Thursday, November 02, 2006

பெரிய பையனும், சின்னப் பையனும்

- குப்புசாமி செல்லமுத்து

பெரிய பயனின் குரல் இவ்வளவு கம்பீரமாகச் சுண்டி இழுக்கும் என்று அவன் எதிர்பார்க்கவேயில்லை. அந்த உடுக்கையடிக் கதைப் பாட்டுக் குழுவில் பெரிய பையனின் குரல் மட்டுமே ஓங்கி ஒலித்தது. அவரின் பாட்டைக் கேட்பதற்காகவே நிறையப் பேர் கோவிலுக்கு வருவார்கள். அன்று மதியம், பகல் பொழுதை மதிய வேளை என்று சொல்வார்களே அந்த மதியமல்ல. முழுமதி வானில் தவழும் பவுர்ணமியை மதியம் என்று அந்த வட்டாரத்தில் குறிப்பிடுவது வழக்கம்.

கொங்கு மண்டல மக்களின் கலாச்சார வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கிற அண்ணமார் சாமி கோவில் ஒன்றில் அப்படிப்பட்ட மதியத்தன்று நடக்கும் விசேசப் பூசைக்கு வந்த சிவபாலனுக்கு ஆச்சரியம் இன்னும் விலகியிருக்கவில்லை. இந்தக் கோவிலுக்கு வர வேண்டும் என்கிற சிவபாலனின் ஆசை இன்றுதான் நிறைவேறியிருக்கிறது. மதியப் பூசை முடிய ராத்திரி ஒரு மணி ஆகிவிடும், அதற்குள் தூங்கி விடுவான் என்று சொல்லி அவனை மட்டும் வீட்டில் தொன தொனவென்று பேசும் கிழவியிடம் ஒப்படைத்து விட்டு வந்து விடுவார்கள். இன்று மட்டும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி கூடவே தொற்றிக்கொண்டு வந்து விட்டான்.

சிலபாலனுக்கு மூன்றாவதோ நாலாவதோ படிக்கிற வயது. ஒன்னு ரண்டு ஆயிரம் வரை சொல்வான். அப்படிச் சொல்வதைப் பெருமையுடன் ஒறம்பறைக்கு யார் வந்தாலும் அவர்களிடம் சொல்லாமல் விட மாட்டான். அதே போன்ற ஆசையோடு அப்பாவிடம், "அப்பா எனக்கு ஒன்னு ரண்டு ஆயிரமெரைக்கும் தெரியுமே" என்று ஆசையோடு சொன்னவனுக்குக் கிட்டிய, "போதும்டா நம்ம வருமானத்திற்கு அதே சாஸ்தி" என்ற பதிலின் உள்ளார்ந்த சோகம் அந்தச் சின்ன வயதுக்குப் புரியவில்லை.

அதெல்லாம் இருக்கட்டும். நிகழ்காலத்திற்கு வருவோம். இந்த அண்ணமார் சாமி கோவில் இதுவரை அவன் செய்து வைத்திருந்த கற்பனைகள் எல்லாவற்றையும் ஈடு செய்வதாக இருந்தது. கோவிலுக்குச் சற்றுத் தள்ளி மிகப்பெரிய புளிய மரம், அதை ஒட்டிய வேப்ப மரம் ஆகிய இரண்டும் ஒன்றாகப் பிணைந்து வளர்ந்திருந்தன. அவற்றின் அடிமரம் ஆற்றங்கரை ஓரமாக இருந்தது. கோவில் வாசலில் இருந்து உருண்டு கொண்டே போனால் அந்த மரம் வரைக்கும் சமதளத்திலும், அதற்குப் பிறகு ஆற்றுக்குள் விழும் வரை சரிவிலும் உருள வேண்டி வரும்.

மரத்திற்கு அப்பால் முழு மதிய நிலா வட்டமாகக் காட்சி தந்தது. அமாராவதில் தொடையளவுத் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. அதையும் பொருட்படுத்தாமல் பல பேர் அக்கரையில் இருந்து சாமி கும்பிட வந்திருந்தார்கள். அப்பகுதி மக்கள் கழுத்தளவு தண்ணீர் வரை இறங்கிக் கடந்து விடுவார்கள். அதற்கு மேல் போனால் மட்டுமே பரிசலை நாடுவார்கள். பரிசல் துறை கோவிலுக்குத் தெற்கே கண்ணுக்கேடும் தூரத்தில் இருந்தது. சுற்று வட்டாரத்தில் இருக்கும் பல கிராமங்களுக்கு சேர்த்து ஒரே பரிசல் துறை இந்த ஊரில்தான் இருக்கிறது. பரிசல் போடுவதற்கு ஒரு ஆளை நியமித்திருந்தார்கள். அந்த ஆள் தொலை தூரமாக வேறொரு ஊரில் வசித்தார். ஆற்றில் வெள்ளம் வந்து பரிசல் போட்டாக வேண்டிய கட்டாயம் இருப்பதான செய்தி அவரைச் சேர்ந்து அவர் பதினொரு மணிக்கு வந்தடைவதற்குள் ஊர்க்காரர்களே பரிசல் போட்டிருப்பார்கள். டவுனுக்கு சோலியாகப் போகிறவர்கள், பால் ஊற்றப் போகிறவர்கள், பள்ளிக்கூடம் போகிற குழந்தைகள் என அத்தனை பேரும் அதற்குள் போயிருப்பார்கள். இருந்தாலும் பரிசலுக்குப் பொறுப்பாளியாக இருக்கிற அந்தப் பரசக்காரன் என்ற பரிசல்காரருக்கு சுற்றுவட்டக் கிராமங்களில் விளைநிலம் இருக்கிறவர்கள் தவுச தானியமாகவும், அப்படி இல்லாதவர்கள் பணமாகவும் கொடுத்து வந்தார்கள்.

யாரோ எசவடம் கும்பிட்டிருப்பார்கள் போலத் தோன்றியது; சக்கரைப் பொங்கல் கொடுத்தார்கள். வாழ்வியல் மாற்றத்தில், நவீனத்தின் தாக்கத்தில் மெது மெதுவாக வழக்கொழிந்து வரும் வட்டாரச் சொற்களில் எசவடமும் ஒன்று. அது எப்படித் தோன்றியது, எந்தச் சொல் மருவி அப்படி ஆனது என்றெல்லாம் ஆராய்ந்தால் வெகு சுவாரசியமாக இருக்கும். ஒரு வேளை இசைவிடம் என்பது எசவடமாக ஆகியிருக்கலாம். சுருக்கமாகச் சொன்னால் எசவடத்தை ஒரு வகை இலஞ்சம் எனலாம். அவைத்தமிழில் வெளிப்படுத்தினால் வேண்டுதல், நேர்த்திக் கடன் எனலாம். மாடு காளைக்கன்னுப் போடுவதற்கான வேண்டுதல், தேள், பூராண் முதலிய விசகடி குணமாவதற்கு அண்ணமார் கோவில் பூசாரி தண்ணி மந்திரித்துக் கொடுத்ததற்கான நன்றிக்கடன், வெள்ளாமை வெளச்சல் சம்மந்தமான வேண்டுதல், புள்ளைக்கு மாப்பிளை அமைதல் போன்ற பல எசவடக் கடன்கள் இருக்கும். அவை பெரும்பாலும் கோவில் கூட்டத்திற்கு ஆளுக்கொரு கரண்டி சர்க்கரைப் பொங்கலாகவோ, சுண்டலாகவோ அல்லது எல்லோருக்கும் போதும் போதும் எனும்படி விருந்து வைக்கும் மையார் பூசையாகவோ அமைவதுண்டு.

மாரியாத்தா கோவில் அடசல் சாற்றுக்கு அபார ருசி உண்டு என்று அம்மா எப்போதும் சொல்வதைப் பல தடவை கேட்டிருக்கிறான். ஒரு கோழியைக் கோட்டை மாரியம்மனுக்குப் பலியிட்டு அங்கேயே கருவேல மரத்திற்கடியில் அடுப்புகூட்டி ஆக்கும் கறி வீட்டிலே சகல மசாலாவையும் கலக்கி வேகவைக்கும் கறியை விட ருசியாக இருக்கும் என்று எல்லோருமே ஒப்புக்கொள்வார்கள். அதே போல அண்ணமார் கோவில் எசவடச் சக்கரைப் பொங்கல் கூடுதல் ருசியாக இருந்தது சாமி சக்திதான் என்று சிவபாலன் நினைத்தான். பெரிய ஆளானதும் தான் சக்கரைப் பொங்கலெல்லாம் தராமல் ஒரு மையார் பூசை வைக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.

கோவிலில் வாராவாரம் வெள்ளிக்கிழமை ராத்திரி பூசை இருக்கும் என்றாலும், அப்போதெல்லாம் அண்ணமாரின் கதை முழுவதும் பாட்டாகப் படிக்க மாட்டார்கள். மதியப் பூசையன்று மட்டுமே பெரும் கூட்டம் கூடி விடிய விடியக் கதைப் பாட்டு நடக்கும். கதை கேட்பதற்காகவே வெளியூரில் இருந்து நிறையப்பேர் வருவார்கள். பெரிய பையன் குழிவினர் சுமார் மூன்று மணி நேரம் பாடிய பிறகு இப்போது தான் சங்கரும் பொன்னரும் வேட்டைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.

அண்ணமார் கதையில் வரும் பாத்திரங்களை ஏற்றவர்கள் அங்கே இருந்தார்கள். சின்னண்ணனாக, பெரியண்ணனாக, சாம்புவனாக சில பேர் கோவிலை அலங்கரிப்பார்கள். கதையிலே பொன்னருக்கும், சங்கருக்கும் ஒரு பொறந்தவள், அதாவது சகோதரி இருப்பாள். தங்கையான அருக்காணித் தங்காளின் அண்ணன்மாரான இந்த இருவருமே அண்ணமார் சாமிகள். அவர்களை சின்னண்ணன் என்றும் பெரியண்ணன் என்றும் சொல்வார்கள். வெள்ளாமைக் காட்டை நாசம் பண்ணிய வேட்டுவக் காளியின் காட்டுப் பன்றியை வேட்டையாடிவிட்டு வந்து ஆடை ஆபரணங்களை அண்ணமார் கழுவிக்கொண்டிருக்கும் போது வேட்டுவக்காளியின் ஆட்கள் மறைந்திருந்து தாக்கிச் சாய்த்து படுகளமாக்கி விடுவார்கள்.

அந்தக் காட்சியைப் பெரிய பையனும் அவரது குழுவினரும் பாட்டில் படிக்கும் போது அத்தனை பேரும் பரவசமாகி விடுவார்கள். படுகளங்கள் பொத்துப் பொத்தென்று விழும். 'இன்னிக்கு எத்தன படுகளம் சாஞ்சுது?' என்பது தான் பேச்சாக இருக்கும். அண்ணமார் வஞ்சகமாகத் தாக்கிச் சாய்க்கப்பட்டதைப் போல கோவிலில் படுகளம் வீழ்ந்தவர்கள் மாண்டுவிடுவதாக ஐதீகம். அப்படி விழுபவர்களில் மாற்றமின்றி சாம்புவன், சின்னண்ணசாமி, பெரியண்ணசாமியாகப் பொறுப்பேற்றவர்கள் இருப்பார்கள். அது போக வேறு சில பக்தர்களும் சாய்ந்திருப்பார்கள். மூர்ச்சையாகி சுயநினைவின்றி சவம் போலவே கிடப்பார்கள்.

அந்தப் படுகளச் செய்தி கேட்டு தங்காள் ஓடோடி வந்து அழுது கதறி அவர்களை உயிர்ப்பிப்பது அதன் பிறகு நடக்கும். வயதுக்கு வராத சிறு பெண் யாராவது தங்காளாக இருப்பார். வரிசையாக ஒவ்வொரு படுகளத்துக்குப் பக்கதில் தனித்தனியாக வந்து , "அண்ணா, அண்ணா" என்று கதறி எழுப்புவாள். அவளோடு சேர்ந்து உடுக்கைப் பாட்டு கூடுதல் தாக்கத்தை உண்டாக்கும். படுகளத்திற்கு நினைவு திரும்பி எழும்புவதற்கு உடுக்கையின் பங்களிப்பே மிக முக்கியமானது. மிக விசேசமான நாட்களில் பத்து, பன்னிரண்டு படுகளங்கள் கூட விழும். அவற்றை எல்லாம் எழுப்பக் குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது ஆகும்.

இத்தனை விமரிசையான ஆத்தங்கரை அண்ணமார் கோவில் மதியப் பூசையின் முக்கிய நாயகன் பெரிய பையன் என்பது அத்தனை பேருக்கும் தெரியும். சிவபாலன் பெரிய பையனைத் தனிப்பட்ட முறையில் நன்கு அறிவான். பூசாரியும், சின்னண்ண பெரியண்ண சாமிகளும் பூசை செய்வதை தொழிலாகச் செய்வதில்லை. பெரிய பையனும் உடுக்கைப் பாட்டை நம்பி மட்டும் சீவனம் செய்வதில்லை. பாரம்பரியமாகப் பேணப்பட்டு வந்த வழிபாட்டுமுறையை அவர்கள் தங்களால் இயன்ற அளவில் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.

மற்ற மதியப் பூசையைப் போல அன்றும் படுகளமெல்லாம் எழுப்பி கடைசிப் பூசை நடந்து முடிய அதிகாலை இரண்டு மணி ஆகியிருந்தது. ஆனால் சிவபாலன் சர்க்கரைப் பொங்கல் தின்றதும் பத்து மணிக்கே தூங்கி விட்டான் என்தைச் சொல்ல மறந்து விட்டோம். அதற்குப் பிந்தைய பவுர்ணமி தினங்களில் அவன் பூசைக்குப் போக முயற்சிப்பதும், அவனுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு அவன் தந்தை மட்டும் போவதும் பல காலம் நடந்தது.

ஒரு வழியாக விடியும் வரை தூங்காமல் இருக்கக்கூடிய நிலையைச் சில ஆண்டுகளில் அவன் எய்திய போது வேறு சில தவிர்க்க முடியாத மாற்றங்களும் கூடவே நடந்தன. சேர்க்கைக்குச் சிறுவர்கள் வராத காரணத்தால் கிராமப் பள்ளிக்கூடத்தை அரசு மூடியது. அதற்குக் காரணமாக, குடியானவர்கள் நகரத்து இங்கிலீஷ் மீடியப் பள்ளிக்கூடத்திற்குத் தமது குழந்தைகளை வேனில் அனுப்பினர். அதற்காக அவர்கள் கந்து வட்டிக்குக் கடன் வாங்கவும் தயாராக இருந்தார்கள். அப்படி நாகரிகம் தொற்றிக்கொண்ட குழந்தைகளில் யாரும் தங்காளாக முன்வந்து படுகளம் எழுப்ப விரும்பாத நிலை உருவானது. புதிய தலைமுறை ஆண்கள் திருப்பூரின் பனியன் கம்பெனிக்கும், வெளியூர்களில் கந்து வசூலுக்கும் போய் விட்டார்கள்.

குடிப்பழக்கத்தால் குடல் வெந்து பெரிய பயன் செத்துப் போனார். அவரது உடுக்கைப் பாட்டுக் கலையை அவருக்குப் பின் கற்க அவரது சொந்த வாரிசுகளோ, சுய ஆர்வமுள்ளவர்களோ தயாராக இல்லை. அவரது மகன் சிங்காரம் தந்தையின் அடப்பத்திற்கு மட்டும் வாரிசாகிப் போனார். அவ்வப்போது கத்தி மட்டும் புதிதாக வாங்கி அதில் வைத்து கொண்டாலும் தந்தையின் அடப்பத்தை மட்டும் மாற்றவில்லை.

சிவபாலனுக்கு, அண்ணமார் வரலாற்றைப் போலவே, அண்ணமார் பூசையின் படுகளக் காட்சியும் வாய்வழிக் கதையாகவே இருக்கிறது. அது நான்கு மணித் தூக்கத்திற்கு அவன் கொடுத்த விலை.

2 comments:

Anonymous said...

It is like real story.

Thanks!!

மங்கை said...

ரொம்ப நல்லா இருக்கு குப்புசாமி.. சின்ன வயசில பொள்ளாச்சி பக்கத்தில நான் இந்த அண்ணமார் கதைய கேட்டு இருக்கேன்