Wednesday, December 20, 2006

பிரெஞ்ச் கிஸ்..

- குப்புசாமி செல்லமுத்து

நீண்ட நேரம் டச்சு மொழியில் விளக்கம் தந்த பிறகு கடைசியாக, "இந்த சப்வேயில் தான் இளவரசி டயானா விபத்துக்குள்ளாகி இறந்தார்" என்று ஆங்கிலத்தில் ஒரே ஒரு வரி மட்டும் பேசினார் அந்தச் சுற்றுலா வழிகாட்டி. டயானா நினைவாக அதே இடத்தில் ஒரு அணையா விளக்கை ஒளிரச் செய்திருந்தார்கள்.

நாற்பத்து மூன்று இருக்கைகள் கொண்ட பேருந்தில் கார்த்திக், ஆனந்தி இருவரோடு சேர்த்து மற்ற இரு பாரசீக இளைஞர்கள் இருந்தனர். அவர்களுக்கு மட்டும் ஆங்கிலத்தில் எடுத்துச் சொல்ல வேண்டியது வழிகாட்டிக்குச் சற்று சங்கடத்தை உருவாக்கியிருந்தது.

"நான் கார்த்திக். இது ஆனந்தி. நாங்கள் இந்தியர்கள்" என்று அவர்களிடம் அறிமுகம் செய்தான். 'தமிழர்கள்' என்று சொல்லத் தோன்றவில்லை. ஆனால் அவர்கள் பாரசீகர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டார்கள். எந்த நாடு என்று குறிப்பிட்டுக் கேட்ட போதுதான் 'ஈரான்' என்று சொன்னார்கள்.

அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை பிரெஞ்சுக்காரர்கள் கொடுத்தது. அதற்கு நன்றி செலுத்தும் விதமாக அதே போன்ற மினியேச்சர் சிலை ஒன்றை அமெரிக்கர்கள் பிரான்சுக்குப் பரிசளித்திருந்தார்கள். அந்தச் சிலையைக் கடந்து பேருந்து ஊர்ந்த போது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவள் இடக்கரத்தைத் மெதுவாகத் தொட்டு வருடினான் கார்த்திக்.

வெடுக்கென்று கையை விடுவித்துக் கொண்டாள். "அவசரப்பட்டு விட்டேனோ!" என அவன் வியந்தான். அதே சமயம் அவன் பக்கம் பாராமல் ஜன்னலுக்கு வெளியே பார்வையைச் செலுத்திய படி அவள் சிரித்துக் கொண்டாள்.

ஏதோ பெயர் நினைவில்லாத ஒரு தேவாலயம் முன்னர் இறக்கி விட்டு அங்கே பேருந்து இருபது நிமிடம் நிற்கும் என்றார்கள். "பஸ் பத்து நிமிசம் நிக்கும் சார். டீ, காஃபி சாப்டறவங்க இறங்கி சாப்பிடலாம்" என்ற குரல் நிஜத்தில் ஒலிக்காவிட்டாலும் அவன் மனக்காதுக்குக் கேட்டது.

இவர்கள் இருவரும் கோவிலுக்கு உள்ளே செல்லவில்லை. அதன் படிக்கட்டில் ஒரு கிழவன் தானியம் விற்றுக் கொண்டிருந்தான். ஒரு யூரோவுக்கு கை நிறைய அள்ளிக் கொடுத்தான். அதை வைத்துக் கொண்டு கையை நீட்டிய போது சிமெண்ட் நிற புறாக்கள் வந்து கை மீதும், தோள் மீதும் அமர்ந்து கொண்டன.

சிறிய அலகினால் கொத்தித் தின்னும் போது அவை ஏற்படுத்திய 'புரு புரு' உணர்ச்சி அவளுக்கு கிளுகிளுப்பைத் தந்திருக்க வேண்டும். கார்த்திக் அந்தக் காட்சியில் அவளைக் கண்கொட்டாமல் ரசித்தான். மார்ச் மாத இளவேனிற் காற்றின் குளிரில் இருந்து காத்துக்கொள்ள கைகளைத் தேய்த்து வெப்பம் உற்பத்தி செய்தான்.

அங்கிருந்து கிளம்பிச் சென்று மலை உச்சியில் அமைந்திருக்கிற இன்னொரு தேவாலயத்திற்கு அருகில் பேருந்தை நிறுத்தினார்கள். ஒரு மணி நேரம் அங்கே நேரம் ஒதுக்கப்பட்டது. அந்த ஆலயத்திற்கு அருகாமையில் பென்சில் ஓவியர்கள் சுற்றுலாப் பயணிகளை வைரைந்து கொண்டிருந்தார்கள். ஐம்பது யூரோ கொடுத்து ஏற்கனவே அழகாக இருக்கிற அவளை இன்னும் கூடுதல் அழகோடு வரைந்து வாங்கிக் கொண்டான். திரும்பி வரும் போது பூத்த முகத்தோடு அவளாகவே அவன் கையைக் கோர்த்துக் கொண்டாள்.

பசிக்கிறது என்று சாப்பிடுவதற்காக அருகில் இருந்த கடைக்குள் நுழைந்தார்கள். அங்கே பாரசீக இளைஞர்கள் இருவரும் வேக வைக்காத பச்சை மாமிசத்தை காய்ந்த ரொட்டிக்கு நடுவில் வைத்துத் தின்று கொண்டிருந்தனர். அதை பார்த்ததும் ஆனந்திக்குக் குமட்டிக் கொண்டு வந்தது. இருவரும் வேகமாக வெளியேறிக் கீழிறங்கி வந்து மெக்டொனால்டு கடையைத் தேர்ந்தெடுத்தார்கள்.

சாப்பிடும் நேரத்தைத் தவிர மற்ற நேரம் அவர்கள் கைகோர்த்தபடியே தான் இருந்தார்கள். பக்கத்து மேசையில் ஒரு நடுத்தர வயது இத்தாலிய ஜோடி உலகை மறந்து முத்தமிட்டுக் கொண்டிருந்தனர். அதைக் கொஞ்சமும் சட்டை செய்யாமல் குழந்தைகள் இரண்டும் பிரெஞ்சு வறுவலை ருசித்துக் கொண்டிருதன. "சே..கொஞ்சம் கூட வெவஸ்தையே இல்லாமே.." என்று ஆனந்தி முனுமுனுத்தாள்.

உணவகத்தை விட்டு வெளியே வந்து அவர்கள் நடந்த போது கைகள் சேர்ந்திருக்கவில்லை. கொஞ்ச தூரம் கடந்திருப்பார்கள். மலையாளமும், தமிழும் கலந்த ஒரு மொழியென இவர்கள் நினைக்கும் வண்ணம் பிழையில்லாத் தமிழ் பேசிய படி இரு பெண்கள் இவர்களைக் கடந்தனர். அதற்கு அருகாமையில் 'எம்.ஜி.ஆர். படவுலகம்' என்ற பெயர் தாங்கிய பலகை ஒரு கடை வாசலில் காணப்பட்டது. அவனுக்கு மயிர்க்கால் எல்லாம் நட்டமாக நின்றது. இத்தனைக்கும் அவன் சிவாஜி ரசிகன். அவள் ஏதும் பேசவில்லை.

கண்ணாடிப் பிரமிடு நடுவில் அமைந்திருந்த உலகப் புகழ் பெற்ற லூர்த் அருங்காட்சியகத்தை அடைந்த போது ஆனந்தி களைத்திருந்தாள். எண்ணற்ற வண்ண வண்ண ஓவியங்கள், சிற்பங்கள் அருங்காட்சியகத்தை நிற்த்திருந்தன. அதை முழுமையாச் சுற்றிப் பார்க்கவே ஒரு நாளைக்கு மேல் ஆகிவிடும் போலத் தோன்றியது.

குறைந்த பட்சம் மோனாலிசா படத்தை மட்டும் பார்த்து விடவேண்டும், பக்கத்தில் நின்று போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையோடு சென்றார்கள். சுவரில் தொங்கிய புருமற்ற உருவம் பொருந்திய அந்த மோனாலிசா ஓவியத்தைக் கண்டு பெரும் ஏமாற்றம் கார்த்திக்கைத் தொற்றிக் கொண்டது. அங்கே உள்ள சித்திரங்களியே மிகச் சிறியது அதுவாகத் தான் இருக்கும் என நினைத்தான். அவனைப் பொறுத்த வரை அங்கு உள்ள படங்களில் மட்டமான ஈர்ப்பு உடைய படம் எதுவெனக் கேட்டால் இதைத் தான் காட்டியிருப்பான்.

மோனாலிசா சோகமாக இருக்கிறதா, மகிழ்ச்சியாக இருக்கிறதா என்று யாராலும் சொல்ல முடியாத சித்திரம் என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறான். அதை விடப் பெரும் குழப்பமும், புரிந்து கொள்ள முடியாதவளுமாக அல்லவா இருக்கிறாள் இந்த ஆனந்தி? மோனாலிசாவை ஓவியம் என்றால், ஆனந்தி சிற்பம். நடக்கும், பேசும், சிரிக்கும், சிறுகச் சிறுகச் சாகடிக்கும் சிற்பம். காலையில் இருந்து அவள் உதட்டோடு உதடு ஒட்டி முத்தம் தர, பெற முயற்சித்துக் கொண்டிருக்கிறான். முடியவில்லை.வந்தது வந்தாயிற்று. மோனாலிசாவைப் படம் எடுக்கலாம் என்று காமிராவில் பிடிட்துப் பார்த்தால் ஒரே வெளிச்சமாக, ஒளித் திட்டாகத் தெரிந்தது. கொஞ்சம் கூட ஓய்வின்றி பல காமிராக்கள் பிளாஷ் மினுங்கிக் கொண்டே இருந்தன.

காட்சியகத்தை விட்டு வெளியே வந்த போது இரண்டு பேருமே களைத்திருந்தார்கள். மேற்குத் திசையில் இருந்த பூங்காவை நோக்கிச் சென்று புல் தரையில் அமர்ந்தனர். மேற்கு என்பதை அவர்கள் அனுமானித்தார்களே ஒழிய என்ன திசை என்று நிச்சயமாகத் தெரியவில்லை. மாலை ஐந்து மணி ஆகியிருந்தது.

ஒரு சில ஜோடிகள் மெய் மறந்த நிலையில் இருப்பதை அவள் கண்டு கொள்ள வில்லை. மன்னித்து விட்டாள் போலும். அவனுடைய தோளில் சாய்ந்து கொண்டாள். அந்தப் பக்கமாக சுருட்டை முடி வைத்த ஒரு கறுப்பன் டி-ஷர்ட் விற்ற்க் கொண்டு வந்தான். ஆனந்திக்கு ஒன்று வாங்கித் தரலாமென்று அவனை கார்த்திக் அழைத்தான்.

குதிரை மீது கம்பீரமாக நெப்போலிய மாமன்னன் அமர்ந்திருக்கும் படம் கொண்ட ஒன்றை எடுத்துக் கறுப்பன் நீட்டினான். அதை ஒதுக்கி விட்டு தானாக ஆராய்ந்து விவகாரமான ஒன்றைத் தேர்தெடுத்தான். சேற்றில் முக்கி எடுத்த கைகள் இரண்டையும் நெஞ்சின் மீது வைத்தால் ஏற்படும் கரையைப் போல ஐந்து விரல்களையும் மார்பின் இரு புறமும் பொறித்து, அதற்குக் கீழே 'Hands Offf' என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. அதைக் கண்டு அவள் கோபம் கொள்ளவில்லை. லேசாக வெட்கப்பட்டு விட்டு, "ச்ச்சீ..பொறுக்கி" என்று அடித்தாள்.

அதற்குப் பிறகு படகில் ஏறி நகரைச் சுற்றினார்கள். மின் விளக்குகள் அங்கங்கு எரிய ஆரம்பித்திருந்தன. பிரெஞ்சு உச்சரிப்புக் கலந்த ஆங்கிலத்தில் இடங்களை எல்லாம் விவரித்துக் கொண்டு வந்தார் படகுப் பயணக்குழுவின் தலைவி. கொசுவர்த்திச் சுருள் போல எண்ணிடப்பட்ட பாரிஸ் நகர வரைபடத்தை அவன் எடுத்து வைத்து அந்தப் பெண்மணி சொல்வதைச் சரிபார்த்துக் கொண்டே வந்தான் இவன். சுருளின் மையத்திற்கு 1 என இலக்கமிட்டு, வட்டம் பெரியதாக வளர வளர இலக்கத்தைக் கூட்டி மேப் போட்டிருந்தார்கள். மெல்லிய நீரோட்டம் இருக்கும் அந்தக் கால்வாயின் மூலம் பாரிஸ் நகர் முழுவதையும் வலம் வந்து விட முடியும் போலத் தோன்றியது.

படகு ஈஃபிள் கோபுரத்தை நெருங்க நெருங்க அதன் உருவம் பார்வைக்குப் பெரிதாகிக் கொண்டே வந்தது. உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் எழுந்து நின்று வாகாய் அதைப் படம் பிடித்தனர். மிகுந்த குதூகலத்துடன் ஆனந்தியுன் தனது டிஜிட்டல் காமிராவில் அதைக் கைது செய்தாள். அவனுக்குள் இது வரை உறங்கிக் கொண்டிருந்த சாத்தான் விழித்தது. எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி அவளை இழுத்து கூந்தலுக்குள் விரலை விட்டு உதட்டருகே உதடு பொருத்த முயன்றான். அவள் பதற்றத்துடன் தட்டி விட்டு, "வாட் இஸ் திஸ் கார்த்திக்? பிஹேவ் யுவர் செல்ஃப். எல்லோரும் வேடிக்கை பாக்கறாங்க" என்று நடுங்கினாள்.

மூர்க்கத்தனமாக அணுகித் தொலைத்து விட்டதாக அவனும், காலையில் இருந்து அனுசரனையாகக் கவனித்தவனை இப்படி உதாசின்னப்படுத்தி காயம் உண்டுபண்ணி விட்டோமே என்ற வருத்தத்தில் அவளும் தத்தமது நத்தை கூட்டுக்குள் போய்ப் பதுங்கி அடைபட்டுப் போனார்கள். சிறிது நேரம் பேசிக்கொள்ளவே இல்லை. அதற்குள் சுற்றுலாக் குழுவினர் ஈஃபிள் கோபுரம் சென்று சேர்ந்திருந்தனர்.

மோட்டார் லிஃப்ட் மெது மெதுவாக அவர்களை மேலே தூக்கிச் சென்றது. பூமியும், அதன் மனிதர்களும் அந்நியப்பட்டதைப் போல அனைவருக்குமே தோன்றியது. இவர்களுக்கு முன்னால் ஒரு ஸ்பெயின் ஜோடி "என் உருளைக் கிழங்கே" "முட்டைக் கோஸே" என்று கொஞ்சியது இவர்களுக்குப் புரியாமல் போயிருக்கலாம். ஆனால் அவர்கள் எழுப்பிய சிணுங்கல் சத்தமும், ஆகா..ஊஉ.. ம்ஹ்ம்ம்..என்ற முனகலும், நீண்ட முத்தங்களுக்கு நடுவே இடைவெளி கொடுத்த போது விட்ட பெருமூச்சின் இரைச்சலும் நன்றாகப் புரிந்தது.

கார்த்திக் முகம் இன்னும் வாடியே இருந்தது. காய்ந்த சருகு காற்றில் மிதப்பதைக் கூட இரசிக்கும் தன்மை கொண்டவன் அவன். உலகிலேயே மிக முக்கியமான இடம் ஒன்றின் உச்சியை அடையப் போகிற மகிழ்ச்சி அறவே இல்லாமல் இருந்தான்.

உச்சி நெருங்கிக் கொண்டே இருந்தது. ஆனந்தி எதுவும் பேசாமல் அணிந்திருந்த மேல் கோட்டைக் கழட்டிக் கீழே போட்டு விட்டு, குதி காலை உயர்த்தி தலையை சாய்த்து பாம்பினைப் போலக் கைகளை வளைத்து அவனைப் பிண்ணி இழுத்து அவன் வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாத நீண்டதொரு கிஸ் அடித்தாள்.

சுவாசத்திற்குக் கொஞ்ச காற்று வேண்டும் என்பதற்கு மட்டும் ஒரு சிறு இடைவெளி கொடுத்து விட்டு மீண்டும் தொடர்ந்தாள். கீழே பாரிஸ் மநகரம் மின்னொளி வெள்ளத்தில் மிதந்தது. "ஏ உலக மானிடர்களே பாருங்கள் என்னை" என்று பெருமிதத்துடன் அவன் உலகை நோக்கி அறிவித்தான். அதை ஆமோதித்து பல காமிராக்கள் நகர வீதிகளிலும், கால்வாயில் மிதக்கும் படகுகளிலும், ஓபரா கோபுர உச்சியின் தொலைநொக்கியில் இருந்தும் அவனைக் கண்டு ரசித்துப் பதிவு செய்தன.

ஆனால் பாவம். மறுபடியும் தரைக்கு வந்தால் தான், கட்டிய மனைவியிடம் திறந்த வெளியில் முத்தம் வாங்குவதற்கு ஒவ்வொரு முறையும் உலக அதிசயத்தின் உச்சிக்குக் கொண்டு செல்வது சாத்தியமில்லாத ஒன்று என்பது அவனுக்குப் புரியும்.