Monday, September 15, 2008

அண்ணா நூற்றாண்டு விழா - ரொம்ப முக்கியம்!!

- செல்லமுத்து குப்புசாமி

இன்று தமிழ்நாட்டில் பொது விடுமுறை! தமிழ்நாட்டிற்கு தமிழ் நாடு என்ற பெயர் வரக் காரணமாக இருந்த மாமனிதனின் நூற்றாண்டு விழா.

அறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரையின் நூற்றாண்டு விழா இன்று. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து தான் சாகும் போது தனது குடும்பத்தை எளிய குடும்பமாகவே விட்டுச் சென்ற அண்ணா தமிழக அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையில் உண்டாக்கிய தாக்கமும், மாற்றமும் இன்றைய தலைமுறை நிச்சயமாக நினைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று.

இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் அடிக்கடி உச்சரிக்கும் இரு பெயர்கள் உண்டென்றால் அது காமராஜர் மற்றும் அண்ணாவினுடையதுதான். காமராஜர் இரண்டு முறை முதலமைச்சராக இருந்தார்; அண்ணா வெறும் இரண்டே ஆண்டுகளில் ஆண்டு விட்டு இறந்தார். சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று மாற்றியதற்கு நிகராக கலப்புத் திருமணத்தை/ சீர்திருத்த்தத் திருமணத்தை சட்ட ரீதியாக அங்கீகரித்ததையே அண்ணா ஏற்படுத்திய முக்கியமான மாற்றமாக நான் கருதுகிறேன்.

பண்டைய பல்லவ சாம்ராஜ்ஜுயத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் அண்ணா பிறந்தார். அந்தக் காலத்தில் பி.ஏ, எம்.ஏ படித்திருக்கிறார். தமிழ் மற்றும் ஆங்கில ஆகிய இரு மொழிகளிலும் சரளமாக எழுதவும் பேசவும் வல்ல ஆற்றல் அவருக்கு இருந்தது. Because என்ற சொல்லை மூன்று முறை தொடர்ச்சியாக உபயோகப்படுத்தியது, 'மாதமோ சித்திரை' என அடுக்குமொழி பேசியது என்பன அவரது டைமிங் சென்ஸ்க்கு சில உதாரணங்கள்.

1934 இல் அண்ணா அரசியல் & பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். அந்த வருடம் அவர் முதன் முறையாக பெரியாரைச் சந்தித்ததாகவும் சொல்லப்படுகிறது. திருப்பூர் கூட்டம் ஒன்றைல் உரையாற்றிய அண்ணாவின் பேச்சாற்றலைக் கண்டு பெரியார் வெகுவாகப் பாராட்டியிருக்கிறார். நீதிக் கட்சியில்(Justice party) துடிப்புடன் இயங்கியிருக்கிறார். அதன் ஆங்கில இதழான Justice இல் துணை ஆசிரியராக இருந்திருக்கிறார்.

1944 சேலத்தில் நடைபெற்ற நீதிக் கட்சி மாநாட்டில் அது 'திராவிடர் கழகம்' என்று பெயர் மாறியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் காலனி தேசங்களைக் கட்டி மேய்க்க முடியாது என்று பிரிட்டிஷ் மக்கள் அட்லியை இங்கிலாந்தின் பிரதமர் ஆக்கினார்கள். இந்தியாவுக்கு சுதந்திரம் என்று சொல்லித்தான் அவர் சர்ச்சிலைத் தோற்கடித்தார். வருணாசிரமப் பிடியில் இருந்து திராவிட இனம் விடுபட்டு சமூக விடுதலை அடைவதற்கு முன்னர் ஆங்கிலேயரிடம் இருந்து அரசியல் விடுதலை பெறுவதில் அர்த்தமே இல்லையென்ற பெரியார் 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதியை துக்க தினமாகக் கடைபிடித்தார்.

ஆனால் அண்ணா இதிலிருந்து வேறுபட்டார். இலங்கைத் தீவை ஆங்கிலேயரிடமிருந்து அப்படியே பெற்ற சிங்கள அரசியல் தலைமை தமிழையும் அங்கு வாழும் தமிழரையும் அழிப்பதற்கான ஆயத்த முயற்சிகளை முறியடிப்பதற்காக, கண்டி மலையகத்தில் வாழ்ந்த இலட்சக் கணக்கான மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதை ஜி.ஜி.பொன்னம்பலம் கண்டிக்காததைப் பொறுக்காமல் ஈழத்தில் தந்தை செல்வா 'தமிழரசுக் கட்சி' துவக்கினார். அதே 1949 ஆம் ஆண்டு தந்தை பெரியாரிடன் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து 'திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற இயகத்தை அண்ணா ஆரம்பித்தார். மணியம்மை மண விவகாரத்தைப் பிடிக்காமல் இந்த நடவடிக்கை என்று பேசப்பட்டாலும், பெரியார் சொல்வதைப் போல வெறும் சமூக நலனுக்காகப் போராடும் இயக்கமாகத் தொடராமல் மக்கள் செல்வாக்கை வைத்து அரசியலில் நுழைந்து ஆட்சியைப் பிடித்து மாற்றத்தை உண்டாக்க வேண்டும் என்பதே உண்மையான காரணமாக இருந்திருக்க வேண்டும்.

1949 இல் ஆரம்பித்த தி.மு.க 1967 இல் ஆட்சிக்கு வந்தது. அதற்குள்ளாக தமிழகத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சியில் பல மாறுதல்கள். குலக்கல்வி முறையைத் திணித்த ராஜாஜிக்கு காமராஜரிடம் இருந்து வெளிப்பட்ட எதிர்ப்பில் ராஜாஜியின் முதலமைச்சர் பதவி காமராஜருக்குச் சென்றது. அவர் இரண்டு முறை பொற்கால ஆட்சி புரிந்தார். அவரை பெரியார் மனதார ஆதரித்தார். "எனக்கு பதவி போதும். இனி கட்சிப் பணி செய்கிறேன்" என்று காமராஜர் விலகியது ஆட்சிக்கு வந்த பக்தவச்சலம் தமிழகத்தில் காங்கிரஸிற்குச் சாவுமணி அடித்தார். என்ன நடந்தாலும் சரி கட்டாயமாக இந்தியைத் திணிப்பது என்ற பக்தவச்சலத்தில் நிலைப்பாடு (1965) மக்கள் மத்தியில் வெறுப்பை உண்டாக்கியது.

இந்தி எதிர்ப்பில் அண்ணாவும், அவரது தம்பிகளும் ஈடுபட்டனர். ஆனால் உண்மையில் இந்தித் திணிப்பை எதிர்த்து முதலில் ஆக்ரோஷமாக இறங்கியது மாணவ சமூகமே ஆகும். தி.மு.க உதயமாவதற்கு முன்பே (1939) தாளமுத்து, நடராசன் ஆகியோர் மொழிப் போரில் உயிர் நீத்தனர். எப்படியோ பக்தவத்தலத்தில் டெல்லி எஜமான விசுவாசம் தி.மு.க வை ஆட்சியில் ஏற்றியது.

புற்று நோயால் பாதிக்கப்பட்ட அண்ணா இளம் வயதில் (பெரியார் 95, கருணாநிதி 85 +) 1969 ஆம் வருடம் காலமானார். அண்ணாவின் மரணம் தமிழ்நாட்டையே உலுக்கியது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஒன்றரைக் கோடி மக்கள் கலந்து கொண்டனர். உலக வரலாற்றில் அதற்கு முன்னும் சரி, பின்னும் சரி ஒரு தனி மனிதனின் மரணத்தில் இத்தனை பேர் கூடியதில்லை.

இளைஞர்களின் சிந்தனையை வெகுவாக மாற்றிய ஒரு சக்தியாக அண்ணாவைக் குறிப்பிடலாம். தி.மு.க என்பது ஒரு கூட்டு இயக்கமாக, ஜனநாயக அமைப்பாக உருவாக்கியவர் அவர். சீனப் போருக்குப் பின்னர் தனிநாடு கோரிக்கையைக் கைவிட்டு இந்திய தேசிய வெள்ளோட்டத்தில் கலக்கும் மிக முக்கியமான முடிவை எடுத்தவர் அவர்.

இந்தியா நெடுகிலும் எல்லா மாநிலத்திலும் பரிவர்த்தனைகள் இந்தியில் மட்டுமே இருந்திருக்கும் என்ற விதியைத் தடுத்து நிறுத்தி, 'இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே ஆட்சி மொழியாகத் தொடரும்' என்று நேருவின் வாயால் சொல்ல வைத்து இந்தியா இன்னமும் ஒரே தேசமாக இருப்பதற்கு அண்ணா முக்கியமான ஒரு வரலாற்றுக் காரணம். அவர் மட்டும் இல்லையென்றால் இந்தியாவில் ஆங்கிலமே இருந்திருக்காது. அல்லது இந்த அளவிற்கு இருந்திருக்காது. இன்றைக்கு இந்தியாவின் உலக முகமாகத் திகழும் தகவல் தொழில்நுட்பத் துறை இந்த அளவிற்கு வளர்ந்திருக்காது.

இன்றைக்கு சிலையாகிப் போன அண்ணாவை அவரது நூற்றாண்டு விழாவில் ஒரு கணம் நினைத்துப் பார்ப்போம்.

***********
அண்ணா சொன்னது:
“இந்த நாட்டிலே நம்மவர் வீடு கட்டுவர், அதிலே பல அறைகளும் அமைப்பர். மாட்டுக்கொட்டகை ஒரு பால், பொக்கிஷ அறை ஒருபால், சமையலறை மற்றொருபால் . . . மற்றெதை மறக்கினும் ஆண்டவனுக்குப் பூசை செய்ய அறை அமைக்க மட்டும் மறவார்; ஆனால் அறிவூட்டும் ஏடுகள் நிறைந்த படிப்பறையைப் பற்றிய பகற்கனவும் காணார். படிப்பறை மிகவும் முக்கியமானது. அவசியமானது. அலட்சியப்படுத்தக் கூடியதன்று. ஆயினும் அது அவர்தம் சிந்தனையில் தோன்றாது”
************

1 comment:

சுப.நற்குணன் - மலேசியா said...

அண்ணாவை நினைவுகூரும் கட்டுரை அருமை. தொடர்க வலைப்பதிவு பணி!