Wednesday, July 01, 2009

இந்தியா-இன்ஃபோசிஸ்-இறையாண்மை-இனவெறி

29-ஜூன்-2009 உயிரோசைக்கு எழுதியது

இந்திய அரசியல், சமூக மற்றும் பொருளாதாரச் சூழலில் பெரும் சலனத்தைப் பிரதிபலித்து ஒரே நாளில் வெளிவந்த மூன்று செய்திகளை நாம் வழக்கம் போலவே கவனிக்கத் தவறினோம். வகுப்பறையில் வாத்தியார் கேள்வி கேட்கும் போது அதற்கும் நமக்கும் சம்பந்தம் இல்லாதது போல தலையைக் கீழே குனிந்து உட்கார்ந்திருப்போமே அப்படியாகப்பட்ட ஒரு மனநிலையில். கேள்விகள், விவாதங்கள் எல்லாம் நல்லாப் படிக்கும் பசங்களுக்கு மட்டுமானதாக நாம் கருதி வந்திருக்கிறோம். அவற்றைக் காதில் போட்டுக்கொள்ள வேண்டியதில்லை என்று நம்பி வந்திருக்கிறோம்.

மூன்று செய்திகளில் ஒன்று படிப்பு சம்பந்தப்பட்டதுதான். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வது குறித்த வினோதமான யோசனை ஒன்றை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் முன் வைத்துள்ளார். பத்தாம் வகுப்புத் தேர்வுக்காக மாணவர்களும், பெற்றோர்களும் தொலைக்கும் தூக்கமற்ற இரவுகள் தேவையில்லை என்று அவர் வியாக்கியானம் சொல்லியிருக்கிறார்.

பொதுத் தேர்வு என்பது மாணவர்களுக்கு சவாலானது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அதே நேரம் பத்தாம் வகுப்பில் ஒன்றும் ராக்கெட் விஞ்ஞானம் சொல்லித் தருவதில்லை. புதிய கண்டுபிடிப்புகளையும், ஆராய்ச்சிகளையும் மேற்கொள்வதில்லை. அந்த வயதுக்கும், சிந்தனைத் திறனுக்கும் ஏற்ற பாடத்திட்டத்தில் தேர்வுகள் மேற்கொள்வதில் தவறென்ன இருக்க முடியும்? இத்தனைக்கும் அண்மைக் காலத்தில் தேர்ச்சி விழுக்காடு ஆண்டுக்கு ஆண்டு கூடி வருகிறது. பொதுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களும் குறைந்தபாடில்லை.

இப்படிப்பட்ட சூழலில் தேர்வை ரத்து செய்வது குறித்த முடிவு அதிர்ச்சி அளிக்கின்றது. எதிர்காலம் குறித்து எதார்த்தமான பயத்தையும், பொறுப்புணர்ச்சியையும் விடலைப் பருவத்தில் ஏற்படுத்துவதில் முக்கியான பங்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு உண்டு. அதைக் காணாமல் போகச் செய்து பன்னிரண்டாம் வகுப்பில் மட்டுமே பொதுத் தேர்வு என்று தள்ளிப்போடும் செயல்பாடு உளவியல் ரீதியிலும், சமூகத் தளத்திலும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

நிச்சயமாக கல்வித் துறையில் மேம்பாடுகள் தேவைப்படுகிறது. அரசுப் பள்ளிகளின் தரமும், கற்பிக்கும் கடமையுணர்ச்சியும் தேய்ந்துகொண்டே வருகிறது. ஆசிரியர்களின் செயல்பாடும் எந்த அளவுகோலின்படி அளவிடப்படுகின்றன என்று தெரியவில்லை. அவர்களின் ஊதியமும், ஊதிய உயர்வும் செயல்பாட்டின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதில்லை. தமிழ் சினிமா கிளைமாக்ஸ் காட்சியில் போலீஸ் வருவதைப் போல, "நீ பாஸ் ஆனாலும் பெயில் ஆனாலும் எனக்கு சம்பளம் வந்துரும்" என்று அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சொல்லுவதும் வழக்கமான ஒரு காட்சிதான்.

இப்போதெல்லாம் கிராமப் புறங்களில்கூட அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு தனியார் பள்ளிகள் முளைத்திருக்கின்றன. நான் பயின்ற ஆரம்பப்பள்ளியில் இப்போது வெயிலுக்கு ஆடுகள் ஒதுங்குகின்றன. கல்வி என்பது வணிகமயமாகவும், நிறுவனமயமாகவும் மாறிவிட்டது. சுமார் பத்தாண்டுகளுக்கு முன் நான் இளங்கலை பட்டப்படிப்பு பயின்ற போது ஜி.டி.நாயுடுவால் தொடங்கப்பட்ட அந்தக் கல்லூரியில் ME படிப்பிற்கான ஆண்டுக் கட்டணம் வெறும் 150 ரூபாய் என்பதாக நினைவு. இப்போது மூன்று வயதுக் குழந்தையை வேனில் ஏற்றி எல்.கே.ஜி. க்கு அனுப்பி சீருடையோடு தூங்க வைக்க எவ்வளவு ஆகிறது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

கட்டாய இலவச ஆரம்பக் கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்கிறது அரசாங்கம். ஆனால் அரசாங்கத்தின் அதிகார மட்டத்தில் இருப்பவர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் இலவசக் கல்வியா கற்றுக்கொண்டிருக்கிறார்கள்? மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் உடனடிக் கடமை அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது. ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்துவது. மாணவர்களின் தேர்ச்சித் திறன் மற்றும் அறிவு மேம்பாட்டு அடிப்படையில் அவர்களுக்கு சலுகைகளும், சம்பளமும் கொடுப்பது.

கல்வித் துறையின் சீர்திருத்தம் இந்தத் திசையில்தான் நகர வேண்டுமேயொழிய பொதுத் தேர்வை ரத்து செய்வதை நோக்கியல்ல. உண்மையில் மத்திய அரசு சீர்திருத்தம் என்ற பெயரில் கல்வி வியாபாரத்தின் எல்லைகளை விரிவாக்க முயல்கிறது. தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் அந்நிய நிறுவனங்களுக்குப் பாய் விரிப்பது என்ற திசையில் நகரப் போகிறது இந்தச் சீர்திருத்தம்.

சாராயம் காய்ச்சி விற்றவனும், தாதாவாகத் திரிந்தவனுமே கொள்ளையாகச் சம்பாதிக்கும் ஒரு தொழிலை வெளிநாட்டு நிறுவனங்கள் விட்டு வைக்குமா என்ன! அதற்குத்தான் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஒரு அரசு தடையாக நிற்குமா என்ன!

கபில் சிபல் வார்த்தைகளில் சொன்னால், "FDI must come into India. Entry into the education sector must neither be limited nor over-regulated. I want the system to be accessible from outside too". மேலும், "you deny access to quality education to our children" என்றும், "there will be corporate investment in school education, joint ventures, public-private partnerships" என்றும் அவர் திருவாய் மலர்ந்திருக்கிறார்.

இந்திய கல்வித் துறையில் மிகப் பெரிய சந்தை காத்திருக்கிறது. புரிந்துகொள்ள முடியாமல் இல்லை. அதைத் தவிர்த்து இந்திய மாணவர்கள் வெளிநாடு சென்று படிப்பதற்குப் பதிலாக அவர்களை இங்கேயே தங்க வைப்பதற்கே இந்த ஏற்பாடு என்ற சப்பைக்கட்டு வேறு. வெளிநாடு சென்று படிக்கும் இந்திய மாணவர்கள் அந்த நாடுகளில் கல்வித் தரம் உசத்தி என்றா போகிறார்கள்? அங்கு படித்தால் அப்படியே சுலபமாக வேலை பெற்றுவிடலாம், நிரந்தரக் குடியிருப்பு கிடைக்கும் என்றல்லவா செல்கிறார்கள்!

ஜூன் 25 ஆம் தேதி வெளியான இன்னொரு செய்தி இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி நந்தன் நிலெகனி தனது வேலையை ராஜினாமா செய்தார் என்பது. மத்திய அரசு அமைக்கவிருக்கும் Unique Identification Authority of India அமைப்பிற்குத் தலைவராகப் போகிறார் அவர். அந்தப் பொறுப்பு கேபினட் அமைச்சருக்கு இணையானது.

இந்த அமைப்பு குடிமக்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கும் வேலையைச் செய்யப்போகிறது. PAN அட்டை, வாக்காளர் அட்டை என எத்தனை வழிகளை ஆராய்ந்து விட்டு இறுதியாக இந்த முடிவுக்கு வந்திருக்கிறது மன்மோகன் அரசு. இந்த தேசிய அடையாள அட்டை அத்தனை பேருக்கும் வழங்கப்படும். அவர்களைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் அதில் சேகரித்து மையமான ஒரு இடத்தில் வைத்துப் பேணப்படும். வங்கிக் கணக்கு ஆரம்பிக்கும் போது, கேஸ் கனெக்ஷன் வாங்கும் போது இந்த அட்டை மட்டும் இருந்தால் போதும். கிட்டத்தட்ட அமெரிக்காவில் பயன்படும் சோசியல் செக்யூரிட்டி நம்பர் மாதிரி.

மிகவும் சவாலான காரியம் இது. ஆளுக்கு ஒரு அட்டையும், நம்பரும் கொடுத்தால் மட்டும் போதாது. போலீஸ் கேஸ், விவாகரத்து, கிரெடிட் கார்ட் பில் கட்டாதது, அடிக்கடி வீடு மாறுவது உள்ளிட்ட அவரவர் பற்றிய தகவல்களை அதில் உடனுக்குடன் அப்டேட் செய்வதும் வேண்டும். அதற்கு மத்திய மாநில அரசு அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் எல்லாமும் ஒருங்கிணைந்த தகவல்திரட்டிகள் வேண்டும்.

அதற்கான மென்பொருட்களை உருவாக்க வேண்டும். இவற்றையெல்லாம் செய்து முடிப்பதற்கு பெரும் முதலீடும் முயற்சியும், தேவைப்படும். இந்திய சாஃப்ட்வேர் கம்பெனிகளுக்கு குறைந்த பட்சம் ரூ 10,000 கோடி அளவிலான பிசினஸ் வாய்ப்புகளை இது ஏற்படுத்தித் தரும் என்று கணிக்கிறார்கள்.

Unique ID திட்டம் மட்டும் நேர்த்தியாகச் செயல்படுத்தப்பட்டால் (மட்டுமே) ஒவ்வொருவரைப் பற்றிய தகவலும் துல்லியமாகக் கிடைக்கும். அரசின் நலத் திட்டங்கள் யாருக்குச் சென்று சேருமோ அவர்களை மட்டுமே சென்றடையுமாறு செயல்படுத்த முடியும். போலியான சான்றிதழ் கொடுத்து வேலைக்குச் சேர முடியாது. இடைத் தரகர்களையும், விரயங்களையும் கூடுமான வரையில் தவிர்க்க இயலும். இது ஒரு கனவு இலக்கு.

பிரதமர் மன்மோகன் சிங்கே தன்னை அழைத்ததால் தன்னால் தட்ட முடியவில்லை என நந்தன் நிலெகனி கூறியுள்ளார். தனது தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக இருக்குமாறு இலங்கை அதிபர் ராஜபக்சே விடுத்த அழைப்பை நிலெகனியின் பெரியண்ணன் நாராயண மூர்த்தி மறுத்துவிட்டார் என்பது பலருக்கும் தெரியாது. மன்மோகன் சிங்கின் அழைப்பை ஏற்றுக் கொள்வதில் அப்படிப்பட்ட தர்ம சங்கடம் ஒன்றுமில்லை.

ஏனென்றால் இலங்கையைப் போல இனவெறி பிடித்த நாடாக இந்தியா இல்லை என்று உணர்கிறோம். தவறாகச் சொல்லிவிட்டேனே? ஆஸ்திரேலியாவைப் போல இனவெறி பிடித்த நாடாக இந்தியா இல்லையென உணர்கிறோம் எனத் திருத்திக் கொள்கிறேன். இலங்கைத் தீவின் பூர்வக்குடி மக்களை வகைதொகை இல்லாமல் கொன்றொழித்த நாடு இறையாண்மையுள்ள நாடு. படிக்க வந்த மாணவர்கள் மீது சில விஷமிகள் தாக்குதல் நடத்தும் நாடு இனவெறி நாடு.

இனவெறிக்கும், இறையாண்மைக்குமான இலக்கணம் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். அது எப்படி இருந்தாலும் இந்தியா இனவெறி பிடித்த தேசமல்ல. நாம் உணர்கிறோம். ஏற்றுக்கொள்கிறோம்.

'அப்படியல்ல. இந்தியாவில் இனவெறி உண்டு. இன பேதம் உண்டு' என்பதே ஜூன் 25 ஆம் தேதி மூடி மறைக்கப்பட்ட மூன்றாவது செய்தி. அந்தச் செய்திக்குச் சொந்தக்காரர் மிசோராம் மாநில முதல்வர் Pu Lalthanhawla.

சிங்கப்பூரில் நடைபெற்ற நீர்வள மாநாடு ஒன்றுக்குச் சென்ற Lalthanhawla, "இந்தியாவில் இனவெறிக்கு ஆளானவன் நான்" என்று வெளிப்படையாகப் பேசியுள்ளார். மேலும், இந்தியா என்பது திராவிட, ஆரிய இனங்களைத் தவிர வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மூன்றாவது இனமான எங்களையும் உள்ளடக்கியது என்றும் அவர் சர்வதேச அரங்கில் கூறினார். ஒரு முறை துபாயில் நடைபெற்ற இந்தியத் திரைப்பட விழா ஒன்றில் மலையாள நடிகர் மம்முட்டி, "இதற்கு இந்தியத் திரைப்பட விழா என்று பெயரிட்டதற்குப் பதிலாக இந்தித் திரைப்பட விழா என்றே அழைத்திருக்கலாம்" என்று கொதித்ததற்கு இணையாக இதை நோக்க வேண்டியுள்ளது.

மிசோராம் முதலமைச்சர் சொன்னது உண்மைதான். இந்தியா என்பது ஒரு இனம், ஒரு மொழி படைத்த தேசமன்று. Technically and logically speaking, இந்தியா என்பது தேசமே கிடையாது. நமது அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவை Union என்றுதான் வரையறுக்கிறதே தவிர, Nation அல்லது Country என்றோ அல்ல.

இனம் தொடர்பான இந்தப் புரிதல் ஒருபுறம் இருக்க, இறையாண்மை குறித்தான ஒரு கொசுறுத் தகவல். இந்தியாவில் இனவாதம் உண்டு என்று போட்டுடைத்த அந்த முதல்வர் பிரதிநிதித்துவப்படுத்தும் இன்றைய மிசோராம் மாநிலத்திற்கு அருகே ஒரு காலத்தில் இறையாண்மை படைத்த சிக்கிம் என்றொரு தேசம் இருந்தது. அங்கு ஏற்பட்ட கலகத்தைக் கட்டுப்படுத்துவதற்கென்ற போர்வையில் இராணுவத்தை அனுப்பி அதை ஆக்கிரமித்துத் தனதாக்கிக் கொண்ட இறையாண்மை மிக்க தேசம் நம் இந்திய தேசம்.

அதனால் நமக்கு செளகரியமான செய்திகளைப் பற்றி மட்டுமே கவனம் செலுத்துவோம்.

* மைக்கேல் ஜாக்சன் இறந்துவிட்டார்.

* ஆஸ்திரேலியாவில் இரண்டு கங்காருகள் குட்டி போட்டன.

* கள்ளக்காதல் விவகாரம் - மனைவி வெட்டிக் கொலை

* பிரபுதேவா - நயன்தாரா ரகசியக் கல்யாணமாமே?

15 comments:

Anonymous said...

What news do you want to concentrate?

Indian said...

//What news do you want to concentrate?
//

Something that concerns rather than entertain you?

manasu said...

//இன்றைய மாநிலம் ஒரு காலத்தில் இறையாண்மை படைத்த மிசோராம் என்கிற தேசமாக விளங்கியது. அங்கு ஏற்பட்ட கலகத்தைக் கட்டுப்படுத்துவதற்கென்ற போர்வையில் இராணுவத்தை அனுப்பி அதை ஆக்கிரமித்துத் தனதாக்கிக் கொண்ட இறையாண்மை மிக்க தேசம் நம் இந்திய தேசம்.//

குப்ஸ், சமயமிருந்தால் இது பற்றி கொஞ்சம் விரிவாக எழுதமுடியுமா? தெரிந்துகொள்ள...

r.selvakkumar said...

//பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வது குறித்த வினோதமான யோசனை ஒன்றை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் முன் வைத்துள்ளார்.//

வெறும் தலைப்புச் செய்திகளை படித்து விட்டு சில செய்திகளின் முழு சாராம்சத்தையும் உணர முடியாது.

அவர் பத்தாம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்பதை மட்டும் சொல்லவில்லை. ரத்து செய்துவிட்டு மார்க்குகளின் அடிப்படையில் தேர்வுகளை நடத்துவதை தவிர்த்துவிட்டு, கிரேடிங் முறையில் மாணவர்களின் திறனை அளக்க வேண்டும் என்று சொல்கிறார். கிரேடிங் முறையைக் கையிலெடுக்கும் முன் மாணவர்களுக்கு அவரவர் விருப்பமான துறைகளைப் பற்றிய அறிவை போதிக்க வேண்டும் என்றும் சொல்கிறார் (சிங்கப்புரில் 8ம் வகுப்பிலேயே இந்த முறையை ஆரம்பித்துவிடுகிறார்கள்).

நாம்தான் இன்னமும் மனப்பாட கல்வி முறையைக் கட்டிக் கொண்டு அழுகிறோம். நமது தேர்வு முறைகள் மாணவர்களின் ஞாபகசக்தியை மட்டுமே சோதிக்கின்றன.

உதாரணமாக தமிழ் பாடத்தில் பில் கிளின்டனின் மனைவி பெயர் என்ன என்பது கேள்வி. எனக்கு பதில் தெரியாவிட்டால் நான் தமிழ் பரிட்சையில் பெயில். இந்த கேள்விக்கும் எனது தமிழறிவிற்கும் என்ன சம்பந்தம்?

இந்த மாதிரி அபத்தங்களைக் களைய வேண்டும் என்பது அவரது பரிந்துரைகளில் உண்டு. என்னைப் போன்ற ஆசிரியர்கள் இதை அவ்வப்போது உரக்கச் சொல்வதுண்டு.

தற்போது ஒரு பொறுப்பான முக்கிய மத்திய மந்திரி பொறுப்பான ஒரு விஷயத்தை பேசியிருப்பதில் எனக்கு மிகமிக சந்தோஷம்.

விவாதம் தொடரட்டும்.

முடிவில் மாணவர்களுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கட்டும்


அதற்க்காக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவருமே சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

Suresh said...

சாரு ... ஜெ.. பைத்திகாரன்... நரசிம்.. லக்கி... ஆதிஷா..சுரேஷ்கண்ணா

Anonymous said...

I have never read such FILTHY post during these days...

I concluded that you are eligible to write only LTTE matters..

அஹோரி said...

அருமையான பதிவு.

Chellamuthu Kuppusamy said...

இந்தியன்: நன்றி. எந்தச் செய்தியைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதில் முழுமையான சுதந்திரம் நமக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

நன்றி மனசு.நிச்சயமாக. இயலும் போது முயலுகிறேன்.

ஆமாம் செல்வகுமார். தேர்வை ஒழிக்கிறோம் என்ற போர்வையில் கல்வி வியாபாரத்தினை அகலமாக்குகிறார்கள் என்பதே அச்சம் தருகிறது. மற்றபடி பாடத்திட்டம், பயிற்றுவிப்பு, தேர்வு முறை முதலியன விவாதிக்கப்படலாம்.

Anonymous said...

'Technically and logically speaking, இந்தியா என்பது தேசமே கிடையாது. நமது அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவை Union என்றுதான் வரையறுக்கிறதே தவிர, Nation அல்லது Country என்றோ அல்ல'

Is it so.USA is called United States of America.So will you say that USA is not a nation?.Do you know the difference between nation,
union and country.UN recognised India as a soverign nation.

Anonymous said...

உன் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும். ஜாக்கிரதை.

Anonymous said...

http://mizoram.nic.in/about/history.htm

You read this to know about history of Mizoram.Are you decent enough to acknowledge that you have given wrong information and rectify it.

Chellamuthu Kuppusamy said...

முகம் தெரியாதவரே, சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. மிசோராம் என்பதை சிக்கிம் என்று மாற்றி விட்டேன். Hope that was decent enough. (அதற்கும் விக்கிபீடியாவில் இருந்து ஆதாரம் எடுத்துக்கொண்டு ஓடி வராதீர்கள். அப்படியே வந்தாலும் சொந்தப் பெயரைப் போடவும்)

Anonymous said...

"I have never read such FILTHY post during these days...

I concluded that you are eligible to write only LTTE matters..""


Yes yes.. It is filthier than Charu Nivedita Vs Jayamojan fight. It stincks.

I also conclude but a different things. People like Chellamuthu and Para write about LTTE to make money.

Thamizhan said...

நல்ல பதிவு. நமது ஊடகங்களும் பொறுப்பற்ற செய்திகளுக்கு தரும் முக்கியத்துவத்தை பொறுப்பான செய்திகளுக்கு கொடுத்து பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லையே...

Saravanan Renganathan said...

குப்ஸ்,

//பிரபுதேவா - நயன்தாரா ரகசியக் கல்யாணமாமே?

நாட்டுக்கு உபயோகமான விசயத்தை விட்டு கண்டதை எழுதுகிறீங்க.. இதெல்லாம் ஆவுறதுகில்ல ...

விரைவில் புழலுக்கு பார்க்க வரேன் ....