Tuesday, November 25, 2008

MGR = NTR எனில் கேப்டன் = சிரஞ்சீவி??

- செல்லமுத்து குப்புசாமி


நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. மறுபடியும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிப்பது சந்தேகம். சமீபத்தில் இந்தியாவின் முக்கியத் தொழிலதிபர்கள் அத்வானி வீட்டில் கூடிப் பேசியதே அதற்கு முன்னோட்டமாகத் தென்படுகிறது. 'ஜெயலலிதா விரிக்கும் கூட்டணி வலையில் சிக்கி சில கட்சிகள் இரைகப் போகும்' நிலையைக் கண்டு கருணாநிதி வேறு விசனப்படுகிறார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத போது, அந்த அரசுக்கு தி.மு.கவின் தயவு தேவைப்படாத போது மாநில அரசுக்கு காங்கிரஸ் அளிக்கும் ஆதரவு முக்கியமானதாக இருக்கும். இந்திய இறையாண்மைக்குக் குந்தகம் விளைவிக்கும் குற்றத்திற்காக பழ.நெடுமாறனும், பாரதிராஜாவும் சிறைக்கு அனுப்பப்படும் நிலை கூட வரலாம்.

'கவனிக்க வேண்டிய சக்தி' என்று சொல்லப்படும் விஜயகாந்தின் உண்மையான பலம் வரவிருக்கும் தேர்தலில் பரிசோதனைக்கு ஆளாகும். அவரை விடவும் கவனிக்க வேண்டிய சக்தி 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி. ஏகப்பட்ட பிரம்மாண்டத்தோடு திருப்பதியில் அவர் தொடங்கிய பிரஜா ராஜ்ஜியம் கட்சி எவ்வளவு வாக்குகளை அள்ளப் போகிறது என்பது ஆந்திர அரசியல் பார்வையாளர்களுக்கு மட்டுமல்லாமல் நம்மைப் போன்ற வெகுஜனத்திற்கும் சுவாரசியமான ஒன்றாக இருக்கும்.

ஆந்திரப் பிரதேச மாநிலம் தெலுங்கானா, ராயலசீமா, ஆந்திரா ஆகிய மூன்று பிரதேசங்களை உள்ளடக்கியது. இதில் தெலுங்கானாவை முதலில் கவனிப்போம்.

ஹைதராபாத் இருப்பது தெலுக்கானாவில். அந்தப் பிரதேசம் நிஜாம் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. 1947 இல் பிரிட்டிஷார் இந்தியாவிற்கு விடுதலை கொடுத்தாலும் ஹைதராபாத் மாகாணம் (தெலுங்கானா) இந்தியாவின் ஒரு பகுதியாக இணையவில்லை. 1948 இல் அது இந்தியாவோடு சேர்க்கப்பட்டு ஹைதராபாத் மாகாணம் என்று அறியப்பட்டது. சென்னை மாகாணத்தில் இருந்து சில பகுதிகளைப் பிரித்து தெலுங்கு பேசும் மக்களுக்காக கர்னூலை(Karnool) தலைநகராகக் கொண்டு ஆந்திர மாநிலம் 1953 இல் உருவானது. இது ஹைதராபாத் மாகாணத்தோடு கலந்து 1956 இல் ஆந்திரப் பிரதேசம் என்ற மாநிலமாக உருமாறியது.

இப்போதைய ஆந்திரப் பிரதேசத்தின் வடமேற்கே ஒன்பது மாவட்டங்களை உள்ளடக்கிடதும், தனித்துவமான வரலாறு கொண்டதுமான தெலுங்கானா பகுதி எக்காலத்திலும் நேரடியாக பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருக்கவில்லை. பெரும்பாலான மக்கள் தெலுங்கும், ஹைதராபாத் மற்றும் அதைச் சுற்றி சில ஊர்களில் உருதும் பேசுகிறார்கர். மேடான நிலப்பரப்பு, வறட்சியான, பின்தங்கிய பிரதேசம். சுருங்கச் சொன்னால் இதுதான் தெலுங்கானா.

மிச்சமிருக்கும் பகுதிகள் ராயஜசீமா என்றும் (கடலோர) ஆந்திரா என்றும் அறியப்படுகின்றன. கர்னூல், கடப்பா, அனந்தப்பூர் மற்றும் சித்தூர் மாவட்டங்களை உள்ளடக்கியது ராஜசீமா. திருப்பதி, காளகஸ்தி. புட்டப்பர்த்தி எல்லாம் இங்கேதான் உள்ளன. கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி பகுதி கூட இப்பிரதேசத்தைச் சேர்ந்ததுதான். தெலுங்கான அளவுக்கு பின்தங்கிய பகுதி இல்லையென்ற போதிலும் கடலோர ஆந்திராவைப் போல முன்னேறிய, வளமான பகுதி கிடையாது. மதுரை, திருநெல்வேலி மக்கா கணக்கா அடிதடிக்குப் பேர் போன மக்கள்.

ஆந்திராவில் கிருஷ்ணா, கோதாவரி ஆகிய ஜீவநதிகள் பாய்கின்றன. செழிப்பான பிரதேசம். தொழில்களும் அதிகம். தொழிற்சாலைகளும் அதிகம். இந்தியாவின் முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்றான விசாகபட்டினம் இங்கே உண்டு. தெலுங்கான, ராயலசீமா வாசிகளுக்கு ஆந்திரா மீது எப்போதுமே ஒரு வித பொறாமை உண்டு.


1982 இல் தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கிய என்.டி.ராமாராவ் ஒன்பதே மாதங்களில் முதலமைச்சர் ஆனார். அவரை கடவுளாகவே மக்கள் கருதினார்கள். இரண்டாவது தடவை முதல்வராக இருந்த போது அவரது மருமகன் சந்திரபாபு நாயுடு 1995 இல் எம்.எல்.ஏக்களை எல்லாம் வளைத்துப் போட்டு கட்சியையும், ஆட்சியையும் தனதாக்கிக் கொண்டார். 2004 தேர்தலில் காங்கிரஸிடம் தோற்று Y.S.ராஜசேகர ரெட்டி முதல்வர் ஆனாலும் ஆந்திரப் பிரதேசத்தை வளர்ச்சிப் பாதைக்கு திசை மாற்றிய தீர்க்கதரிசி நாயுடு எனலாம்.


அந்தத் தேர்தலில் நாயுடு தோற்றதற்கு தெலுங்கானா பிரச்சினையும் ஒரு காரணம். புறக்கணிப்பட்ட தெலுங்கானா மக்களுக்கு தனிமாநிலக் கோரிக்கை நீண்ட நாட்களாகவே உண்டு. நாயுடு அதை ஊக்குவிக்கவில்லை. அதை எதிர்த்து கலகக் கொடி தூக்கினார் KCR எனப்படும் சந்திரசேகர் ராவ். பார்ப்பதற்கு கார்ட்டூன் கேரக்டர் மாதிரித் தோற்றமளிக்கும் இவர் புல்லரிக்க வைக்கும் பேச்சாளர். தெலுங்கு தேசத்தில் இருந்து விலகிய KCR தனித் தெலுங்கானா அமைக்காமல் ஓய்வதில்லை என்று தெலுங்கான ராஷ்டிரிய சமிதி(TRS) கட்சியை ஆரம்பித்தார். தெலுங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சிக்கு இது மிகப் பெரிய பின்னடைவாக அமைந்தது.

கடந்த 2004 சட்ட மன்றத் தேர்தலில் TRS காங்கிரசோடு கூட்டணி சேர்ந்தது. கூடவே நாடாளுமன்றத் தேர்தல் நடந்தேறியது. இரண்டிலுமே காங்கிரஸ் வென்றது. ஆட்சிக்கு வந்தால் தெலுங்கானா மாநிலம் அமைப்போம் என்று சோனியா காந்தியும், ராஜசேகர ரெட்டியும் KCR க்கு உறுதியளித்திருந்தனர். மத்திய அரசின் ‘குறைந்தபட்ச செயல் திட்டத்தில்' கூட அது இடம் பெற்றது. ஆயினும் ஆட்சிக்கு வந்ததும் வாக்குறுதியை மறந்தது காங்கிரஸ். அது வேறு கதை.


இப்போதைய முதல்வர் ராஜசேகர ரெட்டி ராயலசீமா பகுதியைச் சேர்ந்தவர். அங்கே அவருக்கு அமோகமான செல்வாக்கு. காங்கிரஸுக்கு மவுசு. கடலோர ஆந்திராவில் தெலுங்கு தேசம் கெட்டி. என் ஆந்திர நண்பர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். ராயலசீமா காங்கிரஸ் கோட்டையாகவும், ஆந்திரா தெலுங்கு தேசத்தின் கோட்டையாகவும் உள்ளதென்கிறார்கள். தெலுங்கான மக்கள் இரண்டு கட்சிகளையும் விட TRS ஐ கூடுதலாக நம்புவதாகவும் சொல்கிறார்கள்.

இப்படிப்பட்ட பின்னணியில் சிரஞ்சீவி அரசியலுக்கு வந்திருக்கிறார். என்.டி.ராமராவ் தேர்ந்தெடுத்த அதே பாதை. இருவரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். ஆனால் அவர் காலம் வேறு, இவர் காலம் வேறு. எனினும் தெலுங்கு தேசத்தின் கோட்டை என்று கருதப்படும் ஆந்திராவில் சிரஞ்சீவி பாதிப்பு ஏற்படுத்துவார் என்று நம்பப்படுகிறது.

ராயலசீமா மற்றும் தெலுங்கானாவிலும் சிரஞ்சீவையைக் காண மக்கள் கூடுகிறார்கள். ஆர்ப்பரிக்கிறார்கள். ”அமெரிக்காவுக்கு ஒபாமா, ஆந்திரப் பிரதேசத்திற்கு நான்” என்று புதிய மாற்றத்தை அவர் சிருஷ்டிக்கப் போவதாக அறிக்கை விடுகிறார். ”சிரஞ்சீவி நிற்கும் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன்” என்று அவரோடு கதாநாயகியாக நடித்த ரோஜா சவால் விடுகிறார்.

எந்த அளவுக்கு மக்கள் செல்வாக்கை வாக்குச் சீட்டுகளாக சிரஞ்சீவியால் மாற்ற முடியும் என்பதே கேள்வி. இன்னொரு எம்ஜியாராக, என்டியாராக ஆவாரா அல்லது அரசியலில் தோற்றுப் போன சிவாஜியாக மாறுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

உயிரோசை - கட்டுரைகள்

உயிரோசை இணைய வார இதழில் எழுதி வரும் கட்டுரைகளின் சுட்டிகள் கீழே.

- செல்லமுத்து குப்புசாமி

26. கம்யூனிஸ்டுகளின் தேவை என்ற தலைப்பில் 1-ஜூன்-2009 உயிரோசைக்கு எழுதியது
25. வெற்றி என்பது என்ன? என்ற தலைப்பில் 18-மே-2009 உயிரோசைக்கு எழுதியது
24. கலைஞரின் உண்ணாவிரத ஆயுதம் - தீர்மானித்த ஜெயலலிதா என்ற தலைப்பில் 27-ஏப்ரல்-2009 உயிரோசைக்கு எழுதியது.
23. இறுதிப் போரும், இந்திய முதலாளிகளும்!! என்ற தலைப்பில் 13-ஏப்ரல்-2009 உயிரோசைக்கு எழுதியது.
22. கறுப்புப் பணம்: ரஜினியும் அத்வானியும்
21. பணம் வீங்கும் விதம்
20. நிலையின்மையின் அமைதியின்மை - ஐ.டி.ஊழியர்களின் நடப்பு நிலை
19. வறுமையின் வரையறை
18. பெருந்தீனி - இராணுவத்திற்கான செலவு
17. வீடும் வாழ்வும்
16. முத்துக்குமரனின் மரணம் : இன்னும் அணையாத தணல்
15. தொடரும் சத்ய சோதனை
14. பெட்ரோல் அரசியல்
13. சத்யமேவ ஜெயதே!
12. சத்தியத்தின் சரித்திரம்
11. புலமையும் வறுமையும் - தமிழ் எழுத்தாளர்களின் நிலைமை
10. "எங்களுக்கு வருடம் ஒரு டாலர் சம்பளம் போதும்"
9. பாகப் பிரிவினையும் பங்காளிகளும்
8. பெண்! (அதிகரிக்கும் விவாகரத்துகள்)
7. என்னவாகப் போகிறது மென்பொருள் வல்லுனர் சமூகம்?
6. கனவு இல்லம்: கலைந்த கனவு
5. சரியும் பொருளாதாரம், சாவின் அழைப்பு
4. தங்கம் எதற்காக
3. வட்டி எனும் பூதம்
2. அணு ஒப்பந்தம் தொடரும் விவாதம்
1. திவாலாகும் அமெரிக்க நிதி நிறுவனங்கள்