Monday, August 31, 2009

நான் வித்யா - புத்தகம்

-செல்லமுத்து குப்புசாமி

இதை நான் சொல்லியே தீர வேண்டும். முதல் காரணம் வழக்கமான 'கிழக்கு' டெம்ப்ளேட்டில் எழுதப்பட்ட நூல் இதுவல்ல என்ற தோற்றத்தை உண்டாக்குகிறது.

இரண்டாவது இன்னும் முக்கியமான காரணம்.


பெண்ணின் உணர்வுகளை ஆண் கவிஞர் என்னதான் வடித்தாலும் ஒரு கவிதாயினி எழுதும் போது அதன் சாராம்சமே வேறு. இல்லாவிட்டால் 'கட்டிப்புடி கட்டிப்புடிடா'க்களும், ‘பாயோடு பாயா விடிச்சு வெச்சேன்'களும் மட்டுமே பெண்கள் பாடிக்கொண்டிருக்க நேரிடும். பெண்கள் மற்றும் தலித்துக்களுக்கான படைப்புகள் ஒடுக்கப்பட்ட அந்த மக்களே வடிக்கும் போது அதன் ஒரிஜினாலிட்டியே தனி.

நமது சமுதாயத்தில் பெண்களையும், தலித் மக்களையும் விட திருநங்கைகளின் நிலைமை பரிதாபம். அவர்களைப் பற்றி உருவாக்கப்பட்ட ஆக்கங்கள் மிகவும் குறைவு. அப்படியே ஆங்காங்கு சில படைக்கப்பட்டிருந்தாலும் அவை அவர்களைப் பற்றிய முழுமையான பிம்பத்தையும், அவர்தம் உணர்வுகளையும் பிரதிபலிப்பதில்லை.

அரவாணி, திருநங்கை ஆகிய பதங்கள் இப்போதுதான் பரவலாக அறியப்படுகின்றன. இத்தனை காலமும் ‘அலி' என்றும் 'ஒம்போது' என்றும் மட்டுமே அவர்களை நாம் அறிந்து வந்திருக்கிறோம். நமது சினிமா காலங்காலமாக அவர்களை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி வந்திருக்கிறது.

ஆணாகப் பிறந்து, ஆணுக்குரிய உணர்ச்சிகள் இல்லாமல் தன்னை ஒரு பெண்ணாக உணர்ந்து, ஆணுக்குரிய குறி தனதுடலில் ஒட்டியிருப்பதை அருவருப்பாகக் கருதி ஆபரேஷன் மூலம் அறுத்து எறிந்து 'நிர்வாண' நிலையை அடைவது திருநங்கைகளுக்கு முக்கியமான நிகழ்வு. சரவணனாகப் பிறந்து வித்யாவாக மாறிய பிரபல வலைப்பதிவர் லிவிங் ஸ்மைல் எழுதிய சுய சரிதை இது.

திருநங்கைகள் தமது குடும்பத்தாராலும், சமூகத்தாலும் எப்படியெல்லாம் ஒதுக்கப்படுகிறார்கள் என்பதையும் அவர்களுக்குள் உள்ள சடங்குகள், சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், ஏக்கங்கள், அபிலாஷைகள், கோபதாபங்கள் பற்றியும் வித்யா மிகத் தெளிவாக கூடுதல் குறைச்சல் இல்லாமல் விவரிக்கிறார்.

முதுகலை மொழியியல் படித்துள்ளார் என்பதால் தான் சொல்ல விரும்பியதை இலகுவாகச் சொல்லும் லாவகம் அவருக்கு கை வருகிறது. நிச்சயம் படிக்கலாம். பிறருக்கும் பரிந்துரைக்கலாம்..

3 comments:

perumal said...

அன்புள்ள சார்,

இதைப்போல நீங்கள் படிக்கும் புத்தகங்களை சொன்னீர்களேயானால் என்னை போன்றவர்களுக்கு புத்தகங்களை தேர்ந்தெடுத்து படிக்க வசதியாக இருக்கும்.

இந்த புத்தகத்தை குறித்து வைத்துக்கொண்டேன். நேரம் வரும்பொழுது படிக்கிறேன்.
ஏனென்றால் இப்பொழுது நான் படிக்க வேண்டிய ''லிஸ்ட்'' இல் இருக்கும் புத்தகங்களை வரிசையாக படித்துக்கொண்டுள்ளேன். இந்த புத்தகத்தையும் அந்த லிஸ்ட்டில் சேர்த்துள்ளேன்.

நான் இப்பொழுது படித்துகொண்டிருக்கும் புத்தகம் தி.ஜானகிராமனின் சிறுகதை தொகுப்பு.

அன்புடன்
உங்கள் மாணவன் (பங்குசந்தையில்)

பெருமாள்
கரூர்

Chellamuthu Kuppusamy said...

நன்றி பெருமாள். இங்கு எல்லோருமே மாணவர்களே! கற்றது கைமண் அளவு.

perumal said...

சார்,

அனைவருக்குமே அனைத்து துறைகளிலும் மேற்கொண்டு கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்கள் இருந்துகொண்டுதானே இருக்கிறது.

பங்குசந்தையில் நீங்கள் கற்ற விசயங்களை எனக்கு சொல்லிக்கொடுத்ததன் (இழக்காதே புத்தகம் வாயிலாக) மூலம் நீங்கள் என் அறியாமையை போகிவிட்டீர்கள்.
அறியாமையை அகற்றுபவரை குரு என்று தானே சொல்லவேண்டும்.

என்றென்றும் பங்குசந்தையில் நீங்கள் தான் என் குரு.

உங்கள் மாணவன்
பெருமாள்
கரூர்