Sunday, April 22, 2007

அழகே உன்னை ஆராதிக்கிறேன்

- செல்லமுத்து குப்புசாமி

'அழகு' பதிவு போடுமாறு விடுத்திருந்த அழைப்பை நான் காணாமல் விட்டது பெரிய தவறு என்றார் உதயகுமார். அசின் படத்தோடு முடிந்ததென நினைக்குமாறு பிரசுரித்தது அவர் தவறுதான்:-)

அழகு!! இந்த ஒரு வார்த்தையில் எத்தனையோ அர்த்தங்களைப் பொதித்து விட முடிகிறது. எத்தனையோ விஷயங்களை அர்த்தமற்றதாகவும் ஆக்குகிற சக்தி இந்த ஒரு வார்த்தைக்கு உண்டு.

எப்போதும் குளிக்கும் மனிதனை விட, பொங்கலுக்குக் கழுவிய மாடு அழகு.

வெள்ளமாகவும், மணலாகவும், அது தொலைந்து பாறையாகவும் மாறி இன்னமும் இனிக்கும் அமராவதி அழகு.

இன்று யாருக்கோ கணவனாகிப் போன, 'தாவணி நல்லா இருக்கா?' என்று பார்வையிலே கேட்ட பள்ளிக்காலத் தோழியின் நினைப்பு அழகு.

அப்பப்போ சச்சின் டெண்டுல்கரும், ரோஜர் ஃபெடரரும் அழகு. எப்பவுமே ஸ்டெப்பி ஃகிராப் அழகு.

முதல் வருடம் ரக்ஷா பந்தன் கயிறு கட்டி, அடுத்த வருடம் நண்பர் தின அட்டை கொடுத்து, மூன்றாம் வருடம் காதலர் தின முத்தம் தந்து, இறுதியாண்டு கல்யாணம் செய்து கொண்ட அந்த ஜோடி அழகு.

பெண் கண்ணைப் பார்த்துப் பேசுகிற ஆண்மை அழகு. பேசும் துணிவை ஆண்மைக்கு அருளும் பெண்மை அதனினும் அழகு.

ஆண் சொன்னால் தோற்று, பெண் சொன்னால் மட்டும் ஜெயிக்கும் காதலும் அழகு.

காதலினும் இனிய தமிழும் அழகு.
 • பொங்கலுக்கு வாங்கிய புத்தாடை..
 • கழுத்து வியர்வையில் ஈரமாகிப்போன மல்லிகை..
 • நெற்றியில் வைத்த குட்டிச் சந்தனம்..
 • கலைந்து போய் காதுக்கு வெளியே தொங்கும் ஒற்றை முடி...
 • 'பொட்டா? மச்சமா?' என்று இனங்காண முடியாமல் புருவங்களுக்கு மத்தியில் கர்வத்தோடு கரும்புள்ளி..
 • அதிகாலைப் பூ, பிறந்த குழந்தை போல தொட்டுப் பார்க்காமலே ரசிக்கத் தகுந்ததும், தொடாமல் தவிர்க்க இயலாததுமான உதடு..
 • உலகத்தையே மறக்கடிக்கவும், மறந்த உலகத்தை வென்றெடுக்கவும் உந்தித் தள்ளும் அந்தச் சிரிப்பு...
 • படபடக்கும் பேச்சு..
 • 'ரொம்பப் பேசறனா?' கேள்வி..
 • பேசினாலும் தீராத ஆசைகள்..
 • பேசவே இயலாத தேவைகள்..
 • 'வாய் பேசிய பிறகுதான் நானா?' என்று முந்தியடித்துக் கதை சொல்லும் கண்கள்..
 • ஏதோ புண்ணியம் செய்த அந்த ஒற்றைச் சங்கிலி..
 • உன்னை மூடியதால் அழகு பெற்ற அந்த வெள்ளைத் துப்பட்டா...
 • 'உன் முகம் மறைத்ததால்தானே!' என்பதால், பாதி தெரிந்தாலும் கூட அழகாகிப் போன உன் அம்மா..
எச்சரிக்கை!! எவனையும் கவிஞனாக்கி விடும், அழகு!!

16 comments:

Udhayakumar said...

ஆட்டோகிராப்??? எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி :-)

பங்காளி... said...

அழகெல்லாம் ஒரு மார்க்கமாவே இருக்கே....ம்ம்ம்ம்ம்

எனக்கும் உண்மை தெரிஞ்சாகனும் சாமீ...

காட்டாறு said...

//எப்போதும் குளிக்கும் மனிதனை விட, பொங்கலுக்குக் கழுவிய மாடு அழகு.//

இது குசும்பாயிருந்தால், அதுவும் அழகு.

அழகா எழுதியிருக்கீங்க! எல்லாமே காதலை சுத்தி இருக்குற மாதிரி ஒரு பிரம்மை இருக்குது இந்த பதிவுல.

Chellamuthu Kuppusamy said...

வாங்க உதய் மற்றும் பங்காளி!

ரண்டு பேருமே உண்மை தெரிஞ்சாகனும்னு கேட்டாலும், அதன் நோக்கம் வேறு. உதய் கேட்டது 'அந்த ஜோடி' யார் என்று!

பங்காளி கேட்கும் உண்மை என்னன்னு தெரியலையே சாமீமீ :-(

Chellamuthu Kuppusamy said...

காட்டாறு: காதலே ஒரு பிரமை..(அதாங்க பிரேமை) இதில ஆச்சரியப்பட என்ன இருக்குங்க?

வினையூக்கி said...

செல்லமுத்து குப்புசாமியின் பதிவுகள் எப்போதுமே அழகு.

Ravi said...

//இன்று யாருக்கோ கணவனாகிப் போன//

Hunband or wife?

Syam said...

//எப்போதும் குளிக்கும் மனிதனை விட, பொங்கலுக்குக் கழுவிய மாடு அழகு//

ஆகா...எப்படின்னே....இந்த அழகுக்கு ஈடு இனை இல்ல....:-)

Syam said...

//அது தொலைந்து பாறையாகவும் மாறி இன்னமும் இனிக்கும் அமராவதி அழகு.
//

அந்த பாறையும் இன்னும் கொஞ்ச நாள் இருக்குமானு பயமா இருக்கு...ஆண்டவா எங்க ஆத்த காப்பாத்துனு சொல்றத தவர வேற ஒன்னும் தோனல எனக்கு...

Syam said...

//பெண் கண்ணைப் பார்த்துப் பேசுகிற ஆண்மை அழகு//

அது அழகு மட்டும் இல்லனே வீரமும் கூட....:-)

Chellamuthu Kuppusamy said...

வாங்க வினையூக்கி. ரொம்பச் சந்தோசம்!

என்ன ஷ்யாம் யோசிச்சு யோசிச்சு அடுக்கடுக்காப் பின்னூட்டம் போடுறீங்க போல! அமராவதி நெனைப்போ?

இளவஞ்சி said...

குப்ஸ்,

// எப்போதும் குளிக்கும் மனிதனை விட, பொங்கலுக்குக் கழுவிய மாடு அழகு. //

மொத வரியிலயே ஒரு பெரீரீரீய புன்னகைய முகத்துல ஒட்ட வைச்சிட்டீங்களேயய்யா! அப்பறம் முழு பதிவையும் ரசிக்காம இருக்க முடியுமா?!

காதலழகு தூக்கலா இருந்தாலும் கலக்கலா இருக்கு! :)

Chellamuthu Kuppusamy said...

//மொத வரியிலயே ஒரு பெரீரீரீய புன்னகைய முகத்துல ஒட்ட வைச்சிட்டீங்களேயய்யா! அப்பறம் முழு பதிவையும் ரசிக்காம இருக்க முடியுமா?!//

ரொம்பச் சந்தோசம் இளவஞ்சி வாத்தியார் (ஆமா..அதுக்குப் பெயர்க் காரணம் கேக்கனும்னு ரொம்ப நாளா நெனைச்சுட்டு இருக்கேன்)

தமிழ்நதி said...

\\இன்று யாருக்கோ கணவனாகிப் போன, 'தாவணி நல்லா இருக்கா?' என்று பார்வையிலே கேட்ட பள்ளிக்காலத் தோழியின் நினைப்பு அழகு.\\

இதில் ஒரு தவறு இருக்கிறது நண்பரே! கண்டுபிடித்த எனக்கு 'இழக்காதே'ஒன்று இலவசமாகத் தரவேண்டும்.:)

Chellamuthu Kuppusamy said...

ஆஹா..நதி..இது ஏற்கனவே தெரிந்ததே.

//இன்று யாருக்கோ கணவனாகிப் போன// மனைவி என்று இருக்க வேண்டும். எழுதிய பிறகு கவனித்தேன். மாற்றாமல் அப்படியே விட்டாச்சு. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

selva said...

எச்சரிக்கை!! எவனையும் கவிஞனாக்கி விடும், அழகு!!

Nice! Ungalai kavignan aakkiya Azhagu edhuvo?