Monday, May 04, 2009

இரு வேட்பாளர்கள் - ஈரோடு

- செல்லமுத்து குப்புசாமி

இன்று ஒரு ஆங்கில செய்தித்தாளில் அதை மறுபடியும் கண்டேன். தமிழகத்தில் உள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளார்களைப் பற்றிய தகவல்களைக் கொடுத்திருந்தார்கள். அதில் திருப்பூர் தொகுதி வேட்பாளர் S.K.கார்வேந்தனை “The best performing MP hails from an agriculture family" என்று போட்டிருந்தது.

இந்த நேரத்தில் சாளரப்பட்டி குப்புசாமிக் கவுண்டர் மகன் கார்வேந்தனைப் பற்றி சிறிது குறிப்பிடலாம் எனக் கருதுகிறேன். கார்வேந்தன் தாராபுரம் வட்டாரத்தில் மிகவும் பிரபலமான வக்கீல் ஆவார். என் அம்மாவின் தந்தை வழிப் பாட்டி தனது மகள் வீட்டில் போய் இருந்து கொண்டு ஜீவமனாம்ச வழக்குப் போட, அதை வாய்தா போட்டு நடத்தியவர் கார்வேந்தன். கிட்டத்தட்ட பத்தாண்டு காலம் நடந்த வழக்கு முடிவதற்குள் கிழவி மண்டையைப் போட்டது வேறு விஷயம்.

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி அணி - ஜெயலலிதா அணி என அண்ணா திமுக இரண்டாகப் பிளவுபட்ட சமயத்தில் நடந்த 1989 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக வெள்ளகோவில் தொகுதியில் கார்வேந்தன் போட்டியிட்டதாக நினைவு. அவரது முதல் அரசியல் பிரவேசம். அந்த தேர்தலில் அதிமுக(ஜெ) சார்பில் துரை.ராமசாமியே வென்றார்.

கார்வேந்தன் வக்கீல் தொழில் பிராக்டிஸ் செய்த தாராபுரம் (நகர் மற்றும் சட்டமன்றத் தொகுதி) பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டதாக இருந்தாலும், அவர் பிறந்த பகுதியும் அவர் செல்வாக்கு செலுத்தக் கூடிய சில கிராமங்களும் வெள்ளகோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டு இருந்தன. வெள்ளகோவில் தொகுதி பழனி பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டிருந்தது.

பழனியில் இருந்து இரு முறை எம்பி ஆக கார்வேந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த முறை தமிழக எம்பிமார்களில் அதிக கேள்வி கேட்டவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். 14 ஆம் மக்களவையில் ஆயுட்காலத்தில் 1175 கேள்விகளை அவர் தொடுத்து அகில இந்திய அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். அவரை விட அதிகமாக வினா எழுப்பியது இரண்டு சிவசேனை உறுப்பினர்கள். (ஐந்த ஆண்டுகளும் ஒரு கேள்வி கூடக் கேட்காத 56 பேரில் K.V.தங்கபாலுவும் ஒருவர்)

கார்வேந்தனின் இன்னொரு சாதனை விடுதலைப் புலிகளால் உயிருக்கு ஆபத்து என்று தனக்குத் தானே கடிதம் எழுதி தாராபுரம் கச்சேரி வீதியில் உள்ள தன் வீட்டுக்கு போஸ்ட் செய்தது. இது கருணாநிதி, சிதம்பரம் கூடச் செய்யத் துணியாத சாணக்கியத்தனம்.

இந்தப் பின்னணியில் தொகுதி மறுசீரமைப்பு கார்வேந்தனுக்கு வேட்டு வைத்து விட்டது. வெள்ளகோவில் சட்டமன்றத் தொகுதியின் பகுதிகள் காங்கேயம் மற்றும் தாராபுரம் தொகுதிகளோடு இணைக்கப்பட்டு விட்டன. அதே போலத்தான் பழனி நாடாளுமன்றத் தொகுதியும் காணாமல் போய் விட்டது. காங்கேயம் (முன்பு பழனி மக்களவைத் தொகுதி) மற்றும் தாராபுரம் (முன்பு பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி) இப்போது ஈரோட்டுடன் இணைக்கப்பட்டு விட்டன.

ஆகையால் கார்வேந்தன் ஈரோடு தொகுதில் போட்டியிடுவார் என்று கணிக்கப்பட்டது. அப்படி நடக்கும் பட்சத்தில் அதிமுக அணியின் சார்பில் போட்டியிடும் கணேசமூர்த்தியை (மதிமுக) அவரால் வெல்ல முடியுமா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்தது.

கணேசமூர்த்தியைப் பற்றி இங்கே குறிப்பிட வேண்டும். அவரும் பழனி தொகுதியின் முன்னாள் உறுப்பினர். கார்வேந்தன் தாராபுரம் வட்டாரத்தைச் சேர்ந்தவர். கணேசமூர்த்தி ஈரோடு பகுதியைச் சேர்ந்தவர்.

எம்ஜிஆர் காலத்தில் ஈரோடு(பெரியார்) மாவட்டம் அண்ணா திமுகவின் கோட்டையாக விளங்கியது. அப்போது திமுக மாவட்டச் செயளாலராக கட்சியைக் கட்டிக் காத்தவர் கணேசமூர்த்தி. கொலைப் பழி சுமத்தப்பட்டு கலைஞரால் வெளியேற்றப்பட்ட வைகோவுடன் சேர்ந்து வெளியேறி மதிமுக-வில் இன்னமும் தொடரும் ஒரு சில அப்பாவிகளில் ஒருவர்.

கணேசமூர்த்தி மட்டும் திமுகவில் தொடர்ந்திருந்தால் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், என்.கே.கே.பெரியசாமி, அவரது மகன் என்.கே.கே.ராஜா, வெள்ளகோவில் சாமிநாதன் (எம்.எல்.ஏ முத்தூர் சாமிநாதன் அமைச்சர் ஆன போது வெள்ளகோவில் சாமிநாதன் ஆனார். இனி வெள்ளகோவில் தொகுதி இல்லை என்று ஆன பிறகு பெயரை மாற்றிக் கொள்வாரா?) ஆகியோர் திமுகவில் பெரிய நிலைக்கு வந்திருக்க முடியாது.

வைகோவுடன் சேர்ந்து வெளியேறினாலும், பிற்பாடு பொருளாதார நிலைமையைக் கருதி கரூர் கே.சி.பழனிச்சாமி போலவோ, கோவை கண்ணப்பன் போலவோ கருணாநிதியோடு சேர்ந்து செட்டில் ஆகத் தெரியாத சோனகிரி கணேசமூர்த்தி.

அப்படிப்பட்ட கணேசமூர்த்திக்கு ஈரோடு தொகுதியைப் பெற்றுத் தருவதில் வைகோ மிகவும் குறியாக இருந்தார். தான் விருதுநகரில் போட்டியிடுவதைக் காட்டிலும் கணேசமூர்த்திக்கு ஈரோட்டைப் பெறுவது வைகோவுக்கு முக்கியமாகப் பட்டிருக்க வேண்டும். தன்னை நம்பி வந்து, இன்னமும் தன்னோடு இருக்கும் விசுவாசிக்கு அவரால் இதைத் தவிர வேறேதும் செய்ய இயலாது.

கார்வேந்தன் Vs கணேசமூர்த்தி நன்றாகத்தான் இருந்திருக்கும். ஆனால் ஈரோட்டில் பெவிக்கால் போட்டு உட்கார்ந்து அடம் பிடிக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறுத்துவிட திருப்பூருக்கு இடம் மாறி விட்டார் கார்வேந்தன். வாக்காளர்களுக்கு அறிமுகமில்லாத வேட்பாளராக அங்கே களம் இறங்குகிறார். அவர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றால் ஆச்சரியப்பட மாட்டேன்.

அதே போல கணேசமூர்த்தி வென்றால் ஆச்சரியப்ப மாட்டேன். அப்படி நடக்காமல் போனால் அது இந்த மனிதரின் பொதுவாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியாக அமைந்தாலும் அமையலாம்.

3 comments:

Nanthakumar said...

அப்துல்கலாமைப் போல கார்வேந்தனும் ஊடகங்களால் கட்டமைக்கப்பட்ட பெஸ்ட் பர்பார்மிங் புனிதப் பசு. காங்கிரஸை தமிழ் நாட்டில் இருந்து ஒழித்துக் கட்டுங்கள்.

Naresh Kumar said...

நல்ல அலசல், செல்லமுத்து!!!

இளங்கோவன் கண்டிப்பாக தோற்பார் என்றே தோன்றுகிறது!!!

☼ வெயிலான் said...

கார்வேந்தன் நீங்கள் சொல்வது போல், மிக அதிக வித்தியாசத்தில் தோற்பார்!!!