Monday, March 03, 2008

சுஜாதா - சில நினைவுகள்

- செல்லமுத்து குப்புசாமி

சென்ற புதன் கிழமை, பிப்ரவரி 27, இரவு அவர் 'லேட்' சுஜாதாவாக ஆனதைப் பற்றி இப்போது எழுதினால் மிகவும் லேட்டான பதிவாக இருக்கும். ஆனால் இது ஞாயிறன்று சென்னை ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவில் உயிர்மை பதிப்பகத்தின் முன்முயற்சியில் நடைபெற்ற சுஜாதா நினைவு நிகழ்ச்சி பற்றியது.

எனக்கு எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றிய அறிமுகம் விக்ரம் திரைப்படம் மூலமாகவும், 'என் இனிய இயந்திரா' தொலைக்காட்சித் தொடர் மூலமாகவுமே கிடைத்தது. அப்போதே அவர் தமிழ் எழுத்து உலகின் சூப்பர் ஸ்டார் (வர்த்தக ரீதியாகவும்). அந்த இடத்தை சாகும் வரை அவர் தக்கவைத்திருந்தார்.

எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்துலக வாழ்க்கை கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் விரிந்திருந்தது. அவருக்குப் பின் வந்த சில sundry படைப்பாளிகள் கூட இருந்த இடம் தெரியாமல் போய்விட்ட நிலையில் சுஜாதா நிச்சயமாக அங்கீகரித்து ஆராயப்படவேண்டிய ஒரு நபர் என்பதில் சந்தேகமில்லை.

முன்னப்பின்ன செத்திருந்தாத்தானே சுடுகாடு தெரியும்? நமது கர்னாடக சங்கீத ரசனை மிகவும் அபாரம் என்பதால் நாரத கான சபா எங்கிருக்கிறது என்பது தெரியாமல் TTK சாலையில் பல பேரிடம் விசாரித்த பிறகே செல்ல முடிந்தது. எனக்கு வந்திருந்த குறுஞ்செய்தி அழைப்பில் கூட்டம் நான்கு மணிக்கு என்றிருந்தது. அதைக் கெளரவிக்காமல் 4.15 க்குப் போன போது இருந்த குற்ற உணர்ச்சி உள்ளே சென்றதும் மறைந்தது. சொன்ன நேரத்திற்கு நம்ம ஊரில் எந்த நிகழ்ச்சியும் நடக்காது என்பது ஏற்றுக்கொண்ட, சகித்துக்கொண்ட ஒன்றாகவே தொடர்ந்தது.

விஜய் தொலைக்காட்சியில் 'சிகரம் தொட்டவர்கள்' நிகழ்ச்சியில் சுஜாதாவை கோபிநாத் நேர்முகம் கண்டது LCD திரையில் சில நிமிடங்கள் ஓடியது. அதன் பிறகு கவிஞர் மனுஷ்யபுத்ரன் வரவேற்புரை வழங்கிய போது நான்கே முக்கால் ஆகியிருந்தது. தான் முதன்முதலாக சுஜாதாவைச் சந்தித்த போது, "ஏன் இந்தச் சின்ன வயதில் மரணம் குறித்த கவிதைகளை எழுதுகிறாய்?" என்று கேட்டார் என்றும், அந்தக் கவிதைகள் அத்தனையும் இட்டு நிரப்பினால் கூட சுஜாதாவின் மறைவை இன்று செரிக்க இயலாது என்றும் வருந்தினார். சுஜாதா நினைவாக ஆண்டு தோறும் இளம் எழுத்தாளர்களுக்குப் பரிசு தந்து ஊக்குவிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இங்கே பேசப் போகிறவர்கள் 5 முதல் 7 நிமிடம் வரை பேசுவார்கள் என்ற எச்சரிக்கையோடு வரவேற்புரையை நிறைவு செய்தார். 'உயிர்மை' தலையங்கம் போலவே அவர் ஆற்றிய உரையும் செறிவு மிக்கதாக இருந்தது.

நிகழ்ச்சியை பார்த்திபன் தொகுத்து வழங்கினார். முதன்முதலாகப் பேச வந்தவர் ரா.கி.ரங்கராஜன். முதுமையின் காரணமாக அவரால் நின்றுகூடப் பேச இயலவில்லை. அதன் பிறகு சுஜாதாவின் நினைவுகளை மீள்பதிவு செய்த பலர் சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்தனர்.

கிரேசி மோகன் பேசறச்சே பெங்களூரில் நாடகம் போட்ட போது இவ்வளவு பெரிய எழுத்தாளர் நம் நாடகத்தைப் பார்க்கிறாரே என்று பதற்றமாக இருந்ததாகவும், ஆனால் சுஜாதாவோ கண்ணில் ஜலம் வர விழுந்து விழுந்து சிரிச்சுண்டு இருந்ததையும் குறிப்பிட்டார். நிச்சயமாக அவர் பெருமாள் பக்கத்தில் சென்று சேராமால் ஆழ்வார்கள் பக்கத்திலேயே இருப்பாரென்று உத்திரவாதம் அளித்தார்.

சுஜாதாவின் மைத்துனியான வைஷ்ணவா கல்லூரியின் முதல்வர் ஆங்கிலத்தில் பேசினார். தன் அத்திம்பேர் கல்லூரி மாணவிகளுக்கு உத்வேகம் கொடுத்ததைப் பற்றிப் பேசினார். சுஜாதாவின் 'சிறிரங்கத்துத் தேவதைகள்' சிறுகதைத் தொகுப்பு அங்கே 'non-detail' பாடமாக இருப்பதை புதிதாக அறிந்துகொண்டேன்.

எழுத்தாளர்களைக் கூட வாசகர்கள் ஆக்கிய சுஜாதா, என்னை மாதிரியான வாசகர்களைக் கூட எழுத்தாளர் ஆக்கினார் என்று பார்த்திபன் சொன்ன போது அரங்கம் கரவொலியில் நிறைந்தது.

நடிகரும், ஓவியருமான சிவக்குமார் பேசுகையில் சுஜாதாவின் நாடகத்தைப் பார்த்து மிரண்டதையும், சிறுகதை படித்து மிரண்டதையும் சொன்னார். பாவம் மனிதர், நிறைய மிரண்டிருப்பார் போலத் தெரிந்தது. சிவகுமார் பேசுவதற்காக நடந்து வரும்போது கமல் எழுந்து நின்று சீனியருக்கு மரியாதை கொடுத்ததைக் காண முடிந்தது.

ஓவியர் ஜெயராஜ் சுஜாதாவுடனான தனது நெருக்கத்தைப் பற்றிப் பேசியது ரசிக்கும்படியான மலரும் நினைவுகள். சுஜாதாவின் நகைச்சுவை உணர்வுக்கு உதாரணமாக, 'அங்கே ஒரு ஜெயராஜ் போகுது' என்று எழுதவல்லவர் என்றார். வி.ஜி.பி. கடற்கரையில் சில இளைஞர்கள் பொத்தான் தெறிக்க சட்டையைக் கழட்டிவிட்டு சுஜாதாவிடம் கையெழுத்து வாங்கிய தருணத்தில், தூரத்தில் எதையோ தேடுவதைப் போலப் பார்த்துவிட்டு, "இளம் பொண்ணுக யாரும் ஆட்டோகிரா•ப் வாங்கலையா?" என்று விட் அடித்தாராம். சபா (அரங்கம்) ஒரு முறை அதிர்ந்தது.

சுஜாதாவின் எழுத்து நடை பலராலும் சிலாகிக்கப்பட்டது. "அவ நடையைப் பாருங்க பாஸ். புதுமைப்பித்தன் நடை தோத்துரும்" என ஒரு கதையில் வசந்த் சொன்னதை யாரோ நினைவுபடுத்தினார்கள். ஒரு மாதிரியாக உட்கார்ந்திருந்த பெண்ணை, "முந்தானையைப் பூணூலாக அணிந்திருந்தாள்" என்ற சுஜாதா ஸ்டைலை யாரோ நினைவுபடுத்தினார்கள்.

தமிழ் இலக்கிய உலகின் கம்பீரச் சின்னம் ஜெயகாந்தன் மிகக் குறைவான நேரமே பேசினாலும் no beating around the bush ரகம். மனைவி பெயரில் எழுதுகிறவர்கள் மீது தனக்கு பெரிய அபிப்பிராயம் இருந்ததில்லை என்றவர், சுஜாதாவைப் பொறுத்தவரை அந்தக் கருத்தைப் பிற்பாடு மாற்றிக்கொண்டதாகக் குறிப்பிட்டார். "ரண்டு பேரும் ஒன்னாத்தான் ஆஸ்பத்திரில அட்மிட் ஆனோம். அவர் இப்ப இல்லை. நான் இருக்கேன்" - சிந்திக்க வைத்தது. இந்த இரங்கல் கூட்டம் எல்லாம் ஒரு சடங்கு மாதிரி என்றதோடு, அவர் இறந்த உடனே எல்லோருக்கும் வேண்டப்பட்டவர் ஆயிட்டார் என்றார். எனது பார்வையில் மிகைப்படுத்துதல் ஏதுமின்றி, அலங்கார வார்த்தைகள் ஏதுமின்றிப் பேசிய ஒரே மனிதராக ஜே.கே. தென்பட்டார்.

காதில் கடுக்கணுடன் சாரு நிவேதிதா தனது இரு ஆசான்களாக ஜெயகாந்தனையும், சுஜாதாவையும் குறிப்பிட்டார். சுஜாதா தான் எழுதிய முதல் கதையைத் தொலைத்து விட்டாராம். அதன் பிரதியை யாராவது அனுப்பி வைத்தால் தனது சாம்ராஜ்ஜியத்தில் ஒரு பாதியை எழுதி வைத்து, தன் மகளைத் திருமணம் செய்து வைப்பதாகவும் எழுதியிருந்தாராம். எப்படியாவது சுஜாதாவின் மருமகன் ஆகிவிடவேண்டும் என்ற ஆர்வத்தில் தன்னிடம் அந்தக் கதை இருப்பதாக சாரு எழுதிப் போட்டாராம். அது பத்திரிக்கையிலும் பிரசுரமானது. ஆனால், சுஜாதாவிற்கு இரண்டு மகன்கள் மட்டுமே என்பது அப்போது அவருக்குத் தெரியவில்லை பாவம். சாருவிடம் அந்தக் கதையின் பிரதியே இல்லாமல் இருந்தது வேறு விஷயம்.

மதன் பேசினார். சுஜாதாவின் கார்ட்டூன் அறிவு அபாரம் என்றார். தமிழ் எழுத்தாளர்களுக்கு உரிய சன்மானம் கிடைப்பதில்லை என்ற உண்மையை ஆதங்கத்துடன் குறிப்பிட்டார். நிச்சயம் யோசிக்க வேண்டிய செய்தி.

பார்த்திபன் இடையிடையே சுவையான விஷயங்களைச் சொல்லிய வண்ணமே இருந்தார். தன் கடைசிக் காலத்தில் மனைவிக்கு எதுவுமே எழுதி வைக்காமல் விட்டுப் போகிறேனே என்று ஒரு முறை புலம்பினாராம். அதற்கு ரங்கராஜனின் மனைவி, "நீங்க எழுதினது எல்லாமே என் பேர்லதான் எழுதிருக்கீங்க. இதுக்கு மேல என் பேர்ல வேற என்ன எழுதி வைக்கணும்?" என்றாராம்.

சுஜாதா என்ற எழுத்தாளனின் வெற்றிக்குப் பின்னால் அவரது மனைவி சுஜாதா அம்மையாரின் பங்களிப்பு எத்துனை பலமாக இருந்தது என்பதைப் பற்றி எல்லோருமே பேசினார்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பது உண்மை. (ஒவ்வொரு ஆணின் தோல்விக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்)

பேராசிரியர் ஞானசம்பந்தனுக்குப் பிறகு கமல்ஹாசன் பேசவேண்டும். அதற்காக மேடையின் பின்புறம் காத்துக்கொண்டிருந்தார் கமல். ஞானசம்பந்தன் தனது வழக்கமான நகைச்சுவைப் பேச்சின் மூலம் அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார். தனது நேரமே அதிகமானது தெரியாமல், நீண்ட நேரம் அறுப்பது பற்றியே தமாஷ் பண்ணிக்கொண்டிருந்தார். பக்கவாட்டில் இருந்து சமிஞ்சை வந்தது அவருக்குப் புரியாமல் போகவே, துண்டுச் சீட்டு அனுப்பி வைத்தனர். 'முடிஞ்சுது அவ்வளவுதான்' என்றவர், அந்தச் சீட்டில், "கமல் ரசிக்கிறார். தொடர்ந்து பேசவும்' என்று இருந்ததைக் கண்டு தொடர்ந்தார். அவரது பேச்சைக் கேட்டு பாதுகாப்பிற்கு நின்றிருந்த காவலர்கள் கூட விழுந்து விழுந்து சிரித்தனர். மறைந்த எழுத்தாளரின் மனைவி சுஜாதாவே சில நிமிடங்கள் மனம் விட்டுப் புன்னகைத்தார்.

அதன் பிறகு ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட கமலின் உரை நிகழ்ந்தது. இந்த நிகழ்ச்சி தனக்கு வருத்தத்தை விட மனநிறைவையே கூடுதலாகத் தருவதாகச் சொன்னார். நான் திரும்பிப் பார்த்த போது நாரத கான சபா நிறைந்திருந்தது. மலையாளிகளின் இலக்கியக் கூட்டங்களைக் காணும் போது தனக்குப் பொறாமை ஏற்பட்டிருக்கிறது என்றார் கமல். அந்தப் பொறாமையை, ஏக்கத்தை இந்தக் கூட்டம் ஓரளவாவது தணிக்கிறது என்றார். தமிழர்கள் ஏழு கோடி பேர் இருக்கிறோம். முதல் பதிப்பிலேயே ஒரு இலட்சம் பிரதிகளாவது விற்கும் நிலை வர வேண்டும் என்ற ஆசையைத் தெரிவித்தார். ஆண்டுக்கு ஆயிரம் காப்பி விற்கவே பதிப்பாளர்கள் முக்கி முனகும் நிலை நடப்பில் உள்ளது.

கமலைத் தொடர்ந்து கவிப் பேரரசு வைரமுத்து பேசினார். சுஜாதா எந்தப் படைப்பாளியைப் பற்றியும் புறம் பேசியதில்லை என்றார். நாளை யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்பதை ஒளவையாரை யாரோ ஒரு ஆண் புலவர் வம்புக்கிழுத்து மாட்டிக்கொண்ட கதையை மேற்கோள் காட்டிக் குறிப்பிட்டார். ஜெயகாந்தனைப் போலவே வைரமுத்துவும் இரங்கல் நிகழ்ச்சியை வெறும் சம்பிரதாயம் என்றார்.

சுடிதாருடன் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்த கனிமொழியை புதிதாகக் காணும் யாரும் முதலமைச்சரின் மகள் என்றோ, எம்.பி. என்றோ அடையாளம் கூற முடியாது. மிக எளிமையாக, பந்தாவின்றி உலவிக்கொண்டிருந்தார். எந்த ஒரு அரசியல் சாயமும் இல்லாமல் ஒரு எழுத்தாளராக, எழுத்தாளரின் மகளாக அவர் கலந்துகொண்டதை கமல் பாராட்டினார். நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரைத் தவிர்த்துவிட்டு வந்தமைக்காக வைரமுத்து மிகவும் நெகிழ்ந்தார். மகள் இல்லாத சுஜாதாவிற்கு கனிமொழி மகளாக எல்லாச் சடங்குகளையும் செய்ததாகச் சொன்னவர், இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தமைக்கு வெகுவாகப் புகழ்ந்தார். பார்த்திபனைப் பாராட்டிவிட்டு கடைசியாக போனால் போகிறதென்று (சுஜாதா ஸ்டைலில்) மனுஷ்யப்புத்திரனையும் பாராட்டினார்.

பல பேர் பேசுவதற்கு ஆர்வமாக இருந்தாலும், இயக்குனர் வசந்த் போன்ற சிலர் தங்களால் பேச இயலாது என்று மறுத்து விட்டனர். சிறிரங்கத்தின் இன்னொரு 'ரங்கராஜன்' கவிஞர் வாலியை அரங்கத்தில் காணவில்லை. சத்யராஜ், கனிமொழி, பாலகுமாரன் முதலியோரின் உரையைக் கேட்கும் வரை என்னால் காத்திருக்க இயலவில்லை.

சுஜாதாவின் வாழ்க்கை தமிழ் எழுத்துலகில் பிரவேசிகக்க நினைக்கும் ஒவ்வொருக்கும் பாடம். ஒரு படைப்பாளி சமூகத்தின் மீது எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதற்கு அவர் ஒரு எடுத்துக்காட்டு. எழுதுவதை முழுநேரப் பணியாகச் செய்யும் முட்டாள்தனத்தை யாரும் செய்துவிடலாகாது. அப்போது போட்டியும், பொறாமையும், சூழ்ச்சியும், வஞ்சமும் நிறைந்த சூழலில் அதன் ஒரு அங்கமாக மாற வேண்டிய விகாரமான நிலைக்குத் தள்ளப்படலாம் (இதைத் தவிர்க்குமாறு வைரமுத்து எழுத்தாளர்களுக்கு அறிவுறுத்தினார்) யாரையும் பகைத்துக்கொள்ளக் கூடாது. குறிப்பாக பத்திரிக்கையில் எழுதும்போது நான் சொல்வதே சட்டம் என்றெல்லாம் பேசக் கூடாது. வலைப் பதிவில் எழுதுவது காதலிக்கு காதல் கவிதை எழுதுவது போல; பத்திரிக்கைக்கு எழுதுவது சினிமாவுக்குப் பாட்டெழுதுவது போல. டைரக்டரும் (எடிட்டர்), ரசிகர்களும் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதைத் தர வேண்டும்.

அதை விட முக்கியமானது தொடர்ச்சியாக வாசிக்கும் ஆர்வம் மற்றும் தன் திறமையை திறம்படச் சந்தைப்படுத்துதல். இப்படி எல்லா வகையிலும் ஒட்டுமொத்த வாசகர் சமுதாயத்தின் மீதும் செலுத்திய ஆதிக்கமும், செல்வாக்கும், பாதிப்பும் மறுக்கவோ, மறக்கவோ முடியாத ஒன்று. அவரது 'அயோத்தியா மண்டபம்' கதையும், அங்கவை சங்கவைகளும், அம்பியின் லவ் லெட்டர் தாளமுத்து நடராஜன் மாளிகை குமாஸ்தா வேலைக்கு மட்டுமே ஏற்றதென்பதும், 'நான் தயிர் சாதம் சாப்பிடறவன். வலிக்கறது. விட்ருங்கோ'வும், ஈழ ஆயுதப் போராட்டத்தை ஆயுதக் கம்பெனிகளின் வியாபார உத்தியென்று கன்னத்தில் முத்தமிட்டதும், இம்சை அரசன் 23ஆம் புலிகேசியைக் கன்னடர்கள் எதிர்த்த போது புலிகேசி மன்னன் கன்னடம் பேசினானா அல்லது சமஸ்கிருதம் பேசினானா என்ற கண்டுபிடிப்பைச் சொன்னதும், அமைதிப் படையில் மணிவண்ணன் எழுதிய, "டேய் மணியா, கடவுளே இல்லைன்னு சொன்னவன் கூட கோயிலை இடிச்சதில்லை. ஆனா கடவுள் இருக்குதுனு சொல்றவந்தான் இடிக்கிறான்" வசனத்திற்குச் சற்றும் குறைவில்லாதவை. நமது வலைப்பதிவு திராவிடக் குஞ்சுகள் மேலும் சில உதாரணங்களைக் காட்டுவார்கள்.

ஆனால், அரை நூற்றாண்டு காலம் தன் வீச்சைச் செலுத்திய கலைஞனுக்கு, தமிழ் மொழிக்கு கணினி என்ற சொல்லைத் தந்தவனுக்கு, அவன் படைத்த படைப்புகளுக்கு, பொழுது போக்கிற்கு, நகைச்சுவை உணர்வுக்கு இந்தத் திருகல்கள் எல்லாம் ஒன்றுமேயில்லை. மேலும் ஒருவரின் மரணத்தில் இரங்கல் தெரிவிக்கும் போது நல்ல விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசவேண்டும் என்பது மரபு; சுஜாதா மரபுகளை உடைத்தெறிந்த படைப்பாளி என்பதையும் தாண்டி.

7 comments:

Udhayakumar said...

march 27?

அறிவன் /#11802717200764379909/ said...

நல்ல ஒரு ரிப்போர்ட்டிங்.

துளசி கோபால் said...

விரிவான பதிவுக்கு நன்றி.

Durai Thiyagaraj said...

சீரங்கத்து தேவதைகளை எத்தனை முறைபடித்தாலும் அலுக்காது ஒவ்வொருமுறை சீரங்கத்துக்கு (எனது வீடு திருச்சி சிந்தாமணியில்) வடக்குவாசலில் உள்ள வக்கீல் பிரபாகரைப் பார்க்க செல்லும் போதும் அந்த வீதிகளில் சுஜாதா சாரின் எழுத்துக்களில் வந்த மனிதர்கள் உலாவுவதாகவே எனக்கு தோன்றியது உண்டு. என்னைப்போன்ற நடுத்தர வர்க்க படிப்பை மூச்சாக கொள்ளாமல் ஏனோதானோ என்று படித்தவர்களுக்கு கூட சுஜாதாவின் எழுத்துக்கள் டானிக் போன்று பலதரப்பட்ட விபரங்களை படித்து தெரிந்துகொள்ள துாண்டியது முற்றிலும் உண்மை. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய விரும்பபும் அன்பன் துரை, தியாகராஜ், திருச்சி

Durai Thiyagaraj said...

சீரங்கத்து தேவதைகளை எத்தனை முறைபடித்தாலும் அலுக்காது ஒவ்வொருமுறை சீரங்கத்துக்கு (எனது வீடு திருச்சி சிந்தாமணியில்) வடக்குவாசலில் உள்ள வக்கீல் பிரபாகரைப் பார்க்க செல்லும் போதும் அந்த வீதிகளில் சுஜாதா சாரின் எழுத்துக்களில் வந்த மனிதர்கள் உலாவுவதாகவே எனக்கு தோன்றியது உண்டு. என்னைப்போன்ற நடுத்தர வர்க்க படிப்பை மூச்சாக கொள்ளாமல் ஏனோதானோ என்று படித்தவர்களுக்கு கூட சுஜாதாவின் எழுத்துக்கள் டானிக் போன்று பலதரப்பட்ட விபரங்களை படித்து தெரிந்துகொள்ள துாண்டியது முற்றிலும் உண்மை. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய விரும்பபும் அன்பன் துரை, தியாகராஜ், திருச்சி

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நன்றி நண்பரே.. வர விரும்பியும், காலம் அனுமதிக்காமல் செய்துவிட்டது.. ஆனாலும் நல்ல முறையில் ரிப்போர்ட்டிங் செய்துள்ளீர்கள்.. மிக்க நன்றி..

Chellamuthu Kuppusamy said...

Udhay,

Thanks for pointing out. Corrected to February.

Arivan, Thulasi, Durai thiyagaraj & Unmai thamizhan: Thanks for reading & comment.