Monday, August 20, 2007

உண்மை!

- செல்லமுத்து குப்புசாமி

மதியத் தூக்கம் எப்பவுமே சந்தோசமான விஷயந்தான் இல்லையா? அதிலையும் சனிக்கிழமை மதியம் மெஸ்ல போய் ஒரு கட்டு கட்டிட்டு வந்த பிறகு தூங்கலைன்னா அந்த வாரமே வேஸ்ட் அப்படீங்கற ·பீலிங் வந்துருதுங்க. அந்த மாதிரி வழக்கமாகத் தூங்கி சாயங்காலம் ஒரு ஆறு மணிக்கு எந்திருச்சு குளிச்சுட்டு பெசண்ட் நகர் சர்ச்சுக்கு ஒரு விசிட் கொடுத்துட்டு அப்படியே பீச்ல போய் காத்துவாங்க உக்காந்து சைட் அடிக்காட்டி பரபரப்பான இந்த சென்னை வாழ்க்கைல என்ன சுகம் இருக்குது சொல்லுங்க?

இந்த வாரம் என்ன பாவம் செஞ்சனோ தெரியலை ஆப்பு செல்போன் ரூபத்துல வந்து அஞ்சு மணிக்கே எழுப்பி விட்டது. ரவியண்ணன் சாதரணமா கால் பண்ண மாட்டார். அவரைத் தவிர வேறி யாராச்சுமா இருந்தா எடுத்திருக்கவே மாட்டேன்.

"அண்ணா.. சொல்லுங்கண்ணா"

"எங்கடா இருக்கே? வீட்லையா?

"ஆமாங்கண்ணா"

"சரி. அங்கையே இரு. வந்தர்றேன்"

அவர் வர எப்படியும் கால் மணி நேரம் ஆகும். அதுக்குள்ள எ·ப்.எம். ரேடியோவை ஆன் பண்ணி அலறவிட்டேன். குளிக்க தண்ணி போட்டு விடணும். எங்க பாத்ரூம்ல தண்ணி வராது. சில நேரம் வந்தாலும் அது கடல்ல இருந்து நேரடியா கனெக்ஷன் குடுத்த மாதிரி இருக்கும். ஒரு லிட்டர் புடிச்சா அன்னைக்கு சமையலுக்கு வேண்டிய உப்பெல்லாம் அதில இருந்தே எடுத்துக்கலாம். அதனால் கிச்சன்ல ஒரே ஒரு கொழாய்ல லேசா வர்ற தண்ணியை பாத்ரூமுக்கு டிரான்ஸ்பர் செய்யும் வித்தையை நான் கண்டுபிடிச்சு வெச்சிருந்தேன். அந்த குழாய்ல ஒரு ஹோஸ் டியூபை சொருகி அதோட மறு முனையை அப்படியே பாத்ரூம் பக்கெட்ல விழற மாதிரி வைக்கணும். எப்படியும் பக்கெட் நெறையறதுக்குள்ள எ·ப்.எம்.ல மூனு பாட்டு முடிஞ்சுரும். அது வரைக்கும் பால்கனில வந்து நின்னுக்கிட்டேன்.

யோசிச்சுப் பாக்கறேங்க. இந்நேரத்துக்கு எதுக்காக ரவிண்ணா இங்கே வரணும்னு. நான் இதுக்கு முன்னாடி வேலை செஞ்ச கம்பெனில அவரு எனக்கு டீம் லீடர். இன்னமும் அதே கம்பெனில இருக்கார். நாமெல்லாம் குரங்கிலிருந்து பிறந்தோம்ங்கறதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உண்டானதால நான் மட்டும் அங்கிருந்து தாவி இன்னொரு கம்பெனிக்கு வந்துட்டேன், அதுவும் கேவலம் மாசம் அஞ்சாயிர ரூபாய் கூடுதலா கெடைக்குதுங்கறதுக்காக.

நான் எதிர்பார்த்த மாதிரியே பக்கெட் நெறையறதுக்கு முந்தியே அவர் கார் வந்துருச்சு. அறிவு ஜீவி களை எப்பவும் போல ததும்பி வழிஞ்சாலும் வழக்கமா அவர் கிட்ட தென்படுற அந்த உற்சாகம் மிஸ்ஸிங். அண்ணனுக்கு முப்பதொரு வயசு. லேசான தொந்தி, அங்கங்கே வெள்ளை முடின்னு பாக்கறதுக்கு அஞ்சு வயசு கூடுதலாத் தெரியும். கல்யாணத்துக்கு அப்பறந்தான் இப்படி மாறிட்டார். அதுக்கு முன்னாடி செம ஸ்மார்ட். அஞ்சு வருசத்துக்கு முன்னாடி அஞ்சு வயசு கொறைவா தெரிஞ்ச ஆளுதான் அவரு. 26 ல 21 மாதிரி இருந்தவர் 31 ல 36 மாதிரி ஆகிட்டார்.

உள்ளே வந்தவுடனே கடலை மிட்டாய் பொட்டலத்தை நான் குடியிருக்கும் (சாப்பாடு, தூக்கம், வாசிப்பு, வசிப்புன்னு சகலமும் அதன் மீதுதான்) அந்தப் படுக்கையின் மீது தூக்கி வீசினார். அதுதான் எங்களது ·பேவரட் ஸ்நாக்ஸ். ஆறு மாதம் முந்தி அவருக்குக் குழந்தை பொறந்தப்பக் கூட எல்லோருக்கும் சாக்லட் கொடுத்தாலும் எனக்கு மட்டும் கடலை மிட்டாய் கொடுத்தார்னா பாத்துக்குங்க.

இவர் பார்க்கறதுக்கு ரொம்ப சாதாரணமா இருப்பார். சிகப்பா இருப்பார்னு
சொல்ல முடியாது. நடிகை பிரியா ராமன் வீட்டுக்காரர் நடிகர் ரஞ்சித் இருப்பார்ல, அந்த மாதிரி மேன்லியான லுக்னு சொல்லலாம். அவரோட ஒய்·ப் கொஞ்சம் அல்ட்ரா மாடர்ன்னு வெச்சுக்குங்க. இவர் கடலை மிட்டாய் சாப்பிடறதுலையே ஏகப்பட்ட அவங்களுக்குள்ள சண்டை வந்திருக்கு. எனக்கு ஏன் குடுக்கலைன்னு கேட்டு சண்டை போட்டாக்கூட பரவாயில்லைங்க. அந்தம்மா அஞ்சலி தேவி - ஆமாங்க அதான் ரவியண்னா ஒ·ய்ப் பேரு - கண்ட்ரி ·பெல்லோ மாதிரி இதெல்லாம் திங்காதீங்கன்னு திட்டுவாங்க. நானே சில சமயம் பாத்திருக்கேன்.

பக்கெட் நெறஞ்சு நான் போய் கொழாயை அடைச்சிட்டு வந்து அதுக்கு அப்பறம் ரேடியோல ரண்டு பாட்டு முடியற வரைக்கும் அமைதியாவே அண்ணா உக்காந்திருந்தாங்க.

"தம் இருக்கா கார்த்தி?"ன்னு அண்ணா கேட்டார். அவருக்கு தம் அடிக்கற பழக்கம் இல்லைன்னு எனக்குத் தெரியும். இன்னைக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை.

"இல்லைங்கண்ணா. குமார் ஊருக்குப் போய்ட்டான்" என்னோட ரூம்மேட் குமார் ரயில் வண்டியே வெச்சிருக்கான். அவன் இருந்தா ஒரு சிகரெட் எடுத்து இவருகிட்டக் குடுக்கலாம். அவனும் இல்லை. எனக்கு அது பெரிய பிரச்சினையா தெரியலை. தம் போடற அளவுக்கு ரவியண்னாவுக்கு என்ன சோகம்ங்கறதுதான் பிரச்சினை.

"அண்ணா, என்னுங்கண்ணா? டல்லா இருக்கீங்க?"

"வீட்ல சண்டை போட்டுட்டு வந்துட்டண்டா" அப்படீன்னு அண்ணா பதில் சொன்னாங்க. காலம் மாறுது போல. பொண்டாட்டிகிட்ட சண்டை போட்டுக்கிட்டு புருஷன் வீட்டை விட்டுக் கெளம்பற லெவலுக்கு சமுதாயம் மாறிட்டு வருது.

"சட்டை மாட்டிக்கிட்டு வா. அப்படியே நடந்து போய் டீயும், தம்மும் அடிச்சிட்டு வரலாம்" இப்படிக் கேட்டதும் சரின்னு சொல்லிட்டு சட்டையும், ஜட்டியும் (லுங்கி ஏற்கனவே இருக்கு) மாட்டிக்கிட்டு ரேடியோவை ஆ·ப் பண்ணி வீட்டைப் பூட்டிட்டு அண்ணாவோடு கெளம்பினேன்.

ரொம்ப நொந்து போயிருக்கார்னு தெளிவாப் புரிஞ்சது. அண்ணாவே பேசினால் ஒழிய நான் தேவையில்லாம ஒன்னும் கேக்கக் கூடாதுனு அமைதியா கூடவே நடந்து வந்தேன். வழக்கமா சாப்பிடற வாழக்காய் பஜ்ஜி இன்னைக்குச் சொல்லலை. ரண்டு டீ மட்டும் சொன்னேன். அண்ணா ஒரு வில்ஸ் எடுத்து பத்த வெச்சாங்க.

பொகையை உள்ள அப்படியே இழுத்து அனுபவிச்சு மெதுவா வெளிய விட்டாங்க. "உனக்கு வேற வேலை எதாவது இருக்காடா? என்னோட வண்டி இருக்கு. இப்படியே கெளம்பி மகாபலிபுரம், பாண்டிச்சேரின்னு போய் சுத்திட்டு நாளைக்கு ஈவினிங் வரலாம். என்ன சொல்றே?" ன்னு கேட்டாங்க.

ஒரு குடும்பத்தைக் கெடுத்த பாவம் பிரியமா வளத்த பூனை மாதிரி என் காலைச் சுத்திச் சுத்தி வருதுங்கறது மட்டும் எனக்கு தெளிவாப் புரிஞ்சுது. ஒரு முடிவோடதான் கெளம்பி வந்திருக்கார்னு நெனச்சேன்.

"அண்ணா, அதெல்லாம் இருட்டாகிரும்னா. இங்கயே எங்கையாவது போலாம். நாளைக்குக் காலைல வேணா மாகாபலிபுரம் பாத்துக்கலாம்" னு சொல்லி மறுபடி நடக்க வெச்சு வீட்டுக்குக் கூட்டிட்டு வர்றதுக்குள்ள பெரும்பாடாப் போச்சு. அப்படி இருந்தாலும் ரண்டு பாக்கெட் சிகரெட் வாங்கறதுக்கு அவரு மறக்கல.

பால்கனில நின்னு கொஞ்ச நேரம் பேசினோம். மத்தபடி மெளனமாவே இருந்தோம். இந்த மாதிரி நேரத்துல ஆம்பளைங்களை அமைதியா விட்டறணும். சும்மா நைநைனு பேசிக் கழுத்தறத்தா கடுப்பாகிருவாங்க. அண்ணா எதைப்பத்தி நெனைக்கறாங்கன்னு தெரியல. ஆனா நான் அவங்களைப் பத்தியும் அஞ்சலி அண்ணியைப் பத்தியும்தான் நெனைச்சேன்.

அஞ்சலி அண்ணி நெஜமாலுமே ரொம்ப அழகா இருப்பாங்க. சில நேரத்துல பாத்தா கையெடுத்துக் கும்பிடணும் போலத் தோனும், சில நேரம் கட்டிப் புடிக்கணும் போலத் தோனும். அப்படி ஒரு அழகி. அந்த அழகுல தனக்குக் கர்வம் கொஞ்சம் ஜாஸ்தியாவே உண்டுங்கறதை அவுங்க பேசறதையும், நடந்துக்கறதையும் வெச்சு ஈசியா சொல்லிரலாம்.

ஒரே ஜாதில ஜாதகம் எல்லாம் பாத்து பத்துப் பொருத்தமும் சேந்த பிறகு செஞ்ச கல்யாணந்தான் அவங்களோடது. என்ன இருந்தாலும் கொங்கு மண்டலத்துலயே லவ்வுனாக் கூட ஜாதகம் பாத்து லவ் பண்ற ஜாதில பொறந்தவங்க இல்லையா? ரண்டு குடும்பமும் வசதியான குடும்பம்தான். அண்ணா, அண்ணி ரண்டு பேருமே சென்னைல வெவ்வேற சா·ப்ட்வேர் கம்பெனில வேலைக்குப் போறாங்க.

என்னோட சிந்தனையைக் கலைக்கறாப்பல இங்கிலீஷ்ல அண்ணா சொன்னாங்க. "Indian women had been suppressed for ages and they seem to unleash all at once, quite sadly now" சொன்ன மேட்டரை விட சொன்ன விதமும், அப்ப மூஞ்சில தெரிஞ்ச உணர்ச்சியும் ரொம்ப கிளியராப் புரிஞ்சுது.

அப்படி இப்படீன்னு நேரத்தைக் கடத்தினாலும் மணி ஏழுக்கு மேல ஆகலை. இதுக்கு மேல வீட்ல இருந்தா வேலைக்கு ஆகாதுன்னு சொல்லி அடையார் SNS போனோம். நல்ல எடம் அது. நீங்க வேணாலும் ட்ரை பண்ணிப் பாருங்க. அடையார் சிக்னல் பக்கத்துலையே இருக்கு.

நல்ல வேளை கூட்டம் அதிகமா இல்லை. பூல் டேபிள் காலியா இருந்தது. நம்மலும் எதோ வெள்ளைக்காரன் மாதிரி குச்சில டேபிள் மேல இருக்கிற பந்தைத் தட்டித் தட்டி ஓட்டைல போடற வெளையாட்டு ஆடறதை நெனைச்சா சிரிப்பு வந்தாலும், இந்த ஆட்டம் நல்லாத்தான் இருக்குது.

அண்ணா என்னை விட நல்ல பிளேயர். தனக்கு ஆன் த ராக்ஸ் விஸ்கி என்னமோ சொன்னாங்க. கூடவே கையில தம்மு. நான் எதுவும் ஆர்டர் பண்ணலை. குடிச்சு ஒடம்புக்கு ஒத்துக்காம ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆனா ஒடனே கல்யாணம் பண்ணி வெச்சிருவேன்னு அம்மா மெரட்டல் விட்டிருக்காங்க.

கிட்டத்தட்ட பத்து மணி வரைக்கும் அந்த டேபிள் எங்க ஆக்கிரமிப்புல இருந்துச்சு. நான் ஜெயிச்சதை விட அண்ணா நெறைய ஜெயிச்சாங்க. கூடவே நெறைய மேட்டர் வெளிய வந்துச்சு. அவங்க கல்யாண வாழ்க்கைல ஏற்பட்ட கஷ்டங்கள், அவமானங்கள், சிக்கல்கள்னு பல விஷயம் தெரிய வந்துச்சு.
பால்கனில நிக்கும் போது இங்கிலீஷ்ல அண்ணா சொன்ன கருத்து இப்ப ரொம்பத் துல்லியமா வெளங்குச்சு. அண்ணி சுந்தந்திரமா இருக்கணும்னு நெனைக்கற ரகம். அதுல தப்பில்லைனு அண்ணா சொல்றாங்க. கணவனைச் சார்ந்திருக்கற dependence ங்கற மேட்டர் புடிக்கலைங்கறதால absolute independence வேணும்னு சொல்லிட்டு ரண்டு ஜீவன் சேர்ந்து அனுசரிச்சு வாழற வாழ்க்கையோட interdependence ங்கற மைய இழையை அஞ்சலி அறுக்கறான்னு சொல்லி அழுதுட்டாங்க. ஆமாங்க ரவியண்ணா தேம்பி அழுததை இன்னைக்குத்தான் நான் பாத்தேன். பார்ல அத்தனை பேரும் வேடிக்கை பாக்கறாங்கனு சொல்லி சமாதானப்படுத்த சிரமமாப் போச்சுங்க.

காலங்காலமா வெளியே போய் பொருள் தேடிக் கொண்டு வர்ற ஆணோட வேலையைப் பொம்பளைங்க பங்குபோட ஆரம்பிச்ச இந்தக் காலத்துல பொம்பளைகளோட வேலையாக் கருதின வீட்டைப் பரமாபரிக்கறதை ஆம்பளைங்களும் பங்கு போடணும்ங்கறதுல உறுதியா இருக்கிற சில பேர்ல ரவியண்ணா ஒருத்தர். சமையல் வேலை, பாத்ரூம் கழுவறது, துணி அயர்ன் பண்றதுனு எல்லாத்தையுமே அண்ணாவும் செய்வாங்க.

ஆணும், பொண்ணும் சமம்ங்கறதால உடல் ரீதியாவும், மன ரீதியாகவும் இரு பாலருக்கும் உள்ள பலம் மற்றும் பலவீனத்தை மறந்து மறுக்க முடியாதுல்ல? அஞ்சு மாசம் பொம்பளை புள்ளையைச் சொமந்தா, மிச்ச அஞ்சு மாசத்தை ஆம்பளை ஆசைப்பட்டாலும் சொமக்கவா முடியும்? அப்படி இல்லாட்டி பொறந்த கொழந்தைக்குத்தான் அவனால பால் குடுக்க முடியுமா? இயற்கையில சில விஷயங்கள் இப்படித்தான் இருக்கணும்னு விதிச்சிருக்கு. அதை ஏத்துக்கிட்டு அதோட வரையறைக்குள்ள வாழறதுதான் புத்திசாலித்தனம்.

அஞ்சலி அண்ணி கர்ப்பமா இருந்தப்ப ரவிண்ணா எப்படி படபடப்பா இருந்தார்னு எனக்குத் தெரியும். அதே மாதிரி கொழந்தை பொறந்த அவர் எவ்வளவு சந்தோசப்பட்டார்னும் தெரியும். ஆனா அண்ணி ரண்டே வாரத்துல வேலைக்குக் கெளம்பிட்டாங்க. ரவியண்னாவோட அம்மாவும், மாமியாரும் மாறி மாறி பாப்பாவைப் பாத்துக்கிட்டாங்க.

மெட்டர்னிட்டி லீவ் கூட அண்ணி முழுசா யூஸ் பண்ணலை. கெரியர் குரோத் தனக்கு ரொம்ப முக்கியம்னு சொல்லிட்டாங்க. கொழந்தை, குடும்பங்கற சராசரி விஷயத்துக்காக அதை காம்ப்ரமைஸ் பண்ணிக்க முடியாதுன்னு அதுக்கு காரணம் சொன்னாங்களாம். அப்படி இருக்கிறவ என்ன மயிருக்கு கல்யாணம் பண்ணனும்னு கேக்க நெனைச்சேன். ஆனா அண்ணா மனசு கஷ்டப்படும்னு சும்மா இருந்திட்டேன்.

வீட்டுப் பெருசுக மாசம் ஒருத்தர்னு மாத்தி மாத்தி சென்னை வந்து கொழந்தையைப் பாத்துக்கிட்டே இருந்தாங்க. அப்படியே ஆறு மாசம் ஓடிப் போச்சு. அழகான அஞ்சலி அண்ணிக்கு பல நேரங்கள்ல பாப்பா 'சனியன்' ஆகிருது. அது அழுகறப்ப, படுக்கைல மூச்சா போறப்ப, ஒடம்பு சரியில்லாமப் போறப்ப..இப்படி எல்லா நேரமும் அதில் வரும்.

என்னால லீவ் போட்டு வீட்ல உக்காந்து கொழந்தையைப் பாத்துக்க முடியாது. வேணும்னா நீ லீவ் போட்டுக்கனு புது மிரட்டல் கடந்த ரண்டு வாரமா ஆரம்பிச்சிருக்காம். அண்ணாவுக்கு சம்பளம் 15 இலட்சம். அண்ணிக்கு ஆறு இலட்சம். வேலையை விடலைன்னா உங்க கம்பெனி HR க்கு கால் பண்ணி கம்ப்ளெயிண்ட் பண்ணிருவேன் அதுக்கு அப்புறம் வேலை போய் வீட்ல உக்கார வேண்டி வரும்னு டார்ச்சர் குடுத்திருக்காங்க. குடும்பம்னு வந்தா எல்லாத்தையும் நாலு சுவத்துக்குள்ள வெச்சு பாதுகாக்கணும்னு சொல்லுவாங்க இல்லைங்களா? அதனால் அண்ணா அப்படியே மெயிண்டெய்ன் செஞ்சி சமாளிச்சுட்டு இருந்தாங்க.

இந்தக் கொடுமைக்கெல்லாம் உச்ச கட்டம் இன்னைக்கு நடந்ததாம். அதனாலதான் வீட்டை விட்டு ஓடி வந்துட்டார். வாய்த் தகறாரு கொஞ்சம் முத்திருச்சாம். டக்குனு மகளிர் போலீஸ¤க்கு போன் பண்ணி வீட்டுக்கு வர வெச்சு எம்புருஷன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தறாருனு சும்மானாச்சும் சொல்லிட்டாங்களாம். வந்த போலீஸ்க்கார அக்காமாருக எல்லாம் ஒரு மணி நேரம் அண்ணாவை உருட்டி மெரட்டி இனிமேல் வரதட்சணை கேட்டு தொந்தரவு பண்ணமாட்டேன்னு கையெழுத்து வாங்கினதோட எச்சரிக்கை செஞ்சு விட்டுட்டுப் போய்ட்டாங்களாம். இதுக்குமேல தாங்காதுனு நெனைச்சு வீட்டை விட்டு ஓடி வந்துட்டார் அண்ணா. அவரு சம்பாதிச்சு வாங்கினதுன்னாலும் வீடு அண்ணி பேர்லதான் இருக்குங்கறது உங்களுக்கான உதிரித் தகவல்.

ரவியண்ணா மனசுல இருந்த பாரம் எல்லாத்தையும் கிட்டத்தட்ட எங்கிட்ட எறக்கி வெச்சிருப்பார்னு நெனைக்கறேன். அந்த நேரம் பாத்து, "சார், 20 மினிட்ஸ்ல டேபிள் குளோஸ் பண்ணிருவோம் சார். லாஸ்ட் கேம்" அப்படீன்னு பையன் வந்து சொன்னான். "தம்பி. நீ சார் கூட வெளையாடிட்டு இரு. நான் டாய்லட் போய்ட்டு வந்துர்றேன்" ன்னு கேட்டுக்கிட்டதும் அவனுக்கு ரொம்ப குஷி. கம்பெனி இல்லாம தனியா வர்ற கஸ்டமர்ஸ் கூட சான்ஸ் கெடைக்கும் போது காசு கட்டாம வெளையாடலாங்கறதுல அவங்களுக்கு ஒரு ஆனந்தம்.

டாய்லெட் போய்ட்டு நான் திரும்பி வந்தப்ப என் கையில அண்ணாவோட செல்போன் இருந்ததை அவரு கவனிக்கலை.

கேம் முடிச்சுட்டு, பில்லுக்கு பணம் கட்டிட்டு வெளியே வந்து கார்ல ஏறப் போகும் போது மாமனாரிடம் இருந்து அவர் செல்போனுக்கு கால் வந்தது. ரண்டு பேரும் சுமார் இருபது நிமிசம் பேசிருப்பாங்க.

"டேய்... நைட் உன் ரூம்ல தங்கிட்டு காலைல வீட்டுக்குப் போய்க்கறேன்"

"சரிங்கண்ணா. நீங்க வாங்க. காலைல பாத்துக்கலாம்"

வீட்டுக்கு வர்ற வழில அண்ணா எங்கிட்ட ரண்டு தத்துவம் சொன்னாங்க. ஒன்னு: கல்யாணம் பண்ணிக்காதே.
ரண்டு: அப்படியே பண்ணினாலும் அழகான பொண்ணை மட்டும் பண்ணிக்காதே.

ஷேர் மார்க்கெட் முதலீட்டில வாரன் ப·பட் சொன்ன விதி என் மனசுல வந்து போச்சு.
Rule 1 : Don't loose money
Rule 2 : Don't forget rule 1

வாரன் ப·பட்டை விடுங்க. அண்ணா இது வரைக்கும் எனக்குச் சொன்ன எந்த அட்வைசையும் நான் தட்டினதே இல்லை. ஆனா இந்த ரண்டு தத்துவத்தில முதல்ல சொன்னதை ஏத்துக்கறதில்லைனு முடிவு செஞ்சுக்கிட்டேன். ரண்டாவதை வேணா பரிசீலிக்கலாம்.

**
மறுநாள் நாள் காலைல நான் எந்திரிச்சுப் பாக்கறப்ப அண்ணாவைக் காணோம். பார்க்கிங் லாட்ல நிறுத்தி வெச்சிருந்த காரையும் காணோம்.

என்னோட மொபைல் போன்ல அண்ணா மாமனார்ட்ட இருந்து வந்த SMS மட்டும் 'ரொம்ப தேங்க்ஸ்பா" ன்னு சொன்னபடி இருந்தது.

பாத் ரூமில் நேத்து ஈவினிங் நெரப்பி வெச்ச நல்ல தண்ணி அப்படியே இருந்தது. சரி விடுங்க. சர்ச், பீச் எல்லாம் அடுத்த சனிக்கிழமை பாத்துக்கலாம்.

பொறகு இன்னொரு மேட்டர். வேலைக்குப் போற பெண்களை இழிவுபடுத்தற ஆணாதிக்க வக்கிர புத்தியின் வெளிப்பாடுதான் இந்த மாதிரிக் கதைன்னு யாராவது வேட்டியை வரிஞ்சு கட்டிட்டு வந்திராதீங்க. ஒட்டுமொத்தப் புனைவு, புரட்டு, கற்பனைன்னு சொல்லி பெண்ணியத்தைப் பாதுகாக்க வரும் உங்கள மாதிரி ஆட்களுக்களுக்குந்தான் கதையோட தலைப்பு. சரிங்களா?

Friday, August 10, 2007

உதவும் கைகளும், கால்களும்

- செல்லமுத்து குப்புசாமி

பிறப்பதற்கும், செத்துப் போவதற்கும் இயையே மனிதனுக்கு எத்தனை போராட்டங்கள், இலக்குகள், தோல்விகள், தற்காலிகமானதும், நிரந்தரமனாதுமான சந்தோஷங்கள்? இவற்றுக்கு மத்தியில் மற்றவர்களைப் பற்றி சிந்திப்பதற்கும், நேரம் ஒதுக்குவதற்கும் நம்மைப் போன்ற சாதாரண நடுத்தர வர்க்கத்தினரால் முடிவதில்லை.

பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் போடுவது, கோவில் உண்டியலில் பணம் போடுவது, திருப்பதியில் கால் கடுக்க வரிசையில் நின்று மொட்டை போடுவது என எதையாவது செய்து பாவங்களைப் போக்கவும், நிம்மதியை நாடவும் முயற்சிக்கிறோம். ஆனாலும், உலகம் survival of the fittest என்ற டார்வின் நியதின் அடிப்படையிலேயே இயங்குகிறது. அவனவனுக்கு வேண்டியதை அவனவன்தான் செய்துகொள்ள வேண்டும்; யாரும் யாரையும் தூக்கி விடுவது இயற்கைக்குப் புறம்பானது என்பது எழுதப்படாத விதியாகவே இருந்து வந்திருக்கிறது.

உதவுவதற்கான மனம் இருந்தாலும் பல பேருக்கு சூழ்நிலை அனுமதிப்பதில்லை. சுருக்கமாகச் சொன்னால்.. "காசு பணம் வேண்டுமானால் தரலாம். ஆனால், நம்முடைய நேரத்தை ஒதுக்கி சமூக சேவையில் ஈடுபட முடியாது" என்ற நிலைமை. இருந்தாலும், காசு கொடுத்தால் சரியாக, நேர்மையாகக் கையாண்டு வேலை செய்வார்களா என்ற சந்தேகம் தவிர்க்க இயலாதது. சேவையை மட்டுமே மனதில் கொண்டு தம்முடைய வாழ்க்கையையின் முன்னேற்றத்தைக் காட்டிலும் பிறருக்காக நேரம் செலவிடும் மனிதர்களால் நடத்தப்படும் அமைப்புகளைப் பற்றிய செய்தி நம்மை வந்தடையாமலே நின்றுவிடுகிறது. ஒரு வேளை அவை தெரிய வந்தால் நமது பணமும், அவர்களது நேரமும் ஒன்றாகச் சேர்ந்து சமுதாயத்திற்கு உதவட்டும் என நினைப்போம்.

அப்படிப்பட்ட அர்ப்பணிப்பு உணர்வுள்ள இரண்டு மனிதர்களைப் பற்றிய அறிமுகமே இந்தப் பதிவு.

முதலாமவர் தமிழர். இவரது பெயர் சிதம்பரநாதன். இளம்பிள்ளை வாதத்தில் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் சுழல்கிற மனிதர்.
இவர் கடந்து வந்த பாதை சாதாரணமானதல்ல. தமிழ்நாடு ஊனமுற்றோர் மறுவாழ்வுக்கான அமைப்பு ஒன்றை 'Tamil Nadu Handicapped Federation Charitable Trust' என்ற பெயரில் நிறுவி அதன் தலைவராக இருந்து வருகிறார். வறுமையில் வாடும் ஊனமுற்றோருக்கு வேண்டிய சக்கர நாற்காலி, தையல் இயந்திரம் முதலிய உதவிகளை இந்த அமைப்பு செய்துவருகிறது. மேலதிக விவரங்களுக்கு கீழுள்ள சுட்டியைக் காணுங்கள்.


http://www.tnhfctrust.in/home.htm
http://www.chennaionline.com/health/hopeislife/08life10.asp

மிகுந்த தன்னம்பிக்கை அளிக்கிறது இவரது கதை. ஊனம் என்பது தடையல்ல என்பதை உணர முடிவதோடு ஒரு தனி மனிதனால் இவ்வளவு செய்ய முடியுமா என்றும் மலைப்பு உண்டாகிறது.

இந்த அமைப்பு செய்து வரும் பணிகளை நேரில் பார்வையிடவோ அல்லது தொலைபேசி மூலம் கேட்டுத் தெரிந்து கொள்ளவோ விரும்பினால் கீழ்க்கண்ட முகவரியை அணுகலாம்.

TAMILNADU HANDICAPPED FEDERATION CHARITABLE TRUST
NO.21 AA,
Earikarai Salai,
Kottur,Chennai - 600 085.
Tamilnadu, India
Ph : + 91 44 - 32927664
Fax : + 91 44 – 24405584

உங்களுடை நேரத்தையோ அல்லது பணத்தையோ இவர்களுக்காக சற்று ஒதுக்க முடியுமென்றால் மகிழ்ச்சி.

****
இரண்டாமவர் பெங்காளி. பெயர் பார்த்தா பாக்சி (Partha Bagchi) 24 வயது வரை திக்குவாய் பிரச்சினையால் பெருத்த அவமானத்திற்கு ஆளாகி, அதன் பிறகு தானாகவே பயிற்சி எடுத்து அந்தச் சிக்கலில் இருந்து விடுபட்டவர். "Stammering is not a disease, it is a habit, bad habit indeed" என்று தனது சொந்த அனுபவத்தில் கூறுகிற இந்த மனிதர் தனக்கு உதவிய டெக்னிக் எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டி பிற திக்குவாயர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்.


இது குறையே கிடையாது. சராசரி மனிதனின் மூளையை விட வேகமாகச் சிந்திக்கும் மூளை சிலருக்கு அமைந்து விடுவதுண்டு. காட்டாறு போன்ற அந்த எண்ணத்தை வேகமாகக் கொட்டி விரைவாகப் பேசி முடிக்க நினைக்கிறவர்களுக்கு சிந்தனை-பேச்சு இரண்டும் வெவ்வேறு வேகத்தில் அமைந்து பேச்சில் தடுமாற்றத்தைத் தருகிறது என்கிறார். இது மருந்து மாத்திரைகளால் குணப்படுத்துவதற்கு வியாதியல்ல. மாறாக, மனவியல் சார்ந்த பிரச்சினை என்கிறார். இரண்டு வாரம் பெங்களூரில் தங்கி இவரது வகுப்புகளில் பங்கெடுத்தால் நிச்சயமான முன்னேற்றம் ஏற்படும். அதற்கு மேலும் சுயமாக பயிற்சி தொடர வேண்டும். After all, old habits die hard.

மேலதிக விவரங்களுக்கு.

http://www.stammeringcurecentre.com/

**
இந்த இரண்டு மனிதர்களையும் காணும் போது ஒன்று நமக்குப் புரிகிறது. குறைபாடு என்ற ஒற்றைக் காரணத்தினால் துவண்டு போகாமல், தமது சொந்த வாழ்க்கையைச் செம்மையாக அமைத்துக்கொண்டதோடு நின்று விடாமல், மற்றவர்களுக்கும் வழி காட்டுகின்றனர். இரண்டு பேருக்குமே ஆதரவான வாழ்க்கைத் துணை கிடைத்ததுதான் அவர்களுக்கு பெரும் ஊக்க சக்தியாக இருந்து இயக்குவிக்கிறது என நான் கருதுகிறேன். தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் இல்லாமல் கிடைக்கக் கூடிய நிபந்தனையற்ற அன்புக்கும், ஆதரவுக்கும், காதலுக்கும் அத்தகைய மகத்தான சக்தி இருக்கிறது. அந்த வகையில், உடல் ரீதியாக குறைபாடு இல்லாத எத்தனையோ பேர் மனதளவில் ஊனப்பட்டுக் கிடக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

***
இந்தப் பதிவினைக் காண நேரிடுகிறவர்களுக்கு சில வேண்டுகோள்கள்.

1. உதவ மனமும், பணமும் உள்ளவர்கள் திரு. சிதம்பரநாதன் அவர்கள் நடத்தும் அமைப்பைத் தொடர்பு கொள்ளவும். அல்லது அது பற்றிய தகவலை பிறருக்குத் தெரியப்படுத்தவும்.
2. உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது பதட்டமாக தடுமாறிப் பேசினால் அவர்களிடம் Stammering Cure center குறித்து பக்குவமாகத் தெரியப்படுத்துங்கள். இந்தியா முழுவதும் இரண்டு கோடி திக்குவாயர்கள் உள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
3. இனிமேல் சினிமாவில் ஊனமுற்றவர்கள், அரவாணிகள், திக்குவாயர்கள், சொட்டைத் தலையர்கள் பற்றிய ஜோக் எதாவது வந்தால், குறைந்த பட்சம் ஒரு தடவையாவது சிரிக்காமல் இருக்க முயன்று பாருங்கள்.
***
திருடர்களும், பிச்சைக்காரர்களும், ஜோசியக்காரர்களும் இல்லாத சமுதாயத்தை அமைப்பது மட்டும் நமது கடமையல்ல. சுய பச்சாதாபம் என்பது வேதனை கலந்த போதை. அதிலிருந்து சில பேரையாவது மீட்டெடுப்பதும் நமது கடமைதான்.

Wednesday, August 01, 2007

நிராகரித்தவளின் வலி

- செல்லமுத்து குப்புசாமி

இவ்வளவு பெரிய அதிர்ச்சி காத்திருக்கும் என நான் நினைக்கவே இல்லை. ரஞ்சித் அபார அழகு இல்லையென்பது ஏற்கனவே தெரிந்ததுதான். ஆனாலும், நேரில் அந்த எதிர்பார்ப்பும் பொய்த்துப் போனதே!

நல்ல வேளை. அவர்கள் வீட்டிலிருந்து வந்து என் வீட்டில் பார்ப்பதற்கு முன்பே சந்திக்கலாம் என்று சொன்னதற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். இல்லையென்றால் இவ்வளவு பெரிய அதிர்ச்சியை அத்தனை பேர் முன்னிலையிலும் எதிர்கொண்டுக்க நேர்ந்திருக்கும்.

மாரத்தஹல்லி Innovative மல்டிபிளக்ஸ் முன் ஒன்பதரைக்கு வருவதாக எங்களுக்குள் தீர்மானமாகியிருந்தது. நான் சிகப்பு வண்ண சுடிதாரோடு அங்கு சென்று சேர்ந்த போது 9:35. அவர் பரிதவிப்புடன் கிழக்கிலும், மேற்கிலும் மாறிமாறி பார்த்து நின்று கொண்டிருந்தார். நிச்சயமாக ஒரு இருபது நிமிடமாவது முன் கூடியே வந்திருப்பார். ஹெல்மெட் கலைத்த முடியை நான்கைந்து தரமாவது சீவியிருப்பார். பாத்திரம் தேய்ப்பதைப் போல கைக்குட்டையை வைத்து எத்தனை தடவை முகத்தைத் தேய்த்திருப்பார் என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை.

வெள்ளை மேலாடையில் அவரது கருப்புத் தோல் எடுப்பாகத் தெரிந்தது. பாதி சிகப்பாகவும், மீது வெள்ளையாகவும் கழுத்தை இறுகக் கவ்விய ரவுண்ட் நெக் டி-ஷர்ட், கறுப்பு ஜீன்ஸ், அதற்கு அறவே சம்பந்தம் இல்லாத ஃபார்மல் ஷூ, ஆக மொத்தத்தில் பட்டிகாட்டானுக்கு அலங்காரம் செய்யும் பரிதாப முயற்சியைப் பாதியில் விட்டது போலத் தோன்றியது. ஃபாரின் ரிட்டர்ன் என்று சொன்னால் நம்புவது கடினமாகத்தான் இருக்கும்.

ரஞ்சித் முகத்தில் இன்னும் இருள் அண்டியிருந்தது. இரவு பதினொன்றரைக்கு ஏறி காலை ஐந்துக்கு வந்து சேரும் இரயில் பயணத்தில் எவ்வளவு தூங்கினார் என்று தெரியவில்லை. இந்தக் காலைப் பொழுதை உறங்கச் செல்லும் மாலைப் பொழுதாகவல்லவா டொரான்டோவிற்குப் பழகிய அவரது உடல் நினைத்துக் கொண்டிருக்கும். இருபது மணி நேரத்தில் இத்தனை மாற்றத்தை உள்வாங்கிச் செரிக்கும் வலிமை மனித உடலுக்கு நிச்சயமாக இருக்காது. இருக்கட்டுமே! நேற்று நன்றாகத் தூங்கி எழுந்து வருமாறு நான் சொல்லியிருந்தேனே, செய்யாமல் போனால் அதற்கு நானா பொறுப்பு?

இன்னும் காலையில் சாபிட்டிருக்க மாட்டார். நான்தானே சொன்னேன், நண்பர் வீட்டில் பிரேக் ஃபாஸ்ட் முடிக்க வேண்டாம், நாம் சேர்ந்து சாப்பிடுவோம் என்று. நானும் தான் ஒன்றும் சாப்பிடவில்லை. ஆனால், எனக்கென்னவோ இப்போது வந்த பசியெல்லாம் காணாமல் போய் விட்டது.

"கண்டிப்பா சாப்பிடணுமா? எனக்குப் பசிக்கலை. உங்களுக்குப் பசிக்குதா?"

இப்படி ஒரு கேள்விக்கு, "ஆமாம் பசிக்குது" என்று பதில் சொல்லும் துணிச்சல் உள்ள ஆண்கள் குறைவு.

"பரவாயில்லை. அப்புறம் சாப்பிடுக்கலாம்" என்றார் ரஞ்சித்.

போனில் மணிக்கணக்காக எத்தனை பேசியிருப்போம்? நேரில் கோர்வையாக நான்கு வார்த்தை பேச முடியவில்லை. அதற்கு எங்களிடம் வெவ்வேறு காரணங்கள் இருந்தன. எனக்குள் உருவாகியிருந்த அதிர்ச்சி அவருக்குத் தெரிந்திருக்காது. அவரைப் போலவே பரவசத்தில் முட்டி நிற்கிறேன் என என்னைப் பற்றி அவர் தவறாக நினைத்திருக்கலாம்.

"எங்கேயாவது போய் உக்காந்து பேசலாமா?" முதல் அடியை நானே எடுத்து வைத்தேன்.

"அவுட்டர் ரிங் ரோடில் நெறைய மரங்கள் இருக்குது. அப்படியே போய் வண்டியை நிறுத்திட்டு பேசிட்டு இருக்கலாமா?"

எனக்கு அதில் உடன்பாடு இல்லை. ஒரு பார்க் பெயரைச் சொன்னேன். அவருக்கு அது அறிமுகமாகியிருக்கவில்லை. நான் வசிக்கும் பகுதியில் அமைந்திருந்தது. பேசி முடித்தவுடன் சடக்கென்று வீட்டுக்குச் செல்ல அது உகந்த இடமாக எனக்குப் பட்டது.

புறப்படத் தயாரானோம். ஒரு பக்கமாக கால் போட்டு, எடுத்து வந்திருந்த கைப்பையை இருவருக்கும் இடையில் வைத்து என உடலின் எந்தவொரு பாகமும் அவர் மீது படாமல் இருக்குமாறு கவனித்துக் கொண்டேன். 40 கிலோ மீட்டருக்கு மேலே போன போது அந்த பைக் உறுமிய விதம் மிக விநோதமாக இருந்தது. ஸ்பீடு அட்ஜஸ்ட் செய்த மெக்கானிக்கும் சரி, இந்த பைக்கை வைத்திருக்கும் இவரது நண்பரும் சரி..ரொமான்ஸ¤க்கு பரம எதிரிகளாக இருக்க வேண்டும்.

பல காலமாக பெட்ரோலே போடாமல் ரிசர்வில் உயிர் வாழ்ந்து வந்த இந்த யாமாஹா-135 எரிபொருள் டேங்கை நிரப்பிக் கொண்டு, நான் சொன்ன பார்க்கை அடைய இருபது நிமிடம் ஆனது. பாவம்! உரெல்லாம் சுற்றலாம் என நினைத்து முக்கால் டேங்கை நிறைத்தார் ரஞ்சித்.

பூங்காவின் நுழைவாயில் பின்புறமாக அமைந்திருந்தது. கூட்டமே இல்லை. சொல்லப்போனால் உள்ளே யாருமே கிடையாது. முதலின் தென்பட்ட பெஞ்சில் நான் சென்றமர்ந்தேன். அவர் வண்டியை நிறுத்தி, பூட்டி, ஹெல்மெட்டால் கலைந்த கேசத்தை சீவி அழகுபடுத்திக் கொண்டிருந்தார். எனக்குள் வேதனை கலந்த சிரிப்பு தோன்றி மறைந்தது.

என்னருகில் வந்து அமர்ந்த போதே அவர் டி-ஷர்ட்டில் ஒட்டியிருந்த கட்டெறும்பைச் சுட்டிக் காட்டி தட்டி விட்டேன். துணியைத் தாண்டி சருமம் தொடாமல் தட்டி விடும் இலாவகம் எனக்கு எப்படி இவ்வளவு இயல்பாக வருகிறது?

"ம்.. அப்பறம்" என்றார்.

"எனக்கு எப்படி சொல்றதுனே தெரியலை"

இப்படித்தான் அன்றும் கூறினேன்.

"எனக்கு எப்படி சொல்றதுனே தெரியலை" என்ற பிறகு நீண்ட மெளனம் விட்டு எதிர்முனையில் கிடைத்த பதில் மெளனமே அங்கீரமாக வைத்து என் காதலை வெள்ப்படுத்தினேன்.

ஆண்டவா! அந்த கணத்தில் தோன்றி மறைந்த படபடப்பை முழுமையாக விவரிக்க என் மொழியின் வன்மை போதாது.

எங்கிருந்து வந்தது எனக்குள் காதல்?

எத்தனை ஆச்சரியங்கள் தந்தாய் நண்பா? உன் மீதான மதிப்பும், வியப்பும் அவற்றின் எல்லைப் பரப்பை தினந்தோறும் அகலமாக்கினவே, அதனாலா? பெண்ணைப் புரிந்து கொள்ளும் பக்குவமுள்ள ஆண் என்று நான் உன்னை மெது மெதுவாகப் புரிய ஆரம்பித்தேனே, அப்போதா? பெண்ணியம், சமூகம், இறை நம்பிக்கை, பொருளாதாரம், சமூகம், அரசியல் குறித்தான உன் நிலைப்படுகள் என்னை ஒத்ததாக இருந்ததாலா? 'பார்க்க ஆசைப்படுவது ஈஃப்ள் கோபுரமா, எகிப்து பிரமிடா?' என நீ கேட்ட போது 'இலங்கை' என நான் சொன்ன பதிலில் உனக்கு உண்டான ஆச்சரியத்தை நான் ரசித்ததாலா? என்னுள் செறிந்திருக்கும் இலங்கைத் தீவு கல்கி பொன்னியின் செல்வனில் சித்தரித்த வனப்பை உள்ளடக்கியது. உனது காரணம் ஈழமும், அதன் சோகமும் கலந்தது. ஆனாலும், நீ பார்க்க விரும்பிய இடமும் அதுதானே!

ஒரு ஆடவன் மீது பெண்ணுக்கு எப்போது காதல் வருகிறது என்பது உறுதியாக வரையறுக்க முடியாத ஒன்று. ஆணுக்கு பெண் மீது ஈர்ப்பே முதலில் வருகிறது. மற்றதெல்லாம் பிற்பாடு. ஆனால், பெண்ணுக்கு அப்படியல்ல. ஆணைப் பற்றிய திடீர் அல்லது படிப்படியான ஆச்சரியம் நம்மையும் அறியாமல் காதலை விதைத்து வளர்க்கிறது. எப்போது ஒருவனைப் பற்றிய சிந்தனை இடைவிடாமல் ஆக்கிரமிக்கிறதோ, எப்போது அந்தச் சிந்தனையை உடைபடாமல் மேலும் பெருகும் வகையில் சூழ்நிலை அமைகிறதோ அப்போதே பெண்ணின் காதல் வெளிப்படுத்துகிற அளவு அடுத்த நிலைக்கு வந்து விடுகிறது.

எனக்கு அப்ப எப்படி சொல்றதுனே தெரியலை. இப்பவும் அப்படித்தான் எப்படி சொல்றதுனே தெரியலை.

உனக்குத்தான் எத்தனை தயக்கங்கள் இருந்தன? நானல்லவா அவற்றைத் தகர்த்து உன்னை மீட்டெடுத்துக் கொண்டு வந்தேன்! இப்போது நானே, அடக் கடவுளே, எப்படிச் சொல்வேன்?

"இந்தக் காலத்துல பொண்ணுங்களோட எதிர்பார்ப்பு விலைவாசியை விட வேகமாக வளருது. போன தலைமுறை மாதிரி வீட்டிலேயே முடங்கிக் கிடக்கறது கிடையாது. வெளியே போறாங்க. வேலை செய்யறாங்க. பல பேரோட பழகற சந்தர்ப்பம் கிடைக்குது. அப்பா மாதிரியே நல்ல வீட்டுக்காரன் கிடைக்கணும்ங்கற நிலைமை இன்னும் அகலமாகுது. அதுவும் உன்னை மாதிரி பெங்களூர்ல உள்ள பொண்ணுங்களைப் பத்தி சொல்லவே வேண்டாம். அவங்க தினசரி சந்திக்கிற ஆண்கள் பல எதிர்பார்ப்புகளை கூட்டிக்கிட்டே இருக்காங்க. சராசரி பொண்ணுங்களுக்கே இவ்வளவு எதிர்பார்புன்னா உன்னை மாதிரி அழகானவங்களைப் பத்தி சொல்லவே வேண்டாம். நிச்சயமா என் நெறமும், தோற்றமும் அதையெல்லாம் ஈடு செய்யாது. நம்ம ஊர்ல நடக்கற சாதாரணமான ஆள் மாதிரியே இருப்பேன்."

இன்னும் எவ்வளவு வியாக்கியானங்கள் சொன்னாய்? என்னை நீ விளித்த 'நீங்கள்', 'நீ' ஆக மாற எத்தனை காலம் ஆனது?

"அதெல்லாம் பிரச்சினையே இல்லை. மொழி படத்துல வர்ற மாதிரி எனக்கு மணி அடிச்சு பல்பு எரிஞ்சிருச்சு. இனிமேல் வேற ஒன்னுக்கும் வேலை கிடையாது. எப்படி இருந்தாலும் மாத்த முடியாது" நானல்லவா உறுதி கொடுத்தேன்? இப்போது நானே எப்படி சொல்வேன், உன்னில் ஊற்றி வளர்த்த காதலுக்குப் பிறகு?

இயந்திரமாக ஓடித் திரிந்த உன்னை தனியே சிரிக்கச் செய்தேனே! கால் நூற்றாண்டாக நீ சேர்த்து வைத்த காதலும், ஆசையும் எனக்காகக் காத்திருக்கின்றன என்றாயே? இன்று நானே அதை எப்படி மறுதலிப்பேன்?

"என்னை அட்ஜஸ்ட் பண்ணிப்பியா?" என்றாய் நீ.

"அட்ஜஸ்ட் பண்றதை விட அன்டர்ஸ்டாண்ட் பண்ணினாத்தான் வாழ்க்கை நல்லா இருக்கும். நான் உங்களை அன்டர்ஸ்டாண்ட் பண்ணி வெச்சுப்பேன்" என்றேன் நான்.

"கல்யாணத்துக்கு அப்பறம் உங்க அப்பா, அம்மாவை பொருளாதார ரீதியா சப்போர்ட் பண்ணனுமா?" நீ கொடுத்த ஆச்சரியங்கள் தொடரந்த வண்ணமே இருந்தன.

"அப்படி செய்யற நெலமை வந்தா உங்களுக்கு அப்ஜெக்ஷன் உண்டா?"

இதற்கான உன் பதில் எனக்குத் தெரிந்திருந்தது.

உனக்குள் தூங்கிக் கொண்டிருந்த கவிஞனைத் தட்டி எழுப்பினேன்.
இன்றைக்கு அந்தக் கவிஞனை மட்டுமல்ல, காதலனையும் அழிக்க நினைத்து வைத்து விட்டாயே?

"எனக்கு எப்படி சொல்றதுனே தெரியலை. ரொம்ப குழப்பமா இருக்கு. கொஞ்சம் அவசரப் பட்டுட்டேனான்னு சந்தேகமா இருக்கு" கட்டெறும்பைத் தட்டி விட்டு மறுபக்கம் திரும்பி நான் சொன்ன வார்த்தைகள்.

ரஞ்சித் அன்று சொன்னது சரியென்று இப்போது நினைக்கிறேன். அவர் அனுப்பி வைத்த பொட்டோவைப் பார்த்தும் கூட, அவர் கருப்பு என்பது தெரிந்திருந்தும் கூட, மணியடித்து பல்ப் எல்லாம் எரிந்தும் கூட, என்னுள் சேகரித்து வைத்திருக்கும் ஆசைகள் அவற்றையெல்லாம் இப்போது வென்று விடும் போலத் தோன்றுதே!

கொஞ்சம் நிதானமாக இருந்திருக்கலாம். நேரில் ஒரு முறை சந்தித்த பிறகு வீட்டில் சொல்லி சம்மதம் வாங்கியிருக்கலாம். இப்போது அப்பா, அம்மாவிடம் என்னவென்று சொல்வேன். எனக்கே இவ்வளவு குழப்பம் என்றால், ஐயகோ அவர்கள் இவரைக் கண்டால் என்ன நினைப்பார்கள்? அக்காவுக்கு மட்டும் அழகான கணவர்!

எதிர்பாராத ஆச்சரியங்களே விசித்திரமான முடிவுகளுக்கு இட்டுச் செல்கின்றன. காதலிக்கச் சொல்லுவதும், அதே காதலை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி கேள்வி கெட்பதும் எதிர்பாராமல் நடக்கும் சம்பங்களும், அவற்றைப் பற்றிய நமது மதிப்பீடுகளுமே. இருப்பதிலேயே நல்ல போட்டோவை அனுப்புவதுதான் மனித இயல்பு என எனக்குத் தெரியும். ஆனால், அதையும் மீறி நான் கற்பனை செய்து வைத்தேன். நாள் தோறும் பேசினோம். ஒவ்வொரு சொல்லுக்கும் உருவம் கொடுத்து அவர் பேசுவதாக கற்பனை செய்தேனே. ஆளற்ற கடற்கரையில் கை உங்களோடு கோர்த்தபடி நடப்பதைப் போல, நாள் தோறும் எத்தனை கனவுகள் கண்டிருப்பேன். I miss you பரிமாறினோமே தவிர I kiss you. சொல்லிக் கொண்டதில்லை. எவ்வளவு நெகிழ்ச்சியாக இருந்தது நேற்று வரைக்கும்? யெளவனம் என்னைச் சுற்றி கூடாரம் அமைத்திருந்ததே!

ஆனால், இதே முகத்தைக் காலம் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பைச் செரிக்கும் சக்தி இப்போதைக்கு எனக்குக் கிடையாது. ஒளியிழந்த இந்தக் கண்களிலா என் கனவுகளைப் புதைக்கப் போகிறேன்? சுருங்கிய இந்தக் கன்னத்தையா நான் காலம் முழுவதும் தடவிக் கொண்டிருக்க வேண்டும்? கறுத்த இந்த உதடுகளா என்னை முத்தமிடப் போகின்றன? நினைத்தாலே சகிக்க முடியவில்லையே! ஐயோ, குரங்கு கையில் கொடுத்த பூமாலையாக அல்லவா என் வாழ்க்கை ஆகப் போகிறது!

"எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க. என்னால இப்ப ஒன்னும் சொல்ல முடியல" என்றேன்.

பல ஆயிரம் ரூபாய்கள், சில மணி நேரத் தூக்கம், இரண்டு பாட்டில் ஒயின், அளவில்லாத ஆசைகள் செலவழித்து வந்திருக்கிறார். How can he afford to miss me? என் மண்டை குடைந்தது. முகத்தில் அடித்த மாதிரி எப்படிச் சொல்வது?

"ஒன்னும் பிரச்சினை இல்லை. யோசிச்சுச் சொல்லுங்க. என்னோட கட்டாயத்தின் பேர்ல எந்த முடிவும் எடுக்க வேண்டாம்" இந்த ஆண்களுக்கு தாங்கள் பெருந்தன்மையாக இருப்பதைப் போல நடிப்பதில் அப்படி என்னதான் கெளரவமோ! தோல்வியை ஒப்புக் கொள்வதில் இவர்களுக்கு பெரிய பிரச்சினை.

உள்ளுக்குள் எவ்வளவு நொறுங்கியிருப்பார் என்பது எனக்குத் தெரியும். நிராகரிப்பின் வலி அங்கீகாரத்தின் சுகத்தை விடப் பன்மடங்கு பெரியது. தூக்கமின்மையிலும், பயணக் களைப்பிலும் ஏற்கனவே பொலிவின்றி வாடியிருந்த அந்த முகத்தில் இப்போது நிரந்த இருள் குடி வந்திருக்கிறது. ஆண்களுக்கு உணர்ச்சியை மறைத்து நடிக்கும் கலை அவ்வளவு இலகுவாக கை வருவதில்லை. 'சொல்லு' என்று சொல்ல வேண்டிய இடத்தில் தன்னையும் அறியாமல் 'சொல்லுங்க' என்றார் அவர்.

எத்தனை பேரிடம் ஏற்கனவே பிரகடனப்படுத்தியிருப்பார்? அவர்களிடம் போய் "நான் தோற்று விட்டேன்" என்று வலியச் சொல்லாவிட்டாலும், அவர்களின் தவிர்க்க இயலாத கேள்விகளுக்கு பதில் கூறுவதில் அவமானமும், அறுவறுப்பும் எவ்வளவு செறிந்திருக்கும்?

இதையெல்லாம் கோமதி கேட்டால் என்ன நினைப்பாள்? என் செய்கையை நினைத்து திட்டுவாளா அல்லது செய்ததே சரியென்று அங்கீகரிப்பாளா? என்ன ஆயினும் என் ஆருயிர்த் தோழி அவள். சரியான தீர்வு காணுவதில் அவளிடம் ஆலோசனை பெற்றாக வேண்டும்.

எங்கள் இருவர் மீது அவளுக்கு அளவற்ற அக்கறை இருந்தது. ரஞ்சித்துக்கு அவள் பரிசு வாங்கி என் மூலமாக அனுப்பியிருந்தாள். பதிலுக்கு அவர் கனடாவில் இருந்து ஸ்பெஷல் சாக்லேட் வாங்கி வர வேண்டும் என்பது கணக்கு. அவற்றை பரிமாறிக் கொள்வதில் பிரச்சினை இருக்கவில்லை. என் தோழிக்கும், இவருக்குமான அறிமுகம் எதிர்பார்ப்புகள் அற்றது. ஆனால், நானும் அவரும் அப்படியா?

அவருக்காக நான் தேர்ந்தெடுத்து வாங்கிய wallet அழகாக பேக் செய்யப்பட்டு கைப் பைக்குள் உறுத்துகிறது. அது போக பெங்களூரில் இருந்து அவர் பொள்ளளச்சி செல்வதற்க்கு KPN இல் டிக்கெட் வாங்கி வைத்திருக்கிறேன். அவற்றைக் கொடுத்த போது வாங்கிக் கொண்டார். அவர் எனக்காக வாங்கிக் கொண்டு வந்திருக்கும் Ipod சாதனத்தை நான் உறுதியாக மறுத்து விட்டேன். எனக்காகவே வாங்கி அதன் மீது எனக்காகவே அருமையாக வர்ணனை எழுதி அவர் கொண்டு வந்த புத்தகத்தை அவரே கொடுக்க்கவில்லை.

காதல் என்பது சுதந்திரத்தைப் போலவே கேட்டுப் பெறும் பிச்சையாக இல்லாமல் புரிந்துணர்வுடன் கூடிய இரு தரப்பு உறவாக இருக்க வேண்டும் என்பதில் அவருக்கு நிலையான நம்பிக்கை இருக்கும். அந்த நூலின் முதல் பக்கத்தில் எழுதிய வாசகங்களை நான் வாசித்தால் கால் நூற்றாண்டாக அவர் சேமித்து வைத்திருந்த காதல் கிடங்கில் இருந்து சுரக்கும் ஊற்று அதை நிறைத்திருப்பதை நான் அறியக் கூடும். அதே சமயம், யோசித்துச் சொல்வதாக நான் தெரிவித்த பிறகும் அவற்றை ஒப்படைப்பது தன் அந்தப் புறத்தைக் கைப்பற்றி பட்டத்து இராணியைக் கவர்ந்து சென்ற எதிரி நாட்டு மன்னன் முன் மண்டியிட்டு அவனை வாழ்த்திப் பாடுவதாக ஆகி விடும்.

"அதெல்லாம் பரவாயில்லை. உங்களுக்கு குற்ற உணர்ச்சியே வேண்டாம்" என்று சில முறை சமாதானம் கூறினார்.

அதன் பிறகு வேறு எங்கோ நோக்கியவறாக, "பிரேமா. எதையோ யாரோ புடுங்கிக்கிட்டு போற மாதிரி வெறுமையா இருக்கு. உண்மையைச் சொல்லு. நான் அவ்வளவு அசிங்கமாவா இருக்கேன்?" என்றார்.

என் இடத்தில் நீங்கள் இருந்திருக்க வேண்டும். பல இலட்சம் ரசாயன வெடி குண்டுகள் ஒரு சேர வெடித்து இதயத்தை பொடிப்பொடியாக நொறுக்கியதை அனுபவித்திருப்பீர்கள். இதை விடக் கடுமையாக என்னை யாராலும் தண்டிக்க முடியாது. ஆனாலும், சில நிமிடங்களில் அதையும் பொய்ப்பித்தார், இன்னொரு தண்டனையோடு.

"பிரேமா, யோசிச்சு சொல்லு. ஒன்னும் பிரச்சினை இல்லை. காதல் அப்படீங்கற விசயம் கட்டாயத்தினால வர வைக்கக் கூடியதே கிடையாது. அதைச் செய்யவும் எனக்கு விருப்பம் இல்லை. அதே நேரம் நான் எந்த அளவுக்கு உன்னை நேசிக்கிறேங்கறதையும் சொல்லாம விட்டா நான் கடமை தவறினவனா ஆகிருவேன். வேற யாரைவாயது நீ கல்யாணம் செய்து எதாவது மன வருத்தம் காரணமா கஸ்டப்பட்டா, அப்போ நான் சரியா எடுத்துச் சொல்லாத காரணத்துனாலதான் உனக்கு இப்படி ஆச்சுங்கற குற்ற உணர்ச்சி என்னைச் சும்மா விடாது. அதே மாதிரி, நீ என் கூடவே சேர்ந்தாலும் கூட என் முகம் உனக்கு உறுத்திக் கிட்டே இருந்து அதை சரிக்கட்ட சினிமா நடிகன் எவனையாது நெனைச்சு குடும்ப நடத்தினாலும் நல்லா இருக்காது. இந்த இரண்டு விசயத்தையும் நான் வெளக்கமா உங்கிட்ட சொல்ல நினைக்கிறேன். ஆனா, முடியல. நீயே யோசிச்சு முடிவு பண்ணு."

நான் வேறு பக்கம் திரும்பிக் கொண்டேன். எங்கே அவரைப் பார்த்தால் அழுது விடுவேனோ என்று பயமாக இருந்தது.

மூன்றாவதாகவும், நான்காவதாகவும் இரு தண்டனைகளை வைத்திருந்தார்.

"நாலு நாள் பாத்தா மூஞ்சி பழகிரும் பிரேமா" - இப்படி அவர் சொன்னதைப் பார்த்திருந்தால் உங்களுக்கு போர்க்களத்தில் நிராயுதபாணியாக உயிர்ப்பிச்சை கேட்டு மன்றாடுபவனைப் போல பரிதாபமாக இருந்திருக்கும். ஆனால், எனக்கு இது அடுத்த தண்டனை

"தயவு செஞ்சு என் மேல வெச்சிருக்கிற நன்மதிப்பையோ இல்லாட்டி பரிதாபத்தையோ காதல்னு தப்பா புரிங்சுக்காதே. உன்னோட நீண்ட கால சந்தோசத்துக்கு எது சரின்னு நெனைக்கறியோ அதைச் செய்" - இது கடைசித் தண்டனை. அது எனக்குப் போதுமயிருந்தது.

எனக்கு இந்த இடத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும் போல இருந்தது. லஞ்ச் சாப்பிட்டு விட்டுப் போகலாம் என யோசனை கூறினார். மறுக்க மனமில்லை. பாவமில்லையா? ஆனாலும், இதற்கு மேல் என்னால் தாங்க முடியும் எனவும் தோன்றவில்லை. உணவு உள்ளே இறங்காது.

"என்னை வீட்டில் இறக்கி விடுங்கள் போதும்" என்றேன். விட்டார். தெரு முனையைக் கடந்து அவர் செல்லும் வரை காத்திருந்து விட்டு உள்ளே போனேன்.

அதெல்லாம் இருக்கட்டும். நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? நான் எதாவது முடிவு சொல்வேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்களள? போங்க போய் வேலையைப் பாருங்கள். காலம் யாருக்காகவும், எவருக்காகவும் காத்திருப்பதில்லை.

Saturday, July 28, 2007

Homecoming - மோட்டர் சைக்கிள் திருவிழா

- செல்லமுத்து குப்புசாமி


Homecoming என்றவுடன் நமது ஊரில் மனைவிமார்கள் கோபித்துக்கொண்டு அம்மா வீட்டுக்கு வருவது என்றுதான் பல நாள் நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஆனால், விக்கிபீடியா கீழ்க்காணும் விளக்கத்தினைத் தருகிறது. "Homecoming is an annual tradition of the United States. People, towns, high schools and colleges come together, usually in late September or October, to welcome back former residents and alumni"ஹோண்டா கம்பெனியின் மோட்டர் சைக்கிள் பிரிவு ஆண்டுதோறும் homecoming நடத்துவது வழக்கம். அதில் வாடிக்கையாளர்கள், பைக் பிரியர்கள், பொது மக்கள், பொறியியல் மாணவர்கள், குழந்தைகள் என யார் வேண்டுமானாலும் வந்து கலந்து கொள்ளலாம். பைக் தயாரிப்பு முறைகளின் செய்முறையை நேரடியாக plant tour மூலம் விவரிக்கும் ஏற்பாடுகளும் உண்டு.

ஆனால், அவற்றையெல்லாம் படம் பிடிக்க அனுமதி கிடையாது. வெளியே கண்ட சில காட்சிகளை மட்டும் சுட்டிருக்கிறேன்.


சின்ன வயசு பசங்க எல்லாம் வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்க, பணம் நிறையச் சேர்த்து வைத்த முதியவர்கள் சிலர் வாழ்க்கையை அனுபவிக்க விதவிதமாக பைக் வாங்கி ஊர் சுற்றும் கொடுமை இந்த ஊரில் நடக்கிறது.

பழங்காலத்தில் வாழ்க்கைக்கு இன்றியமையாததாகக் கருதப்பட்ட வேட்டையாடுதல், மீன் பிடித்தல் போன்றவை இன்று பொழுதுபோக்காக மாறியது போல, மூன்றாம் உலக நாடுகளில் affordable என்று குறிப்பிடுகிற மோட்டர் சைக்கிள் முன்னேறிய நாடுகளில் ஆடம்பரமாக இருக்கிறது.


ஒரு வெள்ளைக்கார தாத்தாவிடம், "உங்க பைக் எஞ்சின் ஒரு 500 cc இருக்குமா?" என்று கேட்க, "ஒன்றரை லிட்டர்" என்றார். எங்க டாட்டா 630 cc ல ஒரு லட்ச ரூபாய் கார் தயாரிக்கறாருன்னு சொல்லலாம்னு நெனைச்சு கமுக்கமா இருந்துட்டேன்.

ஜப்பான் கம்பெனின்னாலும் அமெரிக்காவில் அமெரிக்கா கொடி பறக்க விடும் சாமர்த்தியம் வாழ்க!

Food court. வெள்ளை கலர் டிரஸ் போட்டவங்க எல்லாம் பியூன்னு நெனைச்சுக்காதீங்க. அவங்க எல்லாம் இங்கே வேலை செய்யறவங்களாம்.


சில பேர் இதுக்குனே வராங்க போல இருக்கு.


எஞ்சின். மோட்டர் சைக்கிளுக்கு இவ்வளவு பெரிய எஞ்சினானு பேஜார் ஆகாதீங்க. இது accord எஞ்சின்.இது crank shaft.. மறந்துட்டேன், இதுவும் காருடையது.cam shaft. பிஸ்டன் இயக்கத்திற்கு ஏற்ப crank shaft சுழற்சிக்கு ஏற்ப மற்ற valve எல்லாவற்றையும் சரியாகத் திறந்து மூட வைக்கும் காரண்கர்த்தா.இன்னொரு camshaftசோறு ரெடி ஆயிருக்குமானு ரண்டு பேரு ஆர்வமா பாக்கறாங்க.பாக்க நல்லாத்த்தான் இருக்கு. ஆனா வெலையைக் கேட்டா தலையைச் சுத்துது.
நீங்க எவ்வளவு டிசைன் டிசைனா பைக் செஞ்சாலும் உலகத்துலயே அதிக விற்பனை ஆகற எங்க ஊரு splender மாதிரி வருமா? என்னது அதுவும் உங்க கம்பெனி வண்டிதானா?என்ன கொடுமை சார் இது? சாவியை அப்படியே விட்டுட்டு போயிருக்காங்க? (பிறகுதான் தெரிஞ்சுது, அது சாவி இல்லைனு)அய்யோ.. இந்த ஆளு கார் டயரை பைக்ல மாட்டி வெச்சிருக்கான்.எல்லாருமே பிட்ஸா டெலிவரி பண்ணப் போற மாதிரி ஒரு பொட்டியை பின்னாடி மாட்டி வெச்சிருக்காங்க.


பார்க்கிங் தப்பு. உனக்கு லைசன்ஸ் கிடையாது போய்யா.


இதை பேலன்ஸ் பண்ணவே பத்து நாள் ஸ்பெஷலா சாப்பிடணும்னு தோனுது.


பின்னாடி புடிக்கறதுக்கு ஒன்னும் இல்லைன்னா லிஃப்ட் கேக்கற பிகரு தன்னைப் புடிச்சு உக்காரும்னு நெனைச்சு எவனோ இப்படி மாத்தி வெச்சிருக்கான்.


இவர் இன்சூரன்ஸ் ஏஜென்டுங்க.


காவலுக்கு வெச்சிட்டு போயிருக்காங்க போல.


குடும்பத்துல கொழந்தை குட்டியோட கெளம்பி வந்திருக்காங்க.


ஷ்பேஷலா ஆர்டர் குடுத்து செஞ்சிருப்பாங்களோ?

ஓடம் வண்டியில போகும், வண்டி ஓடத்துல போகும்னு சொல்லுவாங்க. இங்க கார் பைக்ல போகுது.
ஏனுங்க, இது ஓட்றதுக்குங்களா இல்லாட்டி சறுக்கி வெளையாடறதுக்குங்களா?

Saturday, July 21, 2007

புடிச்ச போட்டோ

காரம் வெளைஞ்ச பூமி.. மொளகாய்ச் செடி..


கயித்துக் கட்டில் மட்டுந்தான் பாக்கி.. மத்தியானத்துல படுத்து தூங்க..


சம்பாதித்து முதலில் வாங்கிய 4 + 4 சக்கர வண்டி..


சிறகடிச்சுப் பறக்க வேண்டிய மனசு அப்பப்ப இப்படி உக்காந்துக்குது.


Wednesday, July 11, 2007

வாரன் பஃபட் புத்தகம்


- செல்லமுத்து குப்புசாமி

ஆன்லைனில் வாங்க இங்கே கிளிக் செய்யவும்

 • முதன் முறையாக ஒரு பசுமாடு ஆகாய விமானத்தில் பயணம் செய்தது. ஏரோபிளேனுக்குள்ளேயே அந்த மாட்டில் பால் கறந்தார்கள்.
 • புளூட்டோ என்ற கிரகம் சூரியனைச் சுற்றி வருவது கண்டறியப்பட்டது.
 • ஜனவரி 26 ஆம் தேதியை பூரண சுயராஜ்ஜிய தினமாக இந்திய தேசிய காங்கிரஸ் அறிவித்தது.
 • பிரிட்டிஷ் சட்டத்தை எதிர்த்து காந்தியடிகள் அலைகடலை நோக்கி மாபெரும் யாத்திரை நடத்தி உப்புச் சத்தியாகிரகம் செய்தார்.
 • இயற்பியலுக்கான நோபல் பரிசு சர்.சி.வி.ராமனுக்கு அளிக்கப்பட்டது.
ஒன்றோடொன்று தொடர்பில்லாத இந்தச் செய்திகளுக்கு இடையே நிலவும் ஒற்றுமை என்ன தெரியுமா? வரலாற்று ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும் மைல் கல்லாகும். அதை விட சுவாரசியமான சங்கதி என்னவென்றால், இவை அனைத்தும் 1930 ஆம் வருடம் நிகழ்ந்தவை.

அந்த வருடம் பல குழந்தைகள் பிறந்தனர். அதில் இரண்டு பேருக்கு இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான இடம், ஏன் உலக வரலாற்றிலேயே கூட, காத்திருந்தது. அவர்களில் ஒருவர் நீல் ஆம்ஸ்ட்ராங். அவர் 1930 ஆம் வருடம் ஆகஸ்டு 5 அன்று பிறந்தார். நிலவில் காலடி வைத்து மனித சமுதாயத்தின் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு வித்திடப் போகும் அரிய வாய்ப்பு அந்தக் குழந்தைக்குக் காத்திருந்தது. அழிவில்லாத ஒரு பெயர் அவருக்காக ரிசர்வ் செய்யப்பட்டிருந்தது.


ஆம்ஸ்ட்ராங் பிறந்த 25 நாட்களுக்குப் பிறது அதே அமெரிக்க நாட்டில் இன்னொரு மனிதர் பிறந்தார். அவர் பெயர் வாரன் எட்வர்ட் பஃப்பட். அமெரிக்காவில் மட்டுமல்லாமல், அகில உலக அளவில் மாபெரும் பெயரோடும், புகழோடும், செலவத்தோடும் அவர் திகழப் போகிறார் என்ற விவரம் அந்த ஆகஸ்ட் 30 அன்று யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
********
உலகின் இரண்டாவது மிகப் பெரிய செல்வந்தர், தன் சொத்தில் பெரும்பகுதியை தானமாகக் கொடுத்தவர் என்று மட்டுமே பரவலாக அறியப்பட்ட வாரன் பஃபட் என்ற மனிதரைப் பற்றி ஆராயும் ஆர்வம் எனக்கு இயல்வாகவே பல ஆண்டுகள் இருந்து வந்தது. செனட்டர் மகனாக இருந்தும், 13 வயதில் பேப்பர் போடும் சிறுவனாக வேலை பார்த்த இந்த ஆளுமை கடந்து வந்த பாதைகள் மிகவும் சுவாரசியமானவை. அவரைக் குறித்து நான் அறிந்து கொண்ட சங்கதிகளின் தொகுப்பாக ஒரு புத்தகம் எழுதும் எண்ணம் இருந்தது.


அப்போது ஒரு நண்பர் மின்னஞ்சலில் கீழ்க் காணும் வரிகளை அனுப்பினார்.

"வாரன் பற்றி நீங்கள் எழுதப் போகும் புத்தகம், இன்றைக்கு 25 வயதுள்ள அத்தனைத தமிழ் இளைஞர்களின் கையில் இருக்கிற மாதிரியான ஒரு புத்தகமாக இருக்க வேண்டும் என்பது ஆசை. 25 முதல் 40 வயதுள்ளவர்களை சுண்டி இழுக்கக்கூடிய ஒரு மொழி அதில் இருக்க வேண்டும். வாரன் பற்றிய புத்தகம் அடிப்படையில் ஒரு வாழ்க்கை வரலாறுதான். ஆனால், அதில் மார்க்கெட் பற்றிய அத்தனை நுணுக்கங்களும் வரவேண்டும். நிறைய சம்பவங்கள், அனுபவங்கள், படிப்பினைகள்.. என்று அடுக்கிக் கொண்டே போகலாம். முதலீடு என்பது 500 ரூபாயிலிருந்துகூட ஆரம்பிக்கலாம். இவ்வளவுதானே நம்மிடம் இருக்கிறது என்கிற எண்ணம் இல்லாமல் பணத்தைப் பன்மடங்காகப் பெருக்குவது எப்படி என்கிற எண்ணத்தை விதைத்துவிட்டால் வாரனை தமிழ்நாட்டின் அடுத்த ரஜினி ஆக்கிவிடலாம்."
அவரது வார்த்தையை முடிந்த வரை காப்பாற்ற முயற்சித்துள்ளேன்.


புத்தகத்தின் பின் பக்க வரிகள் கீழே..

******

உங்களிடம் 100 ரூபாய் உள்ளது. இதை 100 கோடி ரூபாயாக மாற்றும் வழி தெரியுமா உங்களுக்கு? வாரன் பஃபட்டின் வாழ்க்கையைக் கவனமாகப் படியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் குவிக்கும் டெக்னிக்குகள் உங்களிடமிருந்தே உற்பத்தியாக ஆரம்பிப்பதை உணர்வீர்கள். இந்த உலகமகா பணக்காரரின் வெற்றி ரகசியங்கள் மிகவும் வெளிப்படையானவை. உங்களை வாரிச் சுருட்டி பாக்கெட்டில் போட்டுக்கொள்ளப்போகிற வாழ்க்கை வரலாறு இது.


ஷேர் மார்க்கெட்டா? அது சூதாட்டமாச்சே! என்று எல்லோரும் பிரசாரம் செய்து கொண்டிருந்த காலத்தில், இல்லை, அது ஒரு அறிவியல் பூர்வமான முதலீடு. யார் வேண்டுமானாலும் அதில் பணத்தைக் குவிக்க முடியும் என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொன்னவர் வாரன் பஃபட்.
சொன்னது மட்டுமல்ல, தன் வாழ்நாளில் அதைச் செய்தும் காட்டினார். வெறும் 100 டாலர் பணத்தோடு ஷேர் மார்க்கெட்டுக்குள் நுழைந்தார் வாரன். ஆனால், இன்று அவரிடம் இருக்கும் பணத்தின் மதிப்பு பல பில்லியன் டாலர்கள்.
ஷேர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து நாலு காசு சம்பாதிக்க நமக்கு முதலில் என்ன தெரிய வேண்டும்? லாபம் தரும் கற்பகத் தரு மாதிரியான கம்பெனிகளின் ஷேர்களைக் கண்டுபிடிப்பது எப்படி? என்ன விலையில் ஒரு ஷேரை வாங்கலாம்? அல்லது விற்கலாம்? கையைக் கடிக்காமல் இருக்கும் கலையைக் கற்றுக் கொள்வது?


பொருளாதாரச் சூத்திரங்களின் பின்னால் ஒளிந்து கொள்ளாமல், வரைபடம் வரைந்து தலையைச் சுற்ற வைக்காமல், பட்டியல் போட்டுச் சாகடிக்காமல், ஷேர் மார்க்கெட்டின் சிதம்பர ரகசியங்களை ஒரு குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்கிற மாதிரி கற்றுத் தரும் பங்குச் சந்தை சூப்பர் ஸ்டாரின் வெற்றிக் கதை இது.
***
He is one of my life time heroes and it gives me immense pleasure to write Warren Buffett biography which is also available as a kindle with the title 'Warren Buffett an Investography'

Tuesday, June 12, 2007

நான் கேட்க நினைத்ததெல்லாம்...!

"அடுத்து நான் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பது தமிழ் விக்கிபீடியாவில். இது ஒரு கலைக்களஞ்சியத்துக்குச் சமம். ஆனால் இரண்டு வித்தியாசங்கள் உள்ளன. தமிழ் விக்கிபீடியாவை இணையம் மூலம் உலகில் எங்கிருந்தும் யாரும் பயன்படுத்திக்கொள்ளலாம். இரண்டாவது, இது கல்வியாளர்களால் மாத்திரம் உருவாக்கப்படுவது இல்லை. யாரும் எழுதலாம். எவரும் பங்கு பற்றி திருத்தங்கள் செய்யலாம். ஆகவே, கட்டுரைகளில் ஆசிரியர் பெயர் இராது. ஆங்கிலத்தில் உள்ள விக்கிபீடியாவில் பத்து லட்சம் கட்டுரைகள் இருக்கின்றன. இந்திய மொழிகளில் தெலுங்கில் 26000 கட்டுரைகள், வங்காளியில் 12700 கட்டுரைகள் சேர்ந்துவிட்டன. தமிழ் விக்கிபீடியா இந்த மாதம் 10,000 கட்டுரைகள் இலக்கை தொட்டுவிட்டதாக அறிகிறேன். அதற்கும் கீழே ஹிந்தி, கன்னடம், மலையாளம் என்று வருகிறது. என்னுடைய வேலை எனக்குத் தெரிந்த படைப்பாளிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் என்று அணுகி அவர்களிடம் கட்டுரை பெற்று களஞ்சியத்தில் சேர்க்க உதவுவது. தங்கள் பெயர் வராததால் பலர் தயங்குகிறார்கள். உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் தன்னார்வத் தமிழர்கள், இந்தப் பணியில் முழுமூச்சுடன் வேலை செய்கிறார்கள். இந்த வருடம் முடிவதற்கிடையில் கட்டுரைகளின் எண்ணிக்கையை 20,000_க்கும் மேலாக உயர்த்தும் முயற்சியில் இருக்கிறார்கள்.


ரொறொன்ரோவில் எனக்குத் தெரிந்த ஓர் இளைஞரின் பெயர் நற்கீரன். பொறியியல் முதுகலை படிக்கிறார். நாளுக்கு இரண்டு மணித்தியாலம் ஒதுக்கி இதற்காக உழைக்கிறார். அவருக்கு இதனால் ஒரு சதம் லாபம் இல்லை. முழுக்க முழுக்க தமிழ்ச் சேவை என்பது இதுதான். உலகம் முழுக்க வாழும் கல்வியாளர்கள், படைப்பாளிகள், ஆராய்ச்சியாளர்கள் இதற்கு மனமுவந்து உதவவேண்டும். கட்டுரைகளை எழுதி 'தமிழ் விக்கிபீடியா' என்று தலைப்பிட்டு யாரும் natkeeran@gmail.com முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்"

அற்புதமான எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் 'தீராநதி' பேட்டியில் இருந்து இந்தப் பகுதி இணைக்கப்பட்டுள்ளது.

கொக்குவில் தமிழுக்குத் தந்த கொடை என்று அவரை தயங்காமல் கூறுவேன். அவருடைய நடையும், மொழியும், இலாவகமும் யாருக்கும் வாய்த்து விடாது. ஈழத்தில் பிறந்து ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா என உலகமெல்லாம் சுற்றி ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றி பன்முகத் தோற்றம் பெற்ற இவருடைய கதைகளில் பல ஈழத்துப் பிண்ணனி கொண்டவை. எனினும், அங்கு நடைபெறும் உள்நாட்டுப் போர் குறித்து கருத்துக்களோ, பிரச்சாரமோ அவற்றில் ஒரு போதும் பிரதிபலித்ததில்லை. இவருக்கு ஈழ விடுதலைப் போராட்டம் பற்றி சொல்வதற்கு ஒன்றுமே இல்லையா என்று பாமரத்தனமாக நினைத்துக் கொண்டிருந்தேன். அவரிடம் நான் கேட்க நினைத்தைவற்றை தீராநதியே முன் வைக்கிறது.

*******

தீராநதி: நீங்கள் விரும்பினாலும் திரும்ப இயலாத ஒரு தேசமாக இலங்கை மாறிக் கொண்டு வருகிறது. இந்த அரசியல் நெருக்கடிகள் உங்களை எந்த அளவிற்குப் பாதித்திருக்கிறது?

அ. முத்துலிங்கம்: மாணவனாயிருக்கும்போதே பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு கொழும்பிலிருந்து கப்பல்களில் யாழ்ப்பாணம் போய்த் தப்பியவர்களில் நானும் ஒருவன். என் குடும்பம், உறவினர், சிநேகிதர் என்று எல்லோரும் அந்தக் கப்பலில் இருந்தனர். எனக்கு அப்போதிருந்த ஒரே சொத்து நான் படிக்கும் பாடப் புத்தகங்களும், சேர்த்து வைத்திருந்த இலக்கிய நூல்களும்தான். அவற்றை ஒவ்வொன்றாகத் திரும்பவும் சேர்க்கவேண்டி வந்தது. என்னுடைய சகோதரர் குண்டுவீச்சில் வீட்டை இழந்தார். என்னுடைய சகோதரிகள் சொத்தை இழந்தனர். எனக்கு எல்லாமாயிருந்த அண்ணன் சமீபத்தில் ஊரடங்குச் சட்டத்தின்போது நிராதரவாக மருத்துவமனையில் காலமானார். நான் ஓய்வு பெற்று கனடாவைத் தேர்ந்தெடுத்து இங்கே வாழ்ந்து கொண்டிருந்தாலும், அடிக்கடி கனடாவின் அதி உயர்ந்த படைப்பாளியான அலிஸ் மன்றோ கூறியதை நினைத்துக்கொள்வேன். ‘நீ புகுந்த நாட்டில் எவ்வளவு வசதிகளோடு வாழ்ந்தாலும் ஒருபோதும் அந்த நாடு உன் சொந்த நாடாக மாறாது. அது நீ இறக்கப்போகும் ஒரு நாடாகவே இருக்கும். உன் பிறந்த நாடுதான் உன் சொந்த நாடு.’

******

தீராநதி: இலங்கையில் சிங்களவர் மட்டுமே நிறைந்திருந்த ஒரு நிறுவனத்தில் தனியான ஒரு தமிழ் மேலதிகாரியாக கடமையாற்றியிருக்கிறீர்கள். அன்று உங்களுள் நடந்த பாதுகாப்பு, அச்ச மன உணர்வுப் போராட்டம் குறித்துப் பேசலாமா?

அ. முத்துலிங்கம்: நான் கொழும்பு பல்கலைக் கழகத்துக்கு நுழைவுத் தேர்வு எழுதி அனுமதி பெற்றபோது, எங்கள் புகுமுக வகுப்பில் 55 சதவீதம் தமிழர்களாகவும் மீதி சிங்களவராகவும் இருந்தார்கள். சிங்களவர் பெரும்பான்மையாக இருந்த ஒரு நாட்டின் பல்கலைக்கழகத்தில் தமிழர் தொகை அதிகமாக இருந்தது. எங்களுக்கு இயற்பியல், வேதியியல், கணிதம் படிப்பித்த பேராசிரியர்களும் தமிழர்களாகவே இருந்தார்கள். நாங்கள் வகுப்பில் அகரவரிசைப்படி அமர்வோம். எங்கள் வரிசையில் முனசிங்க என்ற சிங்களவர் இருந்தது ஞாபகம். சிங்களம், தமிழ் என்ற பேதம் எங்கள் மனங்களில் அப்போது இல்லை. விரிவுரைகள் ஆங்கிலத்திலேயே நடக்கும். இயற்பியல் பேராசிரியர் கரும்பலகையில் சிக்கலான விடையைத் தேடும்போது உரத்த குரலில் 'ஏழு எட்டு அம்பத்தாறு', 'நாலு ஆறு இருபத்தி நாலு' என்று பெருக்கல் வாய்பாட்டைச் சொல்லிச் சொல்லி எழுதுவது சர்வ சாதாரணம்.


இரண்டாவது வருடம் இனப்போர் வெடித்தது. தமிழர்கள் கொலை செய்யப்பட்டு, வீடு வாசல் இழந்து அகதிகள் ஆனார்கள். அமைதி ஏற்பட்ட பின்னர் பல்கலைக்கழகத்துக்குத் திரும்பினால், நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. சிங்களம், தமிழ் என்ற பிரிவு ஏற்பட்டதை என் கண்ணால் கண்டேன். அதன் பின்னர் பிளவு கூடியதே ஒழிய ஒன்று சேரவில்லை. நான் வேலையில் சேர்ந்தபோது எனக்கு மேலதிகாரியாக ஒரு வெள்ளைக்காரர் இருந்தார். அவரின் கீழ் நான் நாலைந்து வருடங்கள் வேலை பார்த்தேன். அவர் நாட்டை விட்டுக் கிளம்பியதும் அவர் பார்த்த வேலை என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. நான் ஒருவனே அப்போது தமிழன். எனக்கு மேலேயிருந்த இயக்குனர் சேர்மன் ஒரு பிரபலமான சிங்களவர்; ஜனாதிபதியின் சகோதரர். கம்பெனி இருந்தது சிங்களப் பிரதேசத்தில். வெள்ளைக்கார அதிகாரி இருக்கும்வரைக்கும் பிரச்னை இல்லை. ஆனால், ஒரு தமிழ் மேலதிகாரி சிங்கள ஊழியர்களிடம் வேலை வாங்குவது சிரமமானது. நிர்வாகம் கண்டிப்பும் கருணையும் கலந்து இருக்கவேண்டும். ஒரு சின்னத் தகராறு என்றாலும் வேலை நிறுத்தம் என்று ஆரம்பித்துவிடுவார்கள். முட்டை மேலே நடக்கும் வித்தை.
ஆப்பிரிக்காவில் வேலை கிடைத்ததுதான் தாமதம், திரும்பிப் பாராமல் நாட்டைவிட்டு ஓடிவிட்டேன்.

******

தீராநதி: அரசியல் தன்மையற்ற ஒரு நபராகவே நீங்கள் இருக்கிறீர்கள். இலங்கை அரசியல் நெருக்கடி குறித்தெல்லாம் ஏதாவது கருத்துகள் உங்களிடம் உள்ளனவா, மறுக்காமல் பேசுங்கள்?

அ. முத்துலிங்கம்: எதைச் சொல்கிறீர்கள்? என் சிறுகதைகள் ஏன் அரசியல் பின்னணி இல்லாமல் இருக்கின்றன என்று கேட்கிறீர்களா? இலங்கைப் பின்னணியில் நேர்த்தியான நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் எல்லாம் வந்துகொண்டே இருக்கின்றன. நேரடி அனுபவம் இல்லாததால் நான் ஆழமாகப் பதிவுசெய்ய முடிவதில்லை ஆனால், என்னுடைய எத்தனையோ சிறுகதைகளில் ஈழத்து காட்சிகள் வந்து வந்து போகும். புதுமைப்பித்தன் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி எழுதவில்லை. எமிலி டிக்கின்ஸன் அமெரிக்க உள்நாட்டுப் போர் பற்றி அவர் எழுதிய 1700 கவிதைகளில் ஒன்றில்கூட எழுதவில்லை. அதற்காக அவர்கள் அதுபற்றிக் கவலைப்படவில்லை என்று ஆகிவிடுமா?
பல நாடுகளில் சிறுபான்மையினரைப் பாதுகாக்க சட்டம் இயற்றுவார்கள். ஆனால், உலகிலேயே ஒரு பெரும்பான்மையைப் பாதுகாக்க சட்டம் கொண்டுவந்த நாடு இலங்கையாகத்தான் இருக்கும். இங்கே எப்படி ஜனநாயகம் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கலாம். ஜனநாயகத்தில் எனக்கு நம்பிக்கையும், மதிப்பும் போய்க்கொண்டிருக்கிறது. பெரும்பான்மை வைத்ததுதான் சட்டம் என்று ஆகிவிட்டது. அவர்கள் போனால் போகட்டும் என்று விட்டுக்கொடுப்பதுதானா நீதி? பெரும்பான்மை உள்ள ஒரு நாட்டில் ஜனநாயகம் இயங்கவேண்டும் என்றால், சிறுபான்மைக்குப் பாதுகாப்பு அரசியல் சட்டத்திலேயே ஐயத்துக்கு இடமில்லாமல் சொல்லப்பட்டிருக்கவேண்டும். அல்லாவிடில் சிறுபான்மைக்கு விமோசனமே கிடையாது. பேச்சு வார்த்தைகள் நடந்தபோது ‘தீர்வு வந்துவிடும், தீர்வு வந்துவிடும்’ என்று உலகம் எதிர்பார்த்தது. மறுபடியும் போர் என்றால் இழப்பு இரண்டு பக்கமும்தான். உலகிலே எத்தனையோ பாரிய பிரச்சினைகள். ஈராக், பாலஸ்தீனம், சூடான். யார் இலங்கைப் பிரச்சினையை கவனிக்கிறார்கள்; எல்லோருமே கைவிட்டுவிட்டார்கள். தீர்வை அவர்களாகத்தான் தேடவேண்டும்.

*****

Sunday, May 13, 2007

கொலம்பஸ் தமிழ்ச் சங்கம் - உரை!!

- செல்லமுத்து குப்புசாமி

(2007 மே 13 ஆம் தேதி நடந்த கொலம்பஸ் தமிழ்ச் சங்க விழாவுக்காக எழுதியது)

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களுக்கு,

வணக்கம்.

கொலம்பஸ் தமிழ்ச் சங்கம் நடத்தும் இந்தத் திருவிழாவில் இந்தக் கட்டுரையை வாசிப்பது பெரு மகிழ்ச்சியையும், அளவிட முடியாத பெருமிதத்தையும் அளிக்கிறது. இந்த வாய்ப்பினை வழங்கிய நல்ல இதயங்களுக்கு நன்றியைச் செலுத்தி விட்டு உரையைத் தொடங்குகிறேன்.

நாம் ஒரு நல்ல நாளைக் கொண்டாடி மகிழ்வதற்காகக் கூடியிருக்கிறோம். இப்படிப்பட்ட இடத்தில், சூழ்நிலையில் கொண்டாட்டமான செய்திகளை மட்டும் பேசிக் களித்துப் பிரிவது இயல்பு. எனினும் நான் ஒரு சீரியசான விஷயத்தை இங்கே துணிச்சலுடன் எடுத்துக் கூற விரும்புகிறேன். அதே சமயம், அளவுக்கு மீறி சீரியசாகப் பேசினால் 'கருத்துக் கந்தசாமி' என்ற அளவுக்கு அளவுக்கு சலிப்பை ஏற்படுத்தும் என்பதையும் உணராமலில்லை.

தமிழ்!! மிகவும் இனிமையான மொழி. மூன்று நாடுகளில் தேசிய மொழி. இந்தியத் துணைக்கண்டத்தில் பேசப்படும் எந்த ஒரு மொழிக்கும் இத்தகைய பெருமை இல்லை. தனது வழிபாட்டு முறைகள், வாழ்ந்த காலம், வசித்த நாடு எதையுமே குறிப்பிடாமல், உலகில் எந்தப் பகுதி மக்களுக்கும், எல்லாக் காலத்திலும் பொருந்தக் கூடிய கோட்பாடுகளைத் திருக்குறளில் சொல்லிச் சென்ற வள்ளுவப் பேராசானைத் தந்த மொழி.

காலப் போக்கில் பிற பொழிக் கலப்பிலும், புணர்விலும் பற்பல சொற்களைத் தன்னகத்தே ஈர்த்துக் கொண்டாலும், தன் தனித்தன்மையையும், இனிமையையும் இழக்காமல் பொலிவோடு திகழும் மொழியாக இருக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்திலே வருவது போல, 'தமிழ்ப்' பெண்ணின் சீரிளமை வியந்து போற்றத் தக்கதாகவே தொடர்ந்து வருகிறது.

மகிழ்ச்சி. இதெல்லாம் நமக்குக் கட்டுக்கடங்காத மகிழ்ச்சியை அளிக்கிறது. சந்தேகமே இல்லை. ஆனாலும், 'தமிழ்' கடந்த காலத்தில் மொழியாக, நிகழ் காலத்தின் பொழுது போக்காக மட்டுமே இருக்கிறதோ என்ற கவலை, தமிழ் மொழியின் மீதும் தமிழ் சமுதாயத்தின் மீதும் அக்கறை கொண்ட சில சிந்தனை வட்டங்களில் நிலவுகிறது.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி என்கிறோம். சங்கம் வளத்த மதுரையில் இன்று ஜாதி வளர்க்கிறோம்.கருத்துப் போர் புரிந்த புலவர்கள் வாழ்ந்த நகரத்தில், பட்டாக் கத்திகள் உலவுகின்றன.

கால் நூற்றாண்டுக்கும் மேலாக நமது ஆட்சியாளர்கள் 'பேசிப் பேசியே' நம்மை முட்டாளாக்கி வைத்திருக்கிறார்கள். வார்த்தை அலங்காரங்களிலும், அடுக்கும் மொழிகளிலும் அகப்பட்டு மகுடியின் ஜால வித்தையைக் கண்ட பாம்பினைப் போல மதி மயங்கிக் கிடக்கிறான் தமிழன்.

ஆட்சியாளர்களையும், அரசு இயந்திரத்தின் மெத்தனத்தையும் மிக 'செளகர்யமாகக்' குறை சொல்லி விட்டு நாமும் வெட்டியாகப் பேசிக் கொண்டு மட்டுமே இருக்கிறோமா என்ற ஐயம் ஆட்கொள்கிறது.

சமுதாயத்தின் ஒழுங்கின்மை தனி மனிதனின் வாழ்வில் பிரதிபலிக்கிறது. ஒரு சமுதாயத்தின் முன்னேற்றமின்மை அச்சமுதாயம் பேசும் மொழியின் முன்னேற்றத்தையும் தடுத்து விடுகிறது. நாம் அதற்கு அப்பட்டமான உதாரணமா என்ற கேள்வியை அப்படியே ஒதுக்கி விட இயலாது.

நம்மில் பலர் தமிழை ரசனைக்குரிய மொழியாக மட்டுமே அறிந்து வைத்திருக்கிறோம். நேற்றைய மொழியாக, செம்மொழியாக நினைத்துப் புளகாங்கிதம் அடைகிறோம். நாளைய மொழியாக, அறிவியல் மொழியாக அதை மாற்றத் தவறி விட்டோம். கதை படிக்க வேண்டுமானால் தமிழை நாடுகிறோம். நெஞ்கம் நெகிழ்ந்து காதலித்துக் கவிதை எழுதும் போது தமிழ் கை கொடுக்கிறது. கோபம் தலைக்கேறி அடுத்தவனின் 'அம்மாக்களின்' ஒழுக்கத்தை 'ங்கோத்தா' போட்டு சந்திக்கு இழுக்கும் வசவு வார்த்தைகளைப் பேசும் போது தமிழ் வீதியிலும் வலம் வருகிறது.

தமிழில் நன்றாக எழுத வேண்டும் என்ற ஆவலுள்ள படைப்பாளிகள் வெறும் 'இலக்கியவாதிகளாக' மட்டுமே அமைந்து விட்டனர். என் நண்பர் ஒருவர், "சிறுகதை எழுதுவதை விட சித்தாள் வேலைக்குப் போகலாம்" என்பார். இப்படித்தான்..நாம் அரசியல் வாதிகளையும், இலக்கியவாதிகளையும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறோம். அதைத் தாண்டிப் போய்ப் பார்த்தால் சமையல் குறிப்புப் புத்தகங்களும், வாஸ்து சாஸ்திர நூல்களும் புத்தகக் கடைகளை அதிகம் நிறைக்கின்றன. நமது சமுதாயத்தில் ஆணுறை கூட இந்த அளவுக்கு விற்குமா என்று தெரியவில்லை.

மருத்துவம், பொருளாதாரம், தொழில்நுட்பம், அறிவியல் தொடர்பான நூல்கள் குறிப்பிடும்படி தமிழில் இல்லை. ஆனால், இந்தத் துறைகளில் ஒளிவீசி ஜொலிக்கும் தமிழர்கள் உலகெங்கும் கணக்கில்லாமல் உள்ளனர். அவர்களது பங்களிப்பும், ஆவணமாக்கலும் பெருமை தருவதாக உள்ளது.

அந்த முயற்சியை, உழைப்பை பத்து விழுக்காடு தமிழை நோக்கிச் செலுத்தியிருந்தால் கூட நம் மொழியின் அறிவுக் களஞ்சியம் தனது நீள, அகல, ஆழங்களை விஸ்தரித்திருக்கும்.

ஆனால், யாரையும் அவர்களது விருப்பதிற்கு மாறாக அல்லது நலனுக்கு எதிராக வற்புறுத்திச் செயல்பட வைக்க முடியாது என்பது இயற்கையின் நியதி. அப்படியே நிர்ப்பந்தித்தாலும், அது நீண்ட நாள் நிலைக்கக் கூடியதாக இருக்காது.

பெரும் முயற்சி எடுத்து அருமையான அறிவியல் படைப்புகளைத் தமிழில் சிலர் தந்திருக்கின்றனர். ஆனால், அந்தப் புத்தகங்கள் கவனிப்பாரன்றி உதாசீனப்படுத்தப்பட்டுக் கிடக்கின்றன. ஒரு குறிப்பிட துறையில் தரமான புத்தகம் எதாவது வாங்க விரும்பினால் நம்மில் அத்தனை பேரும் ஆங்கிப் புத்தகம் இருக்கும் கடைக்குத்தான் செல்வோம். பக்கத்திலே ஒரு நல்ல தமிழ்ப் புத்தகம் இருந்தால் தொடக்கூட மாட்டோம்.

"நல்ல படம் எடுத்தா ஊத்திக்குது. யாரு சார் பாக்கறா?" என்று நொண்டிச் சாக்குச் சொல்லி விட்டு கிளுகிளுப்பான படங்களை எடுப்பதும்.. "பசங்க எல்லாம் சினிமாப் பாத்துக் கெட்டுப் போறாங்க" என்று மற்றவர்கள் சினிமாவின் மீது பழி சுமத்துவதும் நம் சமுதாயத்தில் அடிக்கடி கேள்விப்படும் வாதங்கள். இதே வாதங்கள் தமிழ் நூல்களுக்கும், வாசகனுக்கும், படைப்பாளிகளுக்கும் பொருந்தும். நல்ல நூல்கள் தமிழில் இல்லையென்று குப்பைகளைப் படிப்பதும், குப்பைகளைத் தவிர எதையும் படிப்பதில்லை என்று குறை சொல்லிவிட்டு குப்பைகளையே தொடர்ந்து எழுதுவதும் நிதர்சன உண்மை.

அறிவு ஜீவிகள் தமிழில் தம் கருத்துக்களைப் பகிர்வதில்லை. அப்படியே பகிர்ந்தாலும் வாரப்பத்திரிக்கை அட்டையில் நடிகையின் படத்கையும், சினிமாப் பாடல்களில் இலக்கியத்தையும் கண்டு களிக்கும் ஜனரஞ்சகத் தமிழ் வாசக உலகம் கண்டுகொள்வதில்லை. இந்த இரண்டில் ஏதாவது ஒன்று மாறினால் ஒழிய நிலைமை மாறாது.

இந்தச் சூழ்நிலையை விவரிக்க வேண்டுமானால், நியூட்டனின் முதல் விதி குறிப்பிடுகிற inertia எனப்படும் 'நிலைமம்' என்ற சொல் மிகப் பொருத்தமாக இருக்கும். ஏதாவது ஒரு சக்தி உருவாகி இந்த நிலைமத்தை உடைத்தெறிதல் அவசியம்.

அதற்கு ஏதுவான பொருளாதாரச் சூழல் தேவை என்று நான் உறுதியாக நம்புகிறேன். "உழைப்பின்றி ஊதியமில்லை" என்பதைப் போலவே "ஊதியமின்றி உழப்பில்லை" என்பதும் மாறுபட்ட இன்றைய சூழலில் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு கருத்தாகி விட்டது."

வருமானத்தை நாடித்தான் அமெரிக்கா வந்திருக்கிறோம். இங்கே வாங்கும் சம்பளம் உங்களுக்கு இந்தியாவில் கொத்தனார் வேலை செய்வதற்குக் கிடைத்தால் கூடப் பல பேர் ஊரிலேயே தங்கியிருக்கக் கூடும். எந்தத் துறையில் நல்ல ஊதியம் கிடைக்கிறதோ அந்தத் துறை திறமையான மூளையுள்ளவர்களை ஈர்த்துக் கொள்ளும். தமிழ் எழுத்துத் துறையில் நிலவும் வறட்சியான வருவாய்ச் சூழல் மட்டும் அதற்கு விதி விலக்கா என்ன? தமிழில் எழுதுவது உண்மையிலேயே தமிழ் மீது காதல் கொண்டவர்கள் மட்டுமே செய்யும் ஒரு காரியமாக இருக்கிறது.

"கெட்டும் பட்டிணம் போ" என்பது போல "கெட்டும் தமிழில் எழுது" என நினைக்கிறோம். அப்படிச் செய்தால் "பையனுக்கு இங்கிலீஷ் தெரியாது போல இருக்கு" என்று பேசுவார்கள்.

தமிழில் எழுதப்படுகிற புத்தகம் ஆண்டுக்கு பத்தாயிரம் பிரதிகள் விற்றாலே அது வரலாற்றில் இடம்பெற்று விடுமளவுக்கு அதிசயமான ஒரு செய்தி எனலாம். ஒன்றரைக் கோடி டச்சுக்காரர்களைக் கொண்ட நெதர்லாந்தில் எல்லா வகையான புத்தகங்களும் கிடைக்கின்றன. ஆண்டுக்கு இலட்சக் கணக்கில் விற்பனையாகின்றன. உலகெங்கும் ஏறத்தாழ எட்டு கோடி தமிழர்கள் வசிக்கிறோம். ஆனால், வர்த்தக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்ற விரல் விட்டு எண்ணுமளவு மிக மிகச் சில எழுத்தாளர்களைத் தவிர, தன் எழுத்தின் மூலம் ஐந்திலக்க மாதவருமானம் சம்பாதிக்கும் ஆட்கள் தமிழில் இல்லை. வேறு வேலைக்குப் போகாமல் எழுதுவதை முழுநேரப் பணியாகச் செய்யும் எவனுக்கும் நம் வீட்டுப் பெண்ணைத் திருமணம் செய்து வைக்க மாட்டோம்.

முன்னர் குறிப்பிட்ட அதே நியூட்டனின் 'நிலைமம்' தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும், வாராவாரம் எண்ணற்ற கதைப் புத்தகங்களும், கவிதை நூல்களும் வெளிவருவது குறைந்த பாடில்லை. "தமிழ்நாட்டில் எழுதப்படிக்கத் தெரிந்த பாதிப்பேர் கவிதை எழுதுகிறார்கள். மிச்சமிருப்பதில் பாதிப்பேர் கதை எழுதுகிறார்கள்" என்று பிரபலமான எழுத்தாளர் ஒருவர் குறிப்பிட்டார். அவர் சொன்னதில் இருபது விழுக்காடு ஆணவம் கலந்திருந்தாலும் எண்பது விழுக்காடு உண்மை என்பதை மறுப்பதற்கில்லை.

தமிழ்ப் புத்தகச் சந்தை சமீப காலத்தில் ஒரு சில புதிய சக்திகளின் எழுச்சியைக் காண்கிறது. அவை பழைய செயல்பாட்டு முறைகளைக் கேள்விக்குள்ளாக்கி மாற்றியமைக்கின்றன. மற்ற எல்லாத் துறைகளையும் போல, மாற்றத்தை விரும்பாத சில பழைய சக்திகள் இங்கும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றன. இந்தப் புதிய சக்திகள் எல்லாத் தளங்களிலும் எழுதக்கூடிய படைப்பாளிகளைத் தேடிக் கண்டுபிடித்து நல்ல சன்மானம் அளிக்கின்றன. பெரும் பணத்தை முதலீடு செய்து பரவலாக மார்க்கெட்டிங் செய்து சந்தையைப் பரவாக்குகின்றன.

ஒளி வீசும் மூன்றெழுத்து நடிகனுக்கும், அவ்விட பூமியிலிருந்து வந்த மணம் வீசும் நடிகைக்கும் நடுவேயான கிசுகிசுவைப் படித்து மட்டுமே தன் உலக ஞானத்தைப் பெருக்கி வந்த சாமானிய வாசகனுக்கு, இந்தப் புது வகை நூல்கள் கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கின்றன. புதிய கோணம் மற்றும் புதிய பார்வையை அவை உருவாக்குகின்றன. அதே ரீதியில் 'புதிய' படைப்புகளைத் தொடர்ச்சியாக நாடுகிறான். மீண்டும் புதுமைகளைப் படைக்கும் ஆட்களின் தேவை விரிகிறது. பரவுபட்ட சந்தையின் தேவை எழுத்தாளனின் ஊதியத்தைக் கூட்டுகிறது. அந்த ஊதியம் அதிக நேரம் எடுத்து, தகவல்களைத் தேடிப்பிடித்து, சிரத்தையுடன் உழைத்து தரமான படைப்பினை வழங்கிட உதவுகிறது. நிலைமம் படிப்படியாக உடைபடுகிறது.

தமிழ் மொழி மீதும், தமிழ்ச் சமுதாயத்தின் மீதும் தீராத அக்கறை கொண்டவன் என்ற முறையிலும், புத்தகம் எழுதியவன் என்ற சுய நலத்திலும் இந்த மாற்றங்கள் எனக்கு அளவில்லாத ஆனந்தத்தையும், அசைக்க முடியாத நம்பிக்கையையும் அளிக்கின்றன.

சரி. அதெல்லாம் இருக்கட்டும். இந்த விளையாட்டில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு என்ன பாத்திரம் என்கிறீர்களா? நிறையவே இருக்கிறது, அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு.

உண்மையைச் சொன்னால், புலம் பெயர்ந்த ஈழத்தமிழர் அளவுக்கு நாம் பெரிதாக எதுவும் செய்து விடவில்லை. இலங்கை என்ற ஒரு தேசத்தில் இருந்த தமிழர்களை உலகமெல்லாம் சிதறியோடச் செய்து 'உலகத்' தமிழர்களாக மாற்றிய சிங்கள அரசுக்கு இந்த இடத்திலே நாம் நன்றி சொல்வோம்.

தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் ஒலிக்கும் வகை செய்வோம் என்ற நமது ஆசைக்கு சிங்கள அரசுகள் அரை நூற்றாண்டாகத் தொண்டாற்றி வருகின்றன. கணிணியிலும், இணையத்திலும் தமிழைப் பரப்பியதில் பெரும் பங்களிப்பு ஈழத்தவர்களுக்கு உண்டு. தெற்காசியாவில் வேறெந்த மொழியும் பரவாத அளவுக்கு தமிழ் இணையத்தில் பரவி நிற்கிறது.

உடைமைகளைத் தொலைத்து விட்டு, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடி வந்தவர்களிடம் இருக்கும் அதே அளவு உணர்ச்சி நம்மிடம் இருக்குமென்று எதிர்பார்க்க முடியாது. நம்முடைய தேவைகள் வேறு; அவர்களுடைய தேவைகள் வேறு. நாம் பொருளாதாரத்திற்காக தேசம் கடந்து வந்திருக்கிறோம். ஆனால், அவர்கள் வாழ்க்கையை இழந்து விட்டு அகதிகளாக, ஏதிலியாக மேலை நாடுகளுக்கு ஓடி வந்திருக்கிறார்கள். நம்மைப் பொறுத்த மட்டில், பரந்து பட்ட பாரதக் கண்டத்தில் நம்மை எதிர்நோக்கிய பிரச்சினகள் வேறு பல வடிவங்களில் உள்ளன. அந்தப் பிரச்சினைகளுக்கு நடுவில் 'தமிழன்' என்ற உணர்வும், பொறுப்பும் மந்தமாகிப் போகின்றன. அதில் தவறேதுமில்லை.

ஆயினும், அவ்வப்போது நம்மை நாமே உசுப்பி விட்டுக் கொள்வது அவசியமாகிறது. உலகின் வேறு எந்த நாட்டிலும் கிடைக்காத வசதிகள் அமெரிக்காவில் உங்களுக்குக் கிடைக்கின்றன. புதிய விஷயங்களையும், வாழ்க்கை முறைகளையும், உழைப்பை மிச்சப்படுத்தி உற்பத்தியைப் பெருக்கும் கருவிகளையும் நாளுக்கு நாள் அனுபவிக்கிறீர்கள். நம் மண்ணில் வாழும் சாமானியன் அந்த வசதிகளையும், அவற்றின் அடிப்படை நுணுக்கங்களையும், செயல் முறைகளையும் அறியாதவனாக இருக்கிறான்.

அவற்றைப் பற்றிய அறிவும், புதுமையான கண்ணோட்டமும் அவனைச் சென்றடைய வேண்டும். எனவே, அந்தத் திசையில் உங்கள் பங்களிப்பை எளிய முறையில் செய்ய முயற்சிக்க வேண்டுமென்பது எனது தாழ்மையான விண்ணப்பம். பங்களிப்பு என்றவுடன் உண்டியல் குலுக்கிப் பொருளுதவி கேட்பதாக நினைத்து விட வேண்டாம். உங்களுக்குத் தெரிந்த செய்திகளை, கிடைத்தற்கரிய கருத்துக்களை தமிழில் ஆவணப்படுத்துங்கள். அது போதும்.

காலங்காலமாக நிலவி வந்த கலைகளை நம் முன்னோர் ஆவணப்படுத்தாமல் விட்டதனால் இன்று வேப்பங் கசாயம் காய்ச்சிக் குடித்தால் கூட அதற்கு மேலை நாட்டு நிறுவனத்திடம் பேடண்ட் கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆகவே, ஆவணமாக்கம் மிக முக்கியமான காரியமாக இருக்கிறது.

தமிழைப் பற்றிப் பேசினாலோ, தமிழ் உணர்வு பற்றிப் பேசினாலோ இந்தியாவில் நம்மைப் பிரிவினைவாதியாக நோக்கும் கூட்டம் இன்னமும் மறையவில்லை. தண்ணீர்ப் பிரச்சினையில் இந்திய இறையாண்மைக்கும், அரசியல் சாசனச் சட்டத்திற்கும் அப்பட்டமாகச் சவால் விடும் அண்டை மாநிலங்கள் இந்திய தேசிய ஒருமைப்பாட்டின் மைய இழையை அறுத்துக் கொண்டிருப்பதைப் பற்றி அறிவுக் களத்தில் ஆதாரத்துடன் துணிந்து பேச நமக்கு முடிவதில்லை. காவிரிப் பிரச்சினை தொடர்பாக எழுதப்பட்ட செய்திகள், நம் கண் முன்னாலேயே வரலாறு எந்த அளவுக்குத் திரிக்கப்படுகிறது என உணர்த்துகிறது. தமிழர்கள் மீது 90களில் நடத்தப்பட்ட தாக்குதல் பதிவு முன்னேறிய சிவில் சமுதாயத்தில் நாம் வசிக்கிறோமா என்ற கேள்விவை அடிக்கடி எழுப்புகிறது, கொலம்பஸ் நகரில் தமிழ்ப்படங்களை பயமின்றித் திரையிட்டுக் காண முடிகிறது. ஆனால், இப்போதும் கூட பெங்களூரில் முடிவதில்லை.

ஆகவே நண்பர்களே அறிவுத் தளத்தில் செயலாற்ற முனைவோமாக. அயல் தேசங்களில் வசிக்கும் நீங்கள் குழந்தைகளுக்கு நல்ல தமிழைப் பிழையறப் பேசவும், எழுதவும் கற்றுக் கொடுக்க முயற்சிக்க வேண்டும்.

பயனுள்ள செய்திகளையும், சிந்தனைகளையும் பரிமாறும் ஆர்வமுள்ளவர்கள் ஒன்று சேர்ந்து கொலம்பஸ் நகரில் தமிழ்ச் சிற்றிதழ் மாதிரி ஏதாவது நடத்தலாம். சமூகப் பிரச்சினைகளையும், பண்பாட்டு அறிவியல் தளத்தின் தகவல்களையும் பரிமாற முயற்சிக்கலாம்.

தமிழ், ஆங்கிலம் அல்லது வேறு மொழியில் வரும் நல்ல நூல்களைப் பற்றிய திறனாய்வை எழுதி வெளியிடலாம்.

இணையத்திலும், கணீணித் துறையில் தமிழ் நெடுந்தூரம் பயணித்து விட்டது. தமிழில் மின்னஞ்சல் அனுப்ப முடிகிறது. தமிழில் சாட்டிங் செய்கிறோம். அது குறித்தெல்லாம் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்யலாம்.

இங்கிருக்கும் தமிழர்கள் தாயகத்திலிருந்து தமிழ் நூல்களை வாங்கி வாசிப்பது சாத்தியமில்லை. ஆனால், கொலம்பஸ் தமிழ்ச்சங்கம் போன்ற கட்டுக்கோப்பான ஒரு அமைப்பு அதைச் செய்வது சாத்தியப்படும். இயலுமானால் தரமான சிறிய நூலகத்தை ஏற்படுத்தலாம்.

இப்படியெல்லாம் செய்தால் சிந்தனையின் பரப்பு விரிவடையும். கொலம்பஸ் அல்லது டப்ளின் (Dublin) நகரைச் சுற்றி நல்ல படைப்பாளிகள் உருவாகக் கூடும். அது தமிழ் மொழிக்கும், தாயகத்தில் உள்ள தமிழர்களுக்கும் நீங்கள் ஆற்றும் மகத்தான சேவையாக இருக்கும்.

அடிக்கடி கூடி ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கும், அதன் வாயிலாக செயல்களுக்கு வழி வகுக்கலாம்.

மேலே சொன்ன விஷயங்களில் சிலவற்றை நீங்கள் ஏற்கனவே செய்து கொண்டிருக்கிறீர்களா இல்லையா என்று தெரியவில்லை. ஒரு வேளை செய்து கொண்டிருந்தால், விவரம் தெரியாமல் சுட்டிக் காட்டிய என் செயலைப் பெருந்தன்மையோடு மன்னிக்க வேண்டுகிறேன்.

பணம் சம்பாதிக்க வந்த இடத்தில் ஒரு சமூக அமைப்பாக ஒன்று கூடி ஒருங்கிணைத்து இது போன்ற ஒரு கொண்டாட்டத்கை ஏற்பாடு செய்வதே பெரிய விசயம். சந்தோசமாகக் கூடி, ஆடிப் பாடிக் களித்து விட்டுப் போக நினைத்திருக்கும் இது மாதிரியான நாளில் மிகவும் கனமான எதிர்பார்ப்புகளை முன்வைத்த இந்தப் பேச்சு உடனடி மாற்றங்களை ஏற்படுத்துமென்று நான் எதிர்பார்க்கவில்லை.

ஆனாலும், ஏதேனும் ஒரு மனதிலாவது இந்தப் பேச்சு சிறு பொறியைத் தூவுமானால் பேருவகை அடைவேன்.

வாய்ப்பளித்த நண்பர்களுக்கு நன்றிகள். இந்தப் புத்தாண்டு உங்கள் வாழ்வில் நன்மைகளையும், சவால்களையும், அவற்றைச் சமாளிக்கும் சக்தியையும் அளிக்கட்டும் என்று எல்லாம் வல்ல இயற்கையை வணங்கி உரையை நிறைவு செய்கிறேன்.

Wednesday, May 09, 2007

புத்தக அறிமுகம் 'இழக்காதே'

- செல்லமுத்து குப்புசாமிஇழக்காதே பற்றிய வா.மணிகண்டனின் நூல் திறனாய்வை 'பேசலாம்' வலைத் தளத்தில் காண இங்கே கிளிக் செய்க.

உதயகுமாரின் நூல் அறிமுகம்/விமர்சனம் அவரது சவுண்ட் பார்ட்டி வலைத் தளத்தில்

சென்னை பங்குச் சந்தை இயக்குனர் நாகப்பன் அவர்கள் இந்த நூலின் ஆங்கில வடிவத்திற்கு எழுதிய அணிந்துரை

அப்போது நான் கல்லூரி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தேன். ஜி.டி.நாயுடு ஆரம்பத்த பாரம்பரியம் மிக்க அந்தக் கல்லூரியில் வருடத்திற்கு ஒரு முறை தமிழ் மன்றத் திருவிழா நடப்பது வழக்கம். விழாவுக்கு ஜெயகாந்தன் வந்திருந்தார். பிரபலமான பேச்சாளர்கள் பங்குபெற்ற வழக்காடு மன்றம் நடந்தது. மாணவர்களுக்கான கவியரங்கம் நடந்தது. அமராவதி ஆற்றில் மீன் பிடித்தாடிய அரைக்கால் சட்டை நினைவுகளை அந்தக் கவியரங்கில் வாசித்ததும், அது கோவை வானொலியில் ஒலிபரப்பானதும் இப்போது நினைத்தால் கனவு போலத் தோன்றுகிறது.

ஆண்டு விழாவுக்கு அறிவியல் மலர் ஒன்று தமிழில் வெளியிட்டோம். அதன் தொகுப்பாளராகச் செயலாற்றும் சந்தர்ப்பம் கிட்டியது. அதற்காக ஓரிரு கட்டுரைகளை எழுதிக் கொடுத்ததோடு, 'முன்னுறை' 'முடிவுறை' என்றெல்லாம் வந்து சேர்ந்த (அதை எழுதிய நண்பர் அந்தோணி இப்போது ஏர்ஃபோர்சில் நல்ல பதவியில் உள்ளார்) கட்டுரைகளைத் தமிழ்ப்படுத்தித் திருத்தும் வேலையையும் செய்ய வேண்டியிருந்தது.

அதன் முதல் பிரதியை வாங்கிச் சரிபார்த்த கல்லூரி முதல்வர், "நல்லா வந்துருக்குய்யா. ஆனா தமிழ் எழுத்து ரசனைக்கு வேணும்னா ஒத்து வரும். தொழிலுக்கு ஆகாது. எதோ ஒரு ஆர்வத்துல செஞ்சிருக்கீங்க. பாராட்டறேன்" என்றார்.

அவர் சொன்னது சத்தியமான வார்த்தை. வருடங்கள் உருண்டோடின. பொருளாதாரத்திற்கான போராட்டம் முதலிடம் பெற்றது. திரைப்படப் பாடல்களை முணுமுணுப்பதோடு சரி. எப்போவதாவது, "நான் நலம். நீங்க நலமா?" என்று வீட்டுக்கு எழுதும் கடிதத்தோடு தமிழ் நின்று விட்டிருந்தது, வலைப்பதிவு (blogs) பற்றி வா.மணிகண்டன் சொல்லும் வரை.

பொருளாதாரம் குறித்தும், பங்கு முதலீடு குறித்தும் மின்னஞ்சலில் பரிமாறிக் கொள்ளும் கருத்துக்களை அப்படியே ஆங்கில வலைத்தளத்தில் ஏற்றியதும், அதை வார்த்தைக்கு வார்த்தை மாறாமல் அப்படியே தமிழ்ப்படுத்தி பங்கு வணிகத்தில் (தமிழ் வலைத்தளம்) போட்டதும் ஒரு வேகத்தில் நடந்தது. பல நல்ல நண்பர்களைப் பெறுவதற்கு (அவர்கள் பெயரையெல்லாம் எழுதினாலே ஒரு தனிக் கட்டுரை போடலாம்) இந்தத் தளம் உதவியது.

அவர்களை அஜர்பைஜானில் இருந்து, ஆஸ்திரேலியா வரை ஒவ்வொருவராக நெஞ்சோரம் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். அடிப்படையில் வாசகனான எனது சொந்த வாசிப்பு அனுபவத்தை அகலமாக்கவும் அது வழி வகுத்தது.

(சொந்த ஊருக்காரர் ஒருவர் 2006 ஆம் வருடம் தி.மு.க. பதவியேற்பு விழாவுக்கு சென்னை வந்திருந்தார். அவரோடு துணைக்கு நேரு விளையாட்டு அரங்கம் செல்ல நேர்ந்தது. ஒரு சராசரிக் குடிமகனுக்குரிய அணுகுமுறையோடு, 'கலைஞரும், தளபதியும் அடுத்த கட்டம்' என்ற தலைப்பில் பொருளாதாரம் சாராத ஒரு கட்டுரையை கை அரிப்பின் காரணமாக எழுதி வெளியிட்டதனால் 'கரையோரம்' என்ற பெயரில் இன்னொரு வலைத்தளம் (blog) பிறந்தது. அதற்குப் பிறகு 'அண்ணியின் அணைப்பில்' என ஒரு விவகாரமான கதையைப் (முதல் முயற்சி) பார்த்து விட்டு ஆளாளுக்கு மொத்தி எடுத்து விட்டார்கள். சிறுகதைகள் எழுதுவதற்கு என்னை உற்சாகப்படுத்திய கவிஞர்கள் கார்த்திக் வேலு மற்றும் மனுஷ்யபுத்திரன் ஆகிய இருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்.)

இந்தச் சமயத்தில் பதிப்பாளர் பத்ரியைச் சந்திக்க நேர்ந்தது. இந்தப் புத்தகத்தைக் குறித்து விவாதித்தோம். பங்குக் குறியீடுகளைப் போலவும், வணிகச் செய்தித்தாளைப் போலவும் அடுத்த நாள் காலையே பழசாகிப் போய் குப்பையாகாமல் எப்போது படித்தாலும் சரியென்று உணர வைக்கும் கோட்பாடுகளை எளிமையாக விவரிக்கும் வகையில் இந்த நூல் அமைய வேண்டும் என்று முடிவு செய்தோம். அதே போல வந்திருக்கிறது என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி.

"பழக்கம்னு ஒன்னு இருந்தா அதை மாத்தக் கூடாது" என்று கவுண்டமணி ஒரு படத்தில் கூறுவார். அதே போல புத்தகம் எழுதினால் யாருக்காவது அர்ப்பணிக்க வேண்டும் என்பது 'நல்ல' ஒரு பழக்கம்.

* என் ஆரம்ப நாட்களில் வாசிக்கும் பழக்கத்தை என்னுள் விரியச் செய்த நண்பர்கள் ஜெரால்டு மற்றும் ஜான் ஆகிய இருவருக்கும்
*நண்பனாக நான் கருதினாலும் பிசினஸ் என்று வரும் போது தன் 'தொழில்' திறமையை என்னிடம் காட்டியதோடு, சுயமாகவே அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற வெறியை ஏற்றி அது குன்றாமல் இருக்க உதவிய என் 'இனிய' பங்குத் தரகருக்கும்
*கல்யாணம் ஆவதைத் தாமதப்படுத்தி இந்தப் புத்தகம் எழுதுவதற்கு நேரம் ஒதுக்கிக் கொடுத்த செவ்வாய் தோசத்திற்கும், அப்படியே ஒன்றிரண்டு பொருந்தி வந்தாலும் வேண்டாமென்று ஒதுக்கிய பெண்களுக்கும், அவர்தம் தகப்பனார்களுக்கும் (இங்கே சிரிக்கவும்)
*பணத்தின் மதிப்பு என்னவென்றே தெரியாமல் வெட்டிச் செலவு செய்வதும், அதை விட அதிகமாகப் பங்குச் சந்தையில் சூதாடுவதும் பிழைப்பாக வைத்திருக்கும் எண்ணற்ற சாஃப்ட்வேர் கண்மணிகளுக்கும்"
);
*பங்கு முதலீட்டின் அரிய பெரிய கோட்பாடுகளையும், தத்துவங்களையும் எளிமையாக எடுத்துச் சொல்லி விட்டுச் சென்ற பல அறிஞர் பெருமக்களுக்கும்
'இழக்காதே' அர்ப்பணம்.

அருமையான அட்டைப் படத்தை வடிவமைத்த கிழக்குப் பதிப்பகத்தாருக்கும், எடிட்டர் குமாருக்கும், பதிப்பாளர் பத்ரிக்கும் நன்றிகள்.

பெரும்பாலும் பாதுகாப்பான வாசகங்களையே பேசவும், எழுதவும் விரும்பும் நான் இப்போது ஒன்றைத் துணிந்து சொல்ல ஆசைப்படுகிறேன். நீங்கள் பங்குத்தரகராக மட்டும் இல்லாமலிருந்தால் நிச்சயமாக இந்தப் புத்தகத்தை விரும்பிப் பாராட்டுவீர்கள் என்று ஆணித்தரமாக நம்புகிறேன்.
This book is worth the money.

கல்லூரி முதல்வர் சாம்பசிவம் இதைப் பார்த்தால் 'தமிழ்' தொழிலுக்கு உதவும் என்று ஏற்றுக் கொள்வார்.

Sunday, April 22, 2007

அழகே உன்னை ஆராதிக்கிறேன்

- செல்லமுத்து குப்புசாமி

'அழகு' பதிவு போடுமாறு விடுத்திருந்த அழைப்பை நான் காணாமல் விட்டது பெரிய தவறு என்றார் உதயகுமார். அசின் படத்தோடு முடிந்ததென நினைக்குமாறு பிரசுரித்தது அவர் தவறுதான்:-)

அழகு!! இந்த ஒரு வார்த்தையில் எத்தனையோ அர்த்தங்களைப் பொதித்து விட முடிகிறது. எத்தனையோ விஷயங்களை அர்த்தமற்றதாகவும் ஆக்குகிற சக்தி இந்த ஒரு வார்த்தைக்கு உண்டு.

எப்போதும் குளிக்கும் மனிதனை விட, பொங்கலுக்குக் கழுவிய மாடு அழகு.

வெள்ளமாகவும், மணலாகவும், அது தொலைந்து பாறையாகவும் மாறி இன்னமும் இனிக்கும் அமராவதி அழகு.

இன்று யாருக்கோ கணவனாகிப் போன, 'தாவணி நல்லா இருக்கா?' என்று பார்வையிலே கேட்ட பள்ளிக்காலத் தோழியின் நினைப்பு அழகு.

அப்பப்போ சச்சின் டெண்டுல்கரும், ரோஜர் ஃபெடரரும் அழகு. எப்பவுமே ஸ்டெப்பி ஃகிராப் அழகு.

முதல் வருடம் ரக்ஷா பந்தன் கயிறு கட்டி, அடுத்த வருடம் நண்பர் தின அட்டை கொடுத்து, மூன்றாம் வருடம் காதலர் தின முத்தம் தந்து, இறுதியாண்டு கல்யாணம் செய்து கொண்ட அந்த ஜோடி அழகு.

பெண் கண்ணைப் பார்த்துப் பேசுகிற ஆண்மை அழகு. பேசும் துணிவை ஆண்மைக்கு அருளும் பெண்மை அதனினும் அழகு.

ஆண் சொன்னால் தோற்று, பெண் சொன்னால் மட்டும் ஜெயிக்கும் காதலும் அழகு.

காதலினும் இனிய தமிழும் அழகு.
 • பொங்கலுக்கு வாங்கிய புத்தாடை..
 • கழுத்து வியர்வையில் ஈரமாகிப்போன மல்லிகை..
 • நெற்றியில் வைத்த குட்டிச் சந்தனம்..
 • கலைந்து போய் காதுக்கு வெளியே தொங்கும் ஒற்றை முடி...
 • 'பொட்டா? மச்சமா?' என்று இனங்காண முடியாமல் புருவங்களுக்கு மத்தியில் கர்வத்தோடு கரும்புள்ளி..
 • அதிகாலைப் பூ, பிறந்த குழந்தை போல தொட்டுப் பார்க்காமலே ரசிக்கத் தகுந்ததும், தொடாமல் தவிர்க்க இயலாததுமான உதடு..
 • உலகத்தையே மறக்கடிக்கவும், மறந்த உலகத்தை வென்றெடுக்கவும் உந்தித் தள்ளும் அந்தச் சிரிப்பு...
 • படபடக்கும் பேச்சு..
 • 'ரொம்பப் பேசறனா?' கேள்வி..
 • பேசினாலும் தீராத ஆசைகள்..
 • பேசவே இயலாத தேவைகள்..
 • 'வாய் பேசிய பிறகுதான் நானா?' என்று முந்தியடித்துக் கதை சொல்லும் கண்கள்..
 • ஏதோ புண்ணியம் செய்த அந்த ஒற்றைச் சங்கிலி..
 • உன்னை மூடியதால் அழகு பெற்ற அந்த வெள்ளைத் துப்பட்டா...
 • 'உன் முகம் மறைத்ததால்தானே!' என்பதால், பாதி தெரிந்தாலும் கூட அழகாகிப் போன உன் அம்மா..
எச்சரிக்கை!! எவனையும் கவிஞனாக்கி விடும், அழகு!!

Sunday, April 08, 2007

கண்டியில் ஒரு..ஒரு..ஒரு..காதல்??

- செல்லமுத்து குப்புசாமி

அவன் பார்வை அந்த எறும்பின் அறியாமை கலந்த முயற்சியில் நிலை குத்தியிருந்தது. பதிமூன்று நிமிடமாக கண்ணாடிச் சுவரில் ஏறுவதும், சறுக்குவதுமாக அதன் போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. அக்காட்சி சற்று நேரத்தில் அவனுக்குச் சலிப்பை ஏற்படுத்தியது. தலையைச் சுற்றாமல் கண்ணை மட்டும் நீளமாக ஃபோகஸ் செய்து ஜன்னலுக்கு அப்பால் பார்வையைச் செலுத்தினான்.

கட்டுமானப் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருந்தன. வாணம் தோண்டியவாறும், அதில் அஸ்திவாரம் இட்டவாறும், சில இடங்களில் கம்பிகள் நடப்பட்டவாறும் தென்பட்டது. அரை மணி நேரத்திற்கு ஒரு தடவை தோற்றம் மாறிக் கொண்டே இருந்தது. அலாவுதீன் தேய்த்த விளக்கிலிருந்து கிளம்பிய பூதம் ஏதோ மாயாஜாலம் செய்வதைப் போல கட்டிடம் கண்ணுக்கு முன்னார் வளர்ந்தது. இயந்திரங்கள் துரித கதியில் இயங்கின. பணியாட்கள் இயந்திரத்தின் வேகத்தோடு சளைக்காமல் போட்டி போட்டனர்.

அந்த இடத்தில் ஒரு புதிய ஆலை நிர்மாணமாகி வருகிறது. அதற்குப் பொறுப்பாளனாக அவனை நிர்வாகம் தேர்ந்தெடுத்து அனுப்பியிருந்தது. தமிழக-கர்நாடக எல்லையில் ஓசூருக்கு அருகே அவனது பிரதானத் தொழிற்சாலை இருந்தது. இட நெருக்கடி, அதிகப்படியான கூலி முதலிய காரணங்களுக்காக சிங்கப்பூரில் இருந்து வந்த முதன்மை நிர்வாகி இந்தியாவுக்கு வெளியே எங்காவது ஃபேக்டரி கட்டச்சொல்லி உத்தரவிட்டார்.

நீண்ட விவாதங்களின் முடிவில் இலங்கையைத் தேர்ந்தெடுத்தார்கள். ஓசூரில் ஒரு ஆளுக்குக் கொடுக்கும் ஊதியத்தை வைத்து இலங்கையில் ஐந்து பேருக்குக் கூலி கொடுத்து விடலாம் என்று அவர்கள் அமர்த்தியிருந்த ஆலோசக நிறுவனம் அறிக்கை சமர்ப்பித்தது. இலங்கையில் எந்த ஊர் என்ற கேள்வி எழுந்த போது, அவன் முன் வைத்த கண்டியை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அவனையே அதற்குப் பொறுப்பாளனாகவும் அனுப்பினர். தொழில் தொடங்க எதோ நிறுவனம் வருவது தெரிந்தவிடனேயே சிங்கள அரசு இரு கரங்களையும் விரித்து வரவேற்று அனுமதி கொடுத்தது.

கண்டி என்றவுடன் அவனுக்கு முன்பெல்லாம் எம்.ஜி.ஆர். பிறந்த ஊர் என்ற எண்ணம் மட்டுமே மனதில் விரிந்து நிற்கும். சமீப காலமாக அந்த எண்ணம் சற்று விரிவு பட்டிருந்தது. முத்தையா முரளிதரனும், அவரது அழகான சென்னை மனைவியும் அதில் முக்கிய இடம் பெற்றிருந்தனர். அவனது பள்ளிப்பிராயத்தில் திண்டுக்கல்லில் இருந்து சில இளைஞர்கள் கண்டிக்குப் பணியாற்றச் செல்வதாகப் பேசிக் கொண்டதை நினைவுபடுத்திக் கொள்வான். வேறு பெரிதாக அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.

தமிழ் சினிமாவில் வேலைக்காரியின் பெயர் முனியம்மாவாக இருப்பது எந்த அளவுக்கு மாற்றமற்றதோ அதே போல கண்டியிலே அவனுக்கு அறிமுகமான பெண்ணுக்கு யாமினி என்ற பெயர் இருந்தது. தனது வேலையைச் சரியாகப் பங்கு போட்டு பணிகளைத் துரிதமாகவும், குறைந்த செலவிலும் முடித்துக் கொடுப்பதில் அவளது உள்ளூர் ஞானம் உதவுமென்று அவன் உறுதியாக நம்பினான். யாமினியைச் சிங்களத்தி என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தான். ஆனால், அவள் தமிழச்சி என்பது போகப் போகப் புரிந்தது. ஆரம்பத்தில் அலுவல் நிமித்தமான விசயங்களை ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டார்கள்.

பிரிதொரு நாள் பணியாளர்கள் எல்லாம் வீடு சென்றதும் கடைசியாக யாமினி மட்டுமே மிச்சமிருந்தாள். மங்கலான ஒளியில் மலையாளப் படம் பார்க்கும் கற்பனையைத் தோற்றுவிக்கும் இந்தச் சம்பவம் சர்வசாதாரணமான ஒரு நிகழ்ச்சியாகவே நடந்தது. எனினுன், அவர்களுக்கு இடையே எழுந்து நின்ற ராட்சதப் பனிக்கட்டி அப்போது உருக ஆரம்பித்ததை இருவருமே அறியவில்லை. அவன் அவளைத் தன்னோடு அழைத்துச் சென்று வீட்டில் விடுவதற்கு முன் வந்தான். அப்போது அவர்கள் ஆங்கிலத்தை உதிர்த்து விட்டு பரஸ்பர அறிமுகத்தை அடுத்த நிலைக்குத் தமிழில் நகர்த்தினார்கள்.

கண்டி அவளுக்குச் சொந்த ஊரல்ல. கிழக்கே மட்டக்களப்புக்கு அருகில் ஒரு அழகிய கிராமம். அவள் தந்தைக்கு அங்கே பெரும் விளைநிலங்கள் இருந்தன. நுங்கு சீவி தின்ற பனங்காயில் வண்டி செய்து, கிழியாத பாவாடையும், துடைக்காத மூக்குமாக ஓட்டித்திரிந்து கொண்டிருப்பாள் அவள். அதை விடச் சிறுமையான விளையாட்டுத்தனத்தோடு அவர்கள் தோட்டத்தின் பயிர்கள் மீது ஸ்றீலங்கா ஆர்மிக்காரர்கள் ராணுவ வண்டிகளை ஓட்டி விளையாடுவார்கள்.

அந்த ஊரில் வசதியானவர்கள் சிலர் விசா எடுத்து ஐரோப்பாவுக்கும், கனடாவுக்கும் கெளரவமான அகதிகளாகப் போனார்கள். நாதியற்றவர்கள் இருக்கிற நகை நட்டுகளை விற்று, அந்தப் பணத்தைத் தோணிக்காரனுக்குக் கொடுத்து இந்தியாவிற்குத் திருட்டுத் தோணியேறினார்கள். வேறு சிலர் அங்கேயே இருந்து சமாளித்துப் பார்ப்பதென்ற முடிவோடு இருந்தனர். அதில் யாமினின் தந்தையும் ஒருவர்.

அவர்களுக்குப் பரம்பரைச் செல்வம் நிறைய இருந்தது. அதில் நிறையவே சூரையாடப்பட்டன. போராட்டக்காரர்களுக்கு உதவுவதாகச் சொல்லி அரசாங்கம் பாதியைக் கைப்பற்றியது. தமிழ் சினிமாப் போலீசைப் போல ஒரு சில ஆர்மிக்காரர்கள் மட்டுமே நல்லவர்களாக இருந்தனர். நள்ளிரவுச் சோதனைகளில் ஆண்களின் உயிரும், பெண்களின் உடலும் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டன. பொன்னகையெல்லாம் மறந்த சமுதாயத்தில் சாமானியர்கள் கூட சயனைடு குப்பிகளைக் கழுத்தில் அலங்கரித்தனர்.

உள்ளூரில் சித்தரவதை அனுபவிப்பதை விட கொழும்புக்குச் சென்று வியாபாரம் செய்யலாமென்று நிலபுலன்களை எல்லாம் அப்படியே துறந்து விட்டு நகை, பணத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு போனார்கள் யாமினி குடும்பத்தினர். அது எண்பதுகளில் இறுதிக்காலம். அமைதிப்படை இன்னமும் வந்திடாத காலம்.

கொழும்பிலே அவள் வளர்ந்தாள். முளை விட்ட நாற்றாக வந்தவள் அங்கே பயிரானாள். பதின்ம வயதுகளின் மதப்பும் வளர்ந்தது. திலீபனால் காதலிக்கப்பட்டாள். மிச்சமிருக்கும் நேரத்தில் படித்தாள். கொழும்பிலேயே கல்லூரியும் முடித்தாள். நிர்வாக மேலாண்மையில் பட்டம் பெற்றாள். அதன் பிறகு வேலைக்குச் சேர்ந்தாள்; ஆனால் அதற்குள் திலீபனைக் கைபிடித்தாள். அழகான பெண் குழந்தை பிறந்தது. அவர்கள் கொண்டிருந்த ஆசையை வாழ்ந்து தீர்க்க ஒரு ஆயுள் போதாதென்று எல்லோரும் பேசினார்கள். ஆனால், திலீபனோடு குழந்தையும் சேர்ந்து அற்ப ஆயுளில் போய்ச் சேர்ந்தது. உபயம் ஒரு கலவரம்.

அவள் கண்டிக்கு வர அது காரணமாயிற்று. மாற்றத்தை நாடி வந்தாள். முப்பதுகளின் முதற்பாதியை எந்த நேரத்திலும் அவள் கடந்து விடும் நிலையில் இருந்தாள். முகத்தில் தெரியும் முதிர்ச்சி உடம்பில் யாமினிக்குத் தெரியாது. அவ்வளவு வடிவானவள். பழசையெல்லாம் மறந்து ஒரு சுற்றுலா வளர்ச்சி தொடர்பான தன்னார்வ நிறுவனத்தில் மிதமான சம்பளத்தில் காலந்தள்ளினாள். அந்தத் தருணத்தில் வெளிநாட்டுக் கம்பெனி கண்டியில் புதிதாகத் தொடங்கவிருக்கும் ஆலையின் இணை நிர்வாகப் பணிக்குத் திறமையான ஆள் தேவையென்று யாரோ சொல்ல, விருப்பமில்லாமல் விண்ணப்பித்துத் தேர்வானாள்.

அவள் கதை துயரம் நிறைந்த யுத்த காண்டமாக இருக்க, அவன் கதையோ மழை பெய்த மறுநாள் கிளுவ மர இலையைத் தின்று பறக்கும் பொன்வண்டின் ஒய்யாரமான பின்னணியை உடையது. மயிலிறகைத் தலையிலும், வண்ணத்துப் பூச்சி சேகரித்த மகரந்தத்தை முகத்திலும் பூசியது போன்ற குதூகலம் எப்போதும் அவனைச் சுற்றியிருக்கும். உழைப்பும், ஊதியம், உல்லாசம் என்பது அவன் வாழ்க்கைச் சித்தாந்தமாக இருந்தது. அவன் வாழ்க்கையில் நேர்த்தி வெளிப்பட்டது; நேர்மையும் இருந்தது.

யாமினும், அவனும் .. இதோ காரில் சென்று கொண்டிருக்கிறார்கள். அவனுக்கு அருகாமையில் பல பெண் தோழியர் இருந்திருக்கின்றனர். தற்போது கணவன்மாரோடு வசிக்கும் இரண்டு பெண்கள் அவனது கடந்த காலத்தைக் காதலியாக அலங்கரித்திருந்தனர். மூச்சுக் காற்றுப் படும் தூரத்தில் ஸ்பர்சங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால், இப்போது ஏற்படும் உணர்ச்சியோடு அவற்றை ஒப்பிட முடியாததாகப்பட்டது. அவள் மீது அவனுக்கு கவர்ச்சி என்பதை விட ஏதோ ஒரு வித மரியாதையை உணர்ந்தான். எனினுன், பெண் என்பதால் இயல்பாகத் தோன்றும் ஈர்ப்பை அவனால் மறைக்க முடியவில்லை.

அவளது வரலாற்றைத் தவணை முறையில் தெரிந்து கொண்டான். பரிதாபம் காட்டினான். தனக்கு அனுதாபம் தேவையில்லை என்றாள் அவள். ஆனால், அவள் மனது அதற்காக ஏங்கி நின்றது. தான் அனுதாபம் காட்டுவது அவளை அடைவதற்கான உத்தியாக இருக்குமோ என்று விடை கூற முடியாத கேள்வியை அவளிடமே கேட்டான். அவள் குழம்பினாள். ஆயினும் பிடித்திருந்தது.

இனப்போராட்டம், பயங்கரவாதம், விடுதலை, வருணபேதம், பெளத்தம், இந்துத்துவா, மத மாற்றம், காதல், காமம், ஆண்டான் அடிமைத்தனம் என எது பற்றியும் அவர்களுக்கு கருத்துக்கள் நிலவின. சில சமயம் அவை உடன்பட்டன. பல சந்தர்ப்பங்களில் முரண்பட்டன. ஆண் பெண் உறவின் உச்சம் தொடுதலும், உணர்வைப் பகிர்தலும், சிலிர்ப்பூட்டும் சீண்டலும் என்பது அவள் வாதம். அதன் நீட்சியாக, நினைவுச் சின்னமாக மட்டுமே கூடுதல் இருக்க முடியும் என்று தீர்மானமாக இருந்தாள். அவனைப் பொறுத்தமட்டில் எல்லாவற்றுக்கும் அடிநாதமாக காமத்தைக் கருதினான். அதை அடைவதற்கான உத்தியாக காதல் அவனுக்குத் தோன்றியது. காதலிக்கக் கற்றவர்கள் காதலை விலையாகக் கொடுக்கிறார்கள்; கல்லாதோரு உடல் பலத்தால் கட்டாயமாக அல்லது பணத்திற்குச் சரக்கு வாங்குவது போல அடைகிறார்கள் என்று சொல்லித் திரிவான்.

அவர்களுக்கு இடையேயான உறவை வரையறுப்பதற்கான இலக்கணம் அடிக்கடி மாறிக்கொண்டே இருந்தது. நட்பு, காதல், கவர்ச்சி, உடன் வேலை செய்பவன் என்று மாறி மாறிக் கூறிக் கொண்டார்கள். அதில் யார் ஆணித்தரமாகப் பேசுகிறார்களோ அந்த நபருக்கும் மற்றவர் விட்டுக் கொடுப்பதும், உறவை ஏதாவது பெயரில் உறுதி செய்து தக்க வைப்பதும் வழக்கமாக இருந்தது.

ஒரு நாள் அவனுக்குக் காய்ச்சல் வந்தது. வஞ்சனையின்றி ஒரு வாரம் தங்கியது. அவன் படுக்கையோடு தங்கினான். யாமினி பணிவிடைகள் செய்தாள். மருந்து வாங்கிக் கொடுத்தாள். பத்தியப் பானங்கள் காய்ச்சினாள். கழுத்தைத் தொட்டு சூடு பார்த்தாள். தலை முடியைக் கோதிக் கொடுத்தாள். நெற்றியில் முத்தமிட்டாள். மென்மையாக அணைத்து 'கட்டிப் புடி' வைத்தியம் செய்தாள்.

உடலும், மூளையும் ஓய்ந்து கிடந்தவன் புத்தி தாறுமாறாக வேலை செய்தது. அவளது நீள அகலங்களை அளந்தான். ஆடைகளை கற்பனையில் கழட்டிப் பார்த்தான். சாத்தான் அவனுக்குள் குதியாட்டம் போட்டது. அவள் கண்களையே நோக்கினான்.

அவளோ சிரிப்புப் பூத்தாள்.

"என்னடா? நித்திரை கொள்ளலியா? அப்படிப் பாக்கிறாய்?"

அவனிடம் பதிலில்லை.

"என்ன..அம்மாவை நெனச்சுக் கொண்டாயோ?"

அல்சர் வந்த வயிற்றில் ஆவின் பால் வார்த்தது போல அவன் விகார எண்ணமெல்லாம் தணிவதை உணர்ந்தான். தலையிலிருந்த மயிலிறகைக் காணவில்லை. முகத்தின் மகரந்தம் உதிர்ந்து விட்டிருந்தது.

Friday, March 30, 2007

மாடர்ன் மகாலச்சுமி

- குப்புசாமி செல்லமுத்து

என்னை நீங்க சுத்த (சுத்தாம இருக்கணும்னா வேண்டாம்) தமிழ்ல கூப்பிட்டா மதிவதனின்னு கூப்பிடலாம். எங்க அப்பா, அம்மா அதே பேரத்தான் வெச்சாங்க, சந்திரமுகின்னு. சந்திரன் எப்பவுமே வெள்ளையாத்தான் இருக்கணும்னு சட்டம் ஒன்னும் இல்லையே. அதே மாதிரி எப்பவும் இருட்டா இருக்கணும்ங்கற சட்டமும் இல்லை. நெலாவோட மூஞ்சி இப்படி அடிக்கடி மாறிக்கிட்டே இருக்கும். ஆனா, எம்மூஞ்சி அப்படியெல்லாம் கெடையாது. எப்பவும் ஒரே மாதிரித்தான் இருக்கும். முக்காவாசி கறுப்பு, சோப்புப் போட்டுக் கழுவினா மட்டும் கொஞ்சம் ஜொலிப்புன்னு சொல்லலாம். ஆனா, எனக்குத் தெரிஞ்சு இது வரைக்கும் நான் உட்பட யாருமே வெளுப்புனு ஒத்துக்கிட்டது கெடையாது.

எங்கப்பா திருப்பூர்ல பெரிய பிசினஸ்மேன். ஆனா, பெருசா வெளியில யாருக்கும் தெரியாது. பெரிய பெரிய பனியன் கம்பெனிகல்லாம் இருக்குல்லீங்களா, அவங்களுக்கு சில சமயம் ஆர்டர் கண்ணாபின்னான்னு வந்து சேந்துரும். அப்போ அவுங்களால சொன்ன நேரத்துக்கு வேலையச் செஞ்சு கொடுக்க முடியாது. அதனால, வெளில எதாவது சின்னக் கம்பெனிக்கு சப்-காண்ட்ராக்ட் குடுப்பாங்க. அந்த மாதிரி சப்-காண்ட்ராக்ட் எடுத்துச் செய்யறதுல எங்கப்பா கெட்டிக்காரரு. செல சமயம் பாத்தீங்கன்னா, பெரிய கம்பெனிக செய்யறத விட அதிக வேல எங்க பட்டறைலதான் நடக்கும். பெட்ரோல் வெலை 25 ரூபாய்க்கு இருந்த காலத்துலயே ஒரு வாரத்துக்கு லச்சக்கணக்குல லாபம் சம்பாரிப்பாரு எங்கப்பா. அதனால், என்னையச் சின்ன வயசுல இருந்தே கஷ்டம்னா என்னன்னே தெரியாம வளத்தீட்டாங்க.

இப்பக்கூட எனக்கு பணத்தோட மதிப்பே தெரியாது. நெனைச்ச வெளியே போவேன். செல்போனுக்கு நான் காலிங்-கார்டு வாங்கிப் போடற காசு நாட்டுல பாதிப் பேரு குடும்பச் செலவை எல்லாம் தாட்டி சேத்து வெக்கற அளவுக்கு இருக்கும்னா பாத்துக்குங்க. ஆனா, நான் ஒன்னும் ஊதாரி இல்லைங்க. பணக்காரத் திமிரு இருந்ததே இல்லை. இப்பவும் இல்லை. எனக்கு எது சரின்னு படுதோ அதெச் செய்வன்னு வெச்சுக்குங்களேன். ஆனா ஒன்னுங்க. என்னோட மனசாற யாருக்கும் தீங்கு நெனச்சதில்லை. அதே மாதிரி மனசால கஷ்டப்படுத்தினதும் இல்லை.

நான் வந்து ரொம்ப நல்ல பொண்ணு, எல்லாரு கிட்டேயும் நல்ல பழகுறேன் அப்படீங்கறதால காலேஜ்ல படிச்ச காலத்துல இருந்தே எனக்கு நெறைய பிரண்ட்ஸ் இருந்தாங்க. இப்பவும் ஆஃபீஸ்ல கூட வேல செய்யறவங்க நெறைய இருக்காங்க. ஆனா, என்னமோ தெரியல யாருமே இது வரைக்கும் என்னெப் பாத்து புடிச்சிருக்குன்னு சொன்னதில்லை. உங்கண்ணையே பாத்திட்டு இருக்கணும்னு யாராவது சொல்லக் கேக்கற அந்த சுகந்தமான அனுபவமே கெடைக்காமப் போயிருச்சு.

வேலைக்குச் சேந்த புதுசுல என்னச் சுத்தி எப்பவும் நாலஞ்சு பொண்ணுக இருப்பாங்க. கூத்து, கும்மாளம், கிண்டல்னு நேரம் போறதே தெரியாது. வீக்என்டுல நெறைய சுத்துவோம். அடிக்கடி கலவரம் வந்து, ஆடிக்கொன்னு அம்மாவாசைக்கொன்னுனு இந்த பெங்களூர்ல போடற தமிழ்ப்படம் ஒன்னு வுடாமப் பாத்துருவோம். வாரவாரம் டிரஸ் வாங்குவோம். பெங்களூர் வந்ததுக்கப்பறந்தான் ஜீன்ஸ் பேண்டல்லாம் போட்டுப் பழகினேன்னா பாத்துக்குங்களேன். அப்பத்தான் ஒரு பெரிய காமெடி நடந்துச்சு. என்னங்கறீங்களா? இந்த பெங்களூர் மாநகரத்துலயே ஜீன்ஸ் போட்டு கனகாம்பரப் பூ வெச்ச முதல் ஆளுங்கற பெருமையை வரலாறு எனக்குக் குடுத்துச்சு.

அப்படி ஒரு ரண்டு வருசம் ஜாலியா ஓடுச்சு. ஆபீஸ்ல கடுமையா ஒழைச்சோம். அப்பப்ப சம்பளம் கூட்டுனாங்க. பல பேரு கம்பெனி மாறுனாங்க. சில பேரு அப்படியே இருந்து புரமோஷன் வாங்கினாங்க. எங்கூட இருந்த புள்ளைகளுக்கு எல்லாம் வரிசையா கல்யாணம் ஆக ஆரம்பிச்சுது. அஞ்சு பேரு இருந்த வீட்டுல இப்ப நான் மட்டும் தனியா இருக்கற மாதிரி ஆகிருச்சு. போன வருசம் வாங்கின ஜீன்ஸ் பேண்டெல்லாம் இப்போ சுருங்கிப் போச்சு. ஆமா..அப்படித்தான் சொல்லணும். நான் பெருத்துட்டேன்னு சொல்லக் கூடாதுல்ல. திடீர்னு ஒரு நாள் பாத்தா வயசு கால் நூற்றாண்டு ஆகிருச்சு. ஆஃபீஸ் போக வேண்டியது, வர வேண்டியது, சமைக்க வேண்டியது, சாப்பிட வேண்டியதுன்னு வாழ்க்கை ஒரே மெஷின் மாதிரி மாறிடுச்ச்சு.

இப்படிப்பட்ட சமயத்தில அப்பா அம்மா மாப்பிளை தேட ஆரம்பிச்சாங்க. நம்ம ஊர்லதான் 'உன் வாழ்க்கை உன் கையில்' ன்னு ஆட்டோவுல எழுதி வெச்சுட்டு ஜோசியக்காரன் கையில வாழ்க்கையைக் கொடுக்கறமே! இதில என்ன கொடுமைன்னா, நம்ம வாழ்க்கையோட போகாம நம்ம சந்ததிகளோட வாழ்க்கையுஞ்சேத்து அவுங்க அனுமதி இல்லாமயே ஜோசியக்காரங்க கையில ஒப்படைக்கிறோம். என்னதாம் படிச்சாலும், கம்ப்யூட்டருல வேல செஞ்சாலும் அந்தக் கம்ப்யூட்டரிலேயே ஜாதகம் பாக்கற ஊரு நம்ம ஊரு. அதனால என்னோட ஜாதகமும் ஜோதில, வெள்ளத்துல, சாக்கடைல அப்படீன்னு எப்படி வேணாலும் வெச்சுக்கக் கூடிய ஒரு எழுவுல போய்ச் சங்கமமாச்சு.

நெறையத் தேடினாங்க. நானும் ஒரு நாளைக்கு ரண்டு மணி நேரமாவது இன்டெர்நெட்டுல போய்த் தேடுவேன். முப்பது மாசமாச்சு. தேடிக்கிட்டே இருக்கறோம். ஜாதகம், குடும்பம், வேலை பாக்குற மாப்பிள்ளைன்னு எல்லாஞ் சேந்து வந்தது சிலது மட்டுந்தான். அப்படியே வந்தாலும் அவுங்களுக்குப் புடிக்கற மாதிரி நான் இல்லாமப் போயிட்டேன். என்ன பண்ணச் சொல்றீங்க? பொட்டப் புள்ளையப் படிக்க வெக்கவே கூடாதுன்னு அம்மா பொலம்பறாங்க. படிக்க வெச்சா அதுக்கு ஏத்த மாப்பிள்ளை கெடக்கறதில்லைன்னு கவலை அவுங்களுக்கு. எனக்கென்னவோ பாதிக் காலம் தாட்டியாச்சு, மிச்சத்தையையும் அப்படி இப்படீன்னு ஓட்டிடலாம்ங்கற நெலமைக்கு வந்துட்டேன். இத அம்மாகிட்ட வேற சொல்லி, அவங்களயும் பொலம்ப வெச்சாச்சு.

ஒரு நாள் இப்படித்தாம்பாருங்க ஒரு நாள் காலைல அம்மா போன் பண்ணுனாங்க. ஏதோ பொருந்தி வந்திருக்காம். நாளைக்கே கெளம்பி ஊருக்குப் போகணுமாம். வேற வழி தெரியாததால இல்லாத பாட்டியைச் சாகடிச்சு லீவ் வாங்கிட்டு நான் பொறப்பட்டேன். வழக்கம் போல வீட்டுலெ வெச்சுப் பாக்காம இந்தத் தடவை கோயிலுக்கு வரச் சொல்லிட்டாரு அப்பா. பையனுக்கு பேரு என்னமோ 'சரத்'துன்னு சொன்னாங்க. விஜய் மாதிரி மூனு நாள் சவரம் பண்ணாத மீசையோட இருந்தாங்க. ஆம்பளைங்கற தெனாவெட்டு பாக்கறதுலயே தெரிஞ்சுது. பெரியவங்க எல்லாஞ்சேந்து ரண்டு பேரையும் தனியாப் பேசச்சொன்னாங்க.

சாமி கும்பிட்டுப்போட்டு ஒரு எடத்துல உக்காந்து தேங்கா பழமெல்லாம் திம்பாங்களே அங்கே வந்து உக்காந்துக்கிட்டோம். நான் ஒன்னுமே பேசலை.
அவருதான், "ம்.. அப்பறம்"னு ஆரம்பிச்சாரு.

கேட்ட கேள்விக்கு மட்டும் நான் பதில் சொல்லிக்கிட்டு வந்தேன். என்னமோ இன்டெர்வியூவுக்கு வந்த மாதிரி, எங்க படிச்சே, வாழ்க்கைல இலட்சியம் என்னன்னு ஒரே கழுத்தறுப்பு. அதே கேள்வியை நான் திருப்பிக் கேட்டப்ப லூசு மாதிரி என்னமோ உளறுச்சு. எப்படியும் இவனுக்கு நம்மளப் புடிக்காதுங்கற முடிவுக்கு வந்ததால ரொம்ப அலச்சியமாப் பேசினேன். ஆனா, கடைசில பாத்தா என்னைப் புடிச்சிருக்குதுனு சரத் சொல்லிட்டாரு.

பாத்து ஃபிக்ஸ் ஆகி கல்யாணம் ஆகற வரைக்கும் இருக்கற காலத்துலதான் நல்லா ஜாலியா இருக்கும்னு என்னோட பிரண்ட்ஸ் எல்லாம் சொல்லுவாங்க. ஒரு நாளைக்கு பத்து மட்டம் கால் பண்ணி, அம்பது மட்டம் ஐ லவ் யூன்னு சொல்லி, எதிர்பாக்காம இருக்கும் போது பூச்செண்டு சாக்லேட் எல்லாம் அனுப்பி..ம்ம்ம் நெனச்சா பெருமூச்சுதான் வருது. எனக்கு அதெல்லாம் கொடுத்து வைக்கலயே. நானே வலிய வலிய போன் செஞ்சாக்கூட கலகலப்பாப் பேசறது இல்லை.

கேட்டா ஐஞ்சு நாளைக்கு ஒரு தடவை பேசினாப் போதுமாம். ஆசை, பாசம் எல்லாமே மனசுல இருந்தாப் போதும். அதையெல்லாம் வெளிக்காட்டி நிரூபிக்க வேண்டியதில்லையாம். கேட்கப்படாத மன்னிப்பும், சொல்லப்படாத காதலும் முழு வடிவத்தை அடையறது இல்லைன்னு தெரியாத ஜென்மம். எனக்கு ஒரே கடுப்பா இருக்கும். முந்தியாவது பிரண்ட்ஸ் எல்லாம் கால் பண்ணி பேசுவாங்க. இப்போ அவுங்களும் பண்றது இல்லை.

பாவம்..அவளுகளச் சொல்லி என்ன ஆகப் போகுது? அவுங்க வாழ்க்கைல நடந்த மாதிரியே நானும் இந்த இடைப்பட்ட காலத்துல பிசியா இருப்பேன்னு நெனைக்கறாங்களோ என்னமோ. அதனால, என்னோட ஆள் ரொமான்டிக்கா இல்லைன்னு வெளிப்படையா அவங்க கிட்டச் சொல்றதுக்கு கூச்சமாவும், சங்கடமாவும் இருந்துச்சு.

ஆனா, ஐயாவுக்கு மூட் இருக்கும் போது நான் பேசணும். அப்பத்தான் தத்துவமெல்லாம் பேசுவாரு. வாழ்க்கைல அழகெல்லாம் முக்கியமே இல்லை. பண்பு, பழக்கவழக்கம், நல்ல கொணம் இதெல்லாந்தான் முக்கியம்ங்கற வசனத்தையெல்லாம் கேக்கலாம். நான் அழகில்லைங்கற மேட்டர் அதுல ஒளிஞ்சிருந்துச்சுங்கற அப்ப எனக்குப் புரியல.

அவருக்கு நெறைய ஆசை இருந்துச்சுன்னு போகப் போகப் புரிஞ்சுக்கிட்டேன். பி.எம்.பயுள்யூ. கார் ஓட்டணும், வெளி நாட்டுல தேனிலவு வெச்சுக்கணும் அப்படி இப்படீன்னு என்னென்னமோ. ஆனா அவங்க வீட்டுல சொல்லிகற மாதிரி வசதியெல்லாம் கெடையாது. அவரு வேலைக்குச் சேந்து ஆறு மாசம் கூட இன்னும் முழுசா ஆகலை. என் சம்பளத்துல பாதிச் சம்பளம்தான் வாங்கறார்.

போன வாரம் அம்மாகிட்ட அத்தை பேசினாங்களாம். (இன்னும் மாமியார் ஆகலைன்னாலும் அவங்களை அத்தைன்னு கூப்பிடறதுதானே நியாயம்?) 200 பவுன் நகை, ரொக்கமா 5 லச்சம், ஒரு ஹோண்டா சிட்டி காரு, பெங்களூர்லையே ஒரு பிளாட் வேணுமாம். அம்மாவுக்கு மயக்கம் போடாதது மட்டுந்தான் மிச்சம். அப்பறமா யோசிச்சுப் பாத்துட்டு, இருக்கறது ரண்டு பொண்ணுக..அதுகளுக்குச் செய்யாமல் வெச்சிருந்து என்ன செய்யப் போறம்னு ஒத்துக்கிட்டாங்களாம். அம்மாவைப் பொறுத்த வரைக்கும் எப்படீன்னா, அவங்களுக்கு பணம் பெருசாத் தெரியல. நம்ம பொண்ணு வாழப்போற வீட்டுல இருக்கற ஆளுக கொணம் இப்படி இருக்கே, பொறகு எப்படி நடத்துவாங்களோங்கற ஆதங்கமும், கலக்கமுந்தான்.

எனக்கு ஒரே ஒரு ஆறுதல் என்னன்னா, இதெல்லாம் அத்தை அம்மா கிட்டக் கேட்டதுதானே ஒழிய, சரத் எங்கிட்ட எதுவுமே கேக்கலை. ரொம்ப அழகு இல்லைங்கற காரணத்துக்காக நாங்க இவ்வளவு வெலை கொடுக்கணுமாங்கற கேள்வி என்னையக் கொடஞ்சுக்கிட்டே இருக்குது. இருந்தாலும் பரவாயில்லை. அப்பா அம்மா ரொம்ப நாளாக் கஷ்டப்பட்டு இந்த சம்மந்தத்தைப் புடிச்சிருக்காங்க. எல்லாம் நல்லதுக்குத்தான் இருக்கும்.

கல்யாணத்துக்கு இன்னும் மூனு மாசம் இருக்கு. பிரண்ட்ஸ்க்கு பேச்சுலர் பார்ட்டி வைக்கணும்னு ஒரு நாள் பத்தாயிரம் கேட்டாரு. சரி ஒரு தடவைதானேன்னு கொடுத்தேன். அப்புறமா செல்போன் பில்லுக்கு என்னையப் பணம் கட்டச் சொன்னாரு. எங்கயோ உறுத்துச்சு. இருந்தாலும் மனசைத் தேத்திக்கிட்டு கட்டினேன்.

அப்பறமாத்தான் அந்த சம்பவம் நடந்துச்சு. ராத்திரி பத்தரை இருக்கும். எங்க ஆ·பீஸ்ல கூட வேலை செய்யற சுரேஷ் போன் பண்ணியிருந்தாரு. அவர் இப்போ நெதர்லாந்துல இருக்குறாரு. சமீபத்துல கல்யாணம் ஆச்சு. அவரோட ஒய்·ப் விசா விசயமா அவசரமா விசாரிச்சார். எப்பவுமே, நைட் ஒம்போது மணிக்கு மேல போன் பண்ணாத சரத் அப்பவுனு பாத்து கால் பண்ணவும், என்னோடு போன் எங்கேஜ்டா இருக்கவும் சிக்கலாகிப் போச்சு. எட்டு மிஸ்டு கால்.

சுரேஷ் கிட்டப் பேசி முடிச்சுட்டு சரத்தைத் திருப்பிக் கூப்பிட்டா, யாரு கூடப் பேசிக்கிட்டு இருந்தேன்னு ஒரே அதட்டல். வெளக்கமாச் சொன்னதுக்கு அப்பறம் பதில் சொல்லாம குட் நைட் சொல்லி வெச்சுட்டாரு. ஆனா, அரை மணி நேர கழிச்சு I don't want any execuses னு ஒரு SMS வந்துச்சு. அன்னைக்கு நான் தூங்கறதுக்கு காலைல அஞ்சு மணி ஆச்சு. பேய் மாதிரி முழிச்சு அழுதுக்கிட்டே இருந்தேன். மறுநாள் மெயில் அனுப்பினாரு. ரொம்ப நேரம் நைட் முழிச்ச ஒடம்புக்கு நல்லதில்லை. அதனால இப்படியெல்லாம் காரணஞ் சொல்லாம சீக்கிரம் தூங்குன்னு எழிதியிருந்துச்சு.

இப்படியாக நிச்சயதார்த்தத்துக்கும், கல்யாணத்துக்குமான என்னோட காலம் கழியுது. அம்மா வேற அப்பப்ப போன் பண்ணி அத்தை அடிக்கிற கொட்டத்தைச் சொல்லுவாங்க. அவரோட லேட்டஸ்ட் போன் பில் எனக்கு வந்து சேந்துச்சு. இந்த மொறை வழக்கத்துக்கு மாறா பில் ஆறாயிரம் இருந்துச்சு. லேசா சந்தேகம் வர ஆரம்பிச்சுது. போன் பில்லை டீட்டெய்லா ஆராஞ்சு பாத்தேன். அதுல நெறைய கால் ராத்திரி பதினொடு மணில இருந்து காலைல ரண்டு மணி வரைக்கும் இருந்ததைப் பாத்தேன். அந்த நேரத்துல ரண்டே ரண்டு நம்பருக்கு மட்டும் பேசிருக்காரு. ஒரே நடுக்கமாப் போச்சு.

அடுத்த நாள் நந்தினி கிட்ட இதப் பத்திப் பேசினேன். அவ பெரிய சி.ஐ.டி. அந்த ரண்டு நம்பருக்கும் அவளே போன் பண்ணி கட் பண்ணினா. அதுல ஒரு ஆம்பளக் கொரல் கேட்டுதாம். இன்னொன்னுல பொண்ணு கொரலு கேட்டுதாம். அவ எங்கிட்ட அதைச் சொல்லும் போது எனக்கு தலையே வெடிச்சிரும் போல ஆகிருச்சு.

ஆயிரம் கேள்வி மூளைக்குள்ள ஓடுது. நான் பத்து மணிக்கு மேலே போன் பேசக் கூடாது. ஆனா, இவரு ஒரு மணி வரைக்கும் பேசலாமாக்கும்? அதுவும் பொட்டப் புள்ளையோட. ஆனா, எனக்கு அதைப் பத்திக் கேக்கறதுக்குப் பயமா இருந்துச்சு. ஏடாகூடமா ஏதாவது வெவகாரமா இருந்தா தாங்கிக்க முடியாது. அதுக்கு இப்படியே விட்டுரலாம்னு நெனைச்சு விட்டுட்டேன்.
போன் பில்லைக் கட்டிட்டேன். அதுக்கப்புறம் அவர் எந்த நம்பருக்குப் பேசறார்னு ஆராய்ற வேலையை விட்டுட்டேன். இத்தனை காலமா எத்தனையோ பொம்பளைங்க நம்ப பாரத நாட்டுல இப்படித்தானே பெத்தவங்களுக்கும், சமுதாயத்துக்கும் கட்டுப்பட்டு சகிச்சுக்கிட்டு வாழ்ந்தாங்க. நாம மட்டும் வேற மாதிரி இருந்து என்ன சாதிக்கப் போறோம்.

ஒரு பின்குறிப்பு: அவரோட கம்யூட்டர் திரைல ஓடிக்கிட்டு இருந்த ஸ்கிரீன்சேவர் வாசகம் எனக்குப் பிற்காலத்துல தெரியவரும்னு இப்போ எனக்குத் தெரியல. அதுல Marry for money and pay for sex அப்படீன்னு இருக்கும்.