Tuesday, April 28, 2009

கலைஞரின் உண்ணாவிரத ஆயுதம் - தீர்மானித்த ஜெயலலிதா

- செல்லமுத்து குப்புசாமி

இந்தக் கட்டுரை, ‘உண்ணாவிரதம்' என்ற ஆயுதத்தை கருணாநிதி எடுக்கும் முன்பாக ஞாயிறு (26-ஏப்ரல்) அன்று எழுதியது. உண்ணாவிரதம் என்ற ஆயுதத்தை எடுக்க வைத்தவர் ஜெயலலிதாவே தவிர, போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கமல்ல.

போர் நிறுத்தம் நடக்கவுமில்லை. (அவர் ஜீஸ் குடித்து உண்ணாநோன்பை முடித்த பிறகு இலங்கை இராணுவத்தினர் கிட்டத்தட்ட 300 பொது மக்களைக் கொன்று போட்டதாகச் செய்திகள் வருகின்றன). அதையும் தாண்டி - சர்வதேச அழுத்தம் காரணமாக - ஒரு வேளை நடக்க நேர்ந்தால் அது நிச்சயமாக கலைஞரால்தான் என நம்பிக்கொண்டே இருக்க முடியாது.

(“போர் நிறுத்தும் வந்திருச்சுபா. எல்லாம் ஊட்டுக்கு போலாம்” என்று கலைஞர் அறிவித்து உண்ணாநோன்பை முடித்துக்கொண்ட பிறகு அதை ஆணித்தரமாக மறுத்திருக்கிறார் ராஜபக்சே)

இனி கட்டுரை.. ஜெயலலிதாவின் ஈழத்து இடி முழக்கம் என்ற தலைப்பில் 27-ஏப்ரல்-2009 உயிரோசைக்கு எழுதியது.

*******
சூரியன் மேற்கில் உதிக்காது என்றுதான் இத்தனை நாளும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஏப்ரல் 25, 2009 அன்று அது பொய்யாகிவிட்டது.

போர் நடந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சந்திரிகாவின் சகோதரி மாதிரியெல்லாம் பேசிய ஜெயலலிதா, "தனி ஈழம் மட்டுமே தீர்வு. நான் அதைப் பெற்றுத் தருவேன்" என்று அழுத்தம் திருத்தமாக ஈரோட்டிலே பேசி சூரியனை மேற்கில் உதிக்கச் செய்திருக்கிறார்.

இலங்கை இனப் பிரச்சினையில் தனது நிலைப்பாட்டைத் தெளிவாக கலைஞர் பேசியது கிடையாது. போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரதம், வேலை நிறுத்தம், ஊர்வலம் என எதை நடத்தினாலும் அதில் தங்கபாலுவை (அது என்னமோ தெரியலீங்க எங்க பக்கத்து வீட்டு 4 வயசுப் பாப்பா டிவியில வடிவேலுவையும், தங்கபாலுவையும் தவிர யாரைப் பாத்தாலும் சிரிக்க மாட்டேங்குது) துணைக்குச் சேர்த்துக்கொள்ள விரும்புகிறார் அவர்.

இத்தனை நாள் ஈழப் பிரச்சினையில் ஆளுக்கு ஒரு கொள்கை இருந்தது. மதிமுகவுக்கு தமிழீழ ஆதரவு, ஜெயலலிதாவுக்கு எதிர்ப்பு – ஆனால் கருணாநிதிக்கு என்ன கொள்கை என்பதே விளங்கிக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. மத்திய அரசின் கொள்கையே எனது கொள்கை என்று பேசி வந்திருக்கிறார். மத்திய அரசின் கொள்கையானது, மத்திய அரசின் கொள்கைகளுக்கு கருணாநிதி (நியாயப்படுத்தும் காரியத்தை ஆற்றும்) கொள்கை விளக்கச் செயலாளராகச் செயல்பட வேண்டும் என்பதாகவே இருக்கிறது.

போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரதம் இருப்போரைக் கைது செய்துவிட்டு அவர் மட்டும் பொது வேலை நிறுத்தம் நடத்துகிறார் தமிழக முதல்வர். அன்றைய தினம் தமிழ்த் திருநாட்டு மக்களுக்கு அலுப்புத் தட்டக் கூடாது என்பதற்காக ‘பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு’ கலைஞர் தொலைக்காட்சியில் சிறப்புப் படங்கள் போடுகிறார்.

தெளிவான நிலைப்பாடு அல்லது முடிவு ஒன்றை எடுப்பது முக்கியமில்லை. ஒத்திப்போட்டால் எல்லாப் பிரச்சினைகளும் காலப் போக்கில் மறந்து போகும் என்ற அரசியல் சாணக்கியத்தனம் கலைஞரைப் போல வேறு யாருக்கும் கை வராது.

சரியா தவறா என்பது முக்கியமில்லை. தனது conviction -இல் உறுதியாக இருப்பது ஒரு சிறந்த பண்பு. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு சாவு மணி அடித்தாலும் பரவாயில்லை என்று இந்தியைக் கட்டாயமாக்குவதில் உறுதியாக நின்ற பக்தவச்சலத்துக்கு அது இருந்தது. தமிழினத்தின் எதிரி என்ற முத்திரை தன் மீது விழுவதையும் பொருட்படுத்தாமல் ஈழ எதிர் நிலை எடுத்த ஜெயலலிதாவுக்கும் அது இருந்தது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் போராட்டத்தில் நடந்து கொண்ட விதம், மழை நீர் சேகரிப்பைக் கட்டாயமாக்கிய திறம், எல்லாமே அதற்குச் சான்று.

இன்னொரு பக்கம் மருத்துவர் ஐயா. என்னமோ இப்போதுதான் ‘இலங்கையில் போரை நடத்துவதே இந்தியாதான்’ என்பதைக் கண்டு பிடித்த மாதிரிப் பேசுகிறார். ஓரினச் சேர்க்கை பற்றி, புகை மற்றும் மதுப் பழக்கம் பற்றியெல்லாம் பேசி இந்தியாவையே அதிர வைத்த அவரது மகன் மத்திய அமைச்சரவையில் இருக்கும் வரை அது தெரியவில்லை போலும்.

மறுபடியும் ஜெயலலிதாவுக்கே வருவோம். பெரியார் பிறந்த ஈரோட்டு நகரிலே, பெரியாருக்கும் தனக்கும் கொள்கை அளவில் என்ன தொடர்பு என்பதை அறியாத அவரது பேரன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை எதிர்த்து நிற்கும் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தியை ஆதரித்துப் பேசும்போது இனித் தமிழீழம் மட்டுமே ஒரே தீர்வு என்று சொல்லியிருக்கிறார்.

"வீடியோ காட்சிகளைப் பார்த்த பிறகு தான், இலங்கைத் தமிழர்கள் அங்கே கைதிகளைப் போல், அடிமைகளைப்போல் நடத்தப்படுகிறார்கள் என்பது தெரிகிறது. இப்படி வாழ்வதை விட சாவதே மேல் என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு மோசமான நிலையில் இலங்கைத் தமிழர்கள் உள்ளனர். அந்த அளவுக்கு அவர்களை இலங்கை அரசு மிகவும் கேவலமாக, கொடூரமாக நடத்தி வருகிறது.’

தமிழர் வாழும் பகுதிகளில் இருந்து அவர்களை வெளியேற்றி விட்டு அங்கே சிங்களர்களைக் குடியமர்த்தும் (இது இலங்கையின் ‘தேசத்தந்தை’ சேனநாயகா காலம் தொட்டே நடந்து வரும் செய்கை) வேலையைச் சுட்டிக் காட்டிய ஜெயலலிதா, ‘நிவாரண முகாம்’ என்ற பெயரில் இலங்கை அரசு நடத்தும் சித்திரவதை முகாம்களை ஹிட்லரின் concentration camps உடன் ஒப்பிடுகிறார்.

இலங்கையில் உள்ள தமிழினத்தை அழிக்க, இலங்கை அரசால், தீட்டப்பட்டு இருக்கும், மிகக் கொடுமையான திட்டம் இது’.

"முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள, இலங்கைத் தமிழர்கள்,
பிச்சைக்காரர்களைப்போல், நடத்தப்படுகிறார்களே; அவர்களை, அவர்கள் இதுவரை வாழ்ந்து வந்த இடங்களுக்கே, அனுப்பி வையுங்கள்,'' என்று இலங்கை அதிபரிடம், (வாழும் கலை ரவிசங்கர்) குருஜி அவர்கள் கேட்டதற்கு, "இப்போதைக்கு அது முடியாது'' என்று அவர் தெரிவித்து இருக்கிறார். "இரண்டு மாதங்கள் கழித்தாவது, அனுப்பி வையுங்கள்'' என்று கேட்டதற்கு, "அவர்கள் வசிக்கும் இடங்களில் எல்லாம், கன்னி வெடிகள், வைக்கப்பட்டிருக்கின்றன’ என்றும், "அதை சரி செய்வதற்கு, நான்கு வருடங்கள் ஆகும்'' என்றும், "எனவே, அதற்குப் பிறகுதான், அங்கு அவர்களை அனுப்ப முடியும்'' என்றும், இலங்கை அதிபர் தெரிவித்து இருக்கிறார்.

ஆனால், அந்த இடங்களில் எல்லாம், புதிதாகக் குடி அமர்த்தப்பட்ட சிங்களர்கள், வசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இலங்கை அதிபர் சொல்வது போல், கன்னி வெடிகள் அங்கே இருந்தால், சிங்களர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா? அந்தக் கன்னி வெடிகள், இலங்கைத் தமிழர்கள் அவற்றின் மீது நடந்தால்தான் வெடிக்குமா? சிங்களர்கள் நடந்தால் வெடிக்காதா?

மேலும் தொடர்கிறார் அவர்...

இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று நாம் கேட்கிறோம். இது மட்டும் போதாது. இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்கள் சகஜ வாழ்வு வாழ வேண்டும். சிங்கள மக்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளையும் அவர்கள் பெற வேண்டும்.

இதற்கு ஒரே வழி தனி ஈழம் அமைப்பதுதான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் கூடிய புதிய மத்திய அரசு அமைந்தால், எங்கள் சொல்படி கேட்கும் மத்திய அரசு அமைந்தால், தனி ஈழம் அமைக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நான் அதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பேன். இலங்கைப் பிரச்சினைக்கு, நிரந்தரத் தீர்வு காண, தனி ஈழம் தான் ஒரே வழி. அதை நான் நிச்சயம் செய்வேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

ஒரு வழியாக ஜெயலலிதா தனது நிலைப்பாட்டை அறிவித்துவிட்டார். நான் 74 இலேயே தமிழீழம் கேட்டேன், 83 இலே எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தேன் (ஏன்னா அது முதலமைச்சர் பதவியை விட சிறுசு பாருங்க) என்று பதில் அறிக்கை விட்டு தனது தமிழினத் தலைவர் பிம்பத்தைத் தக்க வைப்பார் கருணாநிதி. (பிரேக்பாஸ்ட் முதல் லஞ்ச் வரையான இடைவெளியில் மட்டும் 'சாகும் வரை காலவரையற்ற' உண்ணாவிரதம் இருக்கும் அளவுக்கு அவர் இறங்குவார் என்பதை இதை எழுதும் போது நான் கனவிலும் யூகிக்கவே இல்லை)

ஜெயலலிதா தனது நிலைப்பாட்டை தேர்தலை முன்னிட்டு மாற்றினாரா அல்லது உண்மையிலேயே மாறிவிட்டாரா என்பது தெரியாத கேள்வி. ஆனால் இத்தனை நாளும் இலங்கையில் தமிழர்கள் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் என்றோ அல்லது அவர்களுக்கு சம உரிமை என்றுமே கிடைக்காது என்றோ அவருக்குத் தெரியாமல் போனது எப்படி? சமூக அக்கறையும், அரசியல் பொறுப்புணர்வும் அற்றவராக அவர் இருந்தாரா?

எனினும் ஜெயலலிதாவின் இந்த பகிரங்க ஆதரவு வரவேற்க வேண்டிய ஒன்று. தன் மீதான ‘தமிழினத் துரோகி’ என்ற பட்டத்தை, ஜெயலலிதா மீதான ‘தமிழின எதிரி’ என்ற பட்டத்தை நினைத்து மகிழ்ந்து சகித்து சமாளித்த கலைஞர் இனித் தனது உத்திகளை மாற்றியமைக்க வேண்டும்.

கலைஞர் இலங்கை விவகாரத்தின் தனது கொள்கையைத் தெளிவாக வெளிப்படுத்தாமல் இருந்ததற்கு முக்கியமான காரணம் அதை ஜெயலலிதா தனக்கு எதிராகப் பயன்படுத்தி விடுவாரோ என்ற பயம்தான். தமிழீழம் அமைய வேண்டும் என்று சொன்னால் தன்னை இந்தியாவின் எதிரி என்றும், பயங்கரவாதத்தின் பங்காளி என்று ஜெயலலிதா சொல்லி விடுவார் என்ற அச்சம் காரணமாக கலைஞர் இத்தனை நாளும் அரசியல் நாகரிகம் காத்திருக்க வேண்டும்.

இப்போதைக்கு கலைஞரின் உத்தி என்பது ஜெயலலிதாவின் உத்தியை முறியடிக்கும் உத்தியாக இருக்கும். அது எப்படியென்றால்....

1986 இல் ஆபரேஷன் டைகர் என்ற ஒரு நாடகம் நடந்தது. பெங்களூர் சார்க் மாநாட்டுக்கு அதிபர் ஜெயவர்த்தனா வரும் போது அவர் சொல்லும் முறையற்ற அரசியல் தீர்வை ஏற்க வேண்டும் என்ற இந்தியாவின் மிரட்டலை ஏற்காமல் போன பிரபாகரனை மிரட்டுவதற்காக நடத்திய ஆபரேஷன் அது. புலிகளின் தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் ஆயுதங்களை இந்தியா பறிமுதல் செய்தது. அதைத் திரும்பத் தர வேண்டுமென்று அவர் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார். சாதனங்கள் திரும்ப வழங்கப்பட்டன.

உங்கள் ஊரில் ஆயுதப் போராட்டம் மேற்கொள்ளும் நீங்கள் இங்கே அகிம்சைப் போராட்ட முறையைத் தேர்ந்தெடுத்தது ஏன் என்ற செய்தியாளர் கேள்விக்கு, ‘நாம் என்ன ஆயுதம் எடுக்கிறோம் என்பதை எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள்‘ என்று பதில் சொன்னார் பிரபாகரன்.

அப்படித்தான். கருணாநிதி என்ன உத்தியை மேற்கொள்ளப் போகிறார் என்பதை ‘எதிரி’ ஜெயலலிதாதான் தீர்மானிக்கிறார்.

இப்போதைக்கு எதிரி கருணாநிதிக்கு மட்டுந்தான் – தமிழினத்திற்கு அல்ல - தமிழீழம் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதை புலிகளும், ஈழத் தமிழர்களுமே நம்பாத இன்றைய சூழலில் தமிழீழம் அமைத்துத் தருவேன் என்று சொல்லி உணர்வுகளை உசுப்பி விட்டிருப்பதால்.

13 comments:

Anonymous said...

Revealing

சரவணன் said...

நல்லாத்தான் அலசி ஆராய்ந்து இருக்கீங்க.

எந்த ஒரு விசயமாயினும் காலத்தைக் கடத்துவதில் கருணாநிதி மிகவும் கெட்டிக்காரர். உடனடியாக முடிவெடுப்பது பற்றி அவர் சிந்திக்க மாட்டார்.

லக்கிலுக் said...

ஈழத்தின் இன்றைய கொடூர நிலைக்கு கருணாநிதியோ, ஜெயலலிதாவோ, சோனியாவோ, இந்தியாவையோ விட புலிகள் பிரதான காரணம்.

அதிபர் தேர்தலின் போது ரணிலை புறந்தள்ளி ராஜபக்‌ஷே வருவதற்கு புலிகளின் தேர்தல் புறக்கணிப்பே காரணமாக இருந்திருக்கிறது. ரணில் இருந்திருந்தால் நிலைமை இவ்வளவு மோசமாக போயிருக்குமா என்றும் பிரபாகரன் புத்தகம் எழுதிய நீங்கள் இப்பதிவில் அலசியிருக்கலாம். இல்லை தனியாக புதுப்பதிவு போட்டும் அலசலாம்.

Chellamuthu Kuppusamy said...

நன்றி அனானி.

//உடனடியாக முடிவெடுப்பது பற்றி அவர் சிந்திக்க மாட்டார்//
சரவணன்: அவர் சிந்திப்பார். சிந்திக்காமல் இருந்தால் இத்தனை காலம் அரசியலில் தாக்குப் பிடித்திருக்க முடியுமா? (ஆனால் ஏதும் முடிவெடுக்க மாட்டார்)

தேர்தலைப் புறக்கணித்தது மூலமாக புலிகள் பிரதான காரணமா இல்லையா என்பதைப் பற்றிய வியாக்கியானங்கள் எல்லாம் மறுப்பதற்கில்லை.

உங்களுக்கு கலைஞர் மீதிருக்கும் எல்லையற்ற பக்தி போல எனக்கு பிரபாகரன் மீதோ அல்லது வேறு எந்த இந்திய அரசியல்வாதிகள் மீதோ இல்லை.

அதே நேரம், போரை ராஜபக்சே மட்டும் நடத்துவதாக என்னை நம்ப வைக்கும் மனிதரை நீங்கள் வேண்டுமானால் என்றென்றும் தலைவராகக் கொண்டாடுங்கள்.

Anonymous said...

- இன்னொரு நாட்டு உள் விவகாரத்தில் தலையிட முடியாதெனச் சொன்ன முதல்வர் என்ன மயிருக்கு உண்ணாவிரதம் இருந்தார்?
- இவர் உண்ணாவிரதம் இருந்தா போர் நிறுத்தம் நடக்குமென்றால் இத்தனை நாளும் அதைச் செய்யாமல் என்ன பிடுங்கினார்?

இதையெல்லாம் அலசிக் காயப்போட லக்கிலுக் முன்வருவாரா கேளுங்க செல்லமுத்து.

Anonymous said...

ஈழத்தின் இன்றைய கொடூர நிலைக்கு கருணாநிதியோ, ஜெயலலிதாவோ, சோனியாவோ, இந்தியாவையோ விட புலிகள் பிரதான காரணம்.

அதிபர் தேர்தலின் போது ரணிலை புறந்தள்ளி ராஜபக்‌ஷே வருவதற்கு புலிகளின் தேர்தல் புறக்கணிப்பே காரணமாக இருந்திருக்கிறது. ரணில் இருந்திருந்தால் நிலைமை இவ்வளவு மோசமாக போயிருக்குமா என்றும் பிரபாகரன் புத்தகம் எழுதிய நீங்கள் இப்பதிவில் அலசியிருக்கலாம். இல்லை தனியாக புதுப்பதிவு போட்டும் அலசலாம்.//

அத்தேர்தலில் தமிழ்மக்கள் தேர்தலை புறக்கணித்தார்கள் என்பது உண்மைதான். தனியே சிங்கள மக்கள் பங்குபற்றிய தேர்தலில் -

சிங்கள மக்கள் மகிந்த ராஜபக்சேவை தேர்ந்தெடுத்தார்கள்.

ஏன்?

ஏனெனில் அவர்கள் ரணில் நாட்டை துண்டாடப்போவதாக நம்பினார்கள். அவ்வாறான ஒரு நிலையை சிங்கள மக்கள் விரும்பவில்லை. அதனால் ரணிலைப்புறக்கணித்தார்கள். மகிந்தவை ஏற்றுக் கொண்டார்கள்.

இருக்கட்டும்.

தமிழ்மக்களுடைய வாக்குகளை பெற்று ஆட்சி அமைத்தாலும் ரணில் - அத் தேர்தலில் தனக்கு சிங்கள மக்கள் ஏன் ஆதரவு தரவில்லை என யோசிக்காமால் இருப்பாரா..?

எதிர்காலத்தில் அவர்களின் விருப்புக்கு மாறாய் செயற்படுவது எதிர்கால அரசியலுக்கு ஆப்பு எனத் தெரியாதா?

75 சதவீத சிங்கள வாக்குகள் முக்கியமா?
25 சதவீத தமிழ்வாக்குகள் முக்கியமா?

ஒரே வித்தியாசம்
மகிந்த சீனா இந்தியா ரசியா போன்ற அக்கம்பக்கத்து களவாணிப் பயல்களோடு சேர்ந்து நிற்கிறார்.

ரணில் மேற்குலக களவாணிகளோடு சேர்ந்து நின்றிருப்பார்.

முடிவு ஒன்றாகத்தான் அதாவது இன்றைய நிலையாகத்தான் இருந்திருக்கும்.

ராஜ நடராஜன் said...

//தமிழீழம் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதை புலிகளும், ஈழத் தமிழர்களுமே நம்பாத இன்றைய சூழலில் தமிழீழம் அமைத்துத் தருவேன் என்று சொல்லி உணர்வுகளை உசுப்பி விட்டிருப்பதால். //

நல்ல அலசல் பதிவுக்கு நன்றி.அதே வேளையில் தமிழீழம் ஏன் சாத்தியமில்லை என்பதையும் விளக்கினால் நல்லது.

சமவாழ்வுக்கான உத்தரவாதத்தை இலங்கை அரசுகள் இன்று வரை தராத வேளையில் தமிழீழம் வார்த்தை மறைந்து போகும் என்றால் புலம் பெயர்ந்தோன் புலம் பெயர்ந்தவனாகவே வாழ்வேண்டிய கட்டாயம் ஏற்படும்.(நிலம் இழந்த இஸ்ரேல்காரனால் கூட ஒரு நாடு அமைக்க முடிந்தது)இப்போதே அகதி முகாம்கள் இன்னும் மூன்று வருடங்களுக்கும் மேல் நீட்டிக்கப்படும் என்கிறது இலங்கை அரசு.

பல்லாண்டுகளுக்கும் மேலான ஒரு மண்ணின் சரித்திரத்தை எப்படி மறைக்க முடியும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? இப்போதோ அல்லது வருங்காலத்திலோ ஈழத்து தமிழனுக்கு குரல்கொடுக்க இஸ்ரேல்காரனுக்கு அமெரிக்காகாரன் மாதிரி ஒரு நண்பன் மட்டுமே.(அது இந்தியாவே கூட இருக்கலாம் எதிர்கால அரசியலில்)அதற்காக உழைப்பது தமிழகமோ அல்லது புலம்பெயர்ந்த தமிழர்களின் கடமை.

Anonymous said...

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடந்த சமயத்தில் பிரியங்கா நளினியை சந்தித்திருக்கவில்லை. போரைத் தீர்மானித்தது அவளது சந்திப்பே தவிர ராஜபக்சே வென்றதல்ல. ரணில் ஆட்சி பீடம் ஏறினாலும் போர் நடந்திருக்கும்.

Chellamuthu Kuppusamy said...

ராஜ நடராஜன்:

உங்கள் தன்னம்பிக்கைக்கு மகிழ்ச்சி.

மனதில் இருந்து பேசுவது வேறு, மூளையில் இருந்து சிந்திப்பது வேறு.

ஒரு வேளை புலிகளும், பிரபாகரனும் அழிக்கப்பட்டால் அது ஆச்சரியமாக இருக்காது. அந்த இயக்கமும், மனிதனும் இனப் போராட்டத்தின் அத்தியாயங்கள் மட்டுமே. அது கடைசி அத்தியாயமாக அமைந்தால், மீண்டும் தமிழ்த் தேசியம் பேசும் தலைமுறை ஈழ மண்ணில் உருவெடுக்க 20-30 வருடமாவது ஆகும்.

அதற்கு வீரம் மட்டும் பொதாது. ராஜதந்திர நகர்வுகள் மிக அவசியம். அதற்குரிய கல்வி அவசியம். அடிப்படைக் கல்வியைத் தாண்டி அங்கே அறிவுஜீவிகள் இந்தத் தலைமுறையில் இருந்து முன்னுக்கு வந்து மக்களைத் திரட்டி வீதியில் நின்று போராட வேண்டும்.

அதற்குள்ளாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் நான்கைந்தாகப் பிரிக்கப்பட்டு கருணாவுக்கு ஒன்று, டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஒன்று, அனந்தசேகரிக்கு ஒன்று, பெருமாளுக்கு ஒன்று (எப்படியும் ரா அவரை திருப்பிக்கொண்டு போய் விடும்) etc..

இவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒன்று பட்டு ஒரு மாநிலமாக உருவாவதை விரும்ப மாட்டார்கள்... அதையே கொழும்பு ஊக்குவிக்கும்.

Anonymous said...

//பல்லாண்டுகளுக்கும் மேலான ஒரு மண்ணின் சரித்திரத்தை எப்படி மறைக்க முடியும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
//
That is what India is doing now.

உடன்பிறப்பு said...

//தமிழீழம் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதை புலிகளும், ஈழத் தமிழர்களுமே நம்பாத இன்றைய சூழலில் தமிழீழம் அமைத்துத் தருவேன் என்று சொல்லி உணர்வுகளை உசுப்பி விட்டிருப்பதால்//

அதை நம்புவதற்கும் ஒரு கூட்டம் இருக்கிறதே

Anonymous said...

லக்கிலுக்கு என்ற திமுக அல்லக்கைக்கு தன் டலைவனின் ஆட்சி பறிபோகப்போகின்றது என்ற பயம் தான் காரணம் கருணாநிதியை துரோகி இதில் எந்த சந்தேகமும் இல்லை. இவன் எல்லாம் ப்ளாக் எழுதி பிரபலமாம்

கழக கண்மணி said...

தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் உள்ளே போகணுமா? ஒழுங்கா தலைவர் கிட்ட மன்னிப்பு கேட்டுக்கோ.