Tuesday, January 27, 2009

ஈழம் வரலாற்றுப் பின்னணி - 4

- செல்லமுத்து குப்புசாமி

வரலாற்றுப் பின்னணி - பாகம் 1
வரலாற்றுப் பின்னணி - பாகம் 2
வரலாற்றுப் பின்னணி - பாகம் 3

1927 இல் சிலோனின் அரசியலமைப்பை ஆராயவும், புதிய அரசியல் நிர்ணய சபைக்கான பரிந்துரையை வழங்கவும் ஒரு சிறப்புக் கமிஷனை இங்கிலாந்து அனுப்பியது. மக்களிடம் இன ஒற்றுமை இல்லாமலிருப்பதை அந்த கமிஷன் கண்டறிந்தது. இனத் துவேஷம் சரியான மருந்தின் மூலம் குணமாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்த அக்கமிஷன் அந்தப் பிரச்சினைக்கான ஆணி வேரைக் கண்டறியாமல் ஆண்களுக்கு 21 வயதுக்கு மேலும், பெண்களுக்கு 30 வயதுக்கு மேலும் வாக்குரிமை என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றது.

மலையக மக்களுக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது என்று பிரச்சாரம் செய்தார் சேனநாயகா. 1920-1930 வாக்கில் மலையகத் தமிழர்களை 'இந்திய வம்சாவழித் தமிழர்கள்' என்று சிங்களத் தலைவர்கள் அழைக்கத் துவங்கினர். அதாவது சிலோன் தீவிற்கும், மலையக மக்களுக்கும் தொடர்பில்லை என்பதே அவர்களது பிரச்சார உத்தியாகும். சேனநாயாகவின் அரசியல் எதிர்காலம் இந்தப் பிரச்சினையை மூலதனமாக்கி சிங்கள தேசிய உணர்வைத் தோற்றுவிப்பதைச் சார்ந்திருந்தது. அதாவது, ஆங்கிலேயரிடம் யார் போராடி விடுதலை பெறுகிறார்கள் என்பதை விடு சிங்களப் பெரும்பான்மை மக்கள் மத்தியில் சிங்கள-புத்த உணர்வுகளின் காவலனாகக் காட்சியளிப்பது அவர்களுக்கு இருக்க வேண்டிய அத்தியாவசியப் பண்பானது. ஏனென்றால் இந்தியா விடுதலை அடையும் போது இலங்கைக்கும் கிடைத்து விடும், அதனால் சிங்கள மக்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பதை நோக்கமாகக் கொண்டே அவர்கள் செயல்பட்டனர்.

1931 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இலங்கை மக்கள் தொகையில் 15.4 சதவீதத்தினர் மலையகத் தமிழர்களாக இருந்தனர். அவர்களின் எண்ணிக்கை ஈழத் தமிழர்களைக் காட்டிலும் கூடுதல். சிங்களர்களுக்கு அடுத்த படியாக மிகப் பெரிய சிறுபான்மை இனமாக அவர்கள் இருந்தனர். இந்த மக்களின் உழைப்பைச் சுரண்டியவர்கள் இவர்களுக்காக எதையும் செய்யவில்லை. கல்வி மறுக்கப்பட்டது. மாறாக ஏராளமான மதுக் கடைகளும், கோவில்களும் திறக்கப்பட்டன.

மலையகத்தினுள் வெளியார் செல்லத் தடையாக இருந்த அத்துமீறம் சட்டம் 1957 வரை அமுலில் இருதது. இப்படியான பின்னணியில் மலையக மக்களின் உரிமைகளைப் பறிக்க சிங்களத் தலைவரகள் முயன்றதில் வியப்பில்லை.

மலையக மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சிங்களர்களின் கோரிக்கைக்கு இணங்காத பிரிட்டிஷார் பிராந்தியப் பிரதிநிதித்துவ விகிதாச்சாரத்தில் சோடை போனார்கள். சிங்களப் பிராந்தியங்களுக்கு அதிகமான தொகுதிகள் என்று ஒதுக்கி, 2:1 என்றிருந்த சிங்கள/தமிழ் பிரதிநிதித்துவத்தை 5:1 என்ற நிலைக்கு மாற்றும் துரோகத்தில் துணை நின்றனர். இதைக் கண்டு மனம் கலங்கி நொந்த சர் பொன்னம்பலம் ராமநாதன், "ஆபத்தான காலம் நம்மை எதிர்நோக்கியுள்ளது. Donougmore கமிஷன் தேசத்தை உருக்குலைக்கும் காரியத்தைச் செய்திருக்கிறது. தமிழ் மக்களின் எதிர்காலம் ஒரு பேரழிவைச் சந்திப்பதற்கு முன்னர் கிளர்ந்தெழும் கூட்டம் ஒன்றை என் கண்ணுக்கு முன்னால் காண்கிறேன்" என்று வேதனையோடு தன் இறுதி உரையை நிகழ்த்தினார்.

கடைசியாக 1930 நவம்பர் 30 அன்று மரணமடைந்தார். ஒருங்கிணைந்த சிலோன் தீவு முழுமைக்கும், அதன் அனைத்துத் தரப்பு மக்களுக்கும், அவர்களது நலனுக்கும் தன் சொல், செயல், சிந்தனை எல்லாவற்றையும் அர்ப்பணித்து உழைத்த சிலோனின் முதலும், கடைசியுமான தேசியத் தலைவரான பொன்னம்பலம் ராமநாதனின் மரணம் ஆங்கில ஆட்சிக் கால சிலோன் வரலாற்றில் ஒரு மாபெரும் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது.

பொன்னம்பலம் ராமநாதனின் மரணத்தின் போது தமிழர் தலைமையில் ஏற்பட்ட வெற்றிடத்தை வெகு விரைவில் ஜி.ஜி.பொன்னம்பலம் என்ற சொக்க வைக்கும் பேச்சாளர் நிரப்பினார். ஏறத்தாழ அதே கால கட்டத்தில் 1931 வாக்கில் சிங்களர் மத்தியில் S W R D பண்டாரநாயகா என்ற பேச்சாளரும் உருவெடுத்தார். அடுத்த இரு ஆண்டுகளில், அதாவது 1933 ஆம் ஆண்டு ஜெர்மெனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார். ஹிட்லரின் தாக்கம் சிங்களத் தலைவர்களிடம் பெருமளவில் ஒட்டிக்கொண்டதை 1931 இல் வேளாண்மை மற்றும் நிலத் துறை (காணி) அமைச்சராகப் பொறுப்பேற்ற D.S.சேனநாயகா தன்னுடைய திட்டங்கள் மூலம் நிரூபித்தார். இந்த ஹிட்லரின் தாக்கம் அடுத்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் என்பது 1981 இல் யாழ்ப்பாண நூலகம் இரண்டு சிங்கள அமைச்சர்களின் மேற்பார்வையில் எரிந்து சாம்பலான நிகழ்வு எடுத்துக்காட்டியது.

டான் ஸ்டீபன் சேனநாயகா அப்படி என்னதான் செய்தார் என்கிறீர்களா? மிக எளிமையானது அவர் கணக்கு. ஆதாவது தமிழர் பாரம்பரிய நிலப் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலங்களை சிங்களர்களுக்கு வழங்கி அங்கே அவர்களைக் குடியமர்த்த வேண்டும். இவ்வாறு தமிழர் வாழும் பகுதிகளை காலப் போக்கில் சிங்களர்களைப் பரவச் செய்து, மூன்றில் இரண்டு பகுதி சிங்களர் வசம் என்றும் ஒரு பகுதி தமிழர் வசமென்றும் உள்ள நிலப்பரப்பை மாற்றி நாடு முழுவதும் மூன்றில் இரண்டு பங்கு சிங்களர் என்ற நிலைக்குக் கொணர்ந்து தமிழர்களுக்கென்று பெரும்பான்மையாக உள்ள பாரம்பரிய இடத்தை துடைத்தெடுப்பது. இப்படிச் செய்வதன் மூலம் நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் தமிழர் பெரும்பான்மையினராக இருக்க மாட்டார்கள். காலப் போக்கில் அவர்களுக்கென்று மக்கள் மன்றத்தில் பிரதிநிதித்துவம் அறவே அற்றுப் போகும்.

அதற்காக அவர் தொடங்கிய திட்டம்தான் படிப்பளை ஆற்றின் குறுக்கே அணை கட்டி அதற்கு கால் ஓயா (Gal-Oya) என்று சிங்களத்தில் பெயர் சூட்டி அந்தப் பகுதியில் பெரும்பாலான சிங்களர்களைக் குடியமர்த்தும் நூதனத் திட்டம். சிங்களர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் அணை கட்டாமல் தமிழர் பிராந்தியத்தில் அபிவிருத்தித் திட்டத்தை அவர் தொடங்கியதற்கான அரசியல் காரணத்தைப் புரிந்துகொள்ள ராக்கெட் விஞ்ஞானம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அமெரிக்க வல்லுனர்களைக் கொண்டு கட்டிய இந்த அணைக்கு சேனநாயகா சமுத்திரம் என்ற பெயர் சூட்டப்ப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் பகுதியில் வசித்த ஆயிரக் கணக்கான குடும்பங்கள் சிங்களர் வந்தமர்வதற்கு வசதியாக அடித்து விரட்டப்பட்டனர்.

சிங்களரின் இந்தக் குடியமர்வுத் திட்டம் பல வடிவங்களில் நிகழ்ந்தது. ஆரம்பத்தில் அணைக்கட்டு, புதிய பாசனப் பகுதி உருவாக்கம் என்ற போர்வையில் நடந்த ஊடுருவல் காலப் போக்கில் அப்பட்டமாக நடந்தேறியது. தமிழர் தலைவர்களுக்கும், சிங்கள ஆட்சியாளர்களுக்கும் அடுத்து வந்த அரை நூற்றாண்டு காலத்தில் ஏற்பட்ட பல உடன்படிக்கைகளில் (அவற்றை சிங்களத் தலைவர்கள் கிழித்துக் குப்பையில் போட்டது வேறு விஷயம்) சிங்களர்களாலேயே இது ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. தமிழர் பாரம்பரியப் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றும் அவலம் இலங்கை சுதந்திரம் பெறும் முன்பே துவங்கியது.

யூதர் வாழ்ந்த பிரதேசங்களில் அவர்களைத் துரத்தி விட்டு அல்லது கொன்று விட்டு ஜெர்மானியர்களைக் குடியேற்றி தன் ஆளுமையை விரிவாக்க முயன்றதன் அடியொற்றி சிங்களத் தலைவர்கள் தமது கொள்கையை வகுத்தனர். ஹிட்லர் கிழக்கு நோக்கி ஆஸ்திரியா, ஹங்கேரி என தன் விரிவாக்கலை நடைமுறைப் படுத்தினார். சிங்களர்களும் தங்கள் விரிவாக்கலைக் கிழக்கு நோக்கியே துரிதப்படுத்தினர். தமிழர்களின் பாரம்பரிய நிலப் பரப்பா¡க இருந்த வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது கிழக்குப் பிராந்தியமே. அதன் மக்கள் தொகை விகிதாச்சாரம் தலை கீழாக மாறியது. கிழக்குப் பிராந்தியத்தை மூன்றாகப் பிரித்து சிங்களர்களுக்கு ஒன்று, தமிழர்களுக்கு ஒன்று, முஸ்லிம்களுக்கு ஒன்று என 1986 ஆம் ஆண்டு சார்க் மாநாட்டின் போது ஜெயவர்த்தனே பேசுமளவுக்கு அரசு ஆதரவுடனான சிங்களக் குடியமர்வு தமிழர் நடந்தேறியது. நம் நாட்டில் ஆந்திராவின் புறம்போக்கு நிலங்கள் தமிழகத்து மக்களுக்கு வழங்கப்பட்டு அங்கே நாம் குடியேறி, ஒரு கால கட்டத்தில் ஆந்திராவின் மூன்றில் ஒரு பகுதி தமிழ் நாட்டுக்குச் சொந்தம் என்று சொன்னால் உதைக்க மாட்டார்களா?

சாலமன் பண்டாரநாயகா என்ற S W R D பண்டாரநாயகா சிங்கள மகா சபை என்ற சிங்களர்களுக்கான அரசியல் இயக்கத்தை 1936 இல் தோற்றுவித்தார். அதன் தொடக்க நிகழ்ச்சியிலேயே தான் ஒரு தேர்ந்த அரசியல்வாதி என்று நிரூபித்தார். வளர்ந்து வரும் இளைய தலைமுறைச் சிங்களத் தலைவர்கள் பலர் சபையில் துவக்க விழாவில் கலந்துகொள்ள வாந்திருந்தனர். அவர்களுள் D.S.சேனநாயகாவின் மகன் டட்லி சேனநாயகாவும் ஒருவர். அவரகள் அனைவரும் கூடியிருந்த போது சங்கள மகா சபை என்று பெயர் வைக்கக்கூடாது. சுதேசிய மகா சபை என்று பெயர் வைக்க வேண்டுமென்று பண்டாரநாயகா வாதிட 'சிங்கள' என்ற வார்த்தை இல்லாததை எதிர்த்து டட்லி சேனநாயகா உள்ளிட்ட பலரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டனர். இப்படியாக, அவர் வெளியேறிய பிறகு அந்த அமைப்பின் பெயரை சிங்கள மகா சபை என்றே வைத்துக்கொண்டார் சாலமன்.

சிங்கள மகா சபையை ஆரம்பித்த போது சாலமன் பண்டாரநாயகா மாகாண கவுன்சிலராகவும், அமைச்சராகவும், சிலோன் தேசிய காங்கிரசின் முக்கியப் பிரமுகராகவும் விளங்கினார் என்பது கவனிக்கத் தக்கது.

தமிழ் பேசும் உறுப்பினர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் 1939 இல் 15,000 இந்திய வம்சாவழித் தமிழர்களை நாடு கடத்தும் தீர்மானம் சிங்களர்களால் ஆட்சி மன்றத்தில் நிறைவேறியது. அதே வருடம் 8,000 இந்திய ரயில்வே ஊழியர்களை போக்குவரத்து அமைச்சகம் வீட்டுக்கு அனுப்பியது. அரசுப் பணியில் உள்ள இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்தை D.S.சேனநாயகா நிறைவேற்றினார். சிங்களத் தலைவர்களின் தமிழ் வெறுப்பும், இந்திய வெறுப்பும் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே வெளிப்பட்டது.

மலையகத் தமிழர்களையும், இந்தியர்களையும் நாடு கடத்தும் சிங்களரின் நடவடிக்கை இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் மகாத்மா காந்தியின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அப்போது சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக ராஜாஜி பதவி வகித்தார். இந்திய காங்கிரசின் சார்பாக இந்தப் பிரச்சினை பற்றிப் பேசுவதற்காக பண்டித ஜவஹர்லால் நேரு பம்பாயிலிருந்து கிளம்பி சிலோன் ரத்னமாலா விமான நிலையத்தில் வந்திறங்கினார். சிங்கள அமைச்சரவையைச் சந்தித்தார். மலையகத் தமிழர் பிரச்சினையில் அவர்களத் இறுக்கமான நிலைப்பாடு நேருவைக் கவலைப்படுத்தியது. "(மலையகத்) தொழிலாளர்களைப் பொறுத்த வரை சிங்களர்கள் மற்றும் அவர்களது தலைவர்கள் குறுகிய கண்ணோட்டம் படைத்தவர்களாக உள்ளனர்" என்று ஒரு ஊர்வலத்தில் பகிரங்கமாகவே அவர் அறிவித்தார்.

ஜூன் 17, 1939 இல் கொழும்பில் நடந்த கூட்டமொன்றில் கனத்த இதயத்துடன் பேசிய நேரு, "நான் இந்தியனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். ஒரு இந்தியனின் ஒற்றை ரோமத்தைக் கூட மற்றவர் தொடுவதை என்னால் சகித்துக்கொள்ள முடியாது" என்றார். சிலோனிலிருந்து இந்தியா திரும்பிய நேரு அங்கே இந்திய வம்சாவழித் தொழிலாலர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டு இனி மேல் சிலோனுக்கு தொழிலாளர்களை ஏற்றுமதி செய்வதைத் தடை செய்ய வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். இந்திய அரசாங்கம் அதை ஏற்றுக்கொண்டது.

அதனைத் தொடர்ந்து மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்குப் போராடும் அரசியல் இயக்கம் தேவையென உணர்ந்த நேரு அதற்கான வேலையை முடுக்கி விட்டார். பெருந்தலைவர் காமராஜரின் அரசியல் ஆசான் சத்தியமூர்த்தி மற்றும் பிற்காலத்தில் இந்திய ஜனாதிபதியாகப் பதவி வகித்த வி.வி.கிரியும் 1939, செப்டம்பர் 7 அன்று மலையகத் தமிழர்களுக்காக 'சிலோன் இந்திய காங்கிரஸ்' என்ற இயக்கத்தைத் தொடங்கி வைத்தனர். இலங்கை இந்திய காங்கிரசின் கம்பளைக் கிளையின் தலைவராக, ஆகஸ்ட் 13 1939 இல் சௌமியமூர்த்தி தொண்டமான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மலையகத்தின் நிலவரம் இவ்வாறு இருக்க பொன்னம்பலம் ராமநாதனின் மறைவால் பூர்வீகத் தமிழர்களின் தலைமையில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பிய ஜி.ஜி.பொன்னம்பலம் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக 1944 ஆகஸ்ட் மாதம் சிலோன் தமிழர் காங்கிரஸைத் தோற்றுவித்து மக்களின் அமோக ஆதரவைப் பெற்றார். இதற்கிடையில் காலனியாதிக்க நாடுகளுக்கு சுதந்திரம் அளிப்பதை பிரிட்டிஷ் அரசு பரிசீலித்து வந்தது. அப்படி ஒரு சூழல் எழும்போது அவர்களுக்கென்று வரையறுக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் இருக்க வேண்டும். அந்த நோக்கத்தில், சிலோன் தமிழர் காங்கிரஸ் உருவாகி ஒரு மாத காலத்திற்குள் சோல்பெரி பிரபு தலைமையில் ஒரு கமிஷன் சிலோனில் வந்திறங்கியது.

வரலாற்றுப் பின்னணி - பாகம் 5

Monday, January 12, 2009

பிரபாகரனும், சென்னைப் புத்தகக் கண்காட்சியும்

இது பற்றிய பதிரியின் பதிவு.

- செல்லமுத்து குப்புசாமி
இப்போது சென்னையில் புத்தகக் கண்காட்சி நடைபெறுவது யாவரும் அறிந்ததே. அது குறித்து ஜனவரி 2-8 ஆனந்த விகடன் இதழில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அதில் 'இந்த வருடம் வெளியாகும் சில முக்கியப் புத்தகங்களின் பட்டியல்' ஒன்றைத் தொகுத்துக் கொடுத்திருந்தார்கள்.
பிரபாகரன் வாழ்க்கை வரலாறும் அதில் ஒன்று.

திருவிழா தொடங்கியதற்கு மறுநாள் தினத் தந்தியிலும், டெக்கான் குரோனிக்கிள் செய்தித்தாளிலும் வெளியான செய்திகள் வாயிலாக விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றிய புத்தகங்களை விற்கக் கூடாதென்று காவல் துறை வாய்மொழி உத்தரவு ஒன்றினைப் பிறப்பித்திருப்பதாக அறிந்தேன்.
பதிப்பாளர் பத்ரியைக் கேட்ட போது, “ஆமாம்” என்றார் சிரித்துக் கொண்டே.
சனிக் கிழமை கண்காட்சிக்கு நேரடியாகச் சென்று பார்த்த போது மறவன்புலவு சச்சிதானந்தம் உள்ளிட்ட பலரது புலி ஆதரவுப் புத்தகங்கள் எல்லாமே காணக் கிடைத்தன. “ராஜீவைக் கொன்றது அமெரிக்காவே” என்று பொருள்படுமாறு திருமாவளவன் கூட ஒரு நூலில் அட்டையில் தலைப்பிட்டு வைத்திருந்தார்.
ஆக, விடுதலைப் புலிகள் தொடர்பான எல்லாப் புத்தகங்களையும் விற்க வேண்டாம் என்று சொல்லவில்லை எனத் தெரிகிறது. நண்பர் மருதனின் ‘விடுதலைப் புலிகள்' நூலும், எனது ‘பிரபாகரன்' நூலும் மட்டுமே பலியாகியுள்ளன.
இந்தப் புத்தகங்களைத் தடை செய்ய எவ்வித முகாந்திரமும் இல்லை. அவை தடை செய்யப்படவும் இல்லை. ஆனால் புத்தகக் கண்காட்சியில் மட்டும் இப்போதைக்கு வைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். மற்ற கடைகளிலும், கிழக்கு பதிப்பகத்தின் எல்டாம்ஸ் ரோடு காட்சியகத்திலும், ஆன்லைன் மூலமாகவும் எப்போதும் போல விற்கலாமாம்.
கருத்தியல் ரீதியாக ஒரு தடை செய்யப்பட்ட இயக்கத்தைப் பற்றிப் பேசுவதும், அதன் சித்தாந்தங்களைப் பற்றிப் பேசுவதும் ஜனநாயக உரிமை என்பது எனது அபிப்பராயம். நான் அதைக் கூடச் செய்யவில்லை. ‘பிரபாகரன் - ஒரு வாழ்க்கை' ஒரு நடுநிலையான புத்தகம்.
இருந்தாலும் போலீஸ்காரர்கள் அட்டைப் படத்தை மட்டுந்தான் பார்ப்பார்கள் போலும்.

Thursday, January 08, 2009

காமரூபக் கதைகளும், சாருவும்

- செல்லமுத்து குப்புசாமி

சில பேர் கிறுக்குத்தனமாக உளறும் போது, "Intellectual masturbation" என்று சொல்லிச் சமாளிப்பார்கள். சாரு நிவேதிதா தனது இணையத் தளத்தில் எழுதிய குட்டிக் கதைகள் masturbation of an intellectual ரகமென்று தொள்ளாயிரம் திருமால் ஊரெல்லாம் சொல்வதாகப் பேச்சு. நாமே பெண்ணின் பெயரில் ஒரு சாட் ஐடி ஒன்றை உருவாக்கி கிளுகிளுப்பாக தொள்ளாயிரம் திருமாலோடு குலாவியிருந்தால் நமது மின்னரட்டை கூட வார்த்தை மாறாமல் அப்படியே ஒரு குட்டிக் கதையாக வந்திருக்குமாம். 'கை மைதுனம்' என்ற வார்த்தையை இணைய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய கண்ணாயிரம் பெருமாள் எனும் சாரு நிவேதிதா எனும் அறிவழகன் இதை மறுக்கலாம். குட்டிக் கதைகளை masturbation என்ற சொல்லால் சிறுமைப்படுத்தக் கூடாது என அவர் கருதலாம். அல்லது தன்னை intellectual என நாம் கருதுவது தவறென வாதிடலாம்.

(Well... தமிழ் நாட்டில் யாரை வேண்டுமானாலும், எதற்காக வேண்டுமானாலும் விமர்சிக்கும் உரிமை சோ, ஞாநி, சாரு நிவேதிதா என்ற மூவருக்கு மட்டுமே உரித்தானதா என்ன?)

சாரு நிவேதிதாவின் 108 குட்டிக் கதைகள் 'காமரூபக் கதைகள்' (அதை நாவல் என்று பேசிக் கொள்கிறார்கள்) என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. அதையும் சேர்த்து அவர் எழுதிய பத்து நூல்களின் வெளியீட்டு விழா நேற்று 07-ஜனவரி-2009 அன்று நடந்தது.மாலை 06:00 மணிக்கு என்று குறிப்பிட்டிருந்த நிகழ்ச்சி பங்ச்சுவலாக 06:46 க்கு துவங்கியது. புத்தகங்களை இந்திரா பார்த்தசாரதி வெளியிட்டார்.

சுதேசமித்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், சிவகாமி, ந.முத்துசாமி, சசிகுமார், அமீர், தமிழச்சி, பிரபஞ்சன், மதன் மற்றும் சாருவின் நண்பர் ஒருவர் நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.
நூலைப் பெற்றோர் திறனாய்வு செய்து உரையாற்றினார்கள். அமீரும், சசியும் தாங்கள் புத்தகத்தை வாசிக்கவில்லை என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டனர். திறனாய்வு செய்ய அவர்கள் அழைக்கப்படவில்லை. மதன் சொன்னது போல, அவர்களால் கூட்டம் கூடியது.

மதுமிதா சொன்ன பாம்புக் கதைகள் - சுதேசமித்திரன்

எஸ்.ராமகிருஷ்ணன் நூலைப் பெற்றுக் கொள்கிறார்.

திசை அறியும் பறவைகள் - ந.முத்துசாமிஆஸாதி .. ஆஸாதி .. ஆஸாதி.. - சிவகாமிஎனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது - சசிகடவுளும் நானும் - அமீர்மூடுபனிச் சாலை - தமிழச்சிகாமரூபக் கதைகள் - பிரபஞ்சன்சினிமா சினிமா - மதன்இது ஒரு முக்கியமான நிகழ்வு. ஒரு தமிழ் எழுத்தாளர் ஒரே சமயத்தில் பத்துப் புத்தகங்களை வெளியிடுவது அசாதாரண நிகழ்வு.

சாருவுக்கு நமது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!

Tuesday, January 06, 2009

ஈழம் வரலாற்றுப் பின்னணி - 3

- செல்லமுத்து குப்புசாமி

வரலாற்றுப் பின்னணி - பாகம் 1
வரலாற்றுப் பின்னணி - பாகம் 2

1912 ஆம் வருடம் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் மாபெரும் துக்ககரமான சம்பவம் ஒன்று நடந்தது. மூழ்காத கப்பல் என்ற பெயருடன் மேட்டுக்குடி மக்களை ஏற்றிக்கொண்டு இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவை நோக்கிச் சென்ற டைட்டனிக் கப்பல் கடலில் கவிழ்ந்து வரலாற்றில் இடம் பெற்றது. ஆனால் அன்றிலிருந்து சரியாக மூன்று வருடம் ஆறு வாரம் கழித்து மே 28, 1915 ஆம் ஆண்டு கண்டி நகரில் உருவான சிங்கள-முஸ்லிம் கலவரம் ஆங்கிலப் பேரரசிற்கு டைட்டானிக் மூழ்கியதைக் காட்டிலும் பெருத்த தலைகுனிவை ஏற்படுத்தியது.

சிலோன் தீவு ஆங்கிலேயரின் நிர்வாக வசதிக்காக ஒரே தேசமாக மாற்றியமைக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட முதலாவது பெரிய இனக்கலவரம் இதுவே ஆகும். இன்னும் சொல்லப் போனால் அன்று வரை பிரிட்டிஷ் காலனி தேசங்களிலேயே அது போன்ற கலவரம் உண்டானதில்லை. பிற்பாடு இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட உயிர்ச்சேதம் இதையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டது வேறு கதை. இருந்தாலும் இலங்கையைப் பொறுத்த மட்டில் சிங்கள-தமிழ்-முஸ்லிம் என்ற மூன்று சமுதாயங்கள் ஒன்றிணைந்து வாழும் சூழலில் அன்று தொடங்கிய இனவெறுப்பு 93 ஆண்டுகள் கடந்து பிறகும் கூட இன்று வரை தணிந்த பாடில்லை.

புத்த ஜெயந்தியை பெளத்த சிங்களர்கள் கண்டியில் ஊர்வலத்துடனும், உற்சாகத்துடனும் கொண்டாடுவது வழக்கம். ஆனால் 1815 இல் Kandyan Convention மூலம் தமிழ் மன்னன் விஜயராஜசிங்கனின் அரசை வீழ்த்திய நிகழ்ச்சியின் நூற்றாண்டு விழாவையும் சேர்த்து புத்த ஜெயந்தியை விமரிசையான ஊர்வலமாகக் கொண்டாட சிங்களத் தலைவர்கள் திட்டமிட்டனர். ஆயினும் முஸ்லிம் மசூதி முன்னர் அமைதியாகச் செல்லவேண்டும் என்றும், மசூதிக்கு 100 அடி முன்பே வாத்தியங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஊர்வலத்திற்கு அனுமதியளித்த அரசுப் பிரதிநிதி உத்தரவிட்டிருந்தார். மேளதாளத்துடன் நள்ளிரவு ஊர்வலம் மசூதியை நெருங்கிய போது நிலைமையைச் சமாளிப்பதற்காக போலீஸ் அதிகாரி வேறு வீதி வழியாக அவர்களை விலகிச் செல்லுமாறு பணித்தார். இதை மசூதிக்குள்ளிருந்து கண்டு குதூகலித்த இஸ்லாமியர்கள் கை தட்டி மகிழ்ந்தனர். சிங்களர்களுக்கும் உறங்கிக்கொண்டிருந்த சிங்கத்தைத் தட்டியெழுப்ப அது போதுமாகவிருந்தது. மாற்றுப் பாதை வழியாகப் பயணிக்க நினைத்தவர்கள் மசூதியை நோக்கி விரைந்தனர். ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும், ஆறு கான்ஸ்டபிள்களும் வெறும் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. இரு பிரிவினரும் கற்களையும், சீசாக்களையும் மாறிமாறி வீசினர். அமைதியைப் பரப்ப அவதரித்த புத்த பிரான் பிறந்த நாளில் ஒரு இனக் கலவரம் அங்கே வெடித்தது. சிலோன் தீவின் ஒன்பது மாகாணங்களில் ஆறு மாகாணங்களுக்கு இந்தக் கலவரம் பரவியது.

சுமார் 70 இலட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்து நாசமானது. ஒட்டு மொத்தமாக 140 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையைக் கண்டு செய்வதறியாது திகைத்து நின்ற ஆங்கில அரசாங்கம் ராணுவ அடக்கு முறைச் சட்டத்தைப் பிற்ப்பித்து எண்ணற்ற சிங்களர்களைச் சிறையில் தள்ளியது. சுமார் 4,500 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது சிலோன் தீவின் சட்ட மன்றத்தில் அங்கம் வகித்த 21 உறுப்பினர்களின் 'படித்த சிலோன்காரர்' என்ற பிரிவில் ஒரே உறுப்பினராக சர் பொன்னம்பலம் ராமநாதன் என்ற தமிழர் இருந்தார். சிங்களர்கள் செய்தது தவறுதான் என்ற போதிலும் அவர்களை நியாயமற்ற முறையில் சிறையில் அடைத்து வைத்திருப்பதை எதிர்த்து இங்கிலாந்து வரை சென்று வாதாடினார். அந்தச் சமயத்தில் இங்கிலாந்திற்கும், ஜெர்மனிக்கும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. அதனால் தேவையில்லாமல் உருவான இந்த இனக்கலவரத்தைச் சரியான முறையில் பிரிட்டிஷ் அரசு விசாரிக்கத் தவறியது. உண்மையில் பிரிட்டிஷ் அரசாங்கம் கலவரத்தைத் தூண்டிய சிங்கள வெறியர்களைக் கைது செய்த அதே நேரம் அரசாங்கத்தை எதிர்த்த அத்தனை பேரையும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பழி தீர்த்தது. ஆங்கில ஆதிக்கத்திலிருக்கும் மக்களின் சுயநிர்ணயக் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்வதில் பெரும் அக்கறை கொண்ட ராமநாதன் விடுதலை உணர்வைத் தட்டியெழுப்புவதற்குக் கிடைத்த அரிய வாய்ப்பாக இதைக் கருதினார். சிறைப்பட்ட சிங்களை விடுவிக்க உதவியதில் ராமநாதனின் பங்கு குறிப்பிடத்தக்கது. அப்படி விடுதலையானவர்களில் சுதந்திர இலங்கையின் முதல் பிரதமராகப் பிற்காலத்தில் வரப் போகும் D.S.சேனநாயகாவும், இலங்கையில் முதல் எக்சிக்யூட்டிவ் அதிபர் 'குள்ள நரித்தன' ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அரசியில் ஆசானாக விளங்கிய அலக்சாந்தர் ஏகநாயகே குணதிலகேவும் அடக்கம்.

ஆனால் ராமநாதனின் கணிப்பு இரண்டு கோணத்தில் தவறியது. முதலாவதாக ஒன்றுபட்ட சிலோன் தீவின் பிரஜைகளாக பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவது அவரது எண்ணம். ஆனால் சிங்கள மக்கள் மனதில் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு எதிராக எழுந்த வெறுப்பு 'ஆங்கில எதிர்ப்பு உணர்வை' தூக்கிச் சாப்பிட்டது. சிங்கள, புத்த உணர்வுகள் விழித்தெழுந்தன. மற்றொரு பக்கம் தமிழ் மக்களுக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும் முரண்பாடு ஏற்படவும் இந்நிகழ்ச்சி காரணமாக அமைந்தது. அநியாயமான முறையில் சிங்களர்கள் தம்மைத் தாக்கிக் கொன்ற போது, நியாயமாக தம் பக்கம் சாயாது பெரும்பான்மை சிங்களர்களுக்குப் பரிந்து பேசுவதாக சர் ராமநாதனை முஸ்லிம் சமுதாயம் கருதியது. அச்சமுதாயம் தன்னை தமிழர் அல்லாத ஒரு பிரிவினராகவே உணரத் தொடங்கியது. ஆக, ஒரு பக்கம் சிங்களர்களின் வலுவான இன உணர்வு, மறு பக்கம் முஸ்லிம்கள் தனியாகப் பிரிந்து நிற்றல் என இந்த இரண்டுக்கும் மத்தியில் சிலோன் தேசிய உணர்வை உருவாக்குவதற்கு ராமநாதன் முயன்றார்.

ஆங்கிலேயரை வெளியேற்றிவிட்டு சிலோன் மக்கள் தம்மைத் தாமே ஆளவேண்டும் என்ற நோக்கில் 1917 இல் அவர் சிலோன் சீர்திருத்த லீக் என்ற அமைப்பை நிறுவினார். ஏகாதிபத்திய ஆட்சியைக் கடுமையாக எதிர்த்துப் போராடி அவர் தேசம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அந்த முயற்சியில் அடுத்த கட்டமாக இந்திய விடுதலைக்குப் போராடும் இந்திய தேசிய காங்கிரசைப் போல 'சிலோன் தேசிய காங்கிரசை' 1919 இல் தோற்றுவித்தார். அதன் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இலங்கைத் தீவின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் முதல் தேசியத் தலைவர் ஆனார். ஆனால் சிங்கள மக்களிடம் ஆங்கில அடக்கு முறைக்கு எதிரான சிலோன் தேசிய உணர்வைக் காட்டிலும் சிங்கள இன உணர்வு மேலாக இருந்தது.

1920 ஆம் ஆண்டு ஜேர்ஸ் பெரிஸ் என்ற சிங்கள் சிலோன் தேசியக் காங்கிரசின் தலைவராவத்தற்கு ராமநாதன் வழிவிட்டார். அந்த வருடம் பிராந்திய உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. கொழும்பில் வசித்த ராமநாதன் கொழும்பு தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால் சிலோன் காங்கிரசில் சிங்களர்கள் அதைக் கடுமையாக எதிர்த்தனர். வேறு வழியில்லாமல் சிங்களர் ஒருவர் கொழும்பில் போட்டியிடும் வகையில் அவரது மனுவை விலக்கிக்கொண்டார். மேலும் அவர் எந்த சிலோன் தேசிய காங்கிரசை அவர் உருவாக்கினாரோ அந்த சிலோன் தேசிய காங்கிரசில் இருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டார். தன் வாழ்நாளின் பெரும்பகுதியை சிலோன் மக்களின் விழிப்புணர்வுக்கா அர்ப்பணித்த அவர் எழுபது வயதைக் கடந்திருந்தார். கொழும்பில் அவரைப் போட்டியிட அனுமதிக்காத சிங்கள அரசியல்வாதிகள் நடப்பது பிராந்திய உறுப்பினர்களைப் பிரதிநிதிப்படுத்தும் தேர்தலல்ல, மாறாக இனப் பிரதிநிதித்துவத்துகான தேர்தல் என்பதை நீருபித்தனர்.

சிங்கள மக்களுக்கு சிங்கள மொழி மீதும், புத்த மதம் மீதும் பற்று இருக்கவேண்டும் என்று பிரச்சாரம் செய்து அவர்களின் கலாச்சார உணர்வுகளை மீட்டெடுக்க பல காலம் உழைத்தவர் ராமநாதன். ஆங்கில ஆட்சியின் போது மேற்கத்திய மோகத்தில் திளைத்திருந்த சிங்களருக்கு சுய மரியாதையை ஏற்படுத்தி அவர்தம் கலாச்சாரத் தொன்மையை மீட்டெடுக்கும் காரியத்தைச் செய்தார். 1886 இல் பெருமளவில் நிதி திரட்டி சிலோனின் முதல் பெளத்தக் கல்லூரியான அனந்தா கல்லூரியை நிறுவினார். சிங்களம் பேசுவதைத் தவிர்த்து சக சிங்களரிடம் கூட ஆங்கிலத்தில் பேசுவதைப் பற்றிக் கவலைப்பட்டார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிடியிருந்து மீள்வதற்கு மக்களுக்கு மொழிப்பற்றை ஊட்டினார். "ஒவ்வொரு சிங்களனும், தமிழனும் இந்த நாட்டில் நடைபெறும் தேசிய உணர்வு அழிப்புக்கு எதிராகப் போராட வேண்டும். பாரம்பரியம் மிக்க தமது மொழியைப் பாதுகாப்பதற்கு அவர்கள் முன்வரவேண்டும். தன் மொழியை உதாசீனம் செய்வதும், தனது பெருமிதம் மிக்க மொழியைப் பேச முன் வராதிருப்பதுமான சிங்களன் உண்மையான சிங்களனாக இருக்க முடியாது" என்று பேசினார்.

மேலும் 1904 ஆம் ஆண்டு அதே அனந்தா கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் சிங்களம் பேசுவதைக் கேவலமாகக் கருதிய மேட்டுக்குடி சிங்களர்களை நோக்கி, "சிங்களரின் உதடுகள் சிங்கள மொழியைப் பேசாவிட்டால் வேறு யார் பேசுவார்கள்? தன் தாய் மொழியைப் பேச விரும்பாத மக்களைக் கொண்ட தேசத்தை தவறுகளிலிருந்து எழச் செய்து, சீர்திருத்தி, விழிப்புணர்வுள்ள பிரதேசத்திற்கு முன்னேற்றுவது எப்படி?" என்று வினவினார். இந்த உரை சிலோன் மக்களின் சுய நிர்ணயப் போராட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.

எனினும் ஆங்கில ஆட்சியின் போது சுயாட்சிக் கோரிக்கை முதலில் எழுந்தது தமிழர்கள் மத்தியில்தான். ஒட்டுமொத்த சிலோனின் விடுதலைக்காகப் பாடுபடும் நோக்கத்தில் யாழ்ப்பாணத்தில் இளைஞர் காங்கிரஸ் உருவானது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஹேண்டி பேரின்பநாயகம் போன்றோர் மகாத்மா காந்தியடிகள், கமலாதேவி அம்மையார், தீரர் சத்தியமூர்த்தி ஆகியோரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து இளைஞர் காங்கிரஸ் கூட்டங்களில் பேச வைத்தனர்.

இப்படிப்பட்ட சூழலில் சிங்கள மக்களுக்கு இன உணர்வும், மொழிப்பற்றும் இருக்க வேண்டும் என்று அரும்பாடு பட்டு நாடு தழுவிய சுயாட்சிக் கோரிக்கையைத் தோற்றுவித்த ராமநாதனுக்கு சிங்களர்கள் தகுந்த பாடம் புகட்டினர். உண்மையான சிலோன் தேசியத் தலைமை என்ற நிலை மாறி சிலோன் தேசிய காங்கிரஸைக் கைப்பற்றிய சிங்களத் தலைமை என்றும், அதிலிருந்து வெளியேறிய தமிழர் தலைமை என்றும் இரு துருவங்களாகப் பிளந்து நின்ற அவலம் 1920 லியே அரங்கேறியது.

வரலாற்றுப் பின்னணி - பாகம் 4

Friday, January 02, 2009

ஈழம் வரலாற்றுப் பின்னணி - 2

- செல்லமுத்து குப்புசாமி

வரலாற்றுப் பின்னணி - பாகம் 1

ஆங்கிலேயர்கள் கண்டி மலை நாட்டைக் கையகப்படுத்தி இலங்கையை ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்த சமயத்தில் இன்னொரு வரலாற்றுத் திருப்பமும் ஏற்பட்டது. 1823 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 12 கூலிகளின் உழைப்பில் காஃபி பயிரிட்டு 600 பவுண்ட் சம்பாத்ததில் திடீர் கதாநயகன் ஆன வெள்ளை முதலாளி ஆரம்பித்து வைத்த திருப்பம் அது. மலிவான கூலிக்கு உழைக்கும் மக்களை இறக்குமதி செய்யும் வரலாறு தொடங்கியது. 1827 ஆம் ஆண்டு Sir Edwards Barnes என்ற ஆங்கில கவர்னர் கண்டி மலைப் பிரதேசத்தில் காஃபித் தோட்டங்களை நிர்மாணித்து அவற்றில் வேலை செய்வதற்காக சென்னை மாகாணத்தில் இருந்து 300 தொழிலாளர்களை வரவழைத்தார். இந்த எண்ணிக்கை காலப் போக்கில் பன்மடங்கு பெருகியது.

மலைப் பிரதேசத்தைச் சீர்திருத்திச் செப்பனிட்டு பயிரிடுவதற்கு ஏற்றதாக மாற்றுகிற கடினமான வேலையில் ஈடுபட உள்ளூர்ச் சிங்கள மக்களுக்கு முதுகு வளையவில்லை. அதனால் இந்தியாவில் நிலவிய வறுமையைப் பயன்படுத்தி, வஞ்சகமில்லாமல் உழைக்கிற இந்தியர்களை ஆங்கிலேய எஜமானர்கள் தருவித்தனர். இந்தியாவாக இருந்தாலும், இலங்கையாக இருந்தாலும் யாவுமே ஒரே பேரரசின் கீழ் உள்ள காரணத்தினால் எல்லா இடத்திலும், எல்லோரும் அடிமைகள் என்ற அடிப்படையில், அனைவரும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் குடிமக்கள் என்ற எதார்த்தத்தில் அவர்களும் கண்டிக்குப் புறப்பட்டனர்.

இலங்கைக்குத் தொழிலாளர்கள் ஏற்றுமதி செய்யப்படுவதையும், அங்கே அவர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதையும் எதிர்த்து இந்தியாவிலும் இலங்கையிலும் மனிதாபிமானிகள் குரல் எழுப்பினர். அதன் விளைவாக பிரிட்டிஷ் இந்திய அரசு 1839 இல் பயிற்றுவிக்கப்படாத தொழிலாளர்களின் ஏற்றுமதியைத் தடை செய்தது. ஆனால் சில அடிப்படை உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்படும் என்று இலங்கை அரசும், தோட்ட முதலாளிகளும் உறுதியளித்ததன் தொடர்ச்சியாக 1847 இல் இத்தடையை பிரிட்டிஷ் இந்திய அரசு நீக்கியது. மலையகத் தோட்டங்களில் பணியாற்றும் இந்திய வம்சாவழித் தமிழர்கள் விவகாரத்தில் இந்தியா அடிக்கடி தலையிட்டு அவர்களின் அடிப்படைத் தேவைகளை உத்திரவாதப்படுத்த முனைந்தது. மருத்துவ வசதிச் சட்டம், கல்வி சகாயச் சட்டம், தொழிலாளர் சட்டம், சம்பளச் சட்டம் ஆகியவை 1912 முதல் 1927 வரை இலங்கை அரசினால் நிறைவேற்றுவதை இந்தியா உறுதிப்படுத்தியது.

மனிதர்கள் முன்பு செல்லாத அடர் காடுகளை நோக்கிய மலையக மக்களின் காலடியும், அந்தக் காட்டைப் பண்படுத்திய கைகளும் இல்லாவிட்டால் அங்கே தோட்டங்கள் உருவாகியிருக்காது. கடுமையான சூழலுக்குள் தம் உடலை நிலத்தில் உரமாக்கியபடிதான் இலங்கையின் முதல் ஏற்றுமதி வருவாயை ஈட்டித் தரும் உற்பத்தியை உருவாக்கினார்கள். அவர்கள் கால் படதா, கை தொடாத, உடல் விதையாகாத மலையகம் எதுவுமில்லை. இந்த மண்ணை வளமாக்கிய போது இறந்தவர்களில் எண்ணிக்கை கணக்கற்றது. 1926 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கட்டளைச் சட்டம் ஒன்றின் படி ஆரம்பத்தில் மலையகம் வந்தவர்களின் 100 க்கு 40 பேர் சூழல் சார்ந்து இறந்ததை உறுதி செய்கின்றது. 1841 க்கும் 1849 க்கும் இடையில் எழுபதாயிரம் பேர், அதாவது 25 சதவீதத்தினர் துர்மரணம் எய்தியதாக கொழும்பு அப்சர்வர் தனது பத்திரிக்கைச் செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. (1980 முதல் இலங்கையில் நடந்து வரும் விமானத் தாக்குதல்களும், நிலக் கண்ணி வெடிகளும் நிரம்பிய ரத்த மயமான இனப்போரினால் இறந்த மக்களைக் காட்டிலும் இந்தத் தொகை அதிகம்) 1837 ஆம் வருடம் 4,000 ஏக்கராக இருந்த காஃபித் தோட்டத்தின் பரப்பு 1881 இல் 2,56,000 ஏக்கராகப் பெருகியது. இதற்கிடையில் 1860 இல் தேயிலை பயிரிடுதல் சிறு அளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1870 களில் பூச்சிகள் தாக்கி காஃபி பயிருக்குப் பெரும் சேதம் விளைவித்த போது அவை ஒட்டுமொத்தமாக தேயிலைத் தோட்டங்களாக மாற்றம் கண்டன. 1917 இல் தேயிலை உற்பத்தி 4,26,000 ஏக்கராக ஏற்றம் கண்டது.

அதற்கு முன்பாக சிலோனின் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பல வேலைகளில் இந்த மக்கள் ஈடுபட்டனர். பாலங்கள், சாலைகள், இருப்புப் பாதை நிர்மாணம் ஆகியவற்றில் இவர்களின் உழைப்பு பயன்படுத்தப்பட்டது. காஃபி மற்றும் தேயிலை சாகுபடி மூலம் ஈட்டப்பட்ட ஒவ்வொரு காசிலும், அவற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் முன்னேற்றங்களின் பின்னாலும் மலையக மக்களின் வரலாறு ஓசையின்றிப் பதிந்திருக்கிறது. உலகெங்கும் பருகிய மற்றும் பருகும் காஃபி மற்றும் தேநீரின் சுவையில் இந்த மக்களின் இரத்தத்தின் வெப்பமும், வியர்வையின் கசப்பும் கலந்திருக்கின்றது. இந்தத் தகவல்களை எல்லாம் எதற்காக இங்கே குறிப்பிட வேண்டியிருக்கிறது என்றால், இத்தகைய அளப்பரிய தியாகம் செய்து இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, அந்தத் தீவின் ஏற்றுமதிக்கு மாபெரும் தூணாக விளங்கும் தேயிலை சாகுபடியை உருவாக்கிய மலையக மக்களுக்குப் பிற்காலத்தில் எத்தகைய துரோகம் இழைக்கப்பட்டது என்பதை உணர்ந்து கொள்வதற்காகத்தான்.

ஆக இலங்கையின் தற்போதுள்ள தமிழர்களை பாரம்பரிய ஈழத் தமிழர்கள் என்றும், தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்வதற்காக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட 'இந்திய வம்சவழித் தமிழர்கள்' என்றும் பெரும்பான்மை சிங்களர்கள் வகைப்படுத்துகின்றனர். ஈழத் தமிழர்கள் இலங்கையில் வடகிழக்குப் பகுதியான தமிழர்களில் பாரம்பரிய நிலப்பகுதியில் வசிக்கிற அதே வேளை இந்திய வம்சாவழித் தமிழர்கள் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு நடுவில் மலையகத்தில் வசிக்கின்றனர். இது தவிர இலங்கையில் கிழக்குப் பகுதியில் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். தாய் மொழியாக தமிழே இருந்த போதும் தங்களைத் தனியான கலாச்சார அடையாளம் கொண்ட ஒரு இனக் குழுவாகவே உணர்கின்றனர். இப்படி இலங்கைத் தீவில் உள்ள அனைத்துத் தமிழ் பேசும் மக்களையும் ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் என்று தனித்தனியே பிரித்துப் பேசி விட்டு மண்ணின் மைந்தர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் சிங்கள இனம் எது?

சிங்கம் ஒன்று இளவரசி ஒருத்தியோடு உடலுறவு கொண்டு அதன் மூலம் தோன்றிய இனம்தான் சிங்கள இனம் என்று சிங்களப் புராணங்கள் ஒரு பக்கம் கூறினாலும், சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் கி.மு. 486 ஆம் ஆண்டு சிங்கள இனம் உருவானதாகத் தெரிவிக்கின்றனர். மொட்டையடித்து நாடு கடத்தப்பட்ட விஜயன் என்ற இளவரசன் கி.மு. 486 இல் தனது எழுநூறு ஆதரவாளர்களுடன் இலங்கைத் தீவில் வந்திறங்கினான். தமிழ் மன்னன் எல்லாளன் வீழ்வதற்க்கு முன்னூறு ஆண்டுகள் முன்னர் இது நடந்தது. மகாவம்சம் முதலிய பிராதனச் சிங்கள நூல்களே கூட விஜயன் வருகைக்கு முன்பே நாகர்கள், யாக்கர்கள் என்ற பெயரில் திராவிட அரசுகள் இலங்கைத் தீவில் இருந்ததை வேண்டா வெறுப்பாக உறுதி செய்கின்றன. கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தது போல சிங்கள மக்களைப் பொறுத்த வரை இலங்கைத் தீவைக் "கண்டுபிடித்தது" விஜயன்.

ஆக அசோகச் சக்கரவர்த்தி புத்த மதத்தைத் தழுவும் முன்னரே விஜயன் இலங்கைத் தீவை அடைந்து சிங்கள வம்சத்திற்கு வித்திட்டான். விஜயன் இலங்கையில் அடியெடுத்து வைத்து சிங்கள இனத்தை உருவாக்கிய 59 ஆண்டுகளுக்குப் பிறகு அசோகச் சக்கரவர்த்தியின் மைந்தன் மகிந்தன் புத்த மதத்தைப் பரப்புவதற்காக கி.மு.427 இல் இலங்கையை அடைந்தான். இவ்வாறாக புத்த மதம் இலங்கைத் தீவிற்கு அறிமுகமானது.

எது எப்படியோ, தமது நிர்வாக வசதிக்காக ஆங்கிலேயர் இலங்கையை ஒரே தேசமாகத் தைத்துக் கோர்த்தனர். பல மன்னர்கள், ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்து இந்தியா என்ற தேசத்தையும் அவர்கள் அப்படித்தான் உருவாக்கினார்கள். ஆனால் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் ஒரு கனத்த வேறுபாடு இருந்ததை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. இந்தியத் துணைக் கண்டத்தில் பல மொழி பேசுகிற, பல ராஜாக்களால் ஆளப்பட்ட, பல இன மக்களையும் ஒரே நிர்வாகக் குடையின் கீழ் கொணர்ந்தனர். மேலும் இந்து மதம் தேசம் முழுமைக்கும் பொதுவாக இருந்தது. அதே போல முஸ்லிம் மக்களும் இந்தியா முழுவதும் பரவியிருந்தனர். ஆனால் இலங்கை அப்படியல்ல. அங்கு தமிழன் ஒருவனை பெளத்தனாகக் காண்பது அரிது. அதே போல சிங்களவனில் ஒருவன் கூட இந்து கிடையாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இரு ராஜ்ஜியங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டே இருந்தன. சிங்கள வரலாறு நெடுகிலும் தமிழர்களை எதிரிகளாகவே சித்தரித்து வந்திருந்தது. இருவருக்கும் தனித்தனி மொழி, கலாச்சாரம், சமயம், ராஜ்ஜியம் என்று ஒன்றுகூட ஒத்து வராத முரண்பாடு. ஆங்கில ஆட்சியின் கீழ் ஒரே தேசமாக இலங்கை மாறினாலும் அந்த முரண்பாடு ஆழமாக ஓடிக்கொண்டுதான் இருந்திருக்க வேண்டும் என்று பின்னர் நடந்த நிகழ்வுகள் புலப்படுத்தின.

ஆனால், இயற்கை எழில் கொஞ்சும் இலங்கையின் பொழிலும், இந்தியாவின் பாதுகாப்பிற்கான அதன் பிராந்திய முக்கியத்துவமும், இங்கிலாந்திற்கும் ஏனைய ஐரோப்பாவிற்கும் புத்துணர்ச்சியளித்த சிலோன் தேயிலையின் தனித்துவமும் இலங்கைக்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுத் தந்தது. ஆங்கிலப் பேரரசின் மணிமகுடமாக இந்தியா விளங்கியது. இலங்கையை 'இந்தியப் பெருங்கடலின் முத்து' என்று ஆங்கிலேயர் சொல்லி மகிழ்ந்தனர்.

வரலாற்றுப் பின்னணி - பாகம் 3