Wednesday, December 24, 2008

பிரபாகரன் - புத்தக அறிமுகம்

- செல்லமுத்து குப்புசாமி

சில பேர் வாழ்த்துச் சொன்னார்கள். சில பேர் எச்சரித்தார்கள். வேறு சிலர் அனுதாபப்பட்டார்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையை புத்தகமாக எழுதியிருக்கிறேன். அதற்குத்தான் எல்லாமே.ஆன்லைனில் ஆர்டர் செய்ய

புத்தகம் குறித்த சரவணனின் பதிவு - அண்ணியின் அணைப்பிலிருந்து பிரபாகரன் வரை ...

விருமாண்டி படம் பார்த்திருப்பீர்கள். ஒரே சம்பவத்தை கதாநாயகன் கமலும், வில்லன் பசுபதியும் வேறு விதமாக விவரிப்பார்கள். ஒரு சம்பவத்தை அதை விவரிப்பவன் தன் வசதிக்கு ஏற்ப ’கூடக் குறைய’ சொல்வதே ’ரஷோமான் விளைவு’. ரஷோமான் என்ற ஜப்பானியப் படம் ஒரு கொலையை நான்கு பேர் நான்கு விதமாகச் விவரிப்பதை அடிப்படையாகக் கொண்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையும், போராட்டமும் கூட அப்படித்தான். பல்வேறு மர்மங்களும், யூகங்களும் நிறைந்ததாகவே அவரது வாழ்க்கை சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறது ... அதைச் சித்தரிப்பவர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு கோணங்களில் பிரபாகரனைப் பற்றிய கதைகள் உலவுகின்றன. ஒரு சாரார் அவரை உலகமகா தீவிரவாதி என்று வர்ணிக்கிறார்கள். ராஜீவ் காந்தியைக் கொன்ற கொலைகாரன் என்று வெறுக்கிறார்கள். மற்றொரு சாரார் அவரை உலகமகா புரட்சிக்காரன் என்றும், விடுதலைப் போராளி என்றும் கொண்டாடுகின்றனர். சிலர் இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையை எடுக்கின்றனர்.

உண்மையில் அவர் யார்? சுருங்கச் சொன்னால் இலங்கைத் தீவில் வாழும் தமிழ் பேசும் மக்கள் நடத்திய நீண்டதொரு உரிமைப் போராட்டத்தில் மிகவும் காத்திரமான அத்தியாயத்தை எழுதியவர். அவரை கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்களும் சரி, எதிர்ப்பவர்களும் சரி அவரது வாழ்க்கைப் பாதையை, அந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்குத் தூண்டிய வரலாற்றுப் பின்னணியைப் பற்றி எந்த அளவுக்கு அறிந்து வைத்துள்ளனர் என்பது சந்தேகத்துக்குரியதாகவே இருக்கிறது.

எனக்கும் அப்படித்தான் இருந்தது. கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைகளின் முதல் பக்கத்தைத் தொடர்ந்து ஆக்கிரமிக்கும் பரபரப்புக்குரிய அந்த மனிதர் எதற்காக ஆயுதம் தூக்கினார் என்பதைத் தெரிந்து கொள்ளும் தேடல் இருந்தது. அதன் விளைவாக உருவானதுதான் இந்தப் புத்தகம்.

ஈழப் பிரச்சினையையும், விடுதலைப் புலிகளையும் உணர்வுப் பூர்வமாக அணுகுவது இந்த நூலில் நோக்கமல்ல. வரலாற்று ரீதியாக, அறிவுத் தளத்தில் அணுகும் நோக்கில் இது வெளியாகிறது.

வாழ்த்தும், வசவும் வரவேற்கப்படுகின்றன.

ஈழம் - வரலாற்றுப் பின்னணி 1

-செல்லமுத்து குப்புசாமி

ஆசிப் மீரான் எனது நண்பர். 'பண்புடன்' வலைக் குழுமத்திற்காக எழுதிய ஏழு கட்டுரைகளும் இங்கே ஒன்றன் பின் ஒன்றாக.

*************

2007 அக்டோபர் 22ஆம் தேதி. எங்கிருந்து வந்தது என்று கணிக்க முடியாத விமானங்கள் இலங்கை இராணுவத்திற்குச் சொந்தமான அனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது நடத்திய தாக்குதலில் விமானப்படையைச் சேர்ந்த 18 விமானங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக பிரிட்டனிலிருந்து வெளிவரும் டெலிகிராப் நாளேடு செய்தி வெளியிட்டது. இந்தத் தாக்குதலின் விளைவாக சுமார் 2000 கோடி ரூபாய் பெறுமான விமானங்களை இலங்கை அரசு இழந்தது. இலங்கை இராணுவம் இயலாமையின் வெளிப்பாடாக இந்தத் தாக்குதலில் உயிரிழந்த இருபது புலிப் போராளிகளின் உடல்களை நிர்வாணமாக்கிக் காட்சிக்கு வைத்து ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டது.

உலகத்தையே மூக்கின் மீது விரலை வைக்கச் செய்த துணிகரமான இந்தத் தாக்குதலை விடுதலைப் புலிகள் 'ஆபரேஷன் எல்லாளன்' என்று பெயரிட்டனர். யார் இந்த எல்லாளன்? அனுராதபுரத்தில் நடத்திய தாக்குதலுக்கு ஏன் அவன் பெயர் வைக்கவேண்டும்? அனுராதபுரத்திற்கும் எல்லாளனுக்கும் என்ன தொடர்பு?

இலங்கைத் தீவின் மையப் பகுதியில் உள்ள அனுராதபுரம் நகரைத் தலைநகராகக் கொண்டு இலங்கைத் தீவை 44 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆண்ட தமிழ் மன்னன்தான் 'எல்லாளன்'. கி.மு. 205 முதல் கி.மு. 161 வரை அவர் ஆட்சி புரிந்தார். இறுதியில் கி.மு. 161 இல் துட்டகைமுனு என்ற சிங்கள இளவரசன் எல்லாளனை வீழ்த்தினான். எல்லாளனைத் தோற்கடித்த துட்டகைமுனு தனது அரசிற்கு சிங்கக் கொடியை நிர்மாணித்துக்கொண்டான். தற்போதையை இலங்கைக் கொடியிலும் சிங்கம் உள்ளதைப் பற்றிய தனிக் கதை பின்னர் காத்திருக்கிறது. எல்லாளன் வீழ்ந்த காலம் தொட்டு அனுராதபுரம் சிங்கள அரசுகளின் தலைநகராகத் திகழ்ந்தது. இன்றைய வரலாறு, குறிப்பா சிங்கள வரலாறு, அனுராதபுரத்தை புராதனச் சிங்கள பவுத்தத் தலமாகப் பதிவு செய்கிறது.

கி.பி. ஆறாம் நூற்றாண்டில் மாஹாநாமா என்ற புத்தத் துறவி பாலி மொழியில் எழுதிய மாகாவம்சம் என்ற புத்தப் புராண நூல் எல்லாளனை வில்லனாக அடையாளம் காட்டி மகிழ்ந்தது. சிங்களத்தை புத்த மதத்தின் பாதுகாவலனாகப் போற்றிப் புகழ்ந்து, தமிழ் மக்கள் மீதும் மன்னர்கள் மீதும் இந்து மத நம்பிக்கை மீதும் வெறுப்பை உமிழ்ந்து சிங்கள இனவாதத்தை உருவாக்கியதில் மாகாவம்சத்திற்கு முக்கியப் பங்குண்டு. அன்பையும், சகோதரத்துவத்தையும் போதித்த புத்த பிரானின் வழிவந்த துறவிகள் தங்கள் பிழைப்புக்காகவும், செல்வாக்கைத் தக்க வைப்பதற்காகவும் இனத் துவேஷத்தை விதைத்த அலவத்தை மஹானாமா அரங்கேற்றினார். சிங்கள பெளத்த இனவாதத்தின் வேர் மஹாநாமாவில் இருந்து ஆரம்பிக்கிறது.

மேற்கொண்டு பேசும் முன்பு தற்போதைய இலங்கையின் பிராந்தியங்களைப் பற்றிய சிறு அறிமுகம் தேவைப்படுகிறது. இந்தியாவைப் போல சமஷ்டி (ஃபெடரல்) அமைப்பு இலங்கையில் கிடையாது. சமஷ்டி அமைப்பிலே மத்திய அரசு என்ற ஒன்று இருக்கும். அதற்கென்று சில அதிகாரங்கள் உண்டு. அதைத் தவிர மாநில அரசுகளும் உண்டு. அவற்றுக்கென்று சில அதிகாரங்கள் உண்டு. நிலச் சட்டங்கள், கல்வி, மாநில அளவிலான வரிகள், பட்ஜெட், பிரத்யேக காவல் துறை என்று பல சுய நிர்ணய உரிமைகள் மாநிலத்திற்கு உண்டு. இந்தியா, அமெரிக்கா முதலிய நாடுகளில் இத்தகைய சமஷ்டி அமைப்பைக் காண்கிறோம். ஆனால் இலங்கையில் நடைமுறையில் உள்ளது யூனிடரி சிஸ்டம். அங்கே சிங்களர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரேயொரு அரசு மட்டும் கொழும்பு நகரில் இருந்து இயங்குகிறது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஆந்திரா, ராயலசீமா, தெலுங்கானா என்று பிராந்தியங்கள் உள்ளது போல இலங்கையில் கீழ்க்கண்ட 9 பிராந்தியங்களும், 25 மாவட்டங்களும் உள்ளன.

1. மத்திய மாகாணம்
கண்டி, Matale, Nuwara Eliya ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது
2. கிழக்கு மாகாணம்
அம்பாறை, மட்டகளப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது
3. வட மத்திய மாகாணம்
அனுராதபுரம், Polonnaruwa ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கியது
4. வடக்கு மாகாணம்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத் தீவு, வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கியது
5. வட மேற்கு மாகாணம்
Kurunegala, புத்தளம் ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கியது
6. Sabaragamuwa மாகாணம்
Kegalle, ரத்னபுரா ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கியது
7. தெற்கு மாகாணம்
Galle, Hambantota, Matara ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது
8. உவா (Uva) மாகாணம்
Badulla, Moneragala ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கியது
9. மேற்கு மாகாணம்
கொழும்பு, Gampaha, Kalutara ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது

அனுராதபுரத்தில் துட்டகைமுனு எல்லாளனைத் தோற்கடித்தாலும் அவனால் வடக்குப் பிராந்திரத்தைத் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர இயலவில்லை. சொல்லப்போனால் 2,500 ஆண்டு கால இலங்கை வரலாற்றில் எல்லாக் காலத்திலும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ராஜ்ஜியங்கள் இருந்து வந்திருக்கின்றன. அதில் ஒரு அரசு வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை உள்ளடக்கிய தமிழ் அரசாகத் திகழ்ந்தது. பராக்கிரம பாபு என்ற சிங்கள மன்னன் காலத்தைத் தவிர மற்ற எல்லாக் காலத்திலும் தமிழர்கள் தம்மைத் தாமே ஆண்டு வந்திருக்கின்றனர். 1972 க்கு முன்னர் சிலோன் என்று அறியப்பட்ட இலங்கை சங்க காலத்தில் 'ஈழம்' என்றே அழைக்கப்பட்டது. பட்டினப் பாலையில் காவிரிப்பூம்பட்டினம் துறைமுகத்தில் வந்து இறங்கிய பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் "ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கநூலான இதில் இலங்கை என்ற பெயர் சுட்டப்படவில்லை. அப்போதிருந்து அங்கு தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். பத்தாம் நூற்றாண்டில் ராசராசச் சோழனிடம் பெளத்தத் துறவிகள் இலங்கையின் மணிமகுடத்தை அளித்து புத்த மதத்தைத் தழுவுமாறு வேண்டியதாகவும், அப்படி ஏற்றுக்கொண்டால் அவரை இலங்கையின் வேந்தனாக முடிசூட்டுவதாக உறுதியளித்ததாகவும், அரசியலும் சமயமும் தனித்திருக்க வேண்டுமென்று கூறி ராசராசன் மறுத்து விட்டதாகவும் வரலாறு கூறுகிறது. மதம் கலந்த ஆட்சியை ராசராசன் தவிர்த்தாரே ஒழிய சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கும் நோக்கம் இல்லாமலில்லை. ராசராசனின் மைந்தன் ராஜேந்திரச் சோழனால் கி.பி. 1017 இல் சிங்கள மன்னன் மகிந்தன் தோற்கடிக்கப்பட்டு ஒட்டு மொத்த இலங்கைத் தீவும் சோழப் பேரரசின் அங்கமாக மாறியது.

1505 இல் போர்ச்சுக்கீசியர்கள் இலங்கைத் தீவிற்கு வந்த போது இலங்கையில் மூன்று அரசுகள் நிலவின. தெற்கே கோட்டி அரசும், மத்திய மலை நாட்டில் கண்டி ராஜாங்கமும், பரராஜசேகரன்(1469-1511) என்ற மன்னன் ஆட்சியில் யாழ்ப்பாணத் தமிழ் அரசும் இருந்தன. கோட்டி சிங்கள ராஜ்ஜியம் 1597 இல் போர்ச்சுக்கீசியரிடம் வீழ்ந்தது. அதே போர்ச்சுக்கீசியர்கள் 1619 இல் சங்கிலி குமாரன் என்ற மன்னனைத் தோற்கடித்துக் கடைசி யாழ்ப்பாண ஈழ அரசைக் கைப்பற்றினர். சங்கிலியனைத் தூக்கிலிட்டனர். யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னன் கொல்லப்பட்ட பின் சங்கிலியனின் நெருங்கிய உறவினர்கள் போர்த்துக்கீசரால் கைது செய்யப்பட்டு கோவாவிற்கு பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டு வலுக்கட்டாயமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டார்கள் என்றும் கைது செய்யப்பட்ட சில பெண்கள் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளாக கோவாவில் செயற்பட்டார்கள் எனவும் பரவலாக நம்பப்படுகிறது. கோவா போர்ச்சுக்கீசியக் காலனியாக விளங்கியது என்பதைக் கவனிக்க வேண்டும்.

போர்ச்சுக்கீசியரை விரட்டுவதற்காக ராஜசிங்கா II என்ற கண்டி மலை தேசத்து சிங்கள மன்னன் 1638 இல் செய்துகொண்ட உடன்படிக்கையின் பேரில் டச்சுக்காரர்கள் இலங்கைத் தீவிற்கு வந்தனர். வந்து கடலோரப் பகுதிகளான கோட்டி மற்றும் யாழ் அரசுகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஒல்லாந்தார் எனப்படும் டச்சுக்காரர்கள் யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பிற்காக மாபெரும் கோட்டை ஒன்றைக் கட்டி எழுப்பினர்.

1795 இல் பிரிட்டிஷ் துருப்புகள் திருகோணமலைத் துறைமுகத்தைத் தாக்கின. படிப்படியாக ஆங்கிலேயர் ஆதிக்கம் இலங்கையில் பரவியது. 1796 இல் டச்சுக்காரர் விரட்டியடிக்கப்பட்டனர். சூரியனே மறையாக மாபெரும் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியாளும் பிரிட்டிஷ்காரர்களுக்கு சின்னஞ்சிறு இலங்கைத் தீவின் மீது என்ன அக்கறை, அதனால் அவர்களுக்கு என்ன இலாபம் என்ற கேள்வி நமக்கெல்லாம் எழுவது இயற்கை.

இலங்கை சின்னஞ்சிறு தீவாக இருந்த போதிலும் பூகோள முக்கியத்துவம் மிகுந்தது. பாரம்பரியத் தமிழர் பகுதியான கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள திருகோணமலைத் துறைமுகம் உலகிலேயே மிகவும் பாதுகாப்பான, ஆழமான இயற்கைத் துறைமுகங்களில் ஒன்றாகும். திருகோணமலைத் துறைமுகம் யார் வசம் இருக்கிறதோ, இந்தியப் பெருங்கடலே அவர்கள் வசம் என்று பிரெஞ்சு மாமன்னன் நெப்போலியன் ஒரு முறை கூறினார். பிற்காலத்தில் (1980 கள் மற்றும் அதன் பிறகு) அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் இலங்கையோடு ராணுவ ரீதியாக உறவாடியதற்கு இதுவே முக்கியக் காரணம். 1987 இல் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக உருவானதென்று சொல்லப்படுகிற ராஜீவ்-ஜெயவர்தனே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கூட திருகோணமலைத் துறைமுகத்தை இந்தியாவின் நலனுக்கு எதிராக வெளிநாட்டுச் சக்திகளின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கக் கூடாது என்ற ஷரத்து முக்கியமானதாகும்.

பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தைப் பொறுத்தவரை அவர்களுக்கு இந்தியா மிகவும் இன்றியமையாயது. பிரான்ஸ் இந்தியாவின் மீது படையெடுக்கக் கூடும் என்று அஞ்சிய இங்கிலாந்து டச்சுச்சாரர் வசமிருந்த இலங்கையைக் கைப்பற்றியது. இதைப் பற்றி 1802 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பேசிய இளையபிட் (Younger Pit), "நமது பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கு இதுவரை இல்லாத பாதுகாப்பு இலங்கையைக் கைப்பற்றிய பிறகு ஏற்பட்டுள்ளது. உலகெங்கும் பரந்துள்ள பிரிட்டிஷ் அடிமை நாடுகளுள் மிகவும் பயனுள்ள நாடு இலங்கையேயாகும்" என்று அவர் செம்மாந்து கூறினார். (இந்துமாக் கடலில் இலங்கையில் கேந்திர முக்கியத்துவம் இரண்டாம் உலகப் போரிலும் உணரப்பட்டது. அதைப் பின்னர் காண்போம்)

கடலோரப் பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வீழ்ந்த போதிலும் கண்டி ராஜ்ஜியம் 1815 வரை நீடித்தது. கடைசி கண்டி மன்னனை சிங்கள அரசன் சொல்லி என்று வரலாறு திரிக்கப்படுவது சிங்கள இனவாதத்தின் அப்பட்டமான கயமைத் தனமாகும். கண்டி ராஜ்ஜியத்தின் கடைசி அரசனாக விக்ரமராஜசிங்கன் என்ற சிங்களப் பெயரில் தமிழ் மன்னரே ஆட்சி செலுத்தினார். அவருடைய இயற்பெயர் கண்ணுசாமி. சூழ்ச்சியின் காரணமாகக் காட்டிக் கொடுக்கப்பட்டு ஆங்கிலேயரிடம் அகப்பட்டு தமிழகத்தின் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு 1832 ஆம் ஆண்டு தனது 52 ஆவது வயதில் விக்ரமராஜசிங்கன் மரணமடைந்தார். கண்டி சாம்ராஜ்ஜியம் வீழ்ந்த பிறகு இலங்கைத் தீவு முழுவதும் ஆங்கிலேயர் வசம் வந்தது. அதற்கு முன்பாகவே விக்ரம ராஜசிங்கனின் ஆட்சிக்கு முடிவு கட்டும் நோக்கத்தில் பெரும் செல்வாக்குப் படைத்த பத்து சிங்களப் பிரதானிகள் 1815 மார்ச் 2 அன்று Kandyan Convention என்ற பெயரில் கண்டி தேசத்தை ஆங்கிலேயருக்கு ஏகமனதாகத் தாரை வார்த்துத் தந்தனர். அவர்களில் பிற்காலத்தில் இலங்கையின் அதிபராகப் பதவி வகித்த சந்திரிகா குமாரதுங்கவின் கொள்ளுப்பாட்டன் ரத்வட்டே (Ratwatte) குறிப்பிடத்தக்கவர்.

கெப்பட்டிபொல திசாவ என்ற வீரன் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டு சிங்கள ஆட்சியை நிறுவ முயன்ற விடுதலை வீரனாக திரிக்கப்பட்ட நிகழ்கால வரலாற்றில் குறிக்கப்படுகிறான். ஆனால் இவன் 1819 ஆம் ஆண்டு புரட்சியின் போது மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி துரைசாமி என்ற தமிழனுக்கு முடிசூடவே போராடினான். இது வரலாற்றில் மறைக்கப்பட்டது.

சிங்கள வெறியர்களின் தமிழ் வெறுப்பு அவர்கள் ஆங்கிலேயரோடு செய்துகொண்ட Kandyan Convention இல் வெளிப்பட்டது. அதன் காரணமாக தமிழ் மக்கள் கண்டி ராஜ்ஜியத்திற்குள் நுழைவதற்குக் கூட ஆங்கிலேயர் அனுமதிக்கவில்லை. அப்படிப்பட்ட முரணான பின்னணியில் ஆங்கில ஆட்சியாளர்கள் 1833 ஆம் ஆண்டு தமிழ்ப் பிரதிநிதிகளின் எதிர்ப்பையும் மீறி கோல்புரூக்(Colebrooke) கமிஷனின் பரிந்துரையை ஏற்று இலங்கைத் தீவு முழுவதையும் ஒரே ஆட்சியின் கீழ் ஒன்றிணைத்தனர்.

அதற்கு முன்பு போர்ச்சுக்கீசியர்களும், டச்சுக்காரர்களும் கண்டி தேசம் நீங்கலாக இலங்கைத் தீவின் பிற தமிழ், சிங்களைப் பகுதிகளைத் தம் ஒட்டுமொத்தக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தாலும் வரலாற்று ரீதியாக மதம், மொழி, பாரம்பரியம், நிலப்பரப்பு என்று எல்லா வகையிலும் தனித்துவம் வாய்ந்த சிங்கள மற்றும் தமிழ் தேசங்களைத் தனித்தனியாகவே நிர்வகித்தனர். கி.மு. 200 ஆம் ஆண்டு கிரேக்கர்கள் தயாரித்த உலக வரைபடத்தில் 'அறியப்பட்ட உலகத்தின் தெற்கு முனை' என்ற பொருள் கொண்ட Taprobane எனும் கிரேக்க வார்த்தை மூலம் குறிக்கப்பட்ட இலங்கைத் தீவை ஒரே நிர்வாகத்தின் கீழ் 'சிலோன்' என்ற பெயரின் கீழ் கொண்டு வந்து 1833 ஆம் ஆண்டு ஒரு மாபெரும் வரவாற்றுத் திருப்பத்தை ஆங்கிலேயர் ஏற்படுத்தினர் என்றே சொல்ல வேண்டும்.

வரலாற்றுப் பின்னணி - இரண்டாம் பாகம்

Thursday, December 18, 2008

திருமங்கலம் இடைத் தேர்தல் சமாச்சார் . . .

- செல்லமுத்து குப்புசாமி

மஞ்சள் துண்டு போட்ட கலைஞரின் பகுத்தறிவு பல காலமாக விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறது. வைகோவும் அப்படித்தான் என்ற சந்தேகம் எனக்கு நேற்று ஏற்பட்டது. அதை ஏற்படுத்தியவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத். விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் 'தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு' நிகழ்ச்சியில் ஒரு முறை அவர் கலந்து கொண்டதைக் கண்டிருக்கிறேன். ஆனால் இது வரைக்கும் நேரில் பார்த்ததில்லை. நேற்று மாலை மேடவாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே மேடை போட்டு அவர் பேசியதை தற்செயலாகக் காண நேரிட்டது.

சம்பத் பல விதங்களில் வைகோவைப் போலவே தென்படுகிறார் - குறிப்பாக மேடைப் பேச்சில், உடல் மொழியில், உச்சரிப்பில். விஜயகாந்த், சரத்குமார் வரை கிட்டத்தட்ட எல்லாக் கட்சிகளையும் திட்டித் தீர்த்து விட்டார் மனிதர். வழக்கம் போல ஈழத் தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் பற்றிப் பேசத் தவறவில்லை. உலகில் ஆயுதம் தாங்கிப் போராடிய அனைத்து ஆயுதப் போராட்டக் குழுக்களைப் பற்றியும், பகத்சிங், வாஞ்சிநாதன் உள்ளிட்ட போராளிகளைப் பற்றியும் முழங்கினார். அதைப் பற்றி வலைப் பதிவில் புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. எனினும் விடுதலைப் போராட்டங்கள் குறித்து அவர் தொகுத்துச் சொன்ன பல தகவல்கள் கூடியிருந்த மக்களுக்கு புதிதாக இருந்திருக்கும்.

ஒரு விஷயத்திற்காக சம்பத்தை பாராட்ட வேண்டும் என்று எனக்குப் பட்டது. மதுரை திருமங்கலம் இடைத் தேர்தலில் ம.தி.மு.க போட்டியிடாடது பற்றிய விளக்கம் அது. சென்ற சட்டமன்றத் தேர்தலில் திருமங்கலம் தொகுதியை வென்றிருந்த ம.தி.மு.க, எம்.எல்.ஏ வீர இளவரசன் மரணம் அடைந்ததை அடுத்து நடக்கவிருக்கும் இடைத் தேர்தலில் மறுபடியும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதையெல்லாம் பொய்யாக்கி விட்டு தனது தொகுதியை அ.தி.மு.க வுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறது அந்தக் கட்சி. அது ஏன் என்ற விளக்கம்!

தேர்தலை எதிர்கொள்ளப் போதுமான பண பலம் தம்மிடம் இல்லையென்று நாஞ்சில் சம்பத் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். மாவட்ட நிர்வாகிகள் பேரையெல்லாம் சொல்லி அவர்கள் வீதி வீதியாக உண்டியல் குலுக்கி எவ்வளது நிதி திரட்டினார்கள் என்றும், மொத்தமாக எவ்வளவு நிதி திரட்டினார்கள் என்றும் பட்டியலிட்ட பிறகு அந்தப் பணத்தைக் கொண்டு கட்சி அலுவலகம் கட்டத் தீர்மானித்திருப்பதாத் தெரிவித்தார். பார்க்கவே பாவமாக இருந்தது.

ஆளுங்கட்சி தி.மு.க தனது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைவராக மு.க.அழகிரியை அறிவித்திருக்கும் வேளையில் அதை நேருக்கு நேர் சந்தித்தால் ம.தி.மு.கவிடம் மிச்சமிருக்கும் கொஞ்ச நஞ்சப் பணமும் திவாலாகி விடும். அதன் பிறகு கட்சியே காலியாகி விடும். அதனால் பண பலத்திலும், ஆள் பலத்திலும் தி.மு.க வை சரி நிகராக எதிர்க்கும் துணிவு படைத்த அ.தி.மு.க வுக்கு விட்டு கொடுத்ததாக அவர் பேசினார். இடைத் தேர்தலில் தமது கட்சி களம் இறங்கி கையில் உள்ளதையெல்லாம் விரயம் செய்ய வேண்டும் என்ற கணிப்பில் கலைஞர் வைத்த ஆப்புக்குப் பதிலாக தாங்கள் முன்னும் பின்னும் அல்வா வைத்து விட்டதாகச் சொல்லிக் களித்தார். காரணம், வைகோவுக்கு சொந்த ஊர் திருநெல்வேலியாம்!

செவ்வாய் தோசம் இருக்கிற பெண்ணுக்கு செவ்வாய் தோசம் இருக்கிற மாப்பிள்ளையே பொருத்தம் என்று கருதி தி.மு.க வோடு அண்ணா தி.மு.க வைப் பொருத விட்டதாகச் சொன்னார். (வைகோவின் பகுத்தறிவைக் குறிப்பிட்டது இதனால் தான். கறுப்புத் துண்டு போட்ட சம்பத் செவ்வாய் தோசத்தில் நம்பிக்கை கொண்டவரா என்று தெரியவில்லை) இதில் உள்குத்தோ, ஊமைக்குத்தோ இருப்பதாகத் தெரியவில்லை. இவ்வளவு வெளிப்படையாக இயலாமையைச் சொல்லிப் புலம்பும் நிலை வைகோவுக்கு வருமென்று 1993-94 இல் அவர் தனிக் கட்சி துவங்கிய போது யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

வைகோவுக்கு மட்டுமல்ல, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட அவரின் தம்பிகள் பலருக்கும் உணர்ச்சி வசப்பட்டுப் பேசுவதுதான் மிகப் பெரிய பலவீனம் என்று தோன்றுகிறது. அரசியலில் நிரந்த நண்பனுமில்லை, எதிரியுமில்லை. நண்பர்கள் எதிரிகள் ஆவதும், எதிரிகள் நண்பர்கள் ஆவதும் நாம் அடிக்கடி காணும் காட்சிகள். போற்றினாலும் சரி, தூற்றினாலும் சரி அதன் எல்லைக்கே சென்று விடுவதை வைகோவின் பேச்சில் பல முறை வெளிப்படக் கண்டிருக்கிறோம். அப்படியெல்லாம் பேசிய பிறகு கூட்டணி மாறும் போது மக்கள் கேலிக்கு ஆளாகிறார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சியையும், மறுமலர்ச்சி தி.மு.கவையும் கடந்த 15 ஆண்டுகளாகக் கவனித்தால் ஒரு உண்மை புலப்படுகிறது. ஒரு கட்டத்தில் வட தமிழகத்தில் மட்டுமே செல்வாக்குக் கொண்ட ஒரு சாதியக் கட்சியாகவே பா.ம.க அறியப்பட்டது. குறிப்பிட்ட சிறு பகுதியில் மட்டுமே அதன் வாக்கு வங்கி செறிந்திருந்தது. அதனால் ஒரு சில இடங்கள் அதற்கு நிச்சயிக்கப்பட்டிருந்தன. ம.தி.மு.க அப்படியல்ல. இரண்டு முதன்மையான கட்சிகளுக்குப் பிறகு ஒரு மாற்றுச் சக்தியாக தமிழகம் முழுவதும் அதற்கு ஆதரவும், வாக்குகளும் இருந்தன. ஆனால் அந்த வாக்குகள் ஒரே இடத்தில் செறிந்திருக்காமல் மாநிலம் எங்கும் சிதறிக் கிடந்தன. இதனால் சட்ட மன்றத்தில் அது தன் பிரதிநிதிகளை அனுப்ப இயலவில்லை. எம்.எல்.ஏ இல்லாமல் சம்பாதிப்பது சாத்தியமில்லை. பொருளாதார ரீதியான பிரதிபலன் கிட்டாத கட்சி தன்னலம் கருதாத தொண்டர்களை நீண்ட நாள் தக்க வைக்க இயலாது. வைகோ வேண்டுமானால் போர்க் குணம் நிறைந்தவராகவும், கொள்கைப் பிடிப்பு உடையவராகவும், பொது வாழ்க்கைக்காகத் தன்னை அர்ப்பணித்தவராகவும் இருக்கலாம். எனினும் தேவைகள் அடிமட்டத் தொண்டனுக்கு இருக்காதா! மாறி மாறி கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் வசை பாடி விட்டு அவர்களோடு கூட்டுச் சேர்ந்து கொள்ளும் தலைவன் மீதான நம்பகத் தன்மை அடிபட்டுப் போகாதா!

இதற்கு மாறாக பாட்டாளி மக்கள் கட்சி குறிப்பிட்ட இடங்களைக் கைப்பற்றியது. மிகச் சாமர்த்தியமாக வெல்லப் போகும் கட்சிகளோடு கூட்டுச் சேரும் வித்தையை ராமதாஸ் செயல்படுத்தினார். அவரது எம்.எல்.ஏ சீட்டுகள் அந்தக் கட்சியின் நிதி நிலைமையை உயர்த்தவும் பயன்பட்டிருக்கும். அது மேலும் கட்சி வளர்ச்சிக்கும், வட தமிழகம் தவிர்த்து பிற பகுதிகளின் விரிவாக்கத்திற்கும் பயன்பட்டிருக்கும். தொண்டர்களைத் தக்க வைக்கவும், புதிய தொண்டர்களை உருவாக்கவும் அது ஏதுவாக இருந்திருக்கும். சட்ட மன்றத்தில் அதன் பலமும் கூடியது.

இன்னொரு முக்கியமான வேறுபாடு கூட உண்டு. அரசியலில் நிரந்த நண்பனுமில்லை, எதிரியுமில்லை என்பதை வைகோவைக் காட்டிலும் ராமதாஸ் மிக நன்றாகப் புரிந்து வைத்துள்ளார். அவர் நண்பர்களைப் பேணும் காரியத்தைச் செய்தாலும், செய்யாவிட்டாலும் எதிரிகளை அதிகம் உருவாக்கவில்லை என்று நம்புகிறேன்.

உதாரணத்திற்கு நாஞ்சில் சம்பத் பேசிய பல விஷயங்கள் தனி மனிதத் தாக்குதலாக இருந்ததைக் காண முடிந்தது. தனி மனிதத் தாக்குதல் என்பது ஜெயா டிவியிலும், கலைஞர் டிவியிலும் நாம் காண்பது தான். இருந்தாலும் தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான் ரேஞ்சுக்கு சம்பத் இறங்கி விட்டாரோ என்று எண்ணத் தோன்றியது.

அண்ணா தி.மு.கவும், ம.தி.மு.கவும் ஒன்றாக இருப்பது கலைஞரை வெகுவாகப் பாதிக்கிறது போலும். அந்த இரு கட்சிகளும் ஒன்றாக இருப்பதைப் பற்றி, 'மகாராணி யானைப் பாகனோடு படுத்துக் கொள்கிறாள்' என்று முதல்வர் கலைஞர் பேசியோ/எழுதியோ தொலைத்திருக்கிறார். அதற்குப் பதிலளிக்கும் போது சம்பத் கீழே இறங்கிப் பேசினார். (மேடையில் இருந்து கீழே இறங்கவில்லை, தரத்தில்) 86 வயதில் புத்தியைப் பார் என்றார்.

உண்டியல் குலுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் ம.தி.மு.க கட்சியில் கொள்கைப் பரப்புச் செயலாளர் 60,000 கோடி ஊழல் செய்த மத்திய அமைச்சர் ராசா மீது காட்டமாக இருந்தார். அந்த ஊழல் குற்றச்சாட்டை அமுக்குவதற்காகவே சன் டிவியோடு கருணாநிதி சமரசம் செய்து கொண்டதாகச் சாடினார். பேரனிடம் பேரமாம்!

இது தொடர்பான பாகப் பிரிவினையும் பங்காளிகளும் கட்டுரையை வாசிக்கவும்.


ராசா, "மத்திய மந்திரியும் நானே, மருமகனும் நானே" என்கிறாராம். கவிதாயினிப் புதல்வியின் முன்னாள் துணைவர்கள் பாவமாம். நாஞ்சில் சம்பத் சொல்கிறார்.

காங்கிரசில் இருந்து வெளியேறி வந்து பல காலம் நீரோடும் ஆலயத்தில் அசைக்க முடியாத கோட்டை கட்டி அமர்ந்திருந்த முன்னாள் மாண்புமிகுவை வீழ்த்தியவர் பாவம் இல்லையாம்.