Friday, March 30, 2007

மாடர்ன் மகாலச்சுமி

- குப்புசாமி செல்லமுத்து

என்னை நீங்க சுத்த (சுத்தாம இருக்கணும்னா வேண்டாம்) தமிழ்ல கூப்பிட்டா மதிவதனின்னு கூப்பிடலாம். எங்க அப்பா, அம்மா அதே பேரத்தான் வெச்சாங்க, சந்திரமுகின்னு. சந்திரன் எப்பவுமே வெள்ளையாத்தான் இருக்கணும்னு சட்டம் ஒன்னும் இல்லையே. அதே மாதிரி எப்பவும் இருட்டா இருக்கணும்ங்கற சட்டமும் இல்லை. நெலாவோட மூஞ்சி இப்படி அடிக்கடி மாறிக்கிட்டே இருக்கும். ஆனா, எம்மூஞ்சி அப்படியெல்லாம் கெடையாது. எப்பவும் ஒரே மாதிரித்தான் இருக்கும். முக்காவாசி கறுப்பு, சோப்புப் போட்டுக் கழுவினா மட்டும் கொஞ்சம் ஜொலிப்புன்னு சொல்லலாம். ஆனா, எனக்குத் தெரிஞ்சு இது வரைக்கும் நான் உட்பட யாருமே வெளுப்புனு ஒத்துக்கிட்டது கெடையாது.

எங்கப்பா திருப்பூர்ல பெரிய பிசினஸ்மேன். ஆனா, பெருசா வெளியில யாருக்கும் தெரியாது. பெரிய பெரிய பனியன் கம்பெனிகல்லாம் இருக்குல்லீங்களா, அவங்களுக்கு சில சமயம் ஆர்டர் கண்ணாபின்னான்னு வந்து சேந்துரும். அப்போ அவுங்களால சொன்ன நேரத்துக்கு வேலையச் செஞ்சு கொடுக்க முடியாது. அதனால, வெளில எதாவது சின்னக் கம்பெனிக்கு சப்-காண்ட்ராக்ட் குடுப்பாங்க. அந்த மாதிரி சப்-காண்ட்ராக்ட் எடுத்துச் செய்யறதுல எங்கப்பா கெட்டிக்காரரு. செல சமயம் பாத்தீங்கன்னா, பெரிய கம்பெனிக செய்யறத விட அதிக வேல எங்க பட்டறைலதான் நடக்கும். பெட்ரோல் வெலை 25 ரூபாய்க்கு இருந்த காலத்துலயே ஒரு வாரத்துக்கு லச்சக்கணக்குல லாபம் சம்பாரிப்பாரு எங்கப்பா. அதனால், என்னையச் சின்ன வயசுல இருந்தே கஷ்டம்னா என்னன்னே தெரியாம வளத்தீட்டாங்க.

இப்பக்கூட எனக்கு பணத்தோட மதிப்பே தெரியாது. நெனைச்ச வெளியே போவேன். செல்போனுக்கு நான் காலிங்-கார்டு வாங்கிப் போடற காசு நாட்டுல பாதிப் பேரு குடும்பச் செலவை எல்லாம் தாட்டி சேத்து வெக்கற அளவுக்கு இருக்கும்னா பாத்துக்குங்க. ஆனா, நான் ஒன்னும் ஊதாரி இல்லைங்க. பணக்காரத் திமிரு இருந்ததே இல்லை. இப்பவும் இல்லை. எனக்கு எது சரின்னு படுதோ அதெச் செய்வன்னு வெச்சுக்குங்களேன். ஆனா ஒன்னுங்க. என்னோட மனசாற யாருக்கும் தீங்கு நெனச்சதில்லை. அதே மாதிரி மனசால கஷ்டப்படுத்தினதும் இல்லை.

நான் வந்து ரொம்ப நல்ல பொண்ணு, எல்லாரு கிட்டேயும் நல்ல பழகுறேன் அப்படீங்கறதால காலேஜ்ல படிச்ச காலத்துல இருந்தே எனக்கு நெறைய பிரண்ட்ஸ் இருந்தாங்க. இப்பவும் ஆஃபீஸ்ல கூட வேல செய்யறவங்க நெறைய இருக்காங்க. ஆனா, என்னமோ தெரியல யாருமே இது வரைக்கும் என்னெப் பாத்து புடிச்சிருக்குன்னு சொன்னதில்லை. உங்கண்ணையே பாத்திட்டு இருக்கணும்னு யாராவது சொல்லக் கேக்கற அந்த சுகந்தமான அனுபவமே கெடைக்காமப் போயிருச்சு.

வேலைக்குச் சேந்த புதுசுல என்னச் சுத்தி எப்பவும் நாலஞ்சு பொண்ணுக இருப்பாங்க. கூத்து, கும்மாளம், கிண்டல்னு நேரம் போறதே தெரியாது. வீக்என்டுல நெறைய சுத்துவோம். அடிக்கடி கலவரம் வந்து, ஆடிக்கொன்னு அம்மாவாசைக்கொன்னுனு இந்த பெங்களூர்ல போடற தமிழ்ப்படம் ஒன்னு வுடாமப் பாத்துருவோம். வாரவாரம் டிரஸ் வாங்குவோம். பெங்களூர் வந்ததுக்கப்பறந்தான் ஜீன்ஸ் பேண்டல்லாம் போட்டுப் பழகினேன்னா பாத்துக்குங்களேன். அப்பத்தான் ஒரு பெரிய காமெடி நடந்துச்சு. என்னங்கறீங்களா? இந்த பெங்களூர் மாநகரத்துலயே ஜீன்ஸ் போட்டு கனகாம்பரப் பூ வெச்ச முதல் ஆளுங்கற பெருமையை வரலாறு எனக்குக் குடுத்துச்சு.

அப்படி ஒரு ரண்டு வருசம் ஜாலியா ஓடுச்சு. ஆபீஸ்ல கடுமையா ஒழைச்சோம். அப்பப்ப சம்பளம் கூட்டுனாங்க. பல பேரு கம்பெனி மாறுனாங்க. சில பேரு அப்படியே இருந்து புரமோஷன் வாங்கினாங்க. எங்கூட இருந்த புள்ளைகளுக்கு எல்லாம் வரிசையா கல்யாணம் ஆக ஆரம்பிச்சுது. அஞ்சு பேரு இருந்த வீட்டுல இப்ப நான் மட்டும் தனியா இருக்கற மாதிரி ஆகிருச்சு. போன வருசம் வாங்கின ஜீன்ஸ் பேண்டெல்லாம் இப்போ சுருங்கிப் போச்சு. ஆமா..அப்படித்தான் சொல்லணும். நான் பெருத்துட்டேன்னு சொல்லக் கூடாதுல்ல. திடீர்னு ஒரு நாள் பாத்தா வயசு கால் நூற்றாண்டு ஆகிருச்சு. ஆஃபீஸ் போக வேண்டியது, வர வேண்டியது, சமைக்க வேண்டியது, சாப்பிட வேண்டியதுன்னு வாழ்க்கை ஒரே மெஷின் மாதிரி மாறிடுச்ச்சு.

இப்படிப்பட்ட சமயத்தில அப்பா அம்மா மாப்பிளை தேட ஆரம்பிச்சாங்க. நம்ம ஊர்லதான் 'உன் வாழ்க்கை உன் கையில்' ன்னு ஆட்டோவுல எழுதி வெச்சுட்டு ஜோசியக்காரன் கையில வாழ்க்கையைக் கொடுக்கறமே! இதில என்ன கொடுமைன்னா, நம்ம வாழ்க்கையோட போகாம நம்ம சந்ததிகளோட வாழ்க்கையுஞ்சேத்து அவுங்க அனுமதி இல்லாமயே ஜோசியக்காரங்க கையில ஒப்படைக்கிறோம். என்னதாம் படிச்சாலும், கம்ப்யூட்டருல வேல செஞ்சாலும் அந்தக் கம்ப்யூட்டரிலேயே ஜாதகம் பாக்கற ஊரு நம்ம ஊரு. அதனால என்னோட ஜாதகமும் ஜோதில, வெள்ளத்துல, சாக்கடைல அப்படீன்னு எப்படி வேணாலும் வெச்சுக்கக் கூடிய ஒரு எழுவுல போய்ச் சங்கமமாச்சு.

நெறையத் தேடினாங்க. நானும் ஒரு நாளைக்கு ரண்டு மணி நேரமாவது இன்டெர்நெட்டுல போய்த் தேடுவேன். முப்பது மாசமாச்சு. தேடிக்கிட்டே இருக்கறோம். ஜாதகம், குடும்பம், வேலை பாக்குற மாப்பிள்ளைன்னு எல்லாஞ் சேந்து வந்தது சிலது மட்டுந்தான். அப்படியே வந்தாலும் அவுங்களுக்குப் புடிக்கற மாதிரி நான் இல்லாமப் போயிட்டேன். என்ன பண்ணச் சொல்றீங்க? பொட்டப் புள்ளையப் படிக்க வெக்கவே கூடாதுன்னு அம்மா பொலம்பறாங்க. படிக்க வெச்சா அதுக்கு ஏத்த மாப்பிள்ளை கெடக்கறதில்லைன்னு கவலை அவுங்களுக்கு. எனக்கென்னவோ பாதிக் காலம் தாட்டியாச்சு, மிச்சத்தையையும் அப்படி இப்படீன்னு ஓட்டிடலாம்ங்கற நெலமைக்கு வந்துட்டேன். இத அம்மாகிட்ட வேற சொல்லி, அவங்களயும் பொலம்ப வெச்சாச்சு.

ஒரு நாள் இப்படித்தாம்பாருங்க ஒரு நாள் காலைல அம்மா போன் பண்ணுனாங்க. ஏதோ பொருந்தி வந்திருக்காம். நாளைக்கே கெளம்பி ஊருக்குப் போகணுமாம். வேற வழி தெரியாததால இல்லாத பாட்டியைச் சாகடிச்சு லீவ் வாங்கிட்டு நான் பொறப்பட்டேன். வழக்கம் போல வீட்டுலெ வெச்சுப் பாக்காம இந்தத் தடவை கோயிலுக்கு வரச் சொல்லிட்டாரு அப்பா. பையனுக்கு பேரு என்னமோ 'சரத்'துன்னு சொன்னாங்க. விஜய் மாதிரி மூனு நாள் சவரம் பண்ணாத மீசையோட இருந்தாங்க. ஆம்பளைங்கற தெனாவெட்டு பாக்கறதுலயே தெரிஞ்சுது. பெரியவங்க எல்லாஞ்சேந்து ரண்டு பேரையும் தனியாப் பேசச்சொன்னாங்க.

சாமி கும்பிட்டுப்போட்டு ஒரு எடத்துல உக்காந்து தேங்கா பழமெல்லாம் திம்பாங்களே அங்கே வந்து உக்காந்துக்கிட்டோம். நான் ஒன்னுமே பேசலை.
அவருதான், "ம்.. அப்பறம்"னு ஆரம்பிச்சாரு.

கேட்ட கேள்விக்கு மட்டும் நான் பதில் சொல்லிக்கிட்டு வந்தேன். என்னமோ இன்டெர்வியூவுக்கு வந்த மாதிரி, எங்க படிச்சே, வாழ்க்கைல இலட்சியம் என்னன்னு ஒரே கழுத்தறுப்பு. அதே கேள்வியை நான் திருப்பிக் கேட்டப்ப லூசு மாதிரி என்னமோ உளறுச்சு. எப்படியும் இவனுக்கு நம்மளப் புடிக்காதுங்கற முடிவுக்கு வந்ததால ரொம்ப அலச்சியமாப் பேசினேன். ஆனா, கடைசில பாத்தா என்னைப் புடிச்சிருக்குதுனு சரத் சொல்லிட்டாரு.

பாத்து ஃபிக்ஸ் ஆகி கல்யாணம் ஆகற வரைக்கும் இருக்கற காலத்துலதான் நல்லா ஜாலியா இருக்கும்னு என்னோட பிரண்ட்ஸ் எல்லாம் சொல்லுவாங்க. ஒரு நாளைக்கு பத்து மட்டம் கால் பண்ணி, அம்பது மட்டம் ஐ லவ் யூன்னு சொல்லி, எதிர்பாக்காம இருக்கும் போது பூச்செண்டு சாக்லேட் எல்லாம் அனுப்பி..ம்ம்ம் நெனச்சா பெருமூச்சுதான் வருது. எனக்கு அதெல்லாம் கொடுத்து வைக்கலயே. நானே வலிய வலிய போன் செஞ்சாக்கூட கலகலப்பாப் பேசறது இல்லை.

கேட்டா ஐஞ்சு நாளைக்கு ஒரு தடவை பேசினாப் போதுமாம். ஆசை, பாசம் எல்லாமே மனசுல இருந்தாப் போதும். அதையெல்லாம் வெளிக்காட்டி நிரூபிக்க வேண்டியதில்லையாம். கேட்கப்படாத மன்னிப்பும், சொல்லப்படாத காதலும் முழு வடிவத்தை அடையறது இல்லைன்னு தெரியாத ஜென்மம். எனக்கு ஒரே கடுப்பா இருக்கும். முந்தியாவது பிரண்ட்ஸ் எல்லாம் கால் பண்ணி பேசுவாங்க. இப்போ அவுங்களும் பண்றது இல்லை.

பாவம்..அவளுகளச் சொல்லி என்ன ஆகப் போகுது? அவுங்க வாழ்க்கைல நடந்த மாதிரியே நானும் இந்த இடைப்பட்ட காலத்துல பிசியா இருப்பேன்னு நெனைக்கறாங்களோ என்னமோ. அதனால, என்னோட ஆள் ரொமான்டிக்கா இல்லைன்னு வெளிப்படையா அவங்க கிட்டச் சொல்றதுக்கு கூச்சமாவும், சங்கடமாவும் இருந்துச்சு.

ஆனா, ஐயாவுக்கு மூட் இருக்கும் போது நான் பேசணும். அப்பத்தான் தத்துவமெல்லாம் பேசுவாரு. வாழ்க்கைல அழகெல்லாம் முக்கியமே இல்லை. பண்பு, பழக்கவழக்கம், நல்ல கொணம் இதெல்லாந்தான் முக்கியம்ங்கற வசனத்தையெல்லாம் கேக்கலாம். நான் அழகில்லைங்கற மேட்டர் அதுல ஒளிஞ்சிருந்துச்சுங்கற அப்ப எனக்குப் புரியல.

அவருக்கு நெறைய ஆசை இருந்துச்சுன்னு போகப் போகப் புரிஞ்சுக்கிட்டேன். பி.எம்.பயுள்யூ. கார் ஓட்டணும், வெளி நாட்டுல தேனிலவு வெச்சுக்கணும் அப்படி இப்படீன்னு என்னென்னமோ. ஆனா அவங்க வீட்டுல சொல்லிகற மாதிரி வசதியெல்லாம் கெடையாது. அவரு வேலைக்குச் சேந்து ஆறு மாசம் கூட இன்னும் முழுசா ஆகலை. என் சம்பளத்துல பாதிச் சம்பளம்தான் வாங்கறார்.

போன வாரம் அம்மாகிட்ட அத்தை பேசினாங்களாம். (இன்னும் மாமியார் ஆகலைன்னாலும் அவங்களை அத்தைன்னு கூப்பிடறதுதானே நியாயம்?) 200 பவுன் நகை, ரொக்கமா 5 லச்சம், ஒரு ஹோண்டா சிட்டி காரு, பெங்களூர்லையே ஒரு பிளாட் வேணுமாம். அம்மாவுக்கு மயக்கம் போடாதது மட்டுந்தான் மிச்சம். அப்பறமா யோசிச்சுப் பாத்துட்டு, இருக்கறது ரண்டு பொண்ணுக..அதுகளுக்குச் செய்யாமல் வெச்சிருந்து என்ன செய்யப் போறம்னு ஒத்துக்கிட்டாங்களாம். அம்மாவைப் பொறுத்த வரைக்கும் எப்படீன்னா, அவங்களுக்கு பணம் பெருசாத் தெரியல. நம்ம பொண்ணு வாழப்போற வீட்டுல இருக்கற ஆளுக கொணம் இப்படி இருக்கே, பொறகு எப்படி நடத்துவாங்களோங்கற ஆதங்கமும், கலக்கமுந்தான்.

எனக்கு ஒரே ஒரு ஆறுதல் என்னன்னா, இதெல்லாம் அத்தை அம்மா கிட்டக் கேட்டதுதானே ஒழிய, சரத் எங்கிட்ட எதுவுமே கேக்கலை. ரொம்ப அழகு இல்லைங்கற காரணத்துக்காக நாங்க இவ்வளவு வெலை கொடுக்கணுமாங்கற கேள்வி என்னையக் கொடஞ்சுக்கிட்டே இருக்குது. இருந்தாலும் பரவாயில்லை. அப்பா அம்மா ரொம்ப நாளாக் கஷ்டப்பட்டு இந்த சம்மந்தத்தைப் புடிச்சிருக்காங்க. எல்லாம் நல்லதுக்குத்தான் இருக்கும்.

கல்யாணத்துக்கு இன்னும் மூனு மாசம் இருக்கு. பிரண்ட்ஸ்க்கு பேச்சுலர் பார்ட்டி வைக்கணும்னு ஒரு நாள் பத்தாயிரம் கேட்டாரு. சரி ஒரு தடவைதானேன்னு கொடுத்தேன். அப்புறமா செல்போன் பில்லுக்கு என்னையப் பணம் கட்டச் சொன்னாரு. எங்கயோ உறுத்துச்சு. இருந்தாலும் மனசைத் தேத்திக்கிட்டு கட்டினேன்.

அப்பறமாத்தான் அந்த சம்பவம் நடந்துச்சு. ராத்திரி பத்தரை இருக்கும். எங்க ஆ·பீஸ்ல கூட வேலை செய்யற சுரேஷ் போன் பண்ணியிருந்தாரு. அவர் இப்போ நெதர்லாந்துல இருக்குறாரு. சமீபத்துல கல்யாணம் ஆச்சு. அவரோட ஒய்·ப் விசா விசயமா அவசரமா விசாரிச்சார். எப்பவுமே, நைட் ஒம்போது மணிக்கு மேல போன் பண்ணாத சரத் அப்பவுனு பாத்து கால் பண்ணவும், என்னோடு போன் எங்கேஜ்டா இருக்கவும் சிக்கலாகிப் போச்சு. எட்டு மிஸ்டு கால்.

சுரேஷ் கிட்டப் பேசி முடிச்சுட்டு சரத்தைத் திருப்பிக் கூப்பிட்டா, யாரு கூடப் பேசிக்கிட்டு இருந்தேன்னு ஒரே அதட்டல். வெளக்கமாச் சொன்னதுக்கு அப்பறம் பதில் சொல்லாம குட் நைட் சொல்லி வெச்சுட்டாரு. ஆனா, அரை மணி நேர கழிச்சு I don't want any execuses னு ஒரு SMS வந்துச்சு. அன்னைக்கு நான் தூங்கறதுக்கு காலைல அஞ்சு மணி ஆச்சு. பேய் மாதிரி முழிச்சு அழுதுக்கிட்டே இருந்தேன். மறுநாள் மெயில் அனுப்பினாரு. ரொம்ப நேரம் நைட் முழிச்ச ஒடம்புக்கு நல்லதில்லை. அதனால இப்படியெல்லாம் காரணஞ் சொல்லாம சீக்கிரம் தூங்குன்னு எழிதியிருந்துச்சு.

இப்படியாக நிச்சயதார்த்தத்துக்கும், கல்யாணத்துக்குமான என்னோட காலம் கழியுது. அம்மா வேற அப்பப்ப போன் பண்ணி அத்தை அடிக்கிற கொட்டத்தைச் சொல்லுவாங்க. அவரோட லேட்டஸ்ட் போன் பில் எனக்கு வந்து சேந்துச்சு. இந்த மொறை வழக்கத்துக்கு மாறா பில் ஆறாயிரம் இருந்துச்சு. லேசா சந்தேகம் வர ஆரம்பிச்சுது. போன் பில்லை டீட்டெய்லா ஆராஞ்சு பாத்தேன். அதுல நெறைய கால் ராத்திரி பதினொடு மணில இருந்து காலைல ரண்டு மணி வரைக்கும் இருந்ததைப் பாத்தேன். அந்த நேரத்துல ரண்டே ரண்டு நம்பருக்கு மட்டும் பேசிருக்காரு. ஒரே நடுக்கமாப் போச்சு.

அடுத்த நாள் நந்தினி கிட்ட இதப் பத்திப் பேசினேன். அவ பெரிய சி.ஐ.டி. அந்த ரண்டு நம்பருக்கும் அவளே போன் பண்ணி கட் பண்ணினா. அதுல ஒரு ஆம்பளக் கொரல் கேட்டுதாம். இன்னொன்னுல பொண்ணு கொரலு கேட்டுதாம். அவ எங்கிட்ட அதைச் சொல்லும் போது எனக்கு தலையே வெடிச்சிரும் போல ஆகிருச்சு.

ஆயிரம் கேள்வி மூளைக்குள்ள ஓடுது. நான் பத்து மணிக்கு மேலே போன் பேசக் கூடாது. ஆனா, இவரு ஒரு மணி வரைக்கும் பேசலாமாக்கும்? அதுவும் பொட்டப் புள்ளையோட. ஆனா, எனக்கு அதைப் பத்திக் கேக்கறதுக்குப் பயமா இருந்துச்சு. ஏடாகூடமா ஏதாவது வெவகாரமா இருந்தா தாங்கிக்க முடியாது. அதுக்கு இப்படியே விட்டுரலாம்னு நெனைச்சு விட்டுட்டேன்.
போன் பில்லைக் கட்டிட்டேன். அதுக்கப்புறம் அவர் எந்த நம்பருக்குப் பேசறார்னு ஆராய்ற வேலையை விட்டுட்டேன். இத்தனை காலமா எத்தனையோ பொம்பளைங்க நம்ப பாரத நாட்டுல இப்படித்தானே பெத்தவங்களுக்கும், சமுதாயத்துக்கும் கட்டுப்பட்டு சகிச்சுக்கிட்டு வாழ்ந்தாங்க. நாம மட்டும் வேற மாதிரி இருந்து என்ன சாதிக்கப் போறோம்.

ஒரு பின்குறிப்பு: அவரோட கம்யூட்டர் திரைல ஓடிக்கிட்டு இருந்த ஸ்கிரீன்சேவர் வாசகம் எனக்குப் பிற்காலத்துல தெரியவரும்னு இப்போ எனக்குத் தெரியல. அதுல Marry for money and pay for sex அப்படீன்னு இருக்கும்.

Tuesday, March 13, 2007

அமெரிக்க மாப்பிள்ளை

- குப்புசாமி செல்லமுத்து

ஜோசப் சின்னத்தம்பிக்கு திடீரென்று அந்தப் பிரச்சினை தோன்றியது. இரண்டு நாளுக்குள் கார் வாங்கி விட வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளாகிவிட்டார். ஓட்டையோ உடைசலோ தனக்கென்று ஒரு வண்டி தேவைப்பட்டது. ஜெர்மெனியில் காரல் பென்ஸ் முதன் முதலாகத் தயாரித்த கார் மாடலாக இருந்தாலும் பரவாயில்லை, அதற்கு ஒரு எஞ்சின், நான்கு சக்கரம், ஒரு ஸ்டியரிங் இருந்தால் போதும் என்ற லெவலுக்கு சமரசம் செய்யவும் சித்தமாக உள்ளார்.

அவர் இந்த அமெரிக்காவில் வந்திறங்கிய மூன்று மாதங்களாகிறது. வந்தது முதல் தனக்கென்று பிரத்யேகமாக ஒரு கார் வேண்டும் என்று எண்ணி வந்தார். ஆனால் அந்த எண்ணம் இப்போது வலுவடைந்து மிகத் தீவிரமாக மாறி விட்டது. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. அவரது மனைவியும், குழந்தைகளும் அடுத்த மாதம் இந்தியாவிலிருந்து வருகிறார்கள். அவர்களை வைத்துக் கொண்டு வாகனம் இல்லாமல் காலம் தள்ள முடியாது. வாடகைக் கார் எடுத்தால் இன்சூரன்ஸ் எல்லாம் சேர்த்து தினமும் குறைந்தது 60 டாலராவது ஆகும். அவர் வாங்கும் சம்பளத்திற்கு கட்டுபடியாகாது.

அவருக்கு இரண்டு மகள்கள் உண்டு. பெங்களூரில் ஒரு தனியார் பள்ளியில் அவர்கள் படித்துக் கொண்டிருந்தனர். அதில் மூத்தவள் இரண்டாம் வகுப்பிலும், குட்டிப் பாப்பா யூ.கே.ஜி.யிலும் இருந்தனர். இந்த வாரத்தோடு பெங்களூரில் ஸ்கூல் முடிந்து விடும். உடனே இங்கே கூட்டி வந்து அமெரிக்கா ஸ்கூலில் சேர்க்க வேண்டும். அப்படி நடக்கும் போது பள்ளிக்கூடம் அழைத்துச் செல்வதற்கு கார் வேண்டுமென்பதைப் பிறர் சொல்ல உணர்ந்திருந்தார்.

ஜோசப் இப்போது ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அவர் எஞ்சினியரிங் காலேஜ் முடித்து பத்து வருடத்திற்கு மேலே ஆகிறது. படித்து முடித்த காலத்தில் சொந்தமாகத் தொழில் செய்ய வேண்டும், நிறையப் பேருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்ற இலட்சியத்தில் அட்டைப் பெட்டி தாரிக்கும் ஃபேக்டரி ஒன்று அமைத்தார். அதெல்லாம் வேலைக்கு உதவாமல் போனது. நிறைய நட்டமடைந்தார். பிறகு இதெல்லாம் கதைக்கு ஆகாதென்று முடிவு செய்து சில காலம் ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தார்.

அந்தச் சமயத்தில்தான் தட்டுத் தடுமாறி ஈரோட்டில் ஒரு முட்டுச் சந்துக்குள் இருந்த கம்ப்யூட்டர் சென்டர் ஒன்றைத் தேடிப்பிடித்து மெயின்ஃபிரோமோ, சைடுஃபிரேமோ எதோ ஒரு கோர்ஸ் படித்தார். நண்பர்கள் சிலர் கொடுத்த ஊக்கத்தில் போலியான அனுபவம் இருப்பது போல தனது ஆவணங்களைத் தயார் செய்து, அவருக்குப் பதிலாக வேறு யாரையோ டெலிபோனில் இன்டெர்வியூ செய்ய வைத்து வேலை வாங்கி விட்டார். இப்படித்தான் அவரது சாஃப்ட்வேர் பிரவேசம் நிகழ்ந்தது.

ஆனால், மனிதர் கெட்டிக்காரர். வேலைக்குச் சேர்ந்தவுடன் நன்றாகத் தொழில் கற்றுக் கொண்டார். தொழில் என்றவுடன் வழக்கமாக புரோகிராம் எழுதுவது, அதில் உள்ள பூச்சிகளைத் தேடிப்பிடித்துக் களைவது போன்ற பணிகள் மட்டுந்தான் என்றில்லை. கூடவே அரசியலும், யாருக்கும் தெரியாமல் மற்றவர் காலை வாரி விட்டு முன்னுக்கு வருதல் முதலிய அத்தியாவசியமான கலைகளையும் வெகு விரைவில் கற்றுத் தேர்ந்தார்.
அப்படிப்பட்ட அரசியல் சாணக்கியத்தனம் அவருக்கு அமெரிக்காவில் ஆன்சைட் வாய்ப்பைப் பெற உதவியது. இதுதான் அவர் அமெரிக்க வருவதற்கான கதைச் சுருக்கம். அவர் வந்திறங்கிய ஜனவரி முதல் வாரம் இந்த சிகாகோ மாநகரம் குளிரும், காற்றும், பனியும் கலந்து அவரை வரவேற்றது.

அவருடை ஆரம்ப நாட்களில் அவருக்கு வெங்கட ராச்சூரி என்ற நபர் உதவுவார் என்று பெங்களூர் அலுவலகத்தில் சொல்லி அனுப்பியிருந்தார்கள். ராச்சூரி தெலுங்கானாக்கார். ராய்ச்சூர் என்பது அவர்களது பூர்வீகமாக இருந்தபடியால் குடும்பத்தில் அத்தனை பேருக்கும் ராச்சூரி என்பது இரண்டாவது பெயராக இருக்கிறதாம்.

எது எப்படியோ, வந்திறங்கிய ஆரம்ப நாட்களில் ராச்சூரி ஜோசப்புக்கு பெரிதும் உதவினான். வால்மார்ட், இந்தியப் பல சரக்கு மளிகைக் கடை, இந்திடய உணவகம், சைனீஸ் உணவகம் என எல்லா இடத்தையும் வஞ்சனியில்லாமல் தாராளமாகச் சுற்றிக் காட்டினான். நன்றாகச் சாப்பிட்டனர்.

முதல் ஒரு வாரத்தில் எல்லாச் செலவுகளையும் கம்பெனி ஏற்றுக் கொள்ளும். இவரோடு ராச்சூரி இணைந்து சாப்பிட்ட பில் எல்லாத்தையும் கம்பெனி கணக்கில் சேர்த்து விட்டார். அவன் முன்னைப் பின்னே சோற்றையே பார்க்காதவன் போல அந்த ஊரில் இருந்த எல்லா ரெஸ்டாரண்ட்களிலும் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி சாப்பிட்டுக் கொண்டான்.

"இதே மாதிரி வாரா வாரம் புதுசா ஒருத்தரை அனுப்பிட்டே இருக்கச் சொல்லி ஹெக்டே கிட்ட சொல்லப் போறேன்" என்பான்.

ஹெக்டே என்பவர் அவர்களுக்கு மேனேஜராக பெங்களூரில் இருந்து செயல்பட்டு வந்தார்.

அமெரிக்க வாழ் 'தேசி' இந்தியர்களைப் பற்றி, அதிலும் இந்த ராச்சூரி மாதிரி 'ரக ரகங்கா உன்ன' மனிதர்களைப் பற்றி ஜோசப் ஏற்கனவே தெரிந்து வைத்திருந்ததால் அவருக்கு இது வேடிக்கையாகப் படவில்லை.

ஒரு வாரத்திற்கு மேல் சுயமாக வீடு தேடி செட்டில் ஆக வேண்டும் என்பது அவர்கள் கம்பெனியின் விதி முறை. அதற்கு மேல் ஹோட்டலில் தங்குவதற்கு ஆகும் செலவை நிர்வாகம் ஏற்காது.

தற்போது தனியாக வாடகைக்கு வீடு எடுத்துத் தங்குவது நல்லதல்ல என்று முடிவு செய்து, குடும்பத்தினர் வரும் வரை வேறு யாரோடாவது சேர்ந்து இருக்க விரும்பித் தேடினார். அப்போது கிடைத்தவன்தான் சந்திரன்.
சந்திரன் மிகவும் சுவாரசியமான பாத்திரம். பார்ப்பதற்குப் பொறுக்கி போலத் தோற்றமளிப்பவன்.

"எங்கிட்டப் பேசும் போதே பொண்ணுங்க எல்லாம் மாருக்குக் குறுக்கே கையை கவர் பண்ணிக்கிட்டுத்தான் பேசுவாங்க" என்று சொல்லிக் கொள்வான்.

தான் உண்டு தன் வேலை உண்டு என்று சில நேரமும், மற்றவர்களை எல்லாம் கேலி செய்து சில நேரமும் கவலை இல்லாமல் காலத்தைக் கழித்து வந்தவன். ஆனால், அடிப்படையில் மிகவும் நல்லவன். அந்த ஊரின் பல உணவகங்களிலும், கேஸ் ஸ்டேஷனிலும் சந்திரன் பகுதி நேர வேலை செய்து கொண்டிருந்தான். மீதமிருந்த நேரத்தில் ஒரு பல்கலைக் கழகத்தில் எம்.எஸ். படித்தான்.

ராச்சூரிக்கு சமீபத்தில் திருமணம் ஆகியிருந்தது. செழிப்பான தேகம் கொண்ட ஒரு பெண்ணை எண்பது இலட்சம் வரதட்சணையோடு விஜயவாடாவிலிருந்து தள்ளிக் கொண்டு வந்திருந்தான்.

ராச்சூரி தனது மனைவியோடு குடியிருந்த வீடு சந்திரன் வீட்டுக்கு அருகில் இருந்தது. வீட்டுக்கும் ஆஃபீஸுக்கும் ஐந்து மைல் தொலை. ராச்சூரியும் ஜோசப் வேலை பார்க்கும் அதே அலுவகம் செல்பவன். ஆகையால், அவனே தினமும் தன்னோடு கூட்டிச் செல்வதாக முன்வந்தான்.

ஜோசப் சின்னத்தம்பி கார் வாங்கும் நோக்கத்தோடு தேடியபோது, "உங்களுக்குத்தான் நான் இருக்கேனல்லவா? பிறகு எதற்கு கார்?
வெட்டிச் செலவு. இப்ப வேண்டாம்" என்று தெங்கிலீசில் கூறுவான்.

இவ்வளவு நல்லவனாக இருக்கிறானே என்ற மதிப்பில் ஜோசப் மெய்சிலிர்த்துப் போவார். ஒரு நாள் காருக்கு எரிபொருள் நிரப்பும் போது,

"இந்த முறை நான் பணம் செலுத்துகிறேன். நானும் ஷேர் பண்ணறதுதானே நியாயம்?" என்றார் ஜோசப்.

"நீங்க சொன்னாலும் சொல்லாடியும் ஷேர் பண்ணனும். ஒட்டு மொத்தமா கணக்குப் போட்டு அப்புறம் சொல்றேன்" என்று அவனே கிரெடிட் கார்டைத் தேய்த்தான்.

தினமும் போய் வர பத்து மைல். மாதம் 22 நாளுக்கு 220 மைல். ராச்சூரியின் கார் ஒரு கேலனுக்கு 30 மைல் கொடுத்தாலும் 7.33 கேலன் பெட்ரோல் போட வேண்டும். ஒரு கேலன் 2.25 டாலர் என்றால் மாதச் செலவு $16.50. அதில் பாதி எட்டே கால் டாலர். சரி முழுத்தொகையாக இருக்கட்டும் என்று அவனுக்கு பத்து டாலர் கொடுக்கத் தீர்மானித்து வைத்துக் கொண்டார் ஜோசப்.

தீர்மானத்தை எடுத்திருந்த சுபயோக சுபதினத்தன்று காலை பத்து மணிக்கு மின்னஞ்சலில் ஒரு வெடிகுண்டு அவருக்கு வந்தது. அது ராச்சூரியின் பெயரைத் தாங்கியிருந்தது.

"நான் மாதாமாதம் அலுவலகம் அழைத்து வருவதற்கு 150 டாலர் வசூலிப்பேன். ஏதாவது கேள்வி இருந்தால் தெரிவிக்கவும், விவாதிக்கலாம்" என்று அதில் இருந்தது.

அன்று சாயங்காலம் தனது மின்னஞ்சலையும், கட்டணத்தையும் நியாயப்படுத்தினான்.

"சூடண்டி" என்று தெலுங்கில் ஆரம்பித்து வார்ம்-அப் ஆகி ஆங்கிலத்தில் தொடர்ந்தான்.

"தினம் ஆபீஸுக்கு டாக்ஸில வந்தா 15 டாலர் ஆகும். போய் வர முப்பது டாலர். ஒரு மாசத்துக்குக் கணக்குப் போட்டா 660 டாலர். நான் அதுல கால்வாசி கூடக் கேக்கலியே?" என்றான்.

"நீ என்ன டேக்ஸியா ஓட்டறே. இதெல்லாம் ஓவருப்ப்பா"

"சரி இப்படிப் பாருங்க. நீங்க கார் வாங்கினா என்ன செலவு ஆகும்னு. இன்சூரன்ஸே மாசம் 100 டாலர் ஆகும். அப்புறம் பெட்ரோல் போடணும். போதாக்கொறைக்கு லோன் தவணை வேற இருக்கு. இப்படி எல்லாத்தையும் கணக்குப் போட்டுப் பாத்தா புரியும்"

"எனக்கு வேற வழி இல்லேன்னுதானே இப்படி எல்லாம் பேசறே?"

சற்று நேரம் அமைதியாக இருந்து விட்டு, "அப்போ நாளைக்கு காலைல வேற ஏற்பாடு பண்ணீட்ட மாதிரித் தெரியுது" என்றான்.

"வேற ஏற்பாடெல்லாம் இல்லை. இருந்தாலும் 150 டாலர்னு சொல்றது உனக்கே ஓவராத் தெரியலையா?"

"நான் வந்த புதுசுல மத்தவங்களுக்கு என்ன கொடுத்தனோ அதைத்தான் இப்பக் கேக்கிறேன். உங்க ரூம் மேட் சந்திரன் ஒரு வாரம் என்னை டிராப் செஞ்சதுக்கு 50 குடுத்தேன்."

" "

"சரி. நீங்க வண்டி வச்சிருந்து என்னைக் கூட்டிட்டு வந்தா எவ்வளவு வாங்குவீங்க?" என்று புத்திசாலித்தனமாக நினைத்துக் கொண்டு கேட்டான்.

"அதெல்லாம் எதுக்கு வேண்டாம் விடு"

"அட..சொல்ல வேண்டியதுதானே" நக்கலாக.

"நான் இதுக்கெல்லாம் கீழ்த்தரமா காசு வாங்க மாட்டேன்"

அவனுக்குச் சுருக்கென்று குத்தியிருக்க வேண்டும்.

"அப்ப ஒன்னு பண்ணுங்க. உடனே கார் வாங்குங்க. நான் உங்க கூட தினனமும் வந்துக்கறேன்"

"அதனாலதான் சொன்னேன். அதைப் பத்திப் பேச வேண்டாம்னு. இதைப் பத்தி விவாதிக்க எனக்கு அசிங்கமா இருக்கு. நீ கேக்கறதைக் குடுக்கறேன். அதோட நிறுத்திக்கலாம்" என்று முடித்தார்.

இரவு இது குறித்து வீட்டில் சந்திரனிடன் விவாதித்தார். அவனுக்கு ராச்சூரி பணம் கொடுத்ததாகச் சொன்னதைக் கேட்டு கடுங்கோபம் கொண்டான்.

"நாறக் கூ* நான்சென்ஸ்.." என்று ராச்சூரியை அவன் தொடங்கிய வசை தொடர்ந்தது.

ராச்சூரி வந்த புதிதில் அவனை அலுவலகத்தில் இறக்கி விட்ட பின் வேறு திசையில் அமைந்துள்ள தன் பல்கலைக் கழத்திற்கு சந்திரன் போனான். இதை மனிதாபிமான அடிப்படையில் உதவியாகச் செய்தானே ஒழிய பணம் எதுவும் எதிர்பார்க்கவும் இல்லை, பெற்றுக் கொள்ளவும் இல்லை. அப்படிப்பட்டவன் மீதே இப்படிக் குற்றம் சுமத்தும் ராச்சூரியை இரண்டு பேரும் வேடிக்கையாக நினைத்தார்கள். இரண்டு பேரும் ஒன்றாகத் தங்கியிருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது ஒருத்தரைப் பற்றை இன்னொருவரிடம் பொய் சொன்னால் அது வெளிப்பட்டு விடும் என்று யோசிக்க மாட்டானா?

வேறு வழியில்லாமல் ராச்சூரியுடன் ஆஃபீஸ் போய் வந்தார் ஜோசப். ஆனால் முன்பு போல அவன் பேசும் கேனைத் தனமான பேச்சில் எவ்வித ஈடுபாடும் காட்டுவதில்லை. பணம் கொடுத்து ஒரு சேவையைப் பெறும் போது உண்மையான உதவும் குணம் அடிபட்டுப் போய், ஒரு வியாபாரிக்கும் வாடிக்கையாளனுக்கும் இடையேயான, இன்னமும் சொன்னால் ஒரு வாகன ஓட்டிக்கும் சவாரி செய்பவனுக்கும் இடையேயான வர்த்தக ரீதியான உறவு என்ற எல்லையோடு நின்று போகிறது.

இப்படியே ஒரு மாதம் நீடித்தது. நேற்று வெள்ளிக் கிழமை மதியம் ராச்சூரி தனது இரண்டாவது வெடி குண்டை மின்னஞ்சலில் அனுப்பும் வரை எல்லாம் வழக்கமாக இருந்தது.

"நாளை முதல் நான் காரில் ஏற்றிக் கொள்ள மாட்டேன். வேறு வழி பார்த்துக் கொள்ளவும்" என்று அதில் எழுதப்பட்டிருந்தது.

இரண்டு நாளுக்குள் கார் வாங்கியே தீர வேண்டும் என்று ஜோசப் கங்கணம் கட்டியதற்கான இரண்டாவது காரணம் இதுவாகும்.

பழைய இரண்டாம் கை விற்பனை விளம்பரங்கள் பற்றிய இணையத் தளங்களை மேய்ந்து கொண்டிருக்கிறார். அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் அவரால் கொடுக்க முடிகிற பட்ஜெட்டுக்குள் தேறுவதை எல்லாம் குறித்து வைத்துக் கொண்டார். வேறு ஒரு வெப்சைட்டில் கார் மாடல், வருடம், அது ஓடிய மைல் தூரம், அதன் கன்டிஷன் இவற்றுக்கு ஏற்ப கொடுக்கத் தகுந்த விலையை பிரசுரித்திருந்தார்கள். அடுத்த கட்டமாக அவன் குறித்து வைத்த விளம்பரங்களின் விலையை கார் உரிமையாளர் கூறும் இந்த விலையோடு ஒப்பிட்டார். தோதானவற்றை மட்டும் வடி கட்டிப் பிரித்தார். பிறகு அதிலிருந்த நம்பருக்கெல்லாம் போன் செய்யத் துவங்கினார்.
எதிர் முனையில் கரகரத்த குரலில் ஒருவன் பேசினான்.

"நீங்க கிளம்பி வந்தா காரை இப்பவே பாக்கலாம்"

அந்த இடம் 40 மைல் தொலைவில் இருந்தது. சந்திரன் கார் அப்போது இல்லை. அவன் இரண்டு நாட்களுக்கு முன்னர் குடித்து விட்டு ஒரு மான் மீது மோதியதில் சேதாரமாகி மெக்கானிக் ஷாப்பில் விட்டிருக்கிறான். ஆனால், எப்படியும் போயாக வேண்டும் என்று தீர்மானமாக இருந்த ஜோசப் ரென்டல் கார் கம்பெனிக்கு போன் செய்தார். சனிக்கிழமை மதியம் 12 மணிக்குக் கடையை மூடி விடுவோம் என்று சொன்னார்கள். அதற்குள் அவசரமாக ஓடிச் சென்று அவர்கள் கிளம்புவதற்கு ஐந்து நிமிடம் முன்னதாக ஒரு வண்டியை எடுத்துக்கொண்டார்.

அந்த டீலர் குறிப்பிட்ட இடத்தின் ரூட் மேப்புடன் கூடிய பயணத் திசையை எடுத்துக் கொண்டு சென்றடைவதற்கு ஒரு மணி நேரம் ஆனது. ஊரின் ஒதுக்குப் புறமாக அந்த இடம் இருந்தது. பழைய தகர டின் வேய்ந்த துருப்பிடித்த கூரையின் கீழ் 'அலுவலகம்' என்று அங்கிருந்தவன் சொல்லிய அந்தக் கூடாரம் இருந்தது. அங்கே இரண்டு மெக்சிகோக்காரர்களை ஜோசப்பும் சந்திரனும் கண்டனர்.

அவர்கள் எதிர்பார்த்து வந்த காரை எடுத்து வெள்ளோட்டம் பார்த்தார்கள். அதை வாங்கி அங்கிருந்து வீட்டுக்கு ஓட்டிச் செல்வதற்குள் சக்கரம் கழண்டு ஓடிவிடும்; இல்லாவிட்டால் எஞ்சின் நின்றுவிடும் என்று அப்பட்டமாகத் தெரிந்தது. மீறி மீறிக் கொடுத்தால் 500 டாலர் கொடுக்கலாம். அதற்கு மேல் உதவாது என்று சந்திரன் அதை நிராகரித்தான்.

ஆறு வருடம் பழைய மற்றொரு கார் நின்றது. அதை ஓட்டிப் பார்த்தபோது அவர்களுக்குப் பிடித்திருந்தது. ஒரு இலட்சம் மைல் ஓடிய அந்த வண்டிக்கு ஏழாயிரம் டாலர் சொன்னார்கள்.

"அவசரப்பட்டு கமிட் ஆக வேண்டாம். கார்ஃபேக்ஸ் ரிப்போர்ட் பாத்துட்டு ஃபைனல் டெசிஷன் எடுக்கலாம். அவன் கிட்ட சொல்லிட்டு வின் நம்பர் வாங்கிட்டு வாங்க"

"நாங்க எதிர்பார்த்து வந்த வண்டி பிடிக்கலை. ஆனா, இந்த வண்டு ஓகே. வின் நம்பர் குடுங்க. நாங்க போய் கார்ஃபேக்ஸ் பாத்துட்டு கால் பண்றோம்" என்றார் ஜோசப்.

ஆனால் அவருக்கு கார்ஃபேக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாதது வேறு விஷயம்.

அவர்கள் வரும் வழியில் சாப்பிட்டு விட்டு வீடு திரும்புவதற்குள் மாலை ஆகி விட்டிருந்தது.

"கார்ஃபேக்ஸ்னா என்ன சந்திரா?" என்று மெதுவாகப் பேச்சுக் கொடுத்தார்.

"அது ஒன்னும் இல்லைங்க. எல்லாக் காருக்கும் அதோட ஹிஸ்டரி எல்லாம் கலெக்ட் பண்ணி ஒரு வெப்சைட்ல போட்டு வெச்சிருப்பாங்க. நாம கார் வின் நம்பெர மட்டும் வச்சு அதை எடுக்கலாம். வண்டி ஆக்சிடண்ட் ஆகிருக்கா, ஸ்பீட்டொ மீட்டர் ரீடிங் மாத்தீருக்காங்களா, வண்டிக்கு எத்தனை ஓனர் மாதிரி எல்லா விவரமும் கிடைக்கும். அதைப் பாத்து கன்ஃபர்ம் செஞ்சிட்டு வாங்கறது நல்லது. மறுபடியும் விக்கும் போது பிரச்சினை இருக்காது"

"சூப்பர். அவன் கொடுத்த வின் நம்பரை வெச்சுப் பாரு"

"சும்மா வராதுங்க. 25 ருபா பணம் கட்டி ஒரு மாசம் மெம்பர்ஷிப் எடுக்கணும்"

அவர்கள் மொழியின் அகராதியில் ரூபாய் என்றால் டாலர் என்று குறிக்கப்பட்டிருந்தது.

உடனே செய்தார். ரிப்போர்ட் பார்த்தார்கள். இரண்டு விபத்துக்கள் அந்தக் காருக்கு நடந்திருந்தது.

ஜோசப் மேற்கொண்டு அதை விட்டுவிட்டு மடிக்கணின்னிக்குள் புகுந்து தேடுதல் வேட்டையை விட்ட இடத்திலிருந்து மறுபடியும் தொடர்ந்தார். ஒரு காரைப் பார்த்தார். அதைப் பற்றிய விளக்கம் நேர்மையாக எழுதப்பட்டிருப்பது போலத் தோன்றியது. அதில் கண்ட எண்ணை அழைத்தார். எதிர் முனையில் ஒரு பெண் பேசினார்.

அவரது குரலையும், உச்சரிப்பையும் வைத்து இந்தியப் பெண் என்று தீர்மானிக்க ஜோசப்புக்கு நீண்ட நேரமாகவில்லை.

"நாளைக்கு காரைப் பாக்க வரலாமா?"

"வாங்க. பதொனொரு மணிக்கு இன்னொருத்கர் வருவதாச் சொன்னார். அது தவிர எப்ப வேணாலும் வாங்க"

"அப்ப நாங்க பத்து மணிக்கு வாறோம்"

"சரி அட்ரஸ் எழுதிக்குங்க"

சொன்னாள். குறித்துக் கொண்டார்.

அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை. காலை அரைத் தூக்கத்தில் இருந்த சந்திரனை எழுப்பி நேற்று எடுத்த வாடகைக் காருக்குள் தூக்கிப் போட்டுக் கொண்டு புறப்பட்டார்.

பிரதானச் சாலையிலிருந்து விலகி அவள் குடியிருப்புப் பகுதியில் வீட்டை அடைவதில் குழம்பினார்கள்.

சந்திரன் செல்போனில் கூப்பிட்டான். சமீபத்தில் இருந்தார்கள்.

"போனை வெச்சுராதீங்க. நாங்க டைரக்ஷ கன்ஃபர்ம் பண்ணிட்டே வர்றோம்" என்று அவன் சொன்னான். அந்தப் பெண் கூறுவதை அப்படியே ஜோசப்பிடம் தெரிவித்து அவர் சரியான இடத்தை அடைய அவன் உதவினான்.

அந்தப் பெண் ஏற்கனவே வீட்டை விட்டு வெளியே வந்து காருக்கு அருகே நின்று கொண்டிருந்தார்.

இவர்கள் வந்த காரிலிருந்து இறங்கும் முன்பாகவே, "உருளைக் கிழங்குக்கு ஜீன்ஸ் போட்ட மாதிரி" என்று ஜோசப் நினைத்தார்.

சந்திரன், கண்ணை ஒரு தடவை மூடித் திறந்து, கதாநாயகனிடம் அடி வாங்கி காட்சி மங்கலாகத் தெரியும் வில்லனின் அடியாள் தலையை உதறுவதைப் போல ஒரு முறை உதறி விட்டு, கண்ணைத் துடைத்து நன்றாகப் பார்த்தான்.

"ஜீன்ஸ் போட்ட ஜிகிடி" என்று ஜோசப்பிற்கு மட்டும் கேட்குமாறு கமெண்ட் அடித்தான்.

காரை நிறுத்தி விட்டு இறங்கிச் சென்று அந்த அம்மையாரை அணுகினார்கள்.

"ஆர் யூ மஞ்சு" ஜோசப் வினவினார்.

"யெஸ். இட்ஸ் மீ" என்றவள் "சாவி இந்தாங்க. ஒரு டிரை போய்ட்டு வாங்க. மத்ததை அப்புறம் பேசிக்கலாம்" என்று நீட்டினாள்.

அந்த வண்டியை ஜோசப் எடுத்தார். சந்திரன் கூட அமர்ந்து கொண்டு சென்றான். அரை மைல் தாண்டியதும் வண்டியை நிறுத்தி ஹ¤ட்டைத் தூக்கி விட்டு எஞ்சினை ஆராய்ந்தார்கள். பிறகு சந்திரன் ஓட்டிப் பார்த்தான்.

"நல்ல கன்டிஷன்ல இருக்குங்க ஜோசப். யோசிக்காம வாங்கிடுங்க" என்று சான்றிதழ் கொடுத்தான்.

அவர்கள் திரும்பி வரும் வரை மஞ்சு காத்திக் கொண்டிருந்தார்/ள். அவள் போட்டிருந்த ஜீன்ஸ் பேண்ட் சராசரிக்கும் சற்று அதிகமாகப் தொடையை இறுகக் கவ்வியிருந்ததை இருவருமே கவனிக்கத் தவறவில்லை.

சந்திரன்தான் பேச்சை ஆரம்பித்தான்.

"நாங்க வெற கொஞ்சம் விஷயத்தைத் தெரிஞ்சிக்கிட்டு முடிவு செய்யலாம்னு நினைக்கிறோம்"

"வாங்க உள்ளே போய்ப் பேசலாம்" என்று மஞ்சு அழைத்துப் போனாள். சுமார் முப்பது அல்லது முப்பத்திரண்டு வயது இருக்கலாம்.

"கார் சர்வீஸ் ரெசீப்ட் எல்லாம் வச்சிருக்கீங்களா?"

"டைமிங் பெல்ட் எப்போ கடைசியா மாத்தினீங்க?"

"எதுக்கு வண்டியை விக்கறீங்க. வேற கார் வாங்க உத்தேசமா? இல்லாட்டி இந்தியா போறீங்களா?"

"ஓ..அப்படியா.. டைமிங் பெல்ட் மாத்த 400 டாலர் ஆகும். ரொம்ப நாள் ஓடிருச்சு. அதை விலையில அட்ஜஸ்ட் செஞ்சு குறைக்க முடியுமா?"

இரண்டு பேரும் இப்படிச் சரமாரியாகக் கேள்விகள் கேட்டாலும் மஞ்சு சளைக்கவில்லை. பதில் கூறினாள், சிரித்துக் கொண்டே பேரம் பேசினாள். ஒரு வழியாக விலையை முடிவு செய்தார்கள்.

"வேண்டுமானால் பக்கத்தில் ஒரு சர்வீஸ் ஸ்டேஷன் இருக்கு. முடிவு செய்யும் முன்னாடி ஒரு தரம் செக் பண்ணிக்குங்க" என்று தாராளமாகச் சொன்னாள். ஆனால் ஜோசப் மறுத்து விட்டார்.

தேங்காய் எண்ணெயாகச் சாப்பிட்டு மெருகேறியிருந்த அவளது மேனி வனப்பை ஜோசப் ரசிக்கத் தவறவில்லை என்றாலும், அவரது நோக்கம் கார் மீதும், ராச்சூரி கொடுத்திட்ட காழ்ப்புணர்ச்சியைத் துடைத்தெறிவதன் மீதும் கவிந்திருந்தது. அதனால் கார் தொடர்பான கேள்விகளை மட்டும் அவர் கேட்டார்.

சந்திரன் மட்டும் சற்று முன்னேறி பர்சனல் கேள்விகளைக் கேட்டான். அதில் சில விவரம் தேறியது. அந்தப் பெண் திருமணமானவள். ஆறு வயதில் ஒரு பையன் இருக்கிறான். கணவர் மும்பைத் துறைமுகத்தில் பணியாற்றுகிறார். மகன் அங்கே பள்ளிக் கூடம் செல்கிறான். மகனை மிகவும் மிஸ் செய்கிறாளாம். அதனால் புராஜெக்ட்டில் இருந்து முன் கூட்டியே விடுவித்துக் கொண்டு மும்பை பறக்கப் போகிறாள். அதற்காகத்தான் காரை விற்கிறாள்.

சில பேருக்கு கன்னி ராசி. ஆனால் சந்திரனுக்கு ஆன்ட்டி ராசி என்று சொல்லலாம். நாலைந்து வயது கூட இருந்தாலும் கல்யாணம் ஆன பெண்கள் எல்லோரும் அவனைப் பொறுத்த வரை ஆன்ட்டி.

வேண்டாவெறுப்பாக அரைத் தூக்கத்தில் எழுந்து வந்தவன் இந்நேரம் உற்சாகமாகி விட்டான்.

அவன் சிரித்துச் சிரித்து குறும்பாகப் பேசியது இரண்டு வருட காலம் தனிமையில் துருப்பிடித்துப் போயிருந்த மஞ்சுவின் சிலிர்ப்பு மூட்டும் நரம்புகளை மீட்டியது.

அந்த வீட்டின் ஹாலில் அவர்கள் அமர்ந்து பேசிக் கொன்டிருந்தனர். அதன் ஒரு மூலையில் சாய்பாபா படமும், பூசைப் பொருட்களும் இறைந்து கிடந்தன. அதற்குப் பக்கத்தில் சில ஆன்மீகப் புத்தகங்கள் இருந்தன. சுவற்றில் மஞ்சுவின் மகன் அவளை வரைந்து அனுப்பியிருந்த கேலிச் சித்திரம் பெரிதாக்கி மாட்டப்பட்டிருந்தது. சமையல் செய்யும் பகுதியில் பாத்திரங்கள் கழுவாமல் ஒரு பேச்சுலர் அறையைப் போல ஒழுங்கின்றிக் கிடந்தன. ஹாலின் இன்னொரு மூலையில் உடற்பயிற்சி செய்வதற்கான எடைச் சாதனம் இருந்தது.

அந்த அறையில் இருந்த பொருட்கள் எல்லாம் தனிமையில் இருக்கும் ஒரு பெண் அதன் கொடுமையில் இருந்து மீண்டு வர ஆன்மீகம் முதல் உடற்பயிற்சி வரை எல்லா வழிகளையும் முயன்று பார்த்ததைப் பறைசாற்றின.

"எக்சசைஸ் எல்லாம் செய்வீங்களா மஞ்சு? அதான் பாடியை கும்முன்னு மெயிண்டெய்ன் பண்றீங்க" சந்திரன் கேட்ட கேள்விக்கு வெட்கப்பட்டாள்.

"அய்யோ இல்லை. அது லைட் வெயிட்" என்று சிணுங்கினாள்.

சந்திரனும், மஞ்சுவும் சுமார் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

ஜோசப் வெறும் பார்வையாளராக பொறாமையுடன் உட்கார்ந்திருந்தார்.

"உங்களுக்கு என்ன பேர்ல செக் எழுதணும்?" அவர்கள் உரையாடலைக் கலைக்க அவரால் முடிந்ததைச் செய்தார்.

"மஞ்சுளா மேனன்" தலை முடியைக் கோதிக் கொண்டே அவள் சொல்லும் போது அழகாகத் தெரிந்தாள்.

காசோலையில் பெயரையும், தொகையையும் ஜோசப் எழுதினார்.

"அப்புறம் மஞ்சு, நீங்க டைட்டில் டிரான்ஸ்ஃபர் பண்ணும் போது விலை ஜீரோன்னு போட்டு கிஃப்ட்னு மென்ஷன் பண்ணுங்க. இல்லாட்டி இவர் தேவையில்லாமல் டேக்ஸ் கட்டணும்" - சந்திரன்.

"இதைக் கேட்டு விட்டு, "லுக் ..ஹீ இஸ் ஸ்மார்ட்" என்று ஜோசப்பை நோக்கி சந்திரனைப் பற்றிக் குறிப்பிட்டாள்.

"யான் ஸ்மார்ட் அல்லே சேச்சி. நிங்க தன்னே ஸ்மார்ட்" என்று அவன் சூர்யா டி.வி.தயவில் கற்று வைத்திருந்த மலையாளத்தில் சொல்ல அவள் கிளீன் போல்ட் ஆகியிருக்க வேண்டும்.

இவனுக்கு மலையாளம் தெரியுமா என்ற ஆச்சரியம் ஒரு பக்கம், சேச்சி என்று அழைத்து விட்டானே என்ற பொய்க் கோபம் இன்னொரு பக்கம் இரண்டையும் முகத்தில் கலந்து முகத்தில் வெளிக்காட்டி,

"சேச்சியோ?" என்றாள்.

மேலும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"இதானே ரெஸ்ட் ரூம்?" சந்திரன் அவனுக்கு எதிர்த்திசையிலிருந்த கதவைச் சுட்டிக் கேட்டான்.

"ஆமா.." என்றவள் "ஒரு நிமிசம்" என்று சொல்லி விட்டு அவசரமாக உள்ளே போனாள்.

ஒரு நிமிடம் கழித்து வந்தாள். அது வரை இவர்கள் இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டனர்.

சந்திரன் உள்ளே போனான். ஜோசப் மஞ்சுவிடம் பேசினார்.

"அப்ப சரி. நாங்க கிளம்பறோம். இந்தாங்க செக். டைட்டில் சைன் பண்ணி குடுங்க"

"ஒரு நிமிஷம். உங்க ஃபிரண்ட் வரட்டுமே!!"

சந்திரன் நீண்ட நேரம் எடுக்கவில்லை. உடனே வந்தான். வந்தவுடன் சொன்னான்

"டைட்டில்ல இப்ப சைன் போட்டா செல்லாது. நோட்டரி முன்னாடி போடணும்... மஞ்சு இங்கே பக்கத்துல நோட்டரி யாராவது இருக்காங்களா?"

"நான் பேங்க்ல போன் பண்ணி கேக்கட்டுமா?" என்ற கேட்டு விட்டு அந்தக் கேள்விக்கு பதில் வரும் வரை காத்திராமல் போனில் நம்பரை அமுக்கினாள்.

"ஹை....திஸ் இஸ் மஞ்சு மேனன்...."

எதிர் முனையில் என்ன சொன்னார்களோ தெரியவில்லை.

"இன்னிக்கு சன்டே லீவாம். இன்னொரு நாள் பண்ணிக்கலாம். மே பி டுமாரோ. செக் நான் அப்பவே வாங்கிக்கறேன்" என்றாள்.

காலணியை மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பும் போது சந்திரன் கேட்டான். "என்னங்க..இவ்வளவு நேரம் இருந்தோம். ஒரு காஃபி குடுக்கக் கூடாதா?"

"சாரி..சந்தர்..காஃபி தூள் தீந்துடுச்சு.."

"அப்போ வெளியில ஸ்டார்-பக் காஃபி வாங்கித் தாங்க. கேப்பச்சினோ" உரிமையோடு அழைத்தான்.

அவள் தயங்கினாள். ரூபாயில் கணக்குப் போட்டாளோ என்னவோ!

"எனக்கு இப்ப காஃபி வேணும். நீங்க வாங்கித் தர வேண்டாம். நான் வாங்குறேன். பிளீஸ் கம்" சந்திரன் அழைப்பை அவள் தட்டவில்லை.

போனார்கள்.

திரும்பி வரும் போது, "ஜோசப் கிட்ட என்னோட நம்பர் இருக்கும். அதை வாங்கி முடிஞ்சா கால் பண்ணுங்க சந்தர். ஒரு மாசத்துல இந்தியா போய்ருவேன்" என்று அன்போடு ஆணையிட்டாள்.

விடை பெற்றுக் கொண்டார்கள்.

அவள் சந்திரனை இரண்டாவது முறையாக சந்தர் ஆக்கி விட்டதை அவன் கவனித்தான்.

அடுத்த நாள் திங்கட்கிழமையன்று ஜோசப் அலுவலகத்தில் ஒரு சம்பவம் நடந்தது. அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த மடிக்கணினி ஏதோ தகராறு செய்கிறதென்று சிஸ்டம் மெயின்டனென்ஸ் ஆட்களை அழைத்தார். மூன்று மாதத்தில் அந்த லேட்டாப் அவரிடம் சிக்கி படாதபாடு பட்டது என்றே கூறலாம்.

வீட்டில் இருந்தாலும் பிரச்சினை வரும் போது உடனுக்குடன் அதை அணுகி ஆராய்ந்து தீர்க்க வேண்டும் என்பதற்காக அதை அவருக்கு அளித்திருந்தனர்.
ஆனால் நம்மவரோ அதை விவகாரமாகப் பயன்படுத்தினார். சந்திரனோடு சேர்ந்து கொண்டு வேண்டாத விவகாரமான வீடியோப் படங்கள் பார்த்தார். கல்யாணமாகி ஏழு வருடம் கூடவே ஒட்டிக் கொண்டு அதிகாரம் செய்த மனைவியைப் பிரிந்திருக்கும் குறுகிய காலத்தின் சுதந்திரத்தை நன்றாக அனுபவித்தார். இப்படியெல்லாம் இருக்குமா என்பது மாதிரியான வெப்சைட்டுகளுக்குச் சென்று மேய்ந்தார். மூன்று மாதத்தில் வலது உள்ளங்கை ரேகை கொஞ்சம் தேய்ந்து போயிருந்தது.

கண்டபடி கம்ப்யூட்டரை உபயோகித்ததால் அதில் ஏதோ வைரஸ் தொற்றிக் கொண்டது. அதை நிவர்த்தி செய்வதற்காக வந்த சிஸ்டம் எஞ்சினியர் ஸ்கேன் ஓட்டினார். அதில் சில வீடியோ கோப்புகள் வந்து நின்றன. தமிழின் முண்ணனி நடிகை ஒருவர் குளியலறையில் குளிக்கும் காட்சியை யாரோ திருட்டுத்தனமாகப் படம் பிடித்து பரபரப்பை உருவாக்கிய வீடியோவும் அதில் ஒன்று. அதை சிஸ்டம் ஆள் திறந்து பார்த்து விட்டான். அவரிடம் எதுவும் கூறாமல் நேராகச் சென்று மேல் மட்ட நிர்வாகத்திடம் பற்ற வைத்தான். அவனுக்கு இந்தியர்களைக் கண்டால் பிடிக்காது.

"அலுவலக உடைமைகளை அலுவலகப் பணிகளைத் தவிர சொந்த விஷயங்களுக்காக துஷ்பிரயோகம் செய்ய மாட்டேன்" என்ற உறுதிமொழியை உடைத்த காரணத்தினால், ஐந்து நிமிட நேரம் கொடுத்து அதற்குள் அவரை நாகரிகமாக வெளியேறச் சொல்லி விட்டனர். பெங்களூரில் அர்த்த ராத்திரி உறங்கிக் கொண்டிருந்த ஹெக்டேவுக்கும் போன் போட்டு எழுப்பி விஷயத்தைச் சொன்னார்கள்.

விளைவு..> நமது ஜோசப் மறுபடியும் பெங்களூர் திரும்ப வேண்டும். அவரது மனைவியும், குழந்தைகளும் அமெரிக்கா வருவதற்குப் பதிலாக இவர் பெங்களூர் திரும்ப வேண்டியதாகி விட்டது.

நல்ல வேளையாக அவர் சார்ந்திருந்த கம்பெனி அவரை வேலையில் இருந்து துரத்தவில்லை. திரும்பவும் பெங்களூருக்கே அழைத்துக் கொண்டதில் அவருக்கு ஆறுதல்.

அபீஸிலிருந்து வெளியேற்றப்படும் போது "செத்தா சண்டையில சாகணும். இல்லாட்டி ***யில சாகணும்" என்று சந்திரன் சொன்னதை நினைத்துக் கொண்டார். சிரிப்பு வரவில்லை. தானோ, தன் வேலையோ சாகாமல் கார் வாங்கும் திட்டம் மட்டும்தான் அந்த மாதிரி விவகாரத்தினால் செத்தது. என்றாலும் கூட அதைப் பெருத்த அவமானமாக உணர்ந்தார்.

வெள்ளிக்கிழமை ஜோசப்பைக் காரில் ஏற்றமாட்டேன் என்று சொன்ன ராச்சூரிக்கு இன்னொரு ஆள் புதிதாகக் கிடைத்திருந்தான். அவனை பூனாவிலிருந்து தேர்ந்தெடுத்து கம்பெனி அனுப்பியிருந்தது.

"நல்ல வேளையா நீ வந்தப்போ நான் இங்கே உனக்கு உதவ இருக்கேன். நான் வரும் போதெல்லாம் யாருமே இல்லை. ரொம்ப கஷ்டப்பட்டேன்" என்று தன்னையும் தான் செய்யப் போகும் உதவியையும் அறிமுகப்படுத்திக் கொண்டான்.

அடுத்த ஒரு வாரத்திற்கு அங்கிருக்கும் இந்திய உணவகங்களில் எல்லாம் பூனாக்காரன் தயவில் அவனும் தின்று விட்டு, புதுப் பொண்டாட்டிக்கும் பார்சல் எடுத்துப் போவான் என்பது பாவம் அந்த மராட்டியனுக்குத் தெரிந்திருக்காது.

ஒரு வாரத்திற்குப் பிறகு ஒரு வெடி குண்டும், இன்னொரு ஆள் இந்தியாவிலிருந்து புதிதாக வரும் போது இன்னொரு வெடி குண்டும் மின்னஞ்சலில் அனுப்பப் போவதும் தெரியாது.

அந்தப் புதுப் பையனுக்குத் தற்போது தெரிந்ததெல்லாம் ராச்சூரி பிரதாபத்தின் தொடர்ச்சியாக நீளும், "போன வாரம் வரைக்கும் ஜோசப்புன்னு ஒரு ஆளை என் கூடத்தான் கூட்டிட்டு வந்தேன். அவன் சரியில்லை. கார் கதவை ஓங்கி அடிச்சான். அதான் வேண்டாம்னு சொல்லிட்டேன்" வாசகங்கள் மட்டுமே.

சந்திரன் என்ன செய்தான்? மஞ்சுளா சொன்னது போலவே ஜோசப்பிடம் போன் நம்பர் வாங்கிக் கால் செய்தான்.

"ஹலோ மஞ்சு"

"யா.. மஞ்சு ஹியர்"

"நான் சந்திரன் பேசறேன்"

"ஓ..சந்திரன்..சொல்லுங்க சொல்லுங்க"

"சாரிங்க. நேத்து சொன்ன மாதிரி எங்களால வர முடியாது. அவர் கார் வாங்குற ஐடியாவைக் கைவிட வேண்டிய சூழ்நிலை"

"பரவாயில்லை. சும்மா கூட நீங்க வரலாம். ............. நான் காஃபி பவுடர் வாங்கி வச்சிருக்கேன். வந்தீங்கன்னா ஒரு கப் குடிச்சிட்டு கொஞ்ச நேரம் பேசிட்டுப் போகலாம்"

"ம்ம்ம்.. குடிக்கலாம் குடிக்கலாம். ஆனால் என் கிட்டே கார் இல்லையே. அது மான் மேல மோதி ரிப்பேர் ஆகி நிக்குது. நடந்து வரச் சொல்றீங்களா?"

"உங்க கார் தானே மோதிருச்சு. என் கார் இருக்கே!! நானே வந்து பிக் பண்ணிக்கறேன். உங்க கூட சேர்ந்து காஃபி சாப்பிடணும்"

""

"ஒன்னு தெரியுமா சந்தர் உங்களுக்கு? என் கூட யாருமே இப்படிப் பேசினது இல்லை. பிளீஸ் பீ ரெடி"

கார் வாங்க நினைத்தவன் கதையை விட, அவனைக் கார் வாங்கத் தூண்டியவன் கதையை விட இது விறுவிறுப்பாக இருக்கிறதல்லவா?

சொந்தக் காரைக் கொண்டு போய் மானை மோதியவனைத் தாக்கிச் சாய்க்க ஒரு பெண் மான் காரோட்டிக் கொண்டு வருகிறது.

அதற்குப் பிறகு மஞ்சுவின் புராஜெக்ட் நீடித்ததா, அவளது பையன் மும்பையில் இருந்து கிளம்பி வந்து சிகாகோ ஸ்கூலில் சேர்ந்தானா, சந்திரன் எம்.எஸ். அரியர் வைக்காமல் முடித்தானா, மஞ்சுவின் கணவர் சுஜித் மேனன் மும்பைத் துறைமுகச் சுரங்கத் துறையில் கை நிறைய இலஞ்சம் வாங்குவதை நிறுத்தினாரா, வாரத்துக்கு ஒரு முறை அமெரிக்காவில் இருக்கும் மனைவிக்கு போன் பண்ணுவாரா என்பதெல்லாம் உங்கள் யூகத்திற்கே விடப்படுகின்றன.