Sunday, May 13, 2007

கொலம்பஸ் தமிழ்ச் சங்கம் - உரை!!

- செல்லமுத்து குப்புசாமி

(2007 மே 13 ஆம் தேதி நடந்த கொலம்பஸ் தமிழ்ச் சங்க விழாவுக்காக எழுதியது)

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களுக்கு,

வணக்கம்.

கொலம்பஸ் தமிழ்ச் சங்கம் நடத்தும் இந்தத் திருவிழாவில் இந்தக் கட்டுரையை வாசிப்பது பெரு மகிழ்ச்சியையும், அளவிட முடியாத பெருமிதத்தையும் அளிக்கிறது. இந்த வாய்ப்பினை வழங்கிய நல்ல இதயங்களுக்கு நன்றியைச் செலுத்தி விட்டு உரையைத் தொடங்குகிறேன்.

நாம் ஒரு நல்ல நாளைக் கொண்டாடி மகிழ்வதற்காகக் கூடியிருக்கிறோம். இப்படிப்பட்ட இடத்தில், சூழ்நிலையில் கொண்டாட்டமான செய்திகளை மட்டும் பேசிக் களித்துப் பிரிவது இயல்பு. எனினும் நான் ஒரு சீரியசான விஷயத்தை இங்கே துணிச்சலுடன் எடுத்துக் கூற விரும்புகிறேன். அதே சமயம், அளவுக்கு மீறி சீரியசாகப் பேசினால் 'கருத்துக் கந்தசாமி' என்ற அளவுக்கு அளவுக்கு சலிப்பை ஏற்படுத்தும் என்பதையும் உணராமலில்லை.

தமிழ்!! மிகவும் இனிமையான மொழி. மூன்று நாடுகளில் தேசிய மொழி. இந்தியத் துணைக்கண்டத்தில் பேசப்படும் எந்த ஒரு மொழிக்கும் இத்தகைய பெருமை இல்லை. தனது வழிபாட்டு முறைகள், வாழ்ந்த காலம், வசித்த நாடு எதையுமே குறிப்பிடாமல், உலகில் எந்தப் பகுதி மக்களுக்கும், எல்லாக் காலத்திலும் பொருந்தக் கூடிய கோட்பாடுகளைத் திருக்குறளில் சொல்லிச் சென்ற வள்ளுவப் பேராசானைத் தந்த மொழி.

காலப் போக்கில் பிற பொழிக் கலப்பிலும், புணர்விலும் பற்பல சொற்களைத் தன்னகத்தே ஈர்த்துக் கொண்டாலும், தன் தனித்தன்மையையும், இனிமையையும் இழக்காமல் பொலிவோடு திகழும் மொழியாக இருக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்திலே வருவது போல, 'தமிழ்ப்' பெண்ணின் சீரிளமை வியந்து போற்றத் தக்கதாகவே தொடர்ந்து வருகிறது.

மகிழ்ச்சி. இதெல்லாம் நமக்குக் கட்டுக்கடங்காத மகிழ்ச்சியை அளிக்கிறது. சந்தேகமே இல்லை. ஆனாலும், 'தமிழ்' கடந்த காலத்தில் மொழியாக, நிகழ் காலத்தின் பொழுது போக்காக மட்டுமே இருக்கிறதோ என்ற கவலை, தமிழ் மொழியின் மீதும் தமிழ் சமுதாயத்தின் மீதும் அக்கறை கொண்ட சில சிந்தனை வட்டங்களில் நிலவுகிறது.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி என்கிறோம். சங்கம் வளத்த மதுரையில் இன்று ஜாதி வளர்க்கிறோம்.கருத்துப் போர் புரிந்த புலவர்கள் வாழ்ந்த நகரத்தில், பட்டாக் கத்திகள் உலவுகின்றன.

கால் நூற்றாண்டுக்கும் மேலாக நமது ஆட்சியாளர்கள் 'பேசிப் பேசியே' நம்மை முட்டாளாக்கி வைத்திருக்கிறார்கள். வார்த்தை அலங்காரங்களிலும், அடுக்கும் மொழிகளிலும் அகப்பட்டு மகுடியின் ஜால வித்தையைக் கண்ட பாம்பினைப் போல மதி மயங்கிக் கிடக்கிறான் தமிழன்.

ஆட்சியாளர்களையும், அரசு இயந்திரத்தின் மெத்தனத்தையும் மிக 'செளகர்யமாகக்' குறை சொல்லி விட்டு நாமும் வெட்டியாகப் பேசிக் கொண்டு மட்டுமே இருக்கிறோமா என்ற ஐயம் ஆட்கொள்கிறது.

சமுதாயத்தின் ஒழுங்கின்மை தனி மனிதனின் வாழ்வில் பிரதிபலிக்கிறது. ஒரு சமுதாயத்தின் முன்னேற்றமின்மை அச்சமுதாயம் பேசும் மொழியின் முன்னேற்றத்தையும் தடுத்து விடுகிறது. நாம் அதற்கு அப்பட்டமான உதாரணமா என்ற கேள்வியை அப்படியே ஒதுக்கி விட இயலாது.

நம்மில் பலர் தமிழை ரசனைக்குரிய மொழியாக மட்டுமே அறிந்து வைத்திருக்கிறோம். நேற்றைய மொழியாக, செம்மொழியாக நினைத்துப் புளகாங்கிதம் அடைகிறோம். நாளைய மொழியாக, அறிவியல் மொழியாக அதை மாற்றத் தவறி விட்டோம். கதை படிக்க வேண்டுமானால் தமிழை நாடுகிறோம். நெஞ்கம் நெகிழ்ந்து காதலித்துக் கவிதை எழுதும் போது தமிழ் கை கொடுக்கிறது. கோபம் தலைக்கேறி அடுத்தவனின் 'அம்மாக்களின்' ஒழுக்கத்தை 'ங்கோத்தா' போட்டு சந்திக்கு இழுக்கும் வசவு வார்த்தைகளைப் பேசும் போது தமிழ் வீதியிலும் வலம் வருகிறது.

தமிழில் நன்றாக எழுத வேண்டும் என்ற ஆவலுள்ள படைப்பாளிகள் வெறும் 'இலக்கியவாதிகளாக' மட்டுமே அமைந்து விட்டனர். என் நண்பர் ஒருவர், "சிறுகதை எழுதுவதை விட சித்தாள் வேலைக்குப் போகலாம்" என்பார். இப்படித்தான்..நாம் அரசியல் வாதிகளையும், இலக்கியவாதிகளையும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறோம். அதைத் தாண்டிப் போய்ப் பார்த்தால் சமையல் குறிப்புப் புத்தகங்களும், வாஸ்து சாஸ்திர நூல்களும் புத்தகக் கடைகளை அதிகம் நிறைக்கின்றன. நமது சமுதாயத்தில் ஆணுறை கூட இந்த அளவுக்கு விற்குமா என்று தெரியவில்லை.

மருத்துவம், பொருளாதாரம், தொழில்நுட்பம், அறிவியல் தொடர்பான நூல்கள் குறிப்பிடும்படி தமிழில் இல்லை. ஆனால், இந்தத் துறைகளில் ஒளிவீசி ஜொலிக்கும் தமிழர்கள் உலகெங்கும் கணக்கில்லாமல் உள்ளனர். அவர்களது பங்களிப்பும், ஆவணமாக்கலும் பெருமை தருவதாக உள்ளது.

அந்த முயற்சியை, உழைப்பை பத்து விழுக்காடு தமிழை நோக்கிச் செலுத்தியிருந்தால் கூட நம் மொழியின் அறிவுக் களஞ்சியம் தனது நீள, அகல, ஆழங்களை விஸ்தரித்திருக்கும்.

ஆனால், யாரையும் அவர்களது விருப்பதிற்கு மாறாக அல்லது நலனுக்கு எதிராக வற்புறுத்திச் செயல்பட வைக்க முடியாது என்பது இயற்கையின் நியதி. அப்படியே நிர்ப்பந்தித்தாலும், அது நீண்ட நாள் நிலைக்கக் கூடியதாக இருக்காது.

பெரும் முயற்சி எடுத்து அருமையான அறிவியல் படைப்புகளைத் தமிழில் சிலர் தந்திருக்கின்றனர். ஆனால், அந்தப் புத்தகங்கள் கவனிப்பாரன்றி உதாசீனப்படுத்தப்பட்டுக் கிடக்கின்றன. ஒரு குறிப்பிட துறையில் தரமான புத்தகம் எதாவது வாங்க விரும்பினால் நம்மில் அத்தனை பேரும் ஆங்கிப் புத்தகம் இருக்கும் கடைக்குத்தான் செல்வோம். பக்கத்திலே ஒரு நல்ல தமிழ்ப் புத்தகம் இருந்தால் தொடக்கூட மாட்டோம்.

"நல்ல படம் எடுத்தா ஊத்திக்குது. யாரு சார் பாக்கறா?" என்று நொண்டிச் சாக்குச் சொல்லி விட்டு கிளுகிளுப்பான படங்களை எடுப்பதும்.. "பசங்க எல்லாம் சினிமாப் பாத்துக் கெட்டுப் போறாங்க" என்று மற்றவர்கள் சினிமாவின் மீது பழி சுமத்துவதும் நம் சமுதாயத்தில் அடிக்கடி கேள்விப்படும் வாதங்கள். இதே வாதங்கள் தமிழ் நூல்களுக்கும், வாசகனுக்கும், படைப்பாளிகளுக்கும் பொருந்தும். நல்ல நூல்கள் தமிழில் இல்லையென்று குப்பைகளைப் படிப்பதும், குப்பைகளைத் தவிர எதையும் படிப்பதில்லை என்று குறை சொல்லிவிட்டு குப்பைகளையே தொடர்ந்து எழுதுவதும் நிதர்சன உண்மை.

அறிவு ஜீவிகள் தமிழில் தம் கருத்துக்களைப் பகிர்வதில்லை. அப்படியே பகிர்ந்தாலும் வாரப்பத்திரிக்கை அட்டையில் நடிகையின் படத்கையும், சினிமாப் பாடல்களில் இலக்கியத்தையும் கண்டு களிக்கும் ஜனரஞ்சகத் தமிழ் வாசக உலகம் கண்டுகொள்வதில்லை. இந்த இரண்டில் ஏதாவது ஒன்று மாறினால் ஒழிய நிலைமை மாறாது.

இந்தச் சூழ்நிலையை விவரிக்க வேண்டுமானால், நியூட்டனின் முதல் விதி குறிப்பிடுகிற inertia எனப்படும் 'நிலைமம்' என்ற சொல் மிகப் பொருத்தமாக இருக்கும். ஏதாவது ஒரு சக்தி உருவாகி இந்த நிலைமத்தை உடைத்தெறிதல் அவசியம்.

அதற்கு ஏதுவான பொருளாதாரச் சூழல் தேவை என்று நான் உறுதியாக நம்புகிறேன். "உழைப்பின்றி ஊதியமில்லை" என்பதைப் போலவே "ஊதியமின்றி உழப்பில்லை" என்பதும் மாறுபட்ட இன்றைய சூழலில் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு கருத்தாகி விட்டது."

வருமானத்தை நாடித்தான் அமெரிக்கா வந்திருக்கிறோம். இங்கே வாங்கும் சம்பளம் உங்களுக்கு இந்தியாவில் கொத்தனார் வேலை செய்வதற்குக் கிடைத்தால் கூடப் பல பேர் ஊரிலேயே தங்கியிருக்கக் கூடும். எந்தத் துறையில் நல்ல ஊதியம் கிடைக்கிறதோ அந்தத் துறை திறமையான மூளையுள்ளவர்களை ஈர்த்துக் கொள்ளும். தமிழ் எழுத்துத் துறையில் நிலவும் வறட்சியான வருவாய்ச் சூழல் மட்டும் அதற்கு விதி விலக்கா என்ன? தமிழில் எழுதுவது உண்மையிலேயே தமிழ் மீது காதல் கொண்டவர்கள் மட்டுமே செய்யும் ஒரு காரியமாக இருக்கிறது.

"கெட்டும் பட்டிணம் போ" என்பது போல "கெட்டும் தமிழில் எழுது" என நினைக்கிறோம். அப்படிச் செய்தால் "பையனுக்கு இங்கிலீஷ் தெரியாது போல இருக்கு" என்று பேசுவார்கள்.

தமிழில் எழுதப்படுகிற புத்தகம் ஆண்டுக்கு பத்தாயிரம் பிரதிகள் விற்றாலே அது வரலாற்றில் இடம்பெற்று விடுமளவுக்கு அதிசயமான ஒரு செய்தி எனலாம். ஒன்றரைக் கோடி டச்சுக்காரர்களைக் கொண்ட நெதர்லாந்தில் எல்லா வகையான புத்தகங்களும் கிடைக்கின்றன. ஆண்டுக்கு இலட்சக் கணக்கில் விற்பனையாகின்றன. உலகெங்கும் ஏறத்தாழ எட்டு கோடி தமிழர்கள் வசிக்கிறோம். ஆனால், வர்த்தக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்ற விரல் விட்டு எண்ணுமளவு மிக மிகச் சில எழுத்தாளர்களைத் தவிர, தன் எழுத்தின் மூலம் ஐந்திலக்க மாதவருமானம் சம்பாதிக்கும் ஆட்கள் தமிழில் இல்லை. வேறு வேலைக்குப் போகாமல் எழுதுவதை முழுநேரப் பணியாகச் செய்யும் எவனுக்கும் நம் வீட்டுப் பெண்ணைத் திருமணம் செய்து வைக்க மாட்டோம்.

முன்னர் குறிப்பிட்ட அதே நியூட்டனின் 'நிலைமம்' தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும், வாராவாரம் எண்ணற்ற கதைப் புத்தகங்களும், கவிதை நூல்களும் வெளிவருவது குறைந்த பாடில்லை. "தமிழ்நாட்டில் எழுதப்படிக்கத் தெரிந்த பாதிப்பேர் கவிதை எழுதுகிறார்கள். மிச்சமிருப்பதில் பாதிப்பேர் கதை எழுதுகிறார்கள்" என்று பிரபலமான எழுத்தாளர் ஒருவர் குறிப்பிட்டார். அவர் சொன்னதில் இருபது விழுக்காடு ஆணவம் கலந்திருந்தாலும் எண்பது விழுக்காடு உண்மை என்பதை மறுப்பதற்கில்லை.

தமிழ்ப் புத்தகச் சந்தை சமீப காலத்தில் ஒரு சில புதிய சக்திகளின் எழுச்சியைக் காண்கிறது. அவை பழைய செயல்பாட்டு முறைகளைக் கேள்விக்குள்ளாக்கி மாற்றியமைக்கின்றன. மற்ற எல்லாத் துறைகளையும் போல, மாற்றத்தை விரும்பாத சில பழைய சக்திகள் இங்கும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றன. இந்தப் புதிய சக்திகள் எல்லாத் தளங்களிலும் எழுதக்கூடிய படைப்பாளிகளைத் தேடிக் கண்டுபிடித்து நல்ல சன்மானம் அளிக்கின்றன. பெரும் பணத்தை முதலீடு செய்து பரவலாக மார்க்கெட்டிங் செய்து சந்தையைப் பரவாக்குகின்றன.

ஒளி வீசும் மூன்றெழுத்து நடிகனுக்கும், அவ்விட பூமியிலிருந்து வந்த மணம் வீசும் நடிகைக்கும் நடுவேயான கிசுகிசுவைப் படித்து மட்டுமே தன் உலக ஞானத்தைப் பெருக்கி வந்த சாமானிய வாசகனுக்கு, இந்தப் புது வகை நூல்கள் கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கின்றன. புதிய கோணம் மற்றும் புதிய பார்வையை அவை உருவாக்குகின்றன. அதே ரீதியில் 'புதிய' படைப்புகளைத் தொடர்ச்சியாக நாடுகிறான். மீண்டும் புதுமைகளைப் படைக்கும் ஆட்களின் தேவை விரிகிறது. பரவுபட்ட சந்தையின் தேவை எழுத்தாளனின் ஊதியத்தைக் கூட்டுகிறது. அந்த ஊதியம் அதிக நேரம் எடுத்து, தகவல்களைத் தேடிப்பிடித்து, சிரத்தையுடன் உழைத்து தரமான படைப்பினை வழங்கிட உதவுகிறது. நிலைமம் படிப்படியாக உடைபடுகிறது.

தமிழ் மொழி மீதும், தமிழ்ச் சமுதாயத்தின் மீதும் தீராத அக்கறை கொண்டவன் என்ற முறையிலும், புத்தகம் எழுதியவன் என்ற சுய நலத்திலும் இந்த மாற்றங்கள் எனக்கு அளவில்லாத ஆனந்தத்தையும், அசைக்க முடியாத நம்பிக்கையையும் அளிக்கின்றன.

சரி. அதெல்லாம் இருக்கட்டும். இந்த விளையாட்டில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு என்ன பாத்திரம் என்கிறீர்களா? நிறையவே இருக்கிறது, அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு.

உண்மையைச் சொன்னால், புலம் பெயர்ந்த ஈழத்தமிழர் அளவுக்கு நாம் பெரிதாக எதுவும் செய்து விடவில்லை. இலங்கை என்ற ஒரு தேசத்தில் இருந்த தமிழர்களை உலகமெல்லாம் சிதறியோடச் செய்து 'உலகத்' தமிழர்களாக மாற்றிய சிங்கள அரசுக்கு இந்த இடத்திலே நாம் நன்றி சொல்வோம்.

தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் ஒலிக்கும் வகை செய்வோம் என்ற நமது ஆசைக்கு சிங்கள அரசுகள் அரை நூற்றாண்டாகத் தொண்டாற்றி வருகின்றன. கணிணியிலும், இணையத்திலும் தமிழைப் பரப்பியதில் பெரும் பங்களிப்பு ஈழத்தவர்களுக்கு உண்டு. தெற்காசியாவில் வேறெந்த மொழியும் பரவாத அளவுக்கு தமிழ் இணையத்தில் பரவி நிற்கிறது.

உடைமைகளைத் தொலைத்து விட்டு, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடி வந்தவர்களிடம் இருக்கும் அதே அளவு உணர்ச்சி நம்மிடம் இருக்குமென்று எதிர்பார்க்க முடியாது. நம்முடைய தேவைகள் வேறு; அவர்களுடைய தேவைகள் வேறு. நாம் பொருளாதாரத்திற்காக தேசம் கடந்து வந்திருக்கிறோம். ஆனால், அவர்கள் வாழ்க்கையை இழந்து விட்டு அகதிகளாக, ஏதிலியாக மேலை நாடுகளுக்கு ஓடி வந்திருக்கிறார்கள். நம்மைப் பொறுத்த மட்டில், பரந்து பட்ட பாரதக் கண்டத்தில் நம்மை எதிர்நோக்கிய பிரச்சினகள் வேறு பல வடிவங்களில் உள்ளன. அந்தப் பிரச்சினைகளுக்கு நடுவில் 'தமிழன்' என்ற உணர்வும், பொறுப்பும் மந்தமாகிப் போகின்றன. அதில் தவறேதுமில்லை.

ஆயினும், அவ்வப்போது நம்மை நாமே உசுப்பி விட்டுக் கொள்வது அவசியமாகிறது. உலகின் வேறு எந்த நாட்டிலும் கிடைக்காத வசதிகள் அமெரிக்காவில் உங்களுக்குக் கிடைக்கின்றன. புதிய விஷயங்களையும், வாழ்க்கை முறைகளையும், உழைப்பை மிச்சப்படுத்தி உற்பத்தியைப் பெருக்கும் கருவிகளையும் நாளுக்கு நாள் அனுபவிக்கிறீர்கள். நம் மண்ணில் வாழும் சாமானியன் அந்த வசதிகளையும், அவற்றின் அடிப்படை நுணுக்கங்களையும், செயல் முறைகளையும் அறியாதவனாக இருக்கிறான்.

அவற்றைப் பற்றிய அறிவும், புதுமையான கண்ணோட்டமும் அவனைச் சென்றடைய வேண்டும். எனவே, அந்தத் திசையில் உங்கள் பங்களிப்பை எளிய முறையில் செய்ய முயற்சிக்க வேண்டுமென்பது எனது தாழ்மையான விண்ணப்பம். பங்களிப்பு என்றவுடன் உண்டியல் குலுக்கிப் பொருளுதவி கேட்பதாக நினைத்து விட வேண்டாம். உங்களுக்குத் தெரிந்த செய்திகளை, கிடைத்தற்கரிய கருத்துக்களை தமிழில் ஆவணப்படுத்துங்கள். அது போதும்.

காலங்காலமாக நிலவி வந்த கலைகளை நம் முன்னோர் ஆவணப்படுத்தாமல் விட்டதனால் இன்று வேப்பங் கசாயம் காய்ச்சிக் குடித்தால் கூட அதற்கு மேலை நாட்டு நிறுவனத்திடம் பேடண்ட் கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆகவே, ஆவணமாக்கம் மிக முக்கியமான காரியமாக இருக்கிறது.

தமிழைப் பற்றிப் பேசினாலோ, தமிழ் உணர்வு பற்றிப் பேசினாலோ இந்தியாவில் நம்மைப் பிரிவினைவாதியாக நோக்கும் கூட்டம் இன்னமும் மறையவில்லை. தண்ணீர்ப் பிரச்சினையில் இந்திய இறையாண்மைக்கும், அரசியல் சாசனச் சட்டத்திற்கும் அப்பட்டமாகச் சவால் விடும் அண்டை மாநிலங்கள் இந்திய தேசிய ஒருமைப்பாட்டின் மைய இழையை அறுத்துக் கொண்டிருப்பதைப் பற்றி அறிவுக் களத்தில் ஆதாரத்துடன் துணிந்து பேச நமக்கு முடிவதில்லை. காவிரிப் பிரச்சினை தொடர்பாக எழுதப்பட்ட செய்திகள், நம் கண் முன்னாலேயே வரலாறு எந்த அளவுக்குத் திரிக்கப்படுகிறது என உணர்த்துகிறது. தமிழர்கள் மீது 90களில் நடத்தப்பட்ட தாக்குதல் பதிவு முன்னேறிய சிவில் சமுதாயத்தில் நாம் வசிக்கிறோமா என்ற கேள்விவை அடிக்கடி எழுப்புகிறது, கொலம்பஸ் நகரில் தமிழ்ப்படங்களை பயமின்றித் திரையிட்டுக் காண முடிகிறது. ஆனால், இப்போதும் கூட பெங்களூரில் முடிவதில்லை.

ஆகவே நண்பர்களே அறிவுத் தளத்தில் செயலாற்ற முனைவோமாக. அயல் தேசங்களில் வசிக்கும் நீங்கள் குழந்தைகளுக்கு நல்ல தமிழைப் பிழையறப் பேசவும், எழுதவும் கற்றுக் கொடுக்க முயற்சிக்க வேண்டும்.

பயனுள்ள செய்திகளையும், சிந்தனைகளையும் பரிமாறும் ஆர்வமுள்ளவர்கள் ஒன்று சேர்ந்து கொலம்பஸ் நகரில் தமிழ்ச் சிற்றிதழ் மாதிரி ஏதாவது நடத்தலாம். சமூகப் பிரச்சினைகளையும், பண்பாட்டு அறிவியல் தளத்தின் தகவல்களையும் பரிமாற முயற்சிக்கலாம்.

தமிழ், ஆங்கிலம் அல்லது வேறு மொழியில் வரும் நல்ல நூல்களைப் பற்றிய திறனாய்வை எழுதி வெளியிடலாம்.

இணையத்திலும், கணீணித் துறையில் தமிழ் நெடுந்தூரம் பயணித்து விட்டது. தமிழில் மின்னஞ்சல் அனுப்ப முடிகிறது. தமிழில் சாட்டிங் செய்கிறோம். அது குறித்தெல்லாம் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்யலாம்.

இங்கிருக்கும் தமிழர்கள் தாயகத்திலிருந்து தமிழ் நூல்களை வாங்கி வாசிப்பது சாத்தியமில்லை. ஆனால், கொலம்பஸ் தமிழ்ச்சங்கம் போன்ற கட்டுக்கோப்பான ஒரு அமைப்பு அதைச் செய்வது சாத்தியப்படும். இயலுமானால் தரமான சிறிய நூலகத்தை ஏற்படுத்தலாம்.

இப்படியெல்லாம் செய்தால் சிந்தனையின் பரப்பு விரிவடையும். கொலம்பஸ் அல்லது டப்ளின் (Dublin) நகரைச் சுற்றி நல்ல படைப்பாளிகள் உருவாகக் கூடும். அது தமிழ் மொழிக்கும், தாயகத்தில் உள்ள தமிழர்களுக்கும் நீங்கள் ஆற்றும் மகத்தான சேவையாக இருக்கும்.

அடிக்கடி கூடி ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கும், அதன் வாயிலாக செயல்களுக்கு வழி வகுக்கலாம்.

மேலே சொன்ன விஷயங்களில் சிலவற்றை நீங்கள் ஏற்கனவே செய்து கொண்டிருக்கிறீர்களா இல்லையா என்று தெரியவில்லை. ஒரு வேளை செய்து கொண்டிருந்தால், விவரம் தெரியாமல் சுட்டிக் காட்டிய என் செயலைப் பெருந்தன்மையோடு மன்னிக்க வேண்டுகிறேன்.

பணம் சம்பாதிக்க வந்த இடத்தில் ஒரு சமூக அமைப்பாக ஒன்று கூடி ஒருங்கிணைத்து இது போன்ற ஒரு கொண்டாட்டத்கை ஏற்பாடு செய்வதே பெரிய விசயம். சந்தோசமாகக் கூடி, ஆடிப் பாடிக் களித்து விட்டுப் போக நினைத்திருக்கும் இது மாதிரியான நாளில் மிகவும் கனமான எதிர்பார்ப்புகளை முன்வைத்த இந்தப் பேச்சு உடனடி மாற்றங்களை ஏற்படுத்துமென்று நான் எதிர்பார்க்கவில்லை.

ஆனாலும், ஏதேனும் ஒரு மனதிலாவது இந்தப் பேச்சு சிறு பொறியைத் தூவுமானால் பேருவகை அடைவேன்.

வாய்ப்பளித்த நண்பர்களுக்கு நன்றிகள். இந்தப் புத்தாண்டு உங்கள் வாழ்வில் நன்மைகளையும், சவால்களையும், அவற்றைச் சமாளிக்கும் சக்தியையும் அளிக்கட்டும் என்று எல்லாம் வல்ல இயற்கையை வணங்கி உரையை நிறைவு செய்கிறேன்.

Wednesday, May 09, 2007

புத்தக அறிமுகம் 'இழக்காதே'

- செல்லமுத்து குப்புசாமிஇழக்காதே பற்றிய வா.மணிகண்டனின் நூல் திறனாய்வை 'பேசலாம்' வலைத் தளத்தில் காண இங்கே கிளிக் செய்க.

உதயகுமாரின் நூல் அறிமுகம்/விமர்சனம் அவரது சவுண்ட் பார்ட்டி வலைத் தளத்தில்

சென்னை பங்குச் சந்தை இயக்குனர் நாகப்பன் அவர்கள் இந்த நூலின் ஆங்கில வடிவத்திற்கு எழுதிய அணிந்துரை

அப்போது நான் கல்லூரி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தேன். ஜி.டி.நாயுடு ஆரம்பத்த பாரம்பரியம் மிக்க அந்தக் கல்லூரியில் வருடத்திற்கு ஒரு முறை தமிழ் மன்றத் திருவிழா நடப்பது வழக்கம். விழாவுக்கு ஜெயகாந்தன் வந்திருந்தார். பிரபலமான பேச்சாளர்கள் பங்குபெற்ற வழக்காடு மன்றம் நடந்தது. மாணவர்களுக்கான கவியரங்கம் நடந்தது. அமராவதி ஆற்றில் மீன் பிடித்தாடிய அரைக்கால் சட்டை நினைவுகளை அந்தக் கவியரங்கில் வாசித்ததும், அது கோவை வானொலியில் ஒலிபரப்பானதும் இப்போது நினைத்தால் கனவு போலத் தோன்றுகிறது.

ஆண்டு விழாவுக்கு அறிவியல் மலர் ஒன்று தமிழில் வெளியிட்டோம். அதன் தொகுப்பாளராகச் செயலாற்றும் சந்தர்ப்பம் கிட்டியது. அதற்காக ஓரிரு கட்டுரைகளை எழுதிக் கொடுத்ததோடு, 'முன்னுறை' 'முடிவுறை' என்றெல்லாம் வந்து சேர்ந்த (அதை எழுதிய நண்பர் அந்தோணி இப்போது ஏர்ஃபோர்சில் நல்ல பதவியில் உள்ளார்) கட்டுரைகளைத் தமிழ்ப்படுத்தித் திருத்தும் வேலையையும் செய்ய வேண்டியிருந்தது.

அதன் முதல் பிரதியை வாங்கிச் சரிபார்த்த கல்லூரி முதல்வர், "நல்லா வந்துருக்குய்யா. ஆனா தமிழ் எழுத்து ரசனைக்கு வேணும்னா ஒத்து வரும். தொழிலுக்கு ஆகாது. எதோ ஒரு ஆர்வத்துல செஞ்சிருக்கீங்க. பாராட்டறேன்" என்றார்.

அவர் சொன்னது சத்தியமான வார்த்தை. வருடங்கள் உருண்டோடின. பொருளாதாரத்திற்கான போராட்டம் முதலிடம் பெற்றது. திரைப்படப் பாடல்களை முணுமுணுப்பதோடு சரி. எப்போவதாவது, "நான் நலம். நீங்க நலமா?" என்று வீட்டுக்கு எழுதும் கடிதத்தோடு தமிழ் நின்று விட்டிருந்தது, வலைப்பதிவு (blogs) பற்றி வா.மணிகண்டன் சொல்லும் வரை.

பொருளாதாரம் குறித்தும், பங்கு முதலீடு குறித்தும் மின்னஞ்சலில் பரிமாறிக் கொள்ளும் கருத்துக்களை அப்படியே ஆங்கில வலைத்தளத்தில் ஏற்றியதும், அதை வார்த்தைக்கு வார்த்தை மாறாமல் அப்படியே தமிழ்ப்படுத்தி பங்கு வணிகத்தில் (தமிழ் வலைத்தளம்) போட்டதும் ஒரு வேகத்தில் நடந்தது. பல நல்ல நண்பர்களைப் பெறுவதற்கு (அவர்கள் பெயரையெல்லாம் எழுதினாலே ஒரு தனிக் கட்டுரை போடலாம்) இந்தத் தளம் உதவியது.

அவர்களை அஜர்பைஜானில் இருந்து, ஆஸ்திரேலியா வரை ஒவ்வொருவராக நெஞ்சோரம் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். அடிப்படையில் வாசகனான எனது சொந்த வாசிப்பு அனுபவத்தை அகலமாக்கவும் அது வழி வகுத்தது.

(சொந்த ஊருக்காரர் ஒருவர் 2006 ஆம் வருடம் தி.மு.க. பதவியேற்பு விழாவுக்கு சென்னை வந்திருந்தார். அவரோடு துணைக்கு நேரு விளையாட்டு அரங்கம் செல்ல நேர்ந்தது. ஒரு சராசரிக் குடிமகனுக்குரிய அணுகுமுறையோடு, 'கலைஞரும், தளபதியும் அடுத்த கட்டம்' என்ற தலைப்பில் பொருளாதாரம் சாராத ஒரு கட்டுரையை கை அரிப்பின் காரணமாக எழுதி வெளியிட்டதனால் 'கரையோரம்' என்ற பெயரில் இன்னொரு வலைத்தளம் (blog) பிறந்தது. அதற்குப் பிறகு 'அண்ணியின் அணைப்பில்' என ஒரு விவகாரமான கதையைப் (முதல் முயற்சி) பார்த்து விட்டு ஆளாளுக்கு மொத்தி எடுத்து விட்டார்கள். சிறுகதைகள் எழுதுவதற்கு என்னை உற்சாகப்படுத்திய கவிஞர்கள் கார்த்திக் வேலு மற்றும் மனுஷ்யபுத்திரன் ஆகிய இருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்.)

இந்தச் சமயத்தில் பதிப்பாளர் பத்ரியைச் சந்திக்க நேர்ந்தது. இந்தப் புத்தகத்தைக் குறித்து விவாதித்தோம். பங்குக் குறியீடுகளைப் போலவும், வணிகச் செய்தித்தாளைப் போலவும் அடுத்த நாள் காலையே பழசாகிப் போய் குப்பையாகாமல் எப்போது படித்தாலும் சரியென்று உணர வைக்கும் கோட்பாடுகளை எளிமையாக விவரிக்கும் வகையில் இந்த நூல் அமைய வேண்டும் என்று முடிவு செய்தோம். அதே போல வந்திருக்கிறது என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி.

"பழக்கம்னு ஒன்னு இருந்தா அதை மாத்தக் கூடாது" என்று கவுண்டமணி ஒரு படத்தில் கூறுவார். அதே போல புத்தகம் எழுதினால் யாருக்காவது அர்ப்பணிக்க வேண்டும் என்பது 'நல்ல' ஒரு பழக்கம்.

* என் ஆரம்ப நாட்களில் வாசிக்கும் பழக்கத்தை என்னுள் விரியச் செய்த நண்பர்கள் ஜெரால்டு மற்றும் ஜான் ஆகிய இருவருக்கும்
*நண்பனாக நான் கருதினாலும் பிசினஸ் என்று வரும் போது தன் 'தொழில்' திறமையை என்னிடம் காட்டியதோடு, சுயமாகவே அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற வெறியை ஏற்றி அது குன்றாமல் இருக்க உதவிய என் 'இனிய' பங்குத் தரகருக்கும்
*கல்யாணம் ஆவதைத் தாமதப்படுத்தி இந்தப் புத்தகம் எழுதுவதற்கு நேரம் ஒதுக்கிக் கொடுத்த செவ்வாய் தோசத்திற்கும், அப்படியே ஒன்றிரண்டு பொருந்தி வந்தாலும் வேண்டாமென்று ஒதுக்கிய பெண்களுக்கும், அவர்தம் தகப்பனார்களுக்கும் (இங்கே சிரிக்கவும்)
*பணத்தின் மதிப்பு என்னவென்றே தெரியாமல் வெட்டிச் செலவு செய்வதும், அதை விட அதிகமாகப் பங்குச் சந்தையில் சூதாடுவதும் பிழைப்பாக வைத்திருக்கும் எண்ணற்ற சாஃப்ட்வேர் கண்மணிகளுக்கும்"
);
*பங்கு முதலீட்டின் அரிய பெரிய கோட்பாடுகளையும், தத்துவங்களையும் எளிமையாக எடுத்துச் சொல்லி விட்டுச் சென்ற பல அறிஞர் பெருமக்களுக்கும்
'இழக்காதே' அர்ப்பணம்.

அருமையான அட்டைப் படத்தை வடிவமைத்த கிழக்குப் பதிப்பகத்தாருக்கும், எடிட்டர் குமாருக்கும், பதிப்பாளர் பத்ரிக்கும் நன்றிகள்.

பெரும்பாலும் பாதுகாப்பான வாசகங்களையே பேசவும், எழுதவும் விரும்பும் நான் இப்போது ஒன்றைத் துணிந்து சொல்ல ஆசைப்படுகிறேன். நீங்கள் பங்குத்தரகராக மட்டும் இல்லாமலிருந்தால் நிச்சயமாக இந்தப் புத்தகத்தை விரும்பிப் பாராட்டுவீர்கள் என்று ஆணித்தரமாக நம்புகிறேன்.
This book is worth the money.

கல்லூரி முதல்வர் சாம்பசிவம் இதைப் பார்த்தால் 'தமிழ்' தொழிலுக்கு உதவும் என்று ஏற்றுக் கொள்வார்.