Monday, August 20, 2007

உண்மை!

- செல்லமுத்து குப்புசாமி

மதியத் தூக்கம் எப்பவுமே சந்தோசமான விஷயந்தான் இல்லையா? அதிலையும் சனிக்கிழமை மதியம் மெஸ்ல போய் ஒரு கட்டு கட்டிட்டு வந்த பிறகு தூங்கலைன்னா அந்த வாரமே வேஸ்ட் அப்படீங்கற ·பீலிங் வந்துருதுங்க. அந்த மாதிரி வழக்கமாகத் தூங்கி சாயங்காலம் ஒரு ஆறு மணிக்கு எந்திருச்சு குளிச்சுட்டு பெசண்ட் நகர் சர்ச்சுக்கு ஒரு விசிட் கொடுத்துட்டு அப்படியே பீச்ல போய் காத்துவாங்க உக்காந்து சைட் அடிக்காட்டி பரபரப்பான இந்த சென்னை வாழ்க்கைல என்ன சுகம் இருக்குது சொல்லுங்க?

இந்த வாரம் என்ன பாவம் செஞ்சனோ தெரியலை ஆப்பு செல்போன் ரூபத்துல வந்து அஞ்சு மணிக்கே எழுப்பி விட்டது. ரவியண்ணன் சாதரணமா கால் பண்ண மாட்டார். அவரைத் தவிர வேறி யாராச்சுமா இருந்தா எடுத்திருக்கவே மாட்டேன்.

"அண்ணா.. சொல்லுங்கண்ணா"

"எங்கடா இருக்கே? வீட்லையா?

"ஆமாங்கண்ணா"

"சரி. அங்கையே இரு. வந்தர்றேன்"

அவர் வர எப்படியும் கால் மணி நேரம் ஆகும். அதுக்குள்ள எ·ப்.எம். ரேடியோவை ஆன் பண்ணி அலறவிட்டேன். குளிக்க தண்ணி போட்டு விடணும். எங்க பாத்ரூம்ல தண்ணி வராது. சில நேரம் வந்தாலும் அது கடல்ல இருந்து நேரடியா கனெக்ஷன் குடுத்த மாதிரி இருக்கும். ஒரு லிட்டர் புடிச்சா அன்னைக்கு சமையலுக்கு வேண்டிய உப்பெல்லாம் அதில இருந்தே எடுத்துக்கலாம். அதனால் கிச்சன்ல ஒரே ஒரு கொழாய்ல லேசா வர்ற தண்ணியை பாத்ரூமுக்கு டிரான்ஸ்பர் செய்யும் வித்தையை நான் கண்டுபிடிச்சு வெச்சிருந்தேன். அந்த குழாய்ல ஒரு ஹோஸ் டியூபை சொருகி அதோட மறு முனையை அப்படியே பாத்ரூம் பக்கெட்ல விழற மாதிரி வைக்கணும். எப்படியும் பக்கெட் நெறையறதுக்குள்ள எ·ப்.எம்.ல மூனு பாட்டு முடிஞ்சுரும். அது வரைக்கும் பால்கனில வந்து நின்னுக்கிட்டேன்.

யோசிச்சுப் பாக்கறேங்க. இந்நேரத்துக்கு எதுக்காக ரவிண்ணா இங்கே வரணும்னு. நான் இதுக்கு முன்னாடி வேலை செஞ்ச கம்பெனில அவரு எனக்கு டீம் லீடர். இன்னமும் அதே கம்பெனில இருக்கார். நாமெல்லாம் குரங்கிலிருந்து பிறந்தோம்ங்கறதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உண்டானதால நான் மட்டும் அங்கிருந்து தாவி இன்னொரு கம்பெனிக்கு வந்துட்டேன், அதுவும் கேவலம் மாசம் அஞ்சாயிர ரூபாய் கூடுதலா கெடைக்குதுங்கறதுக்காக.

நான் எதிர்பார்த்த மாதிரியே பக்கெட் நெறையறதுக்கு முந்தியே அவர் கார் வந்துருச்சு. அறிவு ஜீவி களை எப்பவும் போல ததும்பி வழிஞ்சாலும் வழக்கமா அவர் கிட்ட தென்படுற அந்த உற்சாகம் மிஸ்ஸிங். அண்ணனுக்கு முப்பதொரு வயசு. லேசான தொந்தி, அங்கங்கே வெள்ளை முடின்னு பாக்கறதுக்கு அஞ்சு வயசு கூடுதலாத் தெரியும். கல்யாணத்துக்கு அப்பறந்தான் இப்படி மாறிட்டார். அதுக்கு முன்னாடி செம ஸ்மார்ட். அஞ்சு வருசத்துக்கு முன்னாடி அஞ்சு வயசு கொறைவா தெரிஞ்ச ஆளுதான் அவரு. 26 ல 21 மாதிரி இருந்தவர் 31 ல 36 மாதிரி ஆகிட்டார்.

உள்ளே வந்தவுடனே கடலை மிட்டாய் பொட்டலத்தை நான் குடியிருக்கும் (சாப்பாடு, தூக்கம், வாசிப்பு, வசிப்புன்னு சகலமும் அதன் மீதுதான்) அந்தப் படுக்கையின் மீது தூக்கி வீசினார். அதுதான் எங்களது ·பேவரட் ஸ்நாக்ஸ். ஆறு மாதம் முந்தி அவருக்குக் குழந்தை பொறந்தப்பக் கூட எல்லோருக்கும் சாக்லட் கொடுத்தாலும் எனக்கு மட்டும் கடலை மிட்டாய் கொடுத்தார்னா பாத்துக்குங்க.

இவர் பார்க்கறதுக்கு ரொம்ப சாதாரணமா இருப்பார். சிகப்பா இருப்பார்னு
சொல்ல முடியாது. நடிகை பிரியா ராமன் வீட்டுக்காரர் நடிகர் ரஞ்சித் இருப்பார்ல, அந்த மாதிரி மேன்லியான லுக்னு சொல்லலாம். அவரோட ஒய்·ப் கொஞ்சம் அல்ட்ரா மாடர்ன்னு வெச்சுக்குங்க. இவர் கடலை மிட்டாய் சாப்பிடறதுலையே ஏகப்பட்ட அவங்களுக்குள்ள சண்டை வந்திருக்கு. எனக்கு ஏன் குடுக்கலைன்னு கேட்டு சண்டை போட்டாக்கூட பரவாயில்லைங்க. அந்தம்மா அஞ்சலி தேவி - ஆமாங்க அதான் ரவியண்னா ஒ·ய்ப் பேரு - கண்ட்ரி ·பெல்லோ மாதிரி இதெல்லாம் திங்காதீங்கன்னு திட்டுவாங்க. நானே சில சமயம் பாத்திருக்கேன்.

பக்கெட் நெறஞ்சு நான் போய் கொழாயை அடைச்சிட்டு வந்து அதுக்கு அப்பறம் ரேடியோல ரண்டு பாட்டு முடியற வரைக்கும் அமைதியாவே அண்ணா உக்காந்திருந்தாங்க.

"தம் இருக்கா கார்த்தி?"ன்னு அண்ணா கேட்டார். அவருக்கு தம் அடிக்கற பழக்கம் இல்லைன்னு எனக்குத் தெரியும். இன்னைக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை.

"இல்லைங்கண்ணா. குமார் ஊருக்குப் போய்ட்டான்" என்னோட ரூம்மேட் குமார் ரயில் வண்டியே வெச்சிருக்கான். அவன் இருந்தா ஒரு சிகரெட் எடுத்து இவருகிட்டக் குடுக்கலாம். அவனும் இல்லை. எனக்கு அது பெரிய பிரச்சினையா தெரியலை. தம் போடற அளவுக்கு ரவியண்னாவுக்கு என்ன சோகம்ங்கறதுதான் பிரச்சினை.

"அண்ணா, என்னுங்கண்ணா? டல்லா இருக்கீங்க?"

"வீட்ல சண்டை போட்டுட்டு வந்துட்டண்டா" அப்படீன்னு அண்ணா பதில் சொன்னாங்க. காலம் மாறுது போல. பொண்டாட்டிகிட்ட சண்டை போட்டுக்கிட்டு புருஷன் வீட்டை விட்டுக் கெளம்பற லெவலுக்கு சமுதாயம் மாறிட்டு வருது.

"சட்டை மாட்டிக்கிட்டு வா. அப்படியே நடந்து போய் டீயும், தம்மும் அடிச்சிட்டு வரலாம்" இப்படிக் கேட்டதும் சரின்னு சொல்லிட்டு சட்டையும், ஜட்டியும் (லுங்கி ஏற்கனவே இருக்கு) மாட்டிக்கிட்டு ரேடியோவை ஆ·ப் பண்ணி வீட்டைப் பூட்டிட்டு அண்ணாவோடு கெளம்பினேன்.

ரொம்ப நொந்து போயிருக்கார்னு தெளிவாப் புரிஞ்சது. அண்ணாவே பேசினால் ஒழிய நான் தேவையில்லாம ஒன்னும் கேக்கக் கூடாதுனு அமைதியா கூடவே நடந்து வந்தேன். வழக்கமா சாப்பிடற வாழக்காய் பஜ்ஜி இன்னைக்குச் சொல்லலை. ரண்டு டீ மட்டும் சொன்னேன். அண்ணா ஒரு வில்ஸ் எடுத்து பத்த வெச்சாங்க.

பொகையை உள்ள அப்படியே இழுத்து அனுபவிச்சு மெதுவா வெளிய விட்டாங்க. "உனக்கு வேற வேலை எதாவது இருக்காடா? என்னோட வண்டி இருக்கு. இப்படியே கெளம்பி மகாபலிபுரம், பாண்டிச்சேரின்னு போய் சுத்திட்டு நாளைக்கு ஈவினிங் வரலாம். என்ன சொல்றே?" ன்னு கேட்டாங்க.

ஒரு குடும்பத்தைக் கெடுத்த பாவம் பிரியமா வளத்த பூனை மாதிரி என் காலைச் சுத்திச் சுத்தி வருதுங்கறது மட்டும் எனக்கு தெளிவாப் புரிஞ்சுது. ஒரு முடிவோடதான் கெளம்பி வந்திருக்கார்னு நெனச்சேன்.

"அண்ணா, அதெல்லாம் இருட்டாகிரும்னா. இங்கயே எங்கையாவது போலாம். நாளைக்குக் காலைல வேணா மாகாபலிபுரம் பாத்துக்கலாம்" னு சொல்லி மறுபடி நடக்க வெச்சு வீட்டுக்குக் கூட்டிட்டு வர்றதுக்குள்ள பெரும்பாடாப் போச்சு. அப்படி இருந்தாலும் ரண்டு பாக்கெட் சிகரெட் வாங்கறதுக்கு அவரு மறக்கல.

பால்கனில நின்னு கொஞ்ச நேரம் பேசினோம். மத்தபடி மெளனமாவே இருந்தோம். இந்த மாதிரி நேரத்துல ஆம்பளைங்களை அமைதியா விட்டறணும். சும்மா நைநைனு பேசிக் கழுத்தறத்தா கடுப்பாகிருவாங்க. அண்ணா எதைப்பத்தி நெனைக்கறாங்கன்னு தெரியல. ஆனா நான் அவங்களைப் பத்தியும் அஞ்சலி அண்ணியைப் பத்தியும்தான் நெனைச்சேன்.

அஞ்சலி அண்ணி நெஜமாலுமே ரொம்ப அழகா இருப்பாங்க. சில நேரத்துல பாத்தா கையெடுத்துக் கும்பிடணும் போலத் தோனும், சில நேரம் கட்டிப் புடிக்கணும் போலத் தோனும். அப்படி ஒரு அழகி. அந்த அழகுல தனக்குக் கர்வம் கொஞ்சம் ஜாஸ்தியாவே உண்டுங்கறதை அவுங்க பேசறதையும், நடந்துக்கறதையும் வெச்சு ஈசியா சொல்லிரலாம்.

ஒரே ஜாதில ஜாதகம் எல்லாம் பாத்து பத்துப் பொருத்தமும் சேந்த பிறகு செஞ்ச கல்யாணந்தான் அவங்களோடது. என்ன இருந்தாலும் கொங்கு மண்டலத்துலயே லவ்வுனாக் கூட ஜாதகம் பாத்து லவ் பண்ற ஜாதில பொறந்தவங்க இல்லையா? ரண்டு குடும்பமும் வசதியான குடும்பம்தான். அண்ணா, அண்ணி ரண்டு பேருமே சென்னைல வெவ்வேற சா·ப்ட்வேர் கம்பெனில வேலைக்குப் போறாங்க.

என்னோட சிந்தனையைக் கலைக்கறாப்பல இங்கிலீஷ்ல அண்ணா சொன்னாங்க. "Indian women had been suppressed for ages and they seem to unleash all at once, quite sadly now" சொன்ன மேட்டரை விட சொன்ன விதமும், அப்ப மூஞ்சில தெரிஞ்ச உணர்ச்சியும் ரொம்ப கிளியராப் புரிஞ்சுது.

அப்படி இப்படீன்னு நேரத்தைக் கடத்தினாலும் மணி ஏழுக்கு மேல ஆகலை. இதுக்கு மேல வீட்ல இருந்தா வேலைக்கு ஆகாதுன்னு சொல்லி அடையார் SNS போனோம். நல்ல எடம் அது. நீங்க வேணாலும் ட்ரை பண்ணிப் பாருங்க. அடையார் சிக்னல் பக்கத்துலையே இருக்கு.

நல்ல வேளை கூட்டம் அதிகமா இல்லை. பூல் டேபிள் காலியா இருந்தது. நம்மலும் எதோ வெள்ளைக்காரன் மாதிரி குச்சில டேபிள் மேல இருக்கிற பந்தைத் தட்டித் தட்டி ஓட்டைல போடற வெளையாட்டு ஆடறதை நெனைச்சா சிரிப்பு வந்தாலும், இந்த ஆட்டம் நல்லாத்தான் இருக்குது.

அண்ணா என்னை விட நல்ல பிளேயர். தனக்கு ஆன் த ராக்ஸ் விஸ்கி என்னமோ சொன்னாங்க. கூடவே கையில தம்மு. நான் எதுவும் ஆர்டர் பண்ணலை. குடிச்சு ஒடம்புக்கு ஒத்துக்காம ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆனா ஒடனே கல்யாணம் பண்ணி வெச்சிருவேன்னு அம்மா மெரட்டல் விட்டிருக்காங்க.

கிட்டத்தட்ட பத்து மணி வரைக்கும் அந்த டேபிள் எங்க ஆக்கிரமிப்புல இருந்துச்சு. நான் ஜெயிச்சதை விட அண்ணா நெறைய ஜெயிச்சாங்க. கூடவே நெறைய மேட்டர் வெளிய வந்துச்சு. அவங்க கல்யாண வாழ்க்கைல ஏற்பட்ட கஷ்டங்கள், அவமானங்கள், சிக்கல்கள்னு பல விஷயம் தெரிய வந்துச்சு.
பால்கனில நிக்கும் போது இங்கிலீஷ்ல அண்ணா சொன்ன கருத்து இப்ப ரொம்பத் துல்லியமா வெளங்குச்சு. அண்ணி சுந்தந்திரமா இருக்கணும்னு நெனைக்கற ரகம். அதுல தப்பில்லைனு அண்ணா சொல்றாங்க. கணவனைச் சார்ந்திருக்கற dependence ங்கற மேட்டர் புடிக்கலைங்கறதால absolute independence வேணும்னு சொல்லிட்டு ரண்டு ஜீவன் சேர்ந்து அனுசரிச்சு வாழற வாழ்க்கையோட interdependence ங்கற மைய இழையை அஞ்சலி அறுக்கறான்னு சொல்லி அழுதுட்டாங்க. ஆமாங்க ரவியண்ணா தேம்பி அழுததை இன்னைக்குத்தான் நான் பாத்தேன். பார்ல அத்தனை பேரும் வேடிக்கை பாக்கறாங்கனு சொல்லி சமாதானப்படுத்த சிரமமாப் போச்சுங்க.

காலங்காலமா வெளியே போய் பொருள் தேடிக் கொண்டு வர்ற ஆணோட வேலையைப் பொம்பளைங்க பங்குபோட ஆரம்பிச்ச இந்தக் காலத்துல பொம்பளைகளோட வேலையாக் கருதின வீட்டைப் பரமாபரிக்கறதை ஆம்பளைங்களும் பங்கு போடணும்ங்கறதுல உறுதியா இருக்கிற சில பேர்ல ரவியண்ணா ஒருத்தர். சமையல் வேலை, பாத்ரூம் கழுவறது, துணி அயர்ன் பண்றதுனு எல்லாத்தையுமே அண்ணாவும் செய்வாங்க.

ஆணும், பொண்ணும் சமம்ங்கறதால உடல் ரீதியாவும், மன ரீதியாகவும் இரு பாலருக்கும் உள்ள பலம் மற்றும் பலவீனத்தை மறந்து மறுக்க முடியாதுல்ல? அஞ்சு மாசம் பொம்பளை புள்ளையைச் சொமந்தா, மிச்ச அஞ்சு மாசத்தை ஆம்பளை ஆசைப்பட்டாலும் சொமக்கவா முடியும்? அப்படி இல்லாட்டி பொறந்த கொழந்தைக்குத்தான் அவனால பால் குடுக்க முடியுமா? இயற்கையில சில விஷயங்கள் இப்படித்தான் இருக்கணும்னு விதிச்சிருக்கு. அதை ஏத்துக்கிட்டு அதோட வரையறைக்குள்ள வாழறதுதான் புத்திசாலித்தனம்.

அஞ்சலி அண்ணி கர்ப்பமா இருந்தப்ப ரவிண்ணா எப்படி படபடப்பா இருந்தார்னு எனக்குத் தெரியும். அதே மாதிரி கொழந்தை பொறந்த அவர் எவ்வளவு சந்தோசப்பட்டார்னும் தெரியும். ஆனா அண்ணி ரண்டே வாரத்துல வேலைக்குக் கெளம்பிட்டாங்க. ரவியண்னாவோட அம்மாவும், மாமியாரும் மாறி மாறி பாப்பாவைப் பாத்துக்கிட்டாங்க.

மெட்டர்னிட்டி லீவ் கூட அண்ணி முழுசா யூஸ் பண்ணலை. கெரியர் குரோத் தனக்கு ரொம்ப முக்கியம்னு சொல்லிட்டாங்க. கொழந்தை, குடும்பங்கற சராசரி விஷயத்துக்காக அதை காம்ப்ரமைஸ் பண்ணிக்க முடியாதுன்னு அதுக்கு காரணம் சொன்னாங்களாம். அப்படி இருக்கிறவ என்ன மயிருக்கு கல்யாணம் பண்ணனும்னு கேக்க நெனைச்சேன். ஆனா அண்ணா மனசு கஷ்டப்படும்னு சும்மா இருந்திட்டேன்.

வீட்டுப் பெருசுக மாசம் ஒருத்தர்னு மாத்தி மாத்தி சென்னை வந்து கொழந்தையைப் பாத்துக்கிட்டே இருந்தாங்க. அப்படியே ஆறு மாசம் ஓடிப் போச்சு. அழகான அஞ்சலி அண்ணிக்கு பல நேரங்கள்ல பாப்பா 'சனியன்' ஆகிருது. அது அழுகறப்ப, படுக்கைல மூச்சா போறப்ப, ஒடம்பு சரியில்லாமப் போறப்ப..இப்படி எல்லா நேரமும் அதில் வரும்.

என்னால லீவ் போட்டு வீட்ல உக்காந்து கொழந்தையைப் பாத்துக்க முடியாது. வேணும்னா நீ லீவ் போட்டுக்கனு புது மிரட்டல் கடந்த ரண்டு வாரமா ஆரம்பிச்சிருக்காம். அண்ணாவுக்கு சம்பளம் 15 இலட்சம். அண்ணிக்கு ஆறு இலட்சம். வேலையை விடலைன்னா உங்க கம்பெனி HR க்கு கால் பண்ணி கம்ப்ளெயிண்ட் பண்ணிருவேன் அதுக்கு அப்புறம் வேலை போய் வீட்ல உக்கார வேண்டி வரும்னு டார்ச்சர் குடுத்திருக்காங்க. குடும்பம்னு வந்தா எல்லாத்தையும் நாலு சுவத்துக்குள்ள வெச்சு பாதுகாக்கணும்னு சொல்லுவாங்க இல்லைங்களா? அதனால் அண்ணா அப்படியே மெயிண்டெய்ன் செஞ்சி சமாளிச்சுட்டு இருந்தாங்க.

இந்தக் கொடுமைக்கெல்லாம் உச்ச கட்டம் இன்னைக்கு நடந்ததாம். அதனாலதான் வீட்டை விட்டு ஓடி வந்துட்டார். வாய்த் தகறாரு கொஞ்சம் முத்திருச்சாம். டக்குனு மகளிர் போலீஸ¤க்கு போன் பண்ணி வீட்டுக்கு வர வெச்சு எம்புருஷன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தறாருனு சும்மானாச்சும் சொல்லிட்டாங்களாம். வந்த போலீஸ்க்கார அக்காமாருக எல்லாம் ஒரு மணி நேரம் அண்ணாவை உருட்டி மெரட்டி இனிமேல் வரதட்சணை கேட்டு தொந்தரவு பண்ணமாட்டேன்னு கையெழுத்து வாங்கினதோட எச்சரிக்கை செஞ்சு விட்டுட்டுப் போய்ட்டாங்களாம். இதுக்குமேல தாங்காதுனு நெனைச்சு வீட்டை விட்டு ஓடி வந்துட்டார் அண்ணா. அவரு சம்பாதிச்சு வாங்கினதுன்னாலும் வீடு அண்ணி பேர்லதான் இருக்குங்கறது உங்களுக்கான உதிரித் தகவல்.

ரவியண்ணா மனசுல இருந்த பாரம் எல்லாத்தையும் கிட்டத்தட்ட எங்கிட்ட எறக்கி வெச்சிருப்பார்னு நெனைக்கறேன். அந்த நேரம் பாத்து, "சார், 20 மினிட்ஸ்ல டேபிள் குளோஸ் பண்ணிருவோம் சார். லாஸ்ட் கேம்" அப்படீன்னு பையன் வந்து சொன்னான். "தம்பி. நீ சார் கூட வெளையாடிட்டு இரு. நான் டாய்லட் போய்ட்டு வந்துர்றேன்" ன்னு கேட்டுக்கிட்டதும் அவனுக்கு ரொம்ப குஷி. கம்பெனி இல்லாம தனியா வர்ற கஸ்டமர்ஸ் கூட சான்ஸ் கெடைக்கும் போது காசு கட்டாம வெளையாடலாங்கறதுல அவங்களுக்கு ஒரு ஆனந்தம்.

டாய்லெட் போய்ட்டு நான் திரும்பி வந்தப்ப என் கையில அண்ணாவோட செல்போன் இருந்ததை அவரு கவனிக்கலை.

கேம் முடிச்சுட்டு, பில்லுக்கு பணம் கட்டிட்டு வெளியே வந்து கார்ல ஏறப் போகும் போது மாமனாரிடம் இருந்து அவர் செல்போனுக்கு கால் வந்தது. ரண்டு பேரும் சுமார் இருபது நிமிசம் பேசிருப்பாங்க.

"டேய்... நைட் உன் ரூம்ல தங்கிட்டு காலைல வீட்டுக்குப் போய்க்கறேன்"

"சரிங்கண்ணா. நீங்க வாங்க. காலைல பாத்துக்கலாம்"

வீட்டுக்கு வர்ற வழில அண்ணா எங்கிட்ட ரண்டு தத்துவம் சொன்னாங்க. ஒன்னு: கல்யாணம் பண்ணிக்காதே.
ரண்டு: அப்படியே பண்ணினாலும் அழகான பொண்ணை மட்டும் பண்ணிக்காதே.

ஷேர் மார்க்கெட் முதலீட்டில வாரன் ப·பட் சொன்ன விதி என் மனசுல வந்து போச்சு.
Rule 1 : Don't loose money
Rule 2 : Don't forget rule 1

வாரன் ப·பட்டை விடுங்க. அண்ணா இது வரைக்கும் எனக்குச் சொன்ன எந்த அட்வைசையும் நான் தட்டினதே இல்லை. ஆனா இந்த ரண்டு தத்துவத்தில முதல்ல சொன்னதை ஏத்துக்கறதில்லைனு முடிவு செஞ்சுக்கிட்டேன். ரண்டாவதை வேணா பரிசீலிக்கலாம்.

**
மறுநாள் நாள் காலைல நான் எந்திரிச்சுப் பாக்கறப்ப அண்ணாவைக் காணோம். பார்க்கிங் லாட்ல நிறுத்தி வெச்சிருந்த காரையும் காணோம்.

என்னோட மொபைல் போன்ல அண்ணா மாமனார்ட்ட இருந்து வந்த SMS மட்டும் 'ரொம்ப தேங்க்ஸ்பா" ன்னு சொன்னபடி இருந்தது.

பாத் ரூமில் நேத்து ஈவினிங் நெரப்பி வெச்ச நல்ல தண்ணி அப்படியே இருந்தது. சரி விடுங்க. சர்ச், பீச் எல்லாம் அடுத்த சனிக்கிழமை பாத்துக்கலாம்.

பொறகு இன்னொரு மேட்டர். வேலைக்குப் போற பெண்களை இழிவுபடுத்தற ஆணாதிக்க வக்கிர புத்தியின் வெளிப்பாடுதான் இந்த மாதிரிக் கதைன்னு யாராவது வேட்டியை வரிஞ்சு கட்டிட்டு வந்திராதீங்க. ஒட்டுமொத்தப் புனைவு, புரட்டு, கற்பனைன்னு சொல்லி பெண்ணியத்தைப் பாதுகாக்க வரும் உங்கள மாதிரி ஆட்களுக்களுக்குந்தான் கதையோட தலைப்பு. சரிங்களா?

Friday, August 10, 2007

உதவும் கைகளும், கால்களும்

- செல்லமுத்து குப்புசாமி

பிறப்பதற்கும், செத்துப் போவதற்கும் இயையே மனிதனுக்கு எத்தனை போராட்டங்கள், இலக்குகள், தோல்விகள், தற்காலிகமானதும், நிரந்தரமனாதுமான சந்தோஷங்கள்? இவற்றுக்கு மத்தியில் மற்றவர்களைப் பற்றி சிந்திப்பதற்கும், நேரம் ஒதுக்குவதற்கும் நம்மைப் போன்ற சாதாரண நடுத்தர வர்க்கத்தினரால் முடிவதில்லை.

பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் போடுவது, கோவில் உண்டியலில் பணம் போடுவது, திருப்பதியில் கால் கடுக்க வரிசையில் நின்று மொட்டை போடுவது என எதையாவது செய்து பாவங்களைப் போக்கவும், நிம்மதியை நாடவும் முயற்சிக்கிறோம். ஆனாலும், உலகம் survival of the fittest என்ற டார்வின் நியதின் அடிப்படையிலேயே இயங்குகிறது. அவனவனுக்கு வேண்டியதை அவனவன்தான் செய்துகொள்ள வேண்டும்; யாரும் யாரையும் தூக்கி விடுவது இயற்கைக்குப் புறம்பானது என்பது எழுதப்படாத விதியாகவே இருந்து வந்திருக்கிறது.

உதவுவதற்கான மனம் இருந்தாலும் பல பேருக்கு சூழ்நிலை அனுமதிப்பதில்லை. சுருக்கமாகச் சொன்னால்.. "காசு பணம் வேண்டுமானால் தரலாம். ஆனால், நம்முடைய நேரத்தை ஒதுக்கி சமூக சேவையில் ஈடுபட முடியாது" என்ற நிலைமை. இருந்தாலும், காசு கொடுத்தால் சரியாக, நேர்மையாகக் கையாண்டு வேலை செய்வார்களா என்ற சந்தேகம் தவிர்க்க இயலாதது. சேவையை மட்டுமே மனதில் கொண்டு தம்முடைய வாழ்க்கையையின் முன்னேற்றத்தைக் காட்டிலும் பிறருக்காக நேரம் செலவிடும் மனிதர்களால் நடத்தப்படும் அமைப்புகளைப் பற்றிய செய்தி நம்மை வந்தடையாமலே நின்றுவிடுகிறது. ஒரு வேளை அவை தெரிய வந்தால் நமது பணமும், அவர்களது நேரமும் ஒன்றாகச் சேர்ந்து சமுதாயத்திற்கு உதவட்டும் என நினைப்போம்.

அப்படிப்பட்ட அர்ப்பணிப்பு உணர்வுள்ள இரண்டு மனிதர்களைப் பற்றிய அறிமுகமே இந்தப் பதிவு.

முதலாமவர் தமிழர். இவரது பெயர் சிதம்பரநாதன். இளம்பிள்ளை வாதத்தில் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் சுழல்கிற மனிதர்.
இவர் கடந்து வந்த பாதை சாதாரணமானதல்ல. தமிழ்நாடு ஊனமுற்றோர் மறுவாழ்வுக்கான அமைப்பு ஒன்றை 'Tamil Nadu Handicapped Federation Charitable Trust' என்ற பெயரில் நிறுவி அதன் தலைவராக இருந்து வருகிறார். வறுமையில் வாடும் ஊனமுற்றோருக்கு வேண்டிய சக்கர நாற்காலி, தையல் இயந்திரம் முதலிய உதவிகளை இந்த அமைப்பு செய்துவருகிறது. மேலதிக விவரங்களுக்கு கீழுள்ள சுட்டியைக் காணுங்கள்.


http://www.tnhfctrust.in/home.htm
http://www.chennaionline.com/health/hopeislife/08life10.asp

மிகுந்த தன்னம்பிக்கை அளிக்கிறது இவரது கதை. ஊனம் என்பது தடையல்ல என்பதை உணர முடிவதோடு ஒரு தனி மனிதனால் இவ்வளவு செய்ய முடியுமா என்றும் மலைப்பு உண்டாகிறது.

இந்த அமைப்பு செய்து வரும் பணிகளை நேரில் பார்வையிடவோ அல்லது தொலைபேசி மூலம் கேட்டுத் தெரிந்து கொள்ளவோ விரும்பினால் கீழ்க்கண்ட முகவரியை அணுகலாம்.

TAMILNADU HANDICAPPED FEDERATION CHARITABLE TRUST
NO.21 AA,
Earikarai Salai,
Kottur,Chennai - 600 085.
Tamilnadu, India
Ph : + 91 44 - 32927664
Fax : + 91 44 – 24405584

உங்களுடை நேரத்தையோ அல்லது பணத்தையோ இவர்களுக்காக சற்று ஒதுக்க முடியுமென்றால் மகிழ்ச்சி.

****
இரண்டாமவர் பெங்காளி. பெயர் பார்த்தா பாக்சி (Partha Bagchi) 24 வயது வரை திக்குவாய் பிரச்சினையால் பெருத்த அவமானத்திற்கு ஆளாகி, அதன் பிறகு தானாகவே பயிற்சி எடுத்து அந்தச் சிக்கலில் இருந்து விடுபட்டவர். "Stammering is not a disease, it is a habit, bad habit indeed" என்று தனது சொந்த அனுபவத்தில் கூறுகிற இந்த மனிதர் தனக்கு உதவிய டெக்னிக் எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டி பிற திக்குவாயர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்.


இது குறையே கிடையாது. சராசரி மனிதனின் மூளையை விட வேகமாகச் சிந்திக்கும் மூளை சிலருக்கு அமைந்து விடுவதுண்டு. காட்டாறு போன்ற அந்த எண்ணத்தை வேகமாகக் கொட்டி விரைவாகப் பேசி முடிக்க நினைக்கிறவர்களுக்கு சிந்தனை-பேச்சு இரண்டும் வெவ்வேறு வேகத்தில் அமைந்து பேச்சில் தடுமாற்றத்தைத் தருகிறது என்கிறார். இது மருந்து மாத்திரைகளால் குணப்படுத்துவதற்கு வியாதியல்ல. மாறாக, மனவியல் சார்ந்த பிரச்சினை என்கிறார். இரண்டு வாரம் பெங்களூரில் தங்கி இவரது வகுப்புகளில் பங்கெடுத்தால் நிச்சயமான முன்னேற்றம் ஏற்படும். அதற்கு மேலும் சுயமாக பயிற்சி தொடர வேண்டும். After all, old habits die hard.

மேலதிக விவரங்களுக்கு.

http://www.stammeringcurecentre.com/

**
இந்த இரண்டு மனிதர்களையும் காணும் போது ஒன்று நமக்குப் புரிகிறது. குறைபாடு என்ற ஒற்றைக் காரணத்தினால் துவண்டு போகாமல், தமது சொந்த வாழ்க்கையைச் செம்மையாக அமைத்துக்கொண்டதோடு நின்று விடாமல், மற்றவர்களுக்கும் வழி காட்டுகின்றனர். இரண்டு பேருக்குமே ஆதரவான வாழ்க்கைத் துணை கிடைத்ததுதான் அவர்களுக்கு பெரும் ஊக்க சக்தியாக இருந்து இயக்குவிக்கிறது என நான் கருதுகிறேன். தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் இல்லாமல் கிடைக்கக் கூடிய நிபந்தனையற்ற அன்புக்கும், ஆதரவுக்கும், காதலுக்கும் அத்தகைய மகத்தான சக்தி இருக்கிறது. அந்த வகையில், உடல் ரீதியாக குறைபாடு இல்லாத எத்தனையோ பேர் மனதளவில் ஊனப்பட்டுக் கிடக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

***
இந்தப் பதிவினைக் காண நேரிடுகிறவர்களுக்கு சில வேண்டுகோள்கள்.

1. உதவ மனமும், பணமும் உள்ளவர்கள் திரு. சிதம்பரநாதன் அவர்கள் நடத்தும் அமைப்பைத் தொடர்பு கொள்ளவும். அல்லது அது பற்றிய தகவலை பிறருக்குத் தெரியப்படுத்தவும்.
2. உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது பதட்டமாக தடுமாறிப் பேசினால் அவர்களிடம் Stammering Cure center குறித்து பக்குவமாகத் தெரியப்படுத்துங்கள். இந்தியா முழுவதும் இரண்டு கோடி திக்குவாயர்கள் உள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
3. இனிமேல் சினிமாவில் ஊனமுற்றவர்கள், அரவாணிகள், திக்குவாயர்கள், சொட்டைத் தலையர்கள் பற்றிய ஜோக் எதாவது வந்தால், குறைந்த பட்சம் ஒரு தடவையாவது சிரிக்காமல் இருக்க முயன்று பாருங்கள்.
***
திருடர்களும், பிச்சைக்காரர்களும், ஜோசியக்காரர்களும் இல்லாத சமுதாயத்தை அமைப்பது மட்டும் நமது கடமையல்ல. சுய பச்சாதாபம் என்பது வேதனை கலந்த போதை. அதிலிருந்து சில பேரையாவது மீட்டெடுப்பதும் நமது கடமைதான்.

Wednesday, August 01, 2007

நிராகரித்தவளின் வலி

- செல்லமுத்து குப்புசாமி

இவ்வளவு பெரிய அதிர்ச்சி காத்திருக்கும் என நான் நினைக்கவே இல்லை. ரஞ்சித் அபார அழகு இல்லையென்பது ஏற்கனவே தெரிந்ததுதான். ஆனாலும், நேரில் அந்த எதிர்பார்ப்பும் பொய்த்துப் போனதே!

நல்ல வேளை. அவர்கள் வீட்டிலிருந்து வந்து என் வீட்டில் பார்ப்பதற்கு முன்பே சந்திக்கலாம் என்று சொன்னதற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். இல்லையென்றால் இவ்வளவு பெரிய அதிர்ச்சியை அத்தனை பேர் முன்னிலையிலும் எதிர்கொண்டுக்க நேர்ந்திருக்கும்.

மாரத்தஹல்லி Innovative மல்டிபிளக்ஸ் முன் ஒன்பதரைக்கு வருவதாக எங்களுக்குள் தீர்மானமாகியிருந்தது. நான் சிகப்பு வண்ண சுடிதாரோடு அங்கு சென்று சேர்ந்த போது 9:35. அவர் பரிதவிப்புடன் கிழக்கிலும், மேற்கிலும் மாறிமாறி பார்த்து நின்று கொண்டிருந்தார். நிச்சயமாக ஒரு இருபது நிமிடமாவது முன் கூடியே வந்திருப்பார். ஹெல்மெட் கலைத்த முடியை நான்கைந்து தரமாவது சீவியிருப்பார். பாத்திரம் தேய்ப்பதைப் போல கைக்குட்டையை வைத்து எத்தனை தடவை முகத்தைத் தேய்த்திருப்பார் என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை.

வெள்ளை மேலாடையில் அவரது கருப்புத் தோல் எடுப்பாகத் தெரிந்தது. பாதி சிகப்பாகவும், மீது வெள்ளையாகவும் கழுத்தை இறுகக் கவ்விய ரவுண்ட் நெக் டி-ஷர்ட், கறுப்பு ஜீன்ஸ், அதற்கு அறவே சம்பந்தம் இல்லாத ஃபார்மல் ஷூ, ஆக மொத்தத்தில் பட்டிகாட்டானுக்கு அலங்காரம் செய்யும் பரிதாப முயற்சியைப் பாதியில் விட்டது போலத் தோன்றியது. ஃபாரின் ரிட்டர்ன் என்று சொன்னால் நம்புவது கடினமாகத்தான் இருக்கும்.

ரஞ்சித் முகத்தில் இன்னும் இருள் அண்டியிருந்தது. இரவு பதினொன்றரைக்கு ஏறி காலை ஐந்துக்கு வந்து சேரும் இரயில் பயணத்தில் எவ்வளவு தூங்கினார் என்று தெரியவில்லை. இந்தக் காலைப் பொழுதை உறங்கச் செல்லும் மாலைப் பொழுதாகவல்லவா டொரான்டோவிற்குப் பழகிய அவரது உடல் நினைத்துக் கொண்டிருக்கும். இருபது மணி நேரத்தில் இத்தனை மாற்றத்தை உள்வாங்கிச் செரிக்கும் வலிமை மனித உடலுக்கு நிச்சயமாக இருக்காது. இருக்கட்டுமே! நேற்று நன்றாகத் தூங்கி எழுந்து வருமாறு நான் சொல்லியிருந்தேனே, செய்யாமல் போனால் அதற்கு நானா பொறுப்பு?

இன்னும் காலையில் சாபிட்டிருக்க மாட்டார். நான்தானே சொன்னேன், நண்பர் வீட்டில் பிரேக் ஃபாஸ்ட் முடிக்க வேண்டாம், நாம் சேர்ந்து சாப்பிடுவோம் என்று. நானும் தான் ஒன்றும் சாப்பிடவில்லை. ஆனால், எனக்கென்னவோ இப்போது வந்த பசியெல்லாம் காணாமல் போய் விட்டது.

"கண்டிப்பா சாப்பிடணுமா? எனக்குப் பசிக்கலை. உங்களுக்குப் பசிக்குதா?"

இப்படி ஒரு கேள்விக்கு, "ஆமாம் பசிக்குது" என்று பதில் சொல்லும் துணிச்சல் உள்ள ஆண்கள் குறைவு.

"பரவாயில்லை. அப்புறம் சாப்பிடுக்கலாம்" என்றார் ரஞ்சித்.

போனில் மணிக்கணக்காக எத்தனை பேசியிருப்போம்? நேரில் கோர்வையாக நான்கு வார்த்தை பேச முடியவில்லை. அதற்கு எங்களிடம் வெவ்வேறு காரணங்கள் இருந்தன. எனக்குள் உருவாகியிருந்த அதிர்ச்சி அவருக்குத் தெரிந்திருக்காது. அவரைப் போலவே பரவசத்தில் முட்டி நிற்கிறேன் என என்னைப் பற்றி அவர் தவறாக நினைத்திருக்கலாம்.

"எங்கேயாவது போய் உக்காந்து பேசலாமா?" முதல் அடியை நானே எடுத்து வைத்தேன்.

"அவுட்டர் ரிங் ரோடில் நெறைய மரங்கள் இருக்குது. அப்படியே போய் வண்டியை நிறுத்திட்டு பேசிட்டு இருக்கலாமா?"

எனக்கு அதில் உடன்பாடு இல்லை. ஒரு பார்க் பெயரைச் சொன்னேன். அவருக்கு அது அறிமுகமாகியிருக்கவில்லை. நான் வசிக்கும் பகுதியில் அமைந்திருந்தது. பேசி முடித்தவுடன் சடக்கென்று வீட்டுக்குச் செல்ல அது உகந்த இடமாக எனக்குப் பட்டது.

புறப்படத் தயாரானோம். ஒரு பக்கமாக கால் போட்டு, எடுத்து வந்திருந்த கைப்பையை இருவருக்கும் இடையில் வைத்து என உடலின் எந்தவொரு பாகமும் அவர் மீது படாமல் இருக்குமாறு கவனித்துக் கொண்டேன். 40 கிலோ மீட்டருக்கு மேலே போன போது அந்த பைக் உறுமிய விதம் மிக விநோதமாக இருந்தது. ஸ்பீடு அட்ஜஸ்ட் செய்த மெக்கானிக்கும் சரி, இந்த பைக்கை வைத்திருக்கும் இவரது நண்பரும் சரி..ரொமான்ஸ¤க்கு பரம எதிரிகளாக இருக்க வேண்டும்.

பல காலமாக பெட்ரோலே போடாமல் ரிசர்வில் உயிர் வாழ்ந்து வந்த இந்த யாமாஹா-135 எரிபொருள் டேங்கை நிரப்பிக் கொண்டு, நான் சொன்ன பார்க்கை அடைய இருபது நிமிடம் ஆனது. பாவம்! உரெல்லாம் சுற்றலாம் என நினைத்து முக்கால் டேங்கை நிறைத்தார் ரஞ்சித்.

பூங்காவின் நுழைவாயில் பின்புறமாக அமைந்திருந்தது. கூட்டமே இல்லை. சொல்லப்போனால் உள்ளே யாருமே கிடையாது. முதலின் தென்பட்ட பெஞ்சில் நான் சென்றமர்ந்தேன். அவர் வண்டியை நிறுத்தி, பூட்டி, ஹெல்மெட்டால் கலைந்த கேசத்தை சீவி அழகுபடுத்திக் கொண்டிருந்தார். எனக்குள் வேதனை கலந்த சிரிப்பு தோன்றி மறைந்தது.

என்னருகில் வந்து அமர்ந்த போதே அவர் டி-ஷர்ட்டில் ஒட்டியிருந்த கட்டெறும்பைச் சுட்டிக் காட்டி தட்டி விட்டேன். துணியைத் தாண்டி சருமம் தொடாமல் தட்டி விடும் இலாவகம் எனக்கு எப்படி இவ்வளவு இயல்பாக வருகிறது?

"ம்.. அப்பறம்" என்றார்.

"எனக்கு எப்படி சொல்றதுனே தெரியலை"

இப்படித்தான் அன்றும் கூறினேன்.

"எனக்கு எப்படி சொல்றதுனே தெரியலை" என்ற பிறகு நீண்ட மெளனம் விட்டு எதிர்முனையில் கிடைத்த பதில் மெளனமே அங்கீரமாக வைத்து என் காதலை வெள்ப்படுத்தினேன்.

ஆண்டவா! அந்த கணத்தில் தோன்றி மறைந்த படபடப்பை முழுமையாக விவரிக்க என் மொழியின் வன்மை போதாது.

எங்கிருந்து வந்தது எனக்குள் காதல்?

எத்தனை ஆச்சரியங்கள் தந்தாய் நண்பா? உன் மீதான மதிப்பும், வியப்பும் அவற்றின் எல்லைப் பரப்பை தினந்தோறும் அகலமாக்கினவே, அதனாலா? பெண்ணைப் புரிந்து கொள்ளும் பக்குவமுள்ள ஆண் என்று நான் உன்னை மெது மெதுவாகப் புரிய ஆரம்பித்தேனே, அப்போதா? பெண்ணியம், சமூகம், இறை நம்பிக்கை, பொருளாதாரம், சமூகம், அரசியல் குறித்தான உன் நிலைப்படுகள் என்னை ஒத்ததாக இருந்ததாலா? 'பார்க்க ஆசைப்படுவது ஈஃப்ள் கோபுரமா, எகிப்து பிரமிடா?' என நீ கேட்ட போது 'இலங்கை' என நான் சொன்ன பதிலில் உனக்கு உண்டான ஆச்சரியத்தை நான் ரசித்ததாலா? என்னுள் செறிந்திருக்கும் இலங்கைத் தீவு கல்கி பொன்னியின் செல்வனில் சித்தரித்த வனப்பை உள்ளடக்கியது. உனது காரணம் ஈழமும், அதன் சோகமும் கலந்தது. ஆனாலும், நீ பார்க்க விரும்பிய இடமும் அதுதானே!

ஒரு ஆடவன் மீது பெண்ணுக்கு எப்போது காதல் வருகிறது என்பது உறுதியாக வரையறுக்க முடியாத ஒன்று. ஆணுக்கு பெண் மீது ஈர்ப்பே முதலில் வருகிறது. மற்றதெல்லாம் பிற்பாடு. ஆனால், பெண்ணுக்கு அப்படியல்ல. ஆணைப் பற்றிய திடீர் அல்லது படிப்படியான ஆச்சரியம் நம்மையும் அறியாமல் காதலை விதைத்து வளர்க்கிறது. எப்போது ஒருவனைப் பற்றிய சிந்தனை இடைவிடாமல் ஆக்கிரமிக்கிறதோ, எப்போது அந்தச் சிந்தனையை உடைபடாமல் மேலும் பெருகும் வகையில் சூழ்நிலை அமைகிறதோ அப்போதே பெண்ணின் காதல் வெளிப்படுத்துகிற அளவு அடுத்த நிலைக்கு வந்து விடுகிறது.

எனக்கு அப்ப எப்படி சொல்றதுனே தெரியலை. இப்பவும் அப்படித்தான் எப்படி சொல்றதுனே தெரியலை.

உனக்குத்தான் எத்தனை தயக்கங்கள் இருந்தன? நானல்லவா அவற்றைத் தகர்த்து உன்னை மீட்டெடுத்துக் கொண்டு வந்தேன்! இப்போது நானே, அடக் கடவுளே, எப்படிச் சொல்வேன்?

"இந்தக் காலத்துல பொண்ணுங்களோட எதிர்பார்ப்பு விலைவாசியை விட வேகமாக வளருது. போன தலைமுறை மாதிரி வீட்டிலேயே முடங்கிக் கிடக்கறது கிடையாது. வெளியே போறாங்க. வேலை செய்யறாங்க. பல பேரோட பழகற சந்தர்ப்பம் கிடைக்குது. அப்பா மாதிரியே நல்ல வீட்டுக்காரன் கிடைக்கணும்ங்கற நிலைமை இன்னும் அகலமாகுது. அதுவும் உன்னை மாதிரி பெங்களூர்ல உள்ள பொண்ணுங்களைப் பத்தி சொல்லவே வேண்டாம். அவங்க தினசரி சந்திக்கிற ஆண்கள் பல எதிர்பார்ப்புகளை கூட்டிக்கிட்டே இருக்காங்க. சராசரி பொண்ணுங்களுக்கே இவ்வளவு எதிர்பார்புன்னா உன்னை மாதிரி அழகானவங்களைப் பத்தி சொல்லவே வேண்டாம். நிச்சயமா என் நெறமும், தோற்றமும் அதையெல்லாம் ஈடு செய்யாது. நம்ம ஊர்ல நடக்கற சாதாரணமான ஆள் மாதிரியே இருப்பேன்."

இன்னும் எவ்வளவு வியாக்கியானங்கள் சொன்னாய்? என்னை நீ விளித்த 'நீங்கள்', 'நீ' ஆக மாற எத்தனை காலம் ஆனது?

"அதெல்லாம் பிரச்சினையே இல்லை. மொழி படத்துல வர்ற மாதிரி எனக்கு மணி அடிச்சு பல்பு எரிஞ்சிருச்சு. இனிமேல் வேற ஒன்னுக்கும் வேலை கிடையாது. எப்படி இருந்தாலும் மாத்த முடியாது" நானல்லவா உறுதி கொடுத்தேன்? இப்போது நானே எப்படி சொல்வேன், உன்னில் ஊற்றி வளர்த்த காதலுக்குப் பிறகு?

இயந்திரமாக ஓடித் திரிந்த உன்னை தனியே சிரிக்கச் செய்தேனே! கால் நூற்றாண்டாக நீ சேர்த்து வைத்த காதலும், ஆசையும் எனக்காகக் காத்திருக்கின்றன என்றாயே? இன்று நானே அதை எப்படி மறுதலிப்பேன்?

"என்னை அட்ஜஸ்ட் பண்ணிப்பியா?" என்றாய் நீ.

"அட்ஜஸ்ட் பண்றதை விட அன்டர்ஸ்டாண்ட் பண்ணினாத்தான் வாழ்க்கை நல்லா இருக்கும். நான் உங்களை அன்டர்ஸ்டாண்ட் பண்ணி வெச்சுப்பேன்" என்றேன் நான்.

"கல்யாணத்துக்கு அப்பறம் உங்க அப்பா, அம்மாவை பொருளாதார ரீதியா சப்போர்ட் பண்ணனுமா?" நீ கொடுத்த ஆச்சரியங்கள் தொடரந்த வண்ணமே இருந்தன.

"அப்படி செய்யற நெலமை வந்தா உங்களுக்கு அப்ஜெக்ஷன் உண்டா?"

இதற்கான உன் பதில் எனக்குத் தெரிந்திருந்தது.

உனக்குள் தூங்கிக் கொண்டிருந்த கவிஞனைத் தட்டி எழுப்பினேன்.
இன்றைக்கு அந்தக் கவிஞனை மட்டுமல்ல, காதலனையும் அழிக்க நினைத்து வைத்து விட்டாயே?

"எனக்கு எப்படி சொல்றதுனே தெரியலை. ரொம்ப குழப்பமா இருக்கு. கொஞ்சம் அவசரப் பட்டுட்டேனான்னு சந்தேகமா இருக்கு" கட்டெறும்பைத் தட்டி விட்டு மறுபக்கம் திரும்பி நான் சொன்ன வார்த்தைகள்.

ரஞ்சித் அன்று சொன்னது சரியென்று இப்போது நினைக்கிறேன். அவர் அனுப்பி வைத்த பொட்டோவைப் பார்த்தும் கூட, அவர் கருப்பு என்பது தெரிந்திருந்தும் கூட, மணியடித்து பல்ப் எல்லாம் எரிந்தும் கூட, என்னுள் சேகரித்து வைத்திருக்கும் ஆசைகள் அவற்றையெல்லாம் இப்போது வென்று விடும் போலத் தோன்றுதே!

கொஞ்சம் நிதானமாக இருந்திருக்கலாம். நேரில் ஒரு முறை சந்தித்த பிறகு வீட்டில் சொல்லி சம்மதம் வாங்கியிருக்கலாம். இப்போது அப்பா, அம்மாவிடம் என்னவென்று சொல்வேன். எனக்கே இவ்வளவு குழப்பம் என்றால், ஐயகோ அவர்கள் இவரைக் கண்டால் என்ன நினைப்பார்கள்? அக்காவுக்கு மட்டும் அழகான கணவர்!

எதிர்பாராத ஆச்சரியங்களே விசித்திரமான முடிவுகளுக்கு இட்டுச் செல்கின்றன. காதலிக்கச் சொல்லுவதும், அதே காதலை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி கேள்வி கெட்பதும் எதிர்பாராமல் நடக்கும் சம்பங்களும், அவற்றைப் பற்றிய நமது மதிப்பீடுகளுமே. இருப்பதிலேயே நல்ல போட்டோவை அனுப்புவதுதான் மனித இயல்பு என எனக்குத் தெரியும். ஆனால், அதையும் மீறி நான் கற்பனை செய்து வைத்தேன். நாள் தோறும் பேசினோம். ஒவ்வொரு சொல்லுக்கும் உருவம் கொடுத்து அவர் பேசுவதாக கற்பனை செய்தேனே. ஆளற்ற கடற்கரையில் கை உங்களோடு கோர்த்தபடி நடப்பதைப் போல, நாள் தோறும் எத்தனை கனவுகள் கண்டிருப்பேன். I miss you பரிமாறினோமே தவிர I kiss you. சொல்லிக் கொண்டதில்லை. எவ்வளவு நெகிழ்ச்சியாக இருந்தது நேற்று வரைக்கும்? யெளவனம் என்னைச் சுற்றி கூடாரம் அமைத்திருந்ததே!

ஆனால், இதே முகத்தைக் காலம் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பைச் செரிக்கும் சக்தி இப்போதைக்கு எனக்குக் கிடையாது. ஒளியிழந்த இந்தக் கண்களிலா என் கனவுகளைப் புதைக்கப் போகிறேன்? சுருங்கிய இந்தக் கன்னத்தையா நான் காலம் முழுவதும் தடவிக் கொண்டிருக்க வேண்டும்? கறுத்த இந்த உதடுகளா என்னை முத்தமிடப் போகின்றன? நினைத்தாலே சகிக்க முடியவில்லையே! ஐயோ, குரங்கு கையில் கொடுத்த பூமாலையாக அல்லவா என் வாழ்க்கை ஆகப் போகிறது!

"எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க. என்னால இப்ப ஒன்னும் சொல்ல முடியல" என்றேன்.

பல ஆயிரம் ரூபாய்கள், சில மணி நேரத் தூக்கம், இரண்டு பாட்டில் ஒயின், அளவில்லாத ஆசைகள் செலவழித்து வந்திருக்கிறார். How can he afford to miss me? என் மண்டை குடைந்தது. முகத்தில் அடித்த மாதிரி எப்படிச் சொல்வது?

"ஒன்னும் பிரச்சினை இல்லை. யோசிச்சுச் சொல்லுங்க. என்னோட கட்டாயத்தின் பேர்ல எந்த முடிவும் எடுக்க வேண்டாம்" இந்த ஆண்களுக்கு தாங்கள் பெருந்தன்மையாக இருப்பதைப் போல நடிப்பதில் அப்படி என்னதான் கெளரவமோ! தோல்வியை ஒப்புக் கொள்வதில் இவர்களுக்கு பெரிய பிரச்சினை.

உள்ளுக்குள் எவ்வளவு நொறுங்கியிருப்பார் என்பது எனக்குத் தெரியும். நிராகரிப்பின் வலி அங்கீகாரத்தின் சுகத்தை விடப் பன்மடங்கு பெரியது. தூக்கமின்மையிலும், பயணக் களைப்பிலும் ஏற்கனவே பொலிவின்றி வாடியிருந்த அந்த முகத்தில் இப்போது நிரந்த இருள் குடி வந்திருக்கிறது. ஆண்களுக்கு உணர்ச்சியை மறைத்து நடிக்கும் கலை அவ்வளவு இலகுவாக கை வருவதில்லை. 'சொல்லு' என்று சொல்ல வேண்டிய இடத்தில் தன்னையும் அறியாமல் 'சொல்லுங்க' என்றார் அவர்.

எத்தனை பேரிடம் ஏற்கனவே பிரகடனப்படுத்தியிருப்பார்? அவர்களிடம் போய் "நான் தோற்று விட்டேன்" என்று வலியச் சொல்லாவிட்டாலும், அவர்களின் தவிர்க்க இயலாத கேள்விகளுக்கு பதில் கூறுவதில் அவமானமும், அறுவறுப்பும் எவ்வளவு செறிந்திருக்கும்?

இதையெல்லாம் கோமதி கேட்டால் என்ன நினைப்பாள்? என் செய்கையை நினைத்து திட்டுவாளா அல்லது செய்ததே சரியென்று அங்கீகரிப்பாளா? என்ன ஆயினும் என் ஆருயிர்த் தோழி அவள். சரியான தீர்வு காணுவதில் அவளிடம் ஆலோசனை பெற்றாக வேண்டும்.

எங்கள் இருவர் மீது அவளுக்கு அளவற்ற அக்கறை இருந்தது. ரஞ்சித்துக்கு அவள் பரிசு வாங்கி என் மூலமாக அனுப்பியிருந்தாள். பதிலுக்கு அவர் கனடாவில் இருந்து ஸ்பெஷல் சாக்லேட் வாங்கி வர வேண்டும் என்பது கணக்கு. அவற்றை பரிமாறிக் கொள்வதில் பிரச்சினை இருக்கவில்லை. என் தோழிக்கும், இவருக்குமான அறிமுகம் எதிர்பார்ப்புகள் அற்றது. ஆனால், நானும் அவரும் அப்படியா?

அவருக்காக நான் தேர்ந்தெடுத்து வாங்கிய wallet அழகாக பேக் செய்யப்பட்டு கைப் பைக்குள் உறுத்துகிறது. அது போக பெங்களூரில் இருந்து அவர் பொள்ளளச்சி செல்வதற்க்கு KPN இல் டிக்கெட் வாங்கி வைத்திருக்கிறேன். அவற்றைக் கொடுத்த போது வாங்கிக் கொண்டார். அவர் எனக்காக வாங்கிக் கொண்டு வந்திருக்கும் Ipod சாதனத்தை நான் உறுதியாக மறுத்து விட்டேன். எனக்காகவே வாங்கி அதன் மீது எனக்காகவே அருமையாக வர்ணனை எழுதி அவர் கொண்டு வந்த புத்தகத்தை அவரே கொடுக்க்கவில்லை.

காதல் என்பது சுதந்திரத்தைப் போலவே கேட்டுப் பெறும் பிச்சையாக இல்லாமல் புரிந்துணர்வுடன் கூடிய இரு தரப்பு உறவாக இருக்க வேண்டும் என்பதில் அவருக்கு நிலையான நம்பிக்கை இருக்கும். அந்த நூலின் முதல் பக்கத்தில் எழுதிய வாசகங்களை நான் வாசித்தால் கால் நூற்றாண்டாக அவர் சேமித்து வைத்திருந்த காதல் கிடங்கில் இருந்து சுரக்கும் ஊற்று அதை நிறைத்திருப்பதை நான் அறியக் கூடும். அதே சமயம், யோசித்துச் சொல்வதாக நான் தெரிவித்த பிறகும் அவற்றை ஒப்படைப்பது தன் அந்தப் புறத்தைக் கைப்பற்றி பட்டத்து இராணியைக் கவர்ந்து சென்ற எதிரி நாட்டு மன்னன் முன் மண்டியிட்டு அவனை வாழ்த்திப் பாடுவதாக ஆகி விடும்.

"அதெல்லாம் பரவாயில்லை. உங்களுக்கு குற்ற உணர்ச்சியே வேண்டாம்" என்று சில முறை சமாதானம் கூறினார்.

அதன் பிறகு வேறு எங்கோ நோக்கியவறாக, "பிரேமா. எதையோ யாரோ புடுங்கிக்கிட்டு போற மாதிரி வெறுமையா இருக்கு. உண்மையைச் சொல்லு. நான் அவ்வளவு அசிங்கமாவா இருக்கேன்?" என்றார்.

என் இடத்தில் நீங்கள் இருந்திருக்க வேண்டும். பல இலட்சம் ரசாயன வெடி குண்டுகள் ஒரு சேர வெடித்து இதயத்தை பொடிப்பொடியாக நொறுக்கியதை அனுபவித்திருப்பீர்கள். இதை விடக் கடுமையாக என்னை யாராலும் தண்டிக்க முடியாது. ஆனாலும், சில நிமிடங்களில் அதையும் பொய்ப்பித்தார், இன்னொரு தண்டனையோடு.

"பிரேமா, யோசிச்சு சொல்லு. ஒன்னும் பிரச்சினை இல்லை. காதல் அப்படீங்கற விசயம் கட்டாயத்தினால வர வைக்கக் கூடியதே கிடையாது. அதைச் செய்யவும் எனக்கு விருப்பம் இல்லை. அதே நேரம் நான் எந்த அளவுக்கு உன்னை நேசிக்கிறேங்கறதையும் சொல்லாம விட்டா நான் கடமை தவறினவனா ஆகிருவேன். வேற யாரைவாயது நீ கல்யாணம் செய்து எதாவது மன வருத்தம் காரணமா கஸ்டப்பட்டா, அப்போ நான் சரியா எடுத்துச் சொல்லாத காரணத்துனாலதான் உனக்கு இப்படி ஆச்சுங்கற குற்ற உணர்ச்சி என்னைச் சும்மா விடாது. அதே மாதிரி, நீ என் கூடவே சேர்ந்தாலும் கூட என் முகம் உனக்கு உறுத்திக் கிட்டே இருந்து அதை சரிக்கட்ட சினிமா நடிகன் எவனையாது நெனைச்சு குடும்ப நடத்தினாலும் நல்லா இருக்காது. இந்த இரண்டு விசயத்தையும் நான் வெளக்கமா உங்கிட்ட சொல்ல நினைக்கிறேன். ஆனா, முடியல. நீயே யோசிச்சு முடிவு பண்ணு."

நான் வேறு பக்கம் திரும்பிக் கொண்டேன். எங்கே அவரைப் பார்த்தால் அழுது விடுவேனோ என்று பயமாக இருந்தது.

மூன்றாவதாகவும், நான்காவதாகவும் இரு தண்டனைகளை வைத்திருந்தார்.

"நாலு நாள் பாத்தா மூஞ்சி பழகிரும் பிரேமா" - இப்படி அவர் சொன்னதைப் பார்த்திருந்தால் உங்களுக்கு போர்க்களத்தில் நிராயுதபாணியாக உயிர்ப்பிச்சை கேட்டு மன்றாடுபவனைப் போல பரிதாபமாக இருந்திருக்கும். ஆனால், எனக்கு இது அடுத்த தண்டனை

"தயவு செஞ்சு என் மேல வெச்சிருக்கிற நன்மதிப்பையோ இல்லாட்டி பரிதாபத்தையோ காதல்னு தப்பா புரிங்சுக்காதே. உன்னோட நீண்ட கால சந்தோசத்துக்கு எது சரின்னு நெனைக்கறியோ அதைச் செய்" - இது கடைசித் தண்டனை. அது எனக்குப் போதுமயிருந்தது.

எனக்கு இந்த இடத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும் போல இருந்தது. லஞ்ச் சாப்பிட்டு விட்டுப் போகலாம் என யோசனை கூறினார். மறுக்க மனமில்லை. பாவமில்லையா? ஆனாலும், இதற்கு மேல் என்னால் தாங்க முடியும் எனவும் தோன்றவில்லை. உணவு உள்ளே இறங்காது.

"என்னை வீட்டில் இறக்கி விடுங்கள் போதும்" என்றேன். விட்டார். தெரு முனையைக் கடந்து அவர் செல்லும் வரை காத்திருந்து விட்டு உள்ளே போனேன்.

அதெல்லாம் இருக்கட்டும். நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? நான் எதாவது முடிவு சொல்வேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்களள? போங்க போய் வேலையைப் பாருங்கள். காலம் யாருக்காகவும், எவருக்காகவும் காத்திருப்பதில்லை.