Thursday, February 26, 2009

தமிழ் எழுத்தாளன்..

- செல்லமுத்து குப்புசாமி

புலமையும் வறுமையும் என்ற தலைப்பில் ஓரிரு மாதங்கள் முன்பாக உயிரோசைக்கு எழுதியது.

********

"சேர்ந்தே இருப்பது?"

"புலமையும், வறுமையும்"

"மாறாதிருப்பது?"

"ஒரு தடவை சொன்னா புரியாதா உனக்கு?"

எதற்கு திருவிளையாடல் பாணி கேள்வியெல்லாம், நேராகவே விவாதத்திற்கு வருவோம்.

இன்றைக்கு தமிழ் நாட்டில் முழுநேர எழுத்தானாக ஒருவன் இருப்பது சாத்தியமா? பொருளாதாரத் தன்னிறைவு கிடைக்கும் என்ற உத்திரவாதத்தோடு எழுத்தின் மீது காதல் கொண்ட ஒருவன் அதையே தனது தொழிலாக எடுத்துக் கொள்வது சரியாக இருக்குமா? முழு நேர எழுத்தாளன் ஒருவனுக்கு நம் வீட்டுப் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க முன் வருவோமா? "மாப்பிள்ளை எழுதறதெல்லாம் சரி. சாப்பாட்டுக்கு என்ன பண்றார்?" - கேட்க மாட்டோமா! சும்மா பொழுது போக்கிற்கு வலைப்பதிவு எழுதுகிறேன் என்று சொன்னாலே, "ஓஹோ.. அந்த கேஸா நீ?" என பெண் வீட்டார் இலகுவாகப் புரிந்து கொள்வார்கள்.

மக்களால் மக்களுக்காகவே நடப்பதாகச் சொல்லும் மக்களாட்சியைப் போலத்தான் இங்கே சிறு பத்திரிக்கைகள் இயங்குகின்றன. எழுத்தாளர்களுக்கும், உதவி இயக்குனர்களுக்கும் வாசிப்பதற்காகவே அவை எழுத்தாளர்களால் எழுதப்படுகின்றனவோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் 'கணையாழியின் கடைசிப் பக்கம்' தொகுப்பில் ஒரு கட்டுரை வருடத்திற்கு எத்தனை சிற்றிதழ்கள் பிறக்கின்றன, இறக்கின்றன என்ற சின்னத் தகவலைக் கொடுக்கிறது. கால் நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்டிருக்க வேண்டும் அந்தக் கட்டுரை. இப்போது நிலைமை மாறி விட்டதாக நம்புவதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை.

சர்வதேச அரங்கில் எடுத்துக் கொண்டால் Best sellers புத்தகங்கள் மில்லியன் கணக்கில் விற்பனையாகின்றன. இங்கே ஒரு நூலின் ஆண்டு விற்பனை ஐந்து இலக்கத்தை எட்டினால் அது போற்றிக் கொண்டாட வேண்டிய செய்தி. அநேகப் புத்தகங்கள் ஆயிரத்தைக் கூட எட்டுவதில்லை. அதிலும் பெருந்தொகையானவை நூற்றுக் கணக்கில் நின்று போகின்றன. லைப்ரரி ஆர்டர் மட்டும் இல்லையென்றால் தமிழகத்தில் முக்கால்வாசி புத்தகங்கள் வெளி வராமலேயே நின்று போய் விடும். உலகெங்கும் எட்டுக் கோடி மக்களைக் கொண்ட ஒரு இனம் இவ்வளவு புத்தகங்களை மட்டுமே உள்வாங்குவது யோசிக்க வேண்டிய சங்கதி.

மறைந்த எழுத்தாளர் சுஜாதா நினைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன் சுஜாதாவைப் பற்றிக் குறிப்பிட்ட செய்தியை இங்கே சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும். 'எந்தப் புத்தகம் போட்டாலும் நிச்சயம் பத்தாயிரம் பிரதிகள் விற்கும் என்ற நிலை உருவாக வேண்டும். பெஸ்ட் செல்லிங் புத்தகம் ஒரு இலட்சம் பிரதிகள் போக வேண்டும்' என்று சுஜாதா சொல்லுவாராம். சுஜாதாவின் ஆசை இங்கு எல்லோருக்குமே இருக்கிறது.

மிகப் பிரபலமாக இலட்சக் கணக்கில் விற்பனையாகும் பத்திரிக்கையில் பரபரப்பான தொடர் எழுதும் படைப்பாளிக்கு ஆயிரம், இரண்டாயிரம் கிடைத்தால் பெரிய விஷயம். அப்படி நான்கைந்து பத்திரிக்கையிலாவது அவனுக்கு வாய்ப்புக் கிட்ட வேண்டும். அப்போதுதான் வீட்டு வாடகையையும், பிள்ளைகளின் பள்ளிக் கட்டணத்தையும் சமாளிக்க முடியும். சிற்றிதழ்கள் எல்லாம் காசு கொடுக்கும் என்ற நம்பிக்கை யாருக்கும் இல்லை. அந்த நம்பிக்கையில் யாரும் எழுதுவதில்லை. நட்பின் அடிப்படையில், தனது எழுத்தை அச்சில் காண்பதற்கு வாய்த்த சந்தர்ப்பம் என்ற ரீதியிலுமே படைப்பாளிகள் சிற்றிதழ்கட்கு தமது பங்களிப்பை நல்குகின்றனர். ஒரு கட்டுரையை வரைவதற்கு படைப்பாளி செலவிடும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தை ஈட்டும் சூழல் இங்கில்லை.

சமீபத்தில் சாரு நிவேதிதா ஒரு விஷயம் பற்றி எழுதியிருந்தார். இல்லை இல்லை, தன் இணைய தளத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார், வாடைக்கு வீடு மாறும் போது ஹவுஸ் ஓனரிடம் அட்வான்ஸ் கொடுப்பதற்குப் போதுமான பணம் இல்லையென்று வாசகர்களிடம் உதவி கேட்டு. தமிழ் எழுத்தாளர்களின் வாழும் சாட்சியாகவே சாரு தன்னைப் பிரதிபலித்தார். அந்தக் கோரிக்கையில் அவர் எழுதிய வாசகங்களில் ஆதங்கமும், உழைப்புக்கு ஏற்ற சன்மானத்தை இந்தச் சமூகம் தரவில்லையே என்ற ஏக்கமும் தெரிந்தது. இது சாரு நிவேதாவைப் பற்றிய தனிப்பட்ட கண்ணோட்டம் கிடையாது. ஒரு பானைச் சோற்றில் அவர் சாம்பிள் பருக்கை.

பத்திரிக்கைகளில் பங்களிப்பதால் எழுத்தாளன் ஈட்டுவது சொற்பம். குவாட்டரும், கொண்டைக் கடலையும் வாங்குவதற்கே அது போதுமாக இல்லை. மேலும் இதழ்களில் எழுதவதற்கான வாய்ப்பு எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அங்கலாய்ப்பும், ஆயாசமும் சேர்ந்து வியாபிக்கின்றன படைப்பாளிகளை. ஆயிரத்து எட்டு அரசியல், விவரம் தெரிந்தவர்கள் பேசிக் கொள்கிறார்கள். மல்லிகைப் பந்தல் போட்டு மூடிய சாக்கடையாக நாறுகிறது படைப்பாளிகளின் அரசியல். வலைப்பதிவு அரசியலுக்கு எந்த வகையிலும் சளைத்ததல்ல.

சரி. பத்திரிக்கை வாய்ப்புகளைத்தான் மற்றவர் தடுக்க முடியும். புத்தகம் சமைக்கலாம். (அல்லது சமையல் புத்தகம் போடலாம். அதுதானே கூடுதலாக விற்கிறது!) அதற்கு யாரும் முட்டுக்கட்டை போட முடியாது. புதிது புதிதாக புத்தகங்களை எழுதிக் குவிக்கலாம். பதிப்பாளர்களுக்கும் பஞ்சமில்லை. ஆனால் வாங்கத்தான் ஆளில்லை. எண்ணிக்கை குறைவாக உள்ள துக்கம் போதாதென்று நம் பதிப்பாளர்கள் எழுத்தாளர்களுக்கு வழங்கும் ராயல்டி குறித்த புலம்பல் நின்றபாடில்லை. புத்தக விலையில் 7 முதல் 10 விழுக்காடு வரை, அத்தி பூத்த மாதிரி எபோதாவது 15 ஐ எட்டலாம். இன்னொரு விஷயம் விற்பனையான எண்ணிக்கை தொடர்பானது. பதிப்பாளர் சொல்வதே விற்றது. வெளிப்படையான சூழல் தமிழ் பதிப்புத் துறையில் முயற்கொம்பே. தான் எழுதிய புத்தகம் துல்லியமாக எத்தனை பிரதிகள் விற்றது என்பதைச் சரி பார்க்கும் சாதனம் படைப்பாளிக்குக் கிடையாது. வெளிப்படையான சூழல் பற்றிப் பேசும் போது ஆயாசமே மேலிடுகிறது. சென்ற ஆண்டு அதிகமாக விற்ற புத்தகம் எதுவென அறிந்து கொள்ள சுலபமான வழியில்லை. எம் இன மக்கள் எதை விரும்பிப் படிக்கிறார்கள் என்று யாரிடம் கேட்பது?

வேறு துறைகளில் சாதனைகளைப் புரிந்து மக்கள் மத்தியில் பிரபலமான நபர் என்ன எழுதினாலும் ஆர்வத்தோடு வாங்குவார்கள். எழுத்து அவரது துறையல்ல, எழுதுவது அவருக்கு தொழிலுமல்ல. அந்த வகையில் பார்த்திபன் புத்தகம், அப்துல் கலாம் புத்தகம் எனச் சிலவற்றை மேற்கோள் காட்டலாம். அங்கே விற்பனையாவது பிரபலம் தானே ஒழிய அவரது எழுத்து இரண்டாம் பட்சம். ஒரு புத்தகம் அதிக எண்ணிக்கையில் விற்பதற்கும், அதன் தரத்திற்கும் சம்பந்தம் கிடையாது.

இதற்கு நேரெதிராக நன்கறியப்பட்ட ஒரு எழுத்தாளர் சூடான தலைப்பில் எழுதிய நூல்கள் மட்டுமே 1000, 2000 பிரதிகள் ஓடும். அப்படி நன்கறியப்படுவதற்கு குறைந்த பட்சம் பத்து பதினைந்து ஆண்டுகள் ஓடிப் போயிருக்கும். அதற்குப் பதிலாக அந்த நபர் வேறு துறையைத் தேர்ந்தெடுத்திருந்தால் அந்தக் கால கட்டத்தில் வாழ்க்கையில் செட்டில் ஆகியிருந்திருக்க முடியும். 'சந்தைப் படுத்துதலை' புத்தகத் துறை தவறவிட்டிருக்கிறது என்பதே ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை. எழுத்தில் உள்ள சரக்கை விட, எழுத்தாளனின் பெயருக்கே இங்கு வரவேற்பு. ஆனால் அந்த நிலைக்கு வர ஒருவன் அசாத்திய உழைப்பை முதலீடு செய்ய வேண்டியிருக்கிறது. அப்படியே செய்தாலும் உத்திரவாதமாக ஒன்றும் சொல்ல முடியாது. வெற்றி நிச்சயிக்கப்பட்டதல்ல. இருந்தாலும் உழைப்பு அவசியமான ஒன்று.

ஒரு படைப்பாளி தனது 'இருத்தலை' பதிவு செய்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தை எதிர்கொண்டவேறு இருக்கிறான். சன்மானத்திற்காக இல்லாவிட்டாலும் தமது பெயரை அடிக்கடி மற்றவர்களுக்கு நினைவூட்டவேனும் அவர்கள் பத்திரிக்கைகளுக்குப் பங்களிக்கிறார்கள். இல்லாவிட்டால் தொலைந்து போய் விடும் அபாயம் உள்ளது. மீடியா வெளிச்சம் தன் மீது எப்போதுமே குவிந்திருப்பதை விரும்புகிறார்கள். இதெல்லாம் சந்தைப்படுத்துதலில் ஒரு பகுதியாகவே தற்போது மாறியுள்ளது.

ஒரு வகையில் சொன்னால் தமிழ்ப் படைப்புலகில் எழுத்தாளனுக்குக் கிட்டும் சன்மானம் பொருளாதார ரீதியாம அமைவதை விட சமூக அங்கீகாரம் மூலமாகவே கூடுதலாகக் கிடைக்கிறது. பல நேரங்களில் சமூக அங்கீகாரமும், சில தருணங்களில் ரசிகைகளின் நெருக்கமும் அந்தக் காயத்திற்குக் களிம்பு பூசுகின்றன. வெறும் பொருளாதார அனுகூலம் என்ற காரணி அவனது உழைப்பை ஈடு செய்வதாக இல்லை. முழு நேர எழுத்தாளனாக இருக்க முயல்வதின் முட்டாள்தனத்தையும், எழுத்தின் மீது அந்த நபருக்கு இருக்கும் தீராத காதலையுமே அது வெளிச்சம் போட்டு அம்பலப்படுத்துகிறது.

கிட்டத்தட்ட கடந்த முப்பது நாற்பது ஆண்டு கால இடைவெளியில் மிக வெற்றிகரமான எழுத்தாளர் என்று கொண்டாடப்பட்ட சுஜாதா எழுத்தை தனது முழு நேரப் பணியாக வைத்துக் கொள்ளவில்லை. தன்னை மட்டுமின்றி தனது எழுத்தையும் முழுமையாக சந்தைப்படுத்திய விற்பன்னர் அவர். போன வருடம் புத்தக ராயல்டி மூலம் மிக அதிகமாகச் சம்பாதித்த முதல் இருவர் முழு நேர எழுத்தாளர்கள் அல்ல. ஆண்டுக்கு சுமார் 12 இலட்சச் சம்பளம் தருகிற வேலைகளில் உள்ளவர்கள் அவர்கள். (என்று சொல்லப்படுகிறது, சும்மா சேஃப்டிக்காக)

இன்னொரு பக்கம் தனது உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லையே என்ற ஆதங்கம், சமூகம் மீதான கோபமாக மாறும் அபாயம் முழு நேரப் படைப்பாளியாக இருப்பதில் உள்ளது. கூடவே வீட்டு வாடகைக்கு வழியில்லை என்று புலம்பும் படைப்பாளிகள் நட்சத்திர ஓட்டல் பார்களில் அடிக்கடி தென்படுவதாக வெளிவரும் செய்திகள் நெறிஞ்சி முள்ளாக நெருடுகிறது. எனினும் விதிவிலக்குகள் விதியாகாது என்பதால் அதற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை.

அச்சு ஊடகம் என்ற ஒரு வாய்ப்பை மட்டுமே நம்பியிருந்த படைப்பாளிகளுக்கு விஷுவல் மீடியாவின் வளர்ச்சி வரப் பிரசாதமாகக் காட்சி தருகிறது. தன்னை அச்சு ஊடகத்தில் நிலை நிறுத்திக் கொண்ட படைப்பாளிக்கு சினிமாவில் வசனம் எழுதும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இங்கும் கூட திறமைக்கும், வாய்ப்புக்கும் நேரடியான தொடர்பு கிடையாது. ஒரு மனிதனின் தொடர்பும், நடத்தையும், தொடர்புகளைப் பேணும் பண்பும் அவனுடைய சினிமா வெற்றி தோல்வியை, சுருங்கச் சொன்னால் 'வாய்ப்பை', நிர்ணயம் செய்கின்றன. படத்தின் பட்ஜெட் மற்றும் படைப்பாளியின் ஆளுமையைப் பொறுத்து ஒரு படத்திற்கு வசனம் எழுத இரண்டு இலட்சம் முதல் பத்து இலட்சம் வரை சினிமா தருகிறது. நம்புங்க, சினிமா என்ற மெகா பட்ஜெட் சமாச்சாரத்தில் இது சொற்ப்மான தொகை, என்றாலும் தமிழ் எழுத்துச் சூழலின் நிலவரத்தோடு ஒப்பிடும் போது பெரிய தொகை என்று ஊகிக்க முடிகிறது.

சரி, சேர்ந்தே இருப்பது?

'வறுமையும், புலமையும்' தமிழ்ச் சமுதாயத்தின் அவலம். மலையாளத்தில் படைப்பாளிகளுக்கு நல்ல மரியாதை கிடைப்பதாக நாம் அறியப் பெறுகிறோம். தீவிர சிந்தனையாளர்களை இங்கே சீந்துவாரில்லை. எட்டுக் கோடி பேர் பேசும் ஒரு மொழியில் best selling புத்தகம் குறைந்த பட்சம் எட்டு இலட்சம் பிரதிகளாவது விற்க வேண்டாமா? குடும்பத்தோடு மாயாஜால் போய் படம் பார்க்க 500 ரூபாய் செலவழிக்கிறார்கள். ஒரு 100, 200 போட்டு புத்தகம் வாங்கினால் என்ன? உண்மையில் புத்தகங்களுக்குச் செலவழிப்பது விரயம் என்று நினைக்கிறோமா? எது நம்மைத் தடுக்கிறது? இதைச் சொல்லும் போது எனக்கு வேதனையாக உள்ளது தோழர்களே. ஒரு 'எழுத்தாளன்' என்ற முறையில் தமிழ்ச் சமுதாயத்தின் வாசிப்புப் பழக்கம் என்னை கவலையுறச் செய்கிறது.

நான் குடியிருக்கும் பகுதியில் பொது நூலகம் எங்கே என்று தேடுகிறேன், இன்னமும் கண்டுபித்த பாடில்லை. சின்ன வயதில் இருந்தே வாசிப்பு அனுபவத்தின் இன்பத்தை நாம் குழந்தைகளுக்குச் சொல்லித் தரத் தவறுகிறோம். பாடப் புத்தகத்தினை உருப்போடும் மனித இயந்திரங்களைத்தான் உற்பத்தி செய்து வருகிறோம். ஒரு ஆயோக்கியமற்ற சமூகத்தின் அங்கங்கள் இவை.

என்னைப் பொறுத்த வரை வாசிப்பு மிக முக்கியம் என்று கருதுகிறேன். வாசிப்பே என்னைச் செம்மைப்படுத்துகிறது. அதுவே என்னை மேலும் செதுக்கும் என்று நம்புகிறேன். சிந்தனைப் பரப்பை விஸ்தரிக்கும் என்று அடித்துச் சொல்கிறேன்.

இப்போது கூடப் பாருங்கள். ஸீரோ டிகிரி, ராஸ லீலா என்ற இரு வித்தியாசமான நூல்களை சாரு நிவேதிதா எழுதியிருக்கிறார். அவற்றைப் படிக்க வேண்டும் என்று நீண்ட காலமாகவே யோசித்து வருகிறேன். இது வரை யாரும் இரவல் கொடுக்கவில்லை. நான் ஒரு 'எழுத்தாளன்'!!

6 comments:

அதிஷா said...

மிக அருமையான கட்டுரை நண்பரே.

மிக்க நன்றி

Kannan said...

Charu collecting money from readers for advance is hypocrisy.He spends money in * hotels and drinks only foreign scotches and wants to go only in Auto or Car. He says travelling in public bus is like crap.He should be ashamed of his life; we all read only because he is giving something no other writers give.

shankar said...

he is living in TODAY'S WORLD why talk like 70s and 80s MAMANAARs AND MAMIYAARs...........come to this world and live like a king MAAAAAAAANNNNNNNNNNN

shankar said...

he is living in TODAY'S WORLD why talk like 70s and 80s MAMANAARs AND MAMIYAARs...........come to this world and live like a king MAAAAAAAANNNNNNNNNNN

senthil kathirvel said...

நிசர்தமான உண்மை. இதுக்கு மேல தனது நிலமையை விளக்கி சொல்ல எப்படி முடியும்

Rajesh Aka Emp.Rivaan said...

Why not create a Exclusive Web-media for Tamil-Writers and sell E-Books only, where you can sell your own stuff as well as sell it for reasonably cheap price, as there is no Printing Cost and you reap all the benefits rather then Some Publications take it all. May be an animated E-book Can attract more readers. My suggestion is use the wide reach of Internet and Social Media to promote Tamil Reading... Sadly, most of us don't know the taste of reading good books... Even people who has the habit of reading is more biased towards a materialistic readings rather then a creative reading... Moreover we don't find time to read as we are busy out of nothing....