Thursday, June 25, 2009

மாயாண்டி குடும்பத்தார் - சினிமா

- செல்லமுத்து குப்புசாமிசினிமா விமர்சனம் எழுதுவதென்பது அலுப்பூட்டக் கூடிய ஒரு செயல். இன்னும் சொல்லப் போனால் சமீப காலங்களில் சினிமா பார்ப்பதே அயர்ச்சி தருவதாக இருக்கிறது. ஆயினும் சில நேரங்களில் விமர்சனப் பதிவு போடும் ஆசை வருவதைத் தடுக்க முடிவதில்லை. என்னவோ தெரியவில்லை, மாயாண்டி குடும்பத்தார் படம் பார்த்ததும் அப்படி ஒரு ஆசை வந்து விட்டது.

இத்தனைக்கும் சினிமா விமர்சனம் என்பதற்கான இலக்கணம் எங்கும் வரையறுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவும் இல்லை. இலக்கணம் என்ற ஒன்று உண்மையில் இருந்தாலும் அதை உடைத்து புது மரபு படைக்கும் பின்நவீனத்துவவாதிகள் நாம். கதையில் கொஞ்சம், குறைகள் கொஞ்சம், பாராட்டு கொஞ்சம் என்று ஒரு வகையாகக் கலந்து எழுதி வைப்பதே நல்ல விமர்சன உத்தியாக இருக்க முடியும். இன்னொரு பக்கம் சினிமாவை ஓவராகத் திட்டி விமர்சனம் எழுதினால் மட்டுமே வருங்காலத்தில் வசனம் எழுதும் வாய்ப்புக் கிடைக்கும் என்று விவரம் தெரிந்தவர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

ஒரு நடிகர் பத்து வேடத்தில் நடித்த சாதனையைக் கண்ட பெருமை தமிழ் சினிமாவுக்கு உண்டு. 'மாயாண்டி குடும்பத்தார்' படத்தில் பத்து இயக்குனர்கள் நடித்துள்ளனர். கதையில் புதுமை ஒன்றும் இல்லை. புதிய சங்கதிகளும் இல்லை. மேம்போக்காகச் சொன்னால் அப்படித்தான் தெரியும். ஆனால் படத்தில் நட்சத்திர நடிகர்கள் இல்லை. வெளிநாட்டில் காதல் காட்சிகள் படமாக்கப்படவில்லை. ஆபாசம் இல்லை. குலுக்கல் நடனம் இல்லை. குடும்பத்தோடு தியேட்டர் சென்று முகம் சுளிக்காமல் பார்க்கலாம். இதை விட என்ன புதுமையைச் செய்ய வேண்டியிருக்கிறது!

காதலும், பாசமும், பங்காளி சண்டையும் நிரம்பியதாகவே கதையும், படமும் நெய்யப்பட்டுள்ளன. உண்மையான கிராமியப் படம் ஒன்றில் இந்தச் சங்கதிகளைத் தவிர்த்து என்ன செய்தாலும் போலித்தன்மை இணைந்து கொள்ளும்.

தெக்கத்திப் பக்கம் வெகு சாதாரணமாக நடக்கிற விஷயம் பங்காளி சண்டை. அண்ணன் விருமாண்டி (ஜி.எம். குமார்). தம்பி மாயாண்டி (மணிவண்ணன்). இருவருக்கும் சொத்துச் சண்டை. அடிதடி. போக்குவரத்து இல்லை. மாயாண்டி குடும்பத்தாரிடம் விருமாண்டி குடும்பத்தார் வம்பு இழுத்துக்கொண்டே இருக்கிறார்கள். தம்பி விலகி விலகிப் போகிறார்.

மாயாண்டி குடும்பத்தின் நான்கு மகன்களாக பொன்வண்ணன், சீமான், ஜெகன்நாத், தருண்கோபி நடித்துள்ளனர். பொன்வண்ணன் பூச்சி மருந்து அடிக்கும் ஸ்பிரேயருடன் அலைகிறார். சீமான் புரட்சி பேசிக்கொண்டு பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் நபர். மூன்றாவது மகன் ஜெகன்நாத் மைக்செட் வைத்திருக்கிறார். நான்காவது பையனைப் பற்றி பிறகு பார்க்கலாம். இந்த நால்வருக்கும் ஒரு சகோதரி. அவரை ராஜ்கபூருக்கு கட்டி வைத்துள்ளனர். இந்த ஐந்து பேருக்கும் தாய்மாமன்களாக டீக்கடை வைத்திருக்கும் இளவரசுவும், மேல் சட்டை போடாமல் எப்போதும் போதையில் மட்டுமே இருக்கும் மயில்சாமியும்.


மூத்தவர் விருமாண்டியின் குடும்பத்தில் சித்தப்பனை எப்போதும் முண்டிக்கொண்டிருக்கும் வாரிசுகள். அதில் ஒருவன் மட்டும் விதிவிலக்கு. சித்தம் சரியில்லாத லூசு பையனாய் வரும் சிங்கம்புலி மாயாண்டி குடும்பத்தினருடன் பாசமாகவும், சாப்பாட்டு ராமனாகவும் இருக்கிறார்.

இதுதான் பின்னணி.

படிப்பு வாசனையே அறியாத மாயாண்டி குடும்பத்தில் கடைசி மகனை மட்டும் படிக்க வைக்கிறார் மணிவண்ணன். அவனுக்கு மட்டுந்தான் படிப்பு வருகிறது என்பது வேறு விஷயம். அவன் பிளஸ்-2 முடித்த சமயத்தில் மூன்றாவது பையனுக்கு கல்யாணம் நடக்கிறது. அதே சமயத்தில் பள்ளிக்கூடக் காதலியும் தருண்கோபிக்கு இருக்கிறாள். அவளும் புது மதினியின் ஊர்தான்.

இப்படியாகக் கதை நகர்கிற போது மின்சாரம் தாக்கி மணிவண்ணன் இறந்து போகிறார். அவரது மூத்த மருமகள் இருவரும் சொத்தை மூன்றாகப் பிரிக்கச் சொல்லுகின்றனர். நான்காமவன் சொத்தை விற்றுத்தான் அவனைப் படிக்க வைத்ததால் அவனுக்கு பங்கில்லை. வேண்டுமானால் ஆளுக்கு ஒரு நாள் அவனுக்கு சோறு போடுகிறோம் என்கின்றனர். இதைக் கேட்டதும் அண்ணன்மார்கள் கொதித்து எழுகின்றனர். தங்களைப் பிரிக்கும் பொண்டாட்டிகளைத் தள்ளி வைப்பதாகவும் முடிவெடுக்கின்றனர்.

தன்னால் தனது அண்ணன்மார் குடும்பம் சிதையக் கூடாது என்று கெஞ்சுகிறார் தருண்கோபி. தாய்மாமன் இளவரசுவும் இதை ஆதரிக்க சொத்து பிரிகிறது. சகோதரர்களும் தனித்தனியே வாழ நேரிடுகிறது. தினம் ஒரு வீட்டில் சாப்பாட்டு என்று சொல்லியிருந்தாலும் கூட கொளுந்தனை அவமானப்படுத்துகிறார்கள் அண்ணிகள். அவன் தோட்டத்துக் குடிசையில் தானே கஞ்சி காய்ச்சிக் குடித்து விட்டு கல்லூரிக்குச் சென்று வருகிறான்.இவர்களின் அக்கா குழந்தைக்கு காதுகுத்து வருகிறது. அதற்கு அழைப்பதற்கு பத்திரிக்கை அடித்துக்கொண்டு கணவன் ராஜ்கபூரோடு வந்து கூடப் பொறந்த பொறப்புகளை அழைக்கிறாள் சகோதரி. பத்திரிக்கையில் கடைசித் தம்பியின் பெயரைப் போடவில்லை என்பதால் அதைக் கிழித்து எறிந்து மற்ற மூவரும் அனுப்புகிறார்கள். இதைக் கேட்டு ஓடி வரும் சின்னவன், ”நம்ம அக்கா இன்னொரு பொறப்பாண்ணா பொறக்கப் போகுது?” என சமாதானப் படுத்தி அனைவரையும் கூட்டிச் செல்கிறான்.

காதுகுத்து நிகழ்வில் ராஜ்கபூர் தருண்கோபியை வரவேற்கவில்லை. சோத்துக்கு வந்த வெறும் பயல் என்று குத்திக் காட்டுக்கிறார். அதனால் சாப்பிடாமல், மணிவண்ணம் செத்ததற்கு அரசாங்கம் கொடுத்த பணத்தில் தனக்கு வந்த ஐம்பதாயிரம் ரூபாயை மொய்யாக எழுதி விட்டு யாரிடமும் சொல்லாமல் போகிறான். பதறி அடித்துக்கொண்டு கூடவே ஓடி வரும் அக்காவின் நடிப்பு மனதைப் பிசைகிறது.

ஒரு காட்சியில், ”இந்தக் காலத்தில கள்ளக் காதலைக் கூட வெளிப்படையாகச் செய்யறாங்க. கூடப் பொறந்தவனுக்கு உதவறத மறைச்சு மறைச்சு செய்ய வேண்டியிருக்கு” என்று சீமான் சொல்லும் அளவுக்கு தம்பிக்கு நேரடியாக உதவ முடியாத கையறு நிலை அண்ணன்களுக்கு.

இப்படியாகப் படம் போய்க் கொண்டிருக்கிறது. தருண்கோபியின் காதல் தொடர்கிறது. பொறியியல் படிப்பை முடித்து அவனுக்கு நல்ல வேலையும் கிடைக்கிறது. அப்போதுதான் தன் காதலிக்கு ஏற்கனவே திருமணம் ஆனது அவனுக்குத் தெரிகிறது. அதற்கான நியாயமான காரணமும் அவனுக்குப் புரிகிறது.

இதற்குள்ளாக அவனது மூத்த அண்ணிக்கு வியாதி வந்து ஆபரேஷன் செய்த போது அவளைக் காப்பாற்ற அவன் மேற்கொண்ட முயற்சியில் அண்ணிகள் திருந்துகிறார்கள். ”என் மூத்த புள்ளடா நீ” என்கிறார் பொன்வண்ணன் மனைவி. கடைசியில் அத்தை மகளை மணந்துகொள்கிறான். மணிவண்ணனின் தங்கையான அந்த அத்தை கஸ்டப்பட்ட காலத்தில் வலிந்து உதவியவர். படிப்புக்காக தன் மகள் திருமணத்திற்குச் சேர்த்து வைத்திருக்கும் பணத்தைக் கொடுத்து உதவியவர்.

அண்ணிகள் திருந்தி, கடைசித் தம்பிக்கு திருமணம். இதோடு படத்தை முடித்திருக்கலாம். தமிழ் சினிமாவில் கிளைமாக்ஸ் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் வணிகக் கட்டாயம் அதை அனுமதிக்கவில்லை போலும். விருமாண்டி ஜி.எம். குமாரின் பையன் அத்தை மகளை வம்பிழுக்க, தருண்கோபி அவர்களை அடித்து நொறுக்கி விட்டு, பெரியப்பாவிடம் பாச மழை பொழிந்து அவர் மனதை மாற்றிய பிறகே படம் முடிகிறது.

வயதில் சிறியவனாக இருந்தாலும் கடைசிப் பையன் எடுக்கும் சில முடிவுகள் முதிர்ச்சி மிக்கதாகத் தெரிகின்றன. அதே முதிர்ச்சி முகத்திலும் தெரிகிறது. பிளஸ் - 2 புள்ளைகளோடு வரும் சீனில் அவர்களுக்கு அப்பா மாதிரி இருக்கிறார். கல்லூரிக் காட்சிகளில் கூட அப்படியே. அந்த கேரக்டரில் தனுஷ், ஜெயம் ரவி, சத்யராஜ் மாதிரி யாராவது யூத் நடிகரைப் போட்டிருக்கலாம்.

அதே போல, கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்து டை கட்டி வேலை செய்து விட்டு மறுபடியும் ஊருக்குத் திரும்பும் தருண்கோபி டவுசருக்கு மேல் வேட்டியைக் கட்டிக்கொண்டு பெரியப்பன் பையன்களோடு சண்டை போடும் கெட்டப் இடிக்கிறது.

எதற்கெடுத்தாலும் அடிதடியில் இறங்கும் தெக்கத்திக் கலாச்சாரம் படங்களில் மட்டுந்தானா இல்லை இப்போதும் நிஜத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை. வசனங்களில் மன்வாசனை வீசுகிறது. சினிமாத்தனம் இல்லை.

மணிவண்ணன், பொன்வண்ணன், இளவரசு, அண்ணிகள் மிக இயல்பாக நடித்துள்ளனர். படத்தின் மிகப் பெரிய பலமாக இதைச் சொல்லலாம். பொன்வண்ணன் பத்து வயது குறைந்தது போல படு ஸ்மார்ட்டாக இருக்கிறார். லூசு பையனாய் வரும் சிங்கம்புலியின் நகைச்சுவையையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். கடைசித் தம்பி பல இடங்களில் ஓவர் ஆக்டிங் செய்கிறார். ராஜ்கபூரும், சீமானும் அலட்டிக் கொள்ளாமல் நடித்துள்ளனர்.

ஒரு சில சினிமாத்தனங்களையும், வலிந்து திணிக்கப்பட்ட கிளைமாக்சையும், அடுத்து என்ன வரும் என்று எளிதாக யூகிக்கக் கூடிய திரைக் கதை ஆகியவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் மாயாண்டி குடும்பத்தார் சராசரி தமிழ்ப் படத்தின் தரத்தை விட உயர்ந்து நிற்கிறது.

6 comments:

Raghu said...

Thanks for the detailed review.

முத்து.சரவணன் said...

"இந்தக் காலத்தில கள்ளக் காதலைக் கூட வெளிப்படையாகச் செய்யறாங்க. கூடப் பொறந்தவனுக்கு உதவறத மறைச்சு மறைச்சு செய்ய வேண்டியிருக்கு"

இந்த வரிகள் இயக்குனர் சீமான் "மாயாண்டி குடும்பத்தார்" படத்திற்காக பேசிய வசணமல்ல!

ஈழத்தில் நமது உறவுகள் ஈவு இறக்கமற்ற வகையில் அந்நாட்டு அரசு கொன்றொழித்தபோது, தாய் தமிழகத்தில் கொதித்தெழுந்த சகோதர உணர்வை,மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து கொண்றொழித்தார்களே! இதைவிட கேவலம் வேறொன்றுமில்லை.

வேறு வழியின்றி தமிழ் உணர்வு கொண்ட சீமான் போண்றோர்கள் அகதியாய் வந்தோர்க்கும்,அங்கே துடித்த தமிழர்க்கும் இந்திய சட்டதிட்டத்திற்கு அஞ்சி மறைமுகமாகத்தான் உதவ முடிந்தது
அதைத்தான்,அந்த உணர்வைதான் படத்தின் வசணம் வாயிலாக வெளிபடுத்தி உள்ளார்.

சீமான் போன்ற சிங்கங்கள் உள்ளதால்தான் தமிழினத்தின் எதிர்காலம் மீது இன்னும் கொஞ்சம் நம்பிக்கை உள்ளது!.

Anonymous said...

முத்து சரவணன் உங்களுக்கு ஒன்னு சொல்றேன். சீமான் போன்ற ஆட்கள்தான் மக்களைக் குழப்பி திசை திருப்புகிறார்கள். இந்தியனாக இருப்போம். இறையாண்மை காப்போம்.

நந்தா said...

//இந்தியனாக இருப்போம். இறையாண்மை காப்போம்.//

அண்ணே இறையாண்மைன்ன்னா என்னண்ணே.

Anonymous said...

தம்பி நந்தா. இறையாண்மை என்பது சிங்களர்களுக்கு இருப்பது. ஆஸ்திரேலியர்களுக்கு இல்லாதது

சரவணன் said...

// இறையாண்மை காப்போம்.

எங்கே இருக்கு இறையாண்மை. கொஞ்சம் புரியும்படி சொல்லுரீங்களா Anonymous.