் எனவானது. சேரி ஒழிப்புத் துறை போல அங்கே படகு வீடு எழிப்புத் துறை ஒன்று நிறுவ வேண்டும். அதில் வாழ்ந்தவர்கள் சாதாரண வீடுகளுக்குப் போக மாட்டேன் என அடம் பிடிக்கிறார்களாம்.

பொன்ஸ்... கதை தானுங்க. பயணக் கட்டுரை மாதிரி இருக்குதா?

ரவிசங்கர் said...

உண்மையில் இது கதை தானா இல்லை நீங்கள் ஆம்ஸ்டர்டாம் வந்திருக்கிறீர்களா? பயணக் கட்டுரையை கதை மாதிரி எழுத நினைத்திருந்தாலும் நன்றாக இருக்கிறது. உங்களுக்கு வயித்தெரிச்சல் வர்ற மாதிரி ஒரு தகவல் சொல்லட்டா..நான் இந்த நகருக்கு 30 நிமிடத் தொலைவில் தான் வசிக்கிறேன்..நினைச்சா எப்ப வேணா போகலாம்.. :) நல்ல நாடுங்க இது..நீங்க சொன்ன மாதிரி பிற நாட்டவர நடத்துற விதத்துல ஜெர்மனிக்கும் இதுக்கும் ஏனி வச்சா கூட எட்டாது.