Tuesday, May 12, 2009

இன்னொரு பா.ம.க - கொங்கு நாடு மு.பே

- செல்லமுத்து குப்புசாமி

உலகம் தட்டையாகவும் இல்லை. ஒன்றுபட்டும் இல்லை. இந்தியர் அனைவரும் ஒரே இனம் என்ற கற்பிதம் நாளுக்கு நாள் மங்கிக்கொண்டே வருவதாகப் படுகிறது.

காமராஜரோ, மூப்பனாரோ இன்றைக்கு உயிரோரு இருந்திருந்தால் இலங்கைப் போரை நடத்துவதற்கு சோனியாவை அனுமதித்திருக்க மாட்டார்கள் என்று ஒரு பத்திரிக்கையாளர் சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். அந்தத் திராணி சிதம்பரம், தங்கபாலு ஆகியோருக்கு இருக்கப் போவதில்லை. ஆனால் பிரச்சினை அதுவல்ல.

பல்வேறு இன மற்றும் மொழியினரைத் தன்னகத்தே கொண்டிருக்கும் இந்தியாவைப் போன்ற ஒரு தேசத்தில் கருத்து முரண்பாடுகளை, மாற்றுச் சிந்தனைகளை உள்வாங்கிச் செயல்படும் தேசியத் தலைமை இல்லாமல் போனதே இதற்கெல்லாம் காரணம் என்று சொல்ல முடியும்.

காங்கிரஸ் பேரியக்கம் அங்கங்கே உடைந்தும், சிதைந்தும் பல்வேறு பிராந்திய மக்களின் நலன்களை, அவர்தம் பிரச்சினைகளை முன்னிறுத்திப் பேசுவதாக அமைந்தது. சரத் பவார், மூப்பனார் எல்லாம் ஒரு வகை என்றால் நெடுமாறன், தமிழருவி மணியன் போன்றோர் இன்னொரு ரகம்.

மக்கள் பிரதிநிதிகள் என்று தேர்ந்தெடுக்கபடுவோர் எந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்களோ அந்த மக்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் யோக்கியதை அற்றவர்களாக ஆக்கப்பட்டதில் (இந்திரா காலம் தொடங்கி) காங்கிரஸ் பேராயக் கட்சி மேலிடத்திற்கு முக்கியப் பொறுப்புண்டு.

சுதந்திரப் போராட்டம் உருவாக்கிய இந்திய தேசிய உணர்வின் மூலம் 'இந்திய தேசியத்தின் முதுகெலும்பு' என்ற தனது பிம்பத்தை முன்னிலைப்படுத்தும் காங்கிரஸ் எவ்வாறு அந்தப் பிம்பத்தைப் பொய்ப்பிக்கிறதோ, அதே போல ஒரு காலத்தில் ஒட்டு மொத்த தமிழகத்தின் நலனை முன்னிலைப்படுத்தி போராட்டங்களில் மூலமாக வளர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம் தனது நிஜ அடையாளத்தை இழந்து நிற்கிறது.

ஒவ்வொருவருக்கும் இருக்கிற அடையாளச் சிக்கல் நாளுக்கு நாள் மாறி வருகிறது. ஒருவனின் அடையாளம் மொழி, இனம், தேசம், சாதி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டுமெ சார்ந்திருப்பதே பெரும்பாலும் உண்மையாக இருக்கிறது. ஒரு வேளை ஒன்றுக்கு மேற்பட்ட அடையாளக் குறிகளுக்குள் தன்னை அடைத்துக்கொண்டாலும், ஏதேனும் ஒரு கட்டத்தில் அவற்றில் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைக்கு அவன் தள்ளப்படுகிறான். அவன் வாழ்கிற சூழலே அதைத் தீர்மானிக்கிறது.

தேசியக் கட்சி, மாநிலக் கட்சி மற்றும் ஜாதிக் கட்சி ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு அவன் நிர்பந்திக்கப்ப்டும் போது அவன் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்க முடியும். வன்னியர் சங்கமாக இருந்த அமைப்பு இன்று தமிழகத்தின் மூன்றாவது மிகப் பெரிய கட்சியாக உருவெடுத்திருப்பது மரத்தை வெட்டி ரோட்டில் போட்டு அவர்கள் கலகம் செய்த காலத்தில் நாமெல்லாம் நினைத்துக் கூடப் பார்த்திராத ஒன்று.

பாட்டாளி மக்கள் கட்சியைப் போலவே இன்னொரு அமைப்பு சத்தமில்லாமல் அரசியல் அவதாரம் எடுத்துள்ளது. கொங்கு வேளாளர் சமூகம் அதிகமாக வசிக்கும் கொங்கு மண்டலத்தில் களம் காண்கிறது அந்த அமைப்பு. அதன் பெயர் கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை, சுருங்கச் சொன்னால் கவுண்டர் கட்சி. சில மாதங்களுக்கு முன்பு அந்த அமைப்பு நடத்திய அரசியல் எழுச்சி மாநாட்டில் 20 இலட்சம் பேர் வரை கலந்து கொண்டதாக அறிகிறோம்.

தமிழ்நாட்டில் பிற சமூகத்தினரைப் போல கொங்கு வேளாளர் சமூகத்தினர் சமூக அடுக்கில் பிறபடுத்தப்பட்டோர் அல்லர். சுய கெளரவமும், தோரணையும், வெட்டி பந்தாவும் கொண்டவர்கள் அவர்கள். அரசியல் ரீதியாகவும் குறிப்பிடத் தகுந்த பிரதிநிதிகளைக் கொண்டவர்கள். C. சுப்பிரமணியம் (காங்கிரஸ்), சர்க்கரை மன்றாடியார் (காங்கிரஸ்), முத்துச்சாமி(அதிமுக), செங்கோட்டையன்(அதிமுக), வெள்ளகோவில் சாமிநாதன் (திமுக), பொங்கலூர் பழனிச்சாமி (திமுக), மு.கண்ணப்பன் (திமுக - மதிமுக - திமுக), சுப்புலட்சி ஜெகதீசன் (திமுக) ஆகிரோர் அமைச்சர் பொறுப்பில் இருந்த சில அரசியல் கவுண்டர்கள்.

இது போக கொங்கு மண்டலத்தின் (தனித் தொகுதிகள் நீங்கலாக) பெரும்பாலான தொகுதிகளில் எல்லாக் கட்சிகளின் வேட்பாளர்களாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாகவும் இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இருந்திருக்கிறார்கள். இப்போதும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் ஒரு சமுதாய அமைப்பாக இருந்த கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை அரசியல் களத்தில் குதித்திருக்கிறது.

நாளை நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் கீழ்க்கண்ட தொகுதிகளில் கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை வேட்பாளர்கள் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.
1. பொள்ளாச்சி
2. கோவை
3. திருப்பூர்
4. ஈரோடு
5. நீலகிரி
6. சேலம்
7. கரூர்
8. நாமக்கல்
9. கிருஷ்ணகிரி
10. தர்மபுரி
11. கள்ளக்குறிச்சி
12. திண்டுக்கல்

வெறும் கவுண்டர் சமுதாயத்தின் நலனை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த கொங்கு மண்டலத்தின் முன்னேற்றத்திற்காகப் போராடுவதே தங்கள் நோக்கம் என்றும், இந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து சமூகத்தினரின் ஆதரவும் தமக்கு உண்டு என்றும் இவர்கள் கூறுகிறார்கள். இருக்கட்டும்.

எது எப்படியாயினும், இப்படியாகப்பட்ட ஒரு அரசியல் கட்சிக்கான தேவை இன்றைக்கு இல்லை. அதே நேரம் அது சட்டத்திற்குப் புறம்பானதும் அல்ல. இவர்கள் போட்டியிடும் 12 தொகுதிகளில் கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் முதலிய கொங்கு மண்டல எல்லையோரங்களில் இவ்வமைப்பு எவ்விதப் பாதிப்பையும் உண்டாக்காது,

மற்றபடி பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு முதலிய தொகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பெறக் கூடும். ஒரு தொகுதியிலாவது இவர்கள் வென்றால் ஆச்சரியம். எனினும் வாக்குகளைப் பிரிப்பதற்கான சாத்தியமும், பெரிய கட்சிகளை வெற்றி வாய்ப்பைப் பாதிப்பதற்கான சாத்தியமும் அதிகம்.

ஒரு பெரிய கட்சியில் கவுண்டர் சமுதாய வேட்பாளரும், இன்னொன்றில் வேறொருவரும் போட்டியிடும் பட்சத்தில் கவுண்டர் ஓட்டுக்களை இவர்கள் பிரித்து விடக் கூடும். உதாரணத்திற்கு ஈரோடு தொகுதி. இங்கே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வென்றால் அது மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்திகான ஓட்டுக்களை கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை பிரிப்பதுவே முக்கியக் காரணமாக இருக்கும்.

மற்றபடி பாட்டாளி மக்கள் கட்சியைப் போன்ற ஒரு அரசியல் வளர்ச்சியை கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை எட்டும் என்பதெல்லாம் நடக்காத கதை.

12 comments:

Anonymous said...

வீதிக்கொரு கட்சியுண்டு. சாதிக்கொரு சங்கமுண்டு.

perumal said...

ஏனுங்க தனியரசு கட்சியை சொல்லாம உட்டுப்புட்டீங்க.
மற்றபடி நீங்க சொன்னது நெம்ப சத்தியமுங்கோவ்.

அன்புடன்
பெருமாள்
கரூர்

perumal said...

ஏனுங்க தனியரசு கட்சியை சொல்லாம உட்டுப்புட்டீங்க.
மற்றபடி நீங்க சொன்னது நெம்ப சத்தியமுங்கோவ்.

அன்புடன்
பெருமாள்
கரூர்

perumal said...

ஏனுங்க தனியரசு கட்சியை சொல்லாம உட்டுப்புட்டீங்க.
மற்றபடி நீங்க சொன்னது நெம்ப சத்தியமுங்கோவ்.

அன்புடன்
பெருமாள்
கரூர்

Anonymous said...

they may win in pollachi and coimbatore.

Chandru said...

/....தமிழ்நாட்டில் பிற சமூகத்தினரைப் போல கொங்கு வேளாளர் சமூகத்தினர் சமூக அடுக்கில் பிறபடுத்தப்பட்டோர் அல்லர். சுய கெளரவமும், தோரணையும், வெட்டி பந்தாவும் கொண்டவர்கள் அவர்கள்......./

வெட்டி பந்தா என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்...
அடுத்தவர்களின் வளர்ச்சியை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள்தான் இப்படி சொல்கிறார்கள்...

Chandru said...

/.........வன்னியர் சங்கமாக இருந்த அமைப்பு இன்று தமிழகத்தின் மூன்றாவது மிகப் பெரிய கட்சியாக உருவெடுத்திருப்பது மரத்தை வெட்டி ரோட்டில் போட்டு அவர்கள் கலகம் செய்த காலத்தில் நாமெல்லாம் நினைத்துக் கூடப் பார்த்திராத ஒன்று....../
/...... மற்றபடி பாட்டாளி மக்கள் கட்சியைப் போன்ற ஒரு அரசியல் வளர்ச்சியை கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை எட்டும் என்பதெல்லாம் நடக்காத கதை..... /

ஏன் நடக்காது...?


கொங்கு நாடு முன்னேற்றப் பேரவையும் மரத்தை வெட்டி ரோட்டில் போட்டு காட்டு மிராண்டிகள் போல நடந்தால்தான் அரசியல் வளர்ச்சியை அடைய முடியுமா??

நீங்களே பதில் கூறுங்கள்...

Chandru said...

/.........வன்னியர் சங்கமாக இருந்த அமைப்பு இன்று தமிழகத்தின் மூன்றாவது மிகப் பெரிய கட்சியாக உருவெடுத்திருப்பது மரத்தை வெட்டி ரோட்டில் போட்டு அவர்கள் கலகம் செய்த காலத்தில் நாமெல்லாம் நினைத்துக் கூடப் பார்த்திராத ஒன்று....../
/...... மற்றபடி பாட்டாளி மக்கள் கட்சியைப் போன்ற ஒரு அரசியல் வளர்ச்சியை கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை எட்டும் என்பதெல்லாம் நடக்காத கதை..... /

ஏன் நடக்காது...?


கொங்கு நாடு முன்னேற்றப் பேரவையும் மரத்தை வெட்டி ரோட்டில் போட்டு காட்டு மிராண்டிகள் போல நடந்தால்தான் அரசியல் வளர்ச்சியை அடைய முடியுமா??

நீங்களே பதில் கூறுங்கள்...

Anonymous said...

something is missing...

a friend

Chellamuthu Kuppusamy said...

//ஏனுங்க தனியரசு கட்சியை சொல்லாம உட்டுப்புட்டீங்க//

அன்புள்ள பெருமாள், உங்களது இந்தக் கருத்தே கீழ்க்கண்ட சந்துருவின் கேள்விக்குப் பதில் எனக் கருதுகிறேன்.

//ஏன் நடக்காது...?


கொங்கு நாடு முன்னேற்றப் பேரவையும் மரத்தை வெட்டி ரோட்டில் போட்டு காட்டு மிராண்டிகள் போல நடந்தால்தான் அரசியல் வளர்ச்சியை அடைய முடியுமா??

நீங்களே பதில் கூறுங்கள்...//

மேலும், என்னதான் வன்னியக் கட்சி என்றாலும் கூட காலப் போக்கில் அத்தகைய ஜாதிய முத்திரையை பாமக வெகு சாமர்த்தியமாகத் துடைத்திருக்கிறது.

கொ.மு.பே எப்படிப்படட் எதிர்காலத்தைக் கொண்டிருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மதிமுக-வைச் சிதைத்த கருணாநிதியால் பாமக-வை ஒன்றும் செய்ய முடியவில்லை. ராமதாஸ் மாதிரி கட்டுக்கோப்புடன் கட்சியை நடத்தும் ஆளாக பெஸ்ட் ராமசாமி இருப்பாரா?

மூன்றாவதாக, இப்படிப்பட்ட ஒரு கட்சிக்கான தேவை இன்றைக்கு எங்கிருந்து வந்தது?

மற்றபடி, //வெட்டி பந்தா என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்// தவறாக இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.

Anonymous said...

தமிழகத்தில் ஸ்டார் நியூஸ் சேனல் நடத்திய 'எக்ஸிட் போல்' கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணிக்கு 25 இடங்கள் கிடைக்கும் என்றும், அதிமுக கூட்டணிக்கு 14 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

திமுகவும் காங்கிரசும் இணைந்து தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 25 இடங்களைக் கைப்பற்றுவார்கள்.

அதிமுகவுக்கு 9 இடங்களே கிடைக்கும். பாமக-மதிமுக இரண்டுக்கும் சேர்த்தே 3 இடங்களே கிடைக்கும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்ட் இரண்டுக்கும் சேர்த்து 2 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் பாமக, மதிமுக, இடதுசாரிகளுக்கு தமிழகத்தில் பெரும் சரிவு ஏற்படும் என்றும், கடந்த முறை ஒரு இடத்தில் கூட வெல்லாத அதிமுகவுக்கு மட்டுமே 9 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும் அந்த எக்ஸிட் போல் கூறுகிறது.

ரெட்டை எலைக்கு கோயிந்தா கோயிந்தா

Anonymous said...

gounder pathi pesa ungallku ennadaa urimai gounder thotta sanguda
nannga serula kalla vecha than ungallauku sorru da nannga illama neengaa onnum panna mudiyathu