Tuesday, December 15, 2009

தமிழகத்தை இரண்டாகப் பிரிப்போம்..

தெலுங்கானா விவகாரத்தில் ராமதாஸ் ஒரு திரியைக் கொளுத்திப் போட்டிருக்கிறார். தமிழ் நாட்டை இரண்டாகப் பிரிக்கலாம் என்ற யோசனையை அவர் முன்வைத்திருக்கிறார். எப்படியாவது தைலாபுரத்தில் தலைமைச் செயலகம் அமைக்காமல் விட மாட்டார் போல.
”எதுக்கு ரண்டா பிரிக்கணும்? மூனாப் பிரிக்கலாமே!” என்கிறாராம் பெஸ்ட் ராமசாமி.

சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ என்ற நான்காகப் பிரித்து விடலாம் என்று யாராவது சொல்லட்டும். அவர்களுக்கு ஓட்டுப் போடலாம் என்று இருக்கிறேன்.

Thursday, December 10, 2009

ஜெய் தெலுங்கானா!

- செல்லமுத்து குப்புசாமி

அசோகமித்திரனின் எழுத்துக்களில் கண்ட சுதந்திர இந்தியாவுடன் இணைக்கப்படாத நிஜாம் காலத்து ஹைதராபாத் போல இன்று இல்லை. நான் அங்கிருந்த நான்கு ஆண்டுகளில் எனக்குக் கிடைத்த ஹைதராபாத்தைப் பற்றிய நினைவுகளில் பெரும்பாலும் இனிமையானவையே எஞ்சி நிற்கின்றன.

Old Hyderabad எனப்படும் பகுதிக்குச் சென்று வந்த நண்பர்கள் அது பாகிஸ்தானைப் போல இருக்கிறது என்றும், அவர்கள் வாசிம் அக்ரம் படம் போட்ட போஸ்டரை ஒட்டி வைத்திருக்கிறார்கள் என்றும் சொன்னதுண்டு. என்னைப் பொறுத்த மட்டில் பிரியாணிக்காகவே Old Hyderabad க்கு எத்தனை முறை வெண்டுமானாலும் போகலாம்.

ஹைதராபாத்தில் இருந்த போது நான் புரிந்துகொண்ட முக்கியமான விஷயம் நாம் ஆந்திரா என்று சொல்கிர ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஆந்திரா என்பது ஒரு பிராந்தியம் என்பதுதான்.


//
ஆந்திரப் பிரதேச மாநிலம் தெலுங்கானா, ராயலசீமா, ஆந்திரா ஆகிய மூன்று பிரதேசங்களை உள்ளடக்கியது. இதில் தெலுங்கானாவை முதலில் கவனிப்போம்.ஹைதராபாத் இருப்பது தெலுக்கானாவில். அந்தப் பிரதேசம் நிஜாம் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. 1947 இல் பிரிட்டிஷார் இந்தியாவிற்கு விடுதலை கொடுத்தாலும் ஹைதராபாத் மாகாணம் (தெலுங்கானா) இந்தியாவின் ஒரு பகுதியாக இணையவில்லை. 1948 இல் அது இந்தியாவோடு சேர்க்கப்பட்டு ஹைதராபாத் மாகாணம் என்று அறியப்பட்டது. சென்னை மாகாணத்தில் இருந்து சில பகுதிகளைப் பிரித்து தெலுங்கு பேசும் மக்களுக்காக கர்னூலை(Karnool) தலைநகராகக் கொண்டு ஆந்திர மாநிலம் 1953 இல் உருவானது. இது ஹைதராபாத் மாகாணத்தோடு கலந்து 1956 இல் ஆந்திரப் பிரதேசம் என்ற மாநிலமாக உருமாறியது.


இப்போதைய ஆந்திரப் பிரதேசத்தின் வடமேற்கே ஒன்பது மாவட்டங்களை உள்ளடக்கிடதும், தனித்துவமான வரலாறு கொண்டதுமான தெலுங்கானா பகுதி எக்காலத்திலும் நேரடியாக பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருக்கவில்லை. பெரும்பாலான மக்கள் தெலுங்கும், ஹைதராபாத் மற்றும் அதைச் சுற்றி சில ஊர்களில் உருதும் பேசுகிறார்கர். மேடான நிலப்பரப்பு, வறட்சியான, பின்தங்கிய பிரதேசம். சுருங்கச் சொன்னால் இதுதான் தெலுங்கானா.

மிச்சமிருக்கும் பகுதிகள் ராயஜசீமா என்றும் (கடலோர) ஆந்திரா என்றும் அறியப்படுகின்றன. கர்னூல், கடப்பா, அனந்தப்பூர் மற்றும் சித்தூர் மாவட்டங்களை உள்ளடக்கியது ராஜசீமா. திருப்பதி, காளகஸ்தி. புட்டப்பர்த்தி எல்லாம் இங்கேதான் உள்ளன. கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி பகுதி கூட இப்பிரதேசத்தைச் சேர்ந்ததுதான். தெலுங்கான அளவுக்கு பின்தங்கிய பகுதி இல்லையென்ற போதிலும் கடலோர ஆந்திராவைப் போல முன்னேறிய, வளமான பகுதி கிடையாது. மதுரை, திருநெல்வேலி மக்கா கணக்கா அடிதடிக்குப் பேர் போன மக்கள்.


ஆந்திராவில் கிருஷ்ணா, கோதாவரி ஆகிய ஜீவநதிகள் பாய்கின்றன. செழிப்பான பிரதேசம். தொழில்களும் அதிகம். தொழிற்சாலைகளும் அதிகம். இந்தியாவின் முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்றான விசாகபட்டினம் இங்கே உண்டு. தெலுங்கான, ராயலசீமா வாசிகளுக்கு ஆந்திரா மீது எப்போதுமே ஒரு வித பொறாமை உண்டு.
//

செழிப்பான பிரதேசமாக இல்லாமல் போனதாலும், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக புறக்கணிக்கப்பட்ட பகுதியாகப் போனதாலும் தமது நலன் ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச மாநிலத்துக்குள் பாதுகாக்கப்படவில்லை அல்லது பாதுகாக்கப்படாது என்ற எண்ணம் கருத்தும், அங்கலாய்ப்பும் தெலுங்கானா மக்களுக்கு இருந்து வந்திருக்கிறது. மாறி மாறி ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேச அரசுகள் அதைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. நான் உரையாட நேர்ந்த அத்தனை கடலோரா ஆந்திர & ராயலசீமா நண்பர்களும் தனித் தெலுங்கானா என்ற விஷயத்தை காமெடியாக நினைத்துப் பேசினார்கள்.

இப்போது தெலுங்கான மாநிலம் என்ற கனவு கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கிறது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவின் உண்ணாவிரதத்தினால் அது சாத்தியமாகியிருக்கிறது. உண்மையில் தெலுங்கான முழுவதுமான மக்கள் எழுச்சி அதைச் சாத்தியமாகியிருக்கிறது. மாணவர்கள், வழக்கறிஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஒருமித்த குரலில் போராடியிருக்கிறார்கள். முழுமையான காந்திய வழிப் போராட்டம் என்று வைத்துக்கொண்டாலும் கூட வன்முறை கலந்து நிறைவேற்றிய காந்தியப் போராட்டம் இது. It is the end, not means, that matters!

தெலுங்கானா கோரிக்கையை வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்ற தெலுங்கானா மாநிலத்தில் முதல் முதலமைச்சராகப் போகிற சந்திரசேகர ராவுக்கு வாழ்த்துக்கள்.

கடந்த 15 ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சியை எய்தியிருக்கும் ஹைதராபாத் என்னவாகும்? அதுதான் அனைவர் முன்னும் எழும் கோடி ரூபாய் கேள்வி. பிராந்திர ரீதியாக அது தெலுங்கானா எல்லைக்குள் வருகிறது. ஆனால் தென் ஆந்திரவாசிகள் ஹைதராபாத்தை தெலுங்கானாவுக்கு விட்டுத்தர மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்களாம்.

Wednesday, November 11, 2009

இன்சூரன்ஸ் தொடர்

அறிவிப்பு:

பங்கு வணிகம் வலைப் பூவில் இன்சூரன்ஸ் குறித்த தொடர் ஒன்று வெளியாகி வருகிறது.

Friday, October 16, 2009

புலி அரசியல்

- செல்லமுத்து குப்புசாமி
நேற்று நான் பதிப்பித்திருந்த ”பிணந்தின்னியும், அவன் * தின்னியும்!!” என்ற பதிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மூன்றாந்தர மொழியில் இரண்டு மின்னஞ்சல்கள் வந்தன. எப்ப எவன் சாவான் - புத்தகம் போட்டுக் காசாக்கலாம் என்று அலையும் பிணந்தின்னியாகச் சித்தரித்து மூன்று பின்னூட்டங்களை முகம் காட்டாத பதிவர் ஒருவர் போட்டிருந்தார்.

அதிகாரமும், கொஞ்ச நஞ்ச சொகுசு வாழ்க்கையும் மனிதனை எந்த அளவுக்கு மாற்றும் என்பதற்குச் சான்றாகவே திருமாவளவன்-ராஜபக்சே சந்திப்பின் போது நிகழ்ந்தவற்றைக் கருத வேண்டியிருக்கிறது. கருணாநிதிக்கு கோயில் கட்டி கும்பிடணும்!

இந்த இடத்தில் சுகுணா திவாகரின் புலி அரசியலிடமிருந்து விடுதலை அடைவோம்! பதிவை மேற்கோள் காட்டுவது பொருத்தமாக இருக்கும். அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறோமா இல்லையா என்பதல்ல கேள்வி, ஆனால் சுய விமர்சனம் செய்து கொள்வது ஆரோக்கியமான விசயம்.

அதே சமயம் எல்லாப் பிரச்சினைகளுக்கும் புலிகளே காரணம் என்ற பிம்பத்தை சந்தையில் இலகுவாக விற்பனை செய்து விட முடிகிறது. ”ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கிறோம். அதற்கான அடிப்படைக் காரணங்களை ஆதரிக்கிறோம், ஆனால் ஆயுதப் போராட்டம் மூலமாகத் தீர்க்காமல் பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்க்க வேண்டும்“ என்று நாட்டாமைத்தனமாக அப்போது சொன்னவர்கள் தாம் சொன்ன அரசியல் தீர்வு என்னவென்பதை இப்போதும் கூட தெரிவிக்காமல் இருக்கவும் இந்த ஜனநாயக நாட்டில் முடிகிறது.

Thursday, September 17, 2009

வேர்களைத் தேடி !!

“இப்போதெல்லாம் எப்போதாவது எப்படியாவது தலைதூக்கிவிடும் கிரீடப் பீடை நினைவுகள் ஒரு அடுக்கில் வந்தாலும் அடுத்த நொடியே மூத்திரச் சட்டியோடு சூத்திரனை நினைத்தழுத கிழவனும் வருகிறார்” - - -செல்வநாயகி தன்னை இப்படித்தான் சுய வர்ணனை செய்து கொள்கிறார்.


நாம் (தமிழர்கள்) நமது வேர்களைத் தொலைத்து வருகிறோம் என்று ஆசிஃப் மீரான் ஒரு முறை சொன்னார். (அவர் ஒன்னும் மொக்கைப் பதிவு போடும் ஆளில்லையாக்கும்) வேர் என்பதை பலரும் பல்வேறு விதத்தில் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியும்.

வாழ்க்கை முறை மாறமாற சொல் வழக்கு மாறுவது மட்டுமல்லாமல் பல சொற்கள் வழக்கொழிந்து போகவும் செய்கின்றன. வேர்களைத் தொலைப்பதில் வட்டார வழக்கை (அந்தந்த வட்டார மக்களின் வாழ்க்கை முறையைப் பிரதிபலித்த வழக்கை) ஒரு முக்கியமான அம்சமாகக் கருதலாம். செல்வநாயகி தன் கிளைகளை அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அப்பால் பரப்பினாலும் வேரைத் தேடி பதிவு செய்திருக்கிறார்.

தான் வாழ்ந்த காலத்தையும் தன்னைச் சுற்றி வாழக்கப்பட்ட வாழ்க்கையையும் பதிவு செய்ய வேண்டியது மிகவும் இன்றியமையாத ஒன்று என்ற வகையில், ”அய்யங்கதை” என்ற தலைப்பில் செல்வநாயகி இது வரைக்கும் நான்கு சிறுகதைகளை எழுதியிருக்கிறார். (வேறு அய்யங்கதை ஒன்று இங்கே)

அவை கொங்கு மண்டல மக்களுக்கு கொசுவர்த்திச் சுருளை நினைவில் சுழல விடும் என்பது மட்டும் திண்ணம்.

தென்கச்சி கோ.சுவாமிநாதன் - அஞ்சலி

இயல், இசை, நாடகம் - முத்தமிழின் மூன்று வடிவங்கள் இவை.


இதில் முதலாவது வடிவத்துக்கு எளிய நடையில் அளப்பரிய பங்களிப்பை நல்கிய தென்கச்சி கோ.சுவாமிநாதன் நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு அஞ்சலி.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் பயின்று, அரசுப் பணியில் இருந்து விட்டு பிறகு சில காலம் விவசாயம் பார்த்து வந்த சுவாமிநாதன் பிறகு வானொலி மூலம் பிரபலம் அடைந்தார். முதலில் விவசாயம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்களித்தாலும், அவரது ‘இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்த ஒன்று. நகைச்சுவை, சிந்தனை, தார்மீக நெறிகள் அனைத்தையும் ரசிக்கும்படி கலந்து கொடுப்பது அவருக்கே உரித்தான கலை. பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

அஞ்சலி!

Friday, September 11, 2009

பத்திரிக்கையாளர் திசைநாயகம்

இருபது ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் இலங்கை பத்திரிக்கையாளர் திசைநாயகம் நீதிமன்றத்தில் பேசியவை ஒரு மின்னஞ்சலில் வந்து சேர்ந்தது.

அதை கீழே பகிர்ந்து கொள்கிறேன். அதற்கு முன்பாக அவரைப் பற்றி அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியது:

“In every corner of the globe, there are journalists in jail or being actively harassed … Emblematic examples of this distressing reality are figures like J.S. Tissainayagam in Sri Lanka, or Shi Tao and Hu Jia in China.”


********
இனி J. S. Tissainayagam என்ற ஜெயப்பிரகாஷ் சிற்றம்பலம் திசைநாயகம் கோர்ட்டில் கூறியது:
I wish to commence this statement with a brief introduction about my home.


My father was a government servant for 40 years. He served at the Department of Information and retired as its Director. Later he worked in the Prime Minister’s office as an Assistant Secretary and was the speech writer to the Prime Minister. I grew up in an environment of mixed ethnic groups in Colombo. In school too my friends were from all the different ethnic communities of our country. My first language is very much English and although I can speak Tamil, I am not very fluent in Tamil. After my high school I entered Peradeniya University and studied in English. There too all my friends were from different ethnic backgrounds.

I joined the Sunday Times in 1987 after university and later have worked as a journalist in a few English language national newspapers. I joined MARGA in 1989 pioneered discussions and engaged in research on how to solve the national issue peacefully.

While I was at Marga and later also, I helped OPFMD (Organisation of Parents and Family Members of the Disappeared :

* I helped the families of the disappeared persons from the South due to insurrection by collecting information and translating them into English to send to organisations such as the Amnesty International and the UN.

* Vasudeva Nanayakkara and HE Mahinda Rajapakshe gave it political leadership and took the documents to Geneva.

* Was always worried for the safety of the civilians.

* Intention was to stop the killing of youth, whoever they were.

*Although I told all this when questioned at the TID, they never wrote these things down, and even when Razik dictated for me to write down he left all this out.*

I spoke up for the employees and as a consequence my services were terminated. I filed an application in the Labour Tribunal and was awarded compensation. Although Marga appealed to the High Court, it was dismissed.

1994 to 1995 – I worked on a project for UNICEF through an organization called “The Medium”. Went to the East and did a documentary on children left parentless due to the conflict due to activities of the LTTE, JVP, EPRLF, IPKF, State created violence and other paramilitary groups. *This was also left out of all my statements.*

*Disappearance Commission* – 1994 to 96: I helped them in various ways, collected info, translated them into English, helped to coordinate with families. *This was also left out of all my statements.*
*Knowledge of Tamil*: I am not fluent in Tamil, my work has always been in English. I can speak Tamil, but am not fluent. *For the first time after I left school I was made to write in Tamil when Razik forced me to take down what he dictated. This is what is now claimed to be my confession. I never wrote it on my own and I stand by the evidence I gave at the voir dire.*

I was also scared of my eye conditions since I have had surgery for retinal detachment. If it recurred, I would go blind fully. Therefore, even when I protested as the factual inaccuracies what is said to be my confession, I wrote it since Razik threatened me and also told me that I would be released soon if I cooperated. He said that they had to send it to the Supreme Court.

*Charge under the PTA*: *It is unfair and illegal to charge me under the PTA for acts said to have been committed during the operation of the Ceasefire Agreement when the Government had given an undertaking to relax the operation of PTA and allowed the free movement of the people from North and South into both LTTE and Government controlled areas.*
I travelled to the North and East during the CFA, as a journalist, collected information about life there to include in my writings, interviewed people from a vast spectrum such as political leaders, religious leaders, scholars, the displaced people, activists, NGO, LTTE leaders. I personally know that many other journalists also travelled to the North and East during this time for the same purpose. I have also spoken on the telephone many times with persons who lived in those places to obtain information.

A person called *Baba* never offered me any money. I never received money from him or the LTTE. North Eastern Monthly was run on a commercial basis.

It was sold at bookshops like Vijitha Yapa and Makeen Bookshop. There were subscribers too. The Account Number in which to deposit the subscription money was printed in the North Eastern Monthly from the January 2007.

Therefore the Account Number was available to anyone who bought the magazine.

*I was, and am still an advocate against terrorism. I have criticized terrorism in whatever form. I never advocated violence, my objective was to generate non violent means of resolving the conflict, my research, writings and work was towards achieving this.*

OPFMD was at one stage involved in securing the release of soldiers and policemen captured by the LTTE. They made contact with the LTTE for this purpose and travelled to the Vanni also. In order to arrange these trips, I have often spoken on the phone in Tamil I could manage with their contact persons. *This was also left out of all my statements.*

I am a non violent person and always agitated against violence and for justice for the oppressed. *By writing the two articles referred to in the indictment, I never intended to cause violence or communal disharmony and no such thing ever occurred as a result of those articles. This is all I have to say.*

Thursday, September 03, 2009

ராஜசேகர ரெட்டி - சில நினைவுகள்

- செல்லமுத்து குப்புசாமி

ஆந்திர முதல்வர் Y.S.ராஜசேகர ரெட்டியின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அறுபது வயதில் அகால மரணம் அடைந்திருக்கிறார். பெரும்பாலான அரசியல்வாதிகளைப் போல டாக்டர் பட்டம் கேட்டுப் பெறாமல் படித்து டாக்டர் ஆனவர் அவர். எனினும் அரசியல்வாதி என்ற முறையில் அப்பழுக்கற்றவராக விளங்கினாரா என்பதெல்லாம் வேறு கதை. அவர் மீது எண்ணற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் உண்டு.1983 இல் என்.டி.ராமாராவ் தெலுங்கு தேசம் கட்சியைத் துவங்கிய காலத்தில் இருந்து ஆந்திராவில் செல்வாக்கு சரிந்து போயிருந்த காங்கிரஸ் கட்சிக்கு சக்தி மிக்க ஈர்ப்புள்ள ஒரு தலைவராக YSR இருந்திருக்கிறார்.

சிரஞ்சீவியை அரசியலுக்கு வர வைத்ததே காங்கிரஸ்தான் என்று உறுதியாக நம்புகிறவர்கள் இருக்கிறார்கள். அப்படிச் செய்திருந்தால் அது ரெட்டியின் அரசியல் சாணக்கியத்தனம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு வேளை நடிகர் சிரஞ்சீவி அரசியலுக்கு வந்து ஆந்திரா (ஆந்திரப் பிரதேசத்தின் மூன்று முக்கியப் பகுதிகளில் ஒன்று) பகுதியில் தெலுங்கு தேசக் கட்சியின் வாக்குகளைப் பிரிக்காமல் போயிருந்தால் இன்றைக்கு ரெட்டி இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்திருக்க மாட்டார். சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்திருக்கக் கூடும். இது குறித்து முன்பொரு முறை எழுதிய பதிவு) ஹெலிகாப்டர் விபத்தும் நிகழ்ந்திருக்காது.

சஞ்சய் காந்தி (விமான விபத்து), ராஜேஷ் பைலட் (கார் விபத்து), மாதவராவ் சிந்தியா (விமான விபத்து) வரிசையில் ராஜசேகர ரெட்டியின் அகால மரணம் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு முக்கியமான இழப்பு. சஞ்சய் காந்தியின் மரணம் விமானம் ஓட்டிக்கொண்டிருந்த ராஜீவ் காந்தியை அரசியலுக்கு இழுத்து வந்தது. ராஜேஷ் பைலட் மற்றும் மாதவராவ் சிந்தியாயின் வாரிசுகள் அரசியலில் இருக்கிறார்கள். ரெட்டியின் வாரிசு என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

மறைந்த முதல்வருக்கு நம் அஞ்சலி.

*******
ஒரு துண்டுச் செய்தி:
ராஜசேகர ரெட்டியை போலவே முன்னாள் ஆந்திர முதல்வர் சென்னா ரெட்டியும் (இவர் பிற்காலத்தில் தமிழகத்தில் கவர்னராகப் பணியாற்றினார்) மருத்துவம் படித்த டாக்டர்.

ஒரு முறை, “விசாகபட்டிணத்தில் மட்டும் துறைமுகம் இருக்கிறதே, எங்கள் ஊருக்கும் ஒன்று கட்டித்தாருங்கள் என்று விஜயவாடா மக்கள் கேட்டதற்கு, “கண்டிப்பாகக் கட்டித் தருகிறேன்” என்று சீரியசாக வாக்குறுதி அளித்தார் சென்னா ரெட்டி. விஜயவாடாவில் கடலே இல்லை என்பதுதான் வேடிக்கை.

சென்னா ரெட்டியைப் பின்பற்றி, திருப்பதில் துறைமுகம் ஏற்படுத்துவேன் என்றெல்லாம் அள்ளி விடாத ராஜசேகர ரெட்டிக்கு நமது அஞ்சலி.

Monday, August 31, 2009

நான் வித்யா - புத்தகம்

-செல்லமுத்து குப்புசாமி

இதை நான் சொல்லியே தீர வேண்டும். முதல் காரணம் வழக்கமான 'கிழக்கு' டெம்ப்ளேட்டில் எழுதப்பட்ட நூல் இதுவல்ல என்ற தோற்றத்தை உண்டாக்குகிறது.

இரண்டாவது இன்னும் முக்கியமான காரணம்.


பெண்ணின் உணர்வுகளை ஆண் கவிஞர் என்னதான் வடித்தாலும் ஒரு கவிதாயினி எழுதும் போது அதன் சாராம்சமே வேறு. இல்லாவிட்டால் 'கட்டிப்புடி கட்டிப்புடிடா'க்களும், ‘பாயோடு பாயா விடிச்சு வெச்சேன்'களும் மட்டுமே பெண்கள் பாடிக்கொண்டிருக்க நேரிடும். பெண்கள் மற்றும் தலித்துக்களுக்கான படைப்புகள் ஒடுக்கப்பட்ட அந்த மக்களே வடிக்கும் போது அதன் ஒரிஜினாலிட்டியே தனி.

நமது சமுதாயத்தில் பெண்களையும், தலித் மக்களையும் விட திருநங்கைகளின் நிலைமை பரிதாபம். அவர்களைப் பற்றி உருவாக்கப்பட்ட ஆக்கங்கள் மிகவும் குறைவு. அப்படியே ஆங்காங்கு சில படைக்கப்பட்டிருந்தாலும் அவை அவர்களைப் பற்றிய முழுமையான பிம்பத்தையும், அவர்தம் உணர்வுகளையும் பிரதிபலிப்பதில்லை.

அரவாணி, திருநங்கை ஆகிய பதங்கள் இப்போதுதான் பரவலாக அறியப்படுகின்றன. இத்தனை காலமும் ‘அலி' என்றும் 'ஒம்போது' என்றும் மட்டுமே அவர்களை நாம் அறிந்து வந்திருக்கிறோம். நமது சினிமா காலங்காலமாக அவர்களை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி வந்திருக்கிறது.

ஆணாகப் பிறந்து, ஆணுக்குரிய உணர்ச்சிகள் இல்லாமல் தன்னை ஒரு பெண்ணாக உணர்ந்து, ஆணுக்குரிய குறி தனதுடலில் ஒட்டியிருப்பதை அருவருப்பாகக் கருதி ஆபரேஷன் மூலம் அறுத்து எறிந்து 'நிர்வாண' நிலையை அடைவது திருநங்கைகளுக்கு முக்கியமான நிகழ்வு. சரவணனாகப் பிறந்து வித்யாவாக மாறிய பிரபல வலைப்பதிவர் லிவிங் ஸ்மைல் எழுதிய சுய சரிதை இது.

திருநங்கைகள் தமது குடும்பத்தாராலும், சமூகத்தாலும் எப்படியெல்லாம் ஒதுக்கப்படுகிறார்கள் என்பதையும் அவர்களுக்குள் உள்ள சடங்குகள், சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், ஏக்கங்கள், அபிலாஷைகள், கோபதாபங்கள் பற்றியும் வித்யா மிகத் தெளிவாக கூடுதல் குறைச்சல் இல்லாமல் விவரிக்கிறார்.

முதுகலை மொழியியல் படித்துள்ளார் என்பதால் தான் சொல்ல விரும்பியதை இலகுவாகச் சொல்லும் லாவகம் அவருக்கு கை வருகிறது. நிச்சயம் படிக்கலாம். பிறருக்கும் பரிந்துரைக்கலாம்..

Thursday, August 20, 2009

ஜஸ்வந்த் சிங் - ஜின்னா

- செல்லமுத்து குப்புசாமி

பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது முன்னாள் மத்திய அமைச்சரும், பாரதீய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகம்.

அந்தப் புத்தகத்தில் ஜின்னா மதச் சார்பற்றவர் என்றும், இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு அன்றைய காங்கிரஸ் கட்சியே காரணம் என்றும் பொருள்படும் வகையில் எழுதியுள்ளாராம். அதனால் பா.ஜ.க. அவரை கட்சியில் இருந்து வெளியேற்றியுள்ளது. நரேந்திர மோடியின் குஜராத் அரசு இன்னும் ஒரு படி மேலே சென்று புத்தகத்தையே தடை செய்துள்ளது.நான் இன்னும் Jinnah - India, Partition, Independence படிக்கவில்லை. ஆனால் ஜின்னா ஒரு practicing Muslim ஆக இருக்கவில்லை என்று கேள்விப்பட்டுள்ளேன். சுதந்திரம், பிரிவினை, மதக் கலவரம் என்பதற்கெல்லாம் முன்பு ஒரு முறை செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாருக்காக வெள்ளைக்காரன் கோர்ட்டில் ஆஜராகி ஜின்னா வாதாடினாராம்.

1948 இல் சாகாமல் (1964 வரை நேரு இந்தியாவை ஆண்டது போல) நீண்ட நாள் ஜின்னாவின் ஆளுகையின் கீழ் பாகிஸ்தான் இருந்திருந்தால் அது இன்றைக்கு வித்தியாசமான ஒரு தேசமாக விளங்கியிருக்குமோ என்னவோ!

ஜின்னாவைப் பற்றி தமிழில் ஒரு புத்தகம்

Thursday, August 13, 2009

ஸ்டாக்ஸ் இன் தமில் - வருத்தம்

- செல்லமுத்து குப்புசாமி

உண்மையில் நான் இதை இங்கே வெளியிட வேண்டும் என விரும்பவேயில்லை. ஆனால் ‘தொடர்பு கொள்க' (http://www.stocksintamil.com/contact.php) என்ற பகுதியில் தொடர்பு கொள்வதற்கான சாத்தியமே இல்லாமல் போனதால் அவர்களுக்குச் சொல்ல வேண்டியதை இங்கே வெளியிட வேண்டி வருகிறது.

தொடர்பு கொள்க என்ற பகுதியில்

என்ற விளம்பரம் மட்டும் மூனறு இடத்தில் காணக் கிடக்கிறது.

மேலும், கீழ்க்கண்ட வாசகங்களும்:

வலைப்பக்க வரலாற்றில் முதன் முயற்சியாக எம் உயிரினும் மேலான தமிழ் மொழியில் பங்கு சந்தை பற்றிய சர்வதேச தரத்துடனும் , முழுவிவரங்கள் அடங்கிய தொகுப்பை எளிய நடையில் மிகச் சிறப்பாக வழங்க இருக்கிறோம்.

நாங்கள் , உங்களுக்கு பங்குச்சந்தை பற்றிய சிறு அச்சங்களை போக்கும் ஆசானாக, பங்கு பற்றி நன்கு தெரிந்து, நுட்பமாக முதலீடு செய்து, ஆதலால் உயர்வடைந்து, அதன் பொருட்டு பெருமை கொள்ளும் பெற்றோராக, உடனுக்குடன் தகவல் மற்றும் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் நல்ல நண்பனாக, இவ்வலைப்பக்கத்தில் தொண்டாற்ற காத்திருக்கிறோம்
. ”

**************

இப்போது அவர்களுக்கான செய்தி.

http://www.stocksintamil.com/ நண்பர்களே,

இதை நடத்துகிற நீங்கள் யாரென்று தெரியவில்லை. பங்கு முதலீடு குறித்து தமிழில் ஒரு இணைய தளம் நடத்த வேண்டும் என்ற உங்களது ஆர்வம் புரிகிறது. அது பாராட்டுக்கும் உரியது.

அதே நேரம் என்னுடைய பல கட்டுரைகளை எனது அறிதல் இல்லாமலேயே நீங்கள் வெளியிட்டிருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியும், ஏமாற்றமும், வியப்பும் அடைந்தேன்.

இதை நீங்கள் செய்யாமல் தவிர்த்திருக்கலாம். அல்லது குறைந்த பட்ச நாகரீகம் கருதி என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். அந்தக் கட்டுரைகள் வலைப் பதிவில் எழுதப்பட்டவை அல்லது உயிரோசை மாதிரியான இணைய இதழில் வெளி வந்தவை என்பதற்காக அனுமதி கேட்காமல் அப்படியே எடுத்துக் கையாள்வது தவறான செய்கை மட்டுமல்லாது மோசமான முன்னுதாரணமும் ஆகி விடும்.

இனி மேல் இப்படிச் செய்யாதீர்கள். அதிலும் குறிப்பாக “விளம்பரம் செய்ய அணுகவும்” என்ற வாசகம் உங்கள் இணைய தளத்தில் தென்படும் போது...

Tuesday, August 11, 2009

பன்றிக் காய்ச்சலை அரசியலாக்க வேண்டாம்

தயவு செய்து பன்றிக் காய்ச்சலை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்று சொல்லாவிட்டாலும் கூட “யாரும் புரளியைப் பரப்ப வேண்டாம்” (நோயை மட்டும் பரப்பலாமாக்கும்??) என்று 'படித்த'வர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் தமிழக முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எதைப் புரளியாக அவர் கருதுகிறார் என்று தெரியவில்லை. தமிழகத்தில் உள்ள ஆறரைக் கோடி மக்களுக்கு மூன்றே மூன்று பரிசோதனை நிலையங்கள்தான் என்பதே புரியாத ஒன்றாக இருக்கிறது. நோய்க்கு தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பது என்பது வேறு; நோய் இருக்கிறதா என்று கண்டுபிடிப்பது வேறு.

இதில் இரண்டாவதையாவது துரிதமாகச் செய்து மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் விளங்க வேண்டாமா?

இது தொடர்பாக இன்று கண்ணில் பட்ட ஒரு செய்தி..


Friday, July 31, 2009

Enemy of the state - தமிழில்

முதலில் Will Smith நடித்த இந்தப் படத்தை ஆங்கிலத்தில் பார்த்தேன்.

பிறகு ஒரு ஞாயிறு மாலை சன் டிவியில் தமிழாக்கம் செய்து போட்டார்கள்.

இப்போது Enemy of the state படம் ரீமேக் செய்யப்பட்டு வாமனன் என்ற பெயரில் வந்திருக்கிறது. அதையும் நேற்று பார்த்துத் தொலைத்தேன். என்ன கொடுமை சார் இது?

'வெள்ளித்திரை' படத்தில் திடீர் நட்சத்திரமாகி ரவுசு பண்ணும் பிரகாஷ்ராஜ் சொல்வது போல, இங்க டிவிடிங்கற ஒன்னு மட்டும் இல்லேன்னா பாதிப்பேர் டைரக்டரே கெடையாது போல.

தொலைக்காட்சியில் அவ்வப்போது வரும் சந்தானம்-ஜெய் நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்து யாரும் ஏமாந்து போய் படத்துக்குப் போனால் அதற்கு யாருமே பொறுப்பாக முடியாது.

Tuesday, July 28, 2009

பெரியாரின் எழுத்துக்கள்

பெரியாரின் எழுத்துக்களுக்கு ஏகபோக உரிமை கொண்டாடுவதை வீரமணி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற தீர்ப்பை சென்னை உயர் நீதி மன்றம் வெளியிட்டுள்ளது.

பெரியாரின் எழுத்துக்களை பெரியார் திராவிடர் கழகத்தினர் புத்தகமாக வெளியிட்டதை எதிர்த்து வீரமணி தாக்கல் செய்த மனுவை நீதிபதி சந்துரு தள்ளுபடி செய்து,

”தன்னுடைய கருத்துக்களும், எழுத்துக்களும், பேச்சுக்களும் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதே பெரியாரின் நோக்கம். நூறு ஆண்டுக்கு பிறகும் இளைய சமுதாயத்தினர் அவருடைய கொள்கைகளை தெரிந்து கொள்வது நல்லது. எனவே, பெரியாரின் கருத்துக்களுக்கும், எழுத்துக்களுக்கும், யாரும் உரிமையோ, காப்புரிமையோ கோர முடியாது. காப்புரிமை என்ற பெயரில் அவரது கருத்துக்களை முடக்கவும் கூடாது. வழக்கு ஆவணங்களுக்கு நடுவே அவரது கொள்கைகளை அடைத்து விடக்கூடாது.

எனவே பெரியாரின் கருத்துக்களை நூல்களாக வெளியிட பெரியார் திராவிடர் கழகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கப்படுகிறது. இது தொடர்பாக வீரமணி தாக்கல் செய்த மனு ‌நிராக‌ரி‌க்க‌‌ப்படு‌கிறது”

என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இவ்வளவு பிரச்சினை எதற்கு? பேசாமால் பெரியாரின் எழுத்துக்களை நாட்டுடமை ஆக்கினால் என்ன? கலைஞர் ஆட்சியில் கண்ணதாசனையும், சுந்தர ராமசாமியையும் நாட்டுடமை ஆக்குவதில் காட்டும் ஆர்வம் பெரியாரின் படைப்புகளை நாட்டுடமை ஆக்குவதில் இல்லை என்பதற்கு அரசியல் தவிர வேறெதுவும் காரணாமாக இருக்க முடியாது. யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களோடு வீரமணி ஒட்டிக்கொள்வது அதனால்தானோ என்னவோ! (ஜெயலலிதாவை பெண் பெரியார் என்று வர்ணித்தவர் அவர்)

தொடர்புடைய செய்திகள்:
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0907/27/1090727058_1.htm

Wednesday, July 08, 2009

பிரபாகரன் - ஆங்கில நூல்

- செல்லமுத்து குப்புசாமி

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை வரலாற்று நோக்கில் நான் அணுகி எழுதிய புத்தகம் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது.
இது ஏற்கனவே தமிழில் வெளியான எனது பிரபாகரன் - ஒரு வாழ்க்கை என்ற நூலின் ஆங்கிலமாக்கல் என்றாலும் கூட, தமிழ் பேசாத இந்தியாவின் பிற பகுதியினரையும், பிற தேசத்தவரையும் மனதில் வைத்து கூடுதல் தகவல்களுடன் எழுதப்பட்டுள்ளது.

Prabhakaran - The Story of his struggle for Eelam எனும் தலைப்பில் வெளியாகும் இந்நூலை ஆன்லைன் மூலமாகவும், Kindle வடிவில் ebook ஆகவும் பெறலாம்.

உங்கள் கருத்துக்களும், விமர்சனமும் வரவேற்கப்படுகின்றன.

Wednesday, July 01, 2009

இந்தியா-இன்ஃபோசிஸ்-இறையாண்மை-இனவெறி

29-ஜூன்-2009 உயிரோசைக்கு எழுதியது

இந்திய அரசியல், சமூக மற்றும் பொருளாதாரச் சூழலில் பெரும் சலனத்தைப் பிரதிபலித்து ஒரே நாளில் வெளிவந்த மூன்று செய்திகளை நாம் வழக்கம் போலவே கவனிக்கத் தவறினோம். வகுப்பறையில் வாத்தியார் கேள்வி கேட்கும் போது அதற்கும் நமக்கும் சம்பந்தம் இல்லாதது போல தலையைக் கீழே குனிந்து உட்கார்ந்திருப்போமே அப்படியாகப்பட்ட ஒரு மனநிலையில். கேள்விகள், விவாதங்கள் எல்லாம் நல்லாப் படிக்கும் பசங்களுக்கு மட்டுமானதாக நாம் கருதி வந்திருக்கிறோம். அவற்றைக் காதில் போட்டுக்கொள்ள வேண்டியதில்லை என்று நம்பி வந்திருக்கிறோம்.

மூன்று செய்திகளில் ஒன்று படிப்பு சம்பந்தப்பட்டதுதான். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வது குறித்த வினோதமான யோசனை ஒன்றை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் முன் வைத்துள்ளார். பத்தாம் வகுப்புத் தேர்வுக்காக மாணவர்களும், பெற்றோர்களும் தொலைக்கும் தூக்கமற்ற இரவுகள் தேவையில்லை என்று அவர் வியாக்கியானம் சொல்லியிருக்கிறார்.

பொதுத் தேர்வு என்பது மாணவர்களுக்கு சவாலானது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அதே நேரம் பத்தாம் வகுப்பில் ஒன்றும் ராக்கெட் விஞ்ஞானம் சொல்லித் தருவதில்லை. புதிய கண்டுபிடிப்புகளையும், ஆராய்ச்சிகளையும் மேற்கொள்வதில்லை. அந்த வயதுக்கும், சிந்தனைத் திறனுக்கும் ஏற்ற பாடத்திட்டத்தில் தேர்வுகள் மேற்கொள்வதில் தவறென்ன இருக்க முடியும்? இத்தனைக்கும் அண்மைக் காலத்தில் தேர்ச்சி விழுக்காடு ஆண்டுக்கு ஆண்டு கூடி வருகிறது. பொதுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களும் குறைந்தபாடில்லை.

இப்படிப்பட்ட சூழலில் தேர்வை ரத்து செய்வது குறித்த முடிவு அதிர்ச்சி அளிக்கின்றது. எதிர்காலம் குறித்து எதார்த்தமான பயத்தையும், பொறுப்புணர்ச்சியையும் விடலைப் பருவத்தில் ஏற்படுத்துவதில் முக்கியான பங்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு உண்டு. அதைக் காணாமல் போகச் செய்து பன்னிரண்டாம் வகுப்பில் மட்டுமே பொதுத் தேர்வு என்று தள்ளிப்போடும் செயல்பாடு உளவியல் ரீதியிலும், சமூகத் தளத்திலும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

நிச்சயமாக கல்வித் துறையில் மேம்பாடுகள் தேவைப்படுகிறது. அரசுப் பள்ளிகளின் தரமும், கற்பிக்கும் கடமையுணர்ச்சியும் தேய்ந்துகொண்டே வருகிறது. ஆசிரியர்களின் செயல்பாடும் எந்த அளவுகோலின்படி அளவிடப்படுகின்றன என்று தெரியவில்லை. அவர்களின் ஊதியமும், ஊதிய உயர்வும் செயல்பாட்டின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதில்லை. தமிழ் சினிமா கிளைமாக்ஸ் காட்சியில் போலீஸ் வருவதைப் போல, "நீ பாஸ் ஆனாலும் பெயில் ஆனாலும் எனக்கு சம்பளம் வந்துரும்" என்று அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சொல்லுவதும் வழக்கமான ஒரு காட்சிதான்.

இப்போதெல்லாம் கிராமப் புறங்களில்கூட அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு தனியார் பள்ளிகள் முளைத்திருக்கின்றன. நான் பயின்ற ஆரம்பப்பள்ளியில் இப்போது வெயிலுக்கு ஆடுகள் ஒதுங்குகின்றன. கல்வி என்பது வணிகமயமாகவும், நிறுவனமயமாகவும் மாறிவிட்டது. சுமார் பத்தாண்டுகளுக்கு முன் நான் இளங்கலை பட்டப்படிப்பு பயின்ற போது ஜி.டி.நாயுடுவால் தொடங்கப்பட்ட அந்தக் கல்லூரியில் ME படிப்பிற்கான ஆண்டுக் கட்டணம் வெறும் 150 ரூபாய் என்பதாக நினைவு. இப்போது மூன்று வயதுக் குழந்தையை வேனில் ஏற்றி எல்.கே.ஜி. க்கு அனுப்பி சீருடையோடு தூங்க வைக்க எவ்வளவு ஆகிறது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

கட்டாய இலவச ஆரம்பக் கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்கிறது அரசாங்கம். ஆனால் அரசாங்கத்தின் அதிகார மட்டத்தில் இருப்பவர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் இலவசக் கல்வியா கற்றுக்கொண்டிருக்கிறார்கள்? மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் உடனடிக் கடமை அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது. ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்துவது. மாணவர்களின் தேர்ச்சித் திறன் மற்றும் அறிவு மேம்பாட்டு அடிப்படையில் அவர்களுக்கு சலுகைகளும், சம்பளமும் கொடுப்பது.

கல்வித் துறையின் சீர்திருத்தம் இந்தத் திசையில்தான் நகர வேண்டுமேயொழிய பொதுத் தேர்வை ரத்து செய்வதை நோக்கியல்ல. உண்மையில் மத்திய அரசு சீர்திருத்தம் என்ற பெயரில் கல்வி வியாபாரத்தின் எல்லைகளை விரிவாக்க முயல்கிறது. தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் அந்நிய நிறுவனங்களுக்குப் பாய் விரிப்பது என்ற திசையில் நகரப் போகிறது இந்தச் சீர்திருத்தம்.

சாராயம் காய்ச்சி விற்றவனும், தாதாவாகத் திரிந்தவனுமே கொள்ளையாகச் சம்பாதிக்கும் ஒரு தொழிலை வெளிநாட்டு நிறுவனங்கள் விட்டு வைக்குமா என்ன! அதற்குத்தான் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஒரு அரசு தடையாக நிற்குமா என்ன!

கபில் சிபல் வார்த்தைகளில் சொன்னால், "FDI must come into India. Entry into the education sector must neither be limited nor over-regulated. I want the system to be accessible from outside too". மேலும், "you deny access to quality education to our children" என்றும், "there will be corporate investment in school education, joint ventures, public-private partnerships" என்றும் அவர் திருவாய் மலர்ந்திருக்கிறார்.

இந்திய கல்வித் துறையில் மிகப் பெரிய சந்தை காத்திருக்கிறது. புரிந்துகொள்ள முடியாமல் இல்லை. அதைத் தவிர்த்து இந்திய மாணவர்கள் வெளிநாடு சென்று படிப்பதற்குப் பதிலாக அவர்களை இங்கேயே தங்க வைப்பதற்கே இந்த ஏற்பாடு என்ற சப்பைக்கட்டு வேறு. வெளிநாடு சென்று படிக்கும் இந்திய மாணவர்கள் அந்த நாடுகளில் கல்வித் தரம் உசத்தி என்றா போகிறார்கள்? அங்கு படித்தால் அப்படியே சுலபமாக வேலை பெற்றுவிடலாம், நிரந்தரக் குடியிருப்பு கிடைக்கும் என்றல்லவா செல்கிறார்கள்!

ஜூன் 25 ஆம் தேதி வெளியான இன்னொரு செய்தி இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி நந்தன் நிலெகனி தனது வேலையை ராஜினாமா செய்தார் என்பது. மத்திய அரசு அமைக்கவிருக்கும் Unique Identification Authority of India அமைப்பிற்குத் தலைவராகப் போகிறார் அவர். அந்தப் பொறுப்பு கேபினட் அமைச்சருக்கு இணையானது.

இந்த அமைப்பு குடிமக்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கும் வேலையைச் செய்யப்போகிறது. PAN அட்டை, வாக்காளர் அட்டை என எத்தனை வழிகளை ஆராய்ந்து விட்டு இறுதியாக இந்த முடிவுக்கு வந்திருக்கிறது மன்மோகன் அரசு. இந்த தேசிய அடையாள அட்டை அத்தனை பேருக்கும் வழங்கப்படும். அவர்களைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் அதில் சேகரித்து மையமான ஒரு இடத்தில் வைத்துப் பேணப்படும். வங்கிக் கணக்கு ஆரம்பிக்கும் போது, கேஸ் கனெக்ஷன் வாங்கும் போது இந்த அட்டை மட்டும் இருந்தால் போதும். கிட்டத்தட்ட அமெரிக்காவில் பயன்படும் சோசியல் செக்யூரிட்டி நம்பர் மாதிரி.

மிகவும் சவாலான காரியம் இது. ஆளுக்கு ஒரு அட்டையும், நம்பரும் கொடுத்தால் மட்டும் போதாது. போலீஸ் கேஸ், விவாகரத்து, கிரெடிட் கார்ட் பில் கட்டாதது, அடிக்கடி வீடு மாறுவது உள்ளிட்ட அவரவர் பற்றிய தகவல்களை அதில் உடனுக்குடன் அப்டேட் செய்வதும் வேண்டும். அதற்கு மத்திய மாநில அரசு அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் எல்லாமும் ஒருங்கிணைந்த தகவல்திரட்டிகள் வேண்டும்.

அதற்கான மென்பொருட்களை உருவாக்க வேண்டும். இவற்றையெல்லாம் செய்து முடிப்பதற்கு பெரும் முதலீடும் முயற்சியும், தேவைப்படும். இந்திய சாஃப்ட்வேர் கம்பெனிகளுக்கு குறைந்த பட்சம் ரூ 10,000 கோடி அளவிலான பிசினஸ் வாய்ப்புகளை இது ஏற்படுத்தித் தரும் என்று கணிக்கிறார்கள்.

Unique ID திட்டம் மட்டும் நேர்த்தியாகச் செயல்படுத்தப்பட்டால் (மட்டுமே) ஒவ்வொருவரைப் பற்றிய தகவலும் துல்லியமாகக் கிடைக்கும். அரசின் நலத் திட்டங்கள் யாருக்குச் சென்று சேருமோ அவர்களை மட்டுமே சென்றடையுமாறு செயல்படுத்த முடியும். போலியான சான்றிதழ் கொடுத்து வேலைக்குச் சேர முடியாது. இடைத் தரகர்களையும், விரயங்களையும் கூடுமான வரையில் தவிர்க்க இயலும். இது ஒரு கனவு இலக்கு.

பிரதமர் மன்மோகன் சிங்கே தன்னை அழைத்ததால் தன்னால் தட்ட முடியவில்லை என நந்தன் நிலெகனி கூறியுள்ளார். தனது தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக இருக்குமாறு இலங்கை அதிபர் ராஜபக்சே விடுத்த அழைப்பை நிலெகனியின் பெரியண்ணன் நாராயண மூர்த்தி மறுத்துவிட்டார் என்பது பலருக்கும் தெரியாது. மன்மோகன் சிங்கின் அழைப்பை ஏற்றுக் கொள்வதில் அப்படிப்பட்ட தர்ம சங்கடம் ஒன்றுமில்லை.

ஏனென்றால் இலங்கையைப் போல இனவெறி பிடித்த நாடாக இந்தியா இல்லை என்று உணர்கிறோம். தவறாகச் சொல்லிவிட்டேனே? ஆஸ்திரேலியாவைப் போல இனவெறி பிடித்த நாடாக இந்தியா இல்லையென உணர்கிறோம் எனத் திருத்திக் கொள்கிறேன். இலங்கைத் தீவின் பூர்வக்குடி மக்களை வகைதொகை இல்லாமல் கொன்றொழித்த நாடு இறையாண்மையுள்ள நாடு. படிக்க வந்த மாணவர்கள் மீது சில விஷமிகள் தாக்குதல் நடத்தும் நாடு இனவெறி நாடு.

இனவெறிக்கும், இறையாண்மைக்குமான இலக்கணம் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். அது எப்படி இருந்தாலும் இந்தியா இனவெறி பிடித்த தேசமல்ல. நாம் உணர்கிறோம். ஏற்றுக்கொள்கிறோம்.

'அப்படியல்ல. இந்தியாவில் இனவெறி உண்டு. இன பேதம் உண்டு' என்பதே ஜூன் 25 ஆம் தேதி மூடி மறைக்கப்பட்ட மூன்றாவது செய்தி. அந்தச் செய்திக்குச் சொந்தக்காரர் மிசோராம் மாநில முதல்வர் Pu Lalthanhawla.

சிங்கப்பூரில் நடைபெற்ற நீர்வள மாநாடு ஒன்றுக்குச் சென்ற Lalthanhawla, "இந்தியாவில் இனவெறிக்கு ஆளானவன் நான்" என்று வெளிப்படையாகப் பேசியுள்ளார். மேலும், இந்தியா என்பது திராவிட, ஆரிய இனங்களைத் தவிர வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மூன்றாவது இனமான எங்களையும் உள்ளடக்கியது என்றும் அவர் சர்வதேச அரங்கில் கூறினார். ஒரு முறை துபாயில் நடைபெற்ற இந்தியத் திரைப்பட விழா ஒன்றில் மலையாள நடிகர் மம்முட்டி, "இதற்கு இந்தியத் திரைப்பட விழா என்று பெயரிட்டதற்குப் பதிலாக இந்தித் திரைப்பட விழா என்றே அழைத்திருக்கலாம்" என்று கொதித்ததற்கு இணையாக இதை நோக்க வேண்டியுள்ளது.

மிசோராம் முதலமைச்சர் சொன்னது உண்மைதான். இந்தியா என்பது ஒரு இனம், ஒரு மொழி படைத்த தேசமன்று. Technically and logically speaking, இந்தியா என்பது தேசமே கிடையாது. நமது அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவை Union என்றுதான் வரையறுக்கிறதே தவிர, Nation அல்லது Country என்றோ அல்ல.

இனம் தொடர்பான இந்தப் புரிதல் ஒருபுறம் இருக்க, இறையாண்மை குறித்தான ஒரு கொசுறுத் தகவல். இந்தியாவில் இனவாதம் உண்டு என்று போட்டுடைத்த அந்த முதல்வர் பிரதிநிதித்துவப்படுத்தும் இன்றைய மிசோராம் மாநிலத்திற்கு அருகே ஒரு காலத்தில் இறையாண்மை படைத்த சிக்கிம் என்றொரு தேசம் இருந்தது. அங்கு ஏற்பட்ட கலகத்தைக் கட்டுப்படுத்துவதற்கென்ற போர்வையில் இராணுவத்தை அனுப்பி அதை ஆக்கிரமித்துத் தனதாக்கிக் கொண்ட இறையாண்மை மிக்க தேசம் நம் இந்திய தேசம்.

அதனால் நமக்கு செளகரியமான செய்திகளைப் பற்றி மட்டுமே கவனம் செலுத்துவோம்.

* மைக்கேல் ஜாக்சன் இறந்துவிட்டார்.

* ஆஸ்திரேலியாவில் இரண்டு கங்காருகள் குட்டி போட்டன.

* கள்ளக்காதல் விவகாரம் - மனைவி வெட்டிக் கொலை

* பிரபுதேவா - நயன்தாரா ரகசியக் கல்யாணமாமே?

Monday, June 29, 2009

இனப்படுகொலை - மின்னஞ்சலில் வந்தது

சற்று முன்னர் மின்னஞ்சலில் வந்தது..

******

அன்பருக்கு,

இலட்சக் கணக்கான மக்கள் சிங்கள இராணுவத்தின் வதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். திறந்த வெளியில், பாலித்தீன் கூரைகள் அமைக்கப்பட்ட இடத்தில் அவர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 20,000 பேருக்கும் அம்மை நோய் வந்துள்ளது. முகாமின் பெண்கள் சிங்களா இராணுவத்தின் பாலியில் வன்முறைக்கு ஆளாகிறார்கள்.

நிவாரண முகாம் என்ற பெயரில் நடக்கும் இந்த வதை முகாம்களைப் பார்வையிட சர்வதேச அமைப்புகள் அனுமதிக்கப்படுவதில்லை. அங்கே நடந்தேறும் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய மனித அவலம் வெளி உலகிற்கு மறைக்கப்படுகிறது. அந்த வேலையை கொஞ்சமும் நேர்மையற்ற ஊடகங்கள் சாமர்த்தியமாகச் செய்து வருகின்றன.

போரில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள், இப்போது எத்தனை பேர் உயிரோடு உள்ளனர் என்ற குறைந்தபட்ச அறிவிப்பைக் கூட வெளியிட முடியாத கொடூர ஆட்சி அங்கே நடக்கிறது. விடுதலைப் புலிகளை அழித்து விட்ட பிறகு அதற்காக மக்களை வதை முகாம்களில் அடைத்து வைக்க வேண்டும்? அவரவர் வீட்டுக்கு அனுப்ப வேண்டியதுதானே? அப்படிச் செய்யுமாறு இந்தியா வலியுறுத்த மறுக்கிறது.

இலங்கையில் நடப்பதை ஒரு மனிதாபிமானப் பிரச்சினையாக மட்டுமே பாவிக்கும் ஒரு வரலாற்றுத் தவறை நாம் செய்துகொண்டிருக்கிறோம். அது ஒரு மனிதாபிமானப் பிரச்சினை மட்டுமல்ல. அதையும் தாண்டிய ஒரு இன அழிப்பு. வரலாறு காணாத இனப்படுகொலை.

புயல் வந்து மக்கள் பாதிக்கப்பட்டால் அது மனிதாபிமானப் பிரச்சினை. பூகம்பம் நேர்ந்தால் அது மனிதாபிமானப் பிரச்சினை. கொள்ளை நோய் பீடித்தால் மனிதாபிமானப் பிரச்சினை. ஆனால் இது மனிதாபிமானப் பிரச்சினை மட்டுமல்ல. திட்டமிட்ட இனப்படுகொலை.

போரில் கொல்லப்பட்டு, உடல் உறுப்புகளை முடமாக்கிய போக தற்போது வதை முகாம்களில் அடைத்து வைத்து மக்களை நடைப் பிணமாக மாற்றுவதும் மன்னிக்க முடியாதது.

உடனடியாக சர்வதேச அமைப்புகளை அனுமதிக்கச் செய்து மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவிகளைச் செய்விக்க வேண்டும். ஐரோப்பியத் தமிழர்கள் அனுப்பிய நிவாரணப் பொருட்களைத் தாங்கிய வணங்கா மண் கப்பலை இலங்கை அரசு அனுமதிக்கவில்லை. பராவாயில்லை அனுமதிக்கிறோம் என்றும், நிவாரணப் பொருட்களை ஏற்றுக்கொள்கிறோம் என்றும் இந்தியாவிடம் வாக்குறுதி அளித்துள்ளதாம்.

இதை எதற்காக இலங்கையிடம் கையளிக்க வேண்டும்? நேரடியாக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கொடுக்கலாமே?

- இனியன்

Thursday, June 25, 2009

மாயாண்டி குடும்பத்தார் - சினிமா

- செல்லமுத்து குப்புசாமிசினிமா விமர்சனம் எழுதுவதென்பது அலுப்பூட்டக் கூடிய ஒரு செயல். இன்னும் சொல்லப் போனால் சமீப காலங்களில் சினிமா பார்ப்பதே அயர்ச்சி தருவதாக இருக்கிறது. ஆயினும் சில நேரங்களில் விமர்சனப் பதிவு போடும் ஆசை வருவதைத் தடுக்க முடிவதில்லை. என்னவோ தெரியவில்லை, மாயாண்டி குடும்பத்தார் படம் பார்த்ததும் அப்படி ஒரு ஆசை வந்து விட்டது.

இத்தனைக்கும் சினிமா விமர்சனம் என்பதற்கான இலக்கணம் எங்கும் வரையறுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவும் இல்லை. இலக்கணம் என்ற ஒன்று உண்மையில் இருந்தாலும் அதை உடைத்து புது மரபு படைக்கும் பின்நவீனத்துவவாதிகள் நாம். கதையில் கொஞ்சம், குறைகள் கொஞ்சம், பாராட்டு கொஞ்சம் என்று ஒரு வகையாகக் கலந்து எழுதி வைப்பதே நல்ல விமர்சன உத்தியாக இருக்க முடியும். இன்னொரு பக்கம் சினிமாவை ஓவராகத் திட்டி விமர்சனம் எழுதினால் மட்டுமே வருங்காலத்தில் வசனம் எழுதும் வாய்ப்புக் கிடைக்கும் என்று விவரம் தெரிந்தவர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

ஒரு நடிகர் பத்து வேடத்தில் நடித்த சாதனையைக் கண்ட பெருமை தமிழ் சினிமாவுக்கு உண்டு. 'மாயாண்டி குடும்பத்தார்' படத்தில் பத்து இயக்குனர்கள் நடித்துள்ளனர். கதையில் புதுமை ஒன்றும் இல்லை. புதிய சங்கதிகளும் இல்லை. மேம்போக்காகச் சொன்னால் அப்படித்தான் தெரியும். ஆனால் படத்தில் நட்சத்திர நடிகர்கள் இல்லை. வெளிநாட்டில் காதல் காட்சிகள் படமாக்கப்படவில்லை. ஆபாசம் இல்லை. குலுக்கல் நடனம் இல்லை. குடும்பத்தோடு தியேட்டர் சென்று முகம் சுளிக்காமல் பார்க்கலாம். இதை விட என்ன புதுமையைச் செய்ய வேண்டியிருக்கிறது!

காதலும், பாசமும், பங்காளி சண்டையும் நிரம்பியதாகவே கதையும், படமும் நெய்யப்பட்டுள்ளன. உண்மையான கிராமியப் படம் ஒன்றில் இந்தச் சங்கதிகளைத் தவிர்த்து என்ன செய்தாலும் போலித்தன்மை இணைந்து கொள்ளும்.

தெக்கத்திப் பக்கம் வெகு சாதாரணமாக நடக்கிற விஷயம் பங்காளி சண்டை. அண்ணன் விருமாண்டி (ஜி.எம். குமார்). தம்பி மாயாண்டி (மணிவண்ணன்). இருவருக்கும் சொத்துச் சண்டை. அடிதடி. போக்குவரத்து இல்லை. மாயாண்டி குடும்பத்தாரிடம் விருமாண்டி குடும்பத்தார் வம்பு இழுத்துக்கொண்டே இருக்கிறார்கள். தம்பி விலகி விலகிப் போகிறார்.

மாயாண்டி குடும்பத்தின் நான்கு மகன்களாக பொன்வண்ணன், சீமான், ஜெகன்நாத், தருண்கோபி நடித்துள்ளனர். பொன்வண்ணன் பூச்சி மருந்து அடிக்கும் ஸ்பிரேயருடன் அலைகிறார். சீமான் புரட்சி பேசிக்கொண்டு பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் நபர். மூன்றாவது மகன் ஜெகன்நாத் மைக்செட் வைத்திருக்கிறார். நான்காவது பையனைப் பற்றி பிறகு பார்க்கலாம். இந்த நால்வருக்கும் ஒரு சகோதரி. அவரை ராஜ்கபூருக்கு கட்டி வைத்துள்ளனர். இந்த ஐந்து பேருக்கும் தாய்மாமன்களாக டீக்கடை வைத்திருக்கும் இளவரசுவும், மேல் சட்டை போடாமல் எப்போதும் போதையில் மட்டுமே இருக்கும் மயில்சாமியும்.


மூத்தவர் விருமாண்டியின் குடும்பத்தில் சித்தப்பனை எப்போதும் முண்டிக்கொண்டிருக்கும் வாரிசுகள். அதில் ஒருவன் மட்டும் விதிவிலக்கு. சித்தம் சரியில்லாத லூசு பையனாய் வரும் சிங்கம்புலி மாயாண்டி குடும்பத்தினருடன் பாசமாகவும், சாப்பாட்டு ராமனாகவும் இருக்கிறார்.

இதுதான் பின்னணி.

படிப்பு வாசனையே அறியாத மாயாண்டி குடும்பத்தில் கடைசி மகனை மட்டும் படிக்க வைக்கிறார் மணிவண்ணன். அவனுக்கு மட்டுந்தான் படிப்பு வருகிறது என்பது வேறு விஷயம். அவன் பிளஸ்-2 முடித்த சமயத்தில் மூன்றாவது பையனுக்கு கல்யாணம் நடக்கிறது. அதே சமயத்தில் பள்ளிக்கூடக் காதலியும் தருண்கோபிக்கு இருக்கிறாள். அவளும் புது மதினியின் ஊர்தான்.

இப்படியாகக் கதை நகர்கிற போது மின்சாரம் தாக்கி மணிவண்ணன் இறந்து போகிறார். அவரது மூத்த மருமகள் இருவரும் சொத்தை மூன்றாகப் பிரிக்கச் சொல்லுகின்றனர். நான்காமவன் சொத்தை விற்றுத்தான் அவனைப் படிக்க வைத்ததால் அவனுக்கு பங்கில்லை. வேண்டுமானால் ஆளுக்கு ஒரு நாள் அவனுக்கு சோறு போடுகிறோம் என்கின்றனர். இதைக் கேட்டதும் அண்ணன்மார்கள் கொதித்து எழுகின்றனர். தங்களைப் பிரிக்கும் பொண்டாட்டிகளைத் தள்ளி வைப்பதாகவும் முடிவெடுக்கின்றனர்.

தன்னால் தனது அண்ணன்மார் குடும்பம் சிதையக் கூடாது என்று கெஞ்சுகிறார் தருண்கோபி. தாய்மாமன் இளவரசுவும் இதை ஆதரிக்க சொத்து பிரிகிறது. சகோதரர்களும் தனித்தனியே வாழ நேரிடுகிறது. தினம் ஒரு வீட்டில் சாப்பாட்டு என்று சொல்லியிருந்தாலும் கூட கொளுந்தனை அவமானப்படுத்துகிறார்கள் அண்ணிகள். அவன் தோட்டத்துக் குடிசையில் தானே கஞ்சி காய்ச்சிக் குடித்து விட்டு கல்லூரிக்குச் சென்று வருகிறான்.இவர்களின் அக்கா குழந்தைக்கு காதுகுத்து வருகிறது. அதற்கு அழைப்பதற்கு பத்திரிக்கை அடித்துக்கொண்டு கணவன் ராஜ்கபூரோடு வந்து கூடப் பொறந்த பொறப்புகளை அழைக்கிறாள் சகோதரி. பத்திரிக்கையில் கடைசித் தம்பியின் பெயரைப் போடவில்லை என்பதால் அதைக் கிழித்து எறிந்து மற்ற மூவரும் அனுப்புகிறார்கள். இதைக் கேட்டு ஓடி வரும் சின்னவன், ”நம்ம அக்கா இன்னொரு பொறப்பாண்ணா பொறக்கப் போகுது?” என சமாதானப் படுத்தி அனைவரையும் கூட்டிச் செல்கிறான்.

காதுகுத்து நிகழ்வில் ராஜ்கபூர் தருண்கோபியை வரவேற்கவில்லை. சோத்துக்கு வந்த வெறும் பயல் என்று குத்திக் காட்டுக்கிறார். அதனால் சாப்பிடாமல், மணிவண்ணம் செத்ததற்கு அரசாங்கம் கொடுத்த பணத்தில் தனக்கு வந்த ஐம்பதாயிரம் ரூபாயை மொய்யாக எழுதி விட்டு யாரிடமும் சொல்லாமல் போகிறான். பதறி அடித்துக்கொண்டு கூடவே ஓடி வரும் அக்காவின் நடிப்பு மனதைப் பிசைகிறது.

ஒரு காட்சியில், ”இந்தக் காலத்தில கள்ளக் காதலைக் கூட வெளிப்படையாகச் செய்யறாங்க. கூடப் பொறந்தவனுக்கு உதவறத மறைச்சு மறைச்சு செய்ய வேண்டியிருக்கு” என்று சீமான் சொல்லும் அளவுக்கு தம்பிக்கு நேரடியாக உதவ முடியாத கையறு நிலை அண்ணன்களுக்கு.

இப்படியாகப் படம் போய்க் கொண்டிருக்கிறது. தருண்கோபியின் காதல் தொடர்கிறது. பொறியியல் படிப்பை முடித்து அவனுக்கு நல்ல வேலையும் கிடைக்கிறது. அப்போதுதான் தன் காதலிக்கு ஏற்கனவே திருமணம் ஆனது அவனுக்குத் தெரிகிறது. அதற்கான நியாயமான காரணமும் அவனுக்குப் புரிகிறது.

இதற்குள்ளாக அவனது மூத்த அண்ணிக்கு வியாதி வந்து ஆபரேஷன் செய்த போது அவளைக் காப்பாற்ற அவன் மேற்கொண்ட முயற்சியில் அண்ணிகள் திருந்துகிறார்கள். ”என் மூத்த புள்ளடா நீ” என்கிறார் பொன்வண்ணன் மனைவி. கடைசியில் அத்தை மகளை மணந்துகொள்கிறான். மணிவண்ணனின் தங்கையான அந்த அத்தை கஸ்டப்பட்ட காலத்தில் வலிந்து உதவியவர். படிப்புக்காக தன் மகள் திருமணத்திற்குச் சேர்த்து வைத்திருக்கும் பணத்தைக் கொடுத்து உதவியவர்.

அண்ணிகள் திருந்தி, கடைசித் தம்பிக்கு திருமணம். இதோடு படத்தை முடித்திருக்கலாம். தமிழ் சினிமாவில் கிளைமாக்ஸ் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் வணிகக் கட்டாயம் அதை அனுமதிக்கவில்லை போலும். விருமாண்டி ஜி.எம். குமாரின் பையன் அத்தை மகளை வம்பிழுக்க, தருண்கோபி அவர்களை அடித்து நொறுக்கி விட்டு, பெரியப்பாவிடம் பாச மழை பொழிந்து அவர் மனதை மாற்றிய பிறகே படம் முடிகிறது.

வயதில் சிறியவனாக இருந்தாலும் கடைசிப் பையன் எடுக்கும் சில முடிவுகள் முதிர்ச்சி மிக்கதாகத் தெரிகின்றன. அதே முதிர்ச்சி முகத்திலும் தெரிகிறது. பிளஸ் - 2 புள்ளைகளோடு வரும் சீனில் அவர்களுக்கு அப்பா மாதிரி இருக்கிறார். கல்லூரிக் காட்சிகளில் கூட அப்படியே. அந்த கேரக்டரில் தனுஷ், ஜெயம் ரவி, சத்யராஜ் மாதிரி யாராவது யூத் நடிகரைப் போட்டிருக்கலாம்.

அதே போல, கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்து டை கட்டி வேலை செய்து விட்டு மறுபடியும் ஊருக்குத் திரும்பும் தருண்கோபி டவுசருக்கு மேல் வேட்டியைக் கட்டிக்கொண்டு பெரியப்பன் பையன்களோடு சண்டை போடும் கெட்டப் இடிக்கிறது.

எதற்கெடுத்தாலும் அடிதடியில் இறங்கும் தெக்கத்திக் கலாச்சாரம் படங்களில் மட்டுந்தானா இல்லை இப்போதும் நிஜத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை. வசனங்களில் மன்வாசனை வீசுகிறது. சினிமாத்தனம் இல்லை.

மணிவண்ணன், பொன்வண்ணன், இளவரசு, அண்ணிகள் மிக இயல்பாக நடித்துள்ளனர். படத்தின் மிகப் பெரிய பலமாக இதைச் சொல்லலாம். பொன்வண்ணன் பத்து வயது குறைந்தது போல படு ஸ்மார்ட்டாக இருக்கிறார். லூசு பையனாய் வரும் சிங்கம்புலியின் நகைச்சுவையையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். கடைசித் தம்பி பல இடங்களில் ஓவர் ஆக்டிங் செய்கிறார். ராஜ்கபூரும், சீமானும் அலட்டிக் கொள்ளாமல் நடித்துள்ளனர்.

ஒரு சில சினிமாத்தனங்களையும், வலிந்து திணிக்கப்பட்ட கிளைமாக்சையும், அடுத்து என்ன வரும் என்று எளிதாக யூகிக்கக் கூடிய திரைக் கதை ஆகியவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் மாயாண்டி குடும்பத்தார் சராசரி தமிழ்ப் படத்தின் தரத்தை விட உயர்ந்து நிற்கிறது.

Tuesday, June 23, 2009

ஈழம் வரலாற்றுப் பின்னணி - பாகம் 6

- செல்லமுத்து குப்புசாமி

வரலாற்றுப் பின்னணி - பாகம் 1
வரலாற்றுப் பின்னணி - பாகம் 2
வரலாற்றுப் பின்னணி - பாகம் 3
வரலாற்றுப் பின்னணி - பாகம் 4
வரலாற்றுப் பின்னணி - பாகம் 5

தேசியக் கொடி விவகாரத்தில் தம் இன ஆதிக்கத்தை நிலை நாட்டிய சேனநாயகா அரசு சுதந்திரம் பெற்ற சில மாதங்களிலேயே பத்து இலட்சம் மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறிக்கும் கீழ்த்தரமான குடியுரிமைச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. அந்தச் சட்டம் சோல்பெரி கமிஷனின் அடிப்படையில் வாக்குரிமைமை பெற்றிருந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு இருந்த வாக்குரிமையும், தேர்தலில் நிற்கும் உரிமையையும் நிராகரித்தது. ஆறு வருடத்திற்கு முன்னர் இந்திய வம்சாவ்ழைத் தொழிலாளர்கள் இலங்கையை விட்டுப் போகக் கூடாது என்று மன்றாடிய அதே சிலோனில் அந்தத் தொழிலாளர்கள் அந்நியர் ஆயினர்.

தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்தச் சட்டத்தை எதிர்த்தனர். அமைச்சரவையில் அங்கம் வகித்த சுந்தரலிங்கம் மசோதாவுக்கு அரசில் அங்கம் வகிக்கிற காரணத்தால் ஆதரித்து வாக்களித்தார். ஆனால் அது தொடர்பான விவாதத்தில் கலந்த்துகொள்ளவில்லை. தமிழ் காங்கிரஸ் சார்பில் S.J.V. செல்வநாயகம் மசோதாவை எதிர்த்துப் பேசினார். சேனநாயகா மலையகத் தமிழர்களுக்கு இழைக்கும் அநீதி என்று முறையிட்டார். தற்போது பூர்வீகத் தமிழர்களை அவர் நேரடியாகத் தாக்கவில்லை. ஆனால் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதித்துவ எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் சிங்கள ஆதிக்கத்தை சிலோனின் அதிகரித்து பூர்வீகத் தமிழர்களை மறைமுகமாகப் பாதிக்கும் சட்டமென்று சாடினார்.

மிகவும் உணர்ச்சிசப்பட்ட நிலையில் ஆளுங்கட்சி உறுப்பினர்களை நோக்கி, "இப்போது நீங்கள் தமிழர்களில் பலவீனமான பிரிவினரை அடிக்கிறீர்கள், மலை நாட்டுத் தோட்டங்களில் குளிரில் நடுங்கியபடி அல்லலுற்று உங்கள் செல்வத்தைப் பெருக்கும் அப்பாவிகளை அடிக்கிறீர்கள். உங்களது அடுத்த இலக்கு நாங்கள்தான். எங்களை அடிக்கும் போது எங்கள் நிலைப்பாடு என்னவென்பதை அப்போது தெரிந்துகொள்வீர்கள். மொழி சம்மந்தமான அடுத்த சட்ட மசோதா வரும் போது அது தெரியும்" என்று கதறி அழுதார்.

யூத மக்களின் குடியுரிமையை ஹிட்லர் பறித்த போது உலகின் எல்லாம் நாகரீக தேசங்களும் அதைக் கண்டித்தன. ஜெர்மனியின் இன விகிதாச்சாரத்தைத் தீர்மானிக்கும் சுய விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப தனக்கிருப்பதாக ஹிட்லர் சொன்னார். இந்த நாட்டின் இன விகிதாச்சாரத்தைத் தீர்மானிக்க எத்தனிக்கும் முயற்சி, அதற்கான இந்தச் சட்டம் எல்லாமே சரியானதா என்ற கேள்வியைக் கருத்தில் நிறுத்த வேண்டுமென்று செனட்டர் நடேசன் வாதிட்டார்.

மசோதா மீதான் இரண்டாம் சுற்று விவாதம் நடந்துகொண்டிருந்த போது வவுனியா தொகுதி சுயேட்சை வேட்பாளரும், அமைச்சருமாகிய சுந்தரலிங்கம் வெளிநடப்புச் செய்தார். சேனநாயகா அதற்கு விளக்கம் கேட்டார். ஆனால் சுந்தரலிங்கமோ விளக்கம் தராமல் மந்திரி பதவியிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். (இந்த சுந்தரலிங்கத்திடம்தான் சோல்பெரி பின்னொரு நாளில் தமிழர்களுக்கென்று தனி மாநிலத்தை அரசியல் யாப்பில் பரிந்துரைக்காமல் விட்டது தன் தவறென்று குறிப்பிட்டார்) ஆனால் ஜனநாயம் என்பது எண்ணிக்கை விளையாட்டு. பெரும்பான்மை சிங்களர்களை உள்ளடக்கிய சிலோன் நாடாளுமன்றம் சிரமமில்லாமல் குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது. விடுதலையின் போது மூன்றில் ஒரு பங்கு என்றிருந்த தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கை ஐந்தில் ஒன்று என்று குறையும் அளவுக்கு அதன் பாதிப்பு இருந்தது.

மலையகத் தமிழரின் குடியுரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட்டது இந்தியாவில் பெரும் கண்டனத்தைச் சம்பாதித்து. 1949 இல் சிலோனின் 61 சதவீத ஏற்றுமதி வருவாயை தேயிலை சாகுபடி ஈட்டித் தந்தது. அதற்குக் காரணமாக இருப்பது மலையகத் தமிழர்கள். அவர்களுக்குப் பெரும் அநீதி இழைத்த போது கண்டனம் எழுவது நியாயமானதே. எனவே எதையாவது செய்து அந்தக் கண்டனத்தைத் தணிக்கும் முயற்சியாக இந்திய-பாகிஸ்தான் குடியுரிமைச் சட்ட மசோதா விவாதத்திற்கு வைக்கப்பட்டது. முந்தைய சட்டத்தைப் போலவே இந்தச் சட்டத்திற்கும் இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பியது. "இந்தியக் குடியுரிமைச் சட்டமல்ல; இது இந்தியரை வெளியேற்றும் சட்டம்" என ஹிந்து பத்திரிக்கை குற்றம் சாட்டியது. எதற்காக?

இந்திய வம்சாவழித் தொழிலாளர்கள் குடியுரிமை பெறுவதற்கு சில தகுதிகளை இந்தச் சட்டம் நிர்ப்பந்தித்தது. திருமணமானவர்கள் தொடர்ச்சியாக ஏழு வருடமும், மணமாகாதவர்கள் தொடர்ச்சியாக பத்து வருடமும் இலங்கையில் வசித்திருக்க வேண்டும். இந்தச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 8,50,000 பேரில் 1,45,000 பேருக்கு மட்டும் சிலோன் அரசு குடியுரிமை வழங்கியது. ஏழு இலட்சத்திற்கும் மேற்பட்ட பிற மக்களின் விண்ணப்பத்தை நிராகரித்து அந்தரத்தில் விட்டது. அதுவும் அந்த விண்ணப்பப் படிவங்கள் 1962 வரை ஓசையில்லாமல் உறங்கிய பிறகு இந்த அவலம் நிகழ்ந்தது.

ஜி.ஜி.பொன்னம்பலம் மலையகத் தமிழரின் உரிமையைப் பாதுகாக்கத் தவறிய கயமைத்தனத்தால் வெகுண்டெழுந்த SJV செல்வநாயம் 1949 டிசம்பர் மாதம், "இன்றைக்கு அவர்களுக்கு (மலையகத் தமிழர்களுக்கு) நடப்பது நாளைக்கு நமக்கு நடக்கும்" என்று கூறி தமிழரசுக் கட்சி என்ற பெயரில் தனி அரசியல் இயக்கம் கண்டார்.

அப்போது சிலோனின் கவர்னர் ஜெனரலாக சோல்பெரி பிரபு இருந்தார். சிலோன் பிரிட்டிஷ் அரசிடமிருந்து சுதந்திரம் அடைந்திருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருக்கு மேலே இங்கிலாந்து மகராணியின் சார்பில் பெயரளவில் இயங்குவது கவர்னர் ஜெனரலின் வேலை. அந்தப் பதவியில் இருந்த சோல்பெரி யாழ்ப்பாணத்திற்கு வருகை புரிந்தார். அவரைக் கண்டித்து தமிழரசுக் கட்சி யாழ்ப்பாணத்தில் கறுப்புக் கொடி எதிர்ப்பைத் தெரிவித்தது.

சோல்பெரி வரையறுத்த, 'சிலோனில் ஒரே ஒரு அரசாங்கம், அதனிடம் மட்டுமே எல்லாக் காலத்திலும் குவிந்திருக்கும் அதிகாரம்' என்ற அரசியல் கட்டமைப்பு எப்போதுமே பெரும்பான்மைச் சிங்களர்களை ஆட்சியில் அமர்த்தும். அது ஒரு போதும் தமிழர்களின் அடிப்படை உரிமைகளைக் கூட நிறைவேற்றாது என்று செல்வா உணர்ந்திருந்தார். எனவே கட்சியின் தொடக்க மாநாட்டில் இந்தியாவில் உள்ளது போல - மத்திய அரசாங்கம் ஒன்றும், மாநில அரசாங்கங்களும் உள்ளடங்கிய - சமஷ்டி (ஆங்கிலத்தில் ஃபெடரல்) அமைப்பை உருவாக்கி தமிழர் வாழும் பகுதிகளை சுய நிர்வாகம் செய்யப் போராடுவதே கட்சியின் நோக்கம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் காரணத்தினால் தமிழில் தமிழரசுக் கட்சி என்றழைக்கப்பட்ட இக்கட்சி ஆங்கிலத்தில் ஃபெடரல் பார்ட்டி என்றழைக்கப்பட்டது.

ஃபெடரல் அமைப்பை அவர் கோரியதற்கு முக்கியமான காரணம், தமிழர் வாழும் பகுதியின் நிலங்களில் சிங்களப் பெரும்பான்மை அரசு சிங்களர்களைக் குடியமர்த்தி அந்தப் பிரதேசங்களில் இன விகிதாச்சாரத்தையே மாற்றி வந்ததாகும். மாநில அரசு என்ற ஒன்றிருந்தால் தன் எல்லைக்கு உட்பட்ட பிராந்தியங்களை அதுவே பராமரிக்கும். உதாரணமாக கேரளாவின் தரிசு நிலங்களை குஜராத்தி மக்களுக்குப் பட்டாப் போட்டுக் கொடுக்கும் அதிகாரத்தை டெல்லியில் ஒரு குஜராத்தி பிரதமராக வந்தாலும் இந்தியாவின் ஃபெடரல் அமைப்பு தருவதில்லை. ஆலப்புழா என்ற மலையாளப் பெயர் கொண்ட ஆற்றின் குறுக்கே அணை கட்டி அதற்கு குஜராத்தி மொழியில் எதாவது ஒரு பெயர் வைத்து குஜராத்திகளைக் குடியமர்த்தி காலப் போக்கில் கேரளாவின் இன விகிதாச்சாரத்தில் குஜராத்திகளின் எண்ணிக்கையைக் கூட்டி, குரஜாத்திகள் குவிந்திருக்கும் கேரளப் பகுதியைத் தனி மாவட்டங்களாகவும், சட்ட மன்றத் தொகுதிகளாகவும் பிரித்து கேரள சட்டசபையில் குரஜாத்திகளை உள்ளே நுழைத்து, அதன் பிறகு கேரளா மலையாளிகளின் பூர்வீக இருப்பிடம் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது என்று வாதிட்டால் அது எவ்வளவு அநியாயமாக இருக்குமென்று கற்பனை செய்து பாருங்கள். சிங்கள அதிகார வர்க்கம் கற்பனைக்கு எட்டாத விஷயங்களை நிகழ்த்திக்காட்டுவதற்கென்றே அவதரித்திருந்தது.

சேனநாயகா ஆட்சியில் 1956 இன் போது சிங்களர் பெரும்பான்மையாக உள்ள Walawe பள்ளத்தாக்கில் நீர்ப் பாசனத் திட்டம் நிறவேற்றச் சொல்லி கோரிக்கை எழுந்தது. அதை நிறைவேற்றினால் Empilipitiya and Ambalantota முதலிய சிங்களப் பகுதிகள் புதிய குடியமர்வுகளை உள்வாங்கும். அதை சேனநாயகா விரும்பவில்லை. சிங்களவர்களை கிழக்க்குப் பிராந்தியத்தில் குடியமர்த்தும் ஹிட்லரின் பாதையைத் தேர்ந்தெடுத்தார். 'தேசத் தந்தை' என்று சிங்கள மக்களால் போற்றப்படும் D.S.சேனநாயகா உண்மையில் இனப் பிரச்சினையின் முக்கியக் காரணமாகிய நில ஆக்கிரமிப்புத் திட்டத்தின் தந்தையாகவே திகழ்கிறார்.

கிழக்குப் பிராந்தியத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் பகுதியில் வசித்து ஆயிரக் கணக்கான தமிழர்கள் இடம் பெயருமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். சிலோன் படிப்பளை ஆறு 'கால் ஓயாவாக' (Gal Oya) மாறி தமிழர்களில் இடத்தில் சிங்களர்களைக் கொணர்ந்து அமர்த்தியது. மக்களும், மக்களின் பூர்வீகமான இடங்களுமே சிறுபான்மை இனத்தின் பாதுகாப்பிற்கு ஆதாரமான தூண்கள் என்று கருதிய செல்வநாயம் ஏற்கனவே மலையகத் தமிழர்களின் வாக்குரிமையும், குடியுரிமையும் பறிபோன போது மக்கள் மீதான தாக்குதலில் சிறுபான்மை எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து நாடாளுமன்றத்தில் தமிழர் சார்பாகப் பேசும் உறுப்பினர்களின் எண்ணிக்கை கண் முன்னே தேய்வதைக் கண்டு அஞ்சினார். மேலும் கால் ஓயா மற்றும் கந்தளைப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் குடியேற்றம் துரிதமான போது தமிழரின் பாரம்பரிய நிலப் பரப்பும் தாக்குதலுக்கு உள்ளாவதைக் கண்டார். சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது என்ற செல்வநாயகம் சுவர் இடிபடுவதைத் தடுக்கத் துணிந்தார். ஆனால், இந்தக் குடியேற்றம் காலப் போக்கில் அதிகமானதே ஒழிய குறைந்த பாடில்லை.

Gal oya திட்டத்தின் மீழ் 1,20,000 ஏக்கர் நிலம் நீர்ப்பாசன் வசதி பெற்றது. ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் அங்கே குடியேறின. அதே நேரம் வெறும் 900 தமிழ்க் குடும்பங்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. இவ்வாறு குடியேறிய தமிழர்கள் 1956 கலவரத்தின் போது விரட்டியடிக்கப்பட்டனர். பிறகு அமைதி திரும்பிய போது தங்கள் நிலங்களுக்கு மீண்டும் வந்து பயிரிட்டனர். ஆனால், அது வெகு நாள் நீடிக்கவில்லை. 1958 கலவரத்தின் போது உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக தப்பி ஓட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாயினர். பல பேரு திரும்பவே இல்லை. திரும்பி வந்து பார்த்தவர்கள் தமக்கென்று ஒதுக்கிய நிலத்தில் சிங்களர் ஆக்கிரமித்திருப்பதைக் கண்டனர். இத்தகைய இனச் சுத்திகரிப்பிற்குத் தெளிவாகத் திட்டமிட்ட சேனநாயகாவை தேசத் தந்தை என்று சொல்லித்தானே ஆக வேண்டும். நிராதரவாக நின்ற தமிழர்கள் வேறென்ன செய்ய, சிலோன் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து சிங்களத் தலைமை கருணை காட்டாதா என்று ஏங்கி எதிர்பார்ப்பதைத் தவிர?

Wednesday, June 10, 2009

கம்யூனிஸ்டுகளின் தேவை!

கம்யூனிஸ்டுகளின் தேவைஎன்ற தலைப்பில் 1-ஜூன்-2009 உயிரோசைக்கு எழுதியது

******
2009 ஆம் வருடம் மே 18 ஆம் தேதி ஒன்றைவிடக் கூடுதலான காரணங்களுக்காக தெற்காசிய வரலாற்றில் பதிவு செய்யப்படும். இன்னமும் தீர்க்கப்படாத பல வித மர்மங்களைத் தாங்கி நிற்கிற, வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் நிகழ்ந்ததாக இலங்கை இராணுவம் முதன் முதலில் அறிவித்தது மே 18 அன்றுதான். ஆம்புலன்ஸில் தப்பிச் சென்ற போது அவர் சுடப்பட்டதாக இலங்கை சொன்னது.

அதே தினம் வேறு ஒரு காரணத்திற்காகவும் இந்தியாவில் பதிவு செய்யப்படுகிறது. பங்குச் சந்தை வர்த்தகம் அன்று நிறுத்தப்பட்டது. வழக்கமாக பங்கு விலைகள் நிலை குலைந்து போய் அளவு கடந்து சரியும் போது மட்டுமே வர்த்தகம் நிறுத்தப்படும் என்பதை நாம் அறிந்திருந்தோம்.

கடந்த 17 ஆண்டுகளில் நான்கு முறை பங்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் விலை வீழ்ச்சியே அதற்குக் காரணமாக இருந்திருக்கிறது. 2004 பொதுத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கூட்டணி தோற்றதும் ஷேர் மார்க்கெட் பல்டி அடித்தது ஒரு எடுத்துக்காட்டு.

முதலாளித்துவத்துக்கு இணக்கமான ஒரு ஆட்சியை வலதுசாரி சிந்தனை கொண்ட பா.ஜ.க நடத்தியது என்பதால் பங்குச் சந்தை அதைக் கொண்டாடி வந்தது. ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற நம்பிக்கை மங்குமென்று அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. வாஜ்பாய் அரசாங்கம் தோற்று, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் நிலை ஏற்பட்டவுடன் முதலாளித்துவ சந்தை நடுக்கம் கண்டது.

இடதுசாரி கம்யூனிஸ்டுகளின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததே அதற்குக் காரணம். எப்போதுமே பங்குச் சந்தைக்கும், பொதுவுடமைவாதிகளுக்கு ஏழாம் பொருத்தம் என்பதைச் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. 2009 பொதுத் தேர்தல் முடிவு வெளிவரும் முன்னர் அமெரிக்க அதிகாரிகள் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்து இடதுசாரிகளோடு சேர்ந்து ஆட்சி அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தியதாகச் செய்திகள் வந்தது இதற்கு இன்னுமொரு சாட்சி.

மே 17, 2004 அன்று (தேர்தல் முடிவை அடுத்து) மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 16.62 சதவீதம் வீழ்ந்தது. அதனால் அன்றைய தினம் முழுவது சந்தையை இழுத்து மூட வேண்டிய கட்டாயம் உண்டானது. இடதுசாரிகள் தயவில் ஆட்சி அமைவதன் எதிரொலியே அந்நிகழ்வு.

பிறகு முதலாளி வர்க்கத்திற்கு மிகவும் பிடித்த மன்மோகன் சிங் பிரதமராகவும், ப.சிதம்பரம் நிதியமைச்சராகவும் நியமிக்கப்பட்ட பிறகே நிலைமை மேம்பட்டது.

சரியாக ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதே காங்கிரஸ் மறுபடியும் தேர்தலைச் சந்தித்து வெல்கிறது. அந்தக் கூட்டணி 322 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கப் போவது தெரிகிறது. அந்த முடிவை பங்குச் சந்தை வேறு விதமாகக் கொண்டாடியது.

மே 18, 2009 அன்று பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியவுடன் 2110.79 புள்ளிகள் உயர்வு, அதாவது 17.34 சதவீதம். இது வரலாறு காணாதது. கன்யூனிஸ்ட்டுகள் இல்லாமல் ஒரு நிலையான ஆட்சி அமைவதை முதலாளித்துவம் இப்படிக் கொண்டாடுகிறது.

கடந்த ஐந்தாண்டுக் கால ஆட்சியின் கடைசிச் சில மாதங்களைத் தவிர காங்கிரஸ் ஆட்சிக்கு கம்யூனிஸ்ட்டுகள் வெளியில் இருந்து ஆதரவு தந்தார்கள். எனினும் உண்மையான எதிர்க் கட்சிக்குரிய பொறுப்புணர்வோடு அவர்கள் செயல்பட்டார்கள் என்பதை நாம் ஒப்புக் கொண்டாக வேண்டியுள்ளது. அரசின் பல தாராளமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளை எதிர்த்தார்கள்.

அவர்களின் எதிர்ப்பு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கையின் வேகம் ஓரளவுக்குக் கட்டுக்குள் இருந்தது என்றால் அதற்கு இடதுசாரிகளின் எதிர்ப்பு முதன்மையான சிக்கலாக இருந்தது. ஒரு வகையில் பார்த்தால் பாதுகாப்பான பயணத்திற்கு அவசியமான வேகத் தடையாக அவர்கள் விளங்கியிருக்கிறார்கள்.

‘வலியது வாழும்’ என்ற முதலாளித்துவ சித்தாந்தம் மேற்குலகில் மறு பரிசீலனைக்கு அல்லது மறு சிந்தனைக்கு ஆளாகிய தருணத்தில் இவர்களை நாம் நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இடதுசாரிகளின் நிலைப்பாடுகள் சரியோ தவறோ அதைப் பற்றிக் கவலையில்லை. ஆனால் அவர்கள் அரசின் செயல்பாடுகளைப் பற்றி விமர்சனம் செய்தார்கள். கொள்கைகளை கேள்விக்கு உள்ளாக்கினார்கள். தர்க்க ரீதியான விவாதத்தை ஏற்படுத்தினார்கள். ஜனநாயகக் கட்டமைப்பில் மிக அவசியமான ஒரு அம்சம் இது.

இப்போது காங்கிரஸ் கட்சிக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் சித்தாந்த அடிப்படையில் பெரிய வேறுபாடு கிடையாது. சமயச் சார்பற்ற கட்சி என்ற பிம்பத்தின் காரணமாக முஸ்லிம் மக்களின் ஓட்டுகளை காங்கிரஸ் பெறும். அதைத் தவிர்த்துப் பார்த்தால் இவை இரண்டுமே வலதுசாரி-முதலாளித்துவ அமைப்புகளே.

இடதுசாரி இயக்கங்களில் கதாநாயகர்கள் கிடையாது. அதிகாரம் (என்ற ஒன்றிருந்தால்) கட்சித் தலைமையிடம் மட்டுமே குவிந்து கிடப்பதில்லை. உட்கட்சி ஜனநாயகம் என்ற ஒரு சங்கதி எந்த ஒரு வடிவத்திலாவது இருந்தால் அது கம்யூனிஸ்ட்டுகளிடம் மட்டுமே காணக் கூடியதாக இருக்கிறது.

அடிப்படையில் எனக்கு முதலாளித்துக் கோட்பாட்டின் மீது நம்பிக்கை உண்டு. இப்படிச் சொல்லும் போது அது எனக்குப் பிடிக்கும் என்றோ, அதுதான் உலகிற்கு நல்லது என்றோ பொருளல்ல. மாறாக அதுதான் நடைமுறைச் சாத்தியம் உள்ளது என நாம் நம்புவதாகப் பொருள். வல்லான் வகுத்ததே நியதி. வலியது வாழும் என்பது நமக்குப் பிடிக்காவிட்டாலும் நடப்பில் உள்ள வழக்கு.

அந்தக் காரணத்தினாலேயே பொதுவுடமை இயக்கங்களின் இருப்பு குறித்தான விசனம் நமக்கு எழுகிறது. முற்றிலும் பொருள்மயமாகிவிட்ட இன்றைய இந்திய அரசியல் சூழலில், இடதுசாரிகள் எத்தனை நாளுக்கு தாக்குப் பிடிக்க இயலும் எனத் தெரியவில்லை.

அடிப்படைப் பிரச்சினைகளைப் பற்றிய விவாதத்தை எழுப்பவும், பண முதலைகளை அம்பலப்படுத்தவும், அதிவேக பொருளாதார வளர்ச்சியைவிட ஒட்டு மொத்த வளர்ச்சி முக்கியம் என்பதை உணர்த்தவும், பெயரளவில் நடைமுறையில் இருக்கும் ஜனநாயகத்திற்கு ஓரளவேனும் அர்த்தம் கொடுக்கவும் இந்திய அரசியலில் இடதுசாரிகளின் தேவை முன்னெப்போதையும்விட இன்றைக்கு அவசியம்.

இந்தியா ஒன்றும் பணக்கார நாடில்லை; சில பணக்காரர்கள் வாழும் ஏழை நாடு. அது மாறும் வரை உண்டியல் குலுக்கிகளின் தேவை அவசியமாகிறது.

*******

Monday, June 08, 2009

ஐ.டி. இளைஞர்கள் அமைதிப் பேரணி (ஈழம்)

Tragedy of mankind is not due to brutality of few, but due to silence of many.புத்தரில் பெயரில்

இலங்கை அரசின் வதை முகாம்களில் இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் திறந்த வெளிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதையும் அங்கே அவர்கள் படிப்படியாகக் கொல்லப்படுவதையும் கண்டித்து,சர்வதேச சமுதாயத்தை நோக்கி எழுப்பியதில் சிலரது மெளனம் நேற்று மாலை கலைந்தது, ஒர் அமைதிப் பேரணி வடிவில்.இப்பேரணி தகவல் தொழில் நுட்பத் துறையைச் சேர்ந்த இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டது.


போராளிகள் மறைவதில்லை.


மன்றோ சிலை முதல் சேப்பாக்கம் வரை நீண்ட இப்பயணத்தில் பெரும்பாலும் இளைஞர்களே பங்கெடுத்தனர்.


போர்க் குற்றங்களுக்காக..குறிப்பிடத் தகுந்த எண்ணிக்கையில் பெண்களும், குழந்தைகளும் பங்கு பெற்றனர்.

அடுத்த தலைமுறை....

The Hindu & Indian Express இல் இருந்து வந்ததாக இரு பெண் நிருபர்கள் பேரணியில் கலந்துகொண்ட இளைஞர்களை நோக்கி, “நீங்கல்லாம் யார்? இதை எப்படி ஆர்கனைஸ் பண்ணீங்க? எப்படி இலங்கை அரசு மீது தப்பு சொல்றீங்க? நாமெல்லாம் இந்தியர்கள் அல்லவா?” என்று மல்லுக்கு நின்றனர்.

அதற்கு ஒரு பையன் திருப்பிச் சொன்னது: “First of all, we are all humans"சர்வதேச சமுதாயத்தை நோக்கி..


லசந்தவின் கொலையும், ராமின் லங்கரத்னா வருதும்.. மக்களுக்குத் தெரிந்தே இருக்கிறது..

தந்தை ஜெகத் கஸ்பர் மற்றும் முகம் மறைக்கப்பட்டிருக்கும் அய்யநாதன்அட்டையை மட்டும் படம் பிடிக்க அனுமதிக்காமல் தன்னையும் சேர்த்தே பிடிக்குமாறு சொன்னவர்..

அதிகார வர்க்கத்தைக் கண்டித்து உரக்கக் குரல் கொடுத்துக் கோஷம் போட்ட அம்மையார்..கோஷம் ..பேருந்தில் சும்மா போனவர்களும், இரு சக்கர வாகனத்தின் போனவர்களும் பேரணியில் இணைந்தனர்..


பேனருக்குப் பின்னால் பத்திரிக்கையாளர் அய்யநாதன்..
பேரணியின் முடிவில் அய்யநாதனும், தந்தை ஜெகத் கஸ்பரும் சிறு உரை நிகழ்த்தினார்கள்.

Friday, May 22, 2009

ஃபர்ஸ்ட் மார்க்

- செல்லமுத்து குப்புசாமி

வெற்றி என்பது என்ன? என்ற தலைப்பில் 18-மே-2009 உயிரோசைக்கு எழுதியது.

*****

இதை நான் சொல்லியே தீர வேண்டும். வெறும் முப்பது வீடுகளைக் கொண்ட சின்னஞ்சிறு கிராமம் எங்களுடையது. தேர்தல் பிரச்சாரத்துக்குக் கூட வேட்பாளர்கள் யாரும் வர வேண்டிய அவசியம் இல்லாமல் ஒதுக்கப்பட்ட ஒரு சிற்றூர்.

அப்படிப்பட்ட கிராமம்தான் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1175 மதிப்பெண்களை எடுத்து திருப்பூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவியை (மாநில முதல் மதிப்பெண் 1183) உற்பத்தி செய்திருக்கிறது. சரியாக 10 ஆண்டுகளுக்கு முன் இதே மாதிரி மாவட்ட முதலிடம் பெற்ற மாணவியை எங்களூர் கொண்டிருந்தது. இருவரும் சகோதரிகள்.

இந்த நேரத்தில் இன்னொரு விஷயமும் என் நினைவுக்கு வருகிறது. கோவை மாநகரம் அடக்க முடியாத வியப்பை எனக்களித்த சமயம் அது. பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு மேல் நிலைப் பள்ளிப் படிப்புக்குக் கோவையில் சேர்ந்திருந்தேன். என்னை விடக் கூடுதல் மதிப்பெண் வாங்கிய நிறைய பேர் 11 ஆம் வகுப்பில் நுழைந்தனர்.

அதில் ஒருவன், பத்தாவதில் ஐநூறுக்கு 465 மதிப்பெண் பெற்றிருந்தான். வெகு விரைவில் பதினொன்றாவது காலாண்டுத் தேர்வு நடந்தது. அதில் 1,200 க்கு 464 மதிப்பெண் மட்டுமே அவனால் எடுக்க முடிந்தது. தேர்வில் பெறும் மதிப்பெண் மட்டுமே ஒருவனின் அறிவை அளவிடும் துல்லியமான கருவியல்ல எனப் புரிந்துகொள்ள அது எனக்குப் போதுமானதாக இருந்தது.

மாநில முதலிடம், இரண்டாம் இடம் வாங்கும் மாணவர்கள் பேப்பருக்கு போஸ் கொடுத்து, தொலைக் காட்சிக்குப் பேட்டி கொடுத்து பிரபலம் ஆகிறார்கள். அதன் பிறகு என்ன ஆகிறார்கள்? சமுதாயத்தில் இவர்களால் ஏற்படும் மாற்றங்கள் யாவை? யாருக்குமே விடை தெரியாத கேள்விகள் இவை.

அவர்களது கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும், உழைப்பும் நிச்சயம் பாராட்டுக்கு உரியது. அதற்கு இணையான அளவு பரிதாபமும் அவர்கள் மீது எனக்கு எழுவதுண்டு. அன்னம், தண்ணீர் பாராமல் வருடம் முழுவதும் கண் விழித்துப் படித்து எண்ணற்ற மதிப்பெண் வாங்கும் நபர்கள் மீது எனக்கு மரியாதை உண்டு. அதற்காக அவர்கள் கொடுக்கும் விலை குறித்து கரிசனமும் உண்டு.

தவளையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைப் படம் வரைந்து பாகங்களை விளக்கு - என்ற கேள்வியிலிருந்தே எனக்கு பயாலஜி மீது பயம். பன்னிரண்டாம் வகுப்பு உயிரியல் தேர்வுக்கு முந்தைய நாள் தூர்தர்ஷனில் ‘தூறல் நின்னு போச்சு’ படம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஒரு வேடிக்கை என்னவென்றால் நான் சேர்ந்த அதே கல்லூரியில், அதே துறையில்தான் என்னை விட 100 மதிப்பெண் கூடுதலாக எடுத்த எங்கள் பள்ளியின் முதல் மாணவன் அந்தோணி சேர்ந்தான்.

எங்களுக்கு முந்தைய வருடம் பள்ளியின் முதல் மதிப்பெண் பெற்ற மாணவனும்கூட அப்படித்தான். நினைத்த கல்லூரி கிடைக்காமல் ஒரு வருடம் கடத்தி எங்களோடு சேர்ந்தார் (ர் - ஒரு வருடம் சீனியர் அல்லவா).

கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த சமயம். நள்ளிரவு நேரத்தில் ஒரு நாள் அந்தோணி கோவை அஞ்சுமுக்குப்பகுதி அருகே சுற்றிக்கொண்டிருந்த போது போலீஸ் அவனை லத்தியால் அடித்திருக்கிறது. அன்றே முடிவு செய்துவிட்டான், இனி மேல் போலீஸ் கை வைக்க முடியாத பணிக்குச் செல்ல வேண்டுமென்று. அதன் காரணமாகவே பிரபலமான மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தும்கூட அதை மறுத்துவிட்டான்.

இப்போது விமானப் படையின் தொழில்நுட்பப் பிரிவில் வேலை செய்து வருகிறான். சம்பளம் குறைவுதான். அவன் சம்பாதித்ததும் குறைவுதான். எனினும் கோயம்புத்தூரில் எந்த போலீஸ்காரரும் அந்தோணி மேல் இனி கை வைக்க முடியாது.

இந்தக் கதையை ஏன் சொல்ல வேண்டியிருக்கிறதென்றால், வேலைக்காகப் படிப்பதற்கும், விருப்பப்பட்டுப் படிப்பதற்கும் உள்ள வேறுபாடு நம்மில் பல பேருக்குப் புரியவில்லை என்பதால்தான். நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ வேலைக்காக மட்டுமே படித்தாக வேண்டிய சமூக மற்றும் பொருளாதாரச் சூழலில் நாம் வசிக்க வேண்டியிருக்கிறது.

முதலிடம் வாங்கும் மாணவர்களில் எதிர்காலம் சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை. அவர்களில் எத்தனை பேர் சுயமாகத் தொழில் தொடங்கி வேலை வாய்ப்புகளை உருவாக்குவார்கள் என்று தெரியவில்லை.

நாட்டின் முதன்மையான வழக்கறிஞர், கணித வல்லுனர், விஞ்ஞானி, சிந்தனையாளர், பொருளாதார மேதை, மருத்துவ நிபுணர், தொழிலதிபர், பத்திரிகையாளர், எழுத்தாளர், தத்துவ மேதை முதலிய கிரீடங்களை எத்தனை முதல் மாணவர்கள் அணிவார்கள் என்று தெரியவில்லை. அதிகபட்சமாக அவர்கள் அமெரிக்கா செல்லக் கூடும்.

ஏட்டுக் கல்வியையும், தேர்வு மதிப்பெண்ணையும் கடந்து ஒரு மனிதனை அளவிட வேண்டிய அவசியம் இருக்கிறது. அதுவே அவனது வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும். உதாரணத்துக்கு ‘நீயா நானா’ நிகழ்ச்சி ஒன்று.

கல்லூரி ஆசிரியர்கள் அதில் பங்கெடுத்தனர். நீங்கள் என்ன மாதிரியான புத்தகம் வாசிக்கிறீர்கள், கடைசியாக என்ன தலையங்கம் வாசித்தீர்கள் என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்டதற்கு அதிர்ச்சியளிக்கும் பதிலே கிட்டியது. அவர்கள் வாசித்ததாகச் சொன்னதெல்லாம் எம்.எஸ்.உதயமூர்த்தி ரீதியிலான சுய முன்னேற்ற நூல்கள். அவற்றையெல்லாம் தான் எட்டாம் வகுப்பிலேயே வாசித்துவிட்டதாக கோபிநாத் கூறினார்.

பத்தாண்டுகளுக்கு முன்பு மாவட்ட முதலிடம் பெற்ற மாணவி இன்று பத்தோடு பதினொன்றாக சிறுசேரியில் வேலை செய்கிறார். இது ஒரு வகை. பொறியியலும் கிடைக்காமல், மருத்துவமும் கிடைக்காமல் கோவை வேளாண்மைக் கல்லூரியில் இணைந்த என் பள்ளிப் பருவத் தோழர் இன்னொரு வகை. இளங்கலை வேளாண்மை அறிவியலுக்குப் பிறகு MSC, Phd .. இப்போது வட மாநிலம் ஒன்றில் மாவட்ட ஆட்சியர்.

நல்ல மதிப்பெண், நல்ல கல்லூரி, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுப் பட்டம்.... இது முடிந்தால் வாழ்வில் செட்டில் ஆகிவிட்டதாகச் சிலர் (குறிப்பாக பெற்றோர்) கருதுகிறார்கள். ஆனால் உள்ளபடியே சொன்னால் நல்ல மதிப்பெண் என்பது ஒரு திறவுகோல் மட்டுமே. பொருளாதார ரீதியான தோல்வியையும், வேலையின்மையையும் அது தவிர்க்கும். ஆனால் மறுபடியும் செய்தித்தாளில் போட்டோ வருமளவு வெற்றியை நிச்சயப்படுத்தும் என்று சொல்வதற்கில்லை.

Thursday, May 14, 2009

போருக்குப் பிந்தைய அரசியல் தீர்வு

- செல்லமுத்து குப்புசாமி

ஈழப் போராட்டம் குறித்த என் நிலைப்பாடு, சில விளக்கங்கள் என்ற தலைப்பில் தமிழ் சசி எழுதிய பதிவிற்கான எதிர்வினை.

அன்புள்ள சசி,

ஈழ மக்களின் சுய நிர்ணயப் போராட்டம் தோல்வியின் விளிம்பை எட்டியதற்கு கிட்டத்தட்ட நாம் அனைவருமே பொறுப்பேற்க வேண்டும். அந்த மக்களின் உரிமைகளை, அவர்தம் அரசியல் அபிலாசைகளை உலகின் பிற பகுதியினருக்கு (தமிழ் நாட்டிலேயே கூட சிறு விழுக்காட்டினருக்குத்தான் அதன் பின்னணி தெரியும்) விளக்கிச் சொல்லத் தவறியிருக்கிறோம்.

புலி ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற நிலைகளைக் கடந்து மானுடம் சார்ந்து அங்கே அரங்கேறும் அவலத்தின் ஆழத்தை அணுகாமல் போயிருக்கிறோம். இந்திய ஊடக மற்றும் ராஜதந்திர பலத்தினால் சுய நிர்ணயப் போராட்டம் நசுக்கப்பட்டுவிட்டது என்றாலும், சர்வதேச சமுதாயத்தின் அங்கீகாரத்தைப் பெற நாம் எந்த அளவு (இடைவிடாமல்) பிரயத்தனப்பட்டோம் என்பதும் ஒதுக்க முடியாத கேள்வி.

இந்தியாவின் ஆதரவு இல்லாமல் ஈழத் தமிழர்களுக்கு தனி நாடு பெற்று விடலாம் என்ற நம்பிக்கை எனக்கு என்றுமே இருந்ததில்லை. அது ஒரு போதும் நடக்கப் போவதில்லை. இராஜூவ் காந்தியின் மரணம் நிகழாமல் போயிருந்தாலும் இந்தியாவின் நிலை மாறியிருக்காது.

அதே போல போரை நிறுத்தவே துப்பில்லாத சர்வதேச சமுதாயம் ஒருங்கிணைந்த இலங்கைக்குள் சம உரிமையோடு வாழும் அரசியல் தீர்வை உருவாக்கும் என்றெல்லாம் என்னால் நம்ப முடியவில்லை. We are helpless, as you said.

இலங்கை அரசை பல முறை பேச்சுவார்த்தைக்கு இழுத்து வந்தது புலிகளின் இராணுவ பலம்தான் என்றாலும், உரிமைப் போர் வெல்வதற்கு இராணுவ பலம் மட்டுமே போதாது. (அதற்காக அகிம்சைப் போராட்டம் சிங்கள எஜமானர்களை பேச்சு மேசையில் இழுத்து அமர வைக்கும் என்றல்ல) கூடவே ராஜதந்திர பலமும் முக்கியம். எனக்கென்னவோ பாலசிங்கத்தின் மறைவு சமாதானத் தீர்வின் மரணமாகவும் கருதப்பட வேண்டிய ஒன்று எனப் படுகிறது. ஒரு சில தனி நபர்களை முன்னிலைப்படுத்திய, அவர்களை மட்டுமே நம்பிய அமைப்புகளின் கதி இவ்வாறே முடிகிறது.

புலம் பெயர்ந்த தமிழர்களை விடுத்து, இன்றைக்கு ஈழத்தில் பிறந்து வளர்ந்து, இன்னமும் உயிரோடிருக்கும் இளம் தலைமுறையினரில் பாலசிங்கம் போல கல்வி மற்றும் அரசியல் அறிவு நிறைந்தோர் எத்தனை பேர் உள்ளனர் என்று எனக்குத் தெரியவில்லை.

புலிகள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் நிலையில் (இதன் சாத்தியம் குறித்து சிலர் கவலைப்படலாம்) தமிழர்களுக்கு பிராந்திய அதிகாரமும், ராஜீவ் காந்தி கையெழுத்திட்ட ஒப்பந்தம் என்று காங்கிரஸ்காரர்கள் சொல்வது போல வடக்கு-கிழக்கு பகுதிகளை இணைத்து தமிழ் மாநிலம் அமைப்பதற்கும் இலங்கை அரசு இறங்கி வராது. வடக்கு தேவானந்தாவுக்கும், கிழக்கு பிள்ளையானுக்கும் என்பது கூட கனவே. மட்டக்களப்பு ஒருவருக்கு, அம்பாறை ஒருவருக்கு, யாழ்ப்பாணம் ஒருவருக்கு, மன்னார் ஒருவருக்கு என தமிழர் தாயகம் ஐந்தாறாகப் பிரிக்கப்பட்டாலும் ஆச்சரியப்பட முடியாது.

இறுதிப் போர் முடிந்த பிறகு கை, கால் இழந்திருக்கும் இனம் முறையான கல்வி பெற்று தமது குரலை மேலெடுக்கவே 20-30 ஆண்டுகள் ஆகும். தமிழ் தேசிய சிந்தனை அப்போது பலம் பெறலாம். ஒரு வேளை சமஷ்டி/கூட்டாட்சித் தீர்வு என்பது அப்போது நடக்கலாம். அதுவும் முற்போக்கான சிங்கள அரசியல் தலைமை அமைந்தால் மட்டுமே அது நடக்கும்.

ஆனால் அதையெல்லாம் விட, அவர்கள் உயிரோடு இருக்க வேண்டும். அதுதான் முக்கியம்.

Tuesday, May 12, 2009

இன்னொரு பா.ம.க - கொங்கு நாடு மு.பே

- செல்லமுத்து குப்புசாமி

உலகம் தட்டையாகவும் இல்லை. ஒன்றுபட்டும் இல்லை. இந்தியர் அனைவரும் ஒரே இனம் என்ற கற்பிதம் நாளுக்கு நாள் மங்கிக்கொண்டே வருவதாகப் படுகிறது.

காமராஜரோ, மூப்பனாரோ இன்றைக்கு உயிரோரு இருந்திருந்தால் இலங்கைப் போரை நடத்துவதற்கு சோனியாவை அனுமதித்திருக்க மாட்டார்கள் என்று ஒரு பத்திரிக்கையாளர் சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். அந்தத் திராணி சிதம்பரம், தங்கபாலு ஆகியோருக்கு இருக்கப் போவதில்லை. ஆனால் பிரச்சினை அதுவல்ல.

பல்வேறு இன மற்றும் மொழியினரைத் தன்னகத்தே கொண்டிருக்கும் இந்தியாவைப் போன்ற ஒரு தேசத்தில் கருத்து முரண்பாடுகளை, மாற்றுச் சிந்தனைகளை உள்வாங்கிச் செயல்படும் தேசியத் தலைமை இல்லாமல் போனதே இதற்கெல்லாம் காரணம் என்று சொல்ல முடியும்.

காங்கிரஸ் பேரியக்கம் அங்கங்கே உடைந்தும், சிதைந்தும் பல்வேறு பிராந்திய மக்களின் நலன்களை, அவர்தம் பிரச்சினைகளை முன்னிறுத்திப் பேசுவதாக அமைந்தது. சரத் பவார், மூப்பனார் எல்லாம் ஒரு வகை என்றால் நெடுமாறன், தமிழருவி மணியன் போன்றோர் இன்னொரு ரகம்.

மக்கள் பிரதிநிதிகள் என்று தேர்ந்தெடுக்கபடுவோர் எந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்களோ அந்த மக்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் யோக்கியதை அற்றவர்களாக ஆக்கப்பட்டதில் (இந்திரா காலம் தொடங்கி) காங்கிரஸ் பேராயக் கட்சி மேலிடத்திற்கு முக்கியப் பொறுப்புண்டு.

சுதந்திரப் போராட்டம் உருவாக்கிய இந்திய தேசிய உணர்வின் மூலம் 'இந்திய தேசியத்தின் முதுகெலும்பு' என்ற தனது பிம்பத்தை முன்னிலைப்படுத்தும் காங்கிரஸ் எவ்வாறு அந்தப் பிம்பத்தைப் பொய்ப்பிக்கிறதோ, அதே போல ஒரு காலத்தில் ஒட்டு மொத்த தமிழகத்தின் நலனை முன்னிலைப்படுத்தி போராட்டங்களில் மூலமாக வளர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம் தனது நிஜ அடையாளத்தை இழந்து நிற்கிறது.

ஒவ்வொருவருக்கும் இருக்கிற அடையாளச் சிக்கல் நாளுக்கு நாள் மாறி வருகிறது. ஒருவனின் அடையாளம் மொழி, இனம், தேசம், சாதி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டுமெ சார்ந்திருப்பதே பெரும்பாலும் உண்மையாக இருக்கிறது. ஒரு வேளை ஒன்றுக்கு மேற்பட்ட அடையாளக் குறிகளுக்குள் தன்னை அடைத்துக்கொண்டாலும், ஏதேனும் ஒரு கட்டத்தில் அவற்றில் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைக்கு அவன் தள்ளப்படுகிறான். அவன் வாழ்கிற சூழலே அதைத் தீர்மானிக்கிறது.

தேசியக் கட்சி, மாநிலக் கட்சி மற்றும் ஜாதிக் கட்சி ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு அவன் நிர்பந்திக்கப்ப்டும் போது அவன் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்க முடியும். வன்னியர் சங்கமாக இருந்த அமைப்பு இன்று தமிழகத்தின் மூன்றாவது மிகப் பெரிய கட்சியாக உருவெடுத்திருப்பது மரத்தை வெட்டி ரோட்டில் போட்டு அவர்கள் கலகம் செய்த காலத்தில் நாமெல்லாம் நினைத்துக் கூடப் பார்த்திராத ஒன்று.

பாட்டாளி மக்கள் கட்சியைப் போலவே இன்னொரு அமைப்பு சத்தமில்லாமல் அரசியல் அவதாரம் எடுத்துள்ளது. கொங்கு வேளாளர் சமூகம் அதிகமாக வசிக்கும் கொங்கு மண்டலத்தில் களம் காண்கிறது அந்த அமைப்பு. அதன் பெயர் கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை, சுருங்கச் சொன்னால் கவுண்டர் கட்சி. சில மாதங்களுக்கு முன்பு அந்த அமைப்பு நடத்திய அரசியல் எழுச்சி மாநாட்டில் 20 இலட்சம் பேர் வரை கலந்து கொண்டதாக அறிகிறோம்.

தமிழ்நாட்டில் பிற சமூகத்தினரைப் போல கொங்கு வேளாளர் சமூகத்தினர் சமூக அடுக்கில் பிறபடுத்தப்பட்டோர் அல்லர். சுய கெளரவமும், தோரணையும், வெட்டி பந்தாவும் கொண்டவர்கள் அவர்கள். அரசியல் ரீதியாகவும் குறிப்பிடத் தகுந்த பிரதிநிதிகளைக் கொண்டவர்கள். C. சுப்பிரமணியம் (காங்கிரஸ்), சர்க்கரை மன்றாடியார் (காங்கிரஸ்), முத்துச்சாமி(அதிமுக), செங்கோட்டையன்(அதிமுக), வெள்ளகோவில் சாமிநாதன் (திமுக), பொங்கலூர் பழனிச்சாமி (திமுக), மு.கண்ணப்பன் (திமுக - மதிமுக - திமுக), சுப்புலட்சி ஜெகதீசன் (திமுக) ஆகிரோர் அமைச்சர் பொறுப்பில் இருந்த சில அரசியல் கவுண்டர்கள்.

இது போக கொங்கு மண்டலத்தின் (தனித் தொகுதிகள் நீங்கலாக) பெரும்பாலான தொகுதிகளில் எல்லாக் கட்சிகளின் வேட்பாளர்களாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாகவும் இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இருந்திருக்கிறார்கள். இப்போதும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் ஒரு சமுதாய அமைப்பாக இருந்த கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை அரசியல் களத்தில் குதித்திருக்கிறது.

நாளை நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் கீழ்க்கண்ட தொகுதிகளில் கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை வேட்பாளர்கள் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.
1. பொள்ளாச்சி
2. கோவை
3. திருப்பூர்
4. ஈரோடு
5. நீலகிரி
6. சேலம்
7. கரூர்
8. நாமக்கல்
9. கிருஷ்ணகிரி
10. தர்மபுரி
11. கள்ளக்குறிச்சி
12. திண்டுக்கல்

வெறும் கவுண்டர் சமுதாயத்தின் நலனை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த கொங்கு மண்டலத்தின் முன்னேற்றத்திற்காகப் போராடுவதே தங்கள் நோக்கம் என்றும், இந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து சமூகத்தினரின் ஆதரவும் தமக்கு உண்டு என்றும் இவர்கள் கூறுகிறார்கள். இருக்கட்டும்.

எது எப்படியாயினும், இப்படியாகப்பட்ட ஒரு அரசியல் கட்சிக்கான தேவை இன்றைக்கு இல்லை. அதே நேரம் அது சட்டத்திற்குப் புறம்பானதும் அல்ல. இவர்கள் போட்டியிடும் 12 தொகுதிகளில் கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் முதலிய கொங்கு மண்டல எல்லையோரங்களில் இவ்வமைப்பு எவ்விதப் பாதிப்பையும் உண்டாக்காது,

மற்றபடி பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு முதலிய தொகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பெறக் கூடும். ஒரு தொகுதியிலாவது இவர்கள் வென்றால் ஆச்சரியம். எனினும் வாக்குகளைப் பிரிப்பதற்கான சாத்தியமும், பெரிய கட்சிகளை வெற்றி வாய்ப்பைப் பாதிப்பதற்கான சாத்தியமும் அதிகம்.

ஒரு பெரிய கட்சியில் கவுண்டர் சமுதாய வேட்பாளரும், இன்னொன்றில் வேறொருவரும் போட்டியிடும் பட்சத்தில் கவுண்டர் ஓட்டுக்களை இவர்கள் பிரித்து விடக் கூடும். உதாரணத்திற்கு ஈரோடு தொகுதி. இங்கே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வென்றால் அது மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்திகான ஓட்டுக்களை கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை பிரிப்பதுவே முக்கியக் காரணமாக இருக்கும்.

மற்றபடி பாட்டாளி மக்கள் கட்சியைப் போன்ற ஒரு அரசியல் வளர்ச்சியை கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை எட்டும் என்பதெல்லாம் நடக்காத கதை.

Monday, May 11, 2009

காங்கிரஸ் கூட்டணியில் ஜெயலலிதா!

தடாகம் இணைய தளத்துக்காக எழுதியது.

********
இது பின் நவீனத்துவ யுகம். ஒரு பெண்ணைப் பார்த்து, ஊரறிய மணமுடித்து வாழ்க்கைப்பட்ட பிறகு அந்தப் பெண்ணோடு காலம் முழுவதும் கூடி வாழ்ந்ததெல்லாம் அந்தக் காலம். கல்யாணம் செய்த பிறகு மற்றவன் பொண்டாட்டியோடு கனெக்‌ஷன் வைத்துக்கொள்வது இப்போதிருக்கும் பின்நவீனத்துவ யுகம். திருமணம் என்ற சமுதாய மடமையை எல்லா மட்டத்திலும் கொளுத்தும் யுகம் இது.

பின்நவீனத்துத்தின் எல்லை நாள்தோறும் விரிந்துகொண்டே இருக்கிறது.

உட்கட்சி ஜனநாயகம், நிலையான கொள்கை, கொள்கை ரீதியான கூட்டணிகள், நட்பின் அடிப்படையிலான ஆதரவுகள் முதலிய வாசகங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன என்பதைத் தவிர அவற்றில் உள்ளார்ந்த பொருளில்லை.

மத்திர அரசில் ஒற்றைக் கட்சி ஆட்சி என்பது கடந்த காலத்தின் சங்கதியாக ஆகி விட்ட பிறகு, ஆட்சியை நிர்வகிக்க ஒரு தலைவர் என்றும், கூட்டணியை நிர்வகிக்க ஒரு தலைவர் என்றும் மாறியிருக்கும் கால கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

இவற்றையெல்லாம் கடந்து, தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி மாற்றங்களும், அணிசேர்க்கையும் பின்நவீனத்துத்தின் பரிணாம வளர்ச்சியை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதாக நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் மன்மோகன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக்கொண்ட போது, காங்கிரஸ் கட்சியை ரட்சித்து ஆட்சியைக் காப்பாற்றி, அதன் பிறகு அந்தக் கூட்டணியில் இருந்து விலகிப் போயிருக்கும் யாதவக் கட்சியான (முலாயம் சிங் யாதவ் தலைமையிலான) சமாஜ்வாடி கட்சியின் தலைவர்களில் ஒருவரான அமர் சிங், “தேர்தலுக்குப் பின் காங்கிரஸுடன் நான் பிசினஸ் செய்ய வேண்டியிருக்கும்” என்று ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் சொன்னார்.

காங்கிரஸோ, பாரதிய ஜனதாவோ யாராக இருந்தாலும் சரி . . . உத்திரப் பிரதேசத்தில் மாயாவதி அரசைக் கலைக்க ஒப்புக்கொள்ளும் கூட்டணியில் சேரப்போவதாகவும் சஞ்சய் தத், ஜெயபிரதா ஆகியோரை வைத்து அரசியல் பண்ணும் அந்தக் கட்சி பகிரங்கமாகவே கூறியுள்ளது.

எல்லா மாநிலத்தைக் காட்டிலும் தமிழகத்தில் தேர்தல் களம் கொதிநிலையில் உள்ளது. இலங்கைப் போரில் சிங்கள இராணுவத்திற்கு நேரடியாக உதவும் காங்கிரஸ் அரசும், அதற்குத் துணைபோகும் கருணாநிதியின் திமுகவும் கடும் பின்னடைவைச் சந்திக்கும் என்று கணிக்கப்படுகிறது.

சன் டிவி, கலைஞர் டிவி ஆகியவற்றின் ஊடக பலம் மற்றும் திருமங்கலம் இடைத் தேர்தலை அஞ்சாநெஞ்சன் அழகிரி திமுகவிற்கு வென்று கொடுத்த உத்தியை வைத்தே தமிழகம் முச்சூடும் வென்று விட முடியுமென்கிற நம்பிக்கை ஆகியவற்றைக் கடந்தும் ஒரு வித நடுக்கம் திமுக முகாமில் ஏற்பட்டுள்ளதை உணர முடிகிறது.

சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொண்டதைப் போல அண்ணா சமாதியில் போய் கலைஞர் கடைபிடித்த இரு வேளை உணவுக்கு இடையேயான உண்ணாவிரதம், தேர்தலை முன்னிட்டு பேருந்துக் கட்டணத்தைக் குறைத்து விட்டு அதை மறுபடியும் ஏற்றியது ஆகியவை நடந்து முடிந்திருக்கின்றன.

இது போதாதென்று, “தனி ஈழம் மட்டுமே தீர்வு. அதை 1971 கிழக்கு வங்காள மக்களுக்கு பாகிஸ்தான் பிடியில் இருந்து விடுதலை வாங்கிக் கொடுத்ததைப் போல இந்திய இராணுவத்தை அனுப்பி பெற்றுத் தருவேன்” என்று ஜெயலலிதா கூறியது, ஆஸ்பத்திரியில் இருந்தவாறே, “(அங்கே போர் நிறுத்தம் எல்லாம் நடந்து முடிந்தது போல) ஈழம் பெற ஆவன செய்வோம்” என்று கலைஞர் டிவி வாயிலாக கலைஞரைப் பேச வைத்திருக்கிறது.

கருணாநிதியின் ஒவ்வொரு நகர்வுகளையும் தீர்மானிக்கும் சக்தியாக ஜெயலலிதா மாறி விட்டார் என்பது ஆச்சரியம் அளிக்கவில்லை என்ற அரசியல் எதார்த்தம் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் ஈழம் குறித்து கலைஞர் சொன்னது தப்பு என்று காங்கிரஸ் கட்சியின் குரலாக கர்னாடக முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இன்னொரு பக்கம் கருப்புக் கொடிக்குப் பயந்து சோனியா காந்தியின் சென்னைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் கருணாநிதி தேறி வந்த பிறகு திமுக தொண்டர்களோடு சேர்த்து கூட்டம் நடத்தவே ரத்து ஆகியிருக்க வேண்டும்.

சோனியாவின் கூட்டத்துக்கு 5,000 போலீசார் தயார்படுத்தப்பட்டிருப்பதாகப் படித்தோம். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் 1627 பேர், நிர்வாகிகள் 892 பேர் மற்றும் தொண்டர்கள் 324 பேர் ஒன்று சேர்ந்தாலும் கூட போலீஸ்காரர்களை விட கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால் ரத்து செய்திருப்பார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. கருணாநிதி தேறி வந்தால் அவரோடு கூடச் சேர்ந்து மாஸ் காட்டலாம் என்பது கணக்காக இருக்கும்.

எது எப்படியோ, தமிழக நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அதிமுக அணிக்குச் சாதகமாக அமைவதற்கான வாய்ப்புகளே அதிகம். அந்த அணி அபரிமிதமான இடங்களை வெல்லும் பட்சத்தில் அதன் ஆதரவை காங்கிரஸ் கட்சி கோராது என்று யாரும் சொல்வதற்கில்லை. இப்போதே ராகுல் காந்தி, ஷீலா தீக்சித் ஆகியோர் அண்ணா தீமூக்கா உள்ளிட்ட கட்சிகளை ‘நல்லவரு, வல்லவரு’ என்று வர்ணிக்க ஆரம்பித்து விட்டனர்.

இதனால் கலக்கம் அடைவது கலைஞரைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது. மத்திய அரசுக்கு திமுகவின் ஆதரவு தேவை என்ற நிலை மாறி, மாநிலத்தில் திமுகவுக்கு காங்கிரசின் ஆதரவு இருந்தே தீர வேண்டும் என்ற நிலை வந்தால் எப்படி இருக்கும்?

இதை இன்னும் தெளிவாகச் சொன்னால், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்குத் அதிமுக எம்.பிக்களின் ஆதரவு தேவைப்படும் போது மாநிலத்தில் திமுக ஆட்சிக்கு காங்கிரஸ் எல்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்றால் எப்படி இருக்கும்?

வேறு மாதிரிச் சொன்னால், மாயாவதியின் அரசை டிஸ்மிஸ் செய்யும் அரசுக்கே தங்கள் ஆதரவு என்று சமாஜ்வாடி கட்சி சொல்வதைப் போல, கருணாநிதியை ஆட்சியில் இருந்து அகற்றும் அணிக்கே என் ஆதரவு என்று ஜெயலலிதா சொல்வதாகக் கருதலாம்.

ஆனால், மாயாவதி அரசைப் போலல்லாமல் கருணாநிதி நடத்துவது (ஜெயலலிதா அடிக்கடி செல்வதைப் போல) மைனாரிட்டி அரசு. ஆட்சி நடத்தத் தேவையான 118 இடங்களில் 99 உறுப்பினர்களை (அதிலும் மதிமுகவில் இருந்து இழுக்கப்பட்ட கண்ணப்பன் & கம்பம் எல்.எல்.ஏ மற்றும் திருமங்கலம் இடைத்தேர்தல் வெற்றி ஆகிய 3 கூடுதல் இடங்களையும் சேர்த்து) மட்டுமே திமுக கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் 34 உறுப்பினர்களை நம்பியே இங்கு அரசாங்கம் நடக்கிறது.

இன்னொரு பக்கம் அதிமுக, பாமக, மதிமுக, இடதுசாரிகளை அடக்கிய கூட்டணிக்கு 97 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு அளிக்கும் ஆதரவை விலக்கிக்கொண்டு அதை அதிமுக பக்கம் திருப்பினால் வெகு சில மணி நேரத்தில் ஜெயலலிதா தமிழக முதல்வர் ஆகி விடுவார்.

இப்படியாகப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைவதற்கான சாத்தியத்தை மறுப்பதற்கில்லை. திருமாவளவனே காங்கிரஸை ஆதரிக்கும் செயலைச் செய்யும் போது ஜெயலலிதா செய்தால் மட்டும் குற்றமா? என்ன இருந்தாலும் இது பின் நவீனத்துவ யுகம் அல்லவா?

ஒரு வரனைத் தேர்ந்தெடுத்து கல்யாணம் செய்துகொண்ட பிறகு திருப்தி இல்லையென்றால் சுலபமாக பார்ட்டனை மாற்றிகொள்ளும் யுகத்தில் இந்திய அரசியல் இருக்கிறது. மாற்றங்களை உலகம் ஒப்புக்கொள்ளும்.

காங்கிரஸ் மற்றும் ஜெயலலிதா ஆகிய இரண்டு சக்திகள் ஒரு பொது நலனை நோக்கி நகர வேண்டும். அப்படி நடக்கும் போது, பொது மக்களின் நிலைமை ? க்குறி மற்றும் :-) க்குறி ஆகும்.

எத்தனை ஏச்சு வந்தாலும், தமிழினத்தையெ பகைத்துக்கொண்டு சோனியாவுக்குத் துணையாக நின்றேன். என் விசுவாசம் என்னவாவது என்று கலைஞர் புலம்ப மாட்டார். ஏனென்றால், அவருக்குத் தெரியும்; விசுவாசம் என்பது இயலாதவன் மட்டுமே ஏந்தும் பிச்சைப்பாத்திரம் என்று.

கலைஞருக்கு அப்படி ஒரு நிலைமை வரக் கூடாது என்று வேண்டுவோமாக!

தடாகம் இணைய தளம்

இரண்டு இளைஞர்கள் இணைந்து தடாகம் என்ற பெயரில் இணைய வார இதழ் ஒன்றைத் தொடங்கியுள்ளனர்.

இச்செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.