Wednesday, August 01, 2007

நிராகரித்தவளின் வலி

- செல்லமுத்து குப்புசாமி

இவ்வளவு பெரிய அதிர்ச்சி காத்திருக்கும் என நான் நினைக்கவே இல்லை. ரஞ்சித் அபார அழகு இல்லையென்பது ஏற்கனவே தெரிந்ததுதான். ஆனாலும், நேரில் அந்த எதிர்பார்ப்பும் பொய்த்துப் போனதே!

நல்ல வேளை. அவர்கள் வீட்டிலிருந்து வந்து என் வீட்டில் பார்ப்பதற்கு முன்பே சந்திக்கலாம் என்று சொன்னதற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். இல்லையென்றால் இவ்வளவு பெரிய அதிர்ச்சியை அத்தனை பேர் முன்னிலையிலும் எதிர்கொண்டுக்க நேர்ந்திருக்கும்.

மாரத்தஹல்லி Innovative மல்டிபிளக்ஸ் முன் ஒன்பதரைக்கு வருவதாக எங்களுக்குள் தீர்மானமாகியிருந்தது. நான் சிகப்பு வண்ண சுடிதாரோடு அங்கு சென்று சேர்ந்த போது 9:35. அவர் பரிதவிப்புடன் கிழக்கிலும், மேற்கிலும் மாறிமாறி பார்த்து நின்று கொண்டிருந்தார். நிச்சயமாக ஒரு இருபது நிமிடமாவது முன் கூடியே வந்திருப்பார். ஹெல்மெட் கலைத்த முடியை நான்கைந்து தரமாவது சீவியிருப்பார். பாத்திரம் தேய்ப்பதைப் போல கைக்குட்டையை வைத்து எத்தனை தடவை முகத்தைத் தேய்த்திருப்பார் என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை.

வெள்ளை மேலாடையில் அவரது கருப்புத் தோல் எடுப்பாகத் தெரிந்தது. பாதி சிகப்பாகவும், மீது வெள்ளையாகவும் கழுத்தை இறுகக் கவ்விய ரவுண்ட் நெக் டி-ஷர்ட், கறுப்பு ஜீன்ஸ், அதற்கு அறவே சம்பந்தம் இல்லாத ஃபார்மல் ஷூ, ஆக மொத்தத்தில் பட்டிகாட்டானுக்கு அலங்காரம் செய்யும் பரிதாப முயற்சியைப் பாதியில் விட்டது போலத் தோன்றியது. ஃபாரின் ரிட்டர்ன் என்று சொன்னால் நம்புவது கடினமாகத்தான் இருக்கும்.

ரஞ்சித் முகத்தில் இன்னும் இருள் அண்டியிருந்தது. இரவு பதினொன்றரைக்கு ஏறி காலை ஐந்துக்கு வந்து சேரும் இரயில் பயணத்தில் எவ்வளவு தூங்கினார் என்று தெரியவில்லை. இந்தக் காலைப் பொழுதை உறங்கச் செல்லும் மாலைப் பொழுதாகவல்லவா டொரான்டோவிற்குப் பழகிய அவரது உடல் நினைத்துக் கொண்டிருக்கும். இருபது மணி நேரத்தில் இத்தனை மாற்றத்தை உள்வாங்கிச் செரிக்கும் வலிமை மனித உடலுக்கு நிச்சயமாக இருக்காது. இருக்கட்டுமே! நேற்று நன்றாகத் தூங்கி எழுந்து வருமாறு நான் சொல்லியிருந்தேனே, செய்யாமல் போனால் அதற்கு நானா பொறுப்பு?

இன்னும் காலையில் சாபிட்டிருக்க மாட்டார். நான்தானே சொன்னேன், நண்பர் வீட்டில் பிரேக் ஃபாஸ்ட் முடிக்க வேண்டாம், நாம் சேர்ந்து சாப்பிடுவோம் என்று. நானும் தான் ஒன்றும் சாப்பிடவில்லை. ஆனால், எனக்கென்னவோ இப்போது வந்த பசியெல்லாம் காணாமல் போய் விட்டது.

"கண்டிப்பா சாப்பிடணுமா? எனக்குப் பசிக்கலை. உங்களுக்குப் பசிக்குதா?"

இப்படி ஒரு கேள்விக்கு, "ஆமாம் பசிக்குது" என்று பதில் சொல்லும் துணிச்சல் உள்ள ஆண்கள் குறைவு.

"பரவாயில்லை. அப்புறம் சாப்பிடுக்கலாம்" என்றார் ரஞ்சித்.

போனில் மணிக்கணக்காக எத்தனை பேசியிருப்போம்? நேரில் கோர்வையாக நான்கு வார்த்தை பேச முடியவில்லை. அதற்கு எங்களிடம் வெவ்வேறு காரணங்கள் இருந்தன. எனக்குள் உருவாகியிருந்த அதிர்ச்சி அவருக்குத் தெரிந்திருக்காது. அவரைப் போலவே பரவசத்தில் முட்டி நிற்கிறேன் என என்னைப் பற்றி அவர் தவறாக நினைத்திருக்கலாம்.

"எங்கேயாவது போய் உக்காந்து பேசலாமா?" முதல் அடியை நானே எடுத்து வைத்தேன்.

"அவுட்டர் ரிங் ரோடில் நெறைய மரங்கள் இருக்குது. அப்படியே போய் வண்டியை நிறுத்திட்டு பேசிட்டு இருக்கலாமா?"

எனக்கு அதில் உடன்பாடு இல்லை. ஒரு பார்க் பெயரைச் சொன்னேன். அவருக்கு அது அறிமுகமாகியிருக்கவில்லை. நான் வசிக்கும் பகுதியில் அமைந்திருந்தது. பேசி முடித்தவுடன் சடக்கென்று வீட்டுக்குச் செல்ல அது உகந்த இடமாக எனக்குப் பட்டது.

புறப்படத் தயாரானோம். ஒரு பக்கமாக கால் போட்டு, எடுத்து வந்திருந்த கைப்பையை இருவருக்கும் இடையில் வைத்து என உடலின் எந்தவொரு பாகமும் அவர் மீது படாமல் இருக்குமாறு கவனித்துக் கொண்டேன். 40 கிலோ மீட்டருக்கு மேலே போன போது அந்த பைக் உறுமிய விதம் மிக விநோதமாக இருந்தது. ஸ்பீடு அட்ஜஸ்ட் செய்த மெக்கானிக்கும் சரி, இந்த பைக்கை வைத்திருக்கும் இவரது நண்பரும் சரி..ரொமான்ஸ¤க்கு பரம எதிரிகளாக இருக்க வேண்டும்.

பல காலமாக பெட்ரோலே போடாமல் ரிசர்வில் உயிர் வாழ்ந்து வந்த இந்த யாமாஹா-135 எரிபொருள் டேங்கை நிரப்பிக் கொண்டு, நான் சொன்ன பார்க்கை அடைய இருபது நிமிடம் ஆனது. பாவம்! உரெல்லாம் சுற்றலாம் என நினைத்து முக்கால் டேங்கை நிறைத்தார் ரஞ்சித்.

பூங்காவின் நுழைவாயில் பின்புறமாக அமைந்திருந்தது. கூட்டமே இல்லை. சொல்லப்போனால் உள்ளே யாருமே கிடையாது. முதலின் தென்பட்ட பெஞ்சில் நான் சென்றமர்ந்தேன். அவர் வண்டியை நிறுத்தி, பூட்டி, ஹெல்மெட்டால் கலைந்த கேசத்தை சீவி அழகுபடுத்திக் கொண்டிருந்தார். எனக்குள் வேதனை கலந்த சிரிப்பு தோன்றி மறைந்தது.

என்னருகில் வந்து அமர்ந்த போதே அவர் டி-ஷர்ட்டில் ஒட்டியிருந்த கட்டெறும்பைச் சுட்டிக் காட்டி தட்டி விட்டேன். துணியைத் தாண்டி சருமம் தொடாமல் தட்டி விடும் இலாவகம் எனக்கு எப்படி இவ்வளவு இயல்பாக வருகிறது?

"ம்.. அப்பறம்" என்றார்.

"எனக்கு எப்படி சொல்றதுனே தெரியலை"

இப்படித்தான் அன்றும் கூறினேன்.

"எனக்கு எப்படி சொல்றதுனே தெரியலை" என்ற பிறகு நீண்ட மெளனம் விட்டு எதிர்முனையில் கிடைத்த பதில் மெளனமே அங்கீரமாக வைத்து என் காதலை வெள்ப்படுத்தினேன்.

ஆண்டவா! அந்த கணத்தில் தோன்றி மறைந்த படபடப்பை முழுமையாக விவரிக்க என் மொழியின் வன்மை போதாது.

எங்கிருந்து வந்தது எனக்குள் காதல்?

எத்தனை ஆச்சரியங்கள் தந்தாய் நண்பா? உன் மீதான மதிப்பும், வியப்பும் அவற்றின் எல்லைப் பரப்பை தினந்தோறும் அகலமாக்கினவே, அதனாலா? பெண்ணைப் புரிந்து கொள்ளும் பக்குவமுள்ள ஆண் என்று நான் உன்னை மெது மெதுவாகப் புரிய ஆரம்பித்தேனே, அப்போதா? பெண்ணியம், சமூகம், இறை நம்பிக்கை, பொருளாதாரம், சமூகம், அரசியல் குறித்தான உன் நிலைப்படுகள் என்னை ஒத்ததாக இருந்ததாலா? 'பார்க்க ஆசைப்படுவது ஈஃப்ள் கோபுரமா, எகிப்து பிரமிடா?' என நீ கேட்ட போது 'இலங்கை' என நான் சொன்ன பதிலில் உனக்கு உண்டான ஆச்சரியத்தை நான் ரசித்ததாலா? என்னுள் செறிந்திருக்கும் இலங்கைத் தீவு கல்கி பொன்னியின் செல்வனில் சித்தரித்த வனப்பை உள்ளடக்கியது. உனது காரணம் ஈழமும், அதன் சோகமும் கலந்தது. ஆனாலும், நீ பார்க்க விரும்பிய இடமும் அதுதானே!

ஒரு ஆடவன் மீது பெண்ணுக்கு எப்போது காதல் வருகிறது என்பது உறுதியாக வரையறுக்க முடியாத ஒன்று. ஆணுக்கு பெண் மீது ஈர்ப்பே முதலில் வருகிறது. மற்றதெல்லாம் பிற்பாடு. ஆனால், பெண்ணுக்கு அப்படியல்ல. ஆணைப் பற்றிய திடீர் அல்லது படிப்படியான ஆச்சரியம் நம்மையும் அறியாமல் காதலை விதைத்து வளர்க்கிறது. எப்போது ஒருவனைப் பற்றிய சிந்தனை இடைவிடாமல் ஆக்கிரமிக்கிறதோ, எப்போது அந்தச் சிந்தனையை உடைபடாமல் மேலும் பெருகும் வகையில் சூழ்நிலை அமைகிறதோ அப்போதே பெண்ணின் காதல் வெளிப்படுத்துகிற அளவு அடுத்த நிலைக்கு வந்து விடுகிறது.

எனக்கு அப்ப எப்படி சொல்றதுனே தெரியலை. இப்பவும் அப்படித்தான் எப்படி சொல்றதுனே தெரியலை.

உனக்குத்தான் எத்தனை தயக்கங்கள் இருந்தன? நானல்லவா அவற்றைத் தகர்த்து உன்னை மீட்டெடுத்துக் கொண்டு வந்தேன்! இப்போது நானே, அடக் கடவுளே, எப்படிச் சொல்வேன்?

"இந்தக் காலத்துல பொண்ணுங்களோட எதிர்பார்ப்பு விலைவாசியை விட வேகமாக வளருது. போன தலைமுறை மாதிரி வீட்டிலேயே முடங்கிக் கிடக்கறது கிடையாது. வெளியே போறாங்க. வேலை செய்யறாங்க. பல பேரோட பழகற சந்தர்ப்பம் கிடைக்குது. அப்பா மாதிரியே நல்ல வீட்டுக்காரன் கிடைக்கணும்ங்கற நிலைமை இன்னும் அகலமாகுது. அதுவும் உன்னை மாதிரி பெங்களூர்ல உள்ள பொண்ணுங்களைப் பத்தி சொல்லவே வேண்டாம். அவங்க தினசரி சந்திக்கிற ஆண்கள் பல எதிர்பார்ப்புகளை கூட்டிக்கிட்டே இருக்காங்க. சராசரி பொண்ணுங்களுக்கே இவ்வளவு எதிர்பார்புன்னா உன்னை மாதிரி அழகானவங்களைப் பத்தி சொல்லவே வேண்டாம். நிச்சயமா என் நெறமும், தோற்றமும் அதையெல்லாம் ஈடு செய்யாது. நம்ம ஊர்ல நடக்கற சாதாரணமான ஆள் மாதிரியே இருப்பேன்."

இன்னும் எவ்வளவு வியாக்கியானங்கள் சொன்னாய்? என்னை நீ விளித்த 'நீங்கள்', 'நீ' ஆக மாற எத்தனை காலம் ஆனது?

"அதெல்லாம் பிரச்சினையே இல்லை. மொழி படத்துல வர்ற மாதிரி எனக்கு மணி அடிச்சு பல்பு எரிஞ்சிருச்சு. இனிமேல் வேற ஒன்னுக்கும் வேலை கிடையாது. எப்படி இருந்தாலும் மாத்த முடியாது" நானல்லவா உறுதி கொடுத்தேன்? இப்போது நானே எப்படி சொல்வேன், உன்னில் ஊற்றி வளர்த்த காதலுக்குப் பிறகு?

இயந்திரமாக ஓடித் திரிந்த உன்னை தனியே சிரிக்கச் செய்தேனே! கால் நூற்றாண்டாக நீ சேர்த்து வைத்த காதலும், ஆசையும் எனக்காகக் காத்திருக்கின்றன என்றாயே? இன்று நானே அதை எப்படி மறுதலிப்பேன்?

"என்னை அட்ஜஸ்ட் பண்ணிப்பியா?" என்றாய் நீ.

"அட்ஜஸ்ட் பண்றதை விட அன்டர்ஸ்டாண்ட் பண்ணினாத்தான் வாழ்க்கை நல்லா இருக்கும். நான் உங்களை அன்டர்ஸ்டாண்ட் பண்ணி வெச்சுப்பேன்" என்றேன் நான்.

"கல்யாணத்துக்கு அப்பறம் உங்க அப்பா, அம்மாவை பொருளாதார ரீதியா சப்போர்ட் பண்ணனுமா?" நீ கொடுத்த ஆச்சரியங்கள் தொடரந்த வண்ணமே இருந்தன.

"அப்படி செய்யற நெலமை வந்தா உங்களுக்கு அப்ஜெக்ஷன் உண்டா?"

இதற்கான உன் பதில் எனக்குத் தெரிந்திருந்தது.

உனக்குள் தூங்கிக் கொண்டிருந்த கவிஞனைத் தட்டி எழுப்பினேன்.
இன்றைக்கு அந்தக் கவிஞனை மட்டுமல்ல, காதலனையும் அழிக்க நினைத்து வைத்து விட்டாயே?

"எனக்கு எப்படி சொல்றதுனே தெரியலை. ரொம்ப குழப்பமா இருக்கு. கொஞ்சம் அவசரப் பட்டுட்டேனான்னு சந்தேகமா இருக்கு" கட்டெறும்பைத் தட்டி விட்டு மறுபக்கம் திரும்பி நான் சொன்ன வார்த்தைகள்.

ரஞ்சித் அன்று சொன்னது சரியென்று இப்போது நினைக்கிறேன். அவர் அனுப்பி வைத்த பொட்டோவைப் பார்த்தும் கூட, அவர் கருப்பு என்பது தெரிந்திருந்தும் கூட, மணியடித்து பல்ப் எல்லாம் எரிந்தும் கூட, என்னுள் சேகரித்து வைத்திருக்கும் ஆசைகள் அவற்றையெல்லாம் இப்போது வென்று விடும் போலத் தோன்றுதே!

கொஞ்சம் நிதானமாக இருந்திருக்கலாம். நேரில் ஒரு முறை சந்தித்த பிறகு வீட்டில் சொல்லி சம்மதம் வாங்கியிருக்கலாம். இப்போது அப்பா, அம்மாவிடம் என்னவென்று சொல்வேன். எனக்கே இவ்வளவு குழப்பம் என்றால், ஐயகோ அவர்கள் இவரைக் கண்டால் என்ன நினைப்பார்கள்? அக்காவுக்கு மட்டும் அழகான கணவர்!

எதிர்பாராத ஆச்சரியங்களே விசித்திரமான முடிவுகளுக்கு இட்டுச் செல்கின்றன. காதலிக்கச் சொல்லுவதும், அதே காதலை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி கேள்வி கெட்பதும் எதிர்பாராமல் நடக்கும் சம்பங்களும், அவற்றைப் பற்றிய நமது மதிப்பீடுகளுமே. இருப்பதிலேயே நல்ல போட்டோவை அனுப்புவதுதான் மனித இயல்பு என எனக்குத் தெரியும். ஆனால், அதையும் மீறி நான் கற்பனை செய்து வைத்தேன். நாள் தோறும் பேசினோம். ஒவ்வொரு சொல்லுக்கும் உருவம் கொடுத்து அவர் பேசுவதாக கற்பனை செய்தேனே. ஆளற்ற கடற்கரையில் கை உங்களோடு கோர்த்தபடி நடப்பதைப் போல, நாள் தோறும் எத்தனை கனவுகள் கண்டிருப்பேன். I miss you பரிமாறினோமே தவிர I kiss you. சொல்லிக் கொண்டதில்லை. எவ்வளவு நெகிழ்ச்சியாக இருந்தது நேற்று வரைக்கும்? யெளவனம் என்னைச் சுற்றி கூடாரம் அமைத்திருந்ததே!

ஆனால், இதே முகத்தைக் காலம் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பைச் செரிக்கும் சக்தி இப்போதைக்கு எனக்குக் கிடையாது. ஒளியிழந்த இந்தக் கண்களிலா என் கனவுகளைப் புதைக்கப் போகிறேன்? சுருங்கிய இந்தக் கன்னத்தையா நான் காலம் முழுவதும் தடவிக் கொண்டிருக்க வேண்டும்? கறுத்த இந்த உதடுகளா என்னை முத்தமிடப் போகின்றன? நினைத்தாலே சகிக்க முடியவில்லையே! ஐயோ, குரங்கு கையில் கொடுத்த பூமாலையாக அல்லவா என் வாழ்க்கை ஆகப் போகிறது!

"எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க. என்னால இப்ப ஒன்னும் சொல்ல முடியல" என்றேன்.

பல ஆயிரம் ரூபாய்கள், சில மணி நேரத் தூக்கம், இரண்டு பாட்டில் ஒயின், அளவில்லாத ஆசைகள் செலவழித்து வந்திருக்கிறார். How can he afford to miss me? என் மண்டை குடைந்தது. முகத்தில் அடித்த மாதிரி எப்படிச் சொல்வது?

"ஒன்னும் பிரச்சினை இல்லை. யோசிச்சுச் சொல்லுங்க. என்னோட கட்டாயத்தின் பேர்ல எந்த முடிவும் எடுக்க வேண்டாம்" இந்த ஆண்களுக்கு தாங்கள் பெருந்தன்மையாக இருப்பதைப் போல நடிப்பதில் அப்படி என்னதான் கெளரவமோ! தோல்வியை ஒப்புக் கொள்வதில் இவர்களுக்கு பெரிய பிரச்சினை.

உள்ளுக்குள் எவ்வளவு நொறுங்கியிருப்பார் என்பது எனக்குத் தெரியும். நிராகரிப்பின் வலி அங்கீகாரத்தின் சுகத்தை விடப் பன்மடங்கு பெரியது. தூக்கமின்மையிலும், பயணக் களைப்பிலும் ஏற்கனவே பொலிவின்றி வாடியிருந்த அந்த முகத்தில் இப்போது நிரந்த இருள் குடி வந்திருக்கிறது. ஆண்களுக்கு உணர்ச்சியை மறைத்து நடிக்கும் கலை அவ்வளவு இலகுவாக கை வருவதில்லை. 'சொல்லு' என்று சொல்ல வேண்டிய இடத்தில் தன்னையும் அறியாமல் 'சொல்லுங்க' என்றார் அவர்.

எத்தனை பேரிடம் ஏற்கனவே பிரகடனப்படுத்தியிருப்பார்? அவர்களிடம் போய் "நான் தோற்று விட்டேன்" என்று வலியச் சொல்லாவிட்டாலும், அவர்களின் தவிர்க்க இயலாத கேள்விகளுக்கு பதில் கூறுவதில் அவமானமும், அறுவறுப்பும் எவ்வளவு செறிந்திருக்கும்?

இதையெல்லாம் கோமதி கேட்டால் என்ன நினைப்பாள்? என் செய்கையை நினைத்து திட்டுவாளா அல்லது செய்ததே சரியென்று அங்கீகரிப்பாளா? என்ன ஆயினும் என் ஆருயிர்த் தோழி அவள். சரியான தீர்வு காணுவதில் அவளிடம் ஆலோசனை பெற்றாக வேண்டும்.

எங்கள் இருவர் மீது அவளுக்கு அளவற்ற அக்கறை இருந்தது. ரஞ்சித்துக்கு அவள் பரிசு வாங்கி என் மூலமாக அனுப்பியிருந்தாள். பதிலுக்கு அவர் கனடாவில் இருந்து ஸ்பெஷல் சாக்லேட் வாங்கி வர வேண்டும் என்பது கணக்கு. அவற்றை பரிமாறிக் கொள்வதில் பிரச்சினை இருக்கவில்லை. என் தோழிக்கும், இவருக்குமான அறிமுகம் எதிர்பார்ப்புகள் அற்றது. ஆனால், நானும் அவரும் அப்படியா?

அவருக்காக நான் தேர்ந்தெடுத்து வாங்கிய wallet அழகாக பேக் செய்யப்பட்டு கைப் பைக்குள் உறுத்துகிறது. அது போக பெங்களூரில் இருந்து அவர் பொள்ளளச்சி செல்வதற்க்கு KPN இல் டிக்கெட் வாங்கி வைத்திருக்கிறேன். அவற்றைக் கொடுத்த போது வாங்கிக் கொண்டார். அவர் எனக்காக வாங்கிக் கொண்டு வந்திருக்கும் Ipod சாதனத்தை நான் உறுதியாக மறுத்து விட்டேன். எனக்காகவே வாங்கி அதன் மீது எனக்காகவே அருமையாக வர்ணனை எழுதி அவர் கொண்டு வந்த புத்தகத்தை அவரே கொடுக்க்கவில்லை.

காதல் என்பது சுதந்திரத்தைப் போலவே கேட்டுப் பெறும் பிச்சையாக இல்லாமல் புரிந்துணர்வுடன் கூடிய இரு தரப்பு உறவாக இருக்க வேண்டும் என்பதில் அவருக்கு நிலையான நம்பிக்கை இருக்கும். அந்த நூலின் முதல் பக்கத்தில் எழுதிய வாசகங்களை நான் வாசித்தால் கால் நூற்றாண்டாக அவர் சேமித்து வைத்திருந்த காதல் கிடங்கில் இருந்து சுரக்கும் ஊற்று அதை நிறைத்திருப்பதை நான் அறியக் கூடும். அதே சமயம், யோசித்துச் சொல்வதாக நான் தெரிவித்த பிறகும் அவற்றை ஒப்படைப்பது தன் அந்தப் புறத்தைக் கைப்பற்றி பட்டத்து இராணியைக் கவர்ந்து சென்ற எதிரி நாட்டு மன்னன் முன் மண்டியிட்டு அவனை வாழ்த்திப் பாடுவதாக ஆகி விடும்.

"அதெல்லாம் பரவாயில்லை. உங்களுக்கு குற்ற உணர்ச்சியே வேண்டாம்" என்று சில முறை சமாதானம் கூறினார்.

அதன் பிறகு வேறு எங்கோ நோக்கியவறாக, "பிரேமா. எதையோ யாரோ புடுங்கிக்கிட்டு போற மாதிரி வெறுமையா இருக்கு. உண்மையைச் சொல்லு. நான் அவ்வளவு அசிங்கமாவா இருக்கேன்?" என்றார்.

என் இடத்தில் நீங்கள் இருந்திருக்க வேண்டும். பல இலட்சம் ரசாயன வெடி குண்டுகள் ஒரு சேர வெடித்து இதயத்தை பொடிப்பொடியாக நொறுக்கியதை அனுபவித்திருப்பீர்கள். இதை விடக் கடுமையாக என்னை யாராலும் தண்டிக்க முடியாது. ஆனாலும், சில நிமிடங்களில் அதையும் பொய்ப்பித்தார், இன்னொரு தண்டனையோடு.

"பிரேமா, யோசிச்சு சொல்லு. ஒன்னும் பிரச்சினை இல்லை. காதல் அப்படீங்கற விசயம் கட்டாயத்தினால வர வைக்கக் கூடியதே கிடையாது. அதைச் செய்யவும் எனக்கு விருப்பம் இல்லை. அதே நேரம் நான் எந்த அளவுக்கு உன்னை நேசிக்கிறேங்கறதையும் சொல்லாம விட்டா நான் கடமை தவறினவனா ஆகிருவேன். வேற யாரைவாயது நீ கல்யாணம் செய்து எதாவது மன வருத்தம் காரணமா கஸ்டப்பட்டா, அப்போ நான் சரியா எடுத்துச் சொல்லாத காரணத்துனாலதான் உனக்கு இப்படி ஆச்சுங்கற குற்ற உணர்ச்சி என்னைச் சும்மா விடாது. அதே மாதிரி, நீ என் கூடவே சேர்ந்தாலும் கூட என் முகம் உனக்கு உறுத்திக் கிட்டே இருந்து அதை சரிக்கட்ட சினிமா நடிகன் எவனையாது நெனைச்சு குடும்ப நடத்தினாலும் நல்லா இருக்காது. இந்த இரண்டு விசயத்தையும் நான் வெளக்கமா உங்கிட்ட சொல்ல நினைக்கிறேன். ஆனா, முடியல. நீயே யோசிச்சு முடிவு பண்ணு."

நான் வேறு பக்கம் திரும்பிக் கொண்டேன். எங்கே அவரைப் பார்த்தால் அழுது விடுவேனோ என்று பயமாக இருந்தது.

மூன்றாவதாகவும், நான்காவதாகவும் இரு தண்டனைகளை வைத்திருந்தார்.

"நாலு நாள் பாத்தா மூஞ்சி பழகிரும் பிரேமா" - இப்படி அவர் சொன்னதைப் பார்த்திருந்தால் உங்களுக்கு போர்க்களத்தில் நிராயுதபாணியாக உயிர்ப்பிச்சை கேட்டு மன்றாடுபவனைப் போல பரிதாபமாக இருந்திருக்கும். ஆனால், எனக்கு இது அடுத்த தண்டனை

"தயவு செஞ்சு என் மேல வெச்சிருக்கிற நன்மதிப்பையோ இல்லாட்டி பரிதாபத்தையோ காதல்னு தப்பா புரிங்சுக்காதே. உன்னோட நீண்ட கால சந்தோசத்துக்கு எது சரின்னு நெனைக்கறியோ அதைச் செய்" - இது கடைசித் தண்டனை. அது எனக்குப் போதுமயிருந்தது.

எனக்கு இந்த இடத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும் போல இருந்தது. லஞ்ச் சாப்பிட்டு விட்டுப் போகலாம் என யோசனை கூறினார். மறுக்க மனமில்லை. பாவமில்லையா? ஆனாலும், இதற்கு மேல் என்னால் தாங்க முடியும் எனவும் தோன்றவில்லை. உணவு உள்ளே இறங்காது.

"என்னை வீட்டில் இறக்கி விடுங்கள் போதும்" என்றேன். விட்டார். தெரு முனையைக் கடந்து அவர் செல்லும் வரை காத்திருந்து விட்டு உள்ளே போனேன்.

அதெல்லாம் இருக்கட்டும். நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? நான் எதாவது முடிவு சொல்வேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்களள? போங்க போய் வேலையைப் பாருங்கள். காலம் யாருக்காகவும், எவருக்காகவும் காத்திருப்பதில்லை.

24 comments:

Anonymous said...

என்ன கொடுமை சரவணன் இது?

Udhayakumar said...

//அதெல்லாம் இருக்கட்டும். நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? நான் எதாவது முடிவு சொல்வேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்களள? போங்க போய் வேலையைப் பாருங்கள். காலம் யாருக்காகவும், எவருக்காகவும் காத்திருப்பதில்லை.
//

சத்தியமான வார்த்தைகள்... இந்த வார்த்தகளை நானே சொன்ன மாதிரி இருக்கு....

ILA(a)இளா said...

நரபலி கடவுளே.. பின்னூட்டத்திலேயாவது முடிவை சொல்லுங்கய்யா,,, புண்ணியமா போவட்டும்

Anonymous said...

சத்தியமாக நிச்சயமாக இது என் வாழ்வில் நிகழ்ந்ததை ஒத்து போகின்றது...ஆனால் அதில் ஒரு காதலைக் கொன்றது ஒரு ஆண்..அவள் இன்னும் , சிரித்த முகத்துடன் தோழியாக இருக்கின்றாள்..

லக்கிலுக் said...

கண்கள் கலங்குகிறது நண்பரே. நிராகரித்தவளின் வலியே இப்படி இருக்கிறது நிராகரிப்பட்டவரின் வலி பன்மடங்கு மோசமாக இருக்கும். என் சகோதரருக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே நிலை என் கண் முன்னாலேயே ஏற்பட்டது.

பத்து ஆண்டுகள் கழித்து பார்க்கிறேன். நிராகரிக்கப்பட்டவர் பன்மடங்கு உயரத்தில் இருக்கிறார். நிராகரித்தவளோ அதல பாதாளத்தில். பராசக்தி படத்தில் வருவதைப் போல வாழ்க்கை நிறைய விசித்திரங்களை உள்ளடக்கியது. நிராகரிப்பதற்கான காரணம் சரியானதாக இருந்தாலொழிய நிராகரித்தவர் நிம்மதியாக வாழமுடியாது.

அன்புடன்
லக்கிலுக்

Chellamuthu Kuppusamy said...

நன்றி உதய்.
//இந்த வார்த்தகளை நானே சொன்ன மாதிரி இருக்கு.... // ஏதோ புரிஞ்ச மாதிரி இருக்கு :-)

வாங்க இளா! எப்படி முடிக்கறதுனு தெரியாமத்தானே இப்படி? இதுல பின்னூட்டத்தில மட்டும் எங்கிருந்து ஞானம் வரும்?

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

//பெண்ணியம், சமூகம், இறை நம்பிக்கை, பொருளாதாரம், சமூகம், அரசியல் குறித்தான உன் நிலைப்படுகள் என்னை ஒத்ததாக இருந்ததாலா? 'பார்க்க ஆசைப்படுவது ஈஃப்ள் கோபுரமா, எகிப்து பிரமிடா?//

தல.. சில எழுத்துப்பிழைகளை விட்டு விடலாம். ஆனா.. இது ரிபீட்டு ஆகிருக்கு. :)

வெற்றி said...

செல்லமுத்து குப்புசாமி,
ஆகா, மிகவும் அருமையான கதை. மிகவும் சுவாரசியமாகச் சொல்வதென்பது உங்களுக்குக் கைவந்த கலை. கதையைப் படித்த போது ஒருவித சோகம் கவ்விக் கொண்டது.

/* காதல் என்பது சுதந்திரத்தைப் போலவே கேட்டுப் பெறும் பிச்சையாக இல்லாமல் புரிந்துணர்வுடன் கூடிய இரு தரப்பு உறவாக இருக்க வேண்டும் */

அருமையான வரிகள்.

/* நரபலி கடவுளே.. பின்னூட்டத்திலேயாவது முடிவை சொல்லுங்கய்யா,,, புண்ணியமா போவட்டும் */

இளாவை வழிமொழிகிறேன். :-))

Chellamuthu Kuppusamy said...

அனானி,
//சத்தியமாக நிச்சயமாக இது என் வாழ்வில் நிகழ்ந்ததை ஒத்து போகின்றது...ஆனால் அதில் ஒரு காதலைக் கொன்றது ஒரு ஆண்..அவள் இன்னும் , சிரித்த முகத்துடன் தோழியாக இருக்கின்றாள்..
//
வேற கல்யாணம் பண்ணச் சொல்லுங்கம்மா. எத்தனை நாளைக்கு தோழியாவே இருப்பாங்க?

லக்கி, கதையை விட உங்கள் கமெண்ட்தான் வேதனை தருவதாக இருக்கிறது. உங்கள் சகோதரர் இப்போது நல்ல நிலையில் இருப்பதில் மகிழ்ச்சி.

//நிராகரிப்பதற்கான காரணம் சரியானதாக இருந்தாலொழிய நிராகரித்தவர் நிம்மதியாக வாழமுடியாது.// இது வெறும் கதைதான் லக்கிலுக். சாபங்களை அவ்வளவு சீக்கிரமா வீணாக்கி விடாதீர்கள். சேமித்து வைத்தால் பின்னால் பயன்படலாம் இல்லையா?

நந்தா said...

அப்பப்பா... இவ்வளவு வலியை வார்த்தைகளில் வடிக்கும் வித்தையை எங்கே கற்றுக் கொண்டீர்கள்....

ஒவ்வொரு வரிகளும் நெஞ்சிலே நிற்கின்றது.

யாரோ said...

கதை நன்றாக இருக்கின்றது. முடிவில் எதிர்பார்ப்பு ஒரு ஏமாற்றமாயிருந்தது உங்கள் கதையில் வரும் பாத்திரங்களைப் போல.

ஒரு வகையில் கதை சாதாரணமாக வாழ்க்கையில் நடைபெறும் ஒரு சம்பவத்தையே பிரதிபலிக்கின்றது. அதுதான் உங்கள் கதையில் வெற்றி

நன்றி

சந்திரா said...

பெண்ணாயினும் சரி ஆணாயினும் சரி அழகின்மை நிராகரிப்புக்கான சரியான காரணமில்லை என்று என்னால் ஒப்புக்கொள்ள முடிந்ததில்லை. அவரவர் தன்னை அந்த இடத்தில் வைத்து நினைத்துப் பார்த்தால் இதை நிச்சயம் ஒப்புக்கொள்ளவே செய்வர். ஆனால் அதை புண்படா வண்ணம் சொல்லுதல் பண்புள்ளவர் செய்கை. அவ்வளவே. பெண் பார்த்தல் போன்ற அநாகரிக அடையாள அணிவகுப்புகளுக்குப் பிறகு அதை பெண்களின் முகத்தில் காரி உமிழ்வது போல் ஒரு ஆண் சொல்வதும் சரி, உணர்ச்சி வேகத்தில் எதிர்பார்ப்புகளை விதைத்து விட்டு பின் யதார்த்தம் காலைப் பிடித்திழுக்க இப்பெண் அந்த பரிதாபத்துக்குரியவரின் முகத்தில் அமிலத்தைக் கொட்டியது போல் சொல்வது நிச்சயம் அநியாயமானதுதான். ஆனால் அவற்றின் பின்னாலுள்ள காரணங்கள் நிச்சயம் நியாயமானவையே. சில விஷயங்களை ஒப்புக்கொள்வது கடினமாய்த்தானிருக்கும். முதலில் அவரை நேரில் பார்த்திருந்து பின் அவரின் நற்குணங்களை மெல்ல மெல்ல அறிந்திருந்தால் ஒரு வேளை அப்பெண்ணிற்கு அவரை பிடித்திருக்கக் கூடும். ஹ்ம்ம்...

மங்கை said...

இரண்டுமே கொடுமை தான்...

ஆனால்...நிராகரித்தபின் வருத்தப்படுவது எந்த விதத்திலும் நிராகரிக்கப்பட்டவருக்கு ஆறுதலைத் தராது..ஹ்ம்ம்ம்...காலம் முழுதும் இருக்கும் வலி...

நல்லா இருக்கு குப்ஸ்...எப்படித்தான் இப்படி எல்லாம் யோசிக்கறீங்க

பாலராஜன்கீதா said...

கதையைப்படித்தபின் நிராகரித்தவளின் வலியைவிட நிராகரிக்கப்பட்டவருக்குத்தான் வலி அதிகமாக இருக்கும்போலத் தோன்றுகிறது. நிராகரித்தவளுக்கு ஒருவேளை சுயபச்சாதாபம் வேண்டுமானால் இருக்கலாம் அதுகூட சிறுபொழுதுதான் இருந்தது என்பதை கடைசிவரி தெரியப்படுத்துகிறதா ?

Chellamuthu Kuppusamy said...

//தல.. சில எழுத்துப்பிழைகளை விட்டு விடலாம். ஆனா.. இது ரிபீட்டு ஆகிருக்கு. :)
//
கலக்கிட்டீங்க தல. சரி சரி.. எவ்வளவு பிழை இருக்கிறதோ அதற்குத் தகுந்த மாதிரி ஒன்றோ ரண்டோ குறைத்துக்கொண்டு பரிசைக் கொடுங்கள்.

வாங்க வெற்றி. ரொம்ப நெளிய வெக்கறீங்க. நன்றி :-)

Chellamuthu Kuppusamy said...

வாங்க யாரோ & நந்தா. வருகைக்கும், வாசிப்பிற்கும், கருத்திற்கும் நன்றி.

//பெண்ணாயினும் சரி ஆணாயினும் சரி அழகின்மை நிராகரிப்புக்கான சரியான காரணமில்லை என்று என்னால் ஒப்புக்கொள்ள முடிந்ததில்லை.// என்று தொடங்கும் உங்கள் பின்னூட்டத்தின் கருத்தை மறுப்பதற்கில்லை சந்திரா. நன்றி.

மங்கை said...

எங்க என் பின்னூட்டதை காணோம்.. நான் ஸ்ட்ரைக் பண்ணப் போறேன்

enRenRum-anbudan.BALA said...

செ.கு,

அருமையான சப்ஜெக்ட், அழகான சிறுகதை, அதை விட திறமையான எழுத்து நடை !

தாங்கள் வித்தை தெரிந்தவர் என்பதில் ஐயமில்லை.

என்றென்றும் அன்புடன்
பாலா

youyes said...

enga kuppu. idhu ungalukke niyayama irukka? ippadi ambonu uttutinga. How to comment in tamil font here?

ஜி said...

:))) arumaiyaana climax...

Anonymous said...

I know this is real story that happened in your life but some modifications has been done. Without any incidents happen in your life you cann't get the main concept of the story. It is easy to read as a story but should not happen in real life.

sasi said...

EXCELLENT IF U RAED THIS AS STORY. BUT IF IT HAPPENS IN OUR LIFE IT IS A TRAGEDY.

ஜோசப் பால்ராஜ் said...

இது பலருக்கும் நேர்ந்த ஒன்று.
எடுக்க கூடாத தருணங்களில் எடுக்கப்படும் சில முடிவுகளும், எடுக்க வேண்டிய தருணங்களில் முடிவெடுக்க தவறுவதும் தான் நம் வாழ்வின் பல பிரச்சனைகளுக்கு காரணமாகிவிடுகின்றன.

றிசாந்தன் said...

நான் சொல்ல வேண்டியதையெல்லாம் எல்லாருமே ஏற்கனவே சொல்லி விட்டாங்க . உண்மையிலேயே முன்று தரம் இந்த கதையினை படித்துவிட்டேன் .
அது ஏற்படுத்திய தாக்கம் இன்னும் குறையவில்லை .

மிகைப்படுத்தி சொல்லவில்லை , இரண்டு முன்று இரவுகளாக ஏதோ செய்கிறது இந்தக் கதை என்னுள்ளே .......
என் வாழ்கையின் இறந்தகாலமும் கொஞ்சம் இந்தக் கதையில் இருப்பதன் காரணமோ என்னவோ ???