Monday, October 20, 2008

ஈழப் பிரச்சினை - சினிமாக்காரர்களின் குரல்!

- செல்லமுத்து குப்புசாமி

பாரதிராஜா எப்போதுமே ஒரு கம்பீரமான ஆளுமை, ஐந்து பேர் கூட்டமாக இருந்தாலும் சரி ஆயிரம் பேர் மத்தியில் மைக் பிடித்தாலும் சரி. சில வருடங்களுக்கு முன்னர் காவிரி நீர்ப் பிரச்சினைக்காக நெய்வேலியில் நடந்த கூட்டத்தில் அவர் பேசிய பேச்சு அடுத்த நாள் சன் டிவியில், "அவர் ஜெயலலிதா கிட்ட காசு வாங்கிட்டாருங்க" என்று ராதிகாவை விட்டுப் பேசச் செய்யும் அளவுக்கு இன்றைய முதல்வர் கருணாநிதியை வெகுவாகப் பாதித்து. மனதில் தோன்றியதை வெளிப்படையாகப் பேசுவது பாரதிராஜாவுக்கு வாடிக்கை என்ற நம்பிக்கை பரவலாக உண்டு.

அதனாலேயே ராமேஸ்வரத்தில் நடந்த ஈழத் தமிழருக்கு ஆதரவான தமிழ் இன உணர்வுக் கூட்டத்தை உன்னிப்பாக அவதானித்தேன். குறிப்பாக சீமானும், பாரதிராஜாவும் பேசுவதைக் கவனிக்க வேண்டும் என்று காத்திருந்தேன். 'என்னையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்' என்று அரசியல்வாதிகள் ஆளுக்கு ஒரு பக்கம் அப்பாவி ஈழத் தமிழர்களை சிங்கள இராணுவம் சூரையாடுவதற்கு 'ஆழ்ந்த இரங்கலும், வன்மையான கண்டனமும்' தெரிவிக்கிற சூழலில் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

இயக்குனர் அமீர் சொன்னது போல ஈழத் தமிழருக்கு ஆதரவாக ஒருவன் பேசினாலே அவன் 'ஈழத் தமிழருக்கு' ஆதரவானவனா அல்லது 'இலங்கைத் தமிழருக்கு' ஆதரவானவனா அல்லது 'விடுதலைப் புலிகளுக்கு' ஆதரவானவனா என்ற கேள்வி இந்தியாவில் எழுகிறது. அமெரிக்காக்காரன் சதாம் உசேனை தூக்கில் போட்டால் கூட சுதந்திரமாகக் கண்டிக்கும் நம் கருத்துச் சுதந்திரம் சில மைல் தொலைவில் நம் இனத்துக்காரர்கள் இடைவிடாமல் கொல்லப்படுவதைப் பற்றி மூச்சுக் கூட விட முடியாதபடி காணாமல் போகிறது.

அப்படி எதாவது பேசினால் இந்தியாவில் 'தேச துரோகி' முத்திரை குத்தப்பட்டு இராஜீவ் காந்தியைக் கொன்றவர்களுக்கு துணை போகிற குற்றத்துக்காக தடாவிலோ, பொடாவிலோ சிறை செல்ல நேரிடும். அதனால்தான் எப்போதுமே 'அப்பாவி இலங்கைத் தமிழர்கள்' என்று அடை மொழியைத் துணைக்கு இழுக்க வேண்டி வருகிறது. ஈழத் தமிழர் என்று சொல்லி விட்டால் போச்சு. இலங்கைத் தமிழர்கள் என்றால் அவர்கள் ஒருங்கிணைந்த இலங்கையின் இறையாண்மைக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்ற எண்ணத்தை நாம் கொண்டிருக்கிறோம் எனப் பொருள். ஈழத் தமிழர்கள் என்றால் அங்கு வாழும் தமிழர்களுக்கு தனியான பண்பாட்டு, கலாச்சார, இன அடையாளம் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்வதாகப் பொருள். இப்படிச் சொல்லும் போது தனித் தமிழீழம் அமைவதை நாம் ஆதரிக்கிறோம் என்று அர்த்தமாம். தமிழ், ஈழம் என்றாலே அது தனி நாடு கோரி ஆயுதம் தாங்கிப் போராடும் விடுதலைப் புலிகளுக்கு துணை போகிறோம் என்று புரிந்து கொள்ளப்படும் அபாயம் இருக்கிறது.

உண்மையில் 'ஈழத் தமிழர்', 'இலங்கைத் தமிழர்' மற்றும் 'விடுதலைப் புலிகள்' முதலிய மூன்றும் ஒன்றோடு ஒன்று பிரித்துப் பார்க்க முடியாதவை என்பதே புலிகளை ஆதரிப்போர் மட்டுமல்லாமல் எதிர்ப்போரும் ஏற்றுக்கொள்ளும் உண்மையாகும். தமிழீழம் என்பது இன்று நேற்று உருவானதல்ல. இந்தியாவில் இருப்பது மாதிரியான சமஷ்டி (•பெடரல்) அமைப்பை முன்னிறுத்தி தந்தை செல்வா நடத்திய சாத்வீக அறவழிப் போராட்டம் புறக்கணிக்கப்பட்ட உண்மையையும், தமிழருக்கு அடிப்படை உரிமைகள் அளிப்பதாக இரண்டு சிங்களக் கட்சிகளும் (சாலமன் பண்டாரநாயகா & டட்லி சேனநாயகா) தனித்தனியே செய்து கொண்ட உடன்படிக்கைகள் கிழித்துக் காற்றில் எறியப்பட்ட உண்மையையும் இன்றைக்கு நினைவு கூர வேண்டியிருக்கிறது. சுதந்திர இலங்கையின் தேசியக் கொடி சிங்கள மேலாண்மையைப் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்ட போது அதற்கு எதிராக ஒலித்த தமிழரின் குரல் நசுக்கப்பட்டது. காந்திய வழியில் இலங்கை சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக தந்தை செல்வா கடை பிடித்தார். இன்றைக்கும் கூட இலங்கையின் சிங்களக் கொடி தமிழர் வீடுகளில் பறப்பதில்லை. அவர்கள் சுதந்திர நாளும் கொண்டாடுவதில்லை.

தந்தை செல்வாவின் மரணத்திற்குப் பிறகு ஈழத் தமிழரின் தலைமை அமிர்தலிங்கத்தின் கைக்கு வந்தது. தனி நாடு ஒன்றுதான் என்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தை தமிழீழ மக்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டு அளித்த தீர்ப்பை அமிர்தலிங்கத்திற்கு வழங்கினர். சில ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானிடம் இருந்து பங்களாதேஷை விடுவித்துக் கொடுத்தது போல நம்மையும் இந்தியா விடுவித்துக் கொடுக்கும் என்று அவர் அப்பாவித்தனமாக நம்பினார். ஜெயவர்த்தனாவின் நயவஞ்சக அரசியலைச் சமாளிக்க முடியாமல் தனது கோரிக்கையைத் தளர்த்தி தமிழீழ மக்கள் மத்தியில் தனக்கிருந்த செல்வாக்கையும் இழந்தார். தந்தை செல்வாவின் மரணம் முதல் 1983 இனப் படுகொலை வரைக்கும் அமிர்தலிங்கம் தமிழீழ மக்களின் தலைமையை வகித்திருந்தார். அதன் பிறகு போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் தலைமை பிரபாரகனிடம் கை மாறியது. பல போராட்டக் குழுக்கள் இருந்தாலும் காலப் போக்கில் தனது இலக்கில் இருந்து திசை விலகாமல் இருப்பது புலிகள் இயக்கம் மட்டுமே.

இலங்கை, இந்திய உளவுத் துறைகளின் manipulation க்கு உள்ளாகதது மட்டுமல்லாமல் அதை outsmart செய்ததும் பிரபாகரனின் சாமர்த்தியம் என்றுதான் சொல்ல வேண்டும். இன்றைக்கு தமிழீழ மக்களின் பிரச்சினைகளை சர்வதேச சமுதயாத்திற்கு அம்பலப்படுத்தும் தலைமை இலங்கையில் இல்லை. அனந்தசேகரிகளும், டக்ளஸ் தேவானந்தாக்களும், கருணாக்களும் சிங்களர்களோடு சிங்களர்களாகக் கை கோர்த்து விட்டதால் பேசப் போவதில்லை. ஆன்டன் பாலசிங்கத்தின் மறைவு சமாதானத் தீர்விற்கான கதவுகளை மூடியது. தமிழ்ச் செல்வனின் கொலை வெளி உலகிற்குக் கேட்ட தமிழீழ மக்களின் கடைசிக் குரலையும் ஒழித்து விட்டது. சிங்கள இனவெறி இராணுவம் இனி மேல் என்ன அட்டூழியம் செய்தாலும் அது சர்வதேசச் சமுதாயத்திற்குத் தெரியப் போவதில்லை. 1983 இனப் படுகொலையின் போது செய்த கொடுமைகளை அனிதா பிரதாப் பதிவு செய்தது போல இப்போது சர்வதேச ஊடகங்கள் எதுவும் பதிவு செய்யப் போவதுமில்லை. கொழும்பிற்கு வெளியே பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

இதுதான் கள நிலவரம். அதாவது உண்மையான கள நிலவரம் வெளி உலகிற்குத் தெரிவதில்லை என்பதே உண்மையான நிலவரம். 1983 இனப் படுகொலையின் போது தமிழகம் பற்றி எரிந்தது. கல்லூரியிலும், பள்ளியிலும் மாணவர்கள் போராடினார்கள். ஆனால் இன்றைய தலை முறையினருக்கு இலங்கை இனப் பிரச்சினையின் பின்னணியே தெரிவதில்லை. ராமேஸ்வர கூட்டத்தைப் பார்த்த பிறகுதான் பிரபாரகன் தமிழரா என்று வினாவையே என் மனைவி என்னிடம் கேட்டார். இன்றைய தலைமுறைக்கு அந்தப் பிரச்சினையைப் பற்றி தெரியாமல் போனதற்கு திட்டமிட்டு ஊதிப் பெரிதாக்கப்படுகிற 'ராஜீவ் காந்தி கொலை' என்கிற பூதம் காரணமாக இருக்கிறது. இராஜீவ் கொலைக்கும் இஸ்ரேல் மொசாட், CIA, சந்திராசாமி (Beyond tigers - Rajiv Sharma புத்தகம் வாசிக்க) ஆகியோருக்கும் உள்ள தொடர்பு இன்னமும் தெளிவாக விளக்கப்படவில்லை. தானாகவே வந்து சரணடைந்த மிராசுதார் சண்முகம் தரையில் கால் தொட்டபடியே தூக்கு மாட்டி இறந்து போன மர்மமும் விளக்கப்படவில்லை.

பிரச்சினை அதுவல்ல. இராஜீவ் காந்தி கொலைக்கு புலிகளும், ஈழத் தமிழர்களுமே பொறுப்பாக இருக்கட்டும். அதற்காக ஈழத் தமிழர் என்ற இனமே இருக்கக் கூடாது எனக் கருதுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்! நாம் மகாத்மாவைக் கொன்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்களை, அந்தப் பிரிவினரையும் ஒட்டு மொத்தமாக அழித்து விடவில்லை. இந்திராவைக் கொன்ற சீக்கிய இனத்தையும் நாம் ஒட்டுமொத்தமாக அழித்து விடவில்லை.

குமார் பொன்னம்பலம் போன்ற ஒரு சிலரையும் சிங்களர்கள் சாகடித்து விட்ட நிலையில் ஈழத் தமிழர்களுக்காக ஒலிக்கிற குரல் என்பது இன்றைக்கு இலங்கைத் தீவில் சுத்தமாக இல்லை. அவர்களுக்கான குரல் ஒலிக்க வேண்டுமானால் அது தமிழகத்தில் இருந்து எழுந்தால் மட்டுமே உண்டு. அது அரசியல் தலைவர்களிடம் இருந்து எழும் என்று நம்ப முடியாது. இலங்கைப் பிரச்சினை என்பது நமது தமிழக அரசியல்வாதிகளுக்கு சோற்றுக்குத் தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் போல. இன்றைய இளைய தலைமுறைக்கு அதன் பின்னணியே தெரியாத போது 1983 இல் நடந்தது போல மாணவர்கள் போராடுவார்கள் என்று நினைப்பது தவறு.

இலங்கைத் தீவில் தமிழரும், சிங்களரும் ஒன்றாக வாழ முடியாது என்ற சூழ்நிலையை உருவாக்கியது சிங்களரே என்ற உண்மை இந்தியாவுக்குத் தெரியாதா? அல்லது கருணாநிதிக்குத்தான் தெரியாதா? எம்.ஜி.ஆர் சாகும் வரை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்தார் என்ற உண்மை அவர் கூடவே இருந்த ஜெயலலிதாவுக்குத்தான் தெரியாதா? 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு முந்தைய நாள் பிரபாகரனோடு ராஜீவ் நடத்திய பேரத்தின் போது கூடவே இருந்த பண்ருட்டி ராமச்சந்திரனை துணைக்கு வைத்திருக்கும் விஜயகாந்திற்குத்தான் தெரியாதா?

ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தீர்வு காண வேண்டும் என்ற இந்தியாவின் அட்வைஸ் தமாஷாக இருக்கிறது. ஒருங்கிணைந்த சமஷ்டி அமைப்பிற்காக தந்தை செல்வா முப்பது ஆண்டுகளாகப் போராடியும் அது கிடைக்கவில்லை. அதன் பிறகு சாத்வீகமாகவும், ஆயுதம் தாங்கியும் தனி நாடு கோரிப் போராடிய போது கூட சிங்களர்கள் இந்தியாவில் இருப்பது போல மாநில சுயாட்சிக்கு ஒப்புக்கொள்ளவில்லை. அப்படி இருக்கும் போது ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தமிழர்கள் வாழ வேண்டும் என்று சொல்ல நமக்கென்ன தகுதி இருக்கிறது!

உண்மையில் இலங்கைத் தீவில் தமிழீழம் அமைவதை இந்திய மத்திய அரசு எதிர்க்கிறது. அங்கு வாழும் ஒட்டு மொத்தத் தமிழினம் அழிந்தால் கூடப் பரவாயில்லை, தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை என்று இந்தியா சகித்துக் கொல்கிறது. ஏனோ நமது மீடியாக்கள் அவர்களை இந்திய மீனவர்களாகக் கருதாமல் தமிழக மீனவர்களாக மட்டுமே பார்க்கின்றன. இந்தியாவின் ஜென்ம எதிரியாக உலகமே ஒப்புக்கொள்ளும் பாகிஸ்தான் கூட இந்திய மீனவர்கள் அவர்களது கடல் எல்லைக்குள் சென்றால் கொல்லாமல் திருப்பு அனுப்புகிறது. தமிழக மீனவர்கள் மீது பாயும் ஒவ்வொரு சிங்களக் குண்டும் இந்திய இறையாண்மை மீது பாய்ந்து அதன் ஒருமைப்பாட்டை ஓட்டையாக்குகிறது.

ஆனால் மக்களுக்கு இதெல்லாம் தெரியவா போகிறது? இயக்குனர் சேரன் குறிப்பிட்டது போல நமக்கு சோறு பொங்கணும், மெகா சீரியல் பாக்கணும். ஏகப்பட்ட வேலை!

மக்கள் எழுச்சி ஏற்பட்டு இலங்கைத் தமிழருக்கு தீர்வு காண வேண்டும் என்ற நெருக்கடி தமிழக அரசியல்வாதிகள் மீது விழுந்தால் மட்டுமே அவர்கள் டெல்லியை நெருக்குவார்கள். சிங்கள இராணுவத்திற்கு நேரடியாக இராணுவத் தளவாடங்களையும், போர் வீரர்களையும் (இது சமீபத்தில் அம்பலமாகியிருக்கிறது) கொடுக்கும் டெல்லி தமிழக அரசியல் கட்சிகளின் நெருக்கடி இல்லாமல் இலங்கையின் மீது அழுத்தம் கொடுக்காது.

இதெலாம் நடப்பதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு என்றே தோன்றுகிறது. இதில் நியாயம், மனித உரிமை, அடிப்படை வாழ்வுரிமை, சுதந்திரம் என்பதெல்லாம் சும்மா. ஈழத் தமிழரின் விடுதலை என்பதை இந்தியா ஒருக்காலும் ஏற்காது. இலங்கையில் தனித் தமிழீழம் அமைந்தால் தமிழகத்திலும் தனி நாட்டுக் கோரிக்கை எழும் என்ற மொன்னையான வாதம் திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது.

பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் பிரிந்த போது மேற்கு வங்காளிகளும் தனிநாடு கேட்பார்கள் என்ற சந்தேகம் ஏற்படவில்லை. இலங்கையில் ஈழம் பிரிந்தால் மட்டும் தமிழ்நாடு பிரியும் என்ற சந்தேகம் ஏன்? இத்தனைக்கும் மேற்கு வங்கமும், பங்களாதேஷ¤ம் ஒன்றோடு ஒன்று ஒட்டியிருக்கின்றன. தமிழகமும், ஈழமும் என்றுமே ஒன்றாக இருந்ததில்லை. நிலப் பரப்பும் ஒட்டியிருந்ததில்லை.

அப்படி இருக்க தமிழன் மீது மட்டும் என்ன சந்தேகம்? இதுதான் இயக்குனர் சீமான் விடுத்த கேள்வி. அதையே பாரதிராஜா வழிமொழிந்தார்.

(இலங்கையில் தமிழர்கள் என்னவோ பிரிட்டிஷ் காலத்தில் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யக் கொண்டு செல்லப்பட்டவர்கள் மட்டுமே என்று கூட சிலர் நம்புகின்றனர். அவர்கள் ஒரு சிறு பிரிவினர் மட்டுமே. கண்டி மலையகப் பகுதிகளில் வசிக்கும் இவர்கள் மலையகத் தமிழர்கள் எனப்படுகின்றனர். ஆனால் ஈழத் தமிழர்கள் என்போர் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் வசிப்போர். அவர்கள் அந்தத் தீவின் பூர்வ குடிமக்கள். தமிழ் மன்னன் எல்லாளன் கி.மு காலத்தில் அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆண்டிருக்கிறான். 'விஜயன்' என்ற இளவரசன் இலங்கையில் வந்திறங்கிய பிறகு அவன் தோற்றுவித்ததுதான் சிங்கள இனம். தொடக்க காலத்தில் சிங்கள மொழிக்கு எழுத்து வடிவம் இருக்கவில்லை. சிங்கள மொழிக்கு தமிழ் எழுத்துக்களையே பயன்படுத்தினர் என்று தகவல் கிடைக்கிறது.)