Monday, May 11, 2009

காங்கிரஸ் கூட்டணியில் ஜெயலலிதா!

தடாகம் இணைய தளத்துக்காக எழுதியது.

********
இது பின் நவீனத்துவ யுகம். ஒரு பெண்ணைப் பார்த்து, ஊரறிய மணமுடித்து வாழ்க்கைப்பட்ட பிறகு அந்தப் பெண்ணோடு காலம் முழுவதும் கூடி வாழ்ந்ததெல்லாம் அந்தக் காலம். கல்யாணம் செய்த பிறகு மற்றவன் பொண்டாட்டியோடு கனெக்‌ஷன் வைத்துக்கொள்வது இப்போதிருக்கும் பின்நவீனத்துவ யுகம். திருமணம் என்ற சமுதாய மடமையை எல்லா மட்டத்திலும் கொளுத்தும் யுகம் இது.

பின்நவீனத்துத்தின் எல்லை நாள்தோறும் விரிந்துகொண்டே இருக்கிறது.

உட்கட்சி ஜனநாயகம், நிலையான கொள்கை, கொள்கை ரீதியான கூட்டணிகள், நட்பின் அடிப்படையிலான ஆதரவுகள் முதலிய வாசகங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன என்பதைத் தவிர அவற்றில் உள்ளார்ந்த பொருளில்லை.

மத்திர அரசில் ஒற்றைக் கட்சி ஆட்சி என்பது கடந்த காலத்தின் சங்கதியாக ஆகி விட்ட பிறகு, ஆட்சியை நிர்வகிக்க ஒரு தலைவர் என்றும், கூட்டணியை நிர்வகிக்க ஒரு தலைவர் என்றும் மாறியிருக்கும் கால கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

இவற்றையெல்லாம் கடந்து, தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி மாற்றங்களும், அணிசேர்க்கையும் பின்நவீனத்துத்தின் பரிணாம வளர்ச்சியை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதாக நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் மன்மோகன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக்கொண்ட போது, காங்கிரஸ் கட்சியை ரட்சித்து ஆட்சியைக் காப்பாற்றி, அதன் பிறகு அந்தக் கூட்டணியில் இருந்து விலகிப் போயிருக்கும் யாதவக் கட்சியான (முலாயம் சிங் யாதவ் தலைமையிலான) சமாஜ்வாடி கட்சியின் தலைவர்களில் ஒருவரான அமர் சிங், “தேர்தலுக்குப் பின் காங்கிரஸுடன் நான் பிசினஸ் செய்ய வேண்டியிருக்கும்” என்று ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் சொன்னார்.

காங்கிரஸோ, பாரதிய ஜனதாவோ யாராக இருந்தாலும் சரி . . . உத்திரப் பிரதேசத்தில் மாயாவதி அரசைக் கலைக்க ஒப்புக்கொள்ளும் கூட்டணியில் சேரப்போவதாகவும் சஞ்சய் தத், ஜெயபிரதா ஆகியோரை வைத்து அரசியல் பண்ணும் அந்தக் கட்சி பகிரங்கமாகவே கூறியுள்ளது.

எல்லா மாநிலத்தைக் காட்டிலும் தமிழகத்தில் தேர்தல் களம் கொதிநிலையில் உள்ளது. இலங்கைப் போரில் சிங்கள இராணுவத்திற்கு நேரடியாக உதவும் காங்கிரஸ் அரசும், அதற்குத் துணைபோகும் கருணாநிதியின் திமுகவும் கடும் பின்னடைவைச் சந்திக்கும் என்று கணிக்கப்படுகிறது.

சன் டிவி, கலைஞர் டிவி ஆகியவற்றின் ஊடக பலம் மற்றும் திருமங்கலம் இடைத் தேர்தலை அஞ்சாநெஞ்சன் அழகிரி திமுகவிற்கு வென்று கொடுத்த உத்தியை வைத்தே தமிழகம் முச்சூடும் வென்று விட முடியுமென்கிற நம்பிக்கை ஆகியவற்றைக் கடந்தும் ஒரு வித நடுக்கம் திமுக முகாமில் ஏற்பட்டுள்ளதை உணர முடிகிறது.

சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொண்டதைப் போல அண்ணா சமாதியில் போய் கலைஞர் கடைபிடித்த இரு வேளை உணவுக்கு இடையேயான உண்ணாவிரதம், தேர்தலை முன்னிட்டு பேருந்துக் கட்டணத்தைக் குறைத்து விட்டு அதை மறுபடியும் ஏற்றியது ஆகியவை நடந்து முடிந்திருக்கின்றன.

இது போதாதென்று, “தனி ஈழம் மட்டுமே தீர்வு. அதை 1971 கிழக்கு வங்காள மக்களுக்கு பாகிஸ்தான் பிடியில் இருந்து விடுதலை வாங்கிக் கொடுத்ததைப் போல இந்திய இராணுவத்தை அனுப்பி பெற்றுத் தருவேன்” என்று ஜெயலலிதா கூறியது, ஆஸ்பத்திரியில் இருந்தவாறே, “(அங்கே போர் நிறுத்தம் எல்லாம் நடந்து முடிந்தது போல) ஈழம் பெற ஆவன செய்வோம்” என்று கலைஞர் டிவி வாயிலாக கலைஞரைப் பேச வைத்திருக்கிறது.

கருணாநிதியின் ஒவ்வொரு நகர்வுகளையும் தீர்மானிக்கும் சக்தியாக ஜெயலலிதா மாறி விட்டார் என்பது ஆச்சரியம் அளிக்கவில்லை என்ற அரசியல் எதார்த்தம் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் ஈழம் குறித்து கலைஞர் சொன்னது தப்பு என்று காங்கிரஸ் கட்சியின் குரலாக கர்னாடக முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இன்னொரு பக்கம் கருப்புக் கொடிக்குப் பயந்து சோனியா காந்தியின் சென்னைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் கருணாநிதி தேறி வந்த பிறகு திமுக தொண்டர்களோடு சேர்த்து கூட்டம் நடத்தவே ரத்து ஆகியிருக்க வேண்டும்.

சோனியாவின் கூட்டத்துக்கு 5,000 போலீசார் தயார்படுத்தப்பட்டிருப்பதாகப் படித்தோம். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் 1627 பேர், நிர்வாகிகள் 892 பேர் மற்றும் தொண்டர்கள் 324 பேர் ஒன்று சேர்ந்தாலும் கூட போலீஸ்காரர்களை விட கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால் ரத்து செய்திருப்பார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. கருணாநிதி தேறி வந்தால் அவரோடு கூடச் சேர்ந்து மாஸ் காட்டலாம் என்பது கணக்காக இருக்கும்.

எது எப்படியோ, தமிழக நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அதிமுக அணிக்குச் சாதகமாக அமைவதற்கான வாய்ப்புகளே அதிகம். அந்த அணி அபரிமிதமான இடங்களை வெல்லும் பட்சத்தில் அதன் ஆதரவை காங்கிரஸ் கட்சி கோராது என்று யாரும் சொல்வதற்கில்லை. இப்போதே ராகுல் காந்தி, ஷீலா தீக்சித் ஆகியோர் அண்ணா தீமூக்கா உள்ளிட்ட கட்சிகளை ‘நல்லவரு, வல்லவரு’ என்று வர்ணிக்க ஆரம்பித்து விட்டனர்.

இதனால் கலக்கம் அடைவது கலைஞரைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது. மத்திய அரசுக்கு திமுகவின் ஆதரவு தேவை என்ற நிலை மாறி, மாநிலத்தில் திமுகவுக்கு காங்கிரசின் ஆதரவு இருந்தே தீர வேண்டும் என்ற நிலை வந்தால் எப்படி இருக்கும்?

இதை இன்னும் தெளிவாகச் சொன்னால், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்குத் அதிமுக எம்.பிக்களின் ஆதரவு தேவைப்படும் போது மாநிலத்தில் திமுக ஆட்சிக்கு காங்கிரஸ் எல்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்றால் எப்படி இருக்கும்?

வேறு மாதிரிச் சொன்னால், மாயாவதியின் அரசை டிஸ்மிஸ் செய்யும் அரசுக்கே தங்கள் ஆதரவு என்று சமாஜ்வாடி கட்சி சொல்வதைப் போல, கருணாநிதியை ஆட்சியில் இருந்து அகற்றும் அணிக்கே என் ஆதரவு என்று ஜெயலலிதா சொல்வதாகக் கருதலாம்.

ஆனால், மாயாவதி அரசைப் போலல்லாமல் கருணாநிதி நடத்துவது (ஜெயலலிதா அடிக்கடி செல்வதைப் போல) மைனாரிட்டி அரசு. ஆட்சி நடத்தத் தேவையான 118 இடங்களில் 99 உறுப்பினர்களை (அதிலும் மதிமுகவில் இருந்து இழுக்கப்பட்ட கண்ணப்பன் & கம்பம் எல்.எல்.ஏ மற்றும் திருமங்கலம் இடைத்தேர்தல் வெற்றி ஆகிய 3 கூடுதல் இடங்களையும் சேர்த்து) மட்டுமே திமுக கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் 34 உறுப்பினர்களை நம்பியே இங்கு அரசாங்கம் நடக்கிறது.

இன்னொரு பக்கம் அதிமுக, பாமக, மதிமுக, இடதுசாரிகளை அடக்கிய கூட்டணிக்கு 97 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு அளிக்கும் ஆதரவை விலக்கிக்கொண்டு அதை அதிமுக பக்கம் திருப்பினால் வெகு சில மணி நேரத்தில் ஜெயலலிதா தமிழக முதல்வர் ஆகி விடுவார்.

இப்படியாகப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைவதற்கான சாத்தியத்தை மறுப்பதற்கில்லை. திருமாவளவனே காங்கிரஸை ஆதரிக்கும் செயலைச் செய்யும் போது ஜெயலலிதா செய்தால் மட்டும் குற்றமா? என்ன இருந்தாலும் இது பின் நவீனத்துவ யுகம் அல்லவா?

ஒரு வரனைத் தேர்ந்தெடுத்து கல்யாணம் செய்துகொண்ட பிறகு திருப்தி இல்லையென்றால் சுலபமாக பார்ட்டனை மாற்றிகொள்ளும் யுகத்தில் இந்திய அரசியல் இருக்கிறது. மாற்றங்களை உலகம் ஒப்புக்கொள்ளும்.

காங்கிரஸ் மற்றும் ஜெயலலிதா ஆகிய இரண்டு சக்திகள் ஒரு பொது நலனை நோக்கி நகர வேண்டும். அப்படி நடக்கும் போது, பொது மக்களின் நிலைமை ? க்குறி மற்றும் :-) க்குறி ஆகும்.

எத்தனை ஏச்சு வந்தாலும், தமிழினத்தையெ பகைத்துக்கொண்டு சோனியாவுக்குத் துணையாக நின்றேன். என் விசுவாசம் என்னவாவது என்று கலைஞர் புலம்ப மாட்டார். ஏனென்றால், அவருக்குத் தெரியும்; விசுவாசம் என்பது இயலாதவன் மட்டுமே ஏந்தும் பிச்சைப்பாத்திரம் என்று.

கலைஞருக்கு அப்படி ஒரு நிலைமை வரக் கூடாது என்று வேண்டுவோமாக!

8 comments:

லக்கிலுக் said...

கலைஞர் என்று எழுதுவதா அல்லது கருணாநிதி என்று எழுதுவதா என்ற குழப்பமும், தடுமாற்றமும் உங்களுக்கு இருப்பதை அறிய முடிகிறது.

கருணாநிதி என்றே தயங்காமல் எழுதுங்கள் :-)

அன்புடன்
லக்கி

Chellamuthu Kuppusamy said...

லக்கி: ஜெயலலிதாவை ஜெயலலிதா என்று எழுதும் போது கருணாநிதியை கருணாநிதி என்று எழுதுவதில் தயக்கமோ குழப்பமோ கிடையாது.

Old habits die hard! அம்புட்டுத்தான்.

Anonymous said...

Peppering கலைஞர் with liberal dose of கருணாநிதி is always acceptable :-)

லக்கிலுக் said...

ஜெ.வை இனி ஈழநாயகி என்றோ புரட்சித்தலைவியென்றோ கூட எழுதலாம். அதற்கும் தயக்கமோ, குழப்பமோ தேவையே இல்லை :-)

Anonymous said...

//தமிழக காங்கிரஸ் தலைவர்கள் 1627 பேர், நிர்வாகிகள் 892 பேர் மற்றும் தொண்டர்கள் 324 பேர் ஒன்று சேர்ந்தாலும் கூட //

Super comedy boss

உடன்பிறப்பு said...

கருணாநிதியை துரோகி என்றும் அழைக்கலாம். தயவு செய்து தயங்காமல் அழையுங்கள்.

Anonymous said...

தமிழ்நாட்டில் சினிமா நடிகர்களின் நடிப்பு அவ்வளவு நன்றாக இல்லையென்பதால் அரசியல் சென்றவர்கள் மீண்டும் சினிமா நடிகர்கள் ஆகிறார்கள்.
தேர்தல் என்பது யார் மக்களை அதிகமாக ஏமாற்றுகிறார்கள் என்பதில் போட்டி,அவ்வளவு தான்.
துணிச்சலாகப் பொய் சொல்ல வேண்டும்,மக்கள் ஏமாந்து விடுவார்கள்.

Anonymous said...

தமிழகத்தில் ஸ்டார் நியூஸ் சேனல் நடத்திய 'எக்ஸிட் போல்' கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணிக்கு 25 இடங்கள் கிடைக்கும் என்றும், அதிமுக கூட்டணிக்கு 14 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

திமுகவும் காங்கிரசும் இணைந்து தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 25 இடங்களைக் கைப்பற்றுவார்கள்.

அதிமுகவுக்கு 9 இடங்களே கிடைக்கும். பாமக-மதிமுக இரண்டுக்கும் சேர்த்தே 3 இடங்களே கிடைக்கும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்ட் இரண்டுக்கும் சேர்த்து 2 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் பாமக, மதிமுக, இடதுசாரிகளுக்கு தமிழகத்தில் பெரும் சரிவு ஏற்படும் என்றும், கடந்த முறை ஒரு இடத்தில் கூட வெல்லாத அதிமுகவுக்கு மட்டுமே 9 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும் அந்த எக்ஸிட் போல் கூறுகிறது.

ரெட்டை எலைக்கு கோயிந்தா கோயிந்தா