Thursday, April 02, 2009

ஐ.டி.ஊழியர்களின் நடப்பு நிலை!

- செல்லமுத்து குப்புசாமி

நிலையின்மையின் அமைதியின்மை என்ற தலைப்பில் மார்ச்-23-2009 உயிரோசைக்கு எழுதியது.
--
பையன் சென்னையில் ஒரு மிகப் பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியின் ஊழியர், பெண் இன்னொரு கம்பெனியில். கல்யாணம் திருச்சியில் ஏற்பாடு செய்யப்படுகிறது. இருவருக்குமாகச் சேர்ந்து சென்னையில் ஏராளமான நண்பர்கள் உண்டு. அவர்கள் எல்லோரும் திருச்சிக்குச் செல்ல இயலாது என்பதால் சென்னையில் ஏதாவது ரிசப்ஷன் உண்டா என்ற கேள்விக்கு, "எக்கனாமிக் ரிசஷென்" என்று அழைப்பிதழோடு பதில் சொல்கிறார்கள் பையனும், பெண்ணும்.

"'அலிபாபாவும், நாற்பது திருடர்களும்' கதையை இப்போது படமாக்கினால் என்ன தலைப்பு வைப்பார்கள் தெரியுமா?" எனக் கேட்டு விட்டு 'அலிபாபாவும் 20 திருடர்களும்' என்று மின்னஞ்சல் ஜோக்குகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள். கேட்டால் 'செலவுக் குறைப்பு' எனப்படும் cost cutting என்ற மேலாண்மை மொழி பேசுகிறார்கள். அந்த அளவுக்கு செலவுகளைக் கட்டுப்படுத்துவதில் சிரத்தை காட்டுகின்றன மென்பொருள் நிறுவனங்கள்.

டாய்லெட் பேப்பர் முதல், தேநீர்க் கோப்பைகள் வரை எல்லாமே குறைந்து வருவதைக் கண் கூடாகக் காண முடிகிறது. சம்பளக் குறைப்பும், ஆட்குறைப்பும் இன்றைக்கு எல்லா கம்பெனிகளிலும் அடிபடும் சொற்கள். இப்படியே போனால் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் கூடக் கொடுக்காமல், 'நீங்களே சுயமாக கணிப்பொறி எடுத்து வந்து பணியாற்றுமாறு ஊக்குவிக்கிறோம்' என்று சொன்னாலும் சொல்லுவார்கள் போலும்.

ஆள் கிடைக்காத காலத்தில் யாரையாவது உள்ளே இழுத்துப் போட்டு சமாளிபிகேஷன் செய்த கம்பெனிகள் இன்றைக்கு தகுதி இல்லாத ஆசாமிகளை வீட்டுக்கு அனுப்பத் தயக்கமும், கருணையும் காட்ட மறுக்கின்றன. இத்தனை காலமாக கண்காணித்து வைத்த விஷயங்கள், அதிகார வர்க்கத்தை எதிர்த்து 'எனக்கு திறமை இருக்கிறது. உனக்கு ஏன் போட வேண்டும் சலாம்?' என்று புரட்சி வசனம் பேசியவர்கள், தில்லுமுல்லு செய்து வேலைக்குச் சேர்ந்தவர்கள், முன் அனுபவமே இல்லாமல் இருப்பதாகச் சொல்லி இடம் பிடித்தவர்கள் முதலிய எல்லாச் சங்கதிகளும் தூசி தட்டப்பட்டு மறு பரிசீலனைக்கு ஆளாகின்றன.

ஆள் எடுக்கும் போது ஏனோதானோவென்று எடுத்த நிறுவனங்களில் பல இப்போது உள்ளே உள்ளவர்களுக்கெல்லாம் வித விதமான தேர்வுகள் வைக்கின்றனவாம். நோக்கம் என்னவென்று கணிக்க கம்ப சூத்திரம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. டிஸ்மிஸ் செய்யப்பட்டு பிங்க் ஸ்லிப் கொடுப்பதற்குப் பதிலாக, கட்டாய ராஜினாமாவை மனமுவந்து சமர்ப்பிக்குமாறு கட்டம் கட்டப்பட்ட ஊழியர்கள் பணிக்கப்படுவதாக அறிகிறோம்.

'சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள் மன்னிக்க' என்று திருமணத் தகவல் இணைய தளங்களில் கூடக் காண முடிவது அதிர்ச்சி தருவதாக இல்லை. குண்டூசி விக்கிறவன், புண்ணாக்கு விக்கிறவன் எல்லாம் தொழிலதிபர் ஆவதாக கவுண்டமணி ஒரு படத்தில் கலாய்ப்பார். கடந்த ஐந்தாண்டுகளில் மென்பொருள் துறையில் நுழைவது கூட அப்படித்தான் இருந்தது. டாக்டர் ஆவதென்றால் எம்.பி.பி.எஸ் படித்திருக்க வேண்டும், வக்கீல் ஆவதென்றால் B.L படித்திருக்க வேண்டும், ஆடிட்டர் ஆவதென்றால் C.A படித்திருக்க வேண்டும் - ஆனால் சாஃப்ட்வேர் துறையில் நுழைய எதுவுமே தேவையில்லை என்ற நிலை உருவானது.

"விஜயவாடாவில் ஓட்டல் வெச்சிருந்தேன் சார். பிசினஸ் டல் ஆகிருச்சு. அப்பதான் ஃபிரண்ட்டூ செப்பேசாரு. அப்படியே SAP கன்ஸ்சல்டன்ட் ஆயிட்டேன்," கூசாமல் சொல்லுகிறார்கள் நண்பர்கள். இனிமேல் அவர்களில் எத்தனை பேரால் தாக்குப் பிடிக்க முடியுமென்று தெரியவில்லை. கடந்த காலாண்டு காலத்தில் பெங்களூரில் மட்டும் நூற்றுக் கணக்கான சிறிய சாஃப்ட்வேர் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

உலகலாவிய பொருளாதாரத் தேக்க நிலை அதன் அதிர்வுகளை அனைத்துத் திசைகளிலும் ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் அதை நேரடியாக உணர முடிகிறது. கூடவே இந்திய மென்பொருள் துறையிலும். எனினும் இது முடிவின் தொடக்கம் மட்டுமே என்றுதான் சில வல்லுனர்கள் ஆரூடம் சொல்கிறார்கள். கடந்த 2008 மோசமானதாக இருந்த போதிலும் 2009 ஆம் வருடம் அதைக் காட்டிலும் நெருக்கடி நிறைந்ததாக இருக்கும் என்று வாரன் பஃபட் கணித்துள்ளார்.

தமது பணிகளை அவுட்சோர்ஸ் செய்யும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் இல்லை அல்லது கூடுதல் வரிகள் விதிக்கப்படும் என்று ஒபாமா குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். நம்மூர் நிறுவனங்கள் கவலையோடு அதை எதிர் நோக்குகின்றன. அதை விடக் கவலையோடு மென்பொருள் நிறுவனங்களின் ஊழியர்கள் காத்திருக்கிறார்கள். கம்பெனிகளுக்காவது வருமானம், ஆனால் ஊழியர்களுக்கு வேலை என்பது வாழ்க்கை.

சொகுசு வாழ்க்கைக்குப் பழகி விட்ட உடலும், மனதும் அந்த செளகர்யங்களை இழக்க நேர்ந்தால் வேதனைக்கு ஆளாகின்றன. ஆடம்பரமும், படோபடமும் வியாபித்திருந்த அவர்களின் வாழ்க்கை இன்றைக்கு பயத்தாலும், பதட்டத்தாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஷேர் மார்க்கெட்டில் 100 ரூபாய் ஈட்டும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை விட பத்து ரூபாயை இழக்கும் போது உண்டாகும் வேதனை பெரியது. மிகப் பெரிய மென்பொருள் நிறுவனங்கள் பல சம்பளக் குறைப்பில் ஈடுபட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின்றன. வேலையை இழப்பதற்குப் பதில் சம்பளத்தைக் கொஞ்சம் தணித்துக் கொள்வதில் தவறில்லை தான்.

நான்கு வருடம் பணியாற்றிய நிறுவனம் வீட்டுக்கு அனுப்பிய பிறகு நான்கு மாதமாக வேலை தேடிக் களைத்து விட்டு, இனி ஊருக்குப் போய் லோன் வாங்கி பால் பண்ணை ஆரம்பிக்கும் முடிவுக்கு வந்த நபரை நான் அறிவேன். இத்தகைய 'பிளான் B' பெருவாரியான மக்களுக்கு இருப்பதில்லை. கடந்த தலைமுறையில் வேலைக்குச் சேர்ந்தால் ரிட்டையர் ஆகும் வரை ஒரே துறையில், ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் சாத்தியம் இருந்தது. இன்றும், இனி மேலும் அவ்வாறே இருக்குமா என்பது யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாத ஒன்று. சமீபத்தில் வாசிக்க நேர்ந்த ஒரு ஆய்வுக் கட்டுரை, 21 ஆம் நூற்றாண்டில் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தனக்கு பரிட்சயம் இல்லாத துறைகளில் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு சராசரியாக எட்டு முறையாவது மாற வேண்டியிருக்கும் என்று கூறுகிறது.

Competetive advantage என்று சொல்லப்படுகிற 'பிறரைக் காட்டிலும் கூடுதல் அனுகூலம்' பெற்றிருக்கும் நிலை நிரந்தரமாக யாருக்கும் வாய்க்கப் போவதில்லை என்பது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ மென்பொருள் நிறுவனங்களுக்கு நிச்சயம் பொருந்தும். உன்னத நிலையில் கருதப்படும் ஒரு துறைக்கும், பிற துறைகளுக்குமான இடைவெளி நிரந்தரமானதாக இருக்கப் போவதுமில்லை. இந்திய மென்பொருள் துறை இந்த விதிக்கு விலக்காக இருக்குமா என்பது அனைவராலும் யூகிக்கக் கூடியதே.

அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் இருந்து வேலைகள் இந்தியாவிற்கு இடம் பெயர பத்தாண்டு ஆனதென்றால், இந்தியாவிலிருந்து அதை விடக் குறைவான செலவில் வேலையை முடித்துக் கொடுக்கவல்ல தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இடம் பெயர ஐந்தாண்டுகள் ஆகுமா? சில கேள்விகளை எதிர்கொள்ளாமல் தவிர்ப்பதே நலமென்றால், இதையும் தவிர்த்து விடலாம்.

ஏட்டுக் கல்வியில் மட்டுமே தேர்ந்தவர்களாக, பணத்தின் மதிப்பு தெரியாதவர்களாக சமுதாயத்தின் ஒரு பிரிவினரை இந்தியாவில் உருவாக்கிய உலகமயமாக்கல் இன்றைக்கு அவர்களது பலவீனத்தை அம்பலப்படுத்தும் ஒரு சூழலை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அது மிகையில்லை. ஒரு தனி மனிதனின் தகுதியை நிர்ணயிப்பது அவன் ஈட்டுகிற ஊதியம் மட்டுமே என்ற நினைப்பில் இருந்தவர்கள் உள்ளூரப் பயந்து கொண்டிருக்கிறார்கள்.

வேலை பறி போனவர்கள், சம்பளம் குறைக்கப்பட்டவர் என்று நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல. மேற்கத்திய நாடுகளைப் பிடித்து ஆட்டுவிக்கும் பொருளாதாரத் தேக்கம் வேலையில் ஒட்டிக் கொண்டிருப்பவர்களையும் கலக்கமுறச் செய்துள்ளது என்பதே உண்மையான கள நிலவரம். தேவைகளையும், செலவுகளையும் குறைத்துக் கொள்ள முனைகிறார்கள். நாளை என்ன நடக்குமோ என்ற கவலை பலரையும் பீடித்திருக்கிறது.

கவலையில்லாமல் 20-25 ஆண்டுகளுக்கு மாதத் தவணை முப்பதாயிரம் கட்டுமாறு கடனில் வீடு வாங்கியவர்கள் எல்லாம் கலங்கிப் போயிருக்கிறார்கள். கார் வாங்குவதையே ஒத்திப் போடுவதற்குப் பலர் பழகியிருக்கிறார்கள். புதிய வீடுகள் விற்பனை அப்படியே உறைந்து போயிருக்கிறது. வேலை பறி போனதால் கடன் தவணையைச் செலுத்த முடியாத நபர்களின் வீடுகள் ஏலத்திற்கு வருவதை ஆங்கொன்றும் இங்கொன்றுமாகக் காண்கிறோம்.

1967 இல் காங்கிரஸ் கொடி வைக்கப்பட்ட சிவன் மலையில் இந்த ஆண்டு மண்ணை வைத்து பூஜை செய்கிறார்களாம். அங்கே என்ன பொருள் பூஜைக்கு ஆளாகிறதோ அது பலத்த நெருக்கடிக்கும் ஆளாகும் என்பது ஐதீகம். ரியல் எஸ்டேட் சரிவிற்கு சிவன் மலை ஆண்டவர் மட்டுமல்லாமல், சாஃப்ட்வேர் துறையின் மந்தமான சூழ்நிலையும் காரணம் என்பதே ஏற்றுக் கொள்ள வேண்டிய பகுத்தறிவு.

பக்கத்து வீட்டு வாலிபனோடு அழகான மனைவி ஓடி விடுவாளோ என்று தெரியாத நடுத்தர வயதுக் கணவனின் மன நிலையை ஒத்திருக்கிறது மென்பொருள் வல்லுனர் சமுதாயம். 2002-02 ஆண்டு காலத்தில் டாட்-காம் குமிழ் உடைந்ததைத் தொடர்ந்து மென்பொருள் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கும், இப்போதைய நெருக்கடிக்கும் முக்கியமான வேறுபாடு உள்ளது. அன்றைக்கு ஏறத்தாழ அத்தனை பேரும் இளைஞர்களாக, புதிதாக வேலைக்குச் சென்று சம்பாதிப்பவர்களாக இருந்தனர். அவர்களது தேவைகள் அன்றைக்கு பலமானதாக இல்லை.

இன்றைய நிலை அதனினும் மாறுபட்டது. தற்போது சாஃப்ட்வேர் துறையில் உள்ளவர்களில் குறிப்பிடத்தக்க விழுக்காட்டினர் குடும்பம், குழந்தை என்று ஆனவர்கள். வீட்டுக் கடன் தவணை உள்ளிட்ட தேவைகளில் சிக்கியுள்ளவர்கள். சொகுசான வாழ்க்கைக்குப் பழக்கப்பட்ட இவர்கள் 2002 இல் வேலை பறி போன பேச்சுலர்களைப் போல திருவல்லிக்கேணி மேன்சனில் போய்க் குடியேற முடியாது. ஆகையால் இவர்களது வாழ்க்கையும், வாழ்க்கைத் தரமும் குறிப்பிட்ட இந்தத் துறையை முழுமையாகச் சார்ந்திருப்பது முன்பை விடக் கூடுதலாக உள்ளது.

ஒன்றை அளவுக்கு அதிகமாக நம்பி, அது தவிர வேறு போக்கிடம் இல்லையென்ற நிலைக்கு ஆளானவர்களால் அந்த விஷயத்தைத் தவிர்த்து வாழ்வது சிரமம். கிட்டத்தட்ட சாத்தியமற்றது. அதன் காரணமாகவே இன்றைய உலகச் சூழலின் நெருக்கடி மென்பொருள் பணியாளர்களை மனதளவில் வெகுவாகப் பாதித்துள்ளது. 29 வயதில் ஹார்ட் அட்டாக் வந்து இறந்த கதைகள் இங்கே உலவுகின்றன. கூடுதலாகப் பணியாற்றுவதால் ஏற்படும் வேலை அழுத்தம் தவிர வேலை இல்லாமல் போகுமோ என்ற சிந்தனையால் ஏற்படப் போதும் அச்சமும் மன உளைச்சலைத் தூண்டுகிறது.

சாத்தியமான மாற்று ஏற்பாடு அல்லது பிளான்-B ஐ நடைமுறைப்படுத்துவது பலருக்கும் காலம் கடந்து சென்றுள்ளது. வேற்று வழியில்லை. அதன் காரணமாகவே நிலையான துறை எனக் கருதப்பட்ட மென்பொருள் துறையின் நிலையற்ற தன்மை அல்லது நிச்சயமற்ற எதிர்காலம் உள்வாங்க முடியாத கலக்கத்தை உண்டாக்கியுள்ளது. இரத்த அழுத்தம், இதய நோய்கள் முதலியன வெளிப்படும் காலமிது. ஏற்கனவே உடலுக்கு வேலை கொடுக்காமல் உட்கார்ந்திருக்கும் மென்பொருள் ஊழியர் சமூகம் இப்போது மன அழுத்தம் காரணமாக என்னென்ன பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடுமோ என்று அச்சமாக உள்ளது.

எப்போதுமே பிரபாசமான எதிர்காலம் மட்டுமே இருப்பதாகச் சொல்லும் NASSCOM கூட எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொண்டுள்ளது. 2010 க்குள் ஒரு கோடி பேருக்கும் மேல் நேரடியான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று கணிக்கப்படும் இலக்கில் பாதி கூட பூர்த்தியாகாது போலத் தெரிகிறது. வருடா வருடம் ஒவ்வொரு நிறுவனமும் ஆயிரக் கணக்கில் ஆளெடுக்கும் என்ற நினைப்பில் புதிது புதிதாக முளைத்திருக்கும் பொறியியல் கல்லூரிகளைப் போலன்றி அவற்றில் இருந்து வெளியேறும் மாணவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள்.

ஏற்கனவே மென்பொருள் துறையில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் அதை நம்பி ஏதாவது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணாக்கர்களூம் பிளான்-B ஒன்றைத் தயார் செய்து கொள்வது நல்லது. கூடவே மனவளக் கலையும், உடற்பயிற்சி முறைகளும்!

10 comments:

ஜி said...

அண்ணே!! லைட்டா கலக்குற மாறி இருக்கு!!

சங்கொலி said...

Very nice article about very worst economic situation in our country we are posting the same in our URL www.mdmkonline.com.

www.mdmkonline.com

Chellamuthu Kuppusamy said...

வணக்கம் ஜி. இந்திய சமூகத்தில் சமத்தன்மை நிலவ இதுவும் ஒரு காரணமாக அமையட்டும்.

சங்கொலி: URL கொடுப்பதில் பிரச்சினை ஒன்றுமில்லை. நன்றி.

சென்ஷி said...

இத்தனை விரிவான அலசல் கட்டுரை படித்து நிறைய்ய நாட்கள் ஆகிவிட்டது.

எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதுதான் எல்லோரது விருப்பமும். அது ப்ளான் -B ஆகவே இருந்தாலும் சரி. :-((

manasu said...

//1967 இல் காங்கிரஸ் கொடி வைக்கப்பட்ட சிவன் மலையில் இந்த ஆண்டு மண்ணை வைத்து பூஜை செய்கிறார்களாம். //

2008ல் பங்குச்சந்தையோ? எப்போ குப்ஸ் ஸ்டடி ஆகும்?

மங்களூர் சிவா said...

/
வருடா வருடம் ஒவ்வொரு நிறுவனமும் ஆயிரக் கணக்கில் ஆளெடுக்கும் என்ற நினைப்பில் புதிது புதிதாக முளைத்திருக்கும் பொறியியல் கல்லூரிகளைப் போலன்றி அவற்றில் இருந்து வெளியேறும் மாணவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள்.
/

சென்னையில் மட்டும் 50, 60 பொறியியல் கல்லூரிகள் இருக்கும் என நினைக்கிறேன். தமிழ்நாட்டில் மொத்தமாக இரு நூற்று சொச்சம்.

என்ன நடக்க போகிறதோ :((

மங்களூர் சிவா said...

/
"விஜயவாடாவில் ஓட்டல் வெச்சிருந்தேன் சார். பிசினஸ் டல் ஆகிருச்சு. அப்பதான் ஃபிரண்ட்டூ செப்பேசாரு. அப்படியே SAP கன்ஸ்சல்டன்ட் ஆயிட்டேன்," கூசாமல் சொல்லுகிறார்கள்
/

M.B.B.S படித்த இன்போசிஸ் சாப்ட்வேர் இன்சினியர் ஒருவரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும்

:(((

Chellamuthu Kuppusamy said...

சென்ஷி: அதுவே யாவரின் விருப்பமும்!

மனசு: எல்லா நாடுகளும் வேகவேகமாக கரன்சி நோட்டுகளை அச்சடித்து வருகின்றன. எப்ப ஸ்டடி ஆகும் என்பது குட் கொஸ்டின்..

வாங்க சிவா... இந்தியச் சமூகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியதில் பெரும்பங்கு ஐ.டி. துறைக்கு உண்டு. இந்த மந்த நிலை அந்த ஏற்றத்தாழ்வை ஓரளவாவது சரி செய்யுமா என்று பார்க்கலாம்.

பனங்காட்டான் said...

இப்படியே போனா.... ஊருக்குப் போயி தேங்காய் மண்டி, புண்ணாக்கு வியாபாரம் பண்ணி பொழைக்க வேண்டியதுதான்... என்ன ஊர்ல உள்ளவங்க கிட்ட கொஞ்சம் வீராப்ப இமேஜ மெய்ன்ட்டெய்ன் பன்ணிட்டோம்...கொஞ்ச நாளைக்கு யார்கிட்டயும் வாயக் கொடுக்காம இருக்கனும்

Chellamuthu Kuppusamy said...

பனங்காட்டான், என்னங்க கவுண்டமணி லெவலுக்கு பேசறீங்க?