Wednesday, April 08, 2009

கறுப்புப் பணம்: ரஜினியும் அத்வானியும்

06-ஏப்ரல்-2009 உயிரோசைக்கு எழுதியது

**********
- செல்லமுத்து குப்புசாமி

நாடாளுமன்ற ஜனநாயக நாடகம் மீண்டும் ஒரு முறை அரங்கேறும் அவலம் .. மன்னிக்க.. தருணம் இது; கண்ணுக்கும், காதுக்குமான சங்கதிகள் வெகு விறுவிறுப்பாக இருக்கின்றன. எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சமில்லாத தேர்தலுக்கு முந்தையை அறிவிப்பு மற்றும் வாக்குறுதிகளில் இம்முறை வித்தியாசமான ஒன்றைக் காண முடிந்திருக்கிறது.

மிகவும் வித்தியாசமான ஒன்றுதான். சூப்பர் ஸ்டாரின் ‘சிவாஜி’ பட ரசிகராக மாறி விட்டாரோ என்று கருதும்படியான ஒரு தடாலடி அறிவிப்பை பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் அத்வானி செய்திருக்கிறார்.

மிகப் பெரிய வெற்றிப் படம் சிவாஜி. நாட்டில் உள்ள கருப்புப் பணத்தையெல்லாம் அபகரித்து, அதைக் கொண்டு ஆக்கப் பூர்வமான பணிகளை மேற்கொள்வார் ரஜினி. அதுதான் படத்தின் மையக் கருத்து. பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டு வங்கிகளின் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தையெல்லாம் இதியாவிற்கு கொண்டு வருவோம் என்கிறார் அத்வானி.

பாரதீய ஜனதா கட்சி அல்லது அத்வானி மீதான் பல விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் ஒரு பக்கம் இருந்தாலும், இத்தகைய தடாலடி அறிவிப்பு துணிச்சலான ஒன்றுதான். இதை மட்டுமே வைத்து அத்வானிஜியின் நேர்மையை அல்லது கொள்கையை நாம் நம்பத் தயாராக இல்லை என்ற போதிலும் கூட மிக முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி நம்மை சிந்திக்க வைத்திருக்கிறது அவரது வாக்குறுதி.

கணக்கில் வராத கருப்புப் பணத்தின் பெரும்பகுதி ஸ்விஸ் வங்கியில் தேங்கியிருக்கும் என்பது உலகறிந்த ரகசியம். சாகும் போது வெறும் முன்னூறு ரூபாய் மட்டுமே வைத்திருந்த காமராஜருக்கே கூட ஸ்விஸ் வங்கியில் கணக்கு இருந்ததாகச் சொன்னவர்கள் உண்டு.

ஸ்விஸ் வங்கியில் பதுக்கியிருக்கும் கருப்புப் பணம் பற்றி மேற்கொண்டு பேசுவதற்கு முன்பாக கருப்புப் பணம் பற்றிய நமது புரிதலை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. அவற்றில் முக்கியமானது சட்ட விரோதமாகச் சம்பாதித்த பணத்துக்கும், கருப்புப் பணத்துக்கும் உள்ள வித்தியாசம்.

கணக்கில் வராத பணம் எல்லாம் கருப்புப் பணம். அது சட்ட விரோதமான காரியத்தில் சம்பாதிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு உதாரணம் பாருங்கள். அரசாங்க மருத்துவமனையில் மாதம் பத்தாயிர ரூபாய் சம்பளம் – வருடம் ரூ 1,20,000 - வாங்கும் டாக்டர் மாலை நேரத்தில் தனியாக வைத்தியம் பார்க்கிறார். அதில் மாதம் ஐம்பதாயிரம் கூட சம்பாதிக்கிறார். அதுவே வருடம் ஆறு இலட்சம் ஆகிறது. ஆனால் அரசாங்கும் கொடுக்கும் 1,20,000 சம்பளத்திற்கு மட்டும் கணக்குக் காட்டி விட்டு மீதி ஆறு இலட்சத்துக்கு வரி கட்டாமல் ஏய்க்கிறார்.

ஒரு மருத்துவர் நோயாளிகளுக்கு வைத்தியம் பார்ப்பது சட்ட விரோதமான செயலல்ல. எனினும் அதில் ஈட்டும் வருமானத்திற்கு அவர் முறையான கணக்குக் காட்டி, அதற்கு சரியாக வரி கட்டாமல் விடும் போது அவர் சம்பாதிக்கும் பணம் கருப்புப் பணமாகிறது.

இன்னொரு பக்கம் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் இருக்கிறார். 500 கோடி மதிப்புள்ள பாலம் கட்டும் திட்டம் போடுகிறார்கள். பாலம் கட்டுவதற்கு ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனம் திட்ட மதிப்பீட்டில் 20 சதவீதத்தை கமிஷனாக அமைச்சருக்குத் தருகிறது, அதாவது 100 கோடி. அதில் பாதியை வைத்துக்கொண்டு - அதாவது 50 கோடியை - மீதியை முதலமைச்சருக்கு ஒதுக்கிறார் அவர். இப்படியாக ஆயிரக் கணக்கான கோடிகளை அரசியல்வாதிகள் சேர்க்கிறார்கள்.

ஆட்சி மாற்றம் நிகழும் போது வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்த வழக்கில் அந்த ‘முன்னாள்’ அமைச்சர் வீட்டுக்கு சோதனை வருகிறது. கொள்ளையடித்த பணம் எல்லாவற்றையும் வைத்துக் கொண்டிருந்தால் அதிகாரிகள் அள்ளிச் சென்று விட மாட்டார்களா? எனவே முன்னெச்சரிக்கையாக ஸ்விஸ் வங்கியின் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி அவ்வப்போது சில நூறு கோடிகளாக போட்டு வைத்து விடுவார்.

ஸ்விஸ் வங்கியில் போட்டு வைத்துள்ள பணம் இந்தியாவில் விசாரணை செய்யும் அதிகாரிகளுக்குத் தெரியாது என்பதால் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. அரசியலில் ஊழல் செய்து ஈட்டிய பணம் என்று மட்டுமில்லை, சமூக விரோதக் காரியங்களின் ஈட்டும் கருப்புப் பணமும் கூட இதே ரூட்டில் சென்று ஸ்விஸ் வங்கியில் டெபாசிட் ஆகிறது. கள்ளக் கடத்தல், போதை மருந்து விற்றல், ஆள் கடத்தி பணம் பறித்தல், கிரிக்கெட் மற்றும் அரசியல் சூதாட்டம் என இந்த நடவடிக்கைகளின் பட்டியல் நீளும். தொழிலதிபர்கள், நிழலுலக தாதாக்கள், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் எனவும் நீள்கிறது பட்டியல்.

டாக்டர் சம்பாதித்த கருப்புப் பணத்திற்கும், சமூக விரோதக் காரியத்தில் ஈட்டிய கருப்புப் பணத்திற்கும் உள்ள அடிப்படை வேறுபாடு அதை ஈட்டிய விதம் மட்டுமே. எனினும் சமூக விரோத காரியத்தில் ஈட்டும் அளவு கோடி கோடியாக அந்த டாக்டர் சம்பாதித்து விட முடியாது. மீறிப் போனால் ஐம்பது இலட்சம் மதிப்புள்ள வீட்டை இருபது இலட்ச ரூபாய்க்கு வாங்கியதாக அவர் கணக்குக் காட்டுவார்.

கருப்புப் பணம் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம் அதற்கும், கள்ளப் பணத்திற்கும் இடையேயான வேறுபாடு. கருப்புப் பணம் என்பது அரசாங்கம் அச்சடித்த கரன்சிதான். அதை அளவுக்கு மீறி சம்பாதித்து விட்டு கணக்கில் காட்டாமல் பதுக்கி வைப்பதால் கருப்புப் பணம் ஆகிறது. கள்ளப் பணம் என்பது அச்சடிக்கும் விவகாரத்தில் அரசாங்கத்திற்கு சிரமம் கொடுக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் தாமாகவே அச்சடித்துக் கொள்வது. அவ்வளவுதான்.

மறுபடியும் ஸ்விஸ் வங்கிக்கும் வருவோம். நம்மூர் அரசியல்வாதிகள் ஸ்விஸ் வங்கியில் கருப்புப் பணத்தைப் போட்டு வைப்பதற்கு முக்கியமான காரணம் அடையாளத்தை யாரும் அறிய முடியாது என்பதுதான். அவ்வளவு ரகசியமாக பாதுகாத்து, நம்பகத்தன்மையைப் பேணுவதே அவ்வங்கியின் தனிச் சிறப்பு. இரகசிய காப்பு என்பது ஸ்விஸ் அரசாங்கம் 1934 முதல் சட்டப்பூர்வமாகப் பேணி வரும் ஒரு விஷயம்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மீதான கரும்புள்ளிகளில் முக்கியமானது போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டும், அந்தப் பணத்தை ஸ்விஸ் வங்கியில் போட்டு வைத்திருப்பதாக எழுந்த சர்ச்சையுமே ஆகும். இப்போது நாம் அறிய வரும் செய்திகள் இராஜீவ் காந்தியின் ஊழலையெல்லாம் ஜுஜுபி என்று சொல்லத் தக்க வகையில் உள்ளன.

இன்னொரு பக்கம் எல்.கே.அத்வானியின் கோரிக்கை வெறும் தேர்தல் சார்ந்த ஒன்றாக நின்று விடக் கூடாது என்பதே நமது ஆசை. ஏனென்றால் ஸ்விஸ் வங்கி முன்னெப்போதும் இல்லாத வகையில் தன்னிடம் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களைப் பற்றிய தகவலைப் பகிர்ந்து கொள்ள இசைந்துள்ளது.

அதற்கு முக்கியக் காரணம் அமெரிக்க அழுத்தமே ஆகும். மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் உலக நாட்டாமை அமெரிக்கா தன் தேசத்தில் இருந்து எவ்வளவு பணம் சட்டத்திற்குப் புறம்பாக ஸ்விஸ் வங்கியில் அண்டியிருக்கிறது என்பதிலும், அதை எப்படி அமெரிக்காவிற்கே மறுபடியும் எடுத்துச் செல்வது என்பதிலும் வெகுவான அக்கறை காட்டுகிறது. ஜெர்மனியும் அப்படித்தான்.

அமெரிக்காவையும், ஜெர்மனியையும் அடுத்து இந்தியாவும் அதை வலியுறுத்த வேண்டும் என்பதே அத்வானியின் கூக்குரல். உலகப் பொருளாதார நெருக்கடி பற்றி விவாதிக்க இலண்டனின் கூடி முடிந்திருக்கிறது G-20 நாட்டுத் தலைவர்களின் மாநாடு. உலகப் பொருளாதாரத்தை ஒட்டு மொத்தமாக ஊக்குவிக்க ஒரு டிரில்லியன் டாலருக்கும் (50 இலட்சம் கோடி ரூபாய்) கூடுதலான திட்டம் ஒன்றை அவர்கள் கூட்டாக வகுத்துள்ளனர்.

இந்த மாநாட்டுக்குச் சென்ற பிரதமர் மன்மோகன் சிங் கருப்புப் பணம் பற்றிய பிரச்சினையை எழுப்பி, உலகலாவிய கருத்து ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்று அத்வானி கேட்டிருந்தார். அப்படி ஒரு காரியத்தை மன்மோகன் செய்திருந்தால் பாராட்டுக்குரியதாக இருந்திருக்கும்.

அவரைப் போலவே இமாச்சல பிரதேச முதலமைச்சர் Prem Kumar Dhumal வும் கூட இதையே வலியுறுத்தியுள்ளார்.

கருப்புப் பணம் பற்றி தான் பிரதமருக்குக் கடிதம் எழுதியதாகவும், அவரிடமிருந்து ‘ஏய்ப்பு’ (evasive) பதிலே வந்திருப்பதாகவும் அத்வானி குற்றம் சாட்டியுள்ளார்.

ஏனென்றால் கருப்புப் பணத்தைப் பொறுத்த வரை அமெரிக்காவைக் காட்டிலும், ஜெர்மனியைக் காட்டிலும் அதிகமாகப் பாதிக்கப்படுவது இந்தியாதான். உலகிலேயே கருப்புப் பணத்தைப் பதுக்குவதில் முதலிடம் இந்தியர்களுக்கே. சுமார் 75 இலட்சம் கோடி ரூபாய் வரை இந்தியாவின் பண முதலைகளின் கருப்புப் பணம் குவிந்திருப்பதாக தகவல்கள் கசிகின்றன.

இந்தப் பணம் இந்தியாவின் ஒட்டுமொத்த கடனை விட 10-12 மடங்கு அதிகம் என்பதுதான் இங்கே சுவாரசியமான தகவல். வெளிநாட்டில் குவிந்திருக்கும் இந்தப் பணம் நேரமையாக ஈட்டியதில்லை என்பதால் பெரும்பாலும் மக்களின் பணம் என்றே கருதலாம். இந்தியாவை கடனற்ற நாடாக ஆக்குவது மட்டுமல்லாமல், வருங்காலக் கடன்களையும் தவிர்க்கலாம். முன்னேறிய நாடாகவும் மாற்றி விடலாம்.

ஸ்விஸ் வங்கியில் இரகசியக் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியல், அவர்தம் கணக்குகளில் உள்ள பேலன்ஸ் ஆகிய அனைத்தும் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் வெளியிட்டாக வேண்டும். பாரதிய ஜனதா கட்சி குரல் விடும் போது காங்கிரஸ் கட்சி மட்டும் இதில் மெளனமாக நிற்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு மத்தியிலும், மாநிலங்களிலும் காங்கிரஸ் எத்தனை ஆண்டுகள் ஆண்டது என்பதும், பாஜக எத்தனை ஆண்டுகள் ஆண்டது என்பதுமே இந்த மெளனத்தை விளக்குகிறது.

அது ஒரு புறம் இருக்க, அத்வானி ஆட்சிக்கு வந்தால் மட்டும் இந்தியாவின் ஒட்டு மொத்த கருப்புப் பணம் பற்றிய தகவல் வெளியாகும் என்று நம்புவதற்கு சிரமமாக உள்ளது.

ஒரு வேளை ‘சிவாஜி’ படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டால் அது நடக்கலாம்.

5 comments:

Anonymous said...

>>>>

Anonymous said...

நல்ல பதிவு..

சத்தியமூர்த்தி said...

//சாகும் போது வெறும் முன்னூறு ரூபாய் மட்டுமே வைத்திருந்த காமராஜருக்கே கூட ஸ்விஸ் வங்கியில் கணக்கு இருந்ததாகச் சொன்னவர்கள் உண்டு.//

நரம்பில்லாத நாக்கு; அதனால், காசுக்கு கஷ்டப்பட்டு பஸ்ஸுக்கு காத்திருந்த கக்கனுக்குக் கூட ஸ்விஸ் கணக்கு இருந்ததாக கூறுவார்கள்.

என்னை பொருத்தவரை, ஒருவர் காமராஜர் போல ஆட்சி செய்தால், நாமே ஸ்விஸ் வங்கியில் கணக்கு துவக்கி மாதம் கொஞ்சம் பணம் டிபாசிட் செய்யலாம்.

malar said...

சத்தியமூர்த்தி கூறியது முற்றிலும் உண்மையே .நான் வழி மொழிகிறேன் .

malar said...

சத்தியமூர்த்தி சார் இன்னும் ஓங்கி ஒரு குட்டுங்க .