Sunday, April 08, 2007

கண்டியில் ஒரு..ஒரு..ஒரு..காதல்??

- செல்லமுத்து குப்புசாமி

அவன் பார்வை அந்த எறும்பின் அறியாமை கலந்த முயற்சியில் நிலை குத்தியிருந்தது. பதிமூன்று நிமிடமாக கண்ணாடிச் சுவரில் ஏறுவதும், சறுக்குவதுமாக அதன் போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. அக்காட்சி சற்று நேரத்தில் அவனுக்குச் சலிப்பை ஏற்படுத்தியது. தலையைச் சுற்றாமல் கண்ணை மட்டும் நீளமாக ஃபோகஸ் செய்து ஜன்னலுக்கு அப்பால் பார்வையைச் செலுத்தினான்.

கட்டுமானப் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருந்தன. வாணம் தோண்டியவாறும், அதில் அஸ்திவாரம் இட்டவாறும், சில இடங்களில் கம்பிகள் நடப்பட்டவாறும் தென்பட்டது. அரை மணி நேரத்திற்கு ஒரு தடவை தோற்றம் மாறிக் கொண்டே இருந்தது. அலாவுதீன் தேய்த்த விளக்கிலிருந்து கிளம்பிய பூதம் ஏதோ மாயாஜாலம் செய்வதைப் போல கட்டிடம் கண்ணுக்கு முன்னார் வளர்ந்தது. இயந்திரங்கள் துரித கதியில் இயங்கின. பணியாட்கள் இயந்திரத்தின் வேகத்தோடு சளைக்காமல் போட்டி போட்டனர்.

அந்த இடத்தில் ஒரு புதிய ஆலை நிர்மாணமாகி வருகிறது. அதற்குப் பொறுப்பாளனாக அவனை நிர்வாகம் தேர்ந்தெடுத்து அனுப்பியிருந்தது. தமிழக-கர்நாடக எல்லையில் ஓசூருக்கு அருகே அவனது பிரதானத் தொழிற்சாலை இருந்தது. இட நெருக்கடி, அதிகப்படியான கூலி முதலிய காரணங்களுக்காக சிங்கப்பூரில் இருந்து வந்த முதன்மை நிர்வாகி இந்தியாவுக்கு வெளியே எங்காவது ஃபேக்டரி கட்டச்சொல்லி உத்தரவிட்டார்.

நீண்ட விவாதங்களின் முடிவில் இலங்கையைத் தேர்ந்தெடுத்தார்கள். ஓசூரில் ஒரு ஆளுக்குக் கொடுக்கும் ஊதியத்தை வைத்து இலங்கையில் ஐந்து பேருக்குக் கூலி கொடுத்து விடலாம் என்று அவர்கள் அமர்த்தியிருந்த ஆலோசக நிறுவனம் அறிக்கை சமர்ப்பித்தது. இலங்கையில் எந்த ஊர் என்ற கேள்வி எழுந்த போது, அவன் முன் வைத்த கண்டியை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அவனையே அதற்குப் பொறுப்பாளனாகவும் அனுப்பினர். தொழில் தொடங்க எதோ நிறுவனம் வருவது தெரிந்தவிடனேயே சிங்கள அரசு இரு கரங்களையும் விரித்து வரவேற்று அனுமதி கொடுத்தது.

கண்டி என்றவுடன் அவனுக்கு முன்பெல்லாம் எம்.ஜி.ஆர். பிறந்த ஊர் என்ற எண்ணம் மட்டுமே மனதில் விரிந்து நிற்கும். சமீப காலமாக அந்த எண்ணம் சற்று விரிவு பட்டிருந்தது. முத்தையா முரளிதரனும், அவரது அழகான சென்னை மனைவியும் அதில் முக்கிய இடம் பெற்றிருந்தனர். அவனது பள்ளிப்பிராயத்தில் திண்டுக்கல்லில் இருந்து சில இளைஞர்கள் கண்டிக்குப் பணியாற்றச் செல்வதாகப் பேசிக் கொண்டதை நினைவுபடுத்திக் கொள்வான். வேறு பெரிதாக அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.

தமிழ் சினிமாவில் வேலைக்காரியின் பெயர் முனியம்மாவாக இருப்பது எந்த அளவுக்கு மாற்றமற்றதோ அதே போல கண்டியிலே அவனுக்கு அறிமுகமான பெண்ணுக்கு யாமினி என்ற பெயர் இருந்தது. தனது வேலையைச் சரியாகப் பங்கு போட்டு பணிகளைத் துரிதமாகவும், குறைந்த செலவிலும் முடித்துக் கொடுப்பதில் அவளது உள்ளூர் ஞானம் உதவுமென்று அவன் உறுதியாக நம்பினான். யாமினியைச் சிங்களத்தி என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தான். ஆனால், அவள் தமிழச்சி என்பது போகப் போகப் புரிந்தது. ஆரம்பத்தில் அலுவல் நிமித்தமான விசயங்களை ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டார்கள்.

பிரிதொரு நாள் பணியாளர்கள் எல்லாம் வீடு சென்றதும் கடைசியாக யாமினி மட்டுமே மிச்சமிருந்தாள். மங்கலான ஒளியில் மலையாளப் படம் பார்க்கும் கற்பனையைத் தோற்றுவிக்கும் இந்தச் சம்பவம் சர்வசாதாரணமான ஒரு நிகழ்ச்சியாகவே நடந்தது. எனினுன், அவர்களுக்கு இடையே எழுந்து நின்ற ராட்சதப் பனிக்கட்டி அப்போது உருக ஆரம்பித்ததை இருவருமே அறியவில்லை. அவன் அவளைத் தன்னோடு அழைத்துச் சென்று வீட்டில் விடுவதற்கு முன் வந்தான். அப்போது அவர்கள் ஆங்கிலத்தை உதிர்த்து விட்டு பரஸ்பர அறிமுகத்தை அடுத்த நிலைக்குத் தமிழில் நகர்த்தினார்கள்.

கண்டி அவளுக்குச் சொந்த ஊரல்ல. கிழக்கே மட்டக்களப்புக்கு அருகில் ஒரு அழகிய கிராமம். அவள் தந்தைக்கு அங்கே பெரும் விளைநிலங்கள் இருந்தன. நுங்கு சீவி தின்ற பனங்காயில் வண்டி செய்து, கிழியாத பாவாடையும், துடைக்காத மூக்குமாக ஓட்டித்திரிந்து கொண்டிருப்பாள் அவள். அதை விடச் சிறுமையான விளையாட்டுத்தனத்தோடு அவர்கள் தோட்டத்தின் பயிர்கள் மீது ஸ்றீலங்கா ஆர்மிக்காரர்கள் ராணுவ வண்டிகளை ஓட்டி விளையாடுவார்கள்.

அந்த ஊரில் வசதியானவர்கள் சிலர் விசா எடுத்து ஐரோப்பாவுக்கும், கனடாவுக்கும் கெளரவமான அகதிகளாகப் போனார்கள். நாதியற்றவர்கள் இருக்கிற நகை நட்டுகளை விற்று, அந்தப் பணத்தைத் தோணிக்காரனுக்குக் கொடுத்து இந்தியாவிற்குத் திருட்டுத் தோணியேறினார்கள். வேறு சிலர் அங்கேயே இருந்து சமாளித்துப் பார்ப்பதென்ற முடிவோடு இருந்தனர். அதில் யாமினின் தந்தையும் ஒருவர்.

அவர்களுக்குப் பரம்பரைச் செல்வம் நிறைய இருந்தது. அதில் நிறையவே சூரையாடப்பட்டன. போராட்டக்காரர்களுக்கு உதவுவதாகச் சொல்லி அரசாங்கம் பாதியைக் கைப்பற்றியது. தமிழ் சினிமாப் போலீசைப் போல ஒரு சில ஆர்மிக்காரர்கள் மட்டுமே நல்லவர்களாக இருந்தனர். நள்ளிரவுச் சோதனைகளில் ஆண்களின் உயிரும், பெண்களின் உடலும் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டன. பொன்னகையெல்லாம் மறந்த சமுதாயத்தில் சாமானியர்கள் கூட சயனைடு குப்பிகளைக் கழுத்தில் அலங்கரித்தனர்.

உள்ளூரில் சித்தரவதை அனுபவிப்பதை விட கொழும்புக்குச் சென்று வியாபாரம் செய்யலாமென்று நிலபுலன்களை எல்லாம் அப்படியே துறந்து விட்டு நகை, பணத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு போனார்கள் யாமினி குடும்பத்தினர். அது எண்பதுகளில் இறுதிக்காலம். அமைதிப்படை இன்னமும் வந்திடாத காலம்.

கொழும்பிலே அவள் வளர்ந்தாள். முளை விட்ட நாற்றாக வந்தவள் அங்கே பயிரானாள். பதின்ம வயதுகளின் மதப்பும் வளர்ந்தது. திலீபனால் காதலிக்கப்பட்டாள். மிச்சமிருக்கும் நேரத்தில் படித்தாள். கொழும்பிலேயே கல்லூரியும் முடித்தாள். நிர்வாக மேலாண்மையில் பட்டம் பெற்றாள். அதன் பிறகு வேலைக்குச் சேர்ந்தாள்; ஆனால் அதற்குள் திலீபனைக் கைபிடித்தாள். அழகான பெண் குழந்தை பிறந்தது. அவர்கள் கொண்டிருந்த ஆசையை வாழ்ந்து தீர்க்க ஒரு ஆயுள் போதாதென்று எல்லோரும் பேசினார்கள். ஆனால், திலீபனோடு குழந்தையும் சேர்ந்து அற்ப ஆயுளில் போய்ச் சேர்ந்தது. உபயம் ஒரு கலவரம்.

அவள் கண்டிக்கு வர அது காரணமாயிற்று. மாற்றத்தை நாடி வந்தாள். முப்பதுகளின் முதற்பாதியை எந்த நேரத்திலும் அவள் கடந்து விடும் நிலையில் இருந்தாள். முகத்தில் தெரியும் முதிர்ச்சி உடம்பில் யாமினிக்குத் தெரியாது. அவ்வளவு வடிவானவள். பழசையெல்லாம் மறந்து ஒரு சுற்றுலா வளர்ச்சி தொடர்பான தன்னார்வ நிறுவனத்தில் மிதமான சம்பளத்தில் காலந்தள்ளினாள். அந்தத் தருணத்தில் வெளிநாட்டுக் கம்பெனி கண்டியில் புதிதாகத் தொடங்கவிருக்கும் ஆலையின் இணை நிர்வாகப் பணிக்குத் திறமையான ஆள் தேவையென்று யாரோ சொல்ல, விருப்பமில்லாமல் விண்ணப்பித்துத் தேர்வானாள்.

அவள் கதை துயரம் நிறைந்த யுத்த காண்டமாக இருக்க, அவன் கதையோ மழை பெய்த மறுநாள் கிளுவ மர இலையைத் தின்று பறக்கும் பொன்வண்டின் ஒய்யாரமான பின்னணியை உடையது. மயிலிறகைத் தலையிலும், வண்ணத்துப் பூச்சி சேகரித்த மகரந்தத்தை முகத்திலும் பூசியது போன்ற குதூகலம் எப்போதும் அவனைச் சுற்றியிருக்கும். உழைப்பும், ஊதியம், உல்லாசம் என்பது அவன் வாழ்க்கைச் சித்தாந்தமாக இருந்தது. அவன் வாழ்க்கையில் நேர்த்தி வெளிப்பட்டது; நேர்மையும் இருந்தது.

யாமினும், அவனும் .. இதோ காரில் சென்று கொண்டிருக்கிறார்கள். அவனுக்கு அருகாமையில் பல பெண் தோழியர் இருந்திருக்கின்றனர். தற்போது கணவன்மாரோடு வசிக்கும் இரண்டு பெண்கள் அவனது கடந்த காலத்தைக் காதலியாக அலங்கரித்திருந்தனர். மூச்சுக் காற்றுப் படும் தூரத்தில் ஸ்பர்சங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால், இப்போது ஏற்படும் உணர்ச்சியோடு அவற்றை ஒப்பிட முடியாததாகப்பட்டது. அவள் மீது அவனுக்கு கவர்ச்சி என்பதை விட ஏதோ ஒரு வித மரியாதையை உணர்ந்தான். எனினுன், பெண் என்பதால் இயல்பாகத் தோன்றும் ஈர்ப்பை அவனால் மறைக்க முடியவில்லை.

அவளது வரலாற்றைத் தவணை முறையில் தெரிந்து கொண்டான். பரிதாபம் காட்டினான். தனக்கு அனுதாபம் தேவையில்லை என்றாள் அவள். ஆனால், அவள் மனது அதற்காக ஏங்கி நின்றது. தான் அனுதாபம் காட்டுவது அவளை அடைவதற்கான உத்தியாக இருக்குமோ என்று விடை கூற முடியாத கேள்வியை அவளிடமே கேட்டான். அவள் குழம்பினாள். ஆயினும் பிடித்திருந்தது.

இனப்போராட்டம், பயங்கரவாதம், விடுதலை, வருணபேதம், பெளத்தம், இந்துத்துவா, மத மாற்றம், காதல், காமம், ஆண்டான் அடிமைத்தனம் என எது பற்றியும் அவர்களுக்கு கருத்துக்கள் நிலவின. சில சமயம் அவை உடன்பட்டன. பல சந்தர்ப்பங்களில் முரண்பட்டன. ஆண் பெண் உறவின் உச்சம் தொடுதலும், உணர்வைப் பகிர்தலும், சிலிர்ப்பூட்டும் சீண்டலும் என்பது அவள் வாதம். அதன் நீட்சியாக, நினைவுச் சின்னமாக மட்டுமே கூடுதல் இருக்க முடியும் என்று தீர்மானமாக இருந்தாள். அவனைப் பொறுத்தமட்டில் எல்லாவற்றுக்கும் அடிநாதமாக காமத்தைக் கருதினான். அதை அடைவதற்கான உத்தியாக காதல் அவனுக்குத் தோன்றியது. காதலிக்கக் கற்றவர்கள் காதலை விலையாகக் கொடுக்கிறார்கள்; கல்லாதோரு உடல் பலத்தால் கட்டாயமாக அல்லது பணத்திற்குச் சரக்கு வாங்குவது போல அடைகிறார்கள் என்று சொல்லித் திரிவான்.

அவர்களுக்கு இடையேயான உறவை வரையறுப்பதற்கான இலக்கணம் அடிக்கடி மாறிக்கொண்டே இருந்தது. நட்பு, காதல், கவர்ச்சி, உடன் வேலை செய்பவன் என்று மாறி மாறிக் கூறிக் கொண்டார்கள். அதில் யார் ஆணித்தரமாகப் பேசுகிறார்களோ அந்த நபருக்கும் மற்றவர் விட்டுக் கொடுப்பதும், உறவை ஏதாவது பெயரில் உறுதி செய்து தக்க வைப்பதும் வழக்கமாக இருந்தது.

ஒரு நாள் அவனுக்குக் காய்ச்சல் வந்தது. வஞ்சனையின்றி ஒரு வாரம் தங்கியது. அவன் படுக்கையோடு தங்கினான். யாமினி பணிவிடைகள் செய்தாள். மருந்து வாங்கிக் கொடுத்தாள். பத்தியப் பானங்கள் காய்ச்சினாள். கழுத்தைத் தொட்டு சூடு பார்த்தாள். தலை முடியைக் கோதிக் கொடுத்தாள். நெற்றியில் முத்தமிட்டாள். மென்மையாக அணைத்து 'கட்டிப் புடி' வைத்தியம் செய்தாள்.

உடலும், மூளையும் ஓய்ந்து கிடந்தவன் புத்தி தாறுமாறாக வேலை செய்தது. அவளது நீள அகலங்களை அளந்தான். ஆடைகளை கற்பனையில் கழட்டிப் பார்த்தான். சாத்தான் அவனுக்குள் குதியாட்டம் போட்டது. அவள் கண்களையே நோக்கினான்.

அவளோ சிரிப்புப் பூத்தாள்.

"என்னடா? நித்திரை கொள்ளலியா? அப்படிப் பாக்கிறாய்?"

அவனிடம் பதிலில்லை.

"என்ன..அம்மாவை நெனச்சுக் கொண்டாயோ?"

அல்சர் வந்த வயிற்றில் ஆவின் பால் வார்த்தது போல அவன் விகார எண்ணமெல்லாம் தணிவதை உணர்ந்தான். தலையிலிருந்த மயிலிறகைக் காணவில்லை. முகத்தின் மகரந்தம் உதிர்ந்து விட்டிருந்தது.

23 comments:

வெற்றி said...

செல்லமுத்து குப்புசாமி,
அருமையான கதை. மிகவும் அழகாக, அடுத்த வரியை ஆர்வத்துடன் படிக்கத்
தூண்டும் வகையில் எழுதுவது என்பது உங்களுக்குக் கை வந்த கலை. சிறுகதைகள் எழுத முயல்வோர் உங்களின் இக் கதைகளைக் கட்டாயம் படிக்க வேண்டும். அந்த அளவுக்கு அருமையாக, படிக்கச் சுவைக்கும் வண்ணம் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள். உங்களைப் பாராட்டுவதற்கே எனக்குத் தகுதி இல்லை.
சிறந்த கதையைப் படித்த திருப்தி.
மிக்க நன்றி.

கதையின் முடிவை நீங்கள் சில வார்த்தை ஜாலங்களோடு முடித்திருப்பதால் எனக்குக் கதையின் முடிவு சரியாக விளங்கவில்லை. மன்னிக்கவும், என் தமிழறிவு கொஞ்சம் அப்பிடி இப்படித்தான்.

So, கதையின் நாயகனுக்கு காம உணர்வுகள் போய், நாயகி மேல் உண்மைக் காதல் மலர்கிறது என்று சொல்ல வருகிறீர்களா?

கற்பனைக் கதையாக(?) இருந்தாலும் உண்மையோ என ஐயமுறும் வண்ணம் இயல்பாகச் சொல்லியுள்ளீர்கள்.

நீங்கள் தமிழகத்தில் எந்த மாவட்டம்? நீங்கள் புழங்கியுள்ள சில சொற்கள் ஈழத்தில் மட்டும்தான் புழங்குவார்கள் என எண்ணியிருந்தேன். எடுத்துக்காட்டாக, "அவ்வளவு வடிவானவள்." என்ற வாய்க்கியத்தில் வரும் வடிவு எனும் சொல் இந்த அர்த்தத்தில் ஈழத்தில் மட்டும்தான் புழக்கத்தில் உண்டு என நினைத்திருந்தேன்.

-----------------------------

பி.கு:- திங்கள் இரவு நான் உங்களைத் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன். கதைப்போம்[பேசுவோம்].

சினேகிதி said...

சிறுகதை எழுத நினைப்பவர்கள் படிக்கவேண்டிய கதையென்று வெற்றி சொன்னதுண்மைதான்.சும்மா வாசிச்சுப்பார்ப்பம் என்று வந்தால் முழுவதும் வாசிக்கத்தூண்டியது உங்கள் எழுத்து நடையும் உவமான உவமேயங்களும்."உபயம் ஒரு கலவரம்" குறுகிய வசனம் ஆனால் தெளிவானது.எனக்கும் இப்படி எழுத ஆசை வந்திட்டு:-)

வெற்றி நான் நினைக்கிறேன் அந்தப்பெண் நாயகனை ஒரு தாயின் ஸ்தானத்திலிருந்துதான் பாரக்கிறாள் என்று....சரியா குப்புசாமி??:

நாமக்கல் சிபி said...

செல்லமுத்து குப்புசாமி,

அருமையாக எழுதியுள்ளீர்கள். அழகான நடை.

பாராட்டுக்கள்!

நாமக்கல் சிபி said...

//அதை விடச் சிறுமையான விளையாட்டுத்தனத்தோடு அவர்கள் தோட்டத்தின் பயிர்கள் மீது ஸ்றீலங்கா ஆர்மிக்காரர்கள் ராணுவ வண்டிகளை ஓட்டி விளையாடுவார்கள்//

//நள்ளிரவுச் சோதனைகளில் ஆண்களின் உயிரும், பெண்களின் உடலும் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டன. பொன்னகையெல்லாம் மறந்த சமுதாயத்தில் சாமானியர்கள் கூட சயனைடு குப்பிகளைக் கழுத்தில் அலங்கரித்தனர்//


:((

அங்கே நடக்கும் கொடுமைகளை எளிமையாக அதேசமயம் அழுத்தமாகவும் சில வரிகளிலேயே வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

நாமக்கல் சிபி said...

//வெற்றி நான் நினைக்கிறேன் அந்தப்பெண் நாயகனை ஒரு தாயின் ஸ்தானத்திலிருந்துதான் பாரக்கிறாள் //

அப்படியல்ல சிநேகிதி!
நாயகிக்கும் அவன் மேல் காதல் உண்டு. ஆனால் அந்த நேரத்தில் அவள் ஒரு தாயாய் இருந்து பணிவிடைகள் புரிகிறாள்!

அப்படித்தானே செல்லமுத்து குப்புசாமி அவர்களே!

நாமக்கல் சிபி said...

முன்பொரு முறை நீங்கள் எழுதிய கதையில் தேர்ட் அம்பயர் உதவி தேவைப் படும் அளவுக்கு விவாதங்கள் நடந்ததே?

:))

Kuppusamy Chellamuthu said...

அய்யோ வெற்றி.. நீங்க பேசறதைக் கேட்டு எனக்கு அழுகாச்சு அழுகாச்சா வருது.. தூக்கமும் வருது.

நன்றி சிநேகிதி & சிபி.

நீளமா நாளைக்கு ஒரு பின்னூட்டம் போடறேன்.

சிபி..அதை மறக்க முடியுமா? அப்ப வாங்கின அடி இன்னும் வலிக்குதுங்க!!

சினேகிதி said...

yea neenga solrathu sari pola iruku Sibi :-))) kupusamy escape agiraru naalaiku vantu parpam avaru ena solraru endu:-)

நாமக்கல் சிபி said...

//சிபி..அதை மறக்க முடியுமா? அப்ப வாங்கின அடி இன்னும் வலிக்குதுங்க!!
//

:))

அது சரி!

Kuppusamy Chellamuthu said...

வெற்றிண்ணா..வணக்கம்!

உங்களது புகழ்ச்சி என்னை மிகவும் நெளிய வைக்கிறது.

//கதையின் முடிவை நீங்கள் சில வார்த்தை ஜாலங்களோடு முடித்திருப்பதால் எனக்குக் கதையின் முடிவு சரியாக விளங்கவில்லை. மன்னிக்கவும், என் தமிழறிவு கொஞ்சம் அப்பிடி இப்படித்தான்.//

இதில் தமிழ் எங்கே வந்தது? "என்னை மன்னிச்சுடுங்க திருந்திட்டேன்னு வில்லன் அழுகிறான்; அவன் மனைவி தாலியை எடுத்துக் காட்டி மன்றாடுகிறாள்; ஹீரோ மன்னிக்கிறான்; ஹீரோயின் வந்து கட்டிப்பிடிக்கிறாள்; போலீஸ் வருகிறது; படம் முடிகிறது" இப்படித்தான் கதை முடிய வேண்டும் என்ற நிபந்தனைகள் இல்லையே?

மிகச் சிறந்த சிறுகதை என்றெல்லாம் பெரிய வார்த்தைகளை வீணாகச் சிதறடித்து விடாதீர்கள். ஏனென்றால் நல்ல சிறுகதையின் போது பாராட்ட வார்த்தைகளே இருக்காது. எல்லாத் தலைவர்களும் பெயருக்கு முன்னால் 'புரட்சி' அடைமொழியை இட்டுக் கொள்வதால் அந்தச் சொல்லின் வீரியம் தமிழகத்தில் செத்துப் போனது உங்களுக்குத் தெரியாது.

எனக்கு வந்த மின்னஞ்சலில் இந்த வரிகள் இருந்தது. அதோடு நான் ஒத்துப் போகிறேன்.
//நண்பரே! முதற்பாதியில் ஒரு கட்டுரைத்தன்மையின்
வரட்சியைக் காணமுடிந்தது. அவர்கள் பின்புலத்தை விவரணம் போலல்லாமல்
வேறுவிதமாகச் சொல்லியிருந்தால் நேர்த்தியான சிறுகதை வடிவம்
கிடைத்திருக்கும். பிற்பாதிதான் எனக்குப் பிடித்தது//

Kuppusamy Chellamuthu said...

வெற்றி..சொல்ல மறந்துட்டேன்.

//கற்பனைக் கதையாக(?) இருந்தாலும் உண்மையோ என ஐயமுறும் வண்ணம் இயல்பாகச் சொல்லியுள்ளீர்கள்//

இது கற்பனையே!! நான் சத்தியமாக கொழும்பு, கண்டி, மட்டக்களப்பு முதலிய இடங்களுக்குச் சென்றதில்லை. கண்டியில் மூன்று மாதம் தங்கி வேலை செய்த ஒரு தமிழக நண்பரை மட்டும் தெரியும் :-)

பிறகு அந்த 'வடிவு' என்ற சொல் எங்கள் ஊரில் புழங்குவது இல்லை. இதெல்லாம் உங்க ஆட்கள் எழுதுவதைப் படித்ததால் தொற்றிக்கொண்ட(கற்றுக்கொண்ட) சொற்கள்!!

கதைக்கலாம்!!

Kuppusamy Chellamuthu said...

பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி சினேகிதி. பாராட்டு எப்போதுமே மயக்கம் தருவது. அதிலும் கதைக் களத்திற்குச் சொந்தமான பகுதியைச் சேர்ந்த பெண்ணின் பாராட்டு என்றால் கூடுதல் சந்தோசம் தொற்றிக்கொள்ளும்.

//அந்தப்பெண் நாயகனை ஒரு தாயின் ஸ்தானத்திலிருந்துதான் பாரக்கிறாள் என்று....சரியா// அப்படியெல்லாம் இல்லை. அந்த நேரத்தில் அவன் தனது தாயை எண்ணியிருக்கக்கூடும் என நினைக்கிறாள். ஆனால்..அவன் எண்ணம் விகாரமாக இருந்தது.

மற்றபடி அவர்களுக்கு இடையேயான உறவின் வரையறை மாறிக்கொண்டே இருக்கிறது.

Kuppusamy Chellamuthu said...

//yea neenga solrathu sari pola iruku Sibi :-))) kupusamy escape agiraru naalaiku vantu parpam avaru ena solraru endu:-) //

எஸ்கேப் ஆகலை தாயி. நாங்கல்லாம் நல்ல பசங்களா சனிக்கிழமை இரவு நேரமே காலமே படுத்துத் தூங்கிருவோம். உங்கள மாதிரி பதினொன்னரை வரைக்கும் முழிச்சிருக்க மாட்டோம் :-)


//அப்படியல்ல சிநேகிதி!
நாயகிக்கும் அவன் மேல் காதல் உண்டு. ஆனால் அந்த நேரத்தில் அவள் ஒரு தாயாய் இருந்து பணிவிடைகள் புரிகிறாள்!//

எனக்கென்னவோ சிபியோடு ஒத்துப்போவது பாதுகாப்பானது என்று தோன்றுகிறது. சினேகிதியும் அதற்கு ஒப்புக்கொண்டு விட்டார்.

//அங்கே நடக்கும் கொடுமைகளை எளிமையாக அதேசமயம் அழுத்தமாகவும் சில வரிகளிலேயே வெளிப்படுத்தியுள்ளீர்கள்//
ஆனால்..கதையில் பிரச்சார நெடி வீசினால் அதன் அழகியல்தன்மை கெட்டுவிடும் என்ற கருத்தும் உண்மைதானே?

அப்புறம் ஒரு வேண்டுகோள்.. எதுவும் உள்குத்து இல்லையென்றால் 'அவர்களே' வேண்டாமே!!

Udhayakumar said...

நல்லா இருக்குங்க... உங்க சேர்க்கை சரியிலைன்னு நினைக்கிறேன். ஒவ்வொரு நண்பருக்கும் ஒரு கதை இருக்கு போல...

நாமக்கல் சிபி said...

//ஆனால்..கதையில் பிரச்சார நெடி வீசினால் அதன் அழகியல்தன்மை கெட்டுவிடும் என்ற கருத்தும் உண்மைதானே?
//

உண்மைதான் செல்லமுத்து குப்புசாமி அவர்களே!

(சத்தியமா உள்குத்தெல்லாம் கிடையாது. வேணும்னா துண்டைப் போட்டுத் தாண்டிக் காட்டுறேன்.)

சினேகிதி said...

\\உங்கள மாதிரி பதினொன்னரை வரைக்கும் முழிச்சிருக்க மாட்டோம் :-)\\

aha :-))))))) apinu yaaru sona??

Kuppusamy Chellamuthu said...

//aha :-))))))) apinu yaaru sona?? // நாங்க கனடாவுல உளவாளி வெச்சிருக்கோம்ல!! எமக்கு யாவும் தெரியும்.

பி.கு: கமெண்ட் போட்ட நேரத்தை வெச்சுச் சொல்றதுக்கு பெருசா அறிவு தேவையில்லைன்னு நெனைக்கிறேன்.

தமிழ்நதி said...

//நண்பரே! முதற்பாதியில் ஒரு கட்டுரைத்தன்மையின்
வரட்சியைக் காணமுடிந்தது. அவர்கள் பின்புலத்தை விவரணம் போலல்லாமல்
வேறுவிதமாகச் சொல்லியிருந்தால் நேர்த்தியான சிறுகதை வடிவம்
கிடைத்திருக்கும். பிற்பாதிதான் எனக்குப் பிடித்தது//

இந்தக் கருத்தைச் சொன்னது யார்...? நானும் அப்படித்தான் நினைத்தேன்.

"அவன் கதையோ மழை பெய்த மறுநாள் கிளுவ மர இலையைத் தின்று பறக்கும் பொன்வண்டின் ஒய்யாரமான பின்னணியை உடையது. மயிலிறகைத் தலையிலும், வண்ணத்துப் பூச்சி சேகரித்த மகரந்தத்தை முகத்திலும் பூசியது போன்ற குதூகலம் எப்போதும் அவனைச் சுற்றியிருக்கும்."

இந்த வரிகளில் ஒரு கவித்துவம் இருக்கிறது.

Kuppusamy Chellamuthu said...

//உங்க சேர்க்கை சரியிலைன்னு நினைக்கிறேன். ஒவ்வொரு நண்பருக்கும் ஒரு கதை இருக்கு போல//

உதய், அடுத்து உங்க கதைதான்!!

வருகைக்கும் நல்ல வார்த்தைகளுக்கும் நன்றிகள் தமிழ்நதி.

பொன்ஸ்~~Poorna said...

நதியக்காவுடன் சேர்ந்து உங்கள் நண்பரை வழிமொழிகிறேன் :)

கூடுதலாக, இந்தக் கதை நல்லாத் தான் இருக்கு, ஆனால், இதற்கு முந்தைய இரண்டு மூன்று கதைகளை ஒப்பு நோக்கும் போது... ம்ஹும்.. எனக்குத் திருப்தியா இல்லை..

[பி.கு: ஒரேயடியாக புகழ்ச்சியாகவே படித்து நீங்கள் அலுத்துக் கொண்டது போலிருந்தது, அதான், இப்படி உண்மையைச் சொல்ல வேண்டியதாப் போச்சு! ;)]

G.Ragavan said...

உங்கள் கதை என்றாலே எதிர்பார்ப்போடு வருவது என்றாகி விட்டது. நீண்ட நாட்கள் கழித்துப் படிக்கிறேன் உங்கள் கதையை.

ஒழுக்கு என்பார்கள். தொடக்கத்திலிருந்து முடிவு வரை விடாமல் தொடர்ந்து செல்வது. அது சிறப்பாக வந்திருக்கிறது. வழக்கம் போல.

கதையின் முடிவு மிகவும் ரசிக்கவும் சிந்திக்கவும் தக்கது. உடல் நிலை என்றாவது சரியில்லாமல் போனால் முதலின் நினைவிற்கு வருவது அம்மாதான். அதுதான் கதையின் போக்கை முழுவதுமாக மாற்றி விடுகிறது. மகரந்தம் உதிர்ந்த இடத்தில் மீண்டும் சேர்க்கை நடக்க வாய்ப்பில்லை. உண்மைதான்.

Chellamuthu Kuppusamy said...

வாங்க பொன்ஸ். கொஞ்சம் தலைல வெயிட் ஏறிட்ட மாதிரி ஃபீலிங் வருதுன்னு கண்டுபிடிச்சிட்டீங்களா?? :-) anyway..உண்மையைச் சொன்னதற்கு நன்றி!!

Chellamuthu Kuppusamy said...

வாங்க ஜீரா.

//மகரந்தம் உதிர்ந்த இடத்தில் மீண்டும் சேர்க்கை நடக்க வாய்ப்பில்லை. உண்மைதான்.//
இந்தக் கோணத்தில் நான் யோசிக்கவே இல்லை. அதெல்லாம் இருக்கட்டும்..நீங்க தமிழ் மீடியமா?? (மகரந்தச் சேர்க்கை இல்லையே ஒழிய ஒளிச்சேர்க்கை நடக்கட்டும்!)