Monday, October 16, 2006

ஒரு சனிக்கிழமைக் காலையில்....

- குப்புசாமி செல்லமுத்து

சொந்த மாவட்டத்தின் தலைநகர். சென்னையில் இருந்து ஈரோடு வராமல் ஊருக்குப் போனதில்லை. அப்படி இருந்தாலும் அருகிலிருந்தும் தொலைவில் இருக்கும் உறவுகளைப் போல ஒட்டியும் ஒட்டாமலும் தான் ஈரோடு மனதில் பதிந்திருக்கிறது. நகரின் தெற்குப் புறமாக இரயில் நிலையம் இருப்பதால் அவனது ஊருக்ககான பஸ் அந்த வழியாகத்தான் வரும். ஆகவே இரயில் சந்திப்பில் இருந்து காளை மாட்டுச் சிலை பேருந்து நிறுத்தம் வரையான பகுதியைத் தவிர இந்த நகரின் எந்த வீதியிலும் குணசேகரன் நடந்ததில்லை.

வழக்கம் போல ஏற்காடு எக்ஸ்பிரஸில் இறங்கி காளை மாட்டுச் சிலையில் இருபத்தி ஐந்து நிமிடக் காத்திருத்தலுக்குப் பிறகு வந்தது ஒரு திண்டுக்கல் பேருந்து. தாராபுரம், ஒட்டன்சத்திரம் வழியாகத்தான் திண்டுக்கல் போயாக வேண்டும் என்ற நம்பிக்கையில் ஏறினான். வழக்கமாக பழனி வண்டி ஏதாவது கிடைத்து விடும். இந்த முறை திண்டுக்கல் பஸ்ஸில் ஏறியது ஏதோ வித்தியாசமாக அவனுக்குத் தோன்றியது.

உறக்கம் தொலைத்த முன்னிரவும், பஸ்ஸில் பாடிய பண்பலை இசையும், குலுங்கி அசையும் பயணமும், ஜன்னலில் ஊடாக உள்வரும் இளங்காலைக் காற்றும் தந்த உறக்கத்தில் சில கிலோ மீட்டர்களைத் தாண்டிய பின் விழித்து டிக்கெட் எடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தவனாய் நடத்துனரைத் தேடினான். நடத்துனர் தென்படும் முன்னதாகவே மொடக்குறிச்சி என்ற பெயர்ப்பலகை அவனுக்குக் கலக்கத்தைக் கொடுத்தது, தப்பான பேருந்தில் ஏறிவிட்டதை உறைத்தது. காங்கேயம் போகும் வழியில் மொடக்குறிச்சி வரக்கூடாதே! ஒரு வேளை வெள்ளகோவில், மூலனூர், ஒட்டன்சத்திரம் பாதையில் இந்த பஸ் பயணிக்குமோ? அப்படியானால் மூலனூரில் இறங்கி தாராபுரத்திற்கு வேறு பஸ் பிடிக்க வேண்டியதுதான்.

"ஏனுங்க... வெள்ளகோயப் போயி போகும்ங்களா?" என்று முன் இருக்கையில் அமர்ந்திருந்தவரைக் கேட்டான்.

"கொடுமுடி மேல கரூர் போறதப்பா" என்றார்.

தற்சமயம் அவனுக்குத் தெளிவாக விளங்கியிருந்தது. நம்பிக்கை, பயணப்பாதைகள் குறித்த தனது அதீதத் தன்னம்பிக்கை, தவறான பாதையில் பயணிக்கச் செய்ததை மனம் உணர்ந்தாலும் ஏற்றுக் கொள்ளவில்லை. என்ன போச்சு? இரண்டு மணி நேரம் கூடுதலாகப் பயணிக்க வேண்டும். அவ்வளவு தான்.. பரவாயில்லை. இது போல ஒரு தவறு நடக்காமல் போயிருந்தால் காவிரிக்கரையைக் காலை நேரத்தில் கண்குளிரப் பார்த்தபடி களிக்கும் வாய்ப்புக் கிட்டியிருக்காதல்லவா? கொடுமுடியில் பிரசித்த பெற்ற திருமால் கோவில் ஒன்று இருப்பது அவனுக்குத் தெரியும். பங்குனி மாதம் பழனி முருகனுக்குத் தீர்த்தக் காவடி எடுப்பவர்கள் கொடுமுடிக் கரையில் இருந்து தீர்த்தம் முத்திரித்துப் போவார்கள். அதற்குப் பின்னணியில் சொல்லப்பட்ட கதையை நினைத்தால் சிரிப்பாக இருந்தது.

அதாவது காவிரி ஆறு நேராகத் தெற்கே பாய்ந்து பழனியை நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்ததாம். முருகக் கடவுள் அதை நோக்கிக் காத்துக் கொண்டிருக்கும் அந்தத் தருணத்தில் திருமால் கொடுமுடியில் வந்து நீட்டிப் படுத்துக் கொள்கிறார். அவரைத் தாண்ட முடியாத காவிரி திசை விலகிக் கிழக்கே பாய்ந்ததாம். அதைக் கண்டு முருகன் கோபமுறுவதை உணர்ந்த மிஸ்டர் திருமால் வருவா வருடம் குமரனின் கோடை வெம்மை தணிக்க இதே கொடுமுடிக் கரையில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்துப் போகும் சமரசத் திட்டத்தை அளித்தாராம்.

இப்படி அறிமுகமான இந்த ஊருக்கு நான்காம் வகுப்புப் படிக்கும் போது வந்ததற்குப் பிறகு இப்போது மறுபடியும் வருகிறான். சிறு வயதில் அந்த ஊரின் மகிமையாக சினிமா அவ்வையார் கொடுமுடி பி.சுந்தராம்பாள் அவன் கண்ணுக்குத் தெரிந்தார்.

முதன் முறையாக வானவில்லும், இரயிலும் இந்த கொடுமுடியில் கண்டது மனதில் இன்னும் நீங்காமல் நிற்கிறது. அந்த இரண்டையும் ஒரே நாளில் ஒரே சமயத்தில் கண்டான். வெயிலையும், மழையையும் இயற்கை ஒருசேர இறைத்த அந்த மாலை வேளையில் ஒரு அருவி போல, அதாவது அனைத்து வண்ணங்களையும் ஒன்றாகக் கரைத்து யாரோ வானத்தில் இருந்து தொடர்ச்சியாக ஊற்றுவதால் உருவான அருவி போல அந்தக் காட்சி தோன்றியது. கொஞ்ச தூரம் ஓடிப் போனால் அதைப் பிடித்து விடலாம் என நினைத்தான். கதிரவன் மேற்கே இருக்க கிழபுறம் ஆகாயத்தில் இருந்து பல நிற நீர்க் கற்றை காவிரியில் ஒழுகுவதாக வானவில் இருந்தது. புதுத் தாவணியில் காதலனுக்குக் காத்திருக்கும் காதலியின் புத்துணர்ச்சியோடு கதிரவனை எதிர்நோக்கிக் காத்திருப்பதாக இருந்தது வண்ணவில். ஆனால் சிறுவனின் கற்பனை அத்தனை தொலைவு பயணிக்கவில்லை. அவனுக்கென்னவோ வானவில் புத்தகத்தில் ஒளித்து வைத்திருக்கும் மயிலிறகு போல இருந்தது. அதற்கான காரணம் சொன்னால் நமக்கு நம்ப முடியாதது போல இருந்தாலும் அதுவே உண்மையாகும். ஏதோ ஒரு பேரதிசியம் நிகழ்ந்தது போல வானவில்லுக்குப் பக்கத்தில் ஒரு குட்டி வானவில். மயிலிறகு குட்டி போட்டால் எப்படி இருக்குமோ, அப்படி அவனுக்கு இருந்தது. அந்த நிகழ்ச்சி நடந்து இருபதுக்கும் மேலான வருடங்கள் காலச் சக்கரத்தில் சுழன்று போனாலும் வானவில், இரயில், மயிலிறகு ஆகிய இந்த மூன்றில் எதைப் பற்றி நினைத்தாலும் இன்னும் கூட அவன் மனதில் கொடுமுடி வந்து போகும்.

அந்தக் கொடுமுடியில் இப்போது பஸ் நின்றிருந்தது. பல ஆண்டுகளாக அவன் இந்த ஊரைக் குறித்துக் கொண்டிருந்த வடிவம் என்னவோ ஒரே நொடியில் மாறிவிடும் போல இருந்தது. மாபெரும் நகரமாக அவனது இளம் மூளையில் இருந்த பதிவுகளை இப்போது கண்ட தோற்றம் தோற்கடிக்க முயன்றது. Yet another village என்று மட்டுமே தற்சமயம் நினைக்க வைத்தது. மிகச் சாதாரணமாக எந்த வித அலங்காரங்களும் இல்லாமல் எளிமையாக இருந்தது. ஆச்சரியமாக இருந்தாலும், அவன் அதை ஏற்றுக் கொண்டான். ஒரு காலத்தில் மிக அழகாகத் தெரிந்த அவனது பள்ளிப் பருவத்துப் பெண்கள் இப்போது சாதாரணமாகத் தெரிவது போலத்தானே இதுவும்?

முழுக்கை சட்டை அணிந்திருந்த ஒரு நபர் முன் கேட்டில் ஏறி வந்து பக்கத்தில் அமர்ந்து கொண்டார். கொடுமுடியில் பஸ் ஏறிய ஒரே நபர். திண்டுக்கல் செல்லும் ஆளா அல்லது கரூர் போகும் ஆளா என்ற கணிப்பு அவன் மனதில் ஓடியது. அவரே பேச்சுக் கொடுத்தார். கலகலப்பாகப் பேசினார். எங்கே போகிறான் என்பதைக் கேட்டறிந்தவர், தாராபுரம் பேருந்து கரூர் பஸ் ஸ்டாண்டில் எங்கே நிற்கும் என்று விளக்கினார். தானும் கரூரில் இறங்கப் போவதாகச் சொன்னார். அந்த நபர் ஏதோ சொந்தமாக பிசினஸ் செய்கிறார் என்று குணசேகரன் எண்ணினான். சனிக்கிழமைக் காலையில் இழுத்துப் போத்திக் கொண்டும் தூங்கக் கற்றிருக்கும் இந்தக் காலத்தில் உழைக்கக் கிளம்பிப் போய்க் கொண்டிருக்கும் இந்த மனிதர் எத்தனை உயர்ந்தவர் என்று பெருமையாக நினைத்துக் கொண்டான்.

"ஆமாம்மா..காங்கேயம் பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்குது. ஒரு மணி நேரத்தில வந்துருவேன்" என்று செல்பொனில் அம்மாவிடம் பொய் சொன்ன போது கரூர் பஸ் ஸ்டாண்டை அவர்கள் நெருங்கிக் கொண்டிருந்தார்கள். பேர் தெரியாத பஸ்ஸில் ஏறி விட்டதை வீட்டில் சொல்லி அவமானப்பட அவனது தன்மானம் இடம் தரவில்லை. அதனால் பொய் சொன்னான்.

மேதாவியாக தன்னைக் காட்டிக் கொள்ள ஒரு இந்து பேப்பர் வாங்கிக் கொண்டு, தேநீர் அருந்தி விட்டு, தாராபுரம் பஸ்ஸில் ஏறி இஞ்சி மரப்பா விற்பவரிடம் வேண்டாம் எனச் சொல்லி விட்டு அந்தப் பிச்சைக்காரரை நிமிர்ந்து பார்த்தான்.

அவரது கண்கள் 'காசி' விக்ரம் மாதிரி விநோதமாக இருந்தன. தனது இயலாமை குறித்து மிகச் சாதுர்யமாகப் பேசி காசு தருமாறு அனைவரையும் வேண்டினார். எத்தி எத்தி நடந்தார்.

குணசேகரனின் வியப்பு கூடியது. இழுத்துப் போர்த்தித் தூங்கக் கற்றிருக்கும் இந்த சனிக்கிழமைக் காலையில்... அடடா... பிச்சை எடுப்பது அத்தனை சுலபமல்ல. அதே ஆள்... அவரது சட்டை மாறியிருந்தது. தோற்றம் மாறியிருந்தது. இவன் இருக்கைக்கு அருகில் வந்த போது மட்டும் லேசான புன்னகை சிந்தி விட்டுப் போனார்.

7 comments:

பெத்த ராயுடு said...

அருமையான கதை.
கடைசியில் நல்ல திருப்பம்.

Anonymous said...

நல்ல இயல்பான நடை உங்களுக்கு.
அங்கங்கே தலைதூக்கும் "கருத்துகளை"த் தவிர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

-பரி

Kuppusamy Chellamuthu said...

நன்றிங்க பெத்தராயுடு. பஸ்ஸ்டாண்ட்ல பஸ் திரும்பாம கதை திரும்பிடுச்சு.

பரி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. 'கருத்து' தலை தூக்குவதைப் பரிசீலிக்கிறேன். (இப்படியெல்லாம் சொல்ல எனக்கே சிரிப்புதான் வருதுங்க) :-)

Vaa.Manikandan said...

நானும் அதே தான் சொல்லப் போகிறேன் :) நல்ல கதை. நல்ல திருப்பம். ஆனால் சனிக்கிழமை பேரை ஒருத்தன் தமிழ்மணத்துல கெடுத்து வெச்சிருக்கும் போது அந்த டைட்டில் வெச்சிருக்கீங்க? ;)

Syam said...

ன்னா..கதை சூப்பருங்னா..இந்த மாதிரி ஈரோடுட்டுல இருந்து பஸ் மாறி ஏறுனது எனக்கும் நடந்து இருக்கு...அப்போல்லாம் அத வெளில காட்டிக்கிட்டதே இல்ல... :-)

நந்தகுமார் said...

ஈரோடு இரயில் நிலயத்தில் இறங்கி காளை மாட்டு சந்திப்பில் காங்கயம் போக பழநி வண்டி பிடித்த ஆறு ஆண்டு கால நினைவுகளை அசை போட்டுக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன். அரச்சலூர், நதத்க்காடையூரோ இல்லை பெருந்துறை, சென்னிமலையோ போகும் என்று நினைத்தேன் மொடக்குறிச்சி, கொடுமுடி போய் விட்டீர்கள். பதிவுக்கு (மிக தாமதமான) நன்றி. (தமிழ்மணம் பக்கம் வந்து வெகு நாளாகி விட்டது)

Kuppusamy Chellamuthu said...

நன்றி மணிக்கண்டன்.

ஷ்யாம்..உங்க கதை தாங்க இது!! தெரியாதா..

நன்றிங்க நந்தகுமார்..... வருகைக்கும், அசை போட்டதற்கும்.