Wednesday, April 29, 2009

ஆயுதம் பூக்கும் போதி மரம்!!

புலவர்கள் மன்னனைப் புகழந்து பாடி பரிசில் பெறுவது பண்டைய தமிழ் மரபு. கவியரங்கம் என்ற பெயரில் கவிஞர்களை வைத்து தன்னைத் ததிபாடச் சொல்லி அந்தப் பண்பாட்டைப் பேணுபவர் தமிழக முதல்வர்.

வாலி, வைரமுத்து வரிசையில் கவிக்கோ அப்துல் ரகுமானும் அந்த அரங்கங்களில் கவி பாடுவார். அவர் முன்னொரு காலத்தில் (22 - 10 - 1987) எழுதிய கவிதை.. இன்றைக்கும் பொருந்துகிறது. இன்றைக்கு கருணாநிதி கவியரங்கம் நடத்தி கவிக்கோ இதைப் படிக்க வேண்டும்.

*******

அங்கே
பிணங்கள் விழுந்துகொண்டிருக்கின்றன;
'எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன?" என்று
விசாரித்துக்கொண்டிருக்கிறோம்.

அங்கே
குண்டுகள் வெடித்துக்கொண்டிருக்கின்றன;
நாம்
பட்டாசு வெடித்துப்பரவசப்பட்டுகொண்டிருக்கிறோம்.

அவர்கள்
வேட்டையாடப்பட்டுக்
கதறிக்கொண்டிருக்கிறார்கள்;
நாம்
வெள்ளித் திரைகளுக்கு முன்
விசிலடித்துக்கொண்டிருக்கிறோம்.

அவர்கள்
கற்பழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்;
நாம்'கற்பில் சிறந்தவள் கண்ணகியா ? சீதையா ?" என்று
பட்டிமண்டபம் நடத்திக்கொண்டிருக்கிறோம்.

அவர்கள்
வெளிச்சத்தின் விளைச்சலுக்கு
ரத்தம் சொரிந்துகொண்டிருக்கிறார்கள்;

நாம்
இருட்டுக் காடுகளுக்கு
வேர்வை வார்த்துக்கொண்டிருக்கிறோம்.

அவர்கள்
சயனைட் அருந்திக்கொண்டிருக்கிறார்கள்;
நாம்
அதர பானம் பருகிக்கொண்டிருக்கிறோம்.

இதில் வியப்பேதும் இல்லை.

அவர்கள் கவரிமான்கள்
நாம் கவரிகள்.

இதோ !
தேவ வேடம் போட்ட சாத்தான்கள்
வேதம் ஓதுகின்றன.

இதோ !
ரத்தப் பற்களை மறைத்த ஓநாய்கள்
நீரைக் கலக்கிய பழியை
ஆடுகளின்மீது சுமத்திக்கொண்டிருக்கின்றன.

இதோ !
சித்தாந்த வித்துவான்கள்
ஒப்பாரியில்
ராகப் பிழை கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதோ !
வெள்ளக்கொடி வியாபாரிகள்
விதவைகளின் புடவைகளை
உருவிக்கொண்டிருக்கிறார்கள்.

அன்று
அசோகன் அனுப்பிய
போதிமரக் கன்று
ஆயுதங்கள் பூக்கிறது.

இன்று
அசோகச் சக்கரதின்
குருட்டு ஓட்டத்தில்
கன்றுகளின் ரத்தம்பெருகிக்கொண்டிருக்கிறது.

தாய்ப் பசுவோ
கவர்ச்சியான சுவரொட்டிகளைத் தின்று
அசைபோட்டுக்கொண்டிருக்கிறது.

Tuesday, April 28, 2009

கலைஞரின் உண்ணாவிரத ஆயுதம் - தீர்மானித்த ஜெயலலிதா

- செல்லமுத்து குப்புசாமி

இந்தக் கட்டுரை, ‘உண்ணாவிரதம்' என்ற ஆயுதத்தை கருணாநிதி எடுக்கும் முன்பாக ஞாயிறு (26-ஏப்ரல்) அன்று எழுதியது. உண்ணாவிரதம் என்ற ஆயுதத்தை எடுக்க வைத்தவர் ஜெயலலிதாவே தவிர, போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கமல்ல.

போர் நிறுத்தம் நடக்கவுமில்லை. (அவர் ஜீஸ் குடித்து உண்ணாநோன்பை முடித்த பிறகு இலங்கை இராணுவத்தினர் கிட்டத்தட்ட 300 பொது மக்களைக் கொன்று போட்டதாகச் செய்திகள் வருகின்றன). அதையும் தாண்டி - சர்வதேச அழுத்தம் காரணமாக - ஒரு வேளை நடக்க நேர்ந்தால் அது நிச்சயமாக கலைஞரால்தான் என நம்பிக்கொண்டே இருக்க முடியாது.

(“போர் நிறுத்தும் வந்திருச்சுபா. எல்லாம் ஊட்டுக்கு போலாம்” என்று கலைஞர் அறிவித்து உண்ணாநோன்பை முடித்துக்கொண்ட பிறகு அதை ஆணித்தரமாக மறுத்திருக்கிறார் ராஜபக்சே)

இனி கட்டுரை.. ஜெயலலிதாவின் ஈழத்து இடி முழக்கம் என்ற தலைப்பில் 27-ஏப்ரல்-2009 உயிரோசைக்கு எழுதியது.

*******
சூரியன் மேற்கில் உதிக்காது என்றுதான் இத்தனை நாளும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஏப்ரல் 25, 2009 அன்று அது பொய்யாகிவிட்டது.

போர் நடந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சந்திரிகாவின் சகோதரி மாதிரியெல்லாம் பேசிய ஜெயலலிதா, "தனி ஈழம் மட்டுமே தீர்வு. நான் அதைப் பெற்றுத் தருவேன்" என்று அழுத்தம் திருத்தமாக ஈரோட்டிலே பேசி சூரியனை மேற்கில் உதிக்கச் செய்திருக்கிறார்.

இலங்கை இனப் பிரச்சினையில் தனது நிலைப்பாட்டைத் தெளிவாக கலைஞர் பேசியது கிடையாது. போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரதம், வேலை நிறுத்தம், ஊர்வலம் என எதை நடத்தினாலும் அதில் தங்கபாலுவை (அது என்னமோ தெரியலீங்க எங்க பக்கத்து வீட்டு 4 வயசுப் பாப்பா டிவியில வடிவேலுவையும், தங்கபாலுவையும் தவிர யாரைப் பாத்தாலும் சிரிக்க மாட்டேங்குது) துணைக்குச் சேர்த்துக்கொள்ள விரும்புகிறார் அவர்.

இத்தனை நாள் ஈழப் பிரச்சினையில் ஆளுக்கு ஒரு கொள்கை இருந்தது. மதிமுகவுக்கு தமிழீழ ஆதரவு, ஜெயலலிதாவுக்கு எதிர்ப்பு – ஆனால் கருணாநிதிக்கு என்ன கொள்கை என்பதே விளங்கிக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. மத்திய அரசின் கொள்கையே எனது கொள்கை என்று பேசி வந்திருக்கிறார். மத்திய அரசின் கொள்கையானது, மத்திய அரசின் கொள்கைகளுக்கு கருணாநிதி (நியாயப்படுத்தும் காரியத்தை ஆற்றும்) கொள்கை விளக்கச் செயலாளராகச் செயல்பட வேண்டும் என்பதாகவே இருக்கிறது.

போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரதம் இருப்போரைக் கைது செய்துவிட்டு அவர் மட்டும் பொது வேலை நிறுத்தம் நடத்துகிறார் தமிழக முதல்வர். அன்றைய தினம் தமிழ்த் திருநாட்டு மக்களுக்கு அலுப்புத் தட்டக் கூடாது என்பதற்காக ‘பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு’ கலைஞர் தொலைக்காட்சியில் சிறப்புப் படங்கள் போடுகிறார்.

தெளிவான நிலைப்பாடு அல்லது முடிவு ஒன்றை எடுப்பது முக்கியமில்லை. ஒத்திப்போட்டால் எல்லாப் பிரச்சினைகளும் காலப் போக்கில் மறந்து போகும் என்ற அரசியல் சாணக்கியத்தனம் கலைஞரைப் போல வேறு யாருக்கும் கை வராது.

சரியா தவறா என்பது முக்கியமில்லை. தனது conviction -இல் உறுதியாக இருப்பது ஒரு சிறந்த பண்பு. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு சாவு மணி அடித்தாலும் பரவாயில்லை என்று இந்தியைக் கட்டாயமாக்குவதில் உறுதியாக நின்ற பக்தவச்சலத்துக்கு அது இருந்தது. தமிழினத்தின் எதிரி என்ற முத்திரை தன் மீது விழுவதையும் பொருட்படுத்தாமல் ஈழ எதிர் நிலை எடுத்த ஜெயலலிதாவுக்கும் அது இருந்தது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் போராட்டத்தில் நடந்து கொண்ட விதம், மழை நீர் சேகரிப்பைக் கட்டாயமாக்கிய திறம், எல்லாமே அதற்குச் சான்று.

இன்னொரு பக்கம் மருத்துவர் ஐயா. என்னமோ இப்போதுதான் ‘இலங்கையில் போரை நடத்துவதே இந்தியாதான்’ என்பதைக் கண்டு பிடித்த மாதிரிப் பேசுகிறார். ஓரினச் சேர்க்கை பற்றி, புகை மற்றும் மதுப் பழக்கம் பற்றியெல்லாம் பேசி இந்தியாவையே அதிர வைத்த அவரது மகன் மத்திய அமைச்சரவையில் இருக்கும் வரை அது தெரியவில்லை போலும்.

மறுபடியும் ஜெயலலிதாவுக்கே வருவோம். பெரியார் பிறந்த ஈரோட்டு நகரிலே, பெரியாருக்கும் தனக்கும் கொள்கை அளவில் என்ன தொடர்பு என்பதை அறியாத அவரது பேரன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை எதிர்த்து நிற்கும் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தியை ஆதரித்துப் பேசும்போது இனித் தமிழீழம் மட்டுமே ஒரே தீர்வு என்று சொல்லியிருக்கிறார்.

"வீடியோ காட்சிகளைப் பார்த்த பிறகு தான், இலங்கைத் தமிழர்கள் அங்கே கைதிகளைப் போல், அடிமைகளைப்போல் நடத்தப்படுகிறார்கள் என்பது தெரிகிறது. இப்படி வாழ்வதை விட சாவதே மேல் என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு மோசமான நிலையில் இலங்கைத் தமிழர்கள் உள்ளனர். அந்த அளவுக்கு அவர்களை இலங்கை அரசு மிகவும் கேவலமாக, கொடூரமாக நடத்தி வருகிறது.’

தமிழர் வாழும் பகுதிகளில் இருந்து அவர்களை வெளியேற்றி விட்டு அங்கே சிங்களர்களைக் குடியமர்த்தும் (இது இலங்கையின் ‘தேசத்தந்தை’ சேனநாயகா காலம் தொட்டே நடந்து வரும் செய்கை) வேலையைச் சுட்டிக் காட்டிய ஜெயலலிதா, ‘நிவாரண முகாம்’ என்ற பெயரில் இலங்கை அரசு நடத்தும் சித்திரவதை முகாம்களை ஹிட்லரின் concentration camps உடன் ஒப்பிடுகிறார்.

இலங்கையில் உள்ள தமிழினத்தை அழிக்க, இலங்கை அரசால், தீட்டப்பட்டு இருக்கும், மிகக் கொடுமையான திட்டம் இது’.

"முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள, இலங்கைத் தமிழர்கள்,
பிச்சைக்காரர்களைப்போல், நடத்தப்படுகிறார்களே; அவர்களை, அவர்கள் இதுவரை வாழ்ந்து வந்த இடங்களுக்கே, அனுப்பி வையுங்கள்,'' என்று இலங்கை அதிபரிடம், (வாழும் கலை ரவிசங்கர்) குருஜி அவர்கள் கேட்டதற்கு, "இப்போதைக்கு அது முடியாது'' என்று அவர் தெரிவித்து இருக்கிறார். "இரண்டு மாதங்கள் கழித்தாவது, அனுப்பி வையுங்கள்'' என்று கேட்டதற்கு, "அவர்கள் வசிக்கும் இடங்களில் எல்லாம், கன்னி வெடிகள், வைக்கப்பட்டிருக்கின்றன’ என்றும், "அதை சரி செய்வதற்கு, நான்கு வருடங்கள் ஆகும்'' என்றும், "எனவே, அதற்குப் பிறகுதான், அங்கு அவர்களை அனுப்ப முடியும்'' என்றும், இலங்கை அதிபர் தெரிவித்து இருக்கிறார்.

ஆனால், அந்த இடங்களில் எல்லாம், புதிதாகக் குடி அமர்த்தப்பட்ட சிங்களர்கள், வசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இலங்கை அதிபர் சொல்வது போல், கன்னி வெடிகள் அங்கே இருந்தால், சிங்களர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா? அந்தக் கன்னி வெடிகள், இலங்கைத் தமிழர்கள் அவற்றின் மீது நடந்தால்தான் வெடிக்குமா? சிங்களர்கள் நடந்தால் வெடிக்காதா?

மேலும் தொடர்கிறார் அவர்...

இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று நாம் கேட்கிறோம். இது மட்டும் போதாது. இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்கள் சகஜ வாழ்வு வாழ வேண்டும். சிங்கள மக்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளையும் அவர்கள் பெற வேண்டும்.

இதற்கு ஒரே வழி தனி ஈழம் அமைப்பதுதான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் கூடிய புதிய மத்திய அரசு அமைந்தால், எங்கள் சொல்படி கேட்கும் மத்திய அரசு அமைந்தால், தனி ஈழம் அமைக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நான் அதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பேன். இலங்கைப் பிரச்சினைக்கு, நிரந்தரத் தீர்வு காண, தனி ஈழம் தான் ஒரே வழி. அதை நான் நிச்சயம் செய்வேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

ஒரு வழியாக ஜெயலலிதா தனது நிலைப்பாட்டை அறிவித்துவிட்டார். நான் 74 இலேயே தமிழீழம் கேட்டேன், 83 இலே எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தேன் (ஏன்னா அது முதலமைச்சர் பதவியை விட சிறுசு பாருங்க) என்று பதில் அறிக்கை விட்டு தனது தமிழினத் தலைவர் பிம்பத்தைத் தக்க வைப்பார் கருணாநிதி. (பிரேக்பாஸ்ட் முதல் லஞ்ச் வரையான இடைவெளியில் மட்டும் 'சாகும் வரை காலவரையற்ற' உண்ணாவிரதம் இருக்கும் அளவுக்கு அவர் இறங்குவார் என்பதை இதை எழுதும் போது நான் கனவிலும் யூகிக்கவே இல்லை)

ஜெயலலிதா தனது நிலைப்பாட்டை தேர்தலை முன்னிட்டு மாற்றினாரா அல்லது உண்மையிலேயே மாறிவிட்டாரா என்பது தெரியாத கேள்வி. ஆனால் இத்தனை நாளும் இலங்கையில் தமிழர்கள் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் என்றோ அல்லது அவர்களுக்கு சம உரிமை என்றுமே கிடைக்காது என்றோ அவருக்குத் தெரியாமல் போனது எப்படி? சமூக அக்கறையும், அரசியல் பொறுப்புணர்வும் அற்றவராக அவர் இருந்தாரா?

எனினும் ஜெயலலிதாவின் இந்த பகிரங்க ஆதரவு வரவேற்க வேண்டிய ஒன்று. தன் மீதான ‘தமிழினத் துரோகி’ என்ற பட்டத்தை, ஜெயலலிதா மீதான ‘தமிழின எதிரி’ என்ற பட்டத்தை நினைத்து மகிழ்ந்து சகித்து சமாளித்த கலைஞர் இனித் தனது உத்திகளை மாற்றியமைக்க வேண்டும்.

கலைஞர் இலங்கை விவகாரத்தின் தனது கொள்கையைத் தெளிவாக வெளிப்படுத்தாமல் இருந்ததற்கு முக்கியமான காரணம் அதை ஜெயலலிதா தனக்கு எதிராகப் பயன்படுத்தி விடுவாரோ என்ற பயம்தான். தமிழீழம் அமைய வேண்டும் என்று சொன்னால் தன்னை இந்தியாவின் எதிரி என்றும், பயங்கரவாதத்தின் பங்காளி என்று ஜெயலலிதா சொல்லி விடுவார் என்ற அச்சம் காரணமாக கலைஞர் இத்தனை நாளும் அரசியல் நாகரிகம் காத்திருக்க வேண்டும்.

இப்போதைக்கு கலைஞரின் உத்தி என்பது ஜெயலலிதாவின் உத்தியை முறியடிக்கும் உத்தியாக இருக்கும். அது எப்படியென்றால்....

1986 இல் ஆபரேஷன் டைகர் என்ற ஒரு நாடகம் நடந்தது. பெங்களூர் சார்க் மாநாட்டுக்கு அதிபர் ஜெயவர்த்தனா வரும் போது அவர் சொல்லும் முறையற்ற அரசியல் தீர்வை ஏற்க வேண்டும் என்ற இந்தியாவின் மிரட்டலை ஏற்காமல் போன பிரபாகரனை மிரட்டுவதற்காக நடத்திய ஆபரேஷன் அது. புலிகளின் தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் ஆயுதங்களை இந்தியா பறிமுதல் செய்தது. அதைத் திரும்பத் தர வேண்டுமென்று அவர் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார். சாதனங்கள் திரும்ப வழங்கப்பட்டன.

உங்கள் ஊரில் ஆயுதப் போராட்டம் மேற்கொள்ளும் நீங்கள் இங்கே அகிம்சைப் போராட்ட முறையைத் தேர்ந்தெடுத்தது ஏன் என்ற செய்தியாளர் கேள்விக்கு, ‘நாம் என்ன ஆயுதம் எடுக்கிறோம் என்பதை எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள்‘ என்று பதில் சொன்னார் பிரபாகரன்.

அப்படித்தான். கருணாநிதி என்ன உத்தியை மேற்கொள்ளப் போகிறார் என்பதை ‘எதிரி’ ஜெயலலிதாதான் தீர்மானிக்கிறார்.

இப்போதைக்கு எதிரி கருணாநிதிக்கு மட்டுந்தான் – தமிழினத்திற்கு அல்ல - தமிழீழம் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதை புலிகளும், ஈழத் தமிழர்களுமே நம்பாத இன்றைய சூழலில் தமிழீழம் அமைத்துத் தருவேன் என்று சொல்லி உணர்வுகளை உசுப்பி விட்டிருப்பதால்.

Monday, April 27, 2009

உண்ணாவிரதம் !

போரை நிறுத்துங்கன்னு இந்தியா சொல்லுச்சாம்...


அத ராஜபக்சே கேக்கலியாம்... அதனால..

இந்தியா சொல்லியும் கேக்கலேன்னு கலைஞர் உண்ணாவிரதம் இருந்தாராம். ..
உடனே..
போர் நின்னுருச்சுன்னு போன் வந்துச்சாம்..
ஆனா.. போர் நிக்கலியாம்..

புலிகள் மீதான (அப்படியானால் மக்கள் மீது??) வான் தாக்குதல் மட்டும் (அப்ப மற்ற தாக்குதல்கள்??) நிறுத்தம்!!
போர் நின்னுச்சோ இல்லையோ அண்ணா சமாதி முன்னாடி கருணாநிதி கார் நின்னுச்சு.
நான் கூடத்தான் இன்று காலை சிற்றுண்டி சாப்பிட்டது முதல் மதிய உணவு வரை கால வரையற்ற உண்ணாவிரதம் இருந்தேன். போன் வந்ததும் உண்ணாநோன்பை முடித்துக்கொண்டேன்.
“லஞ்ச் ரெடி' என்று போன் வந்தது.
(இது உண்மையான, நிரந்தரப் போர் நிறுத்தமாக இருக்க வேண்டும் என்று மனது விழைகிறது)

பாரதிராஜா மற்றும் படைப்பாளிகளின் போராட்டம்

மற்றவர்கள் உண்ணாவிரதம் இருந்தால் கைது செய்வேன்; கூட்டம் போட்டால் உள்ளே போடுவேன். ஆனால் நான் மட்டும் பொது வேலை நிறுத்தம் செய்வேன்; உண்ணாநோன்பு இருப்பேன் என்று களம் இறங்கியிருக்கிறார் கலைஞர்.

இந்தச் சூழலில் திரையுலகினர் நடத்திய போராட்டம் சன் டிவியில் வராதது குறித்து ஆச்சரியமில்லை. அந்தக் குறையை உண்மைத் தமிழனின் திரையுலகத் தமிழீழ ஆதரவு இயக்கத்தின் போராட்டம் - அசத்திக் காட்டிய இயக்குநர் இமயம்..! பதிவு போக்கியுள்ளது.

Friday, April 17, 2009

கொடைக்கானல் - குளுகுளு படங்கள்

- செல்லமுத்து குப்புசாமிWednesday, April 15, 2009

இறுதிப் போரும், இந்திய முதலாளிகளும்!!

இந்தியப் பொருளாதாரத்தின் இருண்ட பக்கங்கள் என்ற தலைப்பில் 13-ஏப்ரல்-2009 உயிரோசைக்கு எழுதியது.
**********
- செல்லமுத்து குப்புசாமி

உயிரோசைக்கு எப்போது கட்டுரை எழுதினாலும் அது ஏதாவது ஒரு வகையில் பொருளாதாரம் அல்லது வணிகம் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்ற புரிதல் ஆசிரியரோடு உண்டு. பெரும்பாலும் அந்த நோக்கில் இருந்து விலகுவது கிடையாது. இதற்கு சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளை இயன்ற வரை தொடாமல் இருக்கலாம் என்று பொருள்.

இப்போது யோசித்துப் பார்க்கிறேன். பொருளாதாரம் என்ற விஷயம் ஏதேனும் ஒரு வகையில் அரசியல், இராணுவ அல்லது சமூகத் தளத்தில் பாதிப்பை ஏற்படுத்தாமல் விடுவதில்லை. அதே போல சமூக, அரசியல் அரங்கில் ஏற்படும் மாறுதல்கள் பொருளாதார ரீதியான விளைவுகளை உண்டாக்கத் தவறுவதும் இல்லை.

இதைச் சொல்லுவதற்கு மிக முக்கியமான காரணம் இருக்கிறது. சரியான தருணமும் இதுதான் என்று தோன்றுகிறது. இப்போது சொல்லத் தவறினால் இனி மேல் அதற்கான சந்தர்ப்பம் வாய்க்காமல் போனாலும் போகலாம். காலம் தாழ்த்திப் பேசுவதனால் எந்த நன்மையும் (என்னவோ இப்ப பேசினா மட்டும் நெனைச்சது நடக்கிற மாதிரி) உருவாகப் போவதில்லை.

சென்ற இதழில் கறுப்புப் பணம் பற்றி எழுதிய கட்டுரைக்கும், இதற்கும் தொடர்பு உண்டு. அதன் ஒரு தொடர்ச்சியாக அரசியல் உலகத்திற்கும், பிசினஸ் உலகத்திற்கும் உள்ள தொடர்பு பற்றியே இப்போது பேசுகிறோம்.
சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் ஒரு தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 2,000 முதல் 5,000 ரூபாய் வரை பிரதான அரசியல் கட்சிகள் பணம் கொடுத்ததாக செய்திகளும், குற்றச்சாட்டுகளும் உலவின. இது தமிழகத்திற்கு மட்டுமே உரித்தான சாபக்கேடல்ல. அகில இந்தியாவிலுமுள்ள அரசியல் நிலவரம் இதுவே.

பொருளாதார மந்த நிலையோடு கூடிய இன்றைய சூழலில் விலைவாசிகள் குறைகிறது என்று ஊடகங்கள் அலறுகின்றன. எனினும் ஓட்டுக்கான விலை குறைந்து விட்டதாகச் சொல்ல முடியாது. குத்து மதிப்பாக நாடாளுமன்றத் தொகுதி ஒன்றுக்குப் பத்து இலட்சம் வாக்காளர்கள் என்ற கணக்கில், ஒரு வாக்குக்குக் குறைந்தபட்சம் 1000 ரூபாய் என்ற மதிப்பில் கொடுக்க வேண்டிய பணமே 100 கோடி வருகிறது.

கட்சிகளின் பலத்திற்கு ஏற்ப, அவை ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலத்திற்கு ஏற்ப இந்தத் தொகை கூடவோ குறையவோ செய்யலாம். இது போக இதர பிரச்சாரச் செலவுகள். டாடா சுமோ, மீடியா செலவுகள். பிரியாணி, குவாட்டர் செலவுகள். இத்தியாதி... இவையெல்லாம் ஒரு தொகுதிக்கே .. என்றால் ஒட்டு மொத்த இந்தியாவையும் கணக்கில் கொண்டால் எத்தனை கோடிகள் கை மாறும்!

(ஹெலிகாப்டர் வாடகை மணிக்கு ஒன்றரை இலட்ச ரூபாய் வரையாம். ஜெய் ஹோ பாடல் உரிமையை ஒரு கோடி கொடுத்து வாங்கியிருக்கிறது காங்கிரஸ்)

பெரிய தேசியக் கட்சிகளும், மத்திய அரசியல் செல்வாக்குச் செலுத்தப் போகும் மாநிலக் கட்சிகளும் ஏராளமான பணத்தை வாரி இறைக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இன்னொரு பக்கம் இத்தனை பணத்தையும் கட்சிகள் மட்டுமே செலவு செய்வதில்லை.

பணம் வசூலிக்கப்படுகிறது. நிதி திரட்டப்படுகிறது. மிரட்டல் விடுக்கப்படுகிறது. டெய்லர் கடை முதல் இந்தியாவின் மிகப் பெரிய டெலிபோன் கம்பெனி வரை அனைத்தும் அரசியல் கட்சிக்கு நிதி அளிக்கின்றன. அப்படி நிதியளிக்கும் நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களுக்குச் சாதகமான கொள்கை முடிவுகள் அறிவிக்கப்படும். ஒப்பந்தங்கள் வழங்கப்படும். ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில் தர்மம்.

தேர்தல் நிதிக்கு அப்படி அள்ளிக் கொடுக்கும் பணத்திற்கு வெளிப்படையான கணக்கு இல்லை. ஒபாமா வெற்றி பெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் ஒட்டு மொத்தமாக ஒரு பில்லியன் டாலர் திரட்டப்பட்டதை சாதனை என்று சொல்கிறார்கள். ஒரு பில்லியன் டாலர் வெறும் 5000 கோடி ரூபாய். நம் ஊரில் அதைக் காட்டிலும் கூடுதலான தொகை புரள்கிறது.

மாநிலக் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பதவிக்கான உட்கட்சித் தேர்தலுக்கு மட்டுமே ஒரு நபர் 80 இலட்ச ரூபாய் செலவு செய்த கதையை நான் அறிவேன். ஆனால் மக்களவைத் தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 25 இலட்சம் வரை மட்டுமே செலவு செய்யலாம் என்கிறது தேர்தல் ஆணையம். சிரிப்பது ஆரோக்கியத்துக்கு நல்லதாம்.

மற்றவையெல்லாம் கணக்கில் வராமல் வாரி இறைக்கும் பணம். அப்படி வாரி இறைப்பதற்குத்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் தொகையை முதலீடு செய்கின்றன.

(அரசியலில் ஓட்டுப் போட்ட மக்கள் கோமாளி ஆவது போல அரசியல்வாதிகளுக்குப் பணம் கொடுக்கும் தொழிலதிபர்கள் நடத்தும் நிறுவனங்களில் பணம் போட்டிருக்கும் சிறு பங்குதாரர்களும் கோமாளி ஆகிறார்கள். அது விவாதத்தைத் திசை திருப்பும் செய்தி என்பதால் விட்டுவிடுவோம்)

அப்படி முதலீடு செய்யும் நிறுவனங்கள் தாங்கள் பணம் கட்டிய அரசியல் குதிரை பந்தயத்தில் வென்றதும் தமது வியாபார நலனுக்கு ஏற்ப அரசாங்கத்தின் கொள்கைகளை மாற்றியமைக்குமாறு வலியுறுத்துகின்றன.
உலகத்தின் எங்காவது ஒரு மூலையில் அமெரிக்கா போரை நடத்திக்கொண்டே இருப்பதற்கும், அந்த நாட்டின் ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்கள் அரசியலில் கொண்டிருக்கும் செல்வாக்குக்கும் நேரடியான தொடர்பு உண்டு.

இலங்கையில் நடக்கும் இறுதிப் போரையும் இந்தக் கண்ணோட்டத்தில் அணுக வேண்டியிருக்கிறது. உலக மகா கொலைகாரனாக ராஜபக்சேவை நாம் நினைத்துக் கொண்டிருந்தாலும், உண்மையில் போர் என்ற பெயரில் நடக்கும் நியாயப்படுத்த முடியாத கொலைகளை முன்னின்று நடத்துவது இந்தியாவே என்று பலமாகச் சந்தேகிக்காமல் இருக்க முடியவில்லை.

நிறைய பேசியாகிவிட்டது. பாதுகாப்புக் காரணங்களுக்காக திருகோணமலைத் துறைமுகம் உலக வரைபடத்தில் மிக முக்கியமான கவனத்தைப் பெறுவதைப் பற்றியும் பேசியாகிவிட்டது. இலங்கைக்கு சீனாவும், பாகிஸ்தானும் ஆயுதம் கொடுப்பதால் இந்தியாவும் உதவியாக வேண்டிய கட்டாயம் பற்றி நிறைய பேசியாகிவிட்டது. கலைஞர் புண்ணியத்தில் சகோதரச் சண்டை பற்றியும் அறிந்து கொண்டோம்.

ஆனால் போர் நிற்காமல் நடப்பதற்கு அது மட்டுமே காரணமாக இருக்க முடியாது. சிறீலங்காவின் ‘இறையாண்மையை’ பேணுவதற்கு இராஜபக்சே வேண்டுமானால் போரை மூர்க்கமாக நடத்துவதாகக் கருதலாம். தன் கணவரைக் கொன்ற இயக்கத்தை அழிக்கும் முயற்சியில் எத்தனை பேர் செத்தாலும் பரவாயில்லை என்ற இரும்பு இதயம் சோனியாவுக்கு இருப்பதால் போரை நடத்திக் கொண்டிருப்பதாகக் கருதலாம்.

அதே நேரம், அவரது தனிப்பட்ட வன்மம் மட்டுமே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை நிர்மாணிக்கிறதா? கருணாநிதியின் கொள்கையை, மன்மோகனின் கொள்கையை, பிரணாப் முகர்ஜியின் கொள்கையைக் கட்டமைக்கிறதா? அல்லது சோனியாவின் கொள்கையே இவர்களது கொள்கையா? அல்லது தமிழீழம் பிறந்தால் இந்தியாவுக்கு அச்சுறுத்தலா?
நிச்சயமாக இல்லை. போரில் தனி நபர் பழி வாங்கல் மட்டுமே பிரதான காரணியாக இல்லை. அதையும் கடந்த பொருளாதார நலன்கள் உள்ளன.

இடிபாடுகளில் சிக்கிய ஈராக்கை மறு கட்டுமானம் செய்யும் ஒப்பந்தம் அமெரிக்க நிறுவனங்கள் சிலவற்றுக்கு வழங்கப்பட்டதில் என்ன வணிக நலன் இருந்ததோ அதே வணிக நலன்தான் இங்கேயும்.

இயற்கை எழில் கொஞ்சும் இலங்கைத் தீவில் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்த ஏகாதிபத்திய அரசுகள் முயல்வதைக் காட்டிலும் கூடுதலாக கார்ப்பரேட் நிறுவனங்கள் முயல்கின்றன. அப்படி முயல்வதற்கு அரை நூற்றாண்டுக்கு மேலாக நடைபெறும் தமிழரின் உரிமைப் போராட்டம் ஒரு முட்டுக்கட்டையாகவே இருந்து வந்திருக்கிறது. எனவே அந்தப் போராட்டத்தை மட்டுமல்ல, இனி மேல் அடுத்த தலைமுறை தலையெடுக்காமல் இருப்பதற்கும் என்ன வேண்டுமானாலும் செய்ய அவை ஆயத்தமாக உள்ளன.

மூணாற்றில் தேயிலைத் தோட்டங்களைத் தொழிலாளர்களுக்குத் திருப்பிக் கொடுப்பதாகவும், பயிரிடுவதில் இருந்து முற்றிலுமாக விலகி மார்க்கெட்டிங் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாகவும் சொல்லும் டாடா நிறுவனம் கண்டி மலையகத்தில் மட்டும் கூடுதல் அக்கறை கொள்வதன் நோக்கம் புரியாமல் இல்லை.

"the operations of Tata Tea and its subsidiaries focus on branded product offerings in tea but with a significant presence in plantation activity in India and Sri Lanka" (www.tatatea.com/comp_profile.htm)

இலங்கையின் மீதான அக்கறை டாடாவுக்கே இந்த அளவுக்கு என்றால் அம்பானி வகையறாக்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. தொலைத் தொடர்பு, பெட்ரோலியம், கட்டுமானம், சுற்றுலா எனப் பல்வேறு துறைகளிலும் காலூன்றி விடுவது அவற்றின் வருங்கால முன்னேற்றத்திற்கான உத்திகளில் முக்கியமானதாக இருக்கிறது.
யார் கண்டது, விடுதலைப் புலிகளை முற்றிலுமாக ஒழித்துக் கட்டிய பிறகு திருகோணமலைத் துறைமுகத்தின் கட்டுமான ஒப்பந்தம் டி.ஆர்.பாலுவுக்கே கூட கிடைக்கலாம்.

இலங்கை இனப் பிரச்சினைக்கு போர் தீர்வாகாது, அமைதியான முறையில் பேசித் தீர்வு காண வேண்டும் என்றுதான் இந்தியா வலியுறுத்துகிறது. ஆனால் போரை யார் நடத்துகிறார்களோ அவர்கள்தானே நிறுத்த வேண்டும்?

கடந்த ஒரு வாரத்தில் மேற்கத்திய நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் போர் நிறுத்தம் கோரித் தீர்க்கமாகப் போராடி வருகிறார்கள். அதைப் பற்றிய செய்திகள் இங்கே முழுமையாக இருட்டடிப்பு செய்யப்படும் அயோக்கியத்தனம் நடக்கிறது. அந்த செய்திக்குப் பதிலாக, சோனியா காந்தியின் உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து என்ற செய்தி வெளிவருகிறது. இது திட்டமிட்ட திசை திருப்பல்.

புலிகள் மீது விமர்சனங்களும், வெறுப்புகளும் இருக்கட்டும். அதைக் காட்ட இதுவா தருணம். பேச்சுவார்த்தை என்ற ஒரு காரியத்துக்கு இலங்கை அரசு இறங்கி வந்த போதெல்லாம் புலிகள் (அல்லது 1985 திம்பு பேச்சுவார்த்தையில் அனைத்து போராளிக் குழுக்களும்) பலம் பொருந்தியவர்களாக இருந்தனர் என்பதே வரலாற்று உண்மை.

அப்படி இருக்கும் போது புலிகள் முற்றிலுமாக ஒழித்துக்கட்டப்பட்ட பிறகு காணும் தீர்வு எத்தகையதாக இருக்கும் என்பது கற்பனைக்கு எட்டாத ஒன்றாக இருக்கிறது.

இந்தியா சொல்லும் தீர்வு தமிழ் நாட்டைப் போன்ற ஒரு மாநிலத் தீர்வா? அல்லது பாண்டிச்சேரி போன்ற யூனியன் பிரதேசம் பெற்றிருக்கும் அளவு அதிகாரம் பொருந்திய ஒரு கட்டமைப்பா?

1985 முதல் (தமிழர் கை ஓங்கியிருந்த போது) நடந்த பேச்சுவார்த்தைகளின் போது இந்தியாவைப் போன்ற கூட்டாட்சித் தீர்வுக்கு இலங்கை அரசை இந்தியா சம்மதிக்க வைக்க முடியாத போது, புலிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட பிறகு மட்டும் அதைச் செய்ய முயலுமா? கொத்துக் கொத்தாக குழந்தைகள் சாகும் போரை நிறுத்துவதையே உத்திரவாதப்படுத்த முடியாத நீங்கள் பேச்சுவார்த்தை மூலம் மட்டும் தீர்வு காணப்படும் என்று உத்திரவாதம் கொடுப்பீர்கள் என்று நம்பவா?

ராஜபக்சேவே நினைத்தாலும் கூட போரை நிறுத்த முடியாது. ‘தீவிரவாதம்’ ஒழிக்கப்படும் வரை, பிசினஸ் செய்வதற்கு உகந்த சூழல் உருவானதாக பெருமுதலாளிகள் நம்பும் வரை இது தொடரும் – நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ.

இனி மேல் போர் நிறுத்தம் கோரிப் போராடுவோர் பெருமுதலாளிகளை நோக்கியும் குரல் எழுப்பலாம். ஆனால் அந்தக் குரல் உங்களுக்கேகூடக் கேட்காமல் போகலாம்.

Wednesday, April 08, 2009

கறுப்புப் பணம்: ரஜினியும் அத்வானியும்

06-ஏப்ரல்-2009 உயிரோசைக்கு எழுதியது

**********
- செல்லமுத்து குப்புசாமி

நாடாளுமன்ற ஜனநாயக நாடகம் மீண்டும் ஒரு முறை அரங்கேறும் அவலம் .. மன்னிக்க.. தருணம் இது; கண்ணுக்கும், காதுக்குமான சங்கதிகள் வெகு விறுவிறுப்பாக இருக்கின்றன. எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சமில்லாத தேர்தலுக்கு முந்தையை அறிவிப்பு மற்றும் வாக்குறுதிகளில் இம்முறை வித்தியாசமான ஒன்றைக் காண முடிந்திருக்கிறது.

மிகவும் வித்தியாசமான ஒன்றுதான். சூப்பர் ஸ்டாரின் ‘சிவாஜி’ பட ரசிகராக மாறி விட்டாரோ என்று கருதும்படியான ஒரு தடாலடி அறிவிப்பை பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் அத்வானி செய்திருக்கிறார்.

மிகப் பெரிய வெற்றிப் படம் சிவாஜி. நாட்டில் உள்ள கருப்புப் பணத்தையெல்லாம் அபகரித்து, அதைக் கொண்டு ஆக்கப் பூர்வமான பணிகளை மேற்கொள்வார் ரஜினி. அதுதான் படத்தின் மையக் கருத்து. பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டு வங்கிகளின் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தையெல்லாம் இதியாவிற்கு கொண்டு வருவோம் என்கிறார் அத்வானி.

பாரதீய ஜனதா கட்சி அல்லது அத்வானி மீதான் பல விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் ஒரு பக்கம் இருந்தாலும், இத்தகைய தடாலடி அறிவிப்பு துணிச்சலான ஒன்றுதான். இதை மட்டுமே வைத்து அத்வானிஜியின் நேர்மையை அல்லது கொள்கையை நாம் நம்பத் தயாராக இல்லை என்ற போதிலும் கூட மிக முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி நம்மை சிந்திக்க வைத்திருக்கிறது அவரது வாக்குறுதி.

கணக்கில் வராத கருப்புப் பணத்தின் பெரும்பகுதி ஸ்விஸ் வங்கியில் தேங்கியிருக்கும் என்பது உலகறிந்த ரகசியம். சாகும் போது வெறும் முன்னூறு ரூபாய் மட்டுமே வைத்திருந்த காமராஜருக்கே கூட ஸ்விஸ் வங்கியில் கணக்கு இருந்ததாகச் சொன்னவர்கள் உண்டு.

ஸ்விஸ் வங்கியில் பதுக்கியிருக்கும் கருப்புப் பணம் பற்றி மேற்கொண்டு பேசுவதற்கு முன்பாக கருப்புப் பணம் பற்றிய நமது புரிதலை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. அவற்றில் முக்கியமானது சட்ட விரோதமாகச் சம்பாதித்த பணத்துக்கும், கருப்புப் பணத்துக்கும் உள்ள வித்தியாசம்.

கணக்கில் வராத பணம் எல்லாம் கருப்புப் பணம். அது சட்ட விரோதமான காரியத்தில் சம்பாதிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு உதாரணம் பாருங்கள். அரசாங்க மருத்துவமனையில் மாதம் பத்தாயிர ரூபாய் சம்பளம் – வருடம் ரூ 1,20,000 - வாங்கும் டாக்டர் மாலை நேரத்தில் தனியாக வைத்தியம் பார்க்கிறார். அதில் மாதம் ஐம்பதாயிரம் கூட சம்பாதிக்கிறார். அதுவே வருடம் ஆறு இலட்சம் ஆகிறது. ஆனால் அரசாங்கும் கொடுக்கும் 1,20,000 சம்பளத்திற்கு மட்டும் கணக்குக் காட்டி விட்டு மீதி ஆறு இலட்சத்துக்கு வரி கட்டாமல் ஏய்க்கிறார்.

ஒரு மருத்துவர் நோயாளிகளுக்கு வைத்தியம் பார்ப்பது சட்ட விரோதமான செயலல்ல. எனினும் அதில் ஈட்டும் வருமானத்திற்கு அவர் முறையான கணக்குக் காட்டி, அதற்கு சரியாக வரி கட்டாமல் விடும் போது அவர் சம்பாதிக்கும் பணம் கருப்புப் பணமாகிறது.

இன்னொரு பக்கம் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் இருக்கிறார். 500 கோடி மதிப்புள்ள பாலம் கட்டும் திட்டம் போடுகிறார்கள். பாலம் கட்டுவதற்கு ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனம் திட்ட மதிப்பீட்டில் 20 சதவீதத்தை கமிஷனாக அமைச்சருக்குத் தருகிறது, அதாவது 100 கோடி. அதில் பாதியை வைத்துக்கொண்டு - அதாவது 50 கோடியை - மீதியை முதலமைச்சருக்கு ஒதுக்கிறார் அவர். இப்படியாக ஆயிரக் கணக்கான கோடிகளை அரசியல்வாதிகள் சேர்க்கிறார்கள்.

ஆட்சி மாற்றம் நிகழும் போது வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்த வழக்கில் அந்த ‘முன்னாள்’ அமைச்சர் வீட்டுக்கு சோதனை வருகிறது. கொள்ளையடித்த பணம் எல்லாவற்றையும் வைத்துக் கொண்டிருந்தால் அதிகாரிகள் அள்ளிச் சென்று விட மாட்டார்களா? எனவே முன்னெச்சரிக்கையாக ஸ்விஸ் வங்கியின் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி அவ்வப்போது சில நூறு கோடிகளாக போட்டு வைத்து விடுவார்.

ஸ்விஸ் வங்கியில் போட்டு வைத்துள்ள பணம் இந்தியாவில் விசாரணை செய்யும் அதிகாரிகளுக்குத் தெரியாது என்பதால் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. அரசியலில் ஊழல் செய்து ஈட்டிய பணம் என்று மட்டுமில்லை, சமூக விரோதக் காரியங்களின் ஈட்டும் கருப்புப் பணமும் கூட இதே ரூட்டில் சென்று ஸ்விஸ் வங்கியில் டெபாசிட் ஆகிறது. கள்ளக் கடத்தல், போதை மருந்து விற்றல், ஆள் கடத்தி பணம் பறித்தல், கிரிக்கெட் மற்றும் அரசியல் சூதாட்டம் என இந்த நடவடிக்கைகளின் பட்டியல் நீளும். தொழிலதிபர்கள், நிழலுலக தாதாக்கள், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் எனவும் நீள்கிறது பட்டியல்.

டாக்டர் சம்பாதித்த கருப்புப் பணத்திற்கும், சமூக விரோதக் காரியத்தில் ஈட்டிய கருப்புப் பணத்திற்கும் உள்ள அடிப்படை வேறுபாடு அதை ஈட்டிய விதம் மட்டுமே. எனினும் சமூக விரோத காரியத்தில் ஈட்டும் அளவு கோடி கோடியாக அந்த டாக்டர் சம்பாதித்து விட முடியாது. மீறிப் போனால் ஐம்பது இலட்சம் மதிப்புள்ள வீட்டை இருபது இலட்ச ரூபாய்க்கு வாங்கியதாக அவர் கணக்குக் காட்டுவார்.

கருப்புப் பணம் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம் அதற்கும், கள்ளப் பணத்திற்கும் இடையேயான வேறுபாடு. கருப்புப் பணம் என்பது அரசாங்கம் அச்சடித்த கரன்சிதான். அதை அளவுக்கு மீறி சம்பாதித்து விட்டு கணக்கில் காட்டாமல் பதுக்கி வைப்பதால் கருப்புப் பணம் ஆகிறது. கள்ளப் பணம் என்பது அச்சடிக்கும் விவகாரத்தில் அரசாங்கத்திற்கு சிரமம் கொடுக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் தாமாகவே அச்சடித்துக் கொள்வது. அவ்வளவுதான்.

மறுபடியும் ஸ்விஸ் வங்கிக்கும் வருவோம். நம்மூர் அரசியல்வாதிகள் ஸ்விஸ் வங்கியில் கருப்புப் பணத்தைப் போட்டு வைப்பதற்கு முக்கியமான காரணம் அடையாளத்தை யாரும் அறிய முடியாது என்பதுதான். அவ்வளவு ரகசியமாக பாதுகாத்து, நம்பகத்தன்மையைப் பேணுவதே அவ்வங்கியின் தனிச் சிறப்பு. இரகசிய காப்பு என்பது ஸ்விஸ் அரசாங்கம் 1934 முதல் சட்டப்பூர்வமாகப் பேணி வரும் ஒரு விஷயம்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மீதான கரும்புள்ளிகளில் முக்கியமானது போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டும், அந்தப் பணத்தை ஸ்விஸ் வங்கியில் போட்டு வைத்திருப்பதாக எழுந்த சர்ச்சையுமே ஆகும். இப்போது நாம் அறிய வரும் செய்திகள் இராஜீவ் காந்தியின் ஊழலையெல்லாம் ஜுஜுபி என்று சொல்லத் தக்க வகையில் உள்ளன.

இன்னொரு பக்கம் எல்.கே.அத்வானியின் கோரிக்கை வெறும் தேர்தல் சார்ந்த ஒன்றாக நின்று விடக் கூடாது என்பதே நமது ஆசை. ஏனென்றால் ஸ்விஸ் வங்கி முன்னெப்போதும் இல்லாத வகையில் தன்னிடம் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களைப் பற்றிய தகவலைப் பகிர்ந்து கொள்ள இசைந்துள்ளது.

அதற்கு முக்கியக் காரணம் அமெரிக்க அழுத்தமே ஆகும். மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் உலக நாட்டாமை அமெரிக்கா தன் தேசத்தில் இருந்து எவ்வளவு பணம் சட்டத்திற்குப் புறம்பாக ஸ்விஸ் வங்கியில் அண்டியிருக்கிறது என்பதிலும், அதை எப்படி அமெரிக்காவிற்கே மறுபடியும் எடுத்துச் செல்வது என்பதிலும் வெகுவான அக்கறை காட்டுகிறது. ஜெர்மனியும் அப்படித்தான்.

அமெரிக்காவையும், ஜெர்மனியையும் அடுத்து இந்தியாவும் அதை வலியுறுத்த வேண்டும் என்பதே அத்வானியின் கூக்குரல். உலகப் பொருளாதார நெருக்கடி பற்றி விவாதிக்க இலண்டனின் கூடி முடிந்திருக்கிறது G-20 நாட்டுத் தலைவர்களின் மாநாடு. உலகப் பொருளாதாரத்தை ஒட்டு மொத்தமாக ஊக்குவிக்க ஒரு டிரில்லியன் டாலருக்கும் (50 இலட்சம் கோடி ரூபாய்) கூடுதலான திட்டம் ஒன்றை அவர்கள் கூட்டாக வகுத்துள்ளனர்.

இந்த மாநாட்டுக்குச் சென்ற பிரதமர் மன்மோகன் சிங் கருப்புப் பணம் பற்றிய பிரச்சினையை எழுப்பி, உலகலாவிய கருத்து ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்று அத்வானி கேட்டிருந்தார். அப்படி ஒரு காரியத்தை மன்மோகன் செய்திருந்தால் பாராட்டுக்குரியதாக இருந்திருக்கும்.

அவரைப் போலவே இமாச்சல பிரதேச முதலமைச்சர் Prem Kumar Dhumal வும் கூட இதையே வலியுறுத்தியுள்ளார்.

கருப்புப் பணம் பற்றி தான் பிரதமருக்குக் கடிதம் எழுதியதாகவும், அவரிடமிருந்து ‘ஏய்ப்பு’ (evasive) பதிலே வந்திருப்பதாகவும் அத்வானி குற்றம் சாட்டியுள்ளார்.

ஏனென்றால் கருப்புப் பணத்தைப் பொறுத்த வரை அமெரிக்காவைக் காட்டிலும், ஜெர்மனியைக் காட்டிலும் அதிகமாகப் பாதிக்கப்படுவது இந்தியாதான். உலகிலேயே கருப்புப் பணத்தைப் பதுக்குவதில் முதலிடம் இந்தியர்களுக்கே. சுமார் 75 இலட்சம் கோடி ரூபாய் வரை இந்தியாவின் பண முதலைகளின் கருப்புப் பணம் குவிந்திருப்பதாக தகவல்கள் கசிகின்றன.

இந்தப் பணம் இந்தியாவின் ஒட்டுமொத்த கடனை விட 10-12 மடங்கு அதிகம் என்பதுதான் இங்கே சுவாரசியமான தகவல். வெளிநாட்டில் குவிந்திருக்கும் இந்தப் பணம் நேரமையாக ஈட்டியதில்லை என்பதால் பெரும்பாலும் மக்களின் பணம் என்றே கருதலாம். இந்தியாவை கடனற்ற நாடாக ஆக்குவது மட்டுமல்லாமல், வருங்காலக் கடன்களையும் தவிர்க்கலாம். முன்னேறிய நாடாகவும் மாற்றி விடலாம்.

ஸ்விஸ் வங்கியில் இரகசியக் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியல், அவர்தம் கணக்குகளில் உள்ள பேலன்ஸ் ஆகிய அனைத்தும் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் வெளியிட்டாக வேண்டும். பாரதிய ஜனதா கட்சி குரல் விடும் போது காங்கிரஸ் கட்சி மட்டும் இதில் மெளனமாக நிற்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு மத்தியிலும், மாநிலங்களிலும் காங்கிரஸ் எத்தனை ஆண்டுகள் ஆண்டது என்பதும், பாஜக எத்தனை ஆண்டுகள் ஆண்டது என்பதுமே இந்த மெளனத்தை விளக்குகிறது.

அது ஒரு புறம் இருக்க, அத்வானி ஆட்சிக்கு வந்தால் மட்டும் இந்தியாவின் ஒட்டு மொத்த கருப்புப் பணம் பற்றிய தகவல் வெளியாகும் என்று நம்புவதற்கு சிரமமாக உள்ளது.

ஒரு வேளை ‘சிவாஜி’ படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டால் அது நடக்கலாம்.

இலங்கைப் படுகொலை - அருந்ததி ராய் - அகோரப் படங்கள்

நன்றி : Times of India (http://timesofindia.indiatimes.com/articleshow/4331986.cms)
புகைப்படங்கள் நன்றி: மின்னஞ்சல்
--


The horror that is unfolding in Sri Lanka becomes possible because of the silence that surrounds it. There is almost no reporting in the mainstream Indian media — or indeed in the international press — about what is happening there. Why this should be so is a matter of serious concern.From the little information that is filtering through it looks as though the Sri Lankan government is using the propaganda of the ‘war on terror’ as a fig leaf to dismantle any semblance of democracy in the country, and commit unspeakable crimes against the Tamil people. Working on the principle that every Tamil is a terrorist unless he or she can prove otherwise, civilian areas, hospitals and shelters are being bombed and turned into a war zone. Reliable estimates put the number of civilians trapped at over 200,000. The Sri Lankan Army is advancing, armed with tanks and aircraft.Meanwhile, there are official reports that several ‘‘welfare villages’’ have been established to house displaced Tamils in Vavuniya and Mannar districts. According to a report in The Daily Telegraph (Feb 14, 2009), these villages ‘‘will be compulsory holding centres for all civilians fleeing the fighting’’. Is this a euphemism for concentration camps? The former foreign minister of Sri Lanka, Mangala Samaraveera, told The Daily Telegraph: ‘‘A few months ago the government started registering all Tamils in Colombo on the grounds that they could be a security threat, but this could be exploited for other purposes like the Nazis in the 1930s. They’re basically going to label the whole civilian Tamil population as potential terrorists.’’Given its stated objective of ‘‘wiping out’’ the LTTE, this malevolent collapse of civilians and ‘‘terrorists’’ does seem to signal that the government of Sri Lanka is on the verge of committing what could end up being genocide. According to a UN estimate several thousand people have already been killed. Thousands more are critically wounded. The few eyewitness reports that have come out are descriptions of a nightmare from hell. What we are witnessing, or should we say, what is happening in Sri Lanka and is being so effectively hidden from public scrutiny, is a brazen, openly racist war. The impunity with which the Sri Lankan government is being able to commit these crimes actually unveils the deeply ingrained racist prejudice, which is precisely what led to the marginalization and alienation of the Tamils of Sri Lanka in the first place. That racism has a long history, of social ostracisation, economic blockades, pogroms and torture. The brutal nature of the decades-long civil war, which started as a peaceful, non-violent protest, has its roots in this.


Why the silence? In another interview Mangala Samaraveera says, ‘‘A free media is virtually non-existent in Sri Lanka today.’’
Samaraveera goes on to talk about death squads and ‘white van abductions’, which have made society ‘‘freeze with fear’’. Voices of dissent, including those of several journalists, have been abducted and assassinated. The International Federation of Journalists accuses the government of Sri Lanka of using a combination of anti-terrorism laws, disappearances and assassinations to silence journalists.There are disturbing but unconfirmed reports that the Indian government is lending material and logistical support to the Sri Lankan government in these crimes against humanity. If this is true, it is outrageous. What of the governments of other countries? Pakistan? China? What are they doing to help, or harm the situation?

In Tamil Nadu the war in Sri Lanka has fuelled passions that have led to more than 10 people immolating themselves. The public anger and anguish, much of it genuine, some of it obviously cynical political manipulation, has become an election issue.


It is extraordinary that this concern has not travelled to the rest of India. Why is there silence here? There are no ‘white van abductions’ — at least not on this issue. Given the scale of what is happening in Sri Lanka, the silence is inexcusable. More so because of the Indian government’s long history of irresponsible dabbling in the conflict, first taking one side and then the other. Several of us including myself, who should have spoken out much earlier, have not done so, simply because of a lack of information about the war. So while the killing continues, while tens of thousands of people are being barricaded into concentration camps, while more than 200,000 face starvation, and a genocide waits to happen, there is dead silence from this great country.It’s a colossal humanitarian tragedy. The world must step in. Now. Before it’s too late.
Sunday, April 05, 2009

அயன் - தமிழ் சினிமா வணிகமாக்கலின் மைல் கல்

- செல்லமுத்து குப்புசாமி


இது தமிழ் சினிமாவின் watershed தருணம். அயன் படத்தை அப்படித்தான் என்னால் நோக்க முடிகிறது. முக்கியமான படம் என்று சொல்லும் போது சாரு நிவேதிதா வகையறாக்கள் பூத கண்ணாடி வைத்துத் தேடும் பின் நவீனத்துவத்தின் கூறுகளை உள்ளடக்கிய படம் என்ற முடிவுக்கு யாரும் வந்து விடக் கூடாது. எப்படியும் உயிர்மையில் சாருவின் 'அயன்' விமர்சனம் வரும்.

(கல்யாணத்துக்கு முன்னாலான அல்லது கல்யாணத்துக்கு அப்பாலான பாலுறவு தவிர்த்த பின் நவீனத்துவக் கூறுகள் நான் படிக்கும் சினிமா விமர்சனங்களில் எனக்கு இன்னும் பிடிபடவில்லை என்பது வேறு விஷயம்)

தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படம் என்று சொல்வதற்குக் காரணம் இது சன் பிக்சர்ஸ் வெளியீடாக வந்திருப்பது தவிர வேறொன்றுமில்லை. கடந்த ஓராண்டு காலத்தில் சன் நிறுவனம் வெளிட்ட படங்களைக் கூர்ந்து அவதானித்தால் அதன் வலிமை கூடி வருவதை உணர முடிகிறது. காதலில் விழுந்தேன் என்ற சொத்தைப் படம் தொடங்கி திண்டுக்கல் சாரதி, ஒரு ஜீவா படம், சுந்தர்.சி படங்கள், தனுஷ் நடித்த படிக்காதவன் என தனது எல்லையை விரிவாக்கி வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு மட்டுமல்லாமல் தமிழ் சினிமா உலகத்துக்கே ஒரு மைல் கல்லாக விளங்கப் போகிறது அயன்.

சின்ன பட்ஜெட் படங்களை எடுத்து அவற்றை வெளியிடுவது என்பது வேறு. பாரம்பரியம் மிக்க ஏ.வி.எம் போன்ற நிறுவனம், சூர்யா மாதிரியான நட்சத்திர ஹீரோவை வைத்து பெரிய பெட்ஜெட்டில் எடுத்த படத்தை மிகப் பெரிய அளவில் மார்க்கெடிங் செய்து வெளியிடுவது வேறு. அதனால் முக்கியத்துவம் பெறுகிறது அயன்.

படம் எப்படி இருந்தாலும் அதை சந்தைப்படுத்தி ரசிகர்களிடம் கொண்டு செல்வதில் சன் டிவி என்ற பிரம்மாண்டமான மீடியா கம்பெனியின் தயவு அல்லது கூட்டணி இலலாமல் அந்தப் படத்தை வெற்றியடையச் செய்ய முடியாது என்ற நிலை உருவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை. அப்படி உருவாகும் சூழல் ஆரோக்கியமானதா இல்லையா என்பதெல்லாம் இந்த விமர்சனத்தின் வரம்புக்கு அப்பாற்பட்டது.

எனினும், ஆனானப்பட்ட ஏ.வி.எம்மே மாறனை நாடியிருக்கிறது என்றால் பாருங்கள். நேற்று படிக்காதவன், இன்று அயன், நாளை எந்திரன்.

************இந்த முக்கியத்துவம் தவிர்த்து அயனில் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக ஒன்றும் இல்லை. முரட்டுக் காளை மற்றும் சகலகலா வல்லவன் மூலம் தமிழ் சினிமாவின் ரசனையை, அதன் போக்கை மாற்றியமைத்த ஏ.வி.எம் நிறுவனத்தின் மற்றுமொரு மசாலா படைப்பு.

ஹீரோ - சூர்யாவின் பெயர் தேவா - விமானத்தில் வந்து இறங்குகிறார். சக பயணி ஒருவன் மாட்டிக் கொள்கிறான். விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் சிடி என்று அவன் சொல்லும் சிடியை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட, அது புதுப் பட சிடி என்று தெரிய வருகிறது. அவனை ஆங்கிலத்தில் திட்டி விட்டு வெளியே வரும் தேவா, விமான நிலையம் கடந்ததும் சென்னை பாஷைக்கு மாறுகிறான்.

அடுத்த நாள் பட ரிலீஸ். அவனும் கடத்தி வந்திருக்கிறான். அதே சி.டி. ஹீரோவின் முதலாளி புரபு. தேவாவின் அப்பாவுக்கு ஃபிரண்டு. பிரபு கும்பலில் காது கேட்காத கருணாஸும் அடக்கம். நேராகச் சென்று - சினிமா தயாரிப்பாளர் ரேஞ்சுக்கு பூஜை போட்டு விட்டு சிடி பிரதியெடுக்க ஆரம்பிக்கிறார்கள்.

அதற்குள்ளாக போலீஸ் ரெய்டு வருகிறது. போலீஸிடம் போட்டுக் கொடுத்தது விமான நிலையத்தில் மாட்டிக் கொண்ட ஆளின் முதலாளியான ஒரு சேட்டு பையன். பிரபுவை போலீஸ் கைது செய்யும் போது, ”அவருக்கு ஒன்றும் தெரியாது. எல்லாம் என் தப்புதான் சார்” என்று சொல்லி தானாகவே வந்து ஒருவன் சரணாகிறான். அவன் பிரபுவிடம் பல முறை வேலை கேட்டு வந்தவன். தனக்காக ஜெயிலுக்குச் சென்று வருவதால் அவனை வேலைக்கு சேர்த்துக்கொள்கிறார் பிரபு.

மகள் திருமணத்திற்காக சில காலம் படங்களில் நடிப்பதைத் தள்ளிப் போட்ட பிரபு இனி நிறையப் படங்களில் தலை காட்டுவார் என்று நம்பலாம். மனிதர் இன்னும் அழகாக உள்ளார்.

பிரபு சேட்டு வீட்டுக்குப் போகிறார். “இந்தா பாரு சேட்டு. நான் உங்கிட்டத்தான் தொழில் கத்துக்கிட்டேன். உன்னை நானும் போட்டுக் கொடுத்ததில்லை. என்னை நீயும் போட்டுக் கொடுத்ததில்லை. ஆனா உன் பையன் என் கிட்ட சிடி இருக்குன்னு போலீஸ்ல போட்டுக் கொடுத்துட்டான். இது நல்லா இல்லை” என்று புகார் சொல்கிறார்.

பிரபு மற்றும் பெரிய சேட் ஆகியோர் கடைபிடித்த தொழில் தர்மம் சின்ன சேட்டிடம் இல்லை. அப்பா சேட் பையனைக் கூப்பிட்டு கண்டிக்கிறார். பையன், ”தும் காம் கரோ” என்று சொல்லி விடுகிறான் பையன்.

************

காமிரா நம்மை ஒரு ஆப்பிரிக்க தேசத்துக்கு கொண்டு செல்கிறது. அங்கே ஒரு ஆயுதப் புரட்சிக் குழுவின் தலைவன். அவனைச் சந்தித்து அங்கிருந்து பல கோடி மதிப்புள்ள வைரத்தைக் கொண்டு வர வேண்டும். அதற்காக சூர்யாவை அனுப்புகிறார் பிரபு. கூடவே ஜெயிலுக்கு போய் விட்டு வந்த அந்தப் பையன். (அவர் பெயர் தெரியவில்லை. சன் மியூசிக்கில் அவரைப் பார்த்திருக்கிறோம்) படத்தில் அவன் கொஞ்சம் சபலிஸ்ட்.

தேவா பாத்ரூமில் இருக்கும் போது ஒரு அழகான ஆப்பிரிக்க பிகர் (அ.முத்துலிங்கம் கதையில் வர்ணிக்கும் பெண்ணைப் போல கருப்பாக, செக்ஸியாக) அவனை சல்லாபிக்க, அந்த ஓசை கேட்டு வெளியே வருகிறான் ஹீரோ. அவளை அடித்துத் துரத்துகிறான். பார்த்தால் வைரமும் அவளோடு மிஸ்ஸிங்.

ஒரு மிகப் பெரிய துரத்தல் மற்றும் சண்டைக்குப் பிறகு வைரத்தைக் கைப்பற்றி சென்னையில் வந்திறங்கும் போது பிரபுவின் குறுஞ்செய்தி. “நீ கண்காணிக்கப்படுகிறாய். எச்சரிக்கை”

காலணி ஹீல்ஸில் வைரத்தை மறைத்து வைத்திருக்கிறான் ஹீரோ. அதைப் பிய்த்து ஏர்போர்ட் கக்கூஸில் போட்டு விட்டு வெளியே வருகிறான். காலணியில் வைரம் இருப்பதாகவே சுங்க அதிகாரிகளுக்கு தகவல் வந்திருக்கிறது. அதை அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்துப் போடுகிறார் கஸ்டம்ஸ் அதிகாரி பொன்வண்ணன். “வெறும் காலோடு எப்படி நான் வெளியே போவேன்?” என அவரைக் கலாய்த்து விட்டு இன்னொரு ஆபீஸரின் ஷூவோடு வெளியேறுகிறான் ஹீரோ.

கூட வந்த நண்பனிடம் கக்கூஸ் கழுவும் ஆட்கள் வைரத்தைக் கொண்டு வருவார்கள் என்று சொல்லியிருப்பான். அவனும் அப்படியே நம்பியிருப்பான். ஆனால் கழிப்பறையில் இருக்கும் போது வாட்டர் பாட்டிலில் சுயிங்கம் வைத்து ஒட்டிக் கொண்டடு வந்திருப்பான். பேக்கு மாதிரி இருக்கும் அந்த நண்பனுக்கு ஒரே ஆச்சரியம்.

வைரத்தை பிரபலமான நகைக்கடை அதிபரிடம் விற்கிறார்கள். கூடவே அவருக்காக வாங்கி வந்த வயாகராவையும் தருகிறார்கள்.

************

பிறகு அந்த சபலிஸ்ட் நண்பன் தன் வீடு என்று சொல்லி ஒரு இடத்துக்கு அழைத்துப் போகிறான். உண்மை தெரியாதா தேவாவும் அங்கே போக, அது ஒரு மாதிரியான இடமாக முடிகிறது. பிறகு உண்மையிலேயே அவனது வீட்டிற்குச் செல்லும் போது அதையும் தப்பாக நினைக்கும் தேவா அங்கே அந்த நண்பனின் தங்கையை அரைகுறை ஆடையில் காண்கிறான்.

அவளோ சுவருக்கு சுண்ணாம்பு அடித்த மாதிரி அவ்வளவு வெள்ளையாக இருக்கிறாள். இடுப்பைத் தேட வேண்டியிருக்கிறது. ”பாக்கறதுக்கு சினேகா மாதிரி இருந்துக்கிட்டு பண்றதெல்லாம் நமீதா வேலை” என்று அவள் அண்ணனே சொல்லுமளவு சீக்கிரம் காதல் பற்றிக் கொள்கிறது. அந்த லூஸுப் பய அண்ணனின் முழு ஆதரவுடன்.

************


சென்னை துறைமுகத்தில் பழுதாகி ஒரு கப்பல் நிற்கிறது. அதன் கேப்டன் பல கோடி மதிப்புள்ள தங்கத்தை ரொட்டியில் மறைத்து வைத்து கடத்த ஏற்பாடு செய்திருந்தான். இப்போது அதை கரைக்கு எடுத்து வர வேண்டிய நிலை. சூர்யாவை அனுப்பி அதை மீட்டு வருகிறார் பிரபு.

ரொட்டியைப் பிய்த்து தங்கத்தை வெளியே எடுக்கும் வேலையை பிரபு & கருணாஸ் இருவரிடமும் விட்டு விட்டு தேவாவுடன் தன் தங்கையை மாயாஜாலுக்கு டிக்கேட் எடுத்து அனுப்புகிறான் நண்பன்.

அவர்கள் ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் போது பிரபு போனில் அழைக்கிறார். தேவாவும் வருகிறான். அதைக் கண்டதும் அவனது நண்பன் தேவாவை தூர அனுப்ப முயற்சித்து, “உங்க அம்மா ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருக்காங்க. உடனடியா போ” என்கிறான்.

போலீஸ் ரெய்ட் வந்திருக்கிறது என்பதை உணர்ந்த ஹீரோ உடனடியாக பிரபுவிடம் சென்று சரக்கைக இடம் மாற்றி போலீஸ் கன்னத்தில் கரி (நிஜமாகவே) பூசுகிறான்.

தங்கள் குழுவைப் பற்றிய தகவல் எப்படி கசிகிறது என்று குழம்பிக் கொண்டிருந்த பிரபு (தாஸ்) & சூர்யா (தேவா) இருவருக்கும் இப்போது உண்மையான துரோகி யாரென்று தெரிகிறது.

இதற்காகவா தங்கச்சியைக் கூட்டிக் கொடுத்தாய் என்று திட்டு விட்டு நண்பனைக் காறி உமிழ்கிறான் தேவா.

இடைவேளை (இப்போதெல்லாம் இதைக் கூட ஆங்கிலத்திலேதான் போடுகிறார்கள்)

************

போதைப் பொருள் கடத்த வேண்டும் என்று சொல்லி இரு ஆப்பிரிக்கர்கள் பிரபுவை நாடி வருகிறார்கள். எத்தனை கோடி கொடுத்தாலும் சில காரியங்களைச் செய்ய மாட்டேன் என்று கூறும் பிரபு, அதில் இதுவும் ஒன்று எனச் சொல்லி மறுத்து விடுகிறார். அவரது தொழில் தர்மம் அப்படி. பெரிய சேட்டும் கூட அப்படியே. ஆனால் சின்ன சேட்டு, அதாவது வில்லன், அப்படியல்ல.

போதைப் பொருள் விவகாரத்தில் அவன் கடுப்பாகி அப்பா சேட்டையே மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டுக் கொல்கிறான்.

போதை மாத்திரையை பொட்டலம் கட்டி வயிற்றில் விழுங்குக வைத்து ஐந்தாறு பேரை மலேசியாவுக்கோ, சிங்கப்பூருக்கோ அனுப்புகிறான். அங்கே சென்றதும் இனிக்மா கொடுத்து வரவழைத்து விடுவார்கள். போய்ச் சேரும் வரை அன்னம், தண்ணி எதுவும் கூடாது.

அந்த ஆசாமிகள் செல்லும் அதே விமானத்தில் தேவாவும் போகிறான். அந்த ஐந்தாறு பேரில் அவன் துரோகியாக மாறிய முன்னாள் நண்பனும் அடக்கம். அவன் நண்பனும் வயிற்றில் விழுங்கியிருக்கிறான். துரதிர்ஷ்டவசமாக வயிற்றுக்குள்ள் அந்தப் பொட்டலம் ஓட்டையாகி விட, உயிர் ஊசலாடுகிறது. மலேசியாவில் அவனைக் காப்பாற்ற விழைகிறான் ஹீரோ. சட்டச் சிக்கல் வந்து விடுமென்று டாக்டர் மறுத்து விடுகிறார். அவனோ உயிருக்குப் போராடுகிறான்.

கமலேஷ் என்ற பெயர் கொண்ட வில்லன் சின்ன சேட்டின் ஆட்கள் அவனை ஹீரோவிடமிருந்து கடத்திச் சென்று வயிற்றைக் கிழித்து போதை மருந்தையெல்லாம் எடுத்து விடுகிறார்கள். அவன் இறக்கும் தருவாயில் தேவா அதைக் கண்டு அவர்களை அடித்து விரட்டுகிறான். நண்பனின் இறுதி ஆசைக்கு இணங்க அவனது உடலை அந்த இடத்திலேயே எரித்து விடுகிறான்.

அவன் இந்தியா வந்ததும், துரோகியாக மாறிய நண்பனின் தங்கையான முன்னாள் காதலி நாயகனை போலீஸில் மாட்டுவிக்கிறாள். பிறகு அண்ணனின் மொபைல் கேமராவில் பதிவாகியிருப்பதைக் கண்டு தெளிகிறாள்.

************

ஹீரோ மீண்டும் சிங்கப்பூர் போகிறான். அப்போது விமான நிலையத்தில் ஒரு பெண் தன் மாமியாருக்கு மாத்திரை தருவதாகச் சொல்லி போதை மருந்து கேப்ஷூலை அவனிடம் அளிக்கிறாள். அது மருந்தல்ல, போதை மருந்து. வில்லனின் ஆட்கள் அவன் போதை மருந்து திருடிச் செல்வதாக பொன்வண்ணனுக்கு தகவல் தருகிறார்கள்.

இந்த உத்தியை ஹீரொ யூகிக்கிறான். பல கோடி மதிப்புள்ள பொருளை வயிற்றில் கடத்திச் செல்லும் காரியத்தைத் திசை திருப்பவே தன்னை மாட்டி விட்டிருப்பதாக அவன் கெஞ்சுகிறான். அவன் சொன்னதைக் கேட்டு பொன்வண்ணன் சோதனை போட்டு பெரிய கடத்தலைக் கண்டு பிடிக்கிறார்.

பிறகு சூர்யாவும், பொன்வண்ணனும் கூட்டணி அமைத்து வில்லனின் கடத்தல் எல்லாவற்றையும் கைப்பற்றுகிறார்கள். கதையின் போக்கில் தமன்னாவுடனான காதலும், டூயட் பாடல்களும் ஓடுகின்றன. சூர்யாவின் அம்மாவைக் கொல்ல சதி நடக்கிறது. பிரபுவைக் கொன்று விடுகிறார்கள். (அந்த விபத்தில் சூர்யா மட்டும் தப்புவதன் லாஜிக் எல்லாம் கேட்கக் கூடாது)

பிரபு செத்துப் போனதும் தனக்கு வர வேண்டிய வைரத்தின் கதி என்னவென்று நகைக்கடை அதிபர் கேட்கிறார். உங்கள் சண்டையின் என்னை விட்டு விடாதீர்கள் எனப் புலம்புகிறார்.

அதற்காக மறுபடியும் ஆப்பிரிக்கா போகிறான் தேவா. அவனுக்கு முன்பாகவே பிரபுவிடம் திருடிய துருப்புச் சீட்டை எடுத்துச் சென்ற வில்லன் வைரத்தை அபகரித்துத் திரும்பும் போது, அவனை அடித்து மலை உச்சியில் தொங்க விட்டுத் திரும்பும் ஹீரோவை ஏர்போட்டில் மறுபடியும் பொன்வண்ணன் மடக்குகிறார்.

ஜட்டி தவிர எல்லாவற்றையும் கழட்டித் தேடினாலும் ஒன்றும் கிடைக்கவில்லை.

“உங்களுக்கு யாரோ ராங் இன்ஃபர்மேஷன் கொடுத்திருக்காங்க சார்”

”ராங் இன்ஃபர்மேஷன் கொடுத்தது யாருன்னு பாக்கறியா?”

அது சூர்யாவின் அம்மா.

திருந்தி விடுகிறான் ஹீரோ. தலை விக்கைக் கழட்ட அதனுள் வைரக் கிரீடம். அதை நேர்மையாக ஒப்படைக்கும் போது, அவனுக்கு தண்டனை கிடைக்கவில்லை.

மாறாக கஸ்டம்ஸ் டிபார்ட்மென்டில் வேலை.

முன்பு ஷூவைக் கழட்டிய போது கஸ்டம்ஸ் அதிகாரியின் ஷூவைப் போட்டுக்கொண்டு வெளியேறிய ஹீரோ இப்போது ஜட்டியோடு நிற்கிறான். அப்போது அந்தப் பக்கமாக வரும் அதிகாரியின் யூனிஃபார்மைக் கழட்டி அவனுக்குப் போட்டு அனுப்புகிறார் பொன்வண்ணன்.

சுபம்.

************
தமிழ் சினிமாவின் மைல் கல் என்றெல்லாம் சொல்ல முடியாத அயன், சினிமா வெளியீட்டு முறையில் ஒரு மாற்றத்திற்கான முக்கியப் படி என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டும். அந்த வகையில் இது இன்னுமொரு சகலகலா வல்லவன்.
ரசிக்கும் படி இருக்கிறது. சினிமா என்கிற பிசினஸில் இது ஒரு வெற்றிப் படமாக அமையும். போகிற போக்கில் குப்பை என்றெல்லாம் சொல்லக் கூடாது.

ஆறுதல் :
நல்ல வேளையாக கதாநாயகியைக் கடத்திச் சென்று மிரட்டும் வழக்கமான உத்தியை வில்லன் செய்யவில்லை.

பிறகு இன்னொரு விஷயம். அகராதியில் பார்த்தேன். அயன் என்றால் பிரம்மன் என்று பொருளாம்.

எதற்காக இந்தப் பெயர்? புரியவில்லை!