Thursday, March 12, 2009

அதிகரிக்கும் விவாகரத்துகள்

சர்வதேச மகளிர் தினம் கொண்டாடி முடிக்கப்பட்டிருக்கும் நிலையில்,இந்தக் கட்டுரை கடுமையாக எதிர்கொள்ளப்படும் என்று தெரியும். இது 'பெண்' என்ற தலைப்பில் 24-நவம்பர்-2008 உயிரோசைக்கு எழுதியது.
******************
- செல்லமுத்து குப்புசாமி
போரிலும், காதலிலும் வரம்புகள் இல்லை என்பார்கள். கல்யாணத்தில் கூட அப்படித்தான் போலிருக்கிறது. பல நாத்திகர்கள் ஆத்திகர்கள் ஆவதும், ஆத்திகர்கள் நாத்திகர்கள் ஆவதும் அங்கே பரவலாக நடக்கிறது. இந்தக் கூற்றை பிரத்யேகமாக நிரூபிக்க வேண்டியதில்லை. வாழும் சாட்சிகள் எண்ணற்றவை.

இன்றைய உலகம் – குறிப்பிட்டுச் சொன்னால் இந்தியச் சமூகம் - முன்னெப்போதும் சந்தித்திராத சமூக மாறுதலை எதிர்கொள்கிறது. அந்த மாறுதல்கள் ஏற்படுத்தும் அதிர்வுகளும் சில நேரங்களில் ஜீரணிக்க முடியாத ஒன்றாகவே உணரப்படுகிறது. அதே நேரம் மாற்றமில்லாத ஒரே சங்கதியாகிய ‘மாற்றம்’ தவிர்க்க இயலாதது மட்டுமல்லாமல் காலத்தின் கட்டாயமாவும் உருவெடுத்துள்ளதையும் இந்த உலகம் உணராமல் இல்லை.

பலவீனங்களை சரி செய்வதற்குச் செலவிடும் ஆற்றலில் பாதியை தனது பலத்தைக் கூட்டுவதற்குச் செலவழித்தால் பல சாதனைகளைப் படைத்து விடலாம், பத்துப் பேர் முன்னால் பேசுவதற்குக் கூச்சப்படும் ஆட்கள் பலர் இன்றைக்கு எழுத்தாளர் ஆகியிருப்பதைப் போல.

உனக்கு எதைச் சரியாகச் செய்ய முடியுமோ அதில் வல்லுனர் ஆவதே இதன் சாராம்சம். ஸ்பெஷலிஸ்ட்டுகள் உருவானதும், உருவாகப் போவதும் இப்படித்தான். Division of labour என பொருளாதார மேதை ஆடம் ஸ்மித் குறிப்பிட்டதும் இதைத்தான்.

ஆர்வம், குறிப்பிட்ட வேலையைச் செய்ய இயலும் திறன், அதை மட்டுமே செய்து வாழ்க்கையை ஓட்ட முடிகிற சூழல், அங்கீகாரம் என எத்தனையோ காரணிகள் அதைத் தீர்மானிக்கின்றன. இத்தகையை division of labour சமுதாயத்தில் மட்டுமல்லாமல் வீடுகளில் நடைமுறைப்படுத்தினார் பண்டை மனிதன்.

வெளியே சென்று வேட்டையாடி உணவு தேடி வரும் கடினமான வேலையை ஆண் எடுத்துக்கொண்டான். இயற்கை அவனுக்கு அளித்திருந்த வலிமையான உடல் அதை ஊக்குவித்தது. அவன் வரும் வரைக்கும் குகைக்குள் அமர்ந்து குழந்தைகளையும், கரிசனம் வேண்டுவோரையும் கவனிக்கும் பக்குவமான வேலையை பெண் எடுத்துக்கொண்டாள். அவரவர் வேலையில் அவரவர் சிறந்து விளங்கினர்.

காலங்காலமாக இப்படித்தான் நடந்து வருகிறது. பொருளீட்டும் வேலை ஆணுக்கு, குடும்பத்தை நிர்வகிக்கும் வேலை பெண்ணுக்கு. ஒருவரை ஒருவர் சார்ந்து, தத்தமது பலத்திற்கும் பலகீனத்திற்கும் ஏற்ப பரஸ்பரம் அனுசரித்து வாழ்ந்த இந்த வாழ்வு – சில விதிவிலக்குகளைத் தவிர்த்து - தொய்வில்லாமல் தொடர்ந்து வந்ததாகவே கருதப்படுகிறது. தவிர ஆண், பெண் மூளையும் அந்த மூளையில் இருந்து உருவெடுக்கும் சிந்திக்கும் திறனும் கூட இந்தப் பின்னணியிலேயே அமைந்தது.

பெரும்பாலான நேரங்களில் ஆண் அறிவுப்பூர்வமாகவும், பெண் உணர்வுப்பூர்வமாகவும் பிரச்சினைகளை அணுகும் தன்மை படைத்தவர்களாக இருக்கிறார்கள். அவ்வாறே வடிவமைக்கப்பட்டு, பழக்கப்பட்ட அவர்களது புத்தி வேறு விதமாகச் சிந்திப்பதற்கு பெரும்பாடு படுகிறது.

முற்காலத்தைப் போல வேலைக்குச் சென்று பொருளீட்டுவது உடல் வலிமையை மட்டுமே சார்ந்ததல்ல என்ற இன்றைய நவீனச் சூழல் இன்றுவரை பேணப்பட்ட பல கற்பிதங்களை உடைத்துப் போடுகிறது. ‘உத்தியோகம் புருஷ லட்சணம்’ என்று சொல்லப்பட்டு ஆண் மட்டுமே பொருளீட்டியதெல்லாம் கால வாகனத்தின் rear mirror இல் பார்க்க வேண்டிய சங்கதி போலத் தோன்றுகிறது.

ஆணுக்கு இணையாக ஊதியம் ஈட்டும் திறன் இந்தியப் பெண்களுக்கு முன்னெப்போதும் இருந்திராத அளவுக்கு சுதந்திரத்தையும், கூடவே எதற்கும் அடங்காத திமிர்த்தனத்தையும் ஒரு சேர அளித்துள்ளது. பல காலமாக தம் மீது சுமத்தப்பட்டிருந்த அடக்குமுறையில் இருந்து விடுபட்டதை அவர்கள் ஒரே நேரத்தில் கொண்டாடிக் களித்திட விரும்புகின்றனர். ஒரு ஆண் வீட்டை விட்டு வெளியே வந்து சம்பாதிக்க ஆரம்பித்தால் அவனுக்கு பொறுப்பு வருகிறது, பெண் சம்பாதிக்க ஆரம்பிக்கும் போது அவளுக்கு ஆணவம் வருகிறது என்று என் எழுத்தாள நண்பர் சொன்னதைக் குறிப்பிட்டால் ‘ஆணாதிக்கவாதி’ என்ற பட்டம் இலவசமாகக் கிடைக்கும். எனினும் அதில் பொதிந்துள்ள உண்மையை மறுப்பதற்கில்லை.

இருப்பினும் பெண்களுக்கு பொருளாதார விடுதலையின் வாயிலாகக் கிடைத்துள்ள சமூக விடுதலையும், அங்கீகாரமும் ஓரளவுக்கு ஆண் சமுதாயத்தினால் சகித்துக்கொள்ள முடியாத ஒன்றாகவே வெளிப்படுவதை இன்னொரு பக்கம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். சிறு எண்ணிக்கையில் என்றாலும் கூட குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு பல குடும்பங்கள் இன்றைக்குப் பல் இளிக்கின்றன.

இந்தத் தலைமுறையில் மண முறிவு என்பதும், மறுமணம் என்பதும் பெருநகரங்களில் மட்டும் நடப்பதில்லை. ஒரு வகையில் இது வரவேற்கத்தக்க மாற்றம். பெரியார் பரிந்துரை செய்த மாற்றம். ஆனால் அவ்வாறெல்லாம் நடப்பதற்கான காரணங்களைச் சரியாகவும், சரிதானா என்றும் ஆராயவும் வேண்டும். ஆணின் தேவைகளாக பெண்ணும், பெண்ணின் தேவையாக ஆணும் உணர்ந்து வைத்துள்ள விஷயங்கள் மிகவும் மேலோட்டமானவை. ஆழ்ந்த புரிதல் இல்லாதவை.

இன்றைய நவீனப் பெண்ணின் தேவைகளும் எதிர்பார்ப்புகளும் ராட்சத பலூனைப் போல விரிந்துகொண்டே இருக்கின்றன. அவற்றை ஈடு கட்டுவதற்குப் பல ஆண்கள் போராடித் தவிர்க்கிறார்கள். தேவைகளும் எதிர்பார்ப்புகளும் தவாறனவை என்று அதற்குப் பொருளல்ல. இத்தனை தலைமுறைகளாக அடக்கி வைக்கப்பட்டிருந்து அவர்களின் அபிலாஷைகள் ஒரேயடியாக கட்டவிழும் போது ஆண் சமுதாயம் அதை எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறது.

நவீன யுக ஆணிடம் சமுதாயம் ஏராளமாக நிர்ப்பந்திக்கிறது. ”புணர்ச்சியின் போது உன் ஆண்குறி எவ்வளவு நீளும்?” என்பதை விட, “எவ்வளவு சம்பளம்?” என்ற கேள்வியே அவனை முகம் சுளிக்க வைக்கிறது. அவனது வெற்றி-தோல்வியை, வாழ்வதற்கான அறுகதையை இவ்வுலகம் ஒப்பீடுகளின் அடிப்படையில் தீர்மானிக்கிறது. Benchmark செய்வதற்கு தயாராக ஒரு அமெரிக்க மாப்பிள்ளை. கல்யாணச் சந்தையில் விலைபோக முடியாத ஆண்களின் பெருமூச்சு பூமிப் பந்தையே உருட்டிப் போட வல்லது.

பணம் படைத்த ஆணும், எழில் மிகுந்த பெண்ணும் ஒருவரை நோக்கி ஒருவர் ஈர்க்கப்படுவது இயல்பு. வசதி இல்லாத ஆணாக இருந்தாலும் கூட கண்ணுக்கு இலட்சணமான துணையே அவனது பிரதான விருப்பம். வருமானமில்லா ஆண் கல்யாணச் சந்தையில் எவ்வாறு புறக்கணிப்படுகிறானோ அதே போல அவலட்சணமான பெண்ணும் ஒதுக்கப்படுகிறாள். அவளது ஊதியம் இரண்டாம் பட்சம். வேலைக்குச் செல்லும் பெண் வேலைக்குச் செல்லும் ஆணையே தேடுகிறாள். வேலைக்குச் செல்லும் ஆணின் முதல் அளவுகோல் ‘அழகு’. எதிரும் புதிருமாக நீளும் பட்டியலில் இது ஒரு தொடக்கப் புள்ளி மாத்திரமே. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பட்டியல் நீளும்.

தேடும் வேட்டையில் முன்வைக்கும் நிபந்தனையும், அளவுகோலும் தளர்ந்து அநேகக் கல்யாணங்கள் சமரசங்களின் சமாதியில் அக்கினி வளர்த்தே நடந்தேறுகின்றன. பல நாத்திகர்கள் ஆத்திகர்கள் ஆவதும், ஆத்திகர்கள் நாத்திகர்கள் ஆவதும் அங்கேதான். வரதட்சணை பெருங்குற்றம் என்று பள்ளிக்கூடப் பேச்சுப் போட்டியில் பேசிய பெண்கள் 1+1+1 (ஒரு கிலோ நகை, ஒரு இலட்சம் பணம், ஒரு பத்து இலட்ச கார்) என்று அப்பனுக்கு டாட்டா காட்டிச் செல்வது அங்கேதான்.

ஆனால் சமரசங்கள் சாகாவரம் பெற்றவையல்ல. நிபந்தனையற்ற அன்பும், எதிர்பார்ப்பின்றி ஏற்றுக்கொள்ளப்படுவதும் சாஸ்வதம் இல்லை. இவ்வுண்மை முற்காலத்திலும் உணரப்பட்டது என்றாலும் அப்போது பெரும்பாலும் சகித்துக்கொண்டார்கள். ஊர் என்ன பேசுமோ என்று அஞ்சினார்கள். இவனை விட்டுச் சென்றால் கஞ்சிக்கு வழியென்னவென்று யோசித்தார்கள். இன்று அப்படியல்ல. பெண் சுயமாகச் சம்பாதிக்கிறாள். சொந்தக் காலில் அவளால் நிற்க முடியும். ஆண் துணையின்றி வாழ முடியும். அல்லது முடியும் என்ற குறைந்தபட்ச நம்பிக்கையாவது அவளுக்கு உள்ளது. வேண்டினால் வேறு துணையும் தேடிக் கொள்ளலாம். கடந்த நான்கைந்து ஆண்டுகளில் இந்திய நீதிமன்றங்களில் விசாரணைக்கு வரும் விவாகரத்து வழக்குகளே இதற்குக் கட்டியம் கூறுகின்றன.

பிரச்சினைக்கு ஆணோ, பெண்ணோ காரணமல்ல. பெண் புதிதாகச் சம்பாதிக்க ஆரம்பித்திருப்பதும் காரணமல்ல. அப்படிப்பட்ட சமூகச் சூழலை உள்வாங்க முடியாமல் இருபாலரையும் குழப்பி வைத்திருக்கும் நம் பண்பாட்டுப் பின்னணியும், மரபியல் ரீதியாக வெவ்வேறு கோணங்களில் சிந்திக்கும் அவ்விரு பாலரின் மூளை வடிவமைப்புமே காரணமாகும்.

மேற்குலகம் இந்தப் பிரச்சினையை ஓரிரு தலைமுறைக்கு முன்பே எதிர்கொண்டது. அதனால் உருவான பக்க விளைவுகளையும் உள்வாங்கிக் கொண்டது. நமக்குக் கொஞ்ச காலம் பிடிக்கும்.

தற்போதையை பொருளாதாரச் சுணக்கத்தில் எல்லாத் துறையினருக்குமே பாதிப்பு என்கிறார்கள். எல்லோருக்குமே வருமானம் குறைகிறதாம். ஜோசியர்களும், மனவியல் மருத்துவர்கள் மட்டும் கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறார்களாம்.

மேரேஜ் கவுன்சிலிங் போர்டுகள் வருங்காலத்தில் நிறைய எழுதப்படும் என்கிறது பட்சி.

8 comments:

ஆ.ஞானசேகரன் said...

நல்ல ஆய்வு இதில்..." மேற்குலகம் இந்தப் பிரச்சினையை ஓரிரு தலைமுறைக்கு முன்பே எதிர்கொண்டது. அதனால் உருவான பக்க விளைவுகளையும் உள்வாங்கிக் கொண்டது. நமக்குக் கொஞ்ச காலம் பிடிக்கும்."

செல்வா said...

நல்ல கட்டுரை, அதுவும் இந்த தலைமுறைக்கு புரிகிற வகையில்! இல்லை, குழப்புகிற மாதிரி என்றும் சொல்லலாம்:-)

ஒரு வகையில் இதுவும் காபிடலிசம், சோசலிசம் ஆகிய கதை தான். ஆனால், சோசலிசம் வெற்றி பெறுவது போல் தோல்வி அடைந்து கொண்டிருக்கிறதே! சோசலிசம் மறுபடியும் வளராமல் இருக்க காபிடலிசம் எல்லா முயற்சியும் செய்து கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் இந்திய / தமிழ் திருமணங்கள் அந்த பாதையில் பயணம் செல்ல முயற்சிப்பது போல் தோன்றுகிறது! காலம் பதில் சொல்லும் என்று நாம் எல்லாம் காத்திருப்பது சரியென்றும் தோன்றவில்லை!

Chellamuthu Kuppusamy said...

கருத்துக்கு நன்றி செல்வா!

Chellamuthu Kuppusamy said...

ஞானசேகரன்: வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

அமர பாரதி said...

நல்லதொரு பதிவு. பெரும்பாலும் தன்னைப் பற்றி மிக உயர்வாக மதிப்பிட்டுக் கொண்டு, தனக்கு ஒரு அளவு கோல் அடுத்தவருக்கு வேறு ஒரு அளவு கோல் என்ற நினைப்பே பல பிரச்சினகளுக்குக் காரணம். எளிமையாக சொன்னால் எப்போதுமே தான் செய்வது சரி என்ற மனோபாவம். விட்டுக் கொடுத்தல் என்பதை கௌரவக் குறைவாக நினைப்பதும் ஒரு காரணம்.

நரேஷ் said...

தோழர் செல்லமுத்து,

//பிரச்சினைக்கு ஆணோ, பெண்ணோ காரணமல்ல. பெண் புதிதாகச் சம்பாதிக்க ஆரம்பித்திருப்பதும் காரணமல்ல. அப்படிப்பட்ட சமூகச் சூழலை உள்வாங்க முடியாமல் இருபாலரையும் குழப்பி வைத்திருக்கும் நம் பண்பாட்டுப் பின்னணியும், மரபியல் ரீதியாக வெவ்வேறு கோணங்களில் சிந்திக்கும் அவ்விரு பாலரின் மூளை வடிவமைப்புமே காரணமாகும்.//

நிச்சயமான வார்த்தைகள். மிக தெளிவான அலசல்

இளைஞர்களோ, குடும்பமோ மிகக் குறைந்த அளவு மக்களே இந்த பிரச்சனையை இப்போதுதான் புரிந்து கொள்ளவே தொடங்கியுள்ளனர்...

மிகுந்த சிந்தனையை தூண்டியுள்ளது உங்கள் பதிவு...

செல்வன் said...

செல்லமுத்து குப்புசாமி,

வழக்கமாக உங்கள் கட்டுரைகள் ஆழ்ந்த பொருள் கொண்டிருக்கும்.இது திருஷ்டி பரிகாரமாக அமைந்துவிட்டது.குறிப்பாக வேலைக்கு போகும் பெண்களுக்கு ஆணவம், திமிர்தனம் எல்லாம் சேர்ந்தே வருகிறது என்கிற மாதிரி வரிகள்.

படித்த,வேலைக்கு போகும் ஆண்கள் கல்யாண சந்தையில் விலைபோகாமலிருப்பது ஏன்? அவர்களது எதிர்பார்ப்புக்களால் தான்.அழகான,படித்த,வேலைக்கு போய்,வீட்டு வேலை செய்யும் பெண் வேண்டும் போன்ற படித்த வேலைகாரிகளை எதிர்பார்ப்பவர்கள் தான் சந்தையில் பெண்ணின்றி தவிக்கிறார்கள்...எதிர்பார்ப்புக்களை குறைத்துக்கொண்டால் இந்த பிரச்சனை இல்லை.

உலகம் மாறிவிட்டது.ஆண் சம்பாதிக்க, பெண் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் காலம் இனி திரும்பாது.ஆண்கள் குழந்தைகளை வளர்க்கவும், சமைக்கவும் பழகிகொள்ள வேண்டியதுதான். மாறாத ஆண்கள் மாற்றப்படுவார்கள்.

Chellamuthu Kuppusamy said...

//இது திருஷ்டி பரிகாரமாக அமைந்துவிட்டது.//

//மாறாத ஆண்கள் மாற்றப்படுவார்கள்.//

:-) Amen!!