Wednesday, April 15, 2009

இறுதிப் போரும், இந்திய முதலாளிகளும்!!

இந்தியப் பொருளாதாரத்தின் இருண்ட பக்கங்கள் என்ற தலைப்பில் 13-ஏப்ரல்-2009 உயிரோசைக்கு எழுதியது.
**********
- செல்லமுத்து குப்புசாமி

உயிரோசைக்கு எப்போது கட்டுரை எழுதினாலும் அது ஏதாவது ஒரு வகையில் பொருளாதாரம் அல்லது வணிகம் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்ற புரிதல் ஆசிரியரோடு உண்டு. பெரும்பாலும் அந்த நோக்கில் இருந்து விலகுவது கிடையாது. இதற்கு சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளை இயன்ற வரை தொடாமல் இருக்கலாம் என்று பொருள்.

இப்போது யோசித்துப் பார்க்கிறேன். பொருளாதாரம் என்ற விஷயம் ஏதேனும் ஒரு வகையில் அரசியல், இராணுவ அல்லது சமூகத் தளத்தில் பாதிப்பை ஏற்படுத்தாமல் விடுவதில்லை. அதே போல சமூக, அரசியல் அரங்கில் ஏற்படும் மாறுதல்கள் பொருளாதார ரீதியான விளைவுகளை உண்டாக்கத் தவறுவதும் இல்லை.

இதைச் சொல்லுவதற்கு மிக முக்கியமான காரணம் இருக்கிறது. சரியான தருணமும் இதுதான் என்று தோன்றுகிறது. இப்போது சொல்லத் தவறினால் இனி மேல் அதற்கான சந்தர்ப்பம் வாய்க்காமல் போனாலும் போகலாம். காலம் தாழ்த்திப் பேசுவதனால் எந்த நன்மையும் (என்னவோ இப்ப பேசினா மட்டும் நெனைச்சது நடக்கிற மாதிரி) உருவாகப் போவதில்லை.

சென்ற இதழில் கறுப்புப் பணம் பற்றி எழுதிய கட்டுரைக்கும், இதற்கும் தொடர்பு உண்டு. அதன் ஒரு தொடர்ச்சியாக அரசியல் உலகத்திற்கும், பிசினஸ் உலகத்திற்கும் உள்ள தொடர்பு பற்றியே இப்போது பேசுகிறோம்.
சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் ஒரு தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 2,000 முதல் 5,000 ரூபாய் வரை பிரதான அரசியல் கட்சிகள் பணம் கொடுத்ததாக செய்திகளும், குற்றச்சாட்டுகளும் உலவின. இது தமிழகத்திற்கு மட்டுமே உரித்தான சாபக்கேடல்ல. அகில இந்தியாவிலுமுள்ள அரசியல் நிலவரம் இதுவே.

பொருளாதார மந்த நிலையோடு கூடிய இன்றைய சூழலில் விலைவாசிகள் குறைகிறது என்று ஊடகங்கள் அலறுகின்றன. எனினும் ஓட்டுக்கான விலை குறைந்து விட்டதாகச் சொல்ல முடியாது. குத்து மதிப்பாக நாடாளுமன்றத் தொகுதி ஒன்றுக்குப் பத்து இலட்சம் வாக்காளர்கள் என்ற கணக்கில், ஒரு வாக்குக்குக் குறைந்தபட்சம் 1000 ரூபாய் என்ற மதிப்பில் கொடுக்க வேண்டிய பணமே 100 கோடி வருகிறது.

கட்சிகளின் பலத்திற்கு ஏற்ப, அவை ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலத்திற்கு ஏற்ப இந்தத் தொகை கூடவோ குறையவோ செய்யலாம். இது போக இதர பிரச்சாரச் செலவுகள். டாடா சுமோ, மீடியா செலவுகள். பிரியாணி, குவாட்டர் செலவுகள். இத்தியாதி... இவையெல்லாம் ஒரு தொகுதிக்கே .. என்றால் ஒட்டு மொத்த இந்தியாவையும் கணக்கில் கொண்டால் எத்தனை கோடிகள் கை மாறும்!

(ஹெலிகாப்டர் வாடகை மணிக்கு ஒன்றரை இலட்ச ரூபாய் வரையாம். ஜெய் ஹோ பாடல் உரிமையை ஒரு கோடி கொடுத்து வாங்கியிருக்கிறது காங்கிரஸ்)

பெரிய தேசியக் கட்சிகளும், மத்திய அரசியல் செல்வாக்குச் செலுத்தப் போகும் மாநிலக் கட்சிகளும் ஏராளமான பணத்தை வாரி இறைக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இன்னொரு பக்கம் இத்தனை பணத்தையும் கட்சிகள் மட்டுமே செலவு செய்வதில்லை.

பணம் வசூலிக்கப்படுகிறது. நிதி திரட்டப்படுகிறது. மிரட்டல் விடுக்கப்படுகிறது. டெய்லர் கடை முதல் இந்தியாவின் மிகப் பெரிய டெலிபோன் கம்பெனி வரை அனைத்தும் அரசியல் கட்சிக்கு நிதி அளிக்கின்றன. அப்படி நிதியளிக்கும் நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களுக்குச் சாதகமான கொள்கை முடிவுகள் அறிவிக்கப்படும். ஒப்பந்தங்கள் வழங்கப்படும். ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில் தர்மம்.

தேர்தல் நிதிக்கு அப்படி அள்ளிக் கொடுக்கும் பணத்திற்கு வெளிப்படையான கணக்கு இல்லை. ஒபாமா வெற்றி பெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் ஒட்டு மொத்தமாக ஒரு பில்லியன் டாலர் திரட்டப்பட்டதை சாதனை என்று சொல்கிறார்கள். ஒரு பில்லியன் டாலர் வெறும் 5000 கோடி ரூபாய். நம் ஊரில் அதைக் காட்டிலும் கூடுதலான தொகை புரள்கிறது.

மாநிலக் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பதவிக்கான உட்கட்சித் தேர்தலுக்கு மட்டுமே ஒரு நபர் 80 இலட்ச ரூபாய் செலவு செய்த கதையை நான் அறிவேன். ஆனால் மக்களவைத் தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 25 இலட்சம் வரை மட்டுமே செலவு செய்யலாம் என்கிறது தேர்தல் ஆணையம். சிரிப்பது ஆரோக்கியத்துக்கு நல்லதாம்.

மற்றவையெல்லாம் கணக்கில் வராமல் வாரி இறைக்கும் பணம். அப்படி வாரி இறைப்பதற்குத்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் தொகையை முதலீடு செய்கின்றன.

(அரசியலில் ஓட்டுப் போட்ட மக்கள் கோமாளி ஆவது போல அரசியல்வாதிகளுக்குப் பணம் கொடுக்கும் தொழிலதிபர்கள் நடத்தும் நிறுவனங்களில் பணம் போட்டிருக்கும் சிறு பங்குதாரர்களும் கோமாளி ஆகிறார்கள். அது விவாதத்தைத் திசை திருப்பும் செய்தி என்பதால் விட்டுவிடுவோம்)

அப்படி முதலீடு செய்யும் நிறுவனங்கள் தாங்கள் பணம் கட்டிய அரசியல் குதிரை பந்தயத்தில் வென்றதும் தமது வியாபார நலனுக்கு ஏற்ப அரசாங்கத்தின் கொள்கைகளை மாற்றியமைக்குமாறு வலியுறுத்துகின்றன.
உலகத்தின் எங்காவது ஒரு மூலையில் அமெரிக்கா போரை நடத்திக்கொண்டே இருப்பதற்கும், அந்த நாட்டின் ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்கள் அரசியலில் கொண்டிருக்கும் செல்வாக்குக்கும் நேரடியான தொடர்பு உண்டு.

இலங்கையில் நடக்கும் இறுதிப் போரையும் இந்தக் கண்ணோட்டத்தில் அணுக வேண்டியிருக்கிறது. உலக மகா கொலைகாரனாக ராஜபக்சேவை நாம் நினைத்துக் கொண்டிருந்தாலும், உண்மையில் போர் என்ற பெயரில் நடக்கும் நியாயப்படுத்த முடியாத கொலைகளை முன்னின்று நடத்துவது இந்தியாவே என்று பலமாகச் சந்தேகிக்காமல் இருக்க முடியவில்லை.

நிறைய பேசியாகிவிட்டது. பாதுகாப்புக் காரணங்களுக்காக திருகோணமலைத் துறைமுகம் உலக வரைபடத்தில் மிக முக்கியமான கவனத்தைப் பெறுவதைப் பற்றியும் பேசியாகிவிட்டது. இலங்கைக்கு சீனாவும், பாகிஸ்தானும் ஆயுதம் கொடுப்பதால் இந்தியாவும் உதவியாக வேண்டிய கட்டாயம் பற்றி நிறைய பேசியாகிவிட்டது. கலைஞர் புண்ணியத்தில் சகோதரச் சண்டை பற்றியும் அறிந்து கொண்டோம்.

ஆனால் போர் நிற்காமல் நடப்பதற்கு அது மட்டுமே காரணமாக இருக்க முடியாது. சிறீலங்காவின் ‘இறையாண்மையை’ பேணுவதற்கு இராஜபக்சே வேண்டுமானால் போரை மூர்க்கமாக நடத்துவதாகக் கருதலாம். தன் கணவரைக் கொன்ற இயக்கத்தை அழிக்கும் முயற்சியில் எத்தனை பேர் செத்தாலும் பரவாயில்லை என்ற இரும்பு இதயம் சோனியாவுக்கு இருப்பதால் போரை நடத்திக் கொண்டிருப்பதாகக் கருதலாம்.

அதே நேரம், அவரது தனிப்பட்ட வன்மம் மட்டுமே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை நிர்மாணிக்கிறதா? கருணாநிதியின் கொள்கையை, மன்மோகனின் கொள்கையை, பிரணாப் முகர்ஜியின் கொள்கையைக் கட்டமைக்கிறதா? அல்லது சோனியாவின் கொள்கையே இவர்களது கொள்கையா? அல்லது தமிழீழம் பிறந்தால் இந்தியாவுக்கு அச்சுறுத்தலா?
நிச்சயமாக இல்லை. போரில் தனி நபர் பழி வாங்கல் மட்டுமே பிரதான காரணியாக இல்லை. அதையும் கடந்த பொருளாதார நலன்கள் உள்ளன.

இடிபாடுகளில் சிக்கிய ஈராக்கை மறு கட்டுமானம் செய்யும் ஒப்பந்தம் அமெரிக்க நிறுவனங்கள் சிலவற்றுக்கு வழங்கப்பட்டதில் என்ன வணிக நலன் இருந்ததோ அதே வணிக நலன்தான் இங்கேயும்.

இயற்கை எழில் கொஞ்சும் இலங்கைத் தீவில் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்த ஏகாதிபத்திய அரசுகள் முயல்வதைக் காட்டிலும் கூடுதலாக கார்ப்பரேட் நிறுவனங்கள் முயல்கின்றன. அப்படி முயல்வதற்கு அரை நூற்றாண்டுக்கு மேலாக நடைபெறும் தமிழரின் உரிமைப் போராட்டம் ஒரு முட்டுக்கட்டையாகவே இருந்து வந்திருக்கிறது. எனவே அந்தப் போராட்டத்தை மட்டுமல்ல, இனி மேல் அடுத்த தலைமுறை தலையெடுக்காமல் இருப்பதற்கும் என்ன வேண்டுமானாலும் செய்ய அவை ஆயத்தமாக உள்ளன.

மூணாற்றில் தேயிலைத் தோட்டங்களைத் தொழிலாளர்களுக்குத் திருப்பிக் கொடுப்பதாகவும், பயிரிடுவதில் இருந்து முற்றிலுமாக விலகி மார்க்கெட்டிங் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாகவும் சொல்லும் டாடா நிறுவனம் கண்டி மலையகத்தில் மட்டும் கூடுதல் அக்கறை கொள்வதன் நோக்கம் புரியாமல் இல்லை.

"the operations of Tata Tea and its subsidiaries focus on branded product offerings in tea but with a significant presence in plantation activity in India and Sri Lanka" (www.tatatea.com/comp_profile.htm)

இலங்கையின் மீதான அக்கறை டாடாவுக்கே இந்த அளவுக்கு என்றால் அம்பானி வகையறாக்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. தொலைத் தொடர்பு, பெட்ரோலியம், கட்டுமானம், சுற்றுலா எனப் பல்வேறு துறைகளிலும் காலூன்றி விடுவது அவற்றின் வருங்கால முன்னேற்றத்திற்கான உத்திகளில் முக்கியமானதாக இருக்கிறது.
யார் கண்டது, விடுதலைப் புலிகளை முற்றிலுமாக ஒழித்துக் கட்டிய பிறகு திருகோணமலைத் துறைமுகத்தின் கட்டுமான ஒப்பந்தம் டி.ஆர்.பாலுவுக்கே கூட கிடைக்கலாம்.

இலங்கை இனப் பிரச்சினைக்கு போர் தீர்வாகாது, அமைதியான முறையில் பேசித் தீர்வு காண வேண்டும் என்றுதான் இந்தியா வலியுறுத்துகிறது. ஆனால் போரை யார் நடத்துகிறார்களோ அவர்கள்தானே நிறுத்த வேண்டும்?

கடந்த ஒரு வாரத்தில் மேற்கத்திய நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் போர் நிறுத்தம் கோரித் தீர்க்கமாகப் போராடி வருகிறார்கள். அதைப் பற்றிய செய்திகள் இங்கே முழுமையாக இருட்டடிப்பு செய்யப்படும் அயோக்கியத்தனம் நடக்கிறது. அந்த செய்திக்குப் பதிலாக, சோனியா காந்தியின் உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து என்ற செய்தி வெளிவருகிறது. இது திட்டமிட்ட திசை திருப்பல்.

புலிகள் மீது விமர்சனங்களும், வெறுப்புகளும் இருக்கட்டும். அதைக் காட்ட இதுவா தருணம். பேச்சுவார்த்தை என்ற ஒரு காரியத்துக்கு இலங்கை அரசு இறங்கி வந்த போதெல்லாம் புலிகள் (அல்லது 1985 திம்பு பேச்சுவார்த்தையில் அனைத்து போராளிக் குழுக்களும்) பலம் பொருந்தியவர்களாக இருந்தனர் என்பதே வரலாற்று உண்மை.

அப்படி இருக்கும் போது புலிகள் முற்றிலுமாக ஒழித்துக்கட்டப்பட்ட பிறகு காணும் தீர்வு எத்தகையதாக இருக்கும் என்பது கற்பனைக்கு எட்டாத ஒன்றாக இருக்கிறது.

இந்தியா சொல்லும் தீர்வு தமிழ் நாட்டைப் போன்ற ஒரு மாநிலத் தீர்வா? அல்லது பாண்டிச்சேரி போன்ற யூனியன் பிரதேசம் பெற்றிருக்கும் அளவு அதிகாரம் பொருந்திய ஒரு கட்டமைப்பா?

1985 முதல் (தமிழர் கை ஓங்கியிருந்த போது) நடந்த பேச்சுவார்த்தைகளின் போது இந்தியாவைப் போன்ற கூட்டாட்சித் தீர்வுக்கு இலங்கை அரசை இந்தியா சம்மதிக்க வைக்க முடியாத போது, புலிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட பிறகு மட்டும் அதைச் செய்ய முயலுமா? கொத்துக் கொத்தாக குழந்தைகள் சாகும் போரை நிறுத்துவதையே உத்திரவாதப்படுத்த முடியாத நீங்கள் பேச்சுவார்த்தை மூலம் மட்டும் தீர்வு காணப்படும் என்று உத்திரவாதம் கொடுப்பீர்கள் என்று நம்பவா?

ராஜபக்சேவே நினைத்தாலும் கூட போரை நிறுத்த முடியாது. ‘தீவிரவாதம்’ ஒழிக்கப்படும் வரை, பிசினஸ் செய்வதற்கு உகந்த சூழல் உருவானதாக பெருமுதலாளிகள் நம்பும் வரை இது தொடரும் – நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ.

இனி மேல் போர் நிறுத்தம் கோரிப் போராடுவோர் பெருமுதலாளிகளை நோக்கியும் குரல் எழுப்பலாம். ஆனால் அந்தக் குரல் உங்களுக்கேகூடக் கேட்காமல் போகலாம்.

8 comments:

vanathy said...

From what you are saying, selling the vote to the highest bidder has become a norm in Indian elections.
Democracy stinks in the'world's largest democratic country'.
The first 5 % of the indian people- the ruling elite and the rich are not going to do anything to change this.
The bottom 70% of the indian people- the poor and the peasants are unable to do anything to change this.
What about the rest of the 25% of indians --the middle class indians -the educated classes and the media
Are they going to do anything to change this?
-vanathy

ராஜ நடராஜன் said...

நல்லதோர் பதிவு.மீண்டும் பார்வையிடுகிறேன் வினை,எதிர்வினைக்கு ஏதாவது கிட்டுமா என்று.

ராஜ நடராஜன் said...

//சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் ஒரு தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 2,000 முதல் 5,000 ரூபாய் வரை பிரதான அரசியல் கட்சிகள் பணம் கொடுத்ததாக செய்திகளும், குற்றச்சாட்டுகளும் உலவின. இது தமிழகத்திற்கு மட்டுமே உரித்தான சாபக்கேடல்ல. அகில இந்தியாவிலுமுள்ள அரசியல் நிலவரம் இதுவே.//

பக்கத்து மாநிலத்தவனை காசு கொடுக்காதே,வாங்காதேன்னு நம்மால் சொல்ல முடியாதுங்க.ஆனா நம் மாநிலத்தில் குரல் எழுப்ப முடியும்.

ராஜ நடராஜன் said...

//(ஹெலிகாப்டர் வாடகை மணிக்கு ஒன்றரை இலட்ச ரூபாய் வரையாம். ஜெய் ஹோ பாடல் உரிமையை ஒரு கோடி கொடுத்து வாங்கியிருக்கிறது காங்கிரஸ்)//

ஹெலிகாப்டர் வாடகை depriciation கணக்கிலே சேர்த்த வேண்டியது.ஆனால் ஜெய் ஹோ நீண்ட நாள் சேமிப்பு வகையில் சேர்க்க வேண்டிய Commodity.

ராஜ நடராஜன் said...

//இயற்கை எழில் கொஞ்சும் இலங்கைத் தீவில் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்த ஏகாதிபத்திய அரசுகள் முயல்வதைக் காட்டிலும் கூடுதலாக கார்ப்பரேட் நிறுவனங்கள் முயல்கின்றன. அப்படி முயல்வதற்கு அரை நூற்றாண்டுக்கு மேலாக நடைபெறும் தமிழரின் உரிமைப் போராட்டம் ஒரு முட்டுக்கட்டையாகவே இருந்து வந்திருக்கிறது. எனவே அந்தப் போராட்டத்தை மட்டுமல்ல, இனி மேல் அடுத்த தலைமுறை தலையெடுக்காமல் இருப்பதற்கும் என்ன வேண்டுமானாலும் செய்ய அவை ஆயத்தமாக உள்ளன.//

கார்பரேட் எல்லாம் அமெரிக்க,ரஷ்ய பனிப் போருக்கு பின் பிறந்த குழந்தைகள்.என்ன விலை கொடுத்தாவது தமிழர்களின் உரிமைப் போரை அழித்தே தீர்வது என்ற இலங்கை அரசே இதில் பிரதானம்.

ராஜ நடராஜன் said...

//மூணாற்றில் தேயிலைத் தோட்டங்களைத் தொழிலாளர்களுக்குத் திருப்பிக் கொடுப்பதாகவும், பயிரிடுவதில் இருந்து முற்றிலுமாக விலகி மார்க்கெட்டிங் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாகவும் சொல்லும் டாடா நிறுவனம் கண்டி மலையகத்தில் மட்டும் கூடுதல் அக்கறை கொள்வதன் நோக்கம் புரியாமல் இல்லை.//

மூணாறு தேயிலைத் தோட்ட மக்கள் வாழ்க்கை பற்றியெல்லாம் தெரிந்து கொண்டுதான் இதையெல்லாம் சொல்கிறீர்களா?எல்லாருமே அன்னாடங் காய்ச்சிகள்.ஒருவேளை கேரளத்து கம்யூனிசம் இன்னும் உரிமைகளை மட்டும் தேயிலைத் தோட்ட முதலாளிகளிடம் கேட்கலாம்.

ராஜ நடராஜன் said...

//கொத்துக் கொத்தாக குழந்தைகள் சாகும் போரை நிறுத்துவதையே உத்திரவாதப்படுத்த முடியாத நீங்கள் பேச்சுவார்த்தை மூலம் மட்டும் தீர்வு காணப்படும் என்று உத்திரவாதம் கொடுப்பீர்கள் என்று நம்பவா?//

வரும் காலங்களில் யாருக்குமே விடை தெரியாத கேள்வி இது.

Chellamuthu Kuppusamy said...

ராஜ நடராஜன்: வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.

மூணாறு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றி எனக்கு அதிகமாகத் தெரியாது. எனினும் அங்கே தோட்டங்களை டாடா அவர்களுக்கே கொடுப்பதாக அறிகிறோம்.

நீங்கள் சொன்ன மற்று கருத்துக்களுக்கு ஆமேன்..

Vanathy: True! Everything has got a price - votes are no exception.!