Thursday, September 28, 2006

ஸ்டைல் - ஒரு தமிழனின் பார்வை

-குப்புசாமி செல்லமுத்து

வாரா வாரம் நார்த் கேரொலினாவில் இருக்கும் தன் மனைவி மக்களைச் சந்திக்கச் சென்று விடும் என் ரூம் மேட் ராயலசீமாக்காரர் இந்த வாரம் இங்கேயே தங்கினார். ஆகவே வார இறுதியில் அவரது கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்த நடன இயக்குனர் லாரன்ஸ் நடித்த 'ஸ்டைல்' தெலுங்குத் திரைப்படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.

படம் இப்படித் தான் துவங்குகிறது. பிரபுதேவா புகழ் மிக்க டேன்சர். அவரோடு போட்டியில் கலந்து கொண்டால் தோற்று விடுவோம் என அஞ்சி அவரது காலை முடமாக்கி விட்டு நடனமாடி ஜெயிக்கிறார் வில்லன் (ஆண்டனி என்று நினைக்கிறேன்). பிரபுதேவாவிடம் இருந்த ஸ்பான்சர்கள் எல்லாம் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு ஆன்டனியை நோக்கிச் செல்கிறார்கள்.
மனம் நொந்து தற்கொலைக்கு முயற்சிக்கும் தேவாவை அவரது தங்கை தடுத்து நிறுத்தி ஊக்கமூட்டி வேறு யாருக்காவது பயிற்சி கொடுத்து ஆட வைக்கலாம் என யோசனை கூற அதன் படி ஒரு டான்சரைத் தேடுகிறார். இதெல்லாம் ஐதராபாத்தில் நடக்கிறது.

இன்னொரு பக்கம் விசாகபட்டினத்தில் ஒரு டான்ஸ் ஸ்கூலில் தரையைத் துடைக்கும் வேலை செய்கிறார் லாரன்ஸ். அங்கே நடக்கும் வகுப்புகளைப் பார்த்து தனியே ஆடுகிறார். பிரபுதேவாவை (விட நிஜமாலுமே ஜீவனோடு வேகமாக ஆடும்) லாரன்ஸ் அவரைத் தனது மானசீக குருவாக நினைக்கிறார். அந்த ஊரின் ஒரு நட்சத்திர ஓட்டலில் சந்தர்ப்ப வசமாக ஆடும் வாய்ப்புக் கிடைத்து அதில் பின்னிப் பெடலெடுக்கிறார்.

அவர் வேலை பார்க்கும் டேன்ஸ் ஸ்கூலுக்கு ஒரு கல்லூரி ஜோடி வருகிறது. தன் பாய்ஃபிரண்டைக் கடுப்பேற்ற லாரன்ஸுடன் நெருக்கமாக இருப்பது போல் நடிக்கிறார் அந்தப் பெண். சீக்கிரம் அவனை 'ஐ லவ் யூ' சொல்ல வைக்க அந்த ஐடியாவாம். இது தெரியாத நமது நாயகன் செல்போன், பர்த்-டே பார்ட்டி எனச் சுற்றிய பிறகு கடைசியில் ஆப்பு வாங்கிக் கொள்கிறார்.

அம்மணியின் காதல் நாடகத்தில் இருவரும் இணைந்து ஒரு முறை மாஸ்டர் இல்லாத போது ஸ்கூலில் டான்ஸ் ஆட, அதைக் கண்ட மாஸ்டர் வேலையில் இருந்து துரத்தி விடுகிறார். பிறகு சிரமப்பட்டுச் சொந்தமாக நாட்டியப் பள்ளி ஆரம்பித்து அக்கம் பக்கத்துக் குழந்தைகளுக்கு டேன்ஸ் சொல்லித் தந்து கொண்டிருக்கையில் ஜெமினி டி.வி.யில் 'டான்ஸ் பேபி டேன்ஸ்' நிகழ்ச்சியில் ஆடும் வாய்ப்புக் கிடைக்கிறது.

இதைத் தொலைக்காட்சியில் தற்செயலாகக் காணும் பிரபுதேவா, "இவன் தான் நான் தேடிய அவன்" என்று மகிழ்ந்து தன் தங்கையை வைசாக் அனுப்பி விசாரிக்க, அப்போது தான் நாம் முன்பு சொன்ன அம்மணி ஆப்பு வைத்துக் கொண்டிருக்கிறார். லாரன்ஸின் ஃபிளாஸ்பேக் ஒன்று தேவையில்லாமல் அப்போது முளைக்கிறது.

அவரது அம்மா டான்ஸ் ஆட ஆசைப்பட்டதும், திருமணத்த்திற்குப் பின்னர் அவரது அப்பா அதற்கு அனுமதிக்காததும் தெரிகிறது. அது மட்டுமல்லாமல் தாயின் தலையில் அடித்துப் பைத்தியமாக்கி விட்டுக் கூத்தியாளுடன் கும்மாளமடிக்கும் அப்பனைப் போட்டுத் தள்ளி விட்டு திருட்டு ரயிலேறி வைசாக் வந்தவராம். தேவையில்லாத அம்மா சென்டிமென்டைத் தவிர்த்திருக்கலாம். அம்மாவாக வருபவர் அபூர்வ ராகங்கள் ஜெயசுதா.

பிரபுதேவாவுடன் ஐதராபாத் திரும்பும் முன் ஒரு கோவிலின் முன்பு தன் தாயைக் காண்கிறார், அதுவும் சவமாக. சடங்குகளை முடித்து விட்டு மானசீக குருவின் இலட்சியத்தை நிறைவேற்ற அவரோடு போகிறார் நாயகன்.

பிரபுதேவாவால் லாரன்ஸுக்குப் பெண்டு நிமிர்கிறது. வெறித்தனமாகப் பயிற்சி செய்கிறார்கள். குருவின் தங்கை சீடனின் மீது தனி அன்பு காட்டுவது ஒரு சாறல். இப்படியாகப்பட்ட சமயத்தில் போட்டிகான நாள் வருகிறது.

லாரன்ஸ் மற்றும் அவரது குழுவை வில்லனின் ஆட்கள் கடத்திப் போய் தலைகீழாகக் கட்டித் தொங்க விடுகிறார்கள். போட்டில் அழைப்பு அறிவிப்பு வரும் போது கூட தொங்கிக் கொண்டே இருக்கும் டான்சர்கள், அரங்கத்தில் பதற்றத்துடன் பிரபுதேவா, ஆவேசத்துடன் ஸ்பான்சர்.. கதை முடிந்தது என்று நினைத்தால்..

திடீரென்று நாகர்ஜுனா தோன்றி ஸ்டைலாக சண்டை போட்டு லாரன்ஸை விடுவிக்கிறார். அதன் பிறகு அவர் எப்படிப் பயணித்து அரங்கம் வந்து அறிவிப்பு முடிவதற்குள் ஆடினார் என்று லாஜிக் பார்க்க வேண்டாம். நமக்கே எழுந்து ஆட வேண்டும் போல ஆகி விடுகிறது. அப்படி ஆடுகிறார்.

போட்டின் முதல் சுற்றுக்கும் இரண்டாவது சுற்றுக்கும் இடையில் லாரன்ஸ் காலில் புதைந்த துப்பாக்கிக் குண்டுகளை அகற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது விலனின் அடியாட்கள் பிரபு தேவாவையும், லாரன்ஸையும் கொலை செய்ய உள்ளே வந்து சக்கர நாற்காலில் அமர்ந்திருக்கும் பிரபுதேவாவை நோக்கி ஓங்கும் கத்தியை குருவைக் காப்பாற்றும் துரிதத்தில் லாரன்ஸ் பாய்ந்து பிடிக்க முயல, அதைத் தட்டி விட்டு ஒரு கம்பீர உருவம் தோன்றுகிறது.

அந்தக் காட்சியைப் பார்க்கும் போது பாமர ரசிகன், படித்த ரசிகன் எல்லோருக்கும் முடி நட்டமாக நிற்கும். நிஜம் தாங்க. மெகா ஸ்டார் சிரஞ்சீவி தான் அது. 'நீ போய் புரோக்ராமைக் கவனி. இவங்களை நான் கவனிச்சுக்கறேன்' என்று சொல்லி அவர்களைப் பந்தாடுகிறார். சும்மா சொல்லக் கூடாது, மெகாஸ்டார் மெகாஸ்டார் தான்.

நிகழ்ச்சி அறிவிப்பாளராக சுமன் வருகிறார். படிக்காதவன் படத்தில் ரஜினிக்குத் தம்பியாக ரம்யா கிருஷ்ணனுடன் காலேஜில் படிப்பாரே அதே சுமன் தான். பம்பரமாகச் சுழன்று லாரன்ஸ் டான்ஸ் ஆடி வெல்கிறார். போலீஸ் வில்லனைக் கைது செய்கிறது.

படத்தில் கதை ஒன்றுமே இல்லை. தேவையில்லாத அம்மா சென்டிமெண்ட், வலியப் புகுத்தப்பட்ட காதல் தோல்வி இவற்றை ஒதுக்கி விட்ட்டு நோக்கினால் லாரன்ஸ் தூள் கிளப்பியிருக்கிறார். சிரஞ்சீவி, நாகர்ஜுனா போன்றவர்கள் வெறு மூன்று நிமிடம் மட்டும் வந்து ஒரு சண்டை பண்ணும் அளவிற்கு ஆந்திர சினிமாவில் லாரன்ஸின் செல்வாக்கு இருக்கிறது. மெகா ஸ்டாரின் இந்திரா படத்தின் நடன அசைவுகள் லாரன்ஸ் வடிவமைத்தவை. அவர் ஆட்டுவிக்காத நாயக, நாயகிகளே இல்லை.

மொத்தத்தில் ஸ்டைல் ஒரு சராசரிக்கும் மேலான தெலுங்கு கார மசாலா.

3 comments:

பெத்த ராயுடு said...

இந்திரா படத்துல, வீணை வாசிக்கிற மாதிரி சிரஞ்சீவி ஒரு மூவ்மெண்ட் (லாரன்ஸ் நடனம்)போடுவார். அடடா.., நம்ம ரூம் மணவாடுகள் அதற்காகவே DVDய போட்டுப்போட்டு பார்ப்பாங்க..

பொன்ஸ்~~Poorna said...

படிக்க நல்லா இருக்கு.. தமிழில் வருதாமா இது?

Kuppusamy Chellamuthu said...

பெத்தராயுடு, நீங்கள் கூறிய அந்த நடனக் காட்சியை நானும் கண்டிருக்கிறேன். சமீபத்தில் தான் நேரத்தைச் சாகடிக்க வேண்டிய கட்டாயத்தில் சில தெலுங்குப் படங்கள் பார்த்த போது.. பின்னூட்டத்திற்கு நன்றியண்டி!!

பொன்ஸ்.. ஸ்டைல் தமிழில் வருவது குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை. எனினும் தெலுங்கில் பார்க்கும் போது அது ஒரு ரகமான சுவை. நம்ம ரசனையே ஒரு லெவலுக்குப் போய் விடும். என்னைப் போல நீங்கள் எல்லாம் அதை உணர்கிறீர்களா தெரியவில்லை. :-)