Sunday, January 14, 2007

குமுதம் இதை வெளியிடாது.. குழலி மன்னிக்க..

- குப்புசாமி செல்லமுத்து

மூத்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் அண்மையில் எழுதி குமுதம் இதழில் வெளிவந்த 'அயோத்தியா மண்டபம்' கதை தமிழ்மணத்தில் வெப்பம் செறிந்த விவாதங்களுக்கு எரியூட்டியுள்ளது.

பாலபாரதியின் பதிவு

சுஜாதாவின் கதை நீட்டிய குழலி

இதைப் பற்றியெல்லாம் சொந்தமாகக் கருத்துக் கூறுமளவுக்கு சமூக, அரசியல் அறிவு அற்றவன் நான். அல்லது இருக்கிற கொஞ்ச நஞ்ச அறிவையும் வெளிப்படுத்தும் துணிச்சல் இல்லாதவன்.

சென்னிமலைப் படிக்கட்டில் உட்கார்ந்து பொறி கடலை தின்று கொண்டிருக்கும் பக்தர்களை மரத்தில் தொங்கியபடி இயலாமையோடும், ஏக்கத்தோடும் பார்த்துக் கொண்டிருக்கும் குரங்கினைப் போல தமிழ்மணத்தில் முடிவில்லாமல் நடந்து கொண்டிருக்கும் மயிர் பிளக்கும் ஆரிய-திராவிட வாதங்களைப் பார்த்துக் கொண்டு ஓரிரண்டு அனானிப் பின்னூட்டங்களோடு நிறுத்தியிருந்த எனக்கே இது மாதிரியான பதிவு இட வேண்டும் என்ற ஆவல் எழுந்தது வியப்பாக உள்ளது.

மூத்தவர் சுஜாதா அவ்வர்களின் அயோத்தியா மண்டபம் கதையில் சாதியம்..மன்னிக்கவும்..உள்குத்து இருப்பதாக ("நான் தயிர் சாதம் சாப்பிடுறவன்..வலிக்கறது..விட்டுருங்கோ" என்ற அந்நியன் பட வசனம் அளவுக்கு) என் சிற்றறிவுக்குப் படவில்லை. கருத்துச் சொல்லும் வேலையை விடுத்து விட்டு..மேட்டருக்குப் போவோம்.. நண்பர்கள் பாலபாரதியும், குழலியும், பார்ப்பனர்கள் என்று அழைக்கப்படுகிறவர்களும் மன்னிப்பதற்கு கதை என்று நான் கூறிக் கொள்ளும் இந்தப் பதிவில் ஒன்றும் இல்லை. வந்து சேரும் அனானிப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படும்.

குமுதம் இதை ஏன் வெளியிடாது என்பதை இறுதியில் சொல்கிறேன்.

------------------
நல்ல கதையா இருக்கே..!

இளைய தலைமுறை அரசியல் சமூக நாயகர்களில் மிக முக்கியமானவர் சுந்தரலிங்கம். சமூக ஏற்றத் தாழ்வுக்கு எதிராகப் போராடும் குணத்தினால் மாநிலம் முழுவதும் போற்றப்படும் மனிதர். இன்னும் அறுபது வயது கூட நிரம்பியிருக்கவில்லை. அவர் சொல்வதை கேட்டு நடக்க எழுச்சி மிக்க இளைஞர் பட்டாளம் எந்த நேரத்திலும் தயாராக இருக்கும்.

அவரது அருமை, பெருமைகளை எல்லாம் கேள்விப்பட்டு ஒரு வெளிநாட்டுத் தொலைக்காட்சியில் இருந்து பேட்டி எடுக்க வந்திருந்தார்கள்.

கோட்டு சூட் அணிந்திருந்த அந்த வட நாட்டுப் பெண் ஆங்கிலத்தில் ஆரம்பித்தாள்.

"வணக்கம் திரு.சுந்தரலிங்கம். உங்கள் மதிப்புள்ள நேரத்தை எங்களுக்கு ஒதுகியதற்காக முதலில் நன்றி சொல்ல விரும்புகிறேன்.”

"எனக்கும் மகிழ்ச்சி”

"பொது வாழ்க்கையில் நீங்கள் எப்படி நுழைந்தீர்கள் என்ற விவரத்தை நேயர்களிடம் கொஞ்சம் பகிர்ந்து கொள்வீர்களா?”

"ஓ..நிச்சயமாக. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இரயிலில் பயணம் செய்தார். முதல் வகுப்பு டிக்கெட் வைத்திருந்தும், அவர் வெள்ளையர் அல்லாதவர் என்பதால் இறக்கி விட்டார்கள். அண்ணலின் அரசியல் போராட்டம் அப்போது தொடங்கியது. என்னுடைய பொது வாழ்க்கை அது போன்ற ஒற்றை அவமானச் சம்பவத்தால் உருவானதல்ல.

நான் கல்லூரியில் படிக்கும் போது சில பார்ப்பன மாணவர்கள் திட்டமிட்ட சாதியத்தைப் பரப்பி வந்தார்கள். சொல்லி வைத்தாற் போல சேர்ந்து ஒரு வார காலத்தில் ஒன்று சேர்ந்து இயங்கினார்கள். ஒருவன் என்ன சாதி என்பதை அவனது ஊர் மற்றும் தகப்பனின் தொழில் இரண்டையும் வைத்து தீர்மானமாகக் கணித்து வைத்திருந்தார்கள்.”

"ஒரே மாதிரியான சிந்தனை உடையவர்கள் ஒன்று சேர்வது இயல்பு தானே? இதில் தவறு என்ன இருக்கிறது?”

"நான் சொல்வதைப் பார்த்தால் உங்களுக்கு அப்படித் தான் தோன்றும். அது தான் பார்ப்பனர்களின் செயல்பாடு. எந்த ஒரு விஷயமும் தெளிவாகத் தெரியாதவாறு செய்வது.

அவர்கள் ஒன்று சேர்வது சமுதாயத்தை முன்னேற்றுவதற்காக அல்ல. மாறாக, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆதிக்க நிலையில் இருப்பதைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவும், முடிந்த வரை மேலும் அதிகப்படுத்தவும் தான். என் அனுபவத்தில் இருந்தே சொல்கிறேன். காலேஜ் கிரிக்கெட் அணியின் தலைவனாக இருந்த பார்ப்பன மாணவன் மோசமாக ஆடினாலும் சக பார்ப்பனர்களையே அணிக்குத் தேர்வு செய்தான். அது போக பார்ப்பனப் பேராசிரியர்கள் வேலைச் சிபாரிசிக் கடிதங்களை அவர்களைச் சேர்ந்தவர்களுக்கே கொடுத்தனர்.

இதெல்லாம் சின்னச் சின்ன நுணுக்கமான சங்கதிகள். நுட்பமாக ஆராய்ந்து பார்த்தால் தான் தெரியும். பெரிதாக ஒன்று சொல்கிறேன். என் தந்தை ஒரு முறை நகர சபைத் தேர்தலில் நின்றார். ஆதரவு கேட்டு ஒரு பிராமணர் வீட்டுக்குப் போனார். நன்றாகத் தேனொழுகப் பேசினார்கள். ஓட்டுப் போடுவதாகவும் உறுதியளித்தார்கள். அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு வாசலைத் தாண்டுவதற்கு முன்னரே நாங்கள் நின்ற இடத்தைக் கழுவி விடுமாறு உள்ளே பேசிக்கொண்டார்கள்”

"அப்படியானால், இந்தச் சம்பவம் தான் உங்களுக்கு திருப்பு முனையாக அமைந்தது என்று சொல்லலாமா?”

"சொல்லலாம். ஆனால் 'ஏன் எதற்கு’ என்று கேள்வி கேட்கும் குணம் எனக்குள் நீண்ட காலமாக இருந்து வந்திருக்கிறது. அதைப் பற்ற வைத்த பொறி என்று வேண்டுமானால் இந்தச் சம்பவத்தைக் கூறலாம்”

"இட ஒதுக்கீடு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

"மிகவும் அவசியமான ஒன்று”

"இட ஒதுக்கீடுகள் பொருளாதாரத்தின் அடிப்படையில் இல்லாமல் பிறக்க நேர்ந்த சாதியின் அடிப்படையில் அமைவது தவறல்லவா?”

"தவறு உங்கள் கேள்வியில் தான். ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த இட ஒதுக்கீடுகள் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைச் சரி செய்வதற்காக ஆக்கப்படவில்லை. நாடு முழுவதும் நிலவுகிற சமுதாய ஏற்றத் தாழ்வை அகற்றுவதற்காக உருவாக்கப்படுவது”

"உலகம் சுருங்கி வருகிறது. 'நாமெல்லாம் இந்தியர்' என்ற உணர்வில் அத்தனை பேரும் பேதங்களை மறந்து ஒன்றுபட்டு நிற்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு வேற்றுமை உணர்ச்சியை வளர்க்கும் என்ற பேச்சு அடிபடுகிறதே? இன்னும் எத்தனை நாளுக்குத் தான் இது தொடர் வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?”

"அதெல்லாம் நொண்டிச் சாக்கு. நாடு சுதந்திரம் பெற்று அறுபது வருடம் ஆகிவிட்டது. இவ்வளவு நாள் சாதிக்காததை இனி மேல் இட ஒதுக்கீட்டை வைத்துச் சாதிக்க முடியாது என்ற வாதத்தை ஒதுக்கித் தள்ள வேண்டும். குறைந்தபட்சம் இரண்டாயிரம் வருடமாவது சாதியின் பெயரால் பேதம் காட்டி வந்துள்ளார்கள். அதைத் துடைக்க வேண்டுமானால், அதில் பாதி..அதாவது ஆயிரம் வருடமாவது இட ஒதுக்கீடு வேண்டும்.

மேலும் பார்ப்பனர்கள் பலர் ஏழையாக இருப்பதாகச் சொல்வது மிகவும் வேடிக்கையானது. இந்தியா அனவரும் சமம் என்ற நிலைக்கு வந்து விட்டதாக நீங்கள் சொன்னீர்கள். அப்படியானால், சவரக் கடை வைத்திருக்கிற, செருப்புத் தைக்கிற பார்ப்பனர் யாரையாவது அடையாளம் காட்ட முடியுமா? அவர்களைப் பொறுத்த வரை இன்சூரன்ஸ் ஏஜென்டாக, ஜோசியக்காரனாக, சமையல் ஒப்பந்தக்காரராக இருப்பதை எல்லாம் ஏழ்மை என்று சொல்கிறார்கள். அப்படிப் பட்ட ஏழ்மை நிலை தொடர்ந்தால் சமுதாயத்திற்கு ஒரு கேடும் வராது.”

"நீங்கள் கண்மூடித்தனமாக பிராமணர்களை எதிர்ப்பதாக ஒரு கருத்து நிலவுகிறதே?”

"மறுபடியும் தெளிவு படுத்துகிறேன். நான் பார்ப்பனர் என்ற சமூகத்தினை எதிர்க்கவில்லை. பார்ப்பனியம் எனற ஆதிக்க முறையத் தான் எதிர்க்கிறேன். இதில் வேடிக்கை என்னவென்றால், பார்ப்பனியத்தைக் கடைபிடிப்பவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களாகவே இருக்கிறார்கள்”

"கொஞ்சம் விளக்க முடியுமா?”

"பார்ப்பனியம் என்பது மனித நீதிக்கு எதிரான மனு நீதியை இழுத்து அணைத்துக் கொண்டது. பிறப்பினால், செய்கிற தொழிலினால் ஏற்றத் தாழ்வு கற்பிப்பது. தமிழ் சமுதாயத்தின் ஆரம்ப நாட்களில் குறிஞ்சி, முல்லை, நெய்தல் என்று நிலத்தின் அடிப்படையில் தான் பிரித்தார்கள். ஆரிய வருகையும், தந்திரமான சூழ்ச்சிகளும் வந்த பிறகு தான் சதுர்வர்ணச் சிந்தனை இங்கே வேர் விட்டது. அதன் நீட்சியாக இப்போதும் பாகுபாடு நிலவுகிறது. நீங்கள் என்னவென்றால், தேசியம்.. சமத்துவம் என்று நகைச்சுவையாகப் பேசிக் கொன்டிருக்கிறீர்கள்”

"நீங்கள் ஒருவர் போராடிவதால் இதெல்லாம் தீர்ந்து விடும் என நம்புகிறீர்களா?”

"நிச்சயமாக இல்லை. வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால் பார்ப்பனியத்திற்கும், வருண பேதத்திற்கும் எதிரான போராடத்தை எம் அறிஞர் பெருமக்கள் காலஞ்காலமாக நடத்தி வந்திருக்கிறார்கள். நாம் வாழும் காலத்தில் நம்மால் முடிந்த அளவிற்கு அந்தப் பணியைச் செய்ய வேண்டியது எம் கடமையாகிறது.”

"நீங்கள் தான் இப்படிச் சொல்கிறீர்கள். மக்கள் யாரும் உங்கள் பின்னால் இல்லை என்று தெரிகிறது. ஒரு தனியார் தொலைக்க்காட்சி நடத்திய எஸ்.எம்.எஸ் வாக்கெடுப்பில் பெரும்பான்மையான வாக்குகள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராத வந்தது அதை நிரூபிக்கிறது அல்லவா?”

"... அப்படியா? தனியார் தொலைக்காட்சி நடத்தும் செல்போன் வாக்கெடுப்பு தான் மக்களின் உண்மையான அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் சாதனம் என்கிறீர்கள். உடனே தேர்தல் ஆணையத்தைச் சந்தித்து அடுத்த பொதுத் தேர்தலை இந்த முறையில் நடத்தச் சொல்லி ஆலோசனை சொல்லலாமே? தற்போது வழக்கில் உள்ள தேர்தல் முறைக்கு செலவு மிகுதியாக ஆகிறதாம்”

"நீங்கள் இந்து மதத்தைப் பிளவு படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளீர்கள். அது, இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் ஊறிய தீவிரவாதிகளுக்கு வலுச் சேர்ப்பதாக உள்ளதே?”

"மன்னிக்கவும். வந்தேறியாகக் குடி வந்த ஆரியம் பூர்வ குடிமக்களின் இயற்கை வழிபாட்டு முறைய எல்லாம் விழுங்கிச் செரித்து உருவான மதம் தான் இந்து மதம். நீங்கள் சொல்கிற இந்து மதம் பார்ப்பனச் சிந்தனைகளைச் சுமக்கும் ஊடகமாக ஆக்கப்பட்ட ஒரு தொழிற்கட்டமைப்பு என்றே சொல்வேன். நாம் அனைவரும் இந்துக்கள், ஒரே நிலையில் இருப்பவர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் ஒரு மாதாரி, பறையனை உங்கள் வீடுகளுக்கல்ல, வீதிக்குள் வர விடுகிறீர்களா? இந்து மதக் கடவுள் எல்லோருக்கும் சமம் என்றால் சூத்திரன் கருவறை வரை சென்று வழிபடவோ, பூசிக்கவோ முடிகிறதா? நினைத்தாலே இரத்தம் கொதிக்கிறது”

"நீங்கள் கடவுளே இல்லை என்று சொல்கிற நாத்திகர். அப்படி இருக்கும் போது உங்களுக்கு என்ன கோவிலைப் பற்றியும், சாமியைப் பற்றியும் கவலை? தமிழில் தான் அர்ச்சனை செய்ய வேன்டும் என்று இன்னமும் தெற்கே போராடிக் கொன்டிருக்கிறீர்கள்”

"எந்த ஒரு மனிதனுக்கும் தான் விரும்பிய வழுபாட்டு முறையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு. அதை நான் என்றுமே எதிர்த்ததில்லை. நான் ஒரு வழிபாட்டு முறையப் பின்பற்றுவேன், நீயும் அதைத் தான் பின்பற்ற வேண்டும், அதே நேரம் கடவுள் எனக்கு மட்டும் நெருக்கமானவர், அவரை அடைவதற்கு முன் நீ என்னைத் தான் அணுக வேண்டும், நான் பேசுகிற மொழி தான் கடவுளுக்குப் புரியும் என்று பொய்யான பரப்புரை செய்து வெகுமக்களுக்கு சிந்திக்கும் உரிமையக் கூட மழுங்கடித்த கொடுமையைத் தான் எதிர்க்கிறேன். இந்து மதம்..சரி..இருக்கட்டும். இந்துக் கடவுளுக்காகப் படைக்கப்பட்ட தேவாரமும், திருவாசகமும் மதுராவிலும், காசியிலும் ஒலிக்குமா? எங்களுக்கு அவ்வளவு ஆதிக்க எண்ணமெல்லாம் இல்லை. எங்கள் மண்ணில் ஒலிக்க விடுங்கள் என்று தான் போராடுகிறோம்.

ஆக, தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் இந்து மதம் இந்தத் துணைக்கண்ட மக்கள் ஏற்கனவே கொண்டிருந்த வழிபாட்டு முறைகளை எல்லாம் விழுங்கிக் கொண்ட பிறகு பார்ப்பனிய மேலண்மையை, ஆகமத்தை, சமஸ்கிருதத்தை பரப்ப முயலும் உத்தி. அதைத் தான் நான் மறுக்கிறேன். அந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டு எம் மக்கள் மீது திணிக்கப்படும் மதத்தை, கடவுளைத் தான் எதிர்க்கிறேன்”

"இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றிக் கேட்டதற்கு இன்னமும் நீங்கள் பதில் சொல்லவில்லையே?”

"ஒரு இந்து குற்றம் செய்தால் அவன் குற்றவாளி ஆகிறான். ஒரு இஸ்லாமியன் குற்றம் செய்தால் அவன் தீவிரவாதியாக அறியப்படுகிறான். இது ஒரு உடைக்கவியலாத, விடுபட முடியாத சுழல் பிரச்சினை. முஸ்லிம் மதத்தைக் கடைபிடிக்கும் சிலர் பயங்கரவாதத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதே சமயத்தில் இங்கே வசிக்கிற ஒட்டு மொத்த முஸ்லிம் மக்கள் மீது சந்தேகமும், வெறுப்பும் உமிழப்பட்டு வந்திருக்கிறது. ஒன்று இன்னொன்றின் காரணியாகவும், விளைவாகவும் மாறி மாறி இருந்து வருகின்றன.

அதற்கும் கூட பார்ப்பனியத் தந்திர உத்திகள் மூல காரணம் ஆகும். ஒட்டு மொத்த இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு முஸ்லிம் சமூகத்தின் மீது காழ்ப்புணர்ச்சி முன்பை விட இன்று அதிகமாகப் பெருகியுள்ளது. தான் இந்து மதத்தின் வஞ்சகமான திட்டத்தில் சிக்கியிருப்பதையும், தன்னை அடக்கி ஆளுவதற்கு ஒரு வாகனமாக மதம் என்ற சக்தியை மேல் சாதியினர் பயன்படுத்திகிறார்கள் என்பதையும் ஒருவனை மறக்கச் செய்து 'இந்து' என்ற போலியான போதையை ஏற்ற ஒரு பொதுவான எதிரி தேவைப்படுகிறான். அவன் தான் முஸ்லிம். இப்படிச் சொல்வதால் நான் சிறுபான்மையினர் என்ற போர்வையில் சிலர் நடத்தும் வன்முறைகளுக்குப் பரிந்து பேசுவதாகப் பொருள் கொள்ளக் கூடாது. குற்றவாளி, தீவிரவாதி யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்பு அவனுக்கு என்ன தண்டனை வழங்கப்படுமோ அதை வழங்க வேண்டும். அவனோ அல்லது எதிரானவர்களோ மதத்தோடு அவனை அடையாளப் படுத்தக் கூடாது”

"நீங்கள் சொல்வதை கேட்டால் இந்து மதத்தில் மட்டும் தான் பேதம் நிலவுவது மாதிரியும், மற்ற மதங்கள் எல்லாம் புனிதமானவை போலவும் இருக்கிறது”

"மதம் என்பது நல்ல நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. கவலை, குழப்பம் நேரும் போது மன அமைதி பெறவும், தவறு செய்தால் தண்டிப்பதற்கு நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது என நினைத்து ஒழுக்கமாக நடந்து கொள்வதற்கும் மதம் மனிதனுக்கு உதவியிருக்கிறது. காலப் போக்கில் அந்த உயரிய நோக்கம் தோற்கடிக்கப்பட்டு ஆண்டான் அடிமைத் தனம் குடியேறி விட்டது. நான் இந்து மதத்தைப் பற்றி மட்டும் தான் பேச முடியும். அதில் எண்ணற்ற முறைகேடுகள் நிறந்துள்ளன என்பது எனக்குத் தெரியும். 'இந்து' நான் பிறக்க நேர்ந்த மதமாக இருப்பதால் அது சாத்தியமானது. நீங்கள் குறிப்பிட்டது போல வேறு மதங்களில் இது போன்ற சில்லறைத் தனங்கள் இருக்கலாம். அது பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது.”

"மனிதனுக்கு மதம் தேவையில்லை என்கிறீர்களா?”

"சுயமாகச் சிந்தித்து பிறருக்குத் தீங்கிழைக்காமல் ஒழுக்கமாக வாழக்கூடிய ஒருவனுக்கு மதம் தேவையில்லை என்பேன். தனது நல்லது, கெட்டது எல்லாவற்றுக்கும் தானே பொறுப்பாளி என்பதை உணர்ந்து குழப்பத்திலும், சோகத்திலும் இருந்து விடுபட்டு வெளியேற முடிகிறவனுக்கு மதம் தேவையில்லை. அப்படி முடியாத ஒருவன், மற்றவர் மீது ஆதிகம் செலுத்தாமல், அல்லது வேற்று மத வழிபாட்டை வெறுக்காமல் ஒரு முறையைக் கடைபிடிப்பது தவறல்ல. என்ன இருந்தாலும் கடவுளையும், மதத்தையும் மனிதன் தான் உருவாக்கினான். அதில் எந்த மதத்தை வேண்டுமானாலும் தழுவிக் கொள்ளலாம்”

"நன்றி திரு.சுந்தரலிங்கம். எங்களுக்காக நேரம் ஒதுக்கி உங்களின் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டீர்கள். இறுதியாக, நேயர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்பிகிறீர்களா?”

"கண்டிப்பாக. மனிதனை மனிதனாக வாழ விடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். காலங்காலமாக அவனை அடிமைப்படுத்தி வைத்திருந்த சாதியத்தை ஒழித்து விடுங்கள். அதில் இருந்து அவனை மீட்டுக் கொண்டுவரும் முயற்சிகளைக் கண்டு கூச்சலிடாதீர்கள். நன்றி.”

இந்த ஆங்கிலப் பேட்டி இரண்டாவது முறையாக ஒளிபரப்பான போது வீட்டு சோபாவில் சாவகாசமாக உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் சுந்தரலிங்கம். அது போக இரண்டு தமிழ் சேனல்களில் சட்டமன்றத் தேர்தல் பற்றிய சூடான செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தார்கள். அவை இரண்டும் மாநிலத்தின் பிரதானமான இரு அரசியல் கட்சிகளின் கைப்பாவையாக இருந்தன.

எதிர்க்கட்சி சேனலில் வந்த செய்தி அவரை நிமிர்ந்து உட்கார வைத்தது. நடப்பு எம்.எல்.ஏ.வும், ஆளுங்கட்சி வேட்பாளருமான ஒரு நபரின் மகன் அவரது தந்தைக்காகப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஒரு காட்சியைக் காட்டினார்கள்.

அந்த இளைஞர், "சொன்ன மாதிரியே மறக்காம ஒட்டுப் போட்டுருங்க. உங்களுக்கு என்ன பிரச்சினைனாலும் நாங்க பாத்துக்கறோம்.” என்று தந்தைக்கு வாக்குச் சேகரித்தார்.

அங்கே கூட்டமாகத் திரன்டிருந்த கீழ்சாதி மக்களில் ஒரு வாலிபன் பேசினான். பார்ப்பதற்கு நிறைய சினிமா பார்ப்பவனைப் போல இருந்தான்.

"எலெக்சனெப்ப மாத்திரம் வருவீங்க. ஜெயிச்சுட்டா மறுக்கா எட்டிக் கூடப் பாக்க மாட்டீங்க. எங்களுக்குத் தெரியாதுங்களா?” என்று கேட்டான்.

கை கட்டி நின்று கூளக்கும்பிடு போடும் சக்கிலியன் இவ்வளவு திமிராகப் பேசியதைக் கண்டு எம்.எல்.ஏ.மகனுக்கு கடும் கோபம் வந்தது.

"என்னடா பேசறே? ஐஞ்சு வருசத்துக்கு ஒருக்கா வராம தெனமும் வெட்ட வெடியால மாதாரி வளவுல வந்து உக்காந்து உங்குண்டிய நக்கிக்கிட்டு இருக்கோணும்கிறியா?” என்று எகிறினார்.

"அப்படீன்னா உங்களுக்கு ஓட்டுப் போட முடியாது. ஒழுங்கு மரியாதையா திழும்பிப் போயிருங்க” அந்த வாலிபனும் சளைக்கவில்லை.

எம்.எல்.ஏ. மகனுக்கு கோபம் அதிகமானது. காலில் இருந்த செருப்பைக் கழட்டி அவனை அடிக்கப் போனார். கட்சிக்காரர்கள் சிலரும், கீழ்சாதி மக்கள் சிலரும் அதைத் தடுக்கப் போராடினார்கள்.

இந்தக் காட்சி எல்லாம் தெளிவாக திரையில் ஓடியது. அதற்குப் பிறகு, யாரோ "கேமரா..கேமரா” என்று கத்தும் குரல் கேட்டது. பிறகு காட்சி தாறுமாறாகத் தெரிய ஆரம்பித்தது. படம் பிடிப்பதை மறைக்க முயன்ற கைவிரல் டி.வி.யில் பெரிய சைசில் தோன்றி மறைந்தது. அந்தக் காட்சி அதோடு நின்று போனது.

எதிர்க்கட்சி வேட்பாளரின் பேட்டியைக் காட்டினார்கள். வேறு சில அரசியல்வாதிகள், பொது மக்கள் கருத்துச் சொன்னார்கள். அவர்கள் அத்தனை பேரும் எம்.எல்.ஏ. மகனின் அடாவடித்தனத்தையும், அவரது தந்தையையும் கடிமையாகச் சாடினார்கள். இரவு எட்டு மணிக்கு இது பற்றி விரிவான விவாதம் நடக்கும் என்று செய்தி அறிவிக்கும் அம்மணி தெரிவித்தார்.

டி.வி.யை அணைத்து விட்டு செல்போனை எடுத்து, "ஏன்டா கூறு கெட்டவனே.. இப்படியா போய் பேசுவே? இப்ப்பப் பார் எல்லாம் போச்சு” என்று தன் மகனிடம் புலம்பினார் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரலிங்க ****ர்.

----------------------
இதை குமுதம் ஏன் வெளியிடாது? அட..அவுங்களுக்கு அனுப்பாம எப்படிங்க வெளியிடுவாங்க??