Wednesday, February 21, 2007

அமெரிக்காவில் அம்பானி!!

- குப்புசாமி செல்லமுத்து

மரத்தின் ஓரிரு கிளைகள் இன்னும் பனிக்குள் புதைந்திருந்தன. பாதி உயர்த்திய திரைக்கு வெளியே பார்த்த இடமெல்லாம் வெள்ளையாக இருந்த காட்சி ஒரு விதச் சலிப்பை ஏற்படுத்தியிருந்தது. அதிசயமாகவும், மகிழ்ச்சி தருவதாகவும் இன்றைக்கு வெப்ப நிலை ஏறியிருந்தது. 43 டிகிரி ஃபாரன்ஹீட், 6.11 டிகிரி செல்சியஸ் என்று வெப்பமானி தெரிவித்தது. ஓரு அடி உயரத்துக்குப் படிந்திருந்த பனி லேசாக உருகத் தொடங்கியிருப்பதை உணர முடிந்தது. மேல் பரப்பு அப்படியே இருக்க கீழே உருகியதால் ஏற்பட்ட ஓட்டைகள் வெண்ணிறப் பாறையில் எலி வங்குகளைப் போலக் காட்சியளித்தது. ஒன்பது மணி இளங்காலை கதிரொலி பட்டு பனியெல்லாம் தகதகத்தது..

வேலை இல்லாமல் வெட்டியாக ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது மனோகர் நினைவைக் கலைத்தான். நான் ஒருமையில் அழைத்தாலும் மனோகர் எனப்படும் மனோகர் ரெட்டிக்கு வயது நாற்பதுக்கு மேலே இருக்கும். மறக்காமல் மாதம் ஒரு முறை தலைக்கு ‘டை’ அடித்துக் கொள்வான். ஆறு வருடமாக அமெரிக்காவில் வசித்து வருகிறான்.

மனோகருக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அவனை எனக்குப் பிடிப்பதற்குப் பல காரணங்களில் முக்கியமானது அவன் பெயரில் அட்டங்கியிருக்கும் அந்தத் தனித்துவமே என்று சொல்லலாம். மும்பாய் போனால் இந்தியோ, மராத்தியோ கற்றுக் கொள்ளலாம்; இங்கிலாந்து போனால் ஆங்கிலம் பேசிப் பழகலாம். ஆனால், பாருங்கள் இந்த அமெரிக்கா வந்து நான் தெலுங்கு கற்றுக் கொண்டேன். ஆந்த அளவிற்கு இந்திய மக்களில் தெலுங்கு அன்பர்கள் அதிகம் அல்லது ஆதிக்கம். இந்த ஊரில் பத்தில் எட்டு தெலுங்கர்களுக்கு முதல், கடைசி அல்லது நடுப்பெயராக வெங்கட் இருக்கிறது. மனோகர் அதிலிருந்து முரண்பட்டவன். ஆதுவே எனக்குப் பிடித்தமான ஒரு சங்கதி.

“மேட்டர் தெரியுமா? நேத்து ரிலையன்ஸ் மர்கெட் கேப்பிடலைஷெசன் 2 ட்ரில்லியன் ரூபாயைத் தாண்டிருச்சு!!” என்று ஆச்சரியத்துடன் சொன்னான்.

அதற்கு முந்தைய நாள்தான் அவன் மணிரத்தினத்தின் குரு திரைப்படம் இந்தியில் பார்த்திருந்தான். அதிலிருந்து மூச்சு விடுவதே ‘அம்பானி அம்பானி’ என்றுதான்.

2 ட்ரில்லியன் ரூபாய் எத்தனை மில்லியன் டாலர் என்று கணக்குப் போட்டுப் பார்த்தோம். முதலில் அதை 2 இலட்சம் கோடி ரூபாய் என்று கணக்குப் போடவே சற்று நேரம் பிடித்தது. இந்திய மக்கள் தொகை 100 கோடி = 1 பில்லியன் என்று நினைவுபடுத்தினான். 1000 பில்லியன் = 1 டிரில்லியன் என்றெல்லாம் விவரமாகக் கூறியவன், அப்படீன்னா ரிலையன்ஸ் மதிப்பு 4.5 மில்லியன் டாலர் என்றான்.

“டாலருக்கு 44 ரூபாய்னு வச்சுக்கிட்டா ஒரு மில்லியன் டாலர் 4.4 கோடி ரூபா. நீ சொல்ற 4.5 மில்லியன் வெறும் இருபது கோடி. அந்தே..” என்று எனக்குத் தெரிந்த அரைகுறைத் தெலுங்கில் சொல்லினேன்.

2 இலட்சம் கோடியை வெறும் இருபது கோடியாகச் சுருக்கி விட்ட வெட்கம் அவன் முகத்தில் சில வினாடிகள் வந்து மறைந்தது.

“இரு கால்குலேட் பண்ணிச் சொல்றேன்” என்று கால்குலேட்டரை எடுத்துத் தட்டினான். கூடவே பழுப்பு நிற நோட்டுப் புத்தகத்தில் ஒரு பக்கம் கிறுக்கியும் விட்டான். வெகுவான முன்னேற்றம் கணிப்பில் வெளிப்பட்டது. இருபது கோடி ரூபாயை இருபதாயிரம் கோடிக்குக் கொண்டு வந்து விட்டான். மீதி ஒரு இலட்சத்து எண்பதாயிரம் கோடி போன இடம் தெரியவில்லை.

திருபாய் ஆரம்பித்த கம்பெனியின் மதிப்பு இது மாதிரி ஒருவனிடம் சிக்கிக் கொண்டி திணறுவது முகேஷ் அம்பானிக்குத் தெரிந்தால் கடித்துத் துப்பி விடுவார். ஆனாலும் இவன் விடுவதாக இல்லை.

அவனது கணிப்பொறியில் ஒரு மென்பொருள் நிறுவி வைத்திருந்தான். அதிலே அலகுகளை மாற்றிப் பார்ப்பது அவனுக்குப் பிடித்த செயல். கிலோ மீட்டரில் இருந்து மைல், ஏக்கரில் இருந்து ஹெக்டேர், பவுண்டில் இருந்து கிலோ கிராம், லிட்டரில் இருந்து கேலன், ஃபாரன்கீட்டில் இருந்து செல்சியஸ் என்று பலவாறாகப் புரட்டிப் போட்டு விளையாடுவான். 43 டிகிரி ஃபாரன்கீட்டை செல்சியஸில் கணக்குப் போட்டு பனி உருகுவதற்குத் தத்துவார்த்தக் காரணம் கற்பித்தது அவனேதான். இத்தனை சிறப்பு மிக்க அந்த சாஃப்ட்வேரில் டாலருக்கு, ரூபாய்க்கும் பரிமாற்று மதிப்பு வாய்ப்பாடு இல்லாதது குறித்து முதன் முறையாகக் கவலைப்பட்டான்.

அதனால் பேப்பரும், பேனாவும் ஒரு கையில் வைத்துக் கொண்டு இன்னொரு கையில் கால்குலேட்டரைக் குத்துவது தொடர்ந்து கொண்டே இருந்தது. எனினும், அந்த முயற்சியை விதி செய்த சதி தடுத்து விட்டது.

பெரும்பாலான நேரங்களில் வருகிறவர்கள் காசில் வடையும், டீயும் தின்று விட்டு லஞ்சம் வாங்கிக் களிக்கும் போலிஸ்காரர்கள் அரசியல்வாதி ஊர்வலத்தின் போது மட்டும் பரபரப்பாக இயங்குவது போல எங்கள் பிழைப்பு. ஒரு கார் கம்பெனியில் ஓடுகிறது எங்களின் அத்தகைய பிழைப்பு.

செல்போனுக்கு 'டாக் டைம்' இருப்பது போல, வாகனத் தயாரிப்பில் ‘டேக்ட் டைம்’ என்றொரு இலக்கு உண்டு. ஒரு அசெம்ளி லைனில் எத்தனை வினாடிகளுக்கு ஒரு கார் தயாராகி வெளிவருகிறது என்பதைக் குறிக்கும் இந்தச் சொல் ஜப்பானில் உருவானதாக மனோகர் அடிக்கடி சுட்டிக் காட்டுவான். 56 வினாடிக்கு ஒரு கார் வெளியே வரவேண்டும். ஏதாவது தடைபட்டுப் போனால் ஒட்டு மொத்த கம்பெனியும் போர்ச் சூழலுக்கு மாறிவிடும்.

பத்து நிமிடத்திற்கு ஒரு முறை அடுத்து என்ன மாடல் தயாரிகக் வேண்டும் என்கிற ஆர்டர் விவரம் தொழிலாளர்களுக்குப் பக்கத்தில் பிரிண்ட் ஆக வேண்டும். அப்படி ஆகாமல் தவறினால், நம்ம ஊரு அரசு அலுவலர் போல பொரொடக்ஷன் லைனில் இருப்பவர்கள் அரட்டை அடிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆர்டர் பிரிண்ட் செய்வதற்கு எழுதி வைத்திருந்த கம்ப்யூட்டர் பொரோகிராமை மனோகர் பராமரித்து வந்தான். அதில் ஓதோ கோளாறு ஏற்பட்டுப் போகவே அவன் சுவாரசியமாகச் செய்த கணக்கை பாதியிலே விட வேண்டியதாகி விட்டது.

ஒரு மணி நேர கார் உற்பத்தி இழப்புக்குப் பிறகு அசெம்ளி லைனை இயக்கத்திற்குத் திருப்பி விட்ட பிறகு மறுபடியும் மனோகருக்கு அவகாசம் கிடைத்தது. மீண்டும் கணக்குப் போடுவதை ஆரம்பித்தான். இடையிடையே ஜோக் அடித்தான்.

“போன மாசத்தை விட இந்த மாசம் கலர் ஆகிட்டேன்ல?”

உண்மையிலெயே கொஞ்சம் வெளுத்திருந்தான்.

“ஆமாம்” என்று ஆமோதித்தேன்.

அடுத்த கேள்வியை அவன் எதிர்ப்பார்த்தான்.

“எப்படி மனோகர்?”

“அதுவா.. தினம் சாயங்காலம் நீச்சல் அடிக்கப் போறேன்ல… அதான்”

என்ன சொல்வதென்று தெரியவில்லை.

கொஞ்ச நேரம் கழித்து அவனே சொன்னான்.

“எனக்கும் எப்படீன்னு தெரியல. ஆனா என் பொண்டாட்டி ஒரு காரணம் சொன்னா. ஸ்விம்மிங் பூல்ல பிளீச்சிங் பவுடர் போட்டிருக்கா. அதனால் வெளுப்பாகிட்டேங்கறாப்பா” என்றான் சோகமும், குறும்பும் கலந்த மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு அமெரிக்க டாலரில் எத்தனை பில்லியன் என்ற கணக்கு இந்தச் சிறு ஜோக்கிற்குப் பின்னர்ர் தொடர்ந்து கொண்டிருந்தது.

ஒரு குளூ கொடுத்தேன், “ஒரு பில்லியன் டாலர் 4400 கோடி” என்று.

இரண்டு இலட்சத்தை 4400 ஆல் வகுத்து 45.45 பில்லியன் என்று சுலபமாகச் சொன்னான்.

ஆனாலும் அவனுக்குத் திருப்தி உண்டாகவில்லை. இரண்டு இலட்சத்தை 200000 என எழுதி அதற்குப் பக்கத்தில் ஏழு பூஜ்ஜியம் போட்டு, 'அத்தனை' ரூபாய் என்றான். அதை 44 ஆல் வகுத்தான். வந்த எண்ணை 1000 ஆல் மூன்று முறை வகுத்து... நான் அப்பாடா என்று நிம்மதிப் பெரு மூச்சு விடும் முன்ன்பாகவே 45.45 பில்லியன் என்று சொல்வதற்குப் பதிலாக 4.5 பில்லியன் என்று சொல்லி ரிலையன்ஸின் மதிப்பின் பத்தில் ஒன்பது பகுதியை ஆவியாக்கினான்.

45 பில்லியன் என்பது தவிர எல்லா விதமான எண்களையும் அவன் தருவித்தான். டீ குடிக்கும் போது கூட அதே நினைவுதான்.

கிளைமேக்ஸ் காட்சியின் அபிஷேக் பச்சன் “நீங்க அஞ்சு நிமிசம் கொடுத்தீங்க. நாலரை நிமிசத்துல முடிச்சுட்டேன். அரை நிமிசம் புராஃபிட்” என்று சொன்னதை ஓட்மீல் பிஸ்கெட்டை டீயில் முக்கியவாறே எனக்கு ஞாபகப்படுத்தினான்.

தேநீரும், காஃபியும் இலவசமாகக் குடிக்கும் கம்பெனியில் நாங்கள் இருக்கவில்லை. தேநீருக்குக் கொடுக்கும் 48 சென்ட் தொகையை, “பாரு.. இந்தக் கம்பெனியில டீ குடிக்கக் கூட 21 ரூபா கொடுக்க வேண்டி இருக்கு” என்று அடிக்கடி புலம்புவான்.

எதை எடுத்தாலும் ஒரு டாலர் என்று விற்கும் கடைகளான டாலர் ஸ்டோர், டாலர் ட்ரீ ஆகியவற்றுக்கு வால்மார்ட்டை விட அதிக முறை சென்றதாக அவனுக்குப் பெருமை உண்டு. நான் ஏழு டாலருக்கு வாங்கிய தொப்பியை ஒரு டாலருக்கு வாங்கி வந்து, “நீ 300 ரூபா குடுத்து வாங்கியிருக்கே. என்னைப் பாரு வெறும் 44 ரூபாய்க்கு வாங்கிட்டேன்” என்று ஒரு நாள் சொன்னான். நாணய மாற்று விகிதத்தில் அவனுக்கு இருக்கும் ஆர்வமும், திறமையும் வெளிப்பட்டு மெய் சிலிர்க்க வைக்கும்.

சில நாட்களில் ரிலையன்ஸ் செய்தியும், மணிரத்தினம் படமும் அவனுக்கு மறந்து போயிருக்க வேண்டும். புதிதாக ஒரு தகவலோடு வந்தான்.

“இண்டியன் எக்கானமி ஒரு டிரில்லியன் டாலர் ஆகப்பொகுதாமா? படிச்சேன். யூ நோ வாட்!! டிரில்லியன் டாலர் கிராஸ் பண்ற பத்தாவது நாடு இந்தியாவா!!”

சிறிது இடைவெளிக்குப் பின்னர், “ஆமா.. உலகத்துல பெரிய எக்கானமி யு.எஸ்.தானே?”

“ஆமா மனோகர்”

“என்ன ஒரு ரண்டு டிரில்லியன் இருக்குமா?”

இப்போதும் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன். பனி எல்லாம் காணாமல் போய் அந்தப் பரப்பெங்கும் புல்தரை பச்சை நிறத்தில் மாறிவிட்டது. மரங்கள் வசந்த காலத்தில் துளிர்விட்டுக் கொண்டிருந்தன.

மனோகர் பேப்பர், பேனா, கால்குலேட்டரோடு இந்தியப் பொருளாதாரத்தில் மதிப்பை ரூபாயில் கணக்குப் போடுகிறான். தன் மகனின் பிறந்த நாளுக்குப் பரிசளிக்க காலை டாலர் ஸ்டோரில் 44 ரூபாய்க்கு வாங்கிய ஹெட் போன் என் பார்வைக்குத் தப்பவில்லை.

Thursday, February 15, 2007

காதலர் தின புகைப்படங்கள்

- குப்புசாமி செல்லமுத்து

பாப் கனேட் ஓய்வு பெறும் வயதுக்காரர். வியட்நாம் போரில் ஈடுபட்டவர். உலக அறிவு மிகுந்தவர். அவரிடம் நேற்றைக்கே சொல்லி விட்டு வந்திருந்தேன், "நாளைக்குக் காலைல கால் பண்ணாட்டி 'ஹாப்பி வேலண்டைன்ஸ் டே' சொல்ல மாட்டேன் என்று.

அதிகாலை 12.35 மணிக்கு கணிப்பொறியை அணைத்து விட்டு தூங்கப்போகும் போது செல்போன் Bob Kanet calling என்றது.

'குப்ஸ் ..தூங்கிட்டியா?"

"இல்லை பாப். சொல்லுங்க"

"வழக்கம் போல 7.30 க்கு ஆஃபீஸ் வந்துடு"

"யூ ஆர் கிட்டிங்"

வழக்கமான குசும்புச் சிரிப்பு எதிர்முனையில்.

"இல்லைப்பா.. ரோடெல்லாம் மோசமா இருக்காம். பிளான்ட் குளோஸ் ஆகுது. ஸோ...லீவ் விட்டாச்சு..நல்லா தூங்கு"

இந்த ஆளுக்கு இதைச் சொல்ல நேரமே கிடையாதா!!

"சரி பாப்..குட் நைட்..சாரி, குட் மார்னிங்"

அடுத்த நாள் விடுமுறை எனும் போது ஒரு மணிக்கு முன்பே தூங்குவது அவமானம். மறுபடியும் மடிக்கணினியை உயிர்ப்பித்து மிச்சமிருந்த 'நாடோடி மன்னன்' படம் பார்த்து மரபு காப்பாற்றப்பட்டது.

தினம் ஏழரை மணிக்கே ஆஃபீஸ் போக வேண்டியவன் இன்றைய காதலர் தினத்தில் எட்டு மணி வரைக்கும் தூங்கி விட்டு.. உலகமே கொண்டாடும் இந்தக் காதலர் தினத்தில் சில போட்டோக்கள் எடுத்து, அதை ஒரு வகை 'உப்புமா' பதிவாகச் சமர்ப்பிக்கிறேன்.

என் ஜன்னலுக்கு வெளியே..
எல்லா மரங்களும் இலைகளை உதிர்த்து விட்டு குளிர்காலத்தில் அம்மணமாக நிற்கும் போது, மானமே பெரிதென இழுத்துப் போர்த்திக் கொண்டிருக்கும் கிறிஸ்துமஸ் மரம்.
இந்த மரத்துக்குப் பின்னாடி இருந்த ஏரி எங்கெய்யா?
இங்கும் ஒரு எரி இருக்கிறது. அது தான் செவ்வக வடிவக் குழி.
அதே ஏரிதான். இதுக்குப் பக்கமா ஒரு வெள்ளைக்காரத் தாத்தா அவரோடு நாயைத் தெனமும் வெளிக்குக் கூட்டிட்டுப் போவாரு. பாவம் இன்னைக்கு என்ன செஞ்சாரோ!!இது நம்ம காரு. ஒரு காலத்துல சந்தியா நாயர்னு ஒருத்தங்க வச்சிருந்தாங்க. கரகாட்டக்காரன் செந்தில் பாணில 'சந்தியா காரை நீங்க வச்சிருக்கீங்க..அப்போ..' என்று கேட்டால் நான் பொறுப்பல்ல.
அனார்க் அலி லெவலுக்கு காதலர்தினத் தியாகம் செய்யுது இந்தக் கார். பின்னே உயிரோடு ஐஸ் சமாதின்னா சும்மாவா?ஒரு காலத்துல All roads lead to Rome.. அனா இப்போ all roads lead to Marysville mega city. 'சிட்டி'ன்னா என்னான்னு வெளக்கம் கேக்கக் கூடாது ஆமா!!


எஸ்கேப் ரூட்..காதலுக்காகக் கசிந்துருகும் கார்.


இங்கேதான் நம்ம கூட்டாளி 360 டிகிரி அடிச்சாரு. நல்ல வேளையா அந்த சர்க்கஸை வெற யாரும் வேடிக்கை பாக்கலை.இன்னிக்குப் பரவாயில்லை மக்கா. லீவுதே.. ஊட்டுக்குள்ள இழுத்துப் போத்திக்கிட்டுப் படுத்துக்கலாம். ஆனா, கிளீன் பண்ணாம விட்டா நாளைக்குக் காலைல இருக்குடி சங்கு..

இத்தன போட்டோவை எடுத்த மூஞ்சியைக் கொஞ்சம் பாக்க வேண்டாமா?

படம் நல்லா இருக்குன்னு யாராச்சும் சொன்னா பாப் கனேட்டுக்கு லேட்டாகவாவது காதலர்தின வாழ்த்துக் கூற வேண்டும். அதை விட முக்கியமாக, இன்னொரு புதன் கிழமை அதிகாலையில் எம்.ஜி.ஆர். படம் பார்ப்பது சாத்தியமும் இல்லையல்லவா!!