Monday, October 02, 2006

அமெரிக்காவில் அப்பாவி..(1)

- குப்புசாமி செல்லமுத்து


"நீ நல்ல சமயத்தில் ஒஹாயோ வந்திருக்கிறாய். இன்னும் ஒன்னு ரண்டு மாசம் கழிச்சு வந்திருந்தால் குளிருல உறைஞ்சு போயிருவேன்னு நினைக்கறேன். ஊ·ப்ப்ப்.. இப்பவே இப்படி நடுங்கிக் கிட்டு வந்தேன்னா...." என்று இளக்காரமாய்ச் சிரித்தான் லோக்கல் அமெரிக்கன்.

லோக்கல் என்றால் அவன் ஊள்ளூர் இல்லை. அவர்களுக்கு உள்ளூரும் உலகமும் அமெரிக்காவே தான். அவர்களது அகிலம் கிழக்கே அட்லாண்டிக் பெருங்கடல் கரையில் துவங்கி மேற்கே பசிபிக் கரையில் முற்றுப் பெறுகிறது. என்னைக் கேலி செய்தவன் ஒஹாயோவுக்கு மேலே மிகிசன் மாகாணத்தில் இருந்து வந்தவனாகையால் இது அவனுக்கு வெப்பப் பிரதேசமாகத் தோன்றுகிறது போலும்.

அவன் பெயர் டேவிட். டேவ் என்று அழைக்கப்பட விரும்புகிறவன். காலை ஏழரை மணியில் இருந்து மாலை நான்கு மணி வரை கட்டாயமாக இருந்தாக வேண்டிய அந்த ஜப்பானிய கார் கம்பெனியின் அமெரிக்கப் பிரிவில் நாங்கள் வேலை செய்கிறோம். உட்கார்ந்த இடத்தை விட்டு நகரக் கூடாது. அமெரிக்கக் கலாச்சாரம் கண்பது அரிதான ஒரு அலுவலகம். பல ஜப்பானியர்களும் அவர்களுக்கு இணையான எண்ணிக்கையில் இந்தியர்களும் அங்கே இருக்கிறார்கள். பல மையமான பொறுப்புகளில் ஜப்பானியர்கள் தான் இருக்கிறார்கள் என்று என் மூன்று வார இருப்பில் தெரிந்து கொண்டதாய் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆகையால் அந்த ஆட்கள் வரும் போது ரஜினி படம் ஏதாவது திரையில் ஓட்டி விட்டு காக்காய் பிடிக்கலாமோவென்ற சொற்பமான சலனம் வருவதுண்டு. ஜப்பானியர்களுக்கு இன்னும் தலைவர் மோகம் தீர்ந்த பாடு இல்லை.

இறுக்கமான இந்த வேலைச் சூழலில் மனதையும் உடலையும் தளர்த்துவது மதிய உணவிற்குப் பிந்தயை பத்து நிமிடம் காலாற நடை போடும் நேரம் மட்டுமே. அப்படி நடக்கும் போது ஊதக் காற்றில் என் உடல் நடுங்குவதைக் கண்டு தான் அவன் கமெண்ட் அடிக்கிறான்.

"உங்க ஊர் ·புளோரிடா மாதிரி எல்லாம் இங்கே இருக்காது" என்று அடிக்கடி சொல்வான். நான் டேம்பாவில் (·புளோரிடா) வாங்கி வைத்திருக்கும் ஓட்டுனர் உரிமத்தை வைத்து எனது பூர்வீகம் அதுவென யூகித்தானா? ·புளோரிடாவில் வசிப்பதற்கு சென்னையில் வசிப்பதற்கு பெரிய வேறுபாடு இல்லை தான். கிட்டத் தட்ட அதே தட்பவெப்ப நிலை. போன வாரம் சென்னையில் இருந்து நேராக இங்கே பறந்து வந்ததை அவனுக்கு இன்னோர் முறை நினைவு படுத்த வேண்டும்.

இந்த அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு விதப் பிரமிப்பும் மிரட்சியும் எனக்கு அளித்தது என்றால் யாவரும் நம்ப மாட்டார்கள். இந்த அச்சம் இன்று நேற்று உருவானதல்ல. Interval என்ற ஒரு சொல் மட்டுமே புரிந்தாலும் நணர்களோடு சேர்ந்து வடகோவை சென்ட்ரல் அரங்கில் பார்க்க நேர்ந்த ஹாலிவுட் படங்களில் இருந்தே உடன் வருவது இந்த மிரட்சி. ஆனால் இது குறித்து நண்பர்கள் நம்ப மாட்டார்கள் என்ற மேலே சொன்னது அமெரிக்கா குறித்த எனது உயரிய பரப்புரையாகத் தான் இருந்திருக்க வேண்டும். காலம் மாற்ற இயலாத சங்கதிகள் எதுவுமே இல்லாத உலகில் எனது மனதில் உருவாகியிருந்த அமெரிக்காவின் வடிவமும் சற்றுச் சிதைந்தும், கரைந்தும் உருமாறிப் போய் இருக்கிறது. கனவுகளின் தேசம் காசு சம்பாதிக்க ஏற்ற தேசம். இருப்பினும் அதே அளவு பொருளை தாயகத்திலே ஈட்டக் கூடிய சூட்சுமம் எனக்குக் கைகூடி வருவதாக உணரும் போதா நான் இங்கெ வர வேண்டும்?

"Hey, did you watch that cartoon show man?" நடக்கும் போது கூட நிம்மதியாக இருக்க இவன் விட மாட்டான். சிந்தனை ஓட்டம் இப்படித் தான் பல தருணங்களில் கலைகிறது.

"Which show?"

"The one that features gay dogs"

அட எழவு எடுத்தவனுகளா!! ஓரினச் சேர்க்கையில் உங்களுக்கு எல்லையே இல்லையா? நீங்க கெட்டது போக நாய்களையும் கெடுக்கறீங்களா? என்று எண்ணியவாறு "Nope..I didn't watch that" என்று மழுப்பினேன்.

"I know what you thought about me and united states when I asked that questions" என் மனதில் உள்ளதைப் படம் பிடித்தவன் போலப் பேசினான். ஒரு சராசரி இந்தியனைப் பற்றிய சராசரி அமெரிக்கனின் மதிப்பீடு அதில் எட்டிப் பார்த்தது.

இத்தகைய கணிப்புகள் பரவசம் நிரம்பியதாகவும் ரசிக்கத் தக்கதாகவும் ஒவ்வொரு மனிதனும் உணர்வது திண்ணம். இருபது வயதில் ஒரு பெண் மணவானவரா இல்லையா என்பதை அறிய கழுத்தில் இருக்கும் தாலி உதவியாக இருப்பதைக் கண்ட நான் தற்காலத்தில் காலில் இருக்கும் மெட்டியைக் காண்கிறேன். ஆனல் என்னுடன் பதினொன்றாம் வகுப்பில் கூடப் படித்த கண்ணன் ஒரு பெண் நடப்பதை வைத்தே அவரின் மண நிலையைக் கண்டு பிடிக்க முடியும் என்று சொல்லுவான். அவன் கணிப்பு அக்காலத்தில் எப்போதும் பொய்த்ததில்லை. ஆனால் இன்றைய சூழலில் அவனால் அதே அளவு துல்லியமாகச் சொல்ல முடியுமா என்பது சந்தேகமா.

அப்படி கணிப்பு நேற்றைக்கு முன் தினம் முடி வெட்டச் சென்ற போது நடந்தது. முடித்திருத்தம் செய்யும் தொழில் ஒரு சமூக அடையாளமாகக் கருதப்படாமல் முயன்று பயிலும் கலையாக இங்கெ இருக்கிறது. முறையாகக் கற்று அரசிடம் சான்றிதழ் பெறாமல் அதைச் செய்ய முடியாது. முதலாளித்துவ-பொதுவுடமைக் கருத்தாக்கங்களில் எது உகந்ததென ஒரு முடிவுக்கு வர இயலாமல் குழம்பிக் கொண்டு இருக்கும் நான் எனது இருபத்து எட்டு வயதில் முதலாளித்துவத்தால் உலகு உய்யும் என்று நிரூபிக்க முயன்று கொண்டிருக்கும் அமெரிக்காவில் நிலவும் சமூகச் சமநிலை இந்த முடித்திருத்தகத்தில் காண்கிறேன். ஒரு வேளை இதெல்லாம் தான் முன்னேறிய சமுதாயத்திற்கான அளவுகோலா?

மேல் தோலின் நிறமும், எனது ஆங்கில உச்சரிப்பும் என்னை ஒரு இந்தியன் என அவளுக்கு அறிவித்திருக்க வேண்டும்.

எனது முதல் பெயரைக் கேட்டு தனது கணிணியில் உள்ளிட்டவள், "Let me guess your second name" என்றாள்.

எதுவும் பேசாமல் புன்னகைத்து அனுமதித்தேன்.

"படேல்?"

"நோ"

"ஷா?"

"தட் இஸ் அ ராங் கெஸ்" அவளைச் சொல்லிக் குற்றமில்லை. விசா வாங்கி வந்தவன், கள்ளத் தோணியில் வந்தவன் என இங்கே "மை நேம் இஸ் மனீஷ் படேல்" என்பதையே குத்திக் குதறிக் கும்மியடிக்கும் குஜராத்வாசிகள் இந்தியாவின் கலாச்சாரத் தூதுவர்களாக இந்த வெள்ளைக்காரிக்கு இருக்கிறது.

"லெட் மீ ட்ரை திஸ் டைம்"

"ம்..ம்"

"ராவ்.....ரெட்டி??"

"ஐ பெட் யூ. யூ வோன்ட் கெட் இட்" என்று எனது இரண்டாம் பெயரைச் சொல்லி விட்டு சுழல் நாற்காலியை நோக்கிப் போனேன்.

முன்னுருவாக்கப்பட்ட பிம்பங்கள் அனைவர் மனதிலும் புலப்படாத நுண் பதிவுகளாகப் புதைந்து கிடக்கின்றன. தமிழர்களைப் பற்றிய வட இந்தியர்களின் 'கர்நாடக இசை கேட்பவர்கள், டவரா டம்ளரில் கா·பி குடிப்பவர்கள்' என்ற பிம்பம், கடவுள் நம்பிக்கை எல்லாம் பார்ப்பனீயம் என நினைக்கும் அரைகுறைப் பகுத்தறிவுவாதிகளின் பிம்பம், பெரியாரைப் பற்றி எதுவுமே அறியாமல் அவர் சூட்டில் சொன்ன ஓரிரு வாசகங்களை மட்டும் வைத்துக் கொண்டு விவாதம் செய்பவர்களின் மனோவுருவம், தெலுங்கர்களைப் பற்றிய தமிழனின் உருவகம், தமிழனின் தோற்றத்தை ஒரு விதமாக வடித்து வைத்திருக்கும் கன்னடன், ஈழத் தமிழன் எல்லாம் விடுதலைப் புலி எனக் கருதும் சராசரி இந்தியனின் உலக ஞானம் என நீளும் இந்த கணிப்புகள் மனித குல வரலாறில் பன்னெடுங்காலமாக இருந்து வந்திருக்கின்றன.

தன்னைச் சூழும் எதிர்பாராத ஆபத்துகளில் இருந்து காத்துக் கொள்ளவும் துரிதமாக முடிவெடுத்து இயங்கவும் இந்தக் கலை உதவியிருக்கிறது. எனினும் அது உருவாக்கிய பாதிப்புகள் ஒரு புறம் மிகுந்துள்ளன. அதன் நீட்சி தான் இந்தியர்கள் அனைவரும் ஓரினச் சேர்க்கையை வெறுப்பவர்கள் என டேவிட்டை நினைக்க வைத்திருக்கிறது.

இன்னும் சொல்லப் போனால் இத்தகைய கணிப்புகள் பிறரைப் பற்றியதாக மட்டுமே இல்லாமல் தன்னைப் பற்றியதாகவும், அதுவே ஒரு வகையில் மனிதனின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் காரணியாகவும் விளங்கியிருக்கிறது.

கவிஞர் பாடினாரே, "உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்...."

தொடர்ச்சி

4 comments:

மங்கை said...

/// இருப்பினும் அதே அளவு பொருளை தாயகத்திலே ஈட்டக் கூடிய சூட்சுமம் எனக்குக் கைகூடி வருவதாக உணரும் போதா நான் இங்கெ வர வேண்டும்?//

ஹ்ம்ம்ம்,,, பல பேர் இது சொல்லி கேட்டிருக்கேன்... என் அண்ணன் உள்பட...

//தற்காலத்தில் காலில் இருக்கும் மெட்டியைக் காண்கிறேன்//

Sorry...இது கூட இப்ப இல்லை.. இங்க இருக்கறவுங்க கழுத்திலும் ஒன்னும் இல்லை...கேட்டா sweat ஆகுதாம்..திருட்டு பயமாம்.. அதனால தாலிய கலட்டி வச்சுட்டு வந்துட்டேங்கறாங்க.. என்னமோ என்னால இது ஏத்துக்க முடியலை.. ஒரு வேலை நான் தான் மாறனுமான்னு தெரியலை..

//இன்னும் சொல்லப் போனால் இத்தகைய.. விளங்கியிருக்கிறது//

உண்மை...
சில சமயங்கள்ள நம்மை பற்றிய பிறறோட கணிப்ப வச்சு சில முடிவுகள எடுக்குறோம்...
நமக்கு தெரிஞ்ச சில விஷ்யங்கள் அல்லது நமக்கு ஏற்பட்ட நேரடி அனுபவங்கள் வச்சு சில சமுதாயத்த விமர்சிக்கிறோம்.. அதுவே மனசுல பதிஞ்சு போய் அடுத்த தலைமுறையினறுக்கும் அதவே சொல்லி, அவங்களையும் சுயமா ஒரு முடிவு எடுக்க உதவறது இல்லை..

சில சமயத்தில இது போல கணிப்புகள் Prejudiced and Biased ஆகதான் இருக்கு

Anonymous said...

Naane america-vil irunthu paarpathu poandra azhakaana nadai! miga rasithu padithean KS.

Niraya ezhuthungal... vaalthukkal!

spa malai

நிர்மல் said...

நல்ல பதிவு.

Kuppusamy Chellamuthu said...

//Sorry...இது கூட இப்ப இல்லை//
மங்கை..எல்லோரும் ஃபுட்பால் ஆடப்போற மாதிரி பெருசு பெருசா ஷூ வேற போட்டுக்கறாங்க. ஒரே கன்ஃப்யூஷனா இருக்குங்க. :-)

உங்கள் அனைத்துக் கருத்துகளோடும் உடன்படுகிறேன். நன்றி.

வாங்க SPA. உங்கள் வாசகம் ஊக்கமும், பொறுப்பும் ஒரே நேரத்தில் ஊட்டுகிறது.

மிஸ்டர் நிர்மல்.. உங்களுக்கும் நன்றிகள்.