Wednesday, June 10, 2009

கம்யூனிஸ்டுகளின் தேவை!

கம்யூனிஸ்டுகளின் தேவைஎன்ற தலைப்பில் 1-ஜூன்-2009 உயிரோசைக்கு எழுதியது

******
2009 ஆம் வருடம் மே 18 ஆம் தேதி ஒன்றைவிடக் கூடுதலான காரணங்களுக்காக தெற்காசிய வரலாற்றில் பதிவு செய்யப்படும். இன்னமும் தீர்க்கப்படாத பல வித மர்மங்களைத் தாங்கி நிற்கிற, வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் நிகழ்ந்ததாக இலங்கை இராணுவம் முதன் முதலில் அறிவித்தது மே 18 அன்றுதான். ஆம்புலன்ஸில் தப்பிச் சென்ற போது அவர் சுடப்பட்டதாக இலங்கை சொன்னது.

அதே தினம் வேறு ஒரு காரணத்திற்காகவும் இந்தியாவில் பதிவு செய்யப்படுகிறது. பங்குச் சந்தை வர்த்தகம் அன்று நிறுத்தப்பட்டது. வழக்கமாக பங்கு விலைகள் நிலை குலைந்து போய் அளவு கடந்து சரியும் போது மட்டுமே வர்த்தகம் நிறுத்தப்படும் என்பதை நாம் அறிந்திருந்தோம்.

கடந்த 17 ஆண்டுகளில் நான்கு முறை பங்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் விலை வீழ்ச்சியே அதற்குக் காரணமாக இருந்திருக்கிறது. 2004 பொதுத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கூட்டணி தோற்றதும் ஷேர் மார்க்கெட் பல்டி அடித்தது ஒரு எடுத்துக்காட்டு.

முதலாளித்துவத்துக்கு இணக்கமான ஒரு ஆட்சியை வலதுசாரி சிந்தனை கொண்ட பா.ஜ.க நடத்தியது என்பதால் பங்குச் சந்தை அதைக் கொண்டாடி வந்தது. ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற நம்பிக்கை மங்குமென்று அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. வாஜ்பாய் அரசாங்கம் தோற்று, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் நிலை ஏற்பட்டவுடன் முதலாளித்துவ சந்தை நடுக்கம் கண்டது.

இடதுசாரி கம்யூனிஸ்டுகளின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததே அதற்குக் காரணம். எப்போதுமே பங்குச் சந்தைக்கும், பொதுவுடமைவாதிகளுக்கு ஏழாம் பொருத்தம் என்பதைச் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. 2009 பொதுத் தேர்தல் முடிவு வெளிவரும் முன்னர் அமெரிக்க அதிகாரிகள் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்து இடதுசாரிகளோடு சேர்ந்து ஆட்சி அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தியதாகச் செய்திகள் வந்தது இதற்கு இன்னுமொரு சாட்சி.

மே 17, 2004 அன்று (தேர்தல் முடிவை அடுத்து) மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 16.62 சதவீதம் வீழ்ந்தது. அதனால் அன்றைய தினம் முழுவது சந்தையை இழுத்து மூட வேண்டிய கட்டாயம் உண்டானது. இடதுசாரிகள் தயவில் ஆட்சி அமைவதன் எதிரொலியே அந்நிகழ்வு.

பிறகு முதலாளி வர்க்கத்திற்கு மிகவும் பிடித்த மன்மோகன் சிங் பிரதமராகவும், ப.சிதம்பரம் நிதியமைச்சராகவும் நியமிக்கப்பட்ட பிறகே நிலைமை மேம்பட்டது.

சரியாக ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதே காங்கிரஸ் மறுபடியும் தேர்தலைச் சந்தித்து வெல்கிறது. அந்தக் கூட்டணி 322 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கப் போவது தெரிகிறது. அந்த முடிவை பங்குச் சந்தை வேறு விதமாகக் கொண்டாடியது.

மே 18, 2009 அன்று பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியவுடன் 2110.79 புள்ளிகள் உயர்வு, அதாவது 17.34 சதவீதம். இது வரலாறு காணாதது. கன்யூனிஸ்ட்டுகள் இல்லாமல் ஒரு நிலையான ஆட்சி அமைவதை முதலாளித்துவம் இப்படிக் கொண்டாடுகிறது.

கடந்த ஐந்தாண்டுக் கால ஆட்சியின் கடைசிச் சில மாதங்களைத் தவிர காங்கிரஸ் ஆட்சிக்கு கம்யூனிஸ்ட்டுகள் வெளியில் இருந்து ஆதரவு தந்தார்கள். எனினும் உண்மையான எதிர்க் கட்சிக்குரிய பொறுப்புணர்வோடு அவர்கள் செயல்பட்டார்கள் என்பதை நாம் ஒப்புக் கொண்டாக வேண்டியுள்ளது. அரசின் பல தாராளமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளை எதிர்த்தார்கள்.

அவர்களின் எதிர்ப்பு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கையின் வேகம் ஓரளவுக்குக் கட்டுக்குள் இருந்தது என்றால் அதற்கு இடதுசாரிகளின் எதிர்ப்பு முதன்மையான சிக்கலாக இருந்தது. ஒரு வகையில் பார்த்தால் பாதுகாப்பான பயணத்திற்கு அவசியமான வேகத் தடையாக அவர்கள் விளங்கியிருக்கிறார்கள்.

‘வலியது வாழும்’ என்ற முதலாளித்துவ சித்தாந்தம் மேற்குலகில் மறு பரிசீலனைக்கு அல்லது மறு சிந்தனைக்கு ஆளாகிய தருணத்தில் இவர்களை நாம் நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இடதுசாரிகளின் நிலைப்பாடுகள் சரியோ தவறோ அதைப் பற்றிக் கவலையில்லை. ஆனால் அவர்கள் அரசின் செயல்பாடுகளைப் பற்றி விமர்சனம் செய்தார்கள். கொள்கைகளை கேள்விக்கு உள்ளாக்கினார்கள். தர்க்க ரீதியான விவாதத்தை ஏற்படுத்தினார்கள். ஜனநாயகக் கட்டமைப்பில் மிக அவசியமான ஒரு அம்சம் இது.

இப்போது காங்கிரஸ் கட்சிக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் சித்தாந்த அடிப்படையில் பெரிய வேறுபாடு கிடையாது. சமயச் சார்பற்ற கட்சி என்ற பிம்பத்தின் காரணமாக முஸ்லிம் மக்களின் ஓட்டுகளை காங்கிரஸ் பெறும். அதைத் தவிர்த்துப் பார்த்தால் இவை இரண்டுமே வலதுசாரி-முதலாளித்துவ அமைப்புகளே.

இடதுசாரி இயக்கங்களில் கதாநாயகர்கள் கிடையாது. அதிகாரம் (என்ற ஒன்றிருந்தால்) கட்சித் தலைமையிடம் மட்டுமே குவிந்து கிடப்பதில்லை. உட்கட்சி ஜனநாயகம் என்ற ஒரு சங்கதி எந்த ஒரு வடிவத்திலாவது இருந்தால் அது கம்யூனிஸ்ட்டுகளிடம் மட்டுமே காணக் கூடியதாக இருக்கிறது.

அடிப்படையில் எனக்கு முதலாளித்துக் கோட்பாட்டின் மீது நம்பிக்கை உண்டு. இப்படிச் சொல்லும் போது அது எனக்குப் பிடிக்கும் என்றோ, அதுதான் உலகிற்கு நல்லது என்றோ பொருளல்ல. மாறாக அதுதான் நடைமுறைச் சாத்தியம் உள்ளது என நாம் நம்புவதாகப் பொருள். வல்லான் வகுத்ததே நியதி. வலியது வாழும் என்பது நமக்குப் பிடிக்காவிட்டாலும் நடப்பில் உள்ள வழக்கு.

அந்தக் காரணத்தினாலேயே பொதுவுடமை இயக்கங்களின் இருப்பு குறித்தான விசனம் நமக்கு எழுகிறது. முற்றிலும் பொருள்மயமாகிவிட்ட இன்றைய இந்திய அரசியல் சூழலில், இடதுசாரிகள் எத்தனை நாளுக்கு தாக்குப் பிடிக்க இயலும் எனத் தெரியவில்லை.

அடிப்படைப் பிரச்சினைகளைப் பற்றிய விவாதத்தை எழுப்பவும், பண முதலைகளை அம்பலப்படுத்தவும், அதிவேக பொருளாதார வளர்ச்சியைவிட ஒட்டு மொத்த வளர்ச்சி முக்கியம் என்பதை உணர்த்தவும், பெயரளவில் நடைமுறையில் இருக்கும் ஜனநாயகத்திற்கு ஓரளவேனும் அர்த்தம் கொடுக்கவும் இந்திய அரசியலில் இடதுசாரிகளின் தேவை முன்னெப்போதையும்விட இன்றைக்கு அவசியம்.

இந்தியா ஒன்றும் பணக்கார நாடில்லை; சில பணக்காரர்கள் வாழும் ஏழை நாடு. அது மாறும் வரை உண்டியல் குலுக்கிகளின் தேவை அவசியமாகிறது.

*******

5 comments:

உடன்பிறப்பு said...

தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுகள் ஜெவுக்கு ஓவராக துதிபாடியதால் கொஞ்சம் மதிப்பை இழந்தார்கள்

சதுக்க பூதம் said...

//இடதுசாரி இயக்கங்களில் கதாநாயகர்கள் கிடையாது. அதிகாரம் (என்ற ஒன்றிருந்தால்) கட்சித் தலைமையிடம் மட்டுமே குவிந்து கிடப்பதில்லை. உட்கட்சி ஜனநாயகம் என்ற ஒரு சங்கதி எந்த ஒரு வடிவத்திலாவது இருந்தால் அது கம்யூனிஸ்ட்டுகளிடம் மட்டுமே காணக் கூடியதாக இருக்கிறது.
//

கம்யூனிஸ்டுகளின் இன்றைய முக்கிய பிரச்சனையே அதன் பொலிட்பீரோ ஒரு சில ஆதிக்க சக்திகளின் கை பிடியில் இருப்பது தான்.என்று வங்கி மற்றும் இன்சூரன்ஸ் போன்ற துறையில் புரோக்கர்களாக இருக்கும் கம்யூனிஸ்டுகளை கட்சியின் பொருப்பிளிருந்து விடுவித்து உண்மையிலேயே அடிமட்டத்திலிருந்து உழைத்து வந்து, சித்தாந்தத்தில் வலுவாக உள்ளவர்கள் பொலிட்பீரோக்களுக்கு கொண்டு வருவார்களோ அன்று தான் அது வளர்ச்சி அடையும்.N.Ram போன்ற தலைவர்களை கட்சியின் முடிவை எடுத்தால் எப்படி வளரும்? தற்போது ஒரு புதிய இளைய தலைமுறை தலைவரை முன்னிருத்த ஆரம்பித்துள்ளார்கள். அவர் யாருமல்ல, பணக்கார சர்வதேச பள்ளியில் படித்து வரும் மணிரத்னத்தின் மகன் தான் அவர்.

Indian said...

:)

Anonymous said...

Certainly mainstream communists didn't bring down the GDP growth to "Hindu Rate". However, they could very well be attributed to reduction of pace by atleast 2%.

On the one hand they want the PF deposits to provide higher interest and on the other hand they don't want the PF fund to be invested in better financial instruments.

Anonymous said...

//தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுகள் ஜெவுக்கு ஓவராக துதிபாடியதால் கொஞ்சம் மதிப்பை இழந்தார்கள்
//

sirippu varuthu