Monday, August 20, 2007

உண்மை!

- செல்லமுத்து குப்புசாமி

மதியத் தூக்கம் எப்பவுமே சந்தோசமான விஷயந்தான் இல்லையா? அதிலையும் சனிக்கிழமை மதியம் மெஸ்ல போய் ஒரு கட்டு கட்டிட்டு வந்த பிறகு தூங்கலைன்னா அந்த வாரமே வேஸ்ட் அப்படீங்கற ·பீலிங் வந்துருதுங்க. அந்த மாதிரி வழக்கமாகத் தூங்கி சாயங்காலம் ஒரு ஆறு மணிக்கு எந்திருச்சு குளிச்சுட்டு பெசண்ட் நகர் சர்ச்சுக்கு ஒரு விசிட் கொடுத்துட்டு அப்படியே பீச்ல போய் காத்துவாங்க உக்காந்து சைட் அடிக்காட்டி பரபரப்பான இந்த சென்னை வாழ்க்கைல என்ன சுகம் இருக்குது சொல்லுங்க?

இந்த வாரம் என்ன பாவம் செஞ்சனோ தெரியலை ஆப்பு செல்போன் ரூபத்துல வந்து அஞ்சு மணிக்கே எழுப்பி விட்டது. ரவியண்ணன் சாதரணமா கால் பண்ண மாட்டார். அவரைத் தவிர வேறி யாராச்சுமா இருந்தா எடுத்திருக்கவே மாட்டேன்.

"அண்ணா.. சொல்லுங்கண்ணா"

"எங்கடா இருக்கே? வீட்லையா?

"ஆமாங்கண்ணா"

"சரி. அங்கையே இரு. வந்தர்றேன்"

அவர் வர எப்படியும் கால் மணி நேரம் ஆகும். அதுக்குள்ள எ·ப்.எம். ரேடியோவை ஆன் பண்ணி அலறவிட்டேன். குளிக்க தண்ணி போட்டு விடணும். எங்க பாத்ரூம்ல தண்ணி வராது. சில நேரம் வந்தாலும் அது கடல்ல இருந்து நேரடியா கனெக்ஷன் குடுத்த மாதிரி இருக்கும். ஒரு லிட்டர் புடிச்சா அன்னைக்கு சமையலுக்கு வேண்டிய உப்பெல்லாம் அதில இருந்தே எடுத்துக்கலாம். அதனால் கிச்சன்ல ஒரே ஒரு கொழாய்ல லேசா வர்ற தண்ணியை பாத்ரூமுக்கு டிரான்ஸ்பர் செய்யும் வித்தையை நான் கண்டுபிடிச்சு வெச்சிருந்தேன். அந்த குழாய்ல ஒரு ஹோஸ் டியூபை சொருகி அதோட மறு முனையை அப்படியே பாத்ரூம் பக்கெட்ல விழற மாதிரி வைக்கணும். எப்படியும் பக்கெட் நெறையறதுக்குள்ள எ·ப்.எம்.ல மூனு பாட்டு முடிஞ்சுரும். அது வரைக்கும் பால்கனில வந்து நின்னுக்கிட்டேன்.

யோசிச்சுப் பாக்கறேங்க. இந்நேரத்துக்கு எதுக்காக ரவிண்ணா இங்கே வரணும்னு. நான் இதுக்கு முன்னாடி வேலை செஞ்ச கம்பெனில அவரு எனக்கு டீம் லீடர். இன்னமும் அதே கம்பெனில இருக்கார். நாமெல்லாம் குரங்கிலிருந்து பிறந்தோம்ங்கறதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உண்டானதால நான் மட்டும் அங்கிருந்து தாவி இன்னொரு கம்பெனிக்கு வந்துட்டேன், அதுவும் கேவலம் மாசம் அஞ்சாயிர ரூபாய் கூடுதலா கெடைக்குதுங்கறதுக்காக.

நான் எதிர்பார்த்த மாதிரியே பக்கெட் நெறையறதுக்கு முந்தியே அவர் கார் வந்துருச்சு. அறிவு ஜீவி களை எப்பவும் போல ததும்பி வழிஞ்சாலும் வழக்கமா அவர் கிட்ட தென்படுற அந்த உற்சாகம் மிஸ்ஸிங். அண்ணனுக்கு முப்பதொரு வயசு. லேசான தொந்தி, அங்கங்கே வெள்ளை முடின்னு பாக்கறதுக்கு அஞ்சு வயசு கூடுதலாத் தெரியும். கல்யாணத்துக்கு அப்பறந்தான் இப்படி மாறிட்டார். அதுக்கு முன்னாடி செம ஸ்மார்ட். அஞ்சு வருசத்துக்கு முன்னாடி அஞ்சு வயசு கொறைவா தெரிஞ்ச ஆளுதான் அவரு. 26 ல 21 மாதிரி இருந்தவர் 31 ல 36 மாதிரி ஆகிட்டார்.

உள்ளே வந்தவுடனே கடலை மிட்டாய் பொட்டலத்தை நான் குடியிருக்கும் (சாப்பாடு, தூக்கம், வாசிப்பு, வசிப்புன்னு சகலமும் அதன் மீதுதான்) அந்தப் படுக்கையின் மீது தூக்கி வீசினார். அதுதான் எங்களது ·பேவரட் ஸ்நாக்ஸ். ஆறு மாதம் முந்தி அவருக்குக் குழந்தை பொறந்தப்பக் கூட எல்லோருக்கும் சாக்லட் கொடுத்தாலும் எனக்கு மட்டும் கடலை மிட்டாய் கொடுத்தார்னா பாத்துக்குங்க.

இவர் பார்க்கறதுக்கு ரொம்ப சாதாரணமா இருப்பார். சிகப்பா இருப்பார்னு
சொல்ல முடியாது. நடிகை பிரியா ராமன் வீட்டுக்காரர் நடிகர் ரஞ்சித் இருப்பார்ல, அந்த மாதிரி மேன்லியான லுக்னு சொல்லலாம். அவரோட ஒய்·ப் கொஞ்சம் அல்ட்ரா மாடர்ன்னு வெச்சுக்குங்க. இவர் கடலை மிட்டாய் சாப்பிடறதுலையே ஏகப்பட்ட அவங்களுக்குள்ள சண்டை வந்திருக்கு. எனக்கு ஏன் குடுக்கலைன்னு கேட்டு சண்டை போட்டாக்கூட பரவாயில்லைங்க. அந்தம்மா அஞ்சலி தேவி - ஆமாங்க அதான் ரவியண்னா ஒ·ய்ப் பேரு - கண்ட்ரி ·பெல்லோ மாதிரி இதெல்லாம் திங்காதீங்கன்னு திட்டுவாங்க. நானே சில சமயம் பாத்திருக்கேன்.

பக்கெட் நெறஞ்சு நான் போய் கொழாயை அடைச்சிட்டு வந்து அதுக்கு அப்பறம் ரேடியோல ரண்டு பாட்டு முடியற வரைக்கும் அமைதியாவே அண்ணா உக்காந்திருந்தாங்க.

"தம் இருக்கா கார்த்தி?"ன்னு அண்ணா கேட்டார். அவருக்கு தம் அடிக்கற பழக்கம் இல்லைன்னு எனக்குத் தெரியும். இன்னைக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை.

"இல்லைங்கண்ணா. குமார் ஊருக்குப் போய்ட்டான்" என்னோட ரூம்மேட் குமார் ரயில் வண்டியே வெச்சிருக்கான். அவன் இருந்தா ஒரு சிகரெட் எடுத்து இவருகிட்டக் குடுக்கலாம். அவனும் இல்லை. எனக்கு அது பெரிய பிரச்சினையா தெரியலை. தம் போடற அளவுக்கு ரவியண்னாவுக்கு என்ன சோகம்ங்கறதுதான் பிரச்சினை.

"அண்ணா, என்னுங்கண்ணா? டல்லா இருக்கீங்க?"

"வீட்ல சண்டை போட்டுட்டு வந்துட்டண்டா" அப்படீன்னு அண்ணா பதில் சொன்னாங்க. காலம் மாறுது போல. பொண்டாட்டிகிட்ட சண்டை போட்டுக்கிட்டு புருஷன் வீட்டை விட்டுக் கெளம்பற லெவலுக்கு சமுதாயம் மாறிட்டு வருது.

"சட்டை மாட்டிக்கிட்டு வா. அப்படியே நடந்து போய் டீயும், தம்மும் அடிச்சிட்டு வரலாம்" இப்படிக் கேட்டதும் சரின்னு சொல்லிட்டு சட்டையும், ஜட்டியும் (லுங்கி ஏற்கனவே இருக்கு) மாட்டிக்கிட்டு ரேடியோவை ஆ·ப் பண்ணி வீட்டைப் பூட்டிட்டு அண்ணாவோடு கெளம்பினேன்.

ரொம்ப நொந்து போயிருக்கார்னு தெளிவாப் புரிஞ்சது. அண்ணாவே பேசினால் ஒழிய நான் தேவையில்லாம ஒன்னும் கேக்கக் கூடாதுனு அமைதியா கூடவே நடந்து வந்தேன். வழக்கமா சாப்பிடற வாழக்காய் பஜ்ஜி இன்னைக்குச் சொல்லலை. ரண்டு டீ மட்டும் சொன்னேன். அண்ணா ஒரு வில்ஸ் எடுத்து பத்த வெச்சாங்க.

பொகையை உள்ள அப்படியே இழுத்து அனுபவிச்சு மெதுவா வெளிய விட்டாங்க. "உனக்கு வேற வேலை எதாவது இருக்காடா? என்னோட வண்டி இருக்கு. இப்படியே கெளம்பி மகாபலிபுரம், பாண்டிச்சேரின்னு போய் சுத்திட்டு நாளைக்கு ஈவினிங் வரலாம். என்ன சொல்றே?" ன்னு கேட்டாங்க.

ஒரு குடும்பத்தைக் கெடுத்த பாவம் பிரியமா வளத்த பூனை மாதிரி என் காலைச் சுத்திச் சுத்தி வருதுங்கறது மட்டும் எனக்கு தெளிவாப் புரிஞ்சுது. ஒரு முடிவோடதான் கெளம்பி வந்திருக்கார்னு நெனச்சேன்.

"அண்ணா, அதெல்லாம் இருட்டாகிரும்னா. இங்கயே எங்கையாவது போலாம். நாளைக்குக் காலைல வேணா மாகாபலிபுரம் பாத்துக்கலாம்" னு சொல்லி மறுபடி நடக்க வெச்சு வீட்டுக்குக் கூட்டிட்டு வர்றதுக்குள்ள பெரும்பாடாப் போச்சு. அப்படி இருந்தாலும் ரண்டு பாக்கெட் சிகரெட் வாங்கறதுக்கு அவரு மறக்கல.

பால்கனில நின்னு கொஞ்ச நேரம் பேசினோம். மத்தபடி மெளனமாவே இருந்தோம். இந்த மாதிரி நேரத்துல ஆம்பளைங்களை அமைதியா விட்டறணும். சும்மா நைநைனு பேசிக் கழுத்தறத்தா கடுப்பாகிருவாங்க. அண்ணா எதைப்பத்தி நெனைக்கறாங்கன்னு தெரியல. ஆனா நான் அவங்களைப் பத்தியும் அஞ்சலி அண்ணியைப் பத்தியும்தான் நெனைச்சேன்.

அஞ்சலி அண்ணி நெஜமாலுமே ரொம்ப அழகா இருப்பாங்க. சில நேரத்துல பாத்தா கையெடுத்துக் கும்பிடணும் போலத் தோனும், சில நேரம் கட்டிப் புடிக்கணும் போலத் தோனும். அப்படி ஒரு அழகி. அந்த அழகுல தனக்குக் கர்வம் கொஞ்சம் ஜாஸ்தியாவே உண்டுங்கறதை அவுங்க பேசறதையும், நடந்துக்கறதையும் வெச்சு ஈசியா சொல்லிரலாம்.

ஒரே ஜாதில ஜாதகம் எல்லாம் பாத்து பத்துப் பொருத்தமும் சேந்த பிறகு செஞ்ச கல்யாணந்தான் அவங்களோடது. என்ன இருந்தாலும் கொங்கு மண்டலத்துலயே லவ்வுனாக் கூட ஜாதகம் பாத்து லவ் பண்ற ஜாதில பொறந்தவங்க இல்லையா? ரண்டு குடும்பமும் வசதியான குடும்பம்தான். அண்ணா, அண்ணி ரண்டு பேருமே சென்னைல வெவ்வேற சா·ப்ட்வேர் கம்பெனில வேலைக்குப் போறாங்க.

என்னோட சிந்தனையைக் கலைக்கறாப்பல இங்கிலீஷ்ல அண்ணா சொன்னாங்க. "Indian women had been suppressed for ages and they seem to unleash all at once, quite sadly now" சொன்ன மேட்டரை விட சொன்ன விதமும், அப்ப மூஞ்சில தெரிஞ்ச உணர்ச்சியும் ரொம்ப கிளியராப் புரிஞ்சுது.

அப்படி இப்படீன்னு நேரத்தைக் கடத்தினாலும் மணி ஏழுக்கு மேல ஆகலை. இதுக்கு மேல வீட்ல இருந்தா வேலைக்கு ஆகாதுன்னு சொல்லி அடையார் SNS போனோம். நல்ல எடம் அது. நீங்க வேணாலும் ட்ரை பண்ணிப் பாருங்க. அடையார் சிக்னல் பக்கத்துலையே இருக்கு.

நல்ல வேளை கூட்டம் அதிகமா இல்லை. பூல் டேபிள் காலியா இருந்தது. நம்மலும் எதோ வெள்ளைக்காரன் மாதிரி குச்சில டேபிள் மேல இருக்கிற பந்தைத் தட்டித் தட்டி ஓட்டைல போடற வெளையாட்டு ஆடறதை நெனைச்சா சிரிப்பு வந்தாலும், இந்த ஆட்டம் நல்லாத்தான் இருக்குது.

அண்ணா என்னை விட நல்ல பிளேயர். தனக்கு ஆன் த ராக்ஸ் விஸ்கி என்னமோ சொன்னாங்க. கூடவே கையில தம்மு. நான் எதுவும் ஆர்டர் பண்ணலை. குடிச்சு ஒடம்புக்கு ஒத்துக்காம ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆனா ஒடனே கல்யாணம் பண்ணி வெச்சிருவேன்னு அம்மா மெரட்டல் விட்டிருக்காங்க.

கிட்டத்தட்ட பத்து மணி வரைக்கும் அந்த டேபிள் எங்க ஆக்கிரமிப்புல இருந்துச்சு. நான் ஜெயிச்சதை விட அண்ணா நெறைய ஜெயிச்சாங்க. கூடவே நெறைய மேட்டர் வெளிய வந்துச்சு. அவங்க கல்யாண வாழ்க்கைல ஏற்பட்ட கஷ்டங்கள், அவமானங்கள், சிக்கல்கள்னு பல விஷயம் தெரிய வந்துச்சு.
பால்கனில நிக்கும் போது இங்கிலீஷ்ல அண்ணா சொன்ன கருத்து இப்ப ரொம்பத் துல்லியமா வெளங்குச்சு. அண்ணி சுந்தந்திரமா இருக்கணும்னு நெனைக்கற ரகம். அதுல தப்பில்லைனு அண்ணா சொல்றாங்க. கணவனைச் சார்ந்திருக்கற dependence ங்கற மேட்டர் புடிக்கலைங்கறதால absolute independence வேணும்னு சொல்லிட்டு ரண்டு ஜீவன் சேர்ந்து அனுசரிச்சு வாழற வாழ்க்கையோட interdependence ங்கற மைய இழையை அஞ்சலி அறுக்கறான்னு சொல்லி அழுதுட்டாங்க. ஆமாங்க ரவியண்ணா தேம்பி அழுததை இன்னைக்குத்தான் நான் பாத்தேன். பார்ல அத்தனை பேரும் வேடிக்கை பாக்கறாங்கனு சொல்லி சமாதானப்படுத்த சிரமமாப் போச்சுங்க.

காலங்காலமா வெளியே போய் பொருள் தேடிக் கொண்டு வர்ற ஆணோட வேலையைப் பொம்பளைங்க பங்குபோட ஆரம்பிச்ச இந்தக் காலத்துல பொம்பளைகளோட வேலையாக் கருதின வீட்டைப் பரமாபரிக்கறதை ஆம்பளைங்களும் பங்கு போடணும்ங்கறதுல உறுதியா இருக்கிற சில பேர்ல ரவியண்ணா ஒருத்தர். சமையல் வேலை, பாத்ரூம் கழுவறது, துணி அயர்ன் பண்றதுனு எல்லாத்தையுமே அண்ணாவும் செய்வாங்க.

ஆணும், பொண்ணும் சமம்ங்கறதால உடல் ரீதியாவும், மன ரீதியாகவும் இரு பாலருக்கும் உள்ள பலம் மற்றும் பலவீனத்தை மறந்து மறுக்க முடியாதுல்ல? அஞ்சு மாசம் பொம்பளை புள்ளையைச் சொமந்தா, மிச்ச அஞ்சு மாசத்தை ஆம்பளை ஆசைப்பட்டாலும் சொமக்கவா முடியும்? அப்படி இல்லாட்டி பொறந்த கொழந்தைக்குத்தான் அவனால பால் குடுக்க முடியுமா? இயற்கையில சில விஷயங்கள் இப்படித்தான் இருக்கணும்னு விதிச்சிருக்கு. அதை ஏத்துக்கிட்டு அதோட வரையறைக்குள்ள வாழறதுதான் புத்திசாலித்தனம்.

அஞ்சலி அண்ணி கர்ப்பமா இருந்தப்ப ரவிண்ணா எப்படி படபடப்பா இருந்தார்னு எனக்குத் தெரியும். அதே மாதிரி கொழந்தை பொறந்த அவர் எவ்வளவு சந்தோசப்பட்டார்னும் தெரியும். ஆனா அண்ணி ரண்டே வாரத்துல வேலைக்குக் கெளம்பிட்டாங்க. ரவியண்னாவோட அம்மாவும், மாமியாரும் மாறி மாறி பாப்பாவைப் பாத்துக்கிட்டாங்க.

மெட்டர்னிட்டி லீவ் கூட அண்ணி முழுசா யூஸ் பண்ணலை. கெரியர் குரோத் தனக்கு ரொம்ப முக்கியம்னு சொல்லிட்டாங்க. கொழந்தை, குடும்பங்கற சராசரி விஷயத்துக்காக அதை காம்ப்ரமைஸ் பண்ணிக்க முடியாதுன்னு அதுக்கு காரணம் சொன்னாங்களாம். அப்படி இருக்கிறவ என்ன மயிருக்கு கல்யாணம் பண்ணனும்னு கேக்க நெனைச்சேன். ஆனா அண்ணா மனசு கஷ்டப்படும்னு சும்மா இருந்திட்டேன்.

வீட்டுப் பெருசுக மாசம் ஒருத்தர்னு மாத்தி மாத்தி சென்னை வந்து கொழந்தையைப் பாத்துக்கிட்டே இருந்தாங்க. அப்படியே ஆறு மாசம் ஓடிப் போச்சு. அழகான அஞ்சலி அண்ணிக்கு பல நேரங்கள்ல பாப்பா 'சனியன்' ஆகிருது. அது அழுகறப்ப, படுக்கைல மூச்சா போறப்ப, ஒடம்பு சரியில்லாமப் போறப்ப..இப்படி எல்லா நேரமும் அதில் வரும்.

என்னால லீவ் போட்டு வீட்ல உக்காந்து கொழந்தையைப் பாத்துக்க முடியாது. வேணும்னா நீ லீவ் போட்டுக்கனு புது மிரட்டல் கடந்த ரண்டு வாரமா ஆரம்பிச்சிருக்காம். அண்ணாவுக்கு சம்பளம் 15 இலட்சம். அண்ணிக்கு ஆறு இலட்சம். வேலையை விடலைன்னா உங்க கம்பெனி HR க்கு கால் பண்ணி கம்ப்ளெயிண்ட் பண்ணிருவேன் அதுக்கு அப்புறம் வேலை போய் வீட்ல உக்கார வேண்டி வரும்னு டார்ச்சர் குடுத்திருக்காங்க. குடும்பம்னு வந்தா எல்லாத்தையும் நாலு சுவத்துக்குள்ள வெச்சு பாதுகாக்கணும்னு சொல்லுவாங்க இல்லைங்களா? அதனால் அண்ணா அப்படியே மெயிண்டெய்ன் செஞ்சி சமாளிச்சுட்டு இருந்தாங்க.

இந்தக் கொடுமைக்கெல்லாம் உச்ச கட்டம் இன்னைக்கு நடந்ததாம். அதனாலதான் வீட்டை விட்டு ஓடி வந்துட்டார். வாய்த் தகறாரு கொஞ்சம் முத்திருச்சாம். டக்குனு மகளிர் போலீஸ¤க்கு போன் பண்ணி வீட்டுக்கு வர வெச்சு எம்புருஷன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தறாருனு சும்மானாச்சும் சொல்லிட்டாங்களாம். வந்த போலீஸ்க்கார அக்காமாருக எல்லாம் ஒரு மணி நேரம் அண்ணாவை உருட்டி மெரட்டி இனிமேல் வரதட்சணை கேட்டு தொந்தரவு பண்ணமாட்டேன்னு கையெழுத்து வாங்கினதோட எச்சரிக்கை செஞ்சு விட்டுட்டுப் போய்ட்டாங்களாம். இதுக்குமேல தாங்காதுனு நெனைச்சு வீட்டை விட்டு ஓடி வந்துட்டார் அண்ணா. அவரு சம்பாதிச்சு வாங்கினதுன்னாலும் வீடு அண்ணி பேர்லதான் இருக்குங்கறது உங்களுக்கான உதிரித் தகவல்.

ரவியண்ணா மனசுல இருந்த பாரம் எல்லாத்தையும் கிட்டத்தட்ட எங்கிட்ட எறக்கி வெச்சிருப்பார்னு நெனைக்கறேன். அந்த நேரம் பாத்து, "சார், 20 மினிட்ஸ்ல டேபிள் குளோஸ் பண்ணிருவோம் சார். லாஸ்ட் கேம்" அப்படீன்னு பையன் வந்து சொன்னான். "தம்பி. நீ சார் கூட வெளையாடிட்டு இரு. நான் டாய்லட் போய்ட்டு வந்துர்றேன்" ன்னு கேட்டுக்கிட்டதும் அவனுக்கு ரொம்ப குஷி. கம்பெனி இல்லாம தனியா வர்ற கஸ்டமர்ஸ் கூட சான்ஸ் கெடைக்கும் போது காசு கட்டாம வெளையாடலாங்கறதுல அவங்களுக்கு ஒரு ஆனந்தம்.

டாய்லெட் போய்ட்டு நான் திரும்பி வந்தப்ப என் கையில அண்ணாவோட செல்போன் இருந்ததை அவரு கவனிக்கலை.

கேம் முடிச்சுட்டு, பில்லுக்கு பணம் கட்டிட்டு வெளியே வந்து கார்ல ஏறப் போகும் போது மாமனாரிடம் இருந்து அவர் செல்போனுக்கு கால் வந்தது. ரண்டு பேரும் சுமார் இருபது நிமிசம் பேசிருப்பாங்க.

"டேய்... நைட் உன் ரூம்ல தங்கிட்டு காலைல வீட்டுக்குப் போய்க்கறேன்"

"சரிங்கண்ணா. நீங்க வாங்க. காலைல பாத்துக்கலாம்"

வீட்டுக்கு வர்ற வழில அண்ணா எங்கிட்ட ரண்டு தத்துவம் சொன்னாங்க. ஒன்னு: கல்யாணம் பண்ணிக்காதே.
ரண்டு: அப்படியே பண்ணினாலும் அழகான பொண்ணை மட்டும் பண்ணிக்காதே.

ஷேர் மார்க்கெட் முதலீட்டில வாரன் ப·பட் சொன்ன விதி என் மனசுல வந்து போச்சு.
Rule 1 : Don't loose money
Rule 2 : Don't forget rule 1

வாரன் ப·பட்டை விடுங்க. அண்ணா இது வரைக்கும் எனக்குச் சொன்ன எந்த அட்வைசையும் நான் தட்டினதே இல்லை. ஆனா இந்த ரண்டு தத்துவத்தில முதல்ல சொன்னதை ஏத்துக்கறதில்லைனு முடிவு செஞ்சுக்கிட்டேன். ரண்டாவதை வேணா பரிசீலிக்கலாம்.

**
மறுநாள் நாள் காலைல நான் எந்திரிச்சுப் பாக்கறப்ப அண்ணாவைக் காணோம். பார்க்கிங் லாட்ல நிறுத்தி வெச்சிருந்த காரையும் காணோம்.

என்னோட மொபைல் போன்ல அண்ணா மாமனார்ட்ட இருந்து வந்த SMS மட்டும் 'ரொம்ப தேங்க்ஸ்பா" ன்னு சொன்னபடி இருந்தது.

பாத் ரூமில் நேத்து ஈவினிங் நெரப்பி வெச்ச நல்ல தண்ணி அப்படியே இருந்தது. சரி விடுங்க. சர்ச், பீச் எல்லாம் அடுத்த சனிக்கிழமை பாத்துக்கலாம்.

பொறகு இன்னொரு மேட்டர். வேலைக்குப் போற பெண்களை இழிவுபடுத்தற ஆணாதிக்க வக்கிர புத்தியின் வெளிப்பாடுதான் இந்த மாதிரிக் கதைன்னு யாராவது வேட்டியை வரிஞ்சு கட்டிட்டு வந்திராதீங்க. ஒட்டுமொத்தப் புனைவு, புரட்டு, கற்பனைன்னு சொல்லி பெண்ணியத்தைப் பாதுகாக்க வரும் உங்கள மாதிரி ஆட்களுக்களுக்குந்தான் கதையோட தலைப்பு. சரிங்களா?

22 comments:

Anonymous said...

Do you think you are smart?

Udhayakumar said...

இது மக்களுக்கு மக்களுக்கு மாறுபடும்... ஆனாலும் கொஞ்சம் அதிர்ச்சிதான்...

Anonymous said...

மனைவி/கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்கரது ரொம்ப சரிங்க. சொஷியலைஸ் பண்ணனுங்கறதுக்காக தினம் சிகரெட் குடிக்கற தமிழ்ப்பொண்ண பாத்திருக்கேங்க. வீட்டுக்காரருக்கும் தெரியும். ஆனா என்ன பண்ணமுடியிம். புலம்பறதத்தவிர.

விஜயன் said...

மன்னிக்கவும் குப்புசாமி

நண்பனின் அந்தரங்கத்தை இப்படி வெளிப்படையாக பொதுவில் வைத்ததற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. மேலும் அவருடைய அனுமதியுடன் எழுதப் பட்டதா இல்லையா என்பதும் தெரியவில்லை.

நீங்கள் சொல்ல வந்த கருத்தை புரிந்து கொள்ள முடிந்தாலும், எழுத்து நடையில் என்க்கு உடன்பாடில்லை.

Siva said...

<--- அதுவும் கேவலம் மாசம் அஞ்சாயிர ரூபாய் கூடுதலா கெடைக்குதுங்கறதுக்காக. -->
இப்போ புரியுது எல்லாரும் ஏன் நம்மளை(மெண்பொருள்) திட்றாங்கன்னு

Siva said...

வழ வழன்னு நிறைய எழுதறீங்க.பெரிய பத்திரிக்கைகளுக்கு தெரிஞ்சதுன்னா, உதவி ஆசிரியரா சேர்த்துப்பாங்க.இது கதைன்னு முதல்லேயெ தெரிஞ்சுட்டதினால பெரிசா சுவாரஸ்யம் ஒண்ணும் இல்லே.

Siva said...

ஓ! நீங்க இங்க பிசியா இருக்கறதினாலதான் அங்கெ(panguvanigam.blogspot.com) ஒண்ணும் எழுதறது இல்ல போல

Chellamuthu Kuppusamy said...

வாங்க உதய். மக்களுக்கு மக்கள் எதோ மாறுபடுதுன்னு சொல்றீங்க.. ஒன்னும் பிரியல..

ஏனுங்க சின்னம்மணி இதயெல்லாமா வெளிய சொல்லுவீங்க? அப்படியே கண்டுங்காணாமையும் உட்டுட்டுப் போய்றோணுமுங்க.

Chellamuthu Kuppusamy said...

விஜயன், இதுல மன்னிக்க என்ன இருக்குங்க? நண்பனோட அந்தரங்கத்தைப் பொதுவில வைக்கறேன்னு பொசுக்குனு சொல்லீட்டீங்க :-)
//சில நேரத்துல பாத்தா கையெடுத்துக் கும்பிடணும் போலத் தோனும், சில நேரம் கட்டிப் புடிக்கணும் போலத் தோனும்.// இதைப் படிச்சுமா உங்களுக்கு நண்பனோட கதைங்கற எண்ணம்?
மேலும், "இதில் வரும் கதாபாத்திரங்கள் மற்றும் சம்பவங்கள் கற்பனையே. அவை யாரையும் குறிப்பிடுவன அல்ல"னு ஒரு வரி போடாம இருக்கும் போது உண்மைக் கதைனு நீங்க எப்படி முடிவு கட்டலாம்?

கதை சொல்லும் முயற்சியின் பல பரீட்சார்த்த முயற்சிகளில் இதுவும் ஒன்று. ஆனாலும், சமுதாயத்தில் பரவலாகக் காணப்படும், கேள்விப்படும் உண்மை நிகழ்ச்சிகளின்/நபர்களின் தாக்கம் வெகுவாகவே இருக்கிறது. அவர்கள் சென்னையில் மட்டும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனக்குத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

வெற்றி said...

செல்லமுத்து குப்புசாமி,

பக்கத்திலிருந்து கதை கேட்டது போல எண்ணுமளவுக்கு உங்களின் சொல்லும் பாணி அமைந்திருந்தது.
மிக்க நன்றி.

அரை பிளேடு said...

உண்மை...

ஆனால் வாழ்க்கையின் போராட்ட களத்தில் இதையெல்லாம் பார்த்து பயந்து விட முடியாது. இன்றைய ஆண் இதையெல்லாம் சமாளித்தே வாழ வேண்டியுள்ளது. பொறுமை மற்றும் அன்பு இரண்டும் இன்றைய நிலையில் பெண்களை விட ஆண்களுக்குத்தான் அதிகம் தேவைப்படுகிறது.

Chellamuthu Kuppusamy said...

வாங்க சிவா.

//வழ வழன்னு நிறைய எழுதறீங்க.பெரிய பத்திரிக்கைகளுக்கு தெரிஞ்சதுன்னா, உதவி ஆசிரியரா சேர்த்துப்பாங்க.இது கதைன்னு முதல்லேயெ தெரிஞ்சுட்டதினால பெரிசா சுவாரஸ்யம் ஒண்ணும் இல்லே.//
மூனு மேட்டர் சொல்லிருக்கீங்க. முதல்லயும், கடைசிலயும் சீரியஸா சொல்லிட்டு நடுவுல ஜோக் சேத்துட்டீங்க பாத்தீங்களா?

//ஓ! நீங்க இங்க பிசியா இருக்கறதினாலதான் அங்கெ(panguvanigam.blogspot.com) ஒண்ணும் எழுதறது இல்ல போல //
இங்கேயும் பிசியெல்லாம் இல்லைங்க.. :-) பங்கு வணிகம் பற்றி எனக்கே மறந்து போச்சு. அப்படி இருக்க நீங்க வேற ஞாபகப்படுத்திட்டீங்க..

Chellamuthu Kuppusamy said...

வெற்றி மற்றும் அரை பிளேடு, இருவருக்கும் நன்றி.

//ஆனால் வாழ்க்கையின் போராட்ட களத்தில் இதையெல்லாம் பார்த்து பயந்து விட முடியாது. இன்றைய ஆண் இதையெல்லாம் சமாளித்தே வாழ வேண்டியுள்ளது. பொறுமை மற்றும் அன்பு இரண்டும் இன்றைய நிலையில் பெண்களை விட ஆண்களுக்குத்தான் அதிகம் தேவைப்படுகிறது. //
amen!!

பொன்ஸ்~~Poorna said...

இங்க வந்திட்டு போனப்ப உண்மைத்தமிழனோட பேசினீங்களா? அந்தக் காத்து அடிச்சாப்புல இருக்கு.. (அட! இடுகை சைஸுக்கு சொன்னேங்க)

Siva said...

<---
பங்கு வணிகம் பற்றி எனக்கே மறந்து போச்சு. அப்படி இருக்க நீங்க வேற ஞாபகப்படுத்திட்டீங்க.. -->
இப்படி வாரன் பபெட்/ஜுன் ஜுன்வாலா அளவுக்கு கனவு காண வச்சி பதியிலேயே விட்டுட்டுப் போன என்ன அர்த்தம்?

லக்கிலுக் said...

நல்ல சுவாரஸ்யமான எழுத்துநடை உங்களுடையது. உங்கள் எழுத்துக்களில் நிறைய டெக்னிக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

Chellamuthu Kuppusamy said...

//இங்க வந்திட்டு போனப்ப உண்மைத்தமிழனோட பேசினீங்களா? அந்தக் காத்து அடிச்சாப்புல இருக்கு.. (அட! இடுகை சைஸுக்கு சொன்னேங்க)//
பொன்ஸ், உங்க கமெண்டுக்கு எவ்வளவு சீக்கிரம் பதில் போடுறேன் பாத்தீங்களா? இந்த முறை உண்மைத் தமிழனை உண்மையிலேயே சந்தித்து 'பொய்'னு ரண்டே வரில ஒரு இடுகை போடலாம்னு உத்தேசம்...

Chellamuthu Kuppusamy said...

இப்படி வாரன் பபெட்/ஜுன் ஜுன்வாலா அளவுக்கு கனவு காண வச்சி பதியிலேயே விட்டுட்டுப் போன என்ன அர்த்தம்?

சிவா : மெயில் பண்ணுங்க பிளீஸ்..kuppusamy18@gmail.com..சபைல எல்லாத்தையும் பேச முடியாது..

//உங்கள் எழுத்துக்களில் நிறைய டெக்னிக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது//
எப்படி எழுதக் கூடாதுனா லக்கி?

VIJI said...

nice story...enjoyed it

Anonymous said...

குப்புசாமி,

உங்கள் பதிவுக்கு இன்று தான் முதன் முதலாக வந்தேன். பங்குவணிகம் மூலமாக இங்கு கரையோரம் ஒதுங்கினேன். இந்த 'உண்மை' கதை நெசமாலுமே உண்மைதான். இது இப்போது பல தெரிந்தவர்கள் வாழ்வில் நடந்து வருகிறது. கணினித்துறையில் வேலைபார்க்கும் 30000க்குமேல் சம்பளம் வாங்கும் பல பெண்களும் (மெஜாரிட்டி) இந்த மாதிரிதான் தங்கள் போக்கை வளர்த்துக்கொண்டுள்ளனர். நீங்கள் எழுதியுள்ள பல வாக்கியங்களும் நெத்தியடி. ஒரு பாதிக்கப்பட்ட அணணனை அருகில் இருந்து பார்த்து வரும் எனக்கு இந்த படைப்புடன் மிகவும் ஒன்றிப் போக முடிந்தது. பெண்ணியம், பெண் உரிமை என பேசி தமிழ்(இந்திய) குடும்ப சூழல் இந்த கணினித்துறை அதீத சம்பளத்தால் சீரழிந்து வருகிறது.

ஒரு முறை இங்கு சென்று பார்க்கவும்.
http://tamil498a.blogspot.com

Mahesh

Anonymous said...

全程代理各航国际机票国内机票特价国际机票留学生机票、团购优惠!网址:http://www.guojijipiao.bj.cn

Anonymous said...

全程代理各航国际机票国内机票特价国际机票留学生机票、团购优惠!网址:http://www.guojijipiao.bj.cn