Thursday, December 18, 2008

திருமங்கலம் இடைத் தேர்தல் சமாச்சார் . . .

- செல்லமுத்து குப்புசாமி

மஞ்சள் துண்டு போட்ட கலைஞரின் பகுத்தறிவு பல காலமாக விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறது. வைகோவும் அப்படித்தான் என்ற சந்தேகம் எனக்கு நேற்று ஏற்பட்டது. அதை ஏற்படுத்தியவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத். விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் 'தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு' நிகழ்ச்சியில் ஒரு முறை அவர் கலந்து கொண்டதைக் கண்டிருக்கிறேன். ஆனால் இது வரைக்கும் நேரில் பார்த்ததில்லை. நேற்று மாலை மேடவாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே மேடை போட்டு அவர் பேசியதை தற்செயலாகக் காண நேரிட்டது.

சம்பத் பல விதங்களில் வைகோவைப் போலவே தென்படுகிறார் - குறிப்பாக மேடைப் பேச்சில், உடல் மொழியில், உச்சரிப்பில். விஜயகாந்த், சரத்குமார் வரை கிட்டத்தட்ட எல்லாக் கட்சிகளையும் திட்டித் தீர்த்து விட்டார் மனிதர். வழக்கம் போல ஈழத் தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் பற்றிப் பேசத் தவறவில்லை. உலகில் ஆயுதம் தாங்கிப் போராடிய அனைத்து ஆயுதப் போராட்டக் குழுக்களைப் பற்றியும், பகத்சிங், வாஞ்சிநாதன் உள்ளிட்ட போராளிகளைப் பற்றியும் முழங்கினார். அதைப் பற்றி வலைப் பதிவில் புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. எனினும் விடுதலைப் போராட்டங்கள் குறித்து அவர் தொகுத்துச் சொன்ன பல தகவல்கள் கூடியிருந்த மக்களுக்கு புதிதாக இருந்திருக்கும்.

ஒரு விஷயத்திற்காக சம்பத்தை பாராட்ட வேண்டும் என்று எனக்குப் பட்டது. மதுரை திருமங்கலம் இடைத் தேர்தலில் ம.தி.மு.க போட்டியிடாடது பற்றிய விளக்கம் அது. சென்ற சட்டமன்றத் தேர்தலில் திருமங்கலம் தொகுதியை வென்றிருந்த ம.தி.மு.க, எம்.எல்.ஏ வீர இளவரசன் மரணம் அடைந்ததை அடுத்து நடக்கவிருக்கும் இடைத் தேர்தலில் மறுபடியும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதையெல்லாம் பொய்யாக்கி விட்டு தனது தொகுதியை அ.தி.மு.க வுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறது அந்தக் கட்சி. அது ஏன் என்ற விளக்கம்!

தேர்தலை எதிர்கொள்ளப் போதுமான பண பலம் தம்மிடம் இல்லையென்று நாஞ்சில் சம்பத் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். மாவட்ட நிர்வாகிகள் பேரையெல்லாம் சொல்லி அவர்கள் வீதி வீதியாக உண்டியல் குலுக்கி எவ்வளது நிதி திரட்டினார்கள் என்றும், மொத்தமாக எவ்வளவு நிதி திரட்டினார்கள் என்றும் பட்டியலிட்ட பிறகு அந்தப் பணத்தைக் கொண்டு கட்சி அலுவலகம் கட்டத் தீர்மானித்திருப்பதாத் தெரிவித்தார். பார்க்கவே பாவமாக இருந்தது.

ஆளுங்கட்சி தி.மு.க தனது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைவராக மு.க.அழகிரியை அறிவித்திருக்கும் வேளையில் அதை நேருக்கு நேர் சந்தித்தால் ம.தி.மு.கவிடம் மிச்சமிருக்கும் கொஞ்ச நஞ்சப் பணமும் திவாலாகி விடும். அதன் பிறகு கட்சியே காலியாகி விடும். அதனால் பண பலத்திலும், ஆள் பலத்திலும் தி.மு.க வை சரி நிகராக எதிர்க்கும் துணிவு படைத்த அ.தி.மு.க வுக்கு விட்டு கொடுத்ததாக அவர் பேசினார். இடைத் தேர்தலில் தமது கட்சி களம் இறங்கி கையில் உள்ளதையெல்லாம் விரயம் செய்ய வேண்டும் என்ற கணிப்பில் கலைஞர் வைத்த ஆப்புக்குப் பதிலாக தாங்கள் முன்னும் பின்னும் அல்வா வைத்து விட்டதாகச் சொல்லிக் களித்தார். காரணம், வைகோவுக்கு சொந்த ஊர் திருநெல்வேலியாம்!

செவ்வாய் தோசம் இருக்கிற பெண்ணுக்கு செவ்வாய் தோசம் இருக்கிற மாப்பிள்ளையே பொருத்தம் என்று கருதி தி.மு.க வோடு அண்ணா தி.மு.க வைப் பொருத விட்டதாகச் சொன்னார். (வைகோவின் பகுத்தறிவைக் குறிப்பிட்டது இதனால் தான். கறுப்புத் துண்டு போட்ட சம்பத் செவ்வாய் தோசத்தில் நம்பிக்கை கொண்டவரா என்று தெரியவில்லை) இதில் உள்குத்தோ, ஊமைக்குத்தோ இருப்பதாகத் தெரியவில்லை. இவ்வளவு வெளிப்படையாக இயலாமையைச் சொல்லிப் புலம்பும் நிலை வைகோவுக்கு வருமென்று 1993-94 இல் அவர் தனிக் கட்சி துவங்கிய போது யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

வைகோவுக்கு மட்டுமல்ல, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட அவரின் தம்பிகள் பலருக்கும் உணர்ச்சி வசப்பட்டுப் பேசுவதுதான் மிகப் பெரிய பலவீனம் என்று தோன்றுகிறது. அரசியலில் நிரந்த நண்பனுமில்லை, எதிரியுமில்லை. நண்பர்கள் எதிரிகள் ஆவதும், எதிரிகள் நண்பர்கள் ஆவதும் நாம் அடிக்கடி காணும் காட்சிகள். போற்றினாலும் சரி, தூற்றினாலும் சரி அதன் எல்லைக்கே சென்று விடுவதை வைகோவின் பேச்சில் பல முறை வெளிப்படக் கண்டிருக்கிறோம். அப்படியெல்லாம் பேசிய பிறகு கூட்டணி மாறும் போது மக்கள் கேலிக்கு ஆளாகிறார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சியையும், மறுமலர்ச்சி தி.மு.கவையும் கடந்த 15 ஆண்டுகளாகக் கவனித்தால் ஒரு உண்மை புலப்படுகிறது. ஒரு கட்டத்தில் வட தமிழகத்தில் மட்டுமே செல்வாக்குக் கொண்ட ஒரு சாதியக் கட்சியாகவே பா.ம.க அறியப்பட்டது. குறிப்பிட்ட சிறு பகுதியில் மட்டுமே அதன் வாக்கு வங்கி செறிந்திருந்தது. அதனால் ஒரு சில இடங்கள் அதற்கு நிச்சயிக்கப்பட்டிருந்தன. ம.தி.மு.க அப்படியல்ல. இரண்டு முதன்மையான கட்சிகளுக்குப் பிறகு ஒரு மாற்றுச் சக்தியாக தமிழகம் முழுவதும் அதற்கு ஆதரவும், வாக்குகளும் இருந்தன. ஆனால் அந்த வாக்குகள் ஒரே இடத்தில் செறிந்திருக்காமல் மாநிலம் எங்கும் சிதறிக் கிடந்தன. இதனால் சட்ட மன்றத்தில் அது தன் பிரதிநிதிகளை அனுப்ப இயலவில்லை. எம்.எல்.ஏ இல்லாமல் சம்பாதிப்பது சாத்தியமில்லை. பொருளாதார ரீதியான பிரதிபலன் கிட்டாத கட்சி தன்னலம் கருதாத தொண்டர்களை நீண்ட நாள் தக்க வைக்க இயலாது. வைகோ வேண்டுமானால் போர்க் குணம் நிறைந்தவராகவும், கொள்கைப் பிடிப்பு உடையவராகவும், பொது வாழ்க்கைக்காகத் தன்னை அர்ப்பணித்தவராகவும் இருக்கலாம். எனினும் தேவைகள் அடிமட்டத் தொண்டனுக்கு இருக்காதா! மாறி மாறி கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் வசை பாடி விட்டு அவர்களோடு கூட்டுச் சேர்ந்து கொள்ளும் தலைவன் மீதான நம்பகத் தன்மை அடிபட்டுப் போகாதா!

இதற்கு மாறாக பாட்டாளி மக்கள் கட்சி குறிப்பிட்ட இடங்களைக் கைப்பற்றியது. மிகச் சாமர்த்தியமாக வெல்லப் போகும் கட்சிகளோடு கூட்டுச் சேரும் வித்தையை ராமதாஸ் செயல்படுத்தினார். அவரது எம்.எல்.ஏ சீட்டுகள் அந்தக் கட்சியின் நிதி நிலைமையை உயர்த்தவும் பயன்பட்டிருக்கும். அது மேலும் கட்சி வளர்ச்சிக்கும், வட தமிழகம் தவிர்த்து பிற பகுதிகளின் விரிவாக்கத்திற்கும் பயன்பட்டிருக்கும். தொண்டர்களைத் தக்க வைக்கவும், புதிய தொண்டர்களை உருவாக்கவும் அது ஏதுவாக இருந்திருக்கும். சட்ட மன்றத்தில் அதன் பலமும் கூடியது.

இன்னொரு முக்கியமான வேறுபாடு கூட உண்டு. அரசியலில் நிரந்த நண்பனுமில்லை, எதிரியுமில்லை என்பதை வைகோவைக் காட்டிலும் ராமதாஸ் மிக நன்றாகப் புரிந்து வைத்துள்ளார். அவர் நண்பர்களைப் பேணும் காரியத்தைச் செய்தாலும், செய்யாவிட்டாலும் எதிரிகளை அதிகம் உருவாக்கவில்லை என்று நம்புகிறேன்.

உதாரணத்திற்கு நாஞ்சில் சம்பத் பேசிய பல விஷயங்கள் தனி மனிதத் தாக்குதலாக இருந்ததைக் காண முடிந்தது. தனி மனிதத் தாக்குதல் என்பது ஜெயா டிவியிலும், கலைஞர் டிவியிலும் நாம் காண்பது தான். இருந்தாலும் தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான் ரேஞ்சுக்கு சம்பத் இறங்கி விட்டாரோ என்று எண்ணத் தோன்றியது.

அண்ணா தி.மு.கவும், ம.தி.மு.கவும் ஒன்றாக இருப்பது கலைஞரை வெகுவாகப் பாதிக்கிறது போலும். அந்த இரு கட்சிகளும் ஒன்றாக இருப்பதைப் பற்றி, 'மகாராணி யானைப் பாகனோடு படுத்துக் கொள்கிறாள்' என்று முதல்வர் கலைஞர் பேசியோ/எழுதியோ தொலைத்திருக்கிறார். அதற்குப் பதிலளிக்கும் போது சம்பத் கீழே இறங்கிப் பேசினார். (மேடையில் இருந்து கீழே இறங்கவில்லை, தரத்தில்) 86 வயதில் புத்தியைப் பார் என்றார்.

உண்டியல் குலுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் ம.தி.மு.க கட்சியில் கொள்கைப் பரப்புச் செயலாளர் 60,000 கோடி ஊழல் செய்த மத்திய அமைச்சர் ராசா மீது காட்டமாக இருந்தார். அந்த ஊழல் குற்றச்சாட்டை அமுக்குவதற்காகவே சன் டிவியோடு கருணாநிதி சமரசம் செய்து கொண்டதாகச் சாடினார். பேரனிடம் பேரமாம்!

இது தொடர்பான பாகப் பிரிவினையும் பங்காளிகளும் கட்டுரையை வாசிக்கவும்.


ராசா, "மத்திய மந்திரியும் நானே, மருமகனும் நானே" என்கிறாராம். கவிதாயினிப் புதல்வியின் முன்னாள் துணைவர்கள் பாவமாம். நாஞ்சில் சம்பத் சொல்கிறார்.

காங்கிரசில் இருந்து வெளியேறி வந்து பல காலம் நீரோடும் ஆலயத்தில் அசைக்க முடியாத கோட்டை கட்டி அமர்ந்திருந்த முன்னாள் மாண்புமிகுவை வீழ்த்தியவர் பாவம் இல்லையாம்.

7 comments:

குழலி / Kuzhali said...

//காங்கிரசில் இருந்து வெளியேறி வந்து பல காலம் நீரோடும் ஆலயத்தில் அசைக்க முடியாத கோட்டை கட்டி அமர்ந்திருந்த முன்னாள் மாண்புமிகுவை வீழ்த்தியவர் பாவம் இல்லையாம். //
புரியலையே ?@!#$%^&*(0

Chellamuthu Kuppusamy said...

அது கிசுகிசு .. .. .. புரியாது.

தனியே மின்னஞ்சல் அனுப்புங்கள் குழலி.

ஆர். முத்துக்குமார் said...

மறுமலர்ச்சி திமுகவில் கொ.ப.செ என்று யாரும் கிடையாது. அந்தப் பதவிக்கு அங்கே கொள்கை விளக்க அணி செயலாளர் என்று பெயர்

Chellamuthu Kuppusamy said...

தகவலுக்கு நன்றி முத்துக்குமார்.

Anonymous said...

//காங்கிரசில் இருந்து வெளியேறி வந்து பல காலம் நீரோடும் ஆலயத்தில் அசைக்க முடியாத கோட்டை கட்டி அமர்ந்திருந்த முன்னாள் மாண்புமிகுவை வீழ்த்தியவர் பாவம் இல்லையாம். //

rangarajan kumaramangalam

ஓட்டு பொறுக்கி said...

"தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான் ரேஞ்சுக்கு சம்பத் இறங்கி விட்டாரோ என்று எண்ணத் தோன்றியது "
சம்பத் அண்ணன் எப்போதும் அதே ரேஞ்சுல தான் இருக்கார்.. மதிமுகவின் கொ.ப.செ அல்லது கொள்கை விளக்க அணி செயலாளர் அப்படீன்னு சொல்றதால நீங்க தான் அவரை ரொம்ப பெரிய ரேஞ்சுல நெனச்சுட்டீங்க ..

மணிகண்டன் said...

kuzhali - Ganesan