Friday, May 22, 2009

ஃபர்ஸ்ட் மார்க்

- செல்லமுத்து குப்புசாமி

வெற்றி என்பது என்ன? என்ற தலைப்பில் 18-மே-2009 உயிரோசைக்கு எழுதியது.

*****

இதை நான் சொல்லியே தீர வேண்டும். வெறும் முப்பது வீடுகளைக் கொண்ட சின்னஞ்சிறு கிராமம் எங்களுடையது. தேர்தல் பிரச்சாரத்துக்குக் கூட வேட்பாளர்கள் யாரும் வர வேண்டிய அவசியம் இல்லாமல் ஒதுக்கப்பட்ட ஒரு சிற்றூர்.

அப்படிப்பட்ட கிராமம்தான் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1175 மதிப்பெண்களை எடுத்து திருப்பூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவியை (மாநில முதல் மதிப்பெண் 1183) உற்பத்தி செய்திருக்கிறது. சரியாக 10 ஆண்டுகளுக்கு முன் இதே மாதிரி மாவட்ட முதலிடம் பெற்ற மாணவியை எங்களூர் கொண்டிருந்தது. இருவரும் சகோதரிகள்.

இந்த நேரத்தில் இன்னொரு விஷயமும் என் நினைவுக்கு வருகிறது. கோவை மாநகரம் அடக்க முடியாத வியப்பை எனக்களித்த சமயம் அது. பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு மேல் நிலைப் பள்ளிப் படிப்புக்குக் கோவையில் சேர்ந்திருந்தேன். என்னை விடக் கூடுதல் மதிப்பெண் வாங்கிய நிறைய பேர் 11 ஆம் வகுப்பில் நுழைந்தனர்.

அதில் ஒருவன், பத்தாவதில் ஐநூறுக்கு 465 மதிப்பெண் பெற்றிருந்தான். வெகு விரைவில் பதினொன்றாவது காலாண்டுத் தேர்வு நடந்தது. அதில் 1,200 க்கு 464 மதிப்பெண் மட்டுமே அவனால் எடுக்க முடிந்தது. தேர்வில் பெறும் மதிப்பெண் மட்டுமே ஒருவனின் அறிவை அளவிடும் துல்லியமான கருவியல்ல எனப் புரிந்துகொள்ள அது எனக்குப் போதுமானதாக இருந்தது.

மாநில முதலிடம், இரண்டாம் இடம் வாங்கும் மாணவர்கள் பேப்பருக்கு போஸ் கொடுத்து, தொலைக் காட்சிக்குப் பேட்டி கொடுத்து பிரபலம் ஆகிறார்கள். அதன் பிறகு என்ன ஆகிறார்கள்? சமுதாயத்தில் இவர்களால் ஏற்படும் மாற்றங்கள் யாவை? யாருக்குமே விடை தெரியாத கேள்விகள் இவை.

அவர்களது கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும், உழைப்பும் நிச்சயம் பாராட்டுக்கு உரியது. அதற்கு இணையான அளவு பரிதாபமும் அவர்கள் மீது எனக்கு எழுவதுண்டு. அன்னம், தண்ணீர் பாராமல் வருடம் முழுவதும் கண் விழித்துப் படித்து எண்ணற்ற மதிப்பெண் வாங்கும் நபர்கள் மீது எனக்கு மரியாதை உண்டு. அதற்காக அவர்கள் கொடுக்கும் விலை குறித்து கரிசனமும் உண்டு.

தவளையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைப் படம் வரைந்து பாகங்களை விளக்கு - என்ற கேள்வியிலிருந்தே எனக்கு பயாலஜி மீது பயம். பன்னிரண்டாம் வகுப்பு உயிரியல் தேர்வுக்கு முந்தைய நாள் தூர்தர்ஷனில் ‘தூறல் நின்னு போச்சு’ படம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஒரு வேடிக்கை என்னவென்றால் நான் சேர்ந்த அதே கல்லூரியில், அதே துறையில்தான் என்னை விட 100 மதிப்பெண் கூடுதலாக எடுத்த எங்கள் பள்ளியின் முதல் மாணவன் அந்தோணி சேர்ந்தான்.

எங்களுக்கு முந்தைய வருடம் பள்ளியின் முதல் மதிப்பெண் பெற்ற மாணவனும்கூட அப்படித்தான். நினைத்த கல்லூரி கிடைக்காமல் ஒரு வருடம் கடத்தி எங்களோடு சேர்ந்தார் (ர் - ஒரு வருடம் சீனியர் அல்லவா).

கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த சமயம். நள்ளிரவு நேரத்தில் ஒரு நாள் அந்தோணி கோவை அஞ்சுமுக்குப்பகுதி அருகே சுற்றிக்கொண்டிருந்த போது போலீஸ் அவனை லத்தியால் அடித்திருக்கிறது. அன்றே முடிவு செய்துவிட்டான், இனி மேல் போலீஸ் கை வைக்க முடியாத பணிக்குச் செல்ல வேண்டுமென்று. அதன் காரணமாகவே பிரபலமான மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தும்கூட அதை மறுத்துவிட்டான்.

இப்போது விமானப் படையின் தொழில்நுட்பப் பிரிவில் வேலை செய்து வருகிறான். சம்பளம் குறைவுதான். அவன் சம்பாதித்ததும் குறைவுதான். எனினும் கோயம்புத்தூரில் எந்த போலீஸ்காரரும் அந்தோணி மேல் இனி கை வைக்க முடியாது.

இந்தக் கதையை ஏன் சொல்ல வேண்டியிருக்கிறதென்றால், வேலைக்காகப் படிப்பதற்கும், விருப்பப்பட்டுப் படிப்பதற்கும் உள்ள வேறுபாடு நம்மில் பல பேருக்குப் புரியவில்லை என்பதால்தான். நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ வேலைக்காக மட்டுமே படித்தாக வேண்டிய சமூக மற்றும் பொருளாதாரச் சூழலில் நாம் வசிக்க வேண்டியிருக்கிறது.

முதலிடம் வாங்கும் மாணவர்களில் எதிர்காலம் சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை. அவர்களில் எத்தனை பேர் சுயமாகத் தொழில் தொடங்கி வேலை வாய்ப்புகளை உருவாக்குவார்கள் என்று தெரியவில்லை.

நாட்டின் முதன்மையான வழக்கறிஞர், கணித வல்லுனர், விஞ்ஞானி, சிந்தனையாளர், பொருளாதார மேதை, மருத்துவ நிபுணர், தொழிலதிபர், பத்திரிகையாளர், எழுத்தாளர், தத்துவ மேதை முதலிய கிரீடங்களை எத்தனை முதல் மாணவர்கள் அணிவார்கள் என்று தெரியவில்லை. அதிகபட்சமாக அவர்கள் அமெரிக்கா செல்லக் கூடும்.

ஏட்டுக் கல்வியையும், தேர்வு மதிப்பெண்ணையும் கடந்து ஒரு மனிதனை அளவிட வேண்டிய அவசியம் இருக்கிறது. அதுவே அவனது வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும். உதாரணத்துக்கு ‘நீயா நானா’ நிகழ்ச்சி ஒன்று.

கல்லூரி ஆசிரியர்கள் அதில் பங்கெடுத்தனர். நீங்கள் என்ன மாதிரியான புத்தகம் வாசிக்கிறீர்கள், கடைசியாக என்ன தலையங்கம் வாசித்தீர்கள் என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்டதற்கு அதிர்ச்சியளிக்கும் பதிலே கிட்டியது. அவர்கள் வாசித்ததாகச் சொன்னதெல்லாம் எம்.எஸ்.உதயமூர்த்தி ரீதியிலான சுய முன்னேற்ற நூல்கள். அவற்றையெல்லாம் தான் எட்டாம் வகுப்பிலேயே வாசித்துவிட்டதாக கோபிநாத் கூறினார்.

பத்தாண்டுகளுக்கு முன்பு மாவட்ட முதலிடம் பெற்ற மாணவி இன்று பத்தோடு பதினொன்றாக சிறுசேரியில் வேலை செய்கிறார். இது ஒரு வகை. பொறியியலும் கிடைக்காமல், மருத்துவமும் கிடைக்காமல் கோவை வேளாண்மைக் கல்லூரியில் இணைந்த என் பள்ளிப் பருவத் தோழர் இன்னொரு வகை. இளங்கலை வேளாண்மை அறிவியலுக்குப் பிறகு MSC, Phd .. இப்போது வட மாநிலம் ஒன்றில் மாவட்ட ஆட்சியர்.

நல்ல மதிப்பெண், நல்ல கல்லூரி, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுப் பட்டம்.... இது முடிந்தால் வாழ்வில் செட்டில் ஆகிவிட்டதாகச் சிலர் (குறிப்பாக பெற்றோர்) கருதுகிறார்கள். ஆனால் உள்ளபடியே சொன்னால் நல்ல மதிப்பெண் என்பது ஒரு திறவுகோல் மட்டுமே. பொருளாதார ரீதியான தோல்வியையும், வேலையின்மையையும் அது தவிர்க்கும். ஆனால் மறுபடியும் செய்தித்தாளில் போட்டோ வருமளவு வெற்றியை நிச்சயப்படுத்தும் என்று சொல்வதற்கில்லை.

7 comments:

மாலன் said...

பெண் குழந்தைகளின் நிலை இன்னும் கவலைக்குரியது.முன்பு நான் வசித்த வீட்டிற்கு அடுத்த வீட்டில் வசித்த இளம் பெண் SSLCயில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற பெண். நான் அந்த வீட்டிற்குக் குடி புகுந்த இரண்டாம் நாள், முதலிடம் பெற்ற போது தினந்தந்தியில் வந்திருந்த அவரது படத்தையும் பேட்டியையும் என்னிடம் கொண்டு வந்து காட்டினார். டாக்டருக்குப் படிக்கப் போகிறேன் என்று சொல்லியிருந்தார். ஆனால் வீட்டில் ஒரு கலைக் கல்லூரியில் சேர்த்தார்கள். பின் திருமணம். திருமணத்திற்குப் பின் வேலைக்குச் செல்ல கணவன் அனுமதிக்கவில்லை. நான்கு வருடம் போராடி, மனம் முறிந்த ஒரு தருணத்தில் தற்கொலை செய்து கொண்டார். இப்போதும் நம் பெண் குழந்தைகளின் வாழ்க்கையை ஆண்கள்தான் தீர்மானிக்கிறார்கள். ஒரு வகையில் அவர்கள் சாவையும் கூட.
கல்வி அவளுக்கு மதிப்பெண்களைப் பெற்றுக் கொடுத்தது. மனத் துணிவைக் கொடுக்கவில்லை

Chellamuthu Kuppusamy said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் மாலன்.

நீங்கள் சொன்னது உண்மையே. ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பாவம் பெண்கள்.

செல்வா said...

// ஆனால் மறுபடியும் செய்தித்தாளில் போட்டோ வருமளவு வெற்றியை நிச்சயப்படுத்தும் என்று சொல்வதற்கில்லை.//

Vettri-in indha definition oppukkullambadi illai.

செல்வா said...

// ஆனால் மறுபடியும் செய்தித்தாளில் போட்டோ வருமளவு வெற்றியை நிச்சயப்படுத்தும் என்று சொல்வதற்கில்லை.//

மற்ற கருத்துக்கள் சரியாகத் தோன்றினாலும், வெற்றியின் இந்த பொருள் / விளக்கம் ஒப்புக்கொள்ளும்படி இல்லை!

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பகிர்வுக்கு நன்றி

Chellamuthu Kuppusamy said...

செல்வா, வருகைக்கு நன்றி. வெற்றியின் வரையறை பேப்பரில் போட்டோ வருவது மட்டுமல்ல. ஆனால் முதல் மதிப்பெண் பெற்ற போது அவர்களுக்குக் கிடைக்கும் மீடியா வெளிச்சம் அல்லது கவனம் மறுபடியும் கிடைக்குமளவு வெற்றியை எட்டுவது குறித்தே பேசினோம்.

நன்றிகள் ஞானசேகரன்.

வண்ணத்துபூச்சியார் said...

நல்ல பகிர்வுக்கு நன்றி