Sunday, April 22, 2007

அழகே உன்னை ஆராதிக்கிறேன்

- செல்லமுத்து குப்புசாமி

'அழகு' பதிவு போடுமாறு விடுத்திருந்த அழைப்பை நான் காணாமல் விட்டது பெரிய தவறு என்றார் உதயகுமார். அசின் படத்தோடு முடிந்ததென நினைக்குமாறு பிரசுரித்தது அவர் தவறுதான்:-)

அழகு!! இந்த ஒரு வார்த்தையில் எத்தனையோ அர்த்தங்களைப் பொதித்து விட முடிகிறது. எத்தனையோ விஷயங்களை அர்த்தமற்றதாகவும் ஆக்குகிற சக்தி இந்த ஒரு வார்த்தைக்கு உண்டு.

எப்போதும் குளிக்கும் மனிதனை விட, பொங்கலுக்குக் கழுவிய மாடு அழகு.

வெள்ளமாகவும், மணலாகவும், அது தொலைந்து பாறையாகவும் மாறி இன்னமும் இனிக்கும் அமராவதி அழகு.

இன்று யாருக்கோ கணவனாகிப் போன, 'தாவணி நல்லா இருக்கா?' என்று பார்வையிலே கேட்ட பள்ளிக்காலத் தோழியின் நினைப்பு அழகு.

அப்பப்போ சச்சின் டெண்டுல்கரும், ரோஜர் ஃபெடரரும் அழகு. எப்பவுமே ஸ்டெப்பி ஃகிராப் அழகு.

முதல் வருடம் ரக்ஷா பந்தன் கயிறு கட்டி, அடுத்த வருடம் நண்பர் தின அட்டை கொடுத்து, மூன்றாம் வருடம் காதலர் தின முத்தம் தந்து, இறுதியாண்டு கல்யாணம் செய்து கொண்ட அந்த ஜோடி அழகு.

பெண் கண்ணைப் பார்த்துப் பேசுகிற ஆண்மை அழகு. பேசும் துணிவை ஆண்மைக்கு அருளும் பெண்மை அதனினும் அழகு.

ஆண் சொன்னால் தோற்று, பெண் சொன்னால் மட்டும் ஜெயிக்கும் காதலும் அழகு.

காதலினும் இனிய தமிழும் அழகு.
 • பொங்கலுக்கு வாங்கிய புத்தாடை..
 • கழுத்து வியர்வையில் ஈரமாகிப்போன மல்லிகை..
 • நெற்றியில் வைத்த குட்டிச் சந்தனம்..
 • கலைந்து போய் காதுக்கு வெளியே தொங்கும் ஒற்றை முடி...
 • 'பொட்டா? மச்சமா?' என்று இனங்காண முடியாமல் புருவங்களுக்கு மத்தியில் கர்வத்தோடு கரும்புள்ளி..
 • அதிகாலைப் பூ, பிறந்த குழந்தை போல தொட்டுப் பார்க்காமலே ரசிக்கத் தகுந்ததும், தொடாமல் தவிர்க்க இயலாததுமான உதடு..
 • உலகத்தையே மறக்கடிக்கவும், மறந்த உலகத்தை வென்றெடுக்கவும் உந்தித் தள்ளும் அந்தச் சிரிப்பு...
 • படபடக்கும் பேச்சு..
 • 'ரொம்பப் பேசறனா?' கேள்வி..
 • பேசினாலும் தீராத ஆசைகள்..
 • பேசவே இயலாத தேவைகள்..
 • 'வாய் பேசிய பிறகுதான் நானா?' என்று முந்தியடித்துக் கதை சொல்லும் கண்கள்..
 • ஏதோ புண்ணியம் செய்த அந்த ஒற்றைச் சங்கிலி..
 • உன்னை மூடியதால் அழகு பெற்ற அந்த வெள்ளைத் துப்பட்டா...
 • 'உன் முகம் மறைத்ததால்தானே!' என்பதால், பாதி தெரிந்தாலும் கூட அழகாகிப் போன உன் அம்மா..
எச்சரிக்கை!! எவனையும் கவிஞனாக்கி விடும், அழகு!!

Sunday, April 08, 2007

கண்டியில் ஒரு..ஒரு..ஒரு..காதல்??

- செல்லமுத்து குப்புசாமி

அவன் பார்வை அந்த எறும்பின் அறியாமை கலந்த முயற்சியில் நிலை குத்தியிருந்தது. பதிமூன்று நிமிடமாக கண்ணாடிச் சுவரில் ஏறுவதும், சறுக்குவதுமாக அதன் போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. அக்காட்சி சற்று நேரத்தில் அவனுக்குச் சலிப்பை ஏற்படுத்தியது. தலையைச் சுற்றாமல் கண்ணை மட்டும் நீளமாக ஃபோகஸ் செய்து ஜன்னலுக்கு அப்பால் பார்வையைச் செலுத்தினான்.

கட்டுமானப் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருந்தன. வாணம் தோண்டியவாறும், அதில் அஸ்திவாரம் இட்டவாறும், சில இடங்களில் கம்பிகள் நடப்பட்டவாறும் தென்பட்டது. அரை மணி நேரத்திற்கு ஒரு தடவை தோற்றம் மாறிக் கொண்டே இருந்தது. அலாவுதீன் தேய்த்த விளக்கிலிருந்து கிளம்பிய பூதம் ஏதோ மாயாஜாலம் செய்வதைப் போல கட்டிடம் கண்ணுக்கு முன்னார் வளர்ந்தது. இயந்திரங்கள் துரித கதியில் இயங்கின. பணியாட்கள் இயந்திரத்தின் வேகத்தோடு சளைக்காமல் போட்டி போட்டனர்.

அந்த இடத்தில் ஒரு புதிய ஆலை நிர்மாணமாகி வருகிறது. அதற்குப் பொறுப்பாளனாக அவனை நிர்வாகம் தேர்ந்தெடுத்து அனுப்பியிருந்தது. தமிழக-கர்நாடக எல்லையில் ஓசூருக்கு அருகே அவனது பிரதானத் தொழிற்சாலை இருந்தது. இட நெருக்கடி, அதிகப்படியான கூலி முதலிய காரணங்களுக்காக சிங்கப்பூரில் இருந்து வந்த முதன்மை நிர்வாகி இந்தியாவுக்கு வெளியே எங்காவது ஃபேக்டரி கட்டச்சொல்லி உத்தரவிட்டார்.

நீண்ட விவாதங்களின் முடிவில் இலங்கையைத் தேர்ந்தெடுத்தார்கள். ஓசூரில் ஒரு ஆளுக்குக் கொடுக்கும் ஊதியத்தை வைத்து இலங்கையில் ஐந்து பேருக்குக் கூலி கொடுத்து விடலாம் என்று அவர்கள் அமர்த்தியிருந்த ஆலோசக நிறுவனம் அறிக்கை சமர்ப்பித்தது. இலங்கையில் எந்த ஊர் என்ற கேள்வி எழுந்த போது, அவன் முன் வைத்த கண்டியை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அவனையே அதற்குப் பொறுப்பாளனாகவும் அனுப்பினர். தொழில் தொடங்க எதோ நிறுவனம் வருவது தெரிந்தவிடனேயே சிங்கள அரசு இரு கரங்களையும் விரித்து வரவேற்று அனுமதி கொடுத்தது.

கண்டி என்றவுடன் அவனுக்கு முன்பெல்லாம் எம்.ஜி.ஆர். பிறந்த ஊர் என்ற எண்ணம் மட்டுமே மனதில் விரிந்து நிற்கும். சமீப காலமாக அந்த எண்ணம் சற்று விரிவு பட்டிருந்தது. முத்தையா முரளிதரனும், அவரது அழகான சென்னை மனைவியும் அதில் முக்கிய இடம் பெற்றிருந்தனர். அவனது பள்ளிப்பிராயத்தில் திண்டுக்கல்லில் இருந்து சில இளைஞர்கள் கண்டிக்குப் பணியாற்றச் செல்வதாகப் பேசிக் கொண்டதை நினைவுபடுத்திக் கொள்வான். வேறு பெரிதாக அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.

தமிழ் சினிமாவில் வேலைக்காரியின் பெயர் முனியம்மாவாக இருப்பது எந்த அளவுக்கு மாற்றமற்றதோ அதே போல கண்டியிலே அவனுக்கு அறிமுகமான பெண்ணுக்கு யாமினி என்ற பெயர் இருந்தது. தனது வேலையைச் சரியாகப் பங்கு போட்டு பணிகளைத் துரிதமாகவும், குறைந்த செலவிலும் முடித்துக் கொடுப்பதில் அவளது உள்ளூர் ஞானம் உதவுமென்று அவன் உறுதியாக நம்பினான். யாமினியைச் சிங்களத்தி என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தான். ஆனால், அவள் தமிழச்சி என்பது போகப் போகப் புரிந்தது. ஆரம்பத்தில் அலுவல் நிமித்தமான விசயங்களை ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டார்கள்.

பிரிதொரு நாள் பணியாளர்கள் எல்லாம் வீடு சென்றதும் கடைசியாக யாமினி மட்டுமே மிச்சமிருந்தாள். மங்கலான ஒளியில் மலையாளப் படம் பார்க்கும் கற்பனையைத் தோற்றுவிக்கும் இந்தச் சம்பவம் சர்வசாதாரணமான ஒரு நிகழ்ச்சியாகவே நடந்தது. எனினுன், அவர்களுக்கு இடையே எழுந்து நின்ற ராட்சதப் பனிக்கட்டி அப்போது உருக ஆரம்பித்ததை இருவருமே அறியவில்லை. அவன் அவளைத் தன்னோடு அழைத்துச் சென்று வீட்டில் விடுவதற்கு முன் வந்தான். அப்போது அவர்கள் ஆங்கிலத்தை உதிர்த்து விட்டு பரஸ்பர அறிமுகத்தை அடுத்த நிலைக்குத் தமிழில் நகர்த்தினார்கள்.

கண்டி அவளுக்குச் சொந்த ஊரல்ல. கிழக்கே மட்டக்களப்புக்கு அருகில் ஒரு அழகிய கிராமம். அவள் தந்தைக்கு அங்கே பெரும் விளைநிலங்கள் இருந்தன. நுங்கு சீவி தின்ற பனங்காயில் வண்டி செய்து, கிழியாத பாவாடையும், துடைக்காத மூக்குமாக ஓட்டித்திரிந்து கொண்டிருப்பாள் அவள். அதை விடச் சிறுமையான விளையாட்டுத்தனத்தோடு அவர்கள் தோட்டத்தின் பயிர்கள் மீது ஸ்றீலங்கா ஆர்மிக்காரர்கள் ராணுவ வண்டிகளை ஓட்டி விளையாடுவார்கள்.

அந்த ஊரில் வசதியானவர்கள் சிலர் விசா எடுத்து ஐரோப்பாவுக்கும், கனடாவுக்கும் கெளரவமான அகதிகளாகப் போனார்கள். நாதியற்றவர்கள் இருக்கிற நகை நட்டுகளை விற்று, அந்தப் பணத்தைத் தோணிக்காரனுக்குக் கொடுத்து இந்தியாவிற்குத் திருட்டுத் தோணியேறினார்கள். வேறு சிலர் அங்கேயே இருந்து சமாளித்துப் பார்ப்பதென்ற முடிவோடு இருந்தனர். அதில் யாமினின் தந்தையும் ஒருவர்.

அவர்களுக்குப் பரம்பரைச் செல்வம் நிறைய இருந்தது. அதில் நிறையவே சூரையாடப்பட்டன. போராட்டக்காரர்களுக்கு உதவுவதாகச் சொல்லி அரசாங்கம் பாதியைக் கைப்பற்றியது. தமிழ் சினிமாப் போலீசைப் போல ஒரு சில ஆர்மிக்காரர்கள் மட்டுமே நல்லவர்களாக இருந்தனர். நள்ளிரவுச் சோதனைகளில் ஆண்களின் உயிரும், பெண்களின் உடலும் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டன. பொன்னகையெல்லாம் மறந்த சமுதாயத்தில் சாமானியர்கள் கூட சயனைடு குப்பிகளைக் கழுத்தில் அலங்கரித்தனர்.

உள்ளூரில் சித்தரவதை அனுபவிப்பதை விட கொழும்புக்குச் சென்று வியாபாரம் செய்யலாமென்று நிலபுலன்களை எல்லாம் அப்படியே துறந்து விட்டு நகை, பணத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு போனார்கள் யாமினி குடும்பத்தினர். அது எண்பதுகளில் இறுதிக்காலம். அமைதிப்படை இன்னமும் வந்திடாத காலம்.

கொழும்பிலே அவள் வளர்ந்தாள். முளை விட்ட நாற்றாக வந்தவள் அங்கே பயிரானாள். பதின்ம வயதுகளின் மதப்பும் வளர்ந்தது. திலீபனால் காதலிக்கப்பட்டாள். மிச்சமிருக்கும் நேரத்தில் படித்தாள். கொழும்பிலேயே கல்லூரியும் முடித்தாள். நிர்வாக மேலாண்மையில் பட்டம் பெற்றாள். அதன் பிறகு வேலைக்குச் சேர்ந்தாள்; ஆனால் அதற்குள் திலீபனைக் கைபிடித்தாள். அழகான பெண் குழந்தை பிறந்தது. அவர்கள் கொண்டிருந்த ஆசையை வாழ்ந்து தீர்க்க ஒரு ஆயுள் போதாதென்று எல்லோரும் பேசினார்கள். ஆனால், திலீபனோடு குழந்தையும் சேர்ந்து அற்ப ஆயுளில் போய்ச் சேர்ந்தது. உபயம் ஒரு கலவரம்.

அவள் கண்டிக்கு வர அது காரணமாயிற்று. மாற்றத்தை நாடி வந்தாள். முப்பதுகளின் முதற்பாதியை எந்த நேரத்திலும் அவள் கடந்து விடும் நிலையில் இருந்தாள். முகத்தில் தெரியும் முதிர்ச்சி உடம்பில் யாமினிக்குத் தெரியாது. அவ்வளவு வடிவானவள். பழசையெல்லாம் மறந்து ஒரு சுற்றுலா வளர்ச்சி தொடர்பான தன்னார்வ நிறுவனத்தில் மிதமான சம்பளத்தில் காலந்தள்ளினாள். அந்தத் தருணத்தில் வெளிநாட்டுக் கம்பெனி கண்டியில் புதிதாகத் தொடங்கவிருக்கும் ஆலையின் இணை நிர்வாகப் பணிக்குத் திறமையான ஆள் தேவையென்று யாரோ சொல்ல, விருப்பமில்லாமல் விண்ணப்பித்துத் தேர்வானாள்.

அவள் கதை துயரம் நிறைந்த யுத்த காண்டமாக இருக்க, அவன் கதையோ மழை பெய்த மறுநாள் கிளுவ மர இலையைத் தின்று பறக்கும் பொன்வண்டின் ஒய்யாரமான பின்னணியை உடையது. மயிலிறகைத் தலையிலும், வண்ணத்துப் பூச்சி சேகரித்த மகரந்தத்தை முகத்திலும் பூசியது போன்ற குதூகலம் எப்போதும் அவனைச் சுற்றியிருக்கும். உழைப்பும், ஊதியம், உல்லாசம் என்பது அவன் வாழ்க்கைச் சித்தாந்தமாக இருந்தது. அவன் வாழ்க்கையில் நேர்த்தி வெளிப்பட்டது; நேர்மையும் இருந்தது.

யாமினும், அவனும் .. இதோ காரில் சென்று கொண்டிருக்கிறார்கள். அவனுக்கு அருகாமையில் பல பெண் தோழியர் இருந்திருக்கின்றனர். தற்போது கணவன்மாரோடு வசிக்கும் இரண்டு பெண்கள் அவனது கடந்த காலத்தைக் காதலியாக அலங்கரித்திருந்தனர். மூச்சுக் காற்றுப் படும் தூரத்தில் ஸ்பர்சங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால், இப்போது ஏற்படும் உணர்ச்சியோடு அவற்றை ஒப்பிட முடியாததாகப்பட்டது. அவள் மீது அவனுக்கு கவர்ச்சி என்பதை விட ஏதோ ஒரு வித மரியாதையை உணர்ந்தான். எனினுன், பெண் என்பதால் இயல்பாகத் தோன்றும் ஈர்ப்பை அவனால் மறைக்க முடியவில்லை.

அவளது வரலாற்றைத் தவணை முறையில் தெரிந்து கொண்டான். பரிதாபம் காட்டினான். தனக்கு அனுதாபம் தேவையில்லை என்றாள் அவள். ஆனால், அவள் மனது அதற்காக ஏங்கி நின்றது. தான் அனுதாபம் காட்டுவது அவளை அடைவதற்கான உத்தியாக இருக்குமோ என்று விடை கூற முடியாத கேள்வியை அவளிடமே கேட்டான். அவள் குழம்பினாள். ஆயினும் பிடித்திருந்தது.

இனப்போராட்டம், பயங்கரவாதம், விடுதலை, வருணபேதம், பெளத்தம், இந்துத்துவா, மத மாற்றம், காதல், காமம், ஆண்டான் அடிமைத்தனம் என எது பற்றியும் அவர்களுக்கு கருத்துக்கள் நிலவின. சில சமயம் அவை உடன்பட்டன. பல சந்தர்ப்பங்களில் முரண்பட்டன. ஆண் பெண் உறவின் உச்சம் தொடுதலும், உணர்வைப் பகிர்தலும், சிலிர்ப்பூட்டும் சீண்டலும் என்பது அவள் வாதம். அதன் நீட்சியாக, நினைவுச் சின்னமாக மட்டுமே கூடுதல் இருக்க முடியும் என்று தீர்மானமாக இருந்தாள். அவனைப் பொறுத்தமட்டில் எல்லாவற்றுக்கும் அடிநாதமாக காமத்தைக் கருதினான். அதை அடைவதற்கான உத்தியாக காதல் அவனுக்குத் தோன்றியது. காதலிக்கக் கற்றவர்கள் காதலை விலையாகக் கொடுக்கிறார்கள்; கல்லாதோரு உடல் பலத்தால் கட்டாயமாக அல்லது பணத்திற்குச் சரக்கு வாங்குவது போல அடைகிறார்கள் என்று சொல்லித் திரிவான்.

அவர்களுக்கு இடையேயான உறவை வரையறுப்பதற்கான இலக்கணம் அடிக்கடி மாறிக்கொண்டே இருந்தது. நட்பு, காதல், கவர்ச்சி, உடன் வேலை செய்பவன் என்று மாறி மாறிக் கூறிக் கொண்டார்கள். அதில் யார் ஆணித்தரமாகப் பேசுகிறார்களோ அந்த நபருக்கும் மற்றவர் விட்டுக் கொடுப்பதும், உறவை ஏதாவது பெயரில் உறுதி செய்து தக்க வைப்பதும் வழக்கமாக இருந்தது.

ஒரு நாள் அவனுக்குக் காய்ச்சல் வந்தது. வஞ்சனையின்றி ஒரு வாரம் தங்கியது. அவன் படுக்கையோடு தங்கினான். யாமினி பணிவிடைகள் செய்தாள். மருந்து வாங்கிக் கொடுத்தாள். பத்தியப் பானங்கள் காய்ச்சினாள். கழுத்தைத் தொட்டு சூடு பார்த்தாள். தலை முடியைக் கோதிக் கொடுத்தாள். நெற்றியில் முத்தமிட்டாள். மென்மையாக அணைத்து 'கட்டிப் புடி' வைத்தியம் செய்தாள்.

உடலும், மூளையும் ஓய்ந்து கிடந்தவன் புத்தி தாறுமாறாக வேலை செய்தது. அவளது நீள அகலங்களை அளந்தான். ஆடைகளை கற்பனையில் கழட்டிப் பார்த்தான். சாத்தான் அவனுக்குள் குதியாட்டம் போட்டது. அவள் கண்களையே நோக்கினான்.

அவளோ சிரிப்புப் பூத்தாள்.

"என்னடா? நித்திரை கொள்ளலியா? அப்படிப் பாக்கிறாய்?"

அவனிடம் பதிலில்லை.

"என்ன..அம்மாவை நெனச்சுக் கொண்டாயோ?"

அல்சர் வந்த வயிற்றில் ஆவின் பால் வார்த்தது போல அவன் விகார எண்ணமெல்லாம் தணிவதை உணர்ந்தான். தலையிலிருந்த மயிலிறகைக் காணவில்லை. முகத்தின் மகரந்தம் உதிர்ந்து விட்டிருந்தது.