Friday, March 30, 2007

மாடர்ன் மகாலச்சுமி

- குப்புசாமி செல்லமுத்து

என்னை நீங்க சுத்த (சுத்தாம இருக்கணும்னா வேண்டாம்) தமிழ்ல கூப்பிட்டா மதிவதனின்னு கூப்பிடலாம். எங்க அப்பா, அம்மா அதே பேரத்தான் வெச்சாங்க, சந்திரமுகின்னு. சந்திரன் எப்பவுமே வெள்ளையாத்தான் இருக்கணும்னு சட்டம் ஒன்னும் இல்லையே. அதே மாதிரி எப்பவும் இருட்டா இருக்கணும்ங்கற சட்டமும் இல்லை. நெலாவோட மூஞ்சி இப்படி அடிக்கடி மாறிக்கிட்டே இருக்கும். ஆனா, எம்மூஞ்சி அப்படியெல்லாம் கெடையாது. எப்பவும் ஒரே மாதிரித்தான் இருக்கும். முக்காவாசி கறுப்பு, சோப்புப் போட்டுக் கழுவினா மட்டும் கொஞ்சம் ஜொலிப்புன்னு சொல்லலாம். ஆனா, எனக்குத் தெரிஞ்சு இது வரைக்கும் நான் உட்பட யாருமே வெளுப்புனு ஒத்துக்கிட்டது கெடையாது.

எங்கப்பா திருப்பூர்ல பெரிய பிசினஸ்மேன். ஆனா, பெருசா வெளியில யாருக்கும் தெரியாது. பெரிய பெரிய பனியன் கம்பெனிகல்லாம் இருக்குல்லீங்களா, அவங்களுக்கு சில சமயம் ஆர்டர் கண்ணாபின்னான்னு வந்து சேந்துரும். அப்போ அவுங்களால சொன்ன நேரத்துக்கு வேலையச் செஞ்சு கொடுக்க முடியாது. அதனால, வெளில எதாவது சின்னக் கம்பெனிக்கு சப்-காண்ட்ராக்ட் குடுப்பாங்க. அந்த மாதிரி சப்-காண்ட்ராக்ட் எடுத்துச் செய்யறதுல எங்கப்பா கெட்டிக்காரரு. செல சமயம் பாத்தீங்கன்னா, பெரிய கம்பெனிக செய்யறத விட அதிக வேல எங்க பட்டறைலதான் நடக்கும். பெட்ரோல் வெலை 25 ரூபாய்க்கு இருந்த காலத்துலயே ஒரு வாரத்துக்கு லச்சக்கணக்குல லாபம் சம்பாரிப்பாரு எங்கப்பா. அதனால், என்னையச் சின்ன வயசுல இருந்தே கஷ்டம்னா என்னன்னே தெரியாம வளத்தீட்டாங்க.

இப்பக்கூட எனக்கு பணத்தோட மதிப்பே தெரியாது. நெனைச்ச வெளியே போவேன். செல்போனுக்கு நான் காலிங்-கார்டு வாங்கிப் போடற காசு நாட்டுல பாதிப் பேரு குடும்பச் செலவை எல்லாம் தாட்டி சேத்து வெக்கற அளவுக்கு இருக்கும்னா பாத்துக்குங்க. ஆனா, நான் ஒன்னும் ஊதாரி இல்லைங்க. பணக்காரத் திமிரு இருந்ததே இல்லை. இப்பவும் இல்லை. எனக்கு எது சரின்னு படுதோ அதெச் செய்வன்னு வெச்சுக்குங்களேன். ஆனா ஒன்னுங்க. என்னோட மனசாற யாருக்கும் தீங்கு நெனச்சதில்லை. அதே மாதிரி மனசால கஷ்டப்படுத்தினதும் இல்லை.

நான் வந்து ரொம்ப நல்ல பொண்ணு, எல்லாரு கிட்டேயும் நல்ல பழகுறேன் அப்படீங்கறதால காலேஜ்ல படிச்ச காலத்துல இருந்தே எனக்கு நெறைய பிரண்ட்ஸ் இருந்தாங்க. இப்பவும் ஆஃபீஸ்ல கூட வேல செய்யறவங்க நெறைய இருக்காங்க. ஆனா, என்னமோ தெரியல யாருமே இது வரைக்கும் என்னெப் பாத்து புடிச்சிருக்குன்னு சொன்னதில்லை. உங்கண்ணையே பாத்திட்டு இருக்கணும்னு யாராவது சொல்லக் கேக்கற அந்த சுகந்தமான அனுபவமே கெடைக்காமப் போயிருச்சு.

வேலைக்குச் சேந்த புதுசுல என்னச் சுத்தி எப்பவும் நாலஞ்சு பொண்ணுக இருப்பாங்க. கூத்து, கும்மாளம், கிண்டல்னு நேரம் போறதே தெரியாது. வீக்என்டுல நெறைய சுத்துவோம். அடிக்கடி கலவரம் வந்து, ஆடிக்கொன்னு அம்மாவாசைக்கொன்னுனு இந்த பெங்களூர்ல போடற தமிழ்ப்படம் ஒன்னு வுடாமப் பாத்துருவோம். வாரவாரம் டிரஸ் வாங்குவோம். பெங்களூர் வந்ததுக்கப்பறந்தான் ஜீன்ஸ் பேண்டல்லாம் போட்டுப் பழகினேன்னா பாத்துக்குங்களேன். அப்பத்தான் ஒரு பெரிய காமெடி நடந்துச்சு. என்னங்கறீங்களா? இந்த பெங்களூர் மாநகரத்துலயே ஜீன்ஸ் போட்டு கனகாம்பரப் பூ வெச்ச முதல் ஆளுங்கற பெருமையை வரலாறு எனக்குக் குடுத்துச்சு.

அப்படி ஒரு ரண்டு வருசம் ஜாலியா ஓடுச்சு. ஆபீஸ்ல கடுமையா ஒழைச்சோம். அப்பப்ப சம்பளம் கூட்டுனாங்க. பல பேரு கம்பெனி மாறுனாங்க. சில பேரு அப்படியே இருந்து புரமோஷன் வாங்கினாங்க. எங்கூட இருந்த புள்ளைகளுக்கு எல்லாம் வரிசையா கல்யாணம் ஆக ஆரம்பிச்சுது. அஞ்சு பேரு இருந்த வீட்டுல இப்ப நான் மட்டும் தனியா இருக்கற மாதிரி ஆகிருச்சு. போன வருசம் வாங்கின ஜீன்ஸ் பேண்டெல்லாம் இப்போ சுருங்கிப் போச்சு. ஆமா..அப்படித்தான் சொல்லணும். நான் பெருத்துட்டேன்னு சொல்லக் கூடாதுல்ல. திடீர்னு ஒரு நாள் பாத்தா வயசு கால் நூற்றாண்டு ஆகிருச்சு. ஆஃபீஸ் போக வேண்டியது, வர வேண்டியது, சமைக்க வேண்டியது, சாப்பிட வேண்டியதுன்னு வாழ்க்கை ஒரே மெஷின் மாதிரி மாறிடுச்ச்சு.

இப்படிப்பட்ட சமயத்தில அப்பா அம்மா மாப்பிளை தேட ஆரம்பிச்சாங்க. நம்ம ஊர்லதான் 'உன் வாழ்க்கை உன் கையில்' ன்னு ஆட்டோவுல எழுதி வெச்சுட்டு ஜோசியக்காரன் கையில வாழ்க்கையைக் கொடுக்கறமே! இதில என்ன கொடுமைன்னா, நம்ம வாழ்க்கையோட போகாம நம்ம சந்ததிகளோட வாழ்க்கையுஞ்சேத்து அவுங்க அனுமதி இல்லாமயே ஜோசியக்காரங்க கையில ஒப்படைக்கிறோம். என்னதாம் படிச்சாலும், கம்ப்யூட்டருல வேல செஞ்சாலும் அந்தக் கம்ப்யூட்டரிலேயே ஜாதகம் பாக்கற ஊரு நம்ம ஊரு. அதனால என்னோட ஜாதகமும் ஜோதில, வெள்ளத்துல, சாக்கடைல அப்படீன்னு எப்படி வேணாலும் வெச்சுக்கக் கூடிய ஒரு எழுவுல போய்ச் சங்கமமாச்சு.

நெறையத் தேடினாங்க. நானும் ஒரு நாளைக்கு ரண்டு மணி நேரமாவது இன்டெர்நெட்டுல போய்த் தேடுவேன். முப்பது மாசமாச்சு. தேடிக்கிட்டே இருக்கறோம். ஜாதகம், குடும்பம், வேலை பாக்குற மாப்பிள்ளைன்னு எல்லாஞ் சேந்து வந்தது சிலது மட்டுந்தான். அப்படியே வந்தாலும் அவுங்களுக்குப் புடிக்கற மாதிரி நான் இல்லாமப் போயிட்டேன். என்ன பண்ணச் சொல்றீங்க? பொட்டப் புள்ளையப் படிக்க வெக்கவே கூடாதுன்னு அம்மா பொலம்பறாங்க. படிக்க வெச்சா அதுக்கு ஏத்த மாப்பிள்ளை கெடக்கறதில்லைன்னு கவலை அவுங்களுக்கு. எனக்கென்னவோ பாதிக் காலம் தாட்டியாச்சு, மிச்சத்தையையும் அப்படி இப்படீன்னு ஓட்டிடலாம்ங்கற நெலமைக்கு வந்துட்டேன். இத அம்மாகிட்ட வேற சொல்லி, அவங்களயும் பொலம்ப வெச்சாச்சு.

ஒரு நாள் இப்படித்தாம்பாருங்க ஒரு நாள் காலைல அம்மா போன் பண்ணுனாங்க. ஏதோ பொருந்தி வந்திருக்காம். நாளைக்கே கெளம்பி ஊருக்குப் போகணுமாம். வேற வழி தெரியாததால இல்லாத பாட்டியைச் சாகடிச்சு லீவ் வாங்கிட்டு நான் பொறப்பட்டேன். வழக்கம் போல வீட்டுலெ வெச்சுப் பாக்காம இந்தத் தடவை கோயிலுக்கு வரச் சொல்லிட்டாரு அப்பா. பையனுக்கு பேரு என்னமோ 'சரத்'துன்னு சொன்னாங்க. விஜய் மாதிரி மூனு நாள் சவரம் பண்ணாத மீசையோட இருந்தாங்க. ஆம்பளைங்கற தெனாவெட்டு பாக்கறதுலயே தெரிஞ்சுது. பெரியவங்க எல்லாஞ்சேந்து ரண்டு பேரையும் தனியாப் பேசச்சொன்னாங்க.

சாமி கும்பிட்டுப்போட்டு ஒரு எடத்துல உக்காந்து தேங்கா பழமெல்லாம் திம்பாங்களே அங்கே வந்து உக்காந்துக்கிட்டோம். நான் ஒன்னுமே பேசலை.
அவருதான், "ம்.. அப்பறம்"னு ஆரம்பிச்சாரு.

கேட்ட கேள்விக்கு மட்டும் நான் பதில் சொல்லிக்கிட்டு வந்தேன். என்னமோ இன்டெர்வியூவுக்கு வந்த மாதிரி, எங்க படிச்சே, வாழ்க்கைல இலட்சியம் என்னன்னு ஒரே கழுத்தறுப்பு. அதே கேள்வியை நான் திருப்பிக் கேட்டப்ப லூசு மாதிரி என்னமோ உளறுச்சு. எப்படியும் இவனுக்கு நம்மளப் புடிக்காதுங்கற முடிவுக்கு வந்ததால ரொம்ப அலச்சியமாப் பேசினேன். ஆனா, கடைசில பாத்தா என்னைப் புடிச்சிருக்குதுனு சரத் சொல்லிட்டாரு.

பாத்து ஃபிக்ஸ் ஆகி கல்யாணம் ஆகற வரைக்கும் இருக்கற காலத்துலதான் நல்லா ஜாலியா இருக்கும்னு என்னோட பிரண்ட்ஸ் எல்லாம் சொல்லுவாங்க. ஒரு நாளைக்கு பத்து மட்டம் கால் பண்ணி, அம்பது மட்டம் ஐ லவ் யூன்னு சொல்லி, எதிர்பாக்காம இருக்கும் போது பூச்செண்டு சாக்லேட் எல்லாம் அனுப்பி..ம்ம்ம் நெனச்சா பெருமூச்சுதான் வருது. எனக்கு அதெல்லாம் கொடுத்து வைக்கலயே. நானே வலிய வலிய போன் செஞ்சாக்கூட கலகலப்பாப் பேசறது இல்லை.

கேட்டா ஐஞ்சு நாளைக்கு ஒரு தடவை பேசினாப் போதுமாம். ஆசை, பாசம் எல்லாமே மனசுல இருந்தாப் போதும். அதையெல்லாம் வெளிக்காட்டி நிரூபிக்க வேண்டியதில்லையாம். கேட்கப்படாத மன்னிப்பும், சொல்லப்படாத காதலும் முழு வடிவத்தை அடையறது இல்லைன்னு தெரியாத ஜென்மம். எனக்கு ஒரே கடுப்பா இருக்கும். முந்தியாவது பிரண்ட்ஸ் எல்லாம் கால் பண்ணி பேசுவாங்க. இப்போ அவுங்களும் பண்றது இல்லை.

பாவம்..அவளுகளச் சொல்லி என்ன ஆகப் போகுது? அவுங்க வாழ்க்கைல நடந்த மாதிரியே நானும் இந்த இடைப்பட்ட காலத்துல பிசியா இருப்பேன்னு நெனைக்கறாங்களோ என்னமோ. அதனால, என்னோட ஆள் ரொமான்டிக்கா இல்லைன்னு வெளிப்படையா அவங்க கிட்டச் சொல்றதுக்கு கூச்சமாவும், சங்கடமாவும் இருந்துச்சு.

ஆனா, ஐயாவுக்கு மூட் இருக்கும் போது நான் பேசணும். அப்பத்தான் தத்துவமெல்லாம் பேசுவாரு. வாழ்க்கைல அழகெல்லாம் முக்கியமே இல்லை. பண்பு, பழக்கவழக்கம், நல்ல கொணம் இதெல்லாந்தான் முக்கியம்ங்கற வசனத்தையெல்லாம் கேக்கலாம். நான் அழகில்லைங்கற மேட்டர் அதுல ஒளிஞ்சிருந்துச்சுங்கற அப்ப எனக்குப் புரியல.

அவருக்கு நெறைய ஆசை இருந்துச்சுன்னு போகப் போகப் புரிஞ்சுக்கிட்டேன். பி.எம்.பயுள்யூ. கார் ஓட்டணும், வெளி நாட்டுல தேனிலவு வெச்சுக்கணும் அப்படி இப்படீன்னு என்னென்னமோ. ஆனா அவங்க வீட்டுல சொல்லிகற மாதிரி வசதியெல்லாம் கெடையாது. அவரு வேலைக்குச் சேந்து ஆறு மாசம் கூட இன்னும் முழுசா ஆகலை. என் சம்பளத்துல பாதிச் சம்பளம்தான் வாங்கறார்.

போன வாரம் அம்மாகிட்ட அத்தை பேசினாங்களாம். (இன்னும் மாமியார் ஆகலைன்னாலும் அவங்களை அத்தைன்னு கூப்பிடறதுதானே நியாயம்?) 200 பவுன் நகை, ரொக்கமா 5 லச்சம், ஒரு ஹோண்டா சிட்டி காரு, பெங்களூர்லையே ஒரு பிளாட் வேணுமாம். அம்மாவுக்கு மயக்கம் போடாதது மட்டுந்தான் மிச்சம். அப்பறமா யோசிச்சுப் பாத்துட்டு, இருக்கறது ரண்டு பொண்ணுக..அதுகளுக்குச் செய்யாமல் வெச்சிருந்து என்ன செய்யப் போறம்னு ஒத்துக்கிட்டாங்களாம். அம்மாவைப் பொறுத்த வரைக்கும் எப்படீன்னா, அவங்களுக்கு பணம் பெருசாத் தெரியல. நம்ம பொண்ணு வாழப்போற வீட்டுல இருக்கற ஆளுக கொணம் இப்படி இருக்கே, பொறகு எப்படி நடத்துவாங்களோங்கற ஆதங்கமும், கலக்கமுந்தான்.

எனக்கு ஒரே ஒரு ஆறுதல் என்னன்னா, இதெல்லாம் அத்தை அம்மா கிட்டக் கேட்டதுதானே ஒழிய, சரத் எங்கிட்ட எதுவுமே கேக்கலை. ரொம்ப அழகு இல்லைங்கற காரணத்துக்காக நாங்க இவ்வளவு வெலை கொடுக்கணுமாங்கற கேள்வி என்னையக் கொடஞ்சுக்கிட்டே இருக்குது. இருந்தாலும் பரவாயில்லை. அப்பா அம்மா ரொம்ப நாளாக் கஷ்டப்பட்டு இந்த சம்மந்தத்தைப் புடிச்சிருக்காங்க. எல்லாம் நல்லதுக்குத்தான் இருக்கும்.

கல்யாணத்துக்கு இன்னும் மூனு மாசம் இருக்கு. பிரண்ட்ஸ்க்கு பேச்சுலர் பார்ட்டி வைக்கணும்னு ஒரு நாள் பத்தாயிரம் கேட்டாரு. சரி ஒரு தடவைதானேன்னு கொடுத்தேன். அப்புறமா செல்போன் பில்லுக்கு என்னையப் பணம் கட்டச் சொன்னாரு. எங்கயோ உறுத்துச்சு. இருந்தாலும் மனசைத் தேத்திக்கிட்டு கட்டினேன்.

அப்பறமாத்தான் அந்த சம்பவம் நடந்துச்சு. ராத்திரி பத்தரை இருக்கும். எங்க ஆ·பீஸ்ல கூட வேலை செய்யற சுரேஷ் போன் பண்ணியிருந்தாரு. அவர் இப்போ நெதர்லாந்துல இருக்குறாரு. சமீபத்துல கல்யாணம் ஆச்சு. அவரோட ஒய்·ப் விசா விசயமா அவசரமா விசாரிச்சார். எப்பவுமே, நைட் ஒம்போது மணிக்கு மேல போன் பண்ணாத சரத் அப்பவுனு பாத்து கால் பண்ணவும், என்னோடு போன் எங்கேஜ்டா இருக்கவும் சிக்கலாகிப் போச்சு. எட்டு மிஸ்டு கால்.

சுரேஷ் கிட்டப் பேசி முடிச்சுட்டு சரத்தைத் திருப்பிக் கூப்பிட்டா, யாரு கூடப் பேசிக்கிட்டு இருந்தேன்னு ஒரே அதட்டல். வெளக்கமாச் சொன்னதுக்கு அப்பறம் பதில் சொல்லாம குட் நைட் சொல்லி வெச்சுட்டாரு. ஆனா, அரை மணி நேர கழிச்சு I don't want any execuses னு ஒரு SMS வந்துச்சு. அன்னைக்கு நான் தூங்கறதுக்கு காலைல அஞ்சு மணி ஆச்சு. பேய் மாதிரி முழிச்சு அழுதுக்கிட்டே இருந்தேன். மறுநாள் மெயில் அனுப்பினாரு. ரொம்ப நேரம் நைட் முழிச்ச ஒடம்புக்கு நல்லதில்லை. அதனால இப்படியெல்லாம் காரணஞ் சொல்லாம சீக்கிரம் தூங்குன்னு எழிதியிருந்துச்சு.

இப்படியாக நிச்சயதார்த்தத்துக்கும், கல்யாணத்துக்குமான என்னோட காலம் கழியுது. அம்மா வேற அப்பப்ப போன் பண்ணி அத்தை அடிக்கிற கொட்டத்தைச் சொல்லுவாங்க. அவரோட லேட்டஸ்ட் போன் பில் எனக்கு வந்து சேந்துச்சு. இந்த மொறை வழக்கத்துக்கு மாறா பில் ஆறாயிரம் இருந்துச்சு. லேசா சந்தேகம் வர ஆரம்பிச்சுது. போன் பில்லை டீட்டெய்லா ஆராஞ்சு பாத்தேன். அதுல நெறைய கால் ராத்திரி பதினொடு மணில இருந்து காலைல ரண்டு மணி வரைக்கும் இருந்ததைப் பாத்தேன். அந்த நேரத்துல ரண்டே ரண்டு நம்பருக்கு மட்டும் பேசிருக்காரு. ஒரே நடுக்கமாப் போச்சு.

அடுத்த நாள் நந்தினி கிட்ட இதப் பத்திப் பேசினேன். அவ பெரிய சி.ஐ.டி. அந்த ரண்டு நம்பருக்கும் அவளே போன் பண்ணி கட் பண்ணினா. அதுல ஒரு ஆம்பளக் கொரல் கேட்டுதாம். இன்னொன்னுல பொண்ணு கொரலு கேட்டுதாம். அவ எங்கிட்ட அதைச் சொல்லும் போது எனக்கு தலையே வெடிச்சிரும் போல ஆகிருச்சு.

ஆயிரம் கேள்வி மூளைக்குள்ள ஓடுது. நான் பத்து மணிக்கு மேலே போன் பேசக் கூடாது. ஆனா, இவரு ஒரு மணி வரைக்கும் பேசலாமாக்கும்? அதுவும் பொட்டப் புள்ளையோட. ஆனா, எனக்கு அதைப் பத்திக் கேக்கறதுக்குப் பயமா இருந்துச்சு. ஏடாகூடமா ஏதாவது வெவகாரமா இருந்தா தாங்கிக்க முடியாது. அதுக்கு இப்படியே விட்டுரலாம்னு நெனைச்சு விட்டுட்டேன்.
போன் பில்லைக் கட்டிட்டேன். அதுக்கப்புறம் அவர் எந்த நம்பருக்குப் பேசறார்னு ஆராய்ற வேலையை விட்டுட்டேன். இத்தனை காலமா எத்தனையோ பொம்பளைங்க நம்ப பாரத நாட்டுல இப்படித்தானே பெத்தவங்களுக்கும், சமுதாயத்துக்கும் கட்டுப்பட்டு சகிச்சுக்கிட்டு வாழ்ந்தாங்க. நாம மட்டும் வேற மாதிரி இருந்து என்ன சாதிக்கப் போறோம்.

ஒரு பின்குறிப்பு: அவரோட கம்யூட்டர் திரைல ஓடிக்கிட்டு இருந்த ஸ்கிரீன்சேவர் வாசகம் எனக்குப் பிற்காலத்துல தெரியவரும்னு இப்போ எனக்குத் தெரியல. அதுல Marry for money and pay for sex அப்படீன்னு இருக்கும்.

17 comments:

Ashok said...

//'உன் வாழ்க்கை உன் கையில்' ன்னு ஆட்டோவுல எழுதி வெச்சுட்டு ஜோசியக்காரன் கையில வாழ்க்கையைக் கொடுக்கறமே!//

Punch !!

வெற்றி said...

குப்புசாமி,
உள்ளேன் ஐயா. கதையை முழுமையாக வாசித்தேன். நன்றி.

செல்வநாயகி said...

///'உன் வாழ்க்கை உன் கையில்' ன்னு ஆட்டோவுல எழுதி வெச்சுட்டு ஜோசியக்காரன் கையில வாழ்க்கையைக் கொடுக்கறமே////

:))

வினையூக்கி said...

//கேட்கப்படாத மன்னிப்பும், சொல்லப்படாத காதலும் முழு வடிவத்தை அடையறது இல்லை//
:) :)
நானும் முழுசா வாசிச்சேன். நல்லா இருக்கு.

பொன்ஸ்~~Poorna said...

கதையில் எனக்குப் பிடித்திருந்த பகுதிகளை செல்வாவும் வினையூக்கியும்(இன்னுமொரு செல்வா :)) எடுத்துச் சொல்லிட்டாங்க..

மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு குப்பு இந்தக் கதை படிச்சி! :(((( ம்ச்... என்னத்த மாடர்னா இருந்து என்ன புண்ணியம்.. எப்படியும் அவ இப்படி எல்லாம் இருந்தாத் தான் "மகாலட்சுமி".

மங்கை said...

//அன்னைக்கு நான் தூங்கறதுக்கு காலைல அஞ்சு மணி ஆச்சு. பேய் மாதிரி முழிச்சு அழுதுக்கிட்டே இருந்தேன். மறுநாள் மெயில் அனுப்பினாரு. ரொம்ப நேரம் நைட் முழிச்ச ஒடம்புக்கு நல்லதில்லை. அதனால இப்படியெல்லாம் காரணஞ் சொல்லாம சீக்கிரம் தூங்குன்னு எழிதியிருந்துச்சு.//

இப்படி நடித்தே.....ஹ்ம்ம்ம்..
பெண்கள் இன்னும் ஏமாந்துட்டு தான் இருக்காங்க..

// இத்தனை காலமா எத்தனையோ பொம்பளைங்க நம்ப பாரத நாட்டுல இப்படித்தானே பெத்தவங்களுக்கும், சமுதாயத்துக்கும் கட்டுப்பட்டு சகிச்சுக்கிட்டு வாழ்ந்தாங்க. நாம மட்டும் வேற மாதிரி இருந்து என்ன சாதிக்கப் போறோம்///

ஹ்ம்ம்...இப்படித்தான் பல பெண்களுக்கு காலம் ஓடுது .. நல்லா இருக்கு..

தமிழ்நதி said...

அழகற்ற பெண் தனது வாழ்க்கைக்காக அதிக விலை கொடுக்க வேண்டியிருப்பதும்கூட ஒருவகையில் ஆணாதிக்க மனோபாவம்தானே குப்ஸ். உன்னுடைய மைனஸை பணத்தாலே பிளஸ் பண்ணிக்கோ என்பது.... ம்... அது ஆண்களுக்கும் பொருந்துமல்லவா... ஆனால்,ஆண் அழகு என்று சொல்லப்படுகிற 'வரைவிலக்கணங்களுக்கு'உட்படாதிருந்தாலும் பிரச்சனையில்லை. அவனுக்கும் உயரமான,நிறமான,நன்கு படித்த,ஆங்கிலம் பேசத் தெரிந்த,அறிவுள்ள பெண்தானே வேண்டியிருக்கிறது.

உண்மைத் தமிழன் said...

கதை நன்றாகத்தான் இருந்தது. ஆனால் இப்படி பாதியிலேயே பொசுக்குன்னு முடிச்சிட்டா எப்படி? இதுக்குத் தீர்வுதான் என்ன? அவுங்களுக்கு கல்யாணம் ஆச்சா இல்லையா? இல்லாட்டி பெத்த படிப்பு படிச்சிருந்தாலும் பொம்பளை புள்ளைகளுக்கு இந்தப் பிரச்சினை வரத்தான் செய்யும்னு சொல்றீங்களா? இந்தக் கதைல வர்ற மாதிரி ஒரு பொண்ணோட சோகத்தை பகிர்ந்துக்கிட்டீங்களா? அப்படீன்னா வருங்கால பெண்களுக்காக ஒரு தீர்வையும் சொல்லியிருக்கலாமே? ஏனெனில் இது நிஜக்கதை.. அமெரிக்காவில் இருக்கும் நம்மூர் பெண்களைக் கேட்டாலே சொல்லிருவாங்களே தங்களோடட சோகக் கதையை.. ஓகே.. அப்படித்தான் இருக்கும்னு நானும் ஊகிச்சேன்.. மீதிக் கதையையும் கேட்டுட்டு இரண்டாம் பாகத்தையும் சீக்கிரமா போட்ருங்க..

Kuppusamy Chellamuthu said...

நன்றி அசோக்.

வெற்றிண்ணா..வாங்க!! மேப்பிள் இலை எல்லாம் படத்துல போட்டு வெச்சிருக்கீங்க? இளவேனில் காலத்தை இதமாக் கழிக்கறீங்க போல இருக்கு.

Kuppusamy Chellamuthu said...

செல்வநாயகி மற்றும் வினையூக்கி: வருகைக்கும், வாசிப்புக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.

ramachandranusha said...

கதை நல்லா இருக்கு என்று சொல்ல மனம் ஒப்ப மறுக்கிறது.என்னத்த சொல்ல ;-(

பெத்த ராயுடு said...

கதை நல்லாயிருக்கு.

Kuppusamy Chellamuthu said...

பொன்ஸ், உங்கள் வார்த்தை மகிழ்ச்சி தருவதாக உள்ளது. மனசு கஷ்டப்படுவதற்காக இதை எழுதவில்லை. எனினும், இதில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே :-)

Kuppusamy Chellamuthu said...

//இப்படி நடித்தே.....ஹ்ம்ம்ம்..
பெண்கள் இன்னும் ஏமாந்துட்டு தான் இருக்காங்க..

ஹ்ம்ம்...இப்படித்தான் பல பெண்களுக்கு காலம் ஓடுது .. நல்லா இருக்கு
//
மங்கை மேடம்.. காலங்கள் மாறி வருவதாகத்தான் நான் உணருகிறேன். இந்தத் தலைமுறை புது வகையான பிரச்ச்சினைகளைச் சந்தித்து வருகிறது. இது சாதியம், ஆணாதிக்கம் என்று காலங்காலமாக அறியப்பட்ட சிறு வட்டத்தைக் காட்டிலும் விசாலனானதாகவே நண்பர்கள் தெவிரிக்கின்றனர்.

நீங்கள் சொல்லும் கருத்துக்களோடு ஒத்துப் போகிறேன். எனினும், ஒட்டு மொத்தமாக இந்தச் சமுதாயதை ஆணாதிக்க சமுதாயம் என்று என்னால் பொதுமைப்ப்படுத்த இயலாது.

Kuppusamy Chellamuthu said...

தமிழ்நதி: பின்னூட்டத்திற்கு மகிழ்ச்சி. உங்கள் வரிகள் ஒவ்வ்வொன்றும் தனித்தனி விவாதங்களூக்கு வித்திடும் என்றாலும் கூட, ஒரே ஓரு வரிக்கு மட்டும் 'ஆமாம்' போட்டு வைக்கிறேன்.

//உன்னுடைய மைனஸை பணத்தாலே பிளஸ் பண்ணிக்கோ என்பது.... ம்... அது ஆண்களுக்கும் பொருந்துமல்லவா... //

Kuppusamy Chellamuthu said...

உண்மைத்தமிழன்: முதற்கண் உங்களின் நீளமான பின்னூட்டத்திற்கு நன்றியும், எனது தாமதமான பதிலுக்கான வருத்தங்களும்!

நிறையக் கேட்கிறீட்கள். கதைகள் ஆகாயத்திலிருந்து வருபவையோ, முழுக்க முழுக்க புனைகளோ அல்ல. அவற்றில் உண்மையின் விழுக்காடு மட்டுமே வேறுபடுகிறது. சில சமயம் அது 0 % ஆக இருக்கிறது, இந்தப் பதிவைப் போல. எனவே, இதப் பத்தி அமெரிக்கா அம்மணிக கிட்டப் போய்ப் பேசி அடி வாங்கச் சொல்லாதீங்க :-)

பெத்தராயுடுகாரு..சாலா நமஸ்காரமண்டி for the பின்னூட்டம். (தெலுகு அந்த பாக ராது..அந்துக்கே மிக்ஸிங்) :-)

மங்கை said...

//எனினும், ஒட்டு மொத்தமாக இந்தச் சமுதாயதை ஆணாதிக்க சமுதாயம் என்று என்னால் பொதுமைப்ப்படுத்த இயலாது//

நானும் பொதுமைப்படுத்தவில்லை.. அதில் எனக்கு விருப்பமும் இல்லை... ஏமாறும் பெண்கள் கூட இனி ஆண்களை நோக்கி கை நீட்டுவதில் ஒன்றும் நடக்க போவதில்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்,
//'உன் வாழ்க்கை உன் கையில்'///
இதை புரிந்தி கொள்ளவேண்டும், சொல்வது எளிது என்பது தெரியும்... ஆனால் பெண்களின் மனதில் இந்த எண்ணம் வர வேண்டும்...

மறுபடியும் சொல்கிறேன்..
பொதுப்படுத்தவில்லை :-)